இருபதாம் நூற்றாண்டை உரைநடைகளின் ‘பொற்காலம்’ என்று தமிழ் இலக்கிய வரலாறு கூறுகிறது. பழந்தமிழ்ச் செய்யுள்களுக்கு உரைகள் எழுதப்பட்டன. மேல்நாட்டாரின் நவீன இலக்கிய வடிவங்களான நாவலும், சிறுகதைகளும் தமிழுக்கு விருந்தாளிகளாக வருகை புரிந்தன.

1876இல் வெளிவந்த வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ தமிழின் முதல் நாவல் என்ற பெருமை பெற்றது. நாவலைத் தொடர்ந்து சிறுகதைகளும் வருகை புரிந்தன. மேல் நாட்டாரின் சிறுகதைகளை ஒட்டி அவை வெளிவந்தன. புதுமைப்பித்தனில் தொடங்கி ஜெயகாந்தன் வரை வளர்ந்து தழைத்தது.

இக்காலத்தில் நாவலும், சிறுகதைகளும் எழுதுவார் குறைந்து போயினர்; படிப்பவர்களும் அப்படியே! இந்நிலையில் இந்தச் சிறுகதைத் தொகுதியைக் கவிஞர் வாய்மைநாதன் எழுதியளித் துள்ளார். பாவை வெளியீடாக வந்திருப்பது பாராட்டுக்குரியது.

இந்த நூலில் 18 சிறுகதைகள் உள்ளன. ஒவ் வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்புடன் திகழ்கிறது. உருவம், உள்ளடக்கம், எளியநடை, இனிய உவமைகள், அழகிய பாத்திரப்படைப்பு என இச்சிறுகதைகள் விளங்குகின்றன. இவற்றில் சில பத்திரிகைகளில் வெளிவந்து படித்தவர்களின் பாராட்டைப் பெற்றவை.

“அவனைப் பார்க்க வேண்டும் என்று மனம் தவிக்கிறது. எங்காவது கண்டால் சுப்பிரமணியனுக்குச் சொல்லுங்களேன்” என்று முதல் கதை தொடங்கு கிறது. இளமை முதல் நன்றாக வளர்ந்தவர்களின் ஏக்கத்தை இந்தக் கதை எடுத்துக் கூறுகிறது. ‘சுப்பிரமணியனுக்குச் சொல்லுங்கள்’ என்பதே முதல் கதையாகும்.

‘நீ இல்லை நான்’ என்ற கதையில் ஆசிரியர் நலநிதி ஊழலைக் கண்டித்து சாகும் வரை உண்ணா விரதம் இருக்க முடிவெடுத்த ஆசிரியை குஞ்சரியும், ‘பெண்குழந்தை’ சிறுகதையில் வரும் அனாதைக் குழந்தையின் அவலமும், ‘ஓ! எனக்குப் புரியும்’ கதையில் வரும் பிச்சைக்காரியும், பெட்டை நாயும் மறக்க முடியாதவர்கள்.

காதலர்களான அழகு சுந்தரமும், அஞ்சுகமும் ஏமாளிகளா? ஊரார் ஏமாளிகளா? இதுபற்றி நம்மைச் சிந்திக்கத் தூண்டும் கதையே ‘ஏமாளிகள்’ என்பதாகும். பழமைக்கும், புதுமைக்குமான போட்டியில் ஓர் ஒடுக்கப்பட்டவன் படும் பாடு பரிதாபமானது. இதுவே ‘ஒரு திருமணப் பந்தலின் கீழ்’ கதையாகும்.

பதவி நாற்காலியே தன் கணவன் ‘உயிருக்கு விலை’யாக வந்தபோது வெகுண்டெழும் சீதையே ‘உயிருக்கு விலை’ என்னும் கதையாகும். சாதியின் சாப நெருப்பை ‘அது பழைய பூகம்பம்’ கதையிலும், காணாமல்போன சத்தியாவைத் தேடி வரும் சொந்தத்தை ‘சத்தியம்’ விசாரிக்கப்படுகிறது’ கதையிலும், அனுதாபம் வீதியோடு நிக்கணும் என்பதை ‘தேடுகிறேன் காணவில்லை’ கதையிலும் காணலாம்.

