பின் நவீனத்துவத்தின் வருகைக்குப் பின்னர், இன்று அதிகம் பேசப்படும் கொள்கை பின்னைக் காலனியம் என்பது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய இக்கொள்கை இன்று உலகெங்கிலும் பேசப்படுகிறது. இக்கொள்கை யானது, காலனி நாடுகளின் நிலை பற்றிப் பேசு கிறது. கி.பி.16ஆம் நூற்றாண்டு தொடங்கி, இரு பதாம் நூற்றாண்டின் பிற்பாதி வரை உலகம் முழுவதும் காலனி நாடுகள் ஏராளமாக இருந்தன.

police 440குறிப்பாக இங்கிலாந்து, ஹாலந்து, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் உலகின் பல இடங் களைத் தங்களது காலனி நாடுகளாகக் கொண்டிருந்தன. ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா ஆகியன காலனி நாடுகளாக இருந்தன. இது அடித்தளத்தில் ஒரு பொருளாதாரச் செயல்பாடு. முதலாளித்துவத்தின் (வணிகம்) எழுச்சி யுடன் இது தொடங்குகிறது. மறுமலர்ச்சி என்று (1496) ஐரோப்பாவில் அழைக்கப்படும் காலத்தில் மேலை நாட்டவர்கள் பல கண்டங்களைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வாஸ்கோட காமா, மெகல்லன், கொலம்பஸ் என்று பலர் பல நாடுகளுக்குச் சென்றனர்.

இதற்குக் காரணம் வெறும் அறிவுத் தாகம் அல்ல. பண்ட உற்பத்தி பெருகியதன் காரணமாக வணிகம் பெருகியது. வணிகம் பெருகும் பொழுது அப்பண்டங்களை விற்க உள்நாட்டுச் சந்தை போதாது. எனவே பல வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஐரோப்பியர்கள் சீனா, இந்தியா, இந்தோனேஷ்யா, பர்மா, ஆப்பிரிக்கா, வடதென் அமெரிக்கா என்று பல இடங்களுக்குச் சென்றனர்.

உதாரணமாகக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தி யாவில் வியாபாரம் செய்யும் நிமித்தம் வந்தது. பிரெஞ்சுக்காரர்கள் வந்தனர். டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள் ஆகியோர் வந்தனர். வணிகர் களாக வந்தவர்கள், நாட்டைப் பிடித்து அரசாள் வோராக மாறினர். இந்தியா போன்ற பல நாடுகள் காலனி நாடுகளாயின. ஆனால் தேச விடுதலைப் போராட்டம் காரணமாக காலனி நாடுகள் விடுதலை பெற்றன.

சென்ற நூற்றாண்டின் பிற் பாதியில் பெரும்பாலான காலனிகள் விடுதலை பெற்றன. இன்று காலனிகளே இல்லை எனலாம். இது காலனி காலகட்டம். இதற்குப் பிந்தி உள்ளதைப் பின்னைக் காலனியம் என்று அழைக்கின்றனர். ஆனால் லெனின் கூறியது போன்று முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாறி, பொரு ளாதார ரீதியாக உலக நாடுகளின் மீது தனது பிடியை வைத்துக் கொண்டிருக்கிறது. இன்று இதனைக் கார்ப்பரேட் கம்பெனிகளின் காலம் என்கின்றனர். பின்னைக் காலனியம் என்பது இன்று ‘புதிய காலனியம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

ஆனால் பின்னைக் காலனியம் என்பதை வரையறை செய்வதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. சிலர், இதனை விரிவாக்கி பழங்காலத்தில் அலெக்ஸாண்டர் போன்றவர்கள் நாடுகளைப் பிடித்து அடிமைப்படுத்தியதை காலனியம் என்றும் கூறுகின்றனர். வேறு சிலர் இன்று உள்ள சூழலில், பல நாட்டைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு நாடுகளில் வசிப்பதையும், மாஜி காலனிகளின் மக்கள் வெவ்வேறு இடங்களில் வசிப்பதையும் பின்னைக் காலனியம் என்கின்றனர். ஆனால் பொதுவாக இச்சொல் பதினாறாம் நூற்றாண்டு தொடங்கி, இருபதாம் நூற்றாண்டு வரையில் இருந்த காலனி ஆதிக்கத்திற்குப் பின்னர் உள்ள நிலையைக் குறிப்பதாகும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும். இன்று இதற்குப் பல வடிவங்கள் உள்ளன.

