இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் அந்தமான் என்ற சொல்லுக்கு “பயங்கரம் _ அதிபயங்கரம்’’ என்று பொருளாகும். அங்கு அனுப்பப்பட்டவர்கள் உயிருடன் திரும்பினால் அது அதிசயம் என்பர். விடுதலைப் போராளிகள் அந்தமான் தீவின் தலைநகரமான போர்ட் பிளேரில் இருந்த “செல்லுலர்’’ சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். அந்த செல்லுலர் சிறையில் உள்ள ஒரு செல்லில்தான் லாகூர் சதி வழக்கில் பகத்சிங்கோடு கைது செய்யப்பட்டவரும் ஆயுள்தண்டனை பெற்றவருமான விஜய்குமார் சின்கா அடைபட்டு வாடினார் அந்தச் சிறையில் நடைபெற்ற பயங்கரக் கொடுமைகளைப் பற்றி அவரே எழுதியுள்ளார்.

1930ஆம் ஆண்டு பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் மீது லாகூர் சதி வழக்கு நடந்தது. அவ்வழக்கில் எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் லாகூர் சிறையிலிருந்த எனது தோழர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு சென்னைச் சிறைக்கு மாற்றப்பட்டேன் பின்பு அங்கிருந்து என்னை அந்தமான் தீவுச்சிறைக்கு நாடு கடத்தப்பட்டேன். இங்கு நான் தனிமையில் இல்லை. பெரும் கூட்டத்துக்குள் ஒருவனாக இருக்கிறேன். மகாராஜாக்களின் கோட்டைகளைப் போன்ற பிரம்மாண்டமான கட்டடங்களை இங்கு பார்த்தபோது என்னை மிரட்டியது. ஆனால் இந்த இருட்சிறையில் நானூறுக்கும் மேற்பட்ட புரட்சியாளர்கள் தங்களின் நீண்ட காலத் தண்டனைகளை அனுபவித்து வந்தனர். இவர்களைப் பார்த்து சற்று ஆறுதலும் தைரியமும் அடைந்தேன்.

இந்தக் காலத்தில் தான் வங்கத்திலும் பஞ்சாபிலும் வன்முறைப் புரட்சியின் வேகம் உச்சனத்தில் இருந்தது. பிரிட்டிஷ் அரசு கடுமையான ஈவிரக்க மற்ற அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. புரட்சியாளர்களைக் கண்டபடி சுட்டுத ்தள்ளியது. தூக்கிலேற்றிக் கொலை செய்தது. அரசின் இந்தக் கொடூரச் செயல்களால் அலையலையாய் எழுந்த எழுச்சிகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதற்குத் தீர்வுகான அரசு மிகக் கேவலமான வழிகளைத் தேர்ந்தெடுத்தது. அதில் எங்களையெல்லாம் தாய் நாட்டை விட்டு தொலை தூரத்தில் கடலில் கொண்டு போய் தள்ளிவிடுவது ஒரு வழியாகும்.

எங்கள் நாட்டு மக்களிடமிருந்து எங்களைப் பிரித்து விடுவதன் மூலம் உள்ளூர் உறவினர் நண்பர்களைப் பார்க்க முடியாமல் செய்தனர். கடிதப் போக்குவரத்தைக் கூடத் தடுத்தனர். சிறையில் எங்களைக் கொடுமைப்படுத்துவதன் மூலம் எங்கள் உணர்வுகளையும் துடிப்புகளையும் அடியோடு அழித்து விடலாமென அரசு கனவு கண்டது. சிறை அதிகாரிகள் பயங்கர அடக்குமுறைகளைக் கையாண்டு எங்களைப் பணிய வைத்து விடுவார்கள் என்று தான் நான் ஆரம்பத்தில் கருதினேன்.