திராவகம் வீசியது காதலியா? அவன் அண்ணனா? என்று தெரியாமல் தடுமாறும் ‘காதலுக்குக் கண்ணில்லை’ மறுபடியும் வாசிக்கத் தூண்டுகிறது. ஒரு பாவமும் அறியாத ஓர் ஏழைக் குடும்பத்தையே சீரழித்த காவல்துறையை, ‘அந்த மொட்டைக் கசக்கியது யார்?’ கதையில் படிக்கும் போது நமக்குக் கோபம் கொப்பளிக்கிறது.

‘சிகரமும், சில பள்ளத்தாக்குகளும்’ கதை மத நல்லிணக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. இதில் வரும் கரீம் பாய் மாரியம்மனுக்குக் கோயில் கட்டி குடமுழுக்கு செய்வதற்குப் பண உதவி செய்கிறார். அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை அறங் காவலரே மீறுகிறார்.

‘இந்த நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் வாக்குறுதிகள் அநாதைகளாகி விட்டன. பண்பாட்டு நெருக்கடியின் விளைவாக இந்தியாவில் வாக்குறுதிப் பட்டங்கள் மூர்க்கமான சுயநலக் காற்றில் உயர உயரப் பறக்கின்றன. கயிற்றைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை...” என்று நூலாசிரியர் சிந்திக்க வைக்கிறார்.

ஒரு கோயில் நிர்வாகம், அதன் இடத்தில் அமைந்திருக்கும் ஒரு கல்விக் கோயிலான பள்ளிக் கூடத்திற்கு அனுமதி மறுத்து அதை இடித்துத் தரைமட்டமாக்கத் துடிப்பதை ‘ஒரு கடிதம் ஒரு நோட்டீஸ்’ கதையில் பார்க்கிறோம். இறால் பண்ணை வருகையால் பாழாகும் ஊரை ‘டாலர் விலங்கு’ மூலம் படித்து வேதனைப்படுகிறோம்.

‘தீர்வு’ மற்றும் ‘வாக்குறுதி’ ஆகிய இரண்டு கதைகளும் ‘எய்ட்ஸ்’ நோயாளிகளைப் பற்றியது. இந்தச் சமுதாயப் பிரச்சினையை ஆசிரியர் கையாண்டுள்ளதை நாமும் பாராட்டலாம்.

நோயாளி மனைவி வாழ்க்கையை, “நட்சத்திரம் ஒன்று கூட இல்லாத அமாவாசை வானமாகியது அவள் வாழ்க்கை. அவள் சந்தித்த துயரங்கள் அவளுக்குள் பயிரான எட்டிமரத் தோப்பு. சுவாசிப் பதைப் போல் அவை பழக்கப்பட்டு விட்டன...” என்று ஆசிரியர் சுட்டிக் காட்டுவது சரியான வருணனை.

ஒரு பள்ளியில் மேலாளர், ஆசிரியர் பயிற்சி பெற்ற தன்மகனைப் பள்ளியில் நியமிப்பதற்காகத் தலைமையாசிரியரையே ‘விருப்ப ஓய்வு’ பெறும் படி செய்யும் நயவஞ்சகமே, ‘அவரைத் துளைத்த அம்பு’ என்ற இறுதிச் சிறுகதையாகும்.

இதைப் படிக்கும்போது சில தனியார்ப் பள்ளிகளின் முறைகேடுகள் அடுக்கடுக்காக நினைவுக்கு வருகின்றன. “நல்ல தமிழில் சொல்லப் போனால், அங்கு நிலவும் அறங்கள் திருக்குறளுக்குத் தெரியாதவை; கல்வித்துறை அறிந்தாலும் கண்டு கொள்ளாது...” என்று ஆசிரியர் கூறுவது அத்தனையும் யதார்த்தமானது.

காப்பியக் கவிஞரான வாய்மைநாதன் பல்வேறு பரிசுளும், பாராட்டுகளும் பெற்றவர். கதையா? காவியமா? நாவலா? சிறுகதையா? எல்லா இலக்கிய வடிவங்களும் கைவரப் பெற்றவர். இவற்றுக்கும் மேலாக, பல்லாண்டுகள் பணியாற்றிய நல்லாசிரியர்.

சிறுகதை என்பது வளர்ச்சியடைந்து தற்போது தேக்கமடைந்து போன ஒரு துறை. இந்தத் தேக்கம் உடைந்து மீண்டும் ஒரு வளர்ச்சி ஏற்படுவதற்கு இந்த ‘உயிரின் விலை’ வழிவகுத்தால் மகிழ்ச்சி யடையலாம்.

Pin It