பொருளாதார காலனியம், கலாச்சார காலனியம், மொழி காலனியம் போன்று பல ரகங்கள் உள்ளன. இதில் காலனி ஆதிக்க வாதிகள், காலனி நாட்டு மக்களைப் பற்றி உருவாக்கியுள்ள பண்பாடு சம்பந்தமான அறிவு, ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளை அடிமைப்படுத்த மேற்கத்திய அறிவு எவ்வாறு பயன்படுத்தப் பட்டது என்பன அடங்கும். இதன் முக்கியக் கொள்கையாளர்கள் சிலரைப் பற்றி முதலில் காண வேண்டியுள்ளது.

பிரான்ஸ் பெனன் (1961) என்பவர் ஒரு மன நோய் மருத்துவர். இவர் காலனியத்தின் தன்மைகள் பற்றி ஆராய்ந்துள்ளார். இது அழிக்கும் தன்மை யுள்ளது என்பது அவரது கருத்து. ஆதிக்கம் செலுத்தும் நாடு, காலனி நாட்டு மக்களது அடையாளத்தை அழிப்பதில் ஈடுபடுவது அந்த மக்களின் மனதினைப் பெருமளவு பாதிக்கும் என்று இவர் கூறுகிறார். காலனி மக்களின் மானுடப் பண்புகளை சிதைக்கிறது என்றும், இது வன்முறையாக நிறைவேற்றப்படுகிறது என்றும் இவர் கூறுகிறார். காலனி நாடுகளை அடிமைத் தனத்திலேயே இது வைக்கிறது என்று இவர் கூறுகிறார். எனவே காலனி மக்கள் வன்முறையாக ஆதிக்க சக்திகளை எதிர்க்க வேண்டும் என்றும், அது அவர்களது அடிமை மனப்பான்மையை அகற்றும் என்றும் இவர் கூறுகிறார்.

காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவக் என்பவர் இதில் இரு சொற்களைப் பயன்படுத்தினார். பின்னைக் காலனியத்தின் செயல்பாடுகளை விளக்க அவர் Extentialism என்பதையும், Strategic Extentialism என் பதையும் பயன்படுத்துகிறார். அடிமைப்பட்ட மக்களின் குரல் எழும்பவிடாமல் அம்மக்களிடையே உள்ள பல குழுக்கள் ஒரே தன்மையுள்ளதாக மாறுவதை முதற் சொல் குறிக்கிறது. பல்வேறு மக்கள் குழுக்களிடையே தற்காலிகமாக ஒரு குழு அடையாளம் உருவாவதை இரண்டாவது சொல் குறிக்கிறது.

காயத்ரி ஸ்பிவக் பூக்கோ என்ற பிரெஞ்சு அறிஞரின் அதிகாரம் (Power) பற்றிய கருத்தினையும் பயன்படுத்துகிறார். இவரது கருத்துப்படி அறிவு என்பதே அதிகாரத்தை விரும்புவதன் (will to power) விளைவாகும். இந்த அதிகாரம் பல மட்டங்களில் ஊடுருவி உள்ளது. இது அரசு, போலீஸ், சிறைச் சாலை, மருத்துவம், சட்டம் என்று பல இடங் களில் வியாபித்துள்ளது. எனவே சமுதாய மாறு தலைக் கொண்டு வருவது என்பது எளிதான காரியமல்ல.