ஆனால் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக வேறு விளைவுகள் ஏற்பட்டன. நாடு கடத்தலில் கூட நல்லது இருந்தது என்பதைப் பின்னர் உணர்ந்து மகிழ்ந்தேன். ரகசியப் புரட்சிக்குழுவைச் சேர்ந்த நாங்கள் வெளியில் நாடு முழுவதும் சிதறிக் கிடந்தோம். சிறு சிறு குழுக்களாய் பிரிந்து பணியாற்றினோம். ஆனால், அந்தமான் சிறைக்கு வந்ததும் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்க முடிந்தது. சென்னை, உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், வங்காளம் முதலிய பல மாநிலங்களைச் சேர்ந்த எங்கள் தோழர்களை ஒரே இடத்தில் பார்த்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இக்கூட்டத்தில் வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுசூமே முந்நூறு பேர்களுக்கு மேல் இருந்தனர். இந்தியச் சிறைகளில் கூட நாங்கள் தன்னந் தனியாகவோ, சிறுகுழுக்களாகவோ இருந்துதான் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடி வந்தோம்.

அந்தமான் சிறையில் நாங்கள் பெருங்கூட்டமாக இருந்ததால் அதிகாரிகளின் திட்டங்களை முறியடித்து வந்தோம். ஆனால் இவை முதலிலேயே நடந்து விடவில்லை. நாட்கள் செல்லச் செல்ல எங்கள் முயற்சியும் வெற்றி பெறத்துவங்கியது. ஆனால் அதற்குள் நாங்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. ஆரம்பத்தில் சிறை அதிகாரிகள் அதிக மிடுக்கோடு எங்களைக் கேவலமாகவும் இழிவாகவும் நடத்தினர். எங்கள் மனதைப் புண்படுத்திய தோடு எங்கள் உடலையும் இம்சைப் படுத்தினர். மோசமான உணவளித்தனர், குளிக்க முடியாமல் தண்ணீரை நிறுத்தினர். உறவினர்களும் நண்பர்களும் எங்களுக்கு அனுப்பும் கடிதங்கள், புத்தகங்கள் மற்றும் பொருட்களைக் கிடைக்க விடாமல் தடுத்தனர்.

நாங்கள் இதை உறுதியோடும் கட்டுப்பாட்டோடும் எதிர்த்தோம். இங்கு நடக்கும் கொடுமைகளை இந்திய மக்களும், பத்திரிகைகளும் அறியவோ, கிளர்ச்சி செய்யவோ எந்தவாய்ப்பும் இல்லை. அதனால் எங்களை நாங்களே எங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. திமிரும் கர்வமும் கொண்ட சிறை அதிகாரிகள் எங்களை மனிதர்களாக, கௌரவமாக நடத்தும் வரை ஒருவர்பின் ஒருவராக உண்ணாவிரதமிருந்து உயிரை விடுவது என்ற பயங்கர முடிவுக்கு நாங்கள் வந்தோம். எனது அன்புத் தோழரும் லாகூர் சதி வழக்கு கைதிகளில் ஒருவருமான “மகாவீர் சிங்’’ ஆவார். 1929இல் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் எங்கள் பெருமதிப்புக்குரிய தோழர் யதீந்திரநாத் தாஸ் உறுதியுடன் போராடி மடிந்தார். இந்திய அரசியல் வானில் ஒரு துருவ நட்சத்திரமாய் பிரகாசித்தவர் அவர். அவரது அடிச்சுவட்டையே மகாவீர்சிங் பின்பற்றினார்.

1933மே 17ஆம் நாள் மகாவீர்சிங் உண்ணநோன்பை துவக்கினார். குற்றச் செயல்களில் ஈடுபட்ட பட்டாணியர் கூட்டம் ஒன்று எங்களுடன் சிறையில் இருந்தது. அக்கூட்டம் எங்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டது. மகாவீர்சிங் அவர்களுடன் மோதி விரட்டியடித்தார். சிறை அதிகாரிகள் அந்தப் பட்டாணியரை எங்களுக்கெதிராகப் பயன்படுத்தினர். அந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் கட்டுடல் கொண்ட என் தோழர் மகாவீர்சிங்கை இழுத்துக் போய் தரையில் வீழ்த்தினர். மகாவீர் தனது மூச்சை இழுத்து நிறுத்தி விடவே மூக்கின்மூலம் செலுத்தப்பட்ட பால் இரைப்பைக்குள் போகாமல் சுவாசப்பைக்குள் போய் அவரை மயக்கமடையச் செய்து விட்டது. உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு போய் சிகிச்சையளிக்கப்பட்டது. கொடியவர்கள் செய்த இந்தச் செயலால் அந்த மாவீரனின் உயிர் சிலமணி நேரத்தில் அமைதியாய் பிரிந்துவிட்டது. அவருக்குக் கடைசி மரியாதை செலுத்தக்கூட அந்தக் காதகர்கள் எங்களை அந்தப் புனிதச்சடலத்திடம் நெருங்க விடவில்லை.