இது பூக்கோவின் கருத்து. இந்தக் கருத்தினைப் பின்பற்றி ஸ்பிவக் அறிவுசார் வன்முறை Epictemic violence என்ற ஒரு கருத்தை முன்வைக்கிறார் ஸ்பிவக், இதன் நோக்கமே, மேற்கத்திய சிந்தனை யல்லாதவற்றை அழித்துவிட்டு, மேற்கத்திய சிந்தனையின் ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதாகும்.

இவர்கள் எல்லோரையும் விட முக்கிய மானவர் எட்வர்ட் செயித் என்பவர். இவர் ஒரு பாலஸ்தீனியர். அமெரிக்கா சென்று, அங்கு விரிவுரையாளராகப் பணியாற்றினார். 2003ஆம் ஆண்டில் காலமானார். இவரது நூல் ‘Orientalism’ என்பதாகும் (கிழக்கத்திய இயல்). இதன் மைய மான கருத்து மேற்கத்திய நாடுகள் (Occident) கிழக்கத்திய நாடுகளை அநாகரீகமானவை என்று கூறுவதை எதிர்ப்பதாகும். இங்கு நாங்கள் (45) அவர்கள் (Them) என்ற எதிர்வுகள் உள்ளன. நாங்கள் - மற்றதுகள் (other) என்றும் இவை எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதில் முந்தியது மேற்கத்திய நாடுகளையும், பிந்தியது ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றையும் குறிக்கும்.

மேற்கத்திய பார்வைப்படி, கிழக்கு நாட்டு மக்கள் அனைவருமே நாகரீகமற்றவர், சோம் பேறிகள், அறிவில் தாழ்ந்தவர்கள், மூடநம்பிக்கை மிகுந்தவர்கள், காட்டு மிராண்டிகள் என்பதாகும். இவர்களைச் சீர்திருத்துவதே, மாற்றுவதே மேற் கத்திய நாடுகளின் கடமையாகும். இவ்வாறு ஐரோப்பிய நாடுகள், கிழக்கு நாடுகளை அணுகு வதற்கு ஐரோப்பிய மையவாதம் என்று பெயர். இதில் கிழக்கிந்திய நாடுகள் அனைத்தினையும் ஒன்று சேர்த்து ‘கிழக்கு’ (Orient) என்று பொது மைப்படுத்துவது சரியல்ல என்று செயித் கூறு கிறார். இது ஐரோப்பியர்களது அதிகாரத்தினைக் காட்டுகிறது.

இவ்வாறு கூறும் செயித் “கிழக்கத்திய இயல்” என்பதற்கு ஒரு விளக்கம் தருகிறார் “அழகியல், அறிவு சார்ந்த கண்டுபிடிப்புகள், மொழி புனரமைப்பு, உளவியல் ஆய்வு, சமூகவியல் உருவாக்கங்கள் ஆகியவற்றில் நாம் என்ன

செய்ய முடியும், அவர்களால் என்ன செய்ய முடியாது என்ற ஒரு உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகும்.” அதாவது மேற்கத்திய ஆதிக்கம் எவ்வாறு கிழக்கத்திய நாடுகளின் மீது ஏற்பட்டது என்பதை எடுத்துக்காட்டுவது ஆகும்.

இதில் இரு கட்டங்கள் உள்ளன. ஒன்று, காலனி ஆதிக்கம் முடிந்த உடன் காலனி நாடு களின் மீது அது இல்லை என்று கூறுவது தவறு. இரண்டு அது தொடருகிறது. இது முன்னாள் காலனி நாடுகளில் குழப்பம், ராணுவப் புரட்சி, லஞ்சம், உள்நாட்டுப் போர், அரசியல் கொலைகள் ஆகிய வடிவத்தில் உள்ளன. இரண்டு மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் மூலம் காலனி மக்கள் மீது ஆதிக்கம் தொடருகிறது.

இவ்வாறு கூறும் செயித் காலனி நாடுகள் பற்றிய இலக்கியத்தினையும், பின்னைக் காலனி காலகட்டத்தில் தோன்றிய இலக்கியத்தினையும் ஆய்வு செய்கிறார். காலனி காலகட்டப் படைப்புகள் பலவற்றில் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்க உணர்வே இருந்தது. ஒரு உதாரணமாக இ.எம்.பார்ஸ்டர் என்ற ஆங்கில நாவலாசிரியரின் நூல் ‘‘A Patsage To India’ என்பது. இதில் இந்திய ஆண்கள் பெண் தன்மை உள்ளவர்களாகவும், பெண்களைக் கெடுப் பவர்களாகவும் காட்டப்பட்டுள்ளனர். பின்னைக் காலனி ஆட்டத்தில் தோன்றிய பல நாவல்கள் காலனி எதிர்ப்புத் தன்மை உள்ளவையாக உள்ளன என்று செயித் கூறுகிறார். சாலமன் ருஷ்டி, மார்க்யூஸ் போன்றவர்கள் இத்தகையவர்கள்.

செயித்தின் கருத்துப்படி, காலனியவாதிகள், காலனி நாடுகளைப் பொதுமைப்படுத்தி ‘கிழக்கு’ என்று கூறுகின்றனர். இவ்வாறு பொதுமைப் படுத்துதல் கூடாது. ஏனென்றால் கிழக்கத்திய நாடுகள் பன்முகத்தன்மை உள்ளவை; பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டவை. இவற்றை ஒரே தன்மையுள்ளதாக ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் கண்டனர். இது தவறு என்கிறார் செயித். இங்கு செயித் பின் நவீனத்துவத்தின் தாக்கத்திற்கு உள்ளாகி இருப்பதைக் காண முடிகிறது. இந்தக் கண்ணோட்டத்தினை வலுப்படுத்த தந்தை வழி அமைப்பினை எதிர்க்கும் பெண்ணியம், சமூகப் பொருளாதார அணுகுமுறையுள்ள மார்க்சியம், பூக்கோவின் அதிகார மையவாதம், பக்தினின் பல் குரல்வாதம் ஆகியன யாவுமே பின்னைக் காலனியக் கொள்கையில் உள்வாங்கப்பட்டுள்ளன. எனவே தான் இங்கு பொதுமைப்படுத்துதல் மறுக்கப்படுகிறது. கலப்பு, பன்முகத் தன்மை, ‘மற்றதுகள்’ மாறுதலுக்கான வலு உள்ளவை என்பது ஆகியன முன்னிலைப்படுத்தப்படுகின்றன. மாற்றுக்கள் பற்றிப் பேசப்படுகிறது.

இதன் காரணமாக செயித்தை, நீட்ஷே, பூக்கோ, அவுர்பா போன்ற சிந்தனையாளர்களுக்கு இணையாகக் காண்கின்றனர்.

இன்று பின் நவீனத்துவத்தைக் கூட மறுத்து பின்னைக் காலனியம் பேசுபவர்கள் உள்ளனர். ஏதேனும் புதியதைக் கண்டால் அதனை உடனே பின்பற்ற வேண்டும் என்ற ஒருவகை மூடநம்பிக்கை இது. பின்னைக் காலனியம் பற்றி மேலை நாடுகளில் பல விமர்சனங்கள் உள்ளன.

இவற்றில் முதலாவது புதிய மார்க்சியவாதி களின் விமர்சனம் வருகிறது எடர்கி ஈகிஷ்டன் அஜ்சா அகமது போன்றவர்கள் செயித் அமெரிக்க கலாச்சார ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டதன் விளைவு இது என்று கூறுகின்றனர். பழைய காலனியம் முடிவடைந்து, இன்று பொரு ளாதாரக் காலனியம் என்று ஒரு வடிவத்தில் அது இடம் பெறுகிறது. பழைய காலனி நாடுகள் சுதந்திர சிந்தனைக்கு வந்து விட்டன. இந்தப் புதிய யதார்த்தத்தினைக் கணக்கிலெடுக்காமல் செயித் பழைய கிழக்கு - மேற்கு என்பதைத் திரும்பிக் கூறு வதற்குக் காரணம் செயித் அமெரிக்கச் சூழலில் இருப்பது தான் என்பது இவர்கள் வாதம்.