மரணதேவனைத் தழுவும் பயணம் மகாவீர்சிங்குடன் நில்லாமல் மரணப் பயணம் மேலும் தொடர்ந்தது. பத்து நாட்கள் கழித்து மோகன்கிஷோர் என்ற தோழர் உண்ணாவிரதம் துவங்கினார். உடல் பலவீனமடைந்தால் உயிர்போகும் என்று பயந்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிடுவார் என்று நினைத்து அவரைத் தனிக் கொட்டடியில் அடைத்துவைத்தனர். அதெல்லாம் பலிக்கவில்லை. மோகன்கிஷோர் தொடர்ந்து உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். அதிகாரிகளின் ஆசையில் மண்விழுந்தது. மூன்றாவதாக மொசித் மைத்ரா பலிபீடம் ஏறினார். இப்போது அரசாங்கம் பயப்பட ஆரம்பித்தது. எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கவேண்டியதாகிவிட்டது. படிப்பதற்கும் எழுதுவதற்கும் தேவையானவற்றை சிறை நிர்வாகம் அளித்தது.

இந்த வெற்றிக்காக நாங்கள் கொடுத்த விலை அளவிட முடியாதது. ஆரம்ப நாட்களில் சிறை அதிகாரிகளின் கொடுமைகளை எதிர்த்து நின்று புரட்சியாளர்கள் தங்களையே அழித்துக் கொண்டார்கள். அவர்களின் பாதையிலிருந்து சிறுதும் வழுவாமல் எங்கள் முன்னோர்களின் பாரம்பரியப் பெருமைகளுக்கு எந்தக்குறையும் ஏற்படாமல் நாங்கள் நடந்து வந்திருக்கிறோம். இதில் நாங்கள் பெருமையும் பூரிப்பும் அடைகிறோம்.

1909ஆம் ஆண்டு நடந்த பிரபலமான அலிப்பூர் சதிவழக்கில் தண்டனையடைந்தார் அரவிந்தரின் தம்பி பரீந்திரகோஷ். அவரும் மற்றவர்களும் வங்கத்திலிருந்து செல்லுலர் சிறைக்குக் கொண்டு வரப்பட்டனர். மகாராஷ்டிராவிலிருந்து சாவர்க்கர் சகோதர்களும் இங்கு வந்து சேர்ந்தனர். இவர்களில் மூத்தவர் விடுதலைப் போராட்டப் பாடல்களை எழுதி வெளியிட்டதற்காக தீவாந்திர தண்டனை விதிக்கப்பட்டது. இலையவர் வினாயக தாமோதர சாவர்க்களுக்கு லண்டலில் கர்சான் வில்லி கொலைக்காகவும், இந்தியாவில் நடந்த வேறொரு கொலைக்காகவும் இரண்டு ஜென்ம தண்டனையளிக்கப்பட்டது. அதாவது ஐம்பதாண்டு சிறைத் தண்டனையாகும். இந்தியா முழுவதும் புரட்சி தீ வெடித்துப் பரவியது. முக்கியப் பயங்கரவாதிகள் அனைவரையும் பிடித்துக் கடுமையான தண்டனையளித்து தண்ணீருக்கு அப்பால் உள்ள இந்த அந்ததமான் குகைகளுக்குள் கொண்டு வந்து தள்ளினர். 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின் போது தோன்றிய புரட்சியை அடக்கி வைக்கவே இந்தச் செல்லுலர் சிறை கட்டப்பட்டது.

தமிழில்: எஸ்.ஏ.பெருமாள்

(இளைஞர் முழக்கம் ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

Pin It