ஆசிய ஆப்பிரிக்க நாட்டு அறிஞர்கள் இரு விமர்சனங்களை முன் வைக்கின்றனர். மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்து கொண்டு, அங்குள்ள சுதந்திரத்தினை அநுபவித்துக் கொண்டு மேற்கை தாக்குவது எந்த விதத்தில் நியாயம் என்று அவர்கள் கேட்கின்றனர். பாலஸ்தீனின் அநுபவத்தினை அடிப் படையாகக் கொண்டு அதனைப் பொதுமைப்படுத்தி எல்லா காலனி நாடுகளுக்கும் அது பொருந்தும் என்பது சரியல்ல என்பதை அவர்கள் கூறுகின்றனர்.

இந்த விமர்சனங்கள் ஒரு புறம் இருக்க, பின்னைக் காலனியமானது பின் நவீனத்துவத் தினைத் தொடர்ந்து இடம் பெறுகிறது என்று கூறும் பொழுது, மார்க்சியம் பற்றிய அதன் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது. பின்னைக் காலனிய வாதிகள் சில இடங்களில் லெனினைத் துணைக்கு அழைத்து உதாரணமாக, லெனினது “முதலாளித் துவத்தின் உச்ச கட்டம் ஏகாதிபத்தியம்” என்ற நூலை இவர்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

ஏனென்றால் அதில் லெனின் ஏகாதிபத்தியத் தினை மரித்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவம் என்னும் அது மனிதனைச் சிதைக்கிறது என்றும் கூறுகிறார். இதனை புதிய காலனியத்திற்கு பின்னைக் காலனிய வாதிகள் பயன்படுத்துகின்றனர். ஏகாதி பத்தியம் முன்னாள் காலனி நாடுகளைச் சிதைக் கிறது என்பது அவர்கள் வாதம். ஆனால் லெனின் கூறியது வேறு. இவர்கள் கூறுவது வேறு. லெனின் கிழக்கு, மேற்கு என்ற வேறுபாடு காட்டவில்லை. ஏகாதிபத்தியத்தை ஒரு பொருளாதார அம்சமாக, உலகளாவிய ஒன்றாகவே அவர் கண்டார். பின்னைக் காலனியவாதிகள் இதனை ஒரு பண்பாட்டு அம்ச மாகவே காண்கின்றனர். இந்தப் பொருளாதாரச் செயலின் விளைவுதான், இந்தப் பண்பாட்டு அம்சம் என்பதை அவர்கள் கண்டு கொள்வது கிடையாது.

மார்க்சிசம் பற்றிய பின்னைக் காலனிய பார்வை கவனிக்கத்தக்கது. எட்வர்ட் செயித் அவரது “கீழைதேசவியல்” (Orientalism) என்று நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

“ரோமானியர்களிலிருந்து மார்க்ஸ் (கருத் தியல் ரீதியாக) வரை அல்லது ஆழ்ந்த புலமை யுள்ளவர்களிலிருந்து திறமையான கற்பனை வரை, கிழக்கு என்பது மேற்கத்தியர்களால் பராமரிக்கப் படவேண்டியது, புரைமைக்கப்பட வேண்டியது, மீட்கப்பட வேண்டியது என்றே காணப்பட்டது” (மேற்கே contemporary Literary Theory Krishnasamy & others.Maxmillan. P.94) இந்த மேற்கோளில் மார்க்சையும் ஒரு காலனியச் சிந்தனையாளராக செயித் காட்டுகிறார். காலனி நாடுகளைப் பற்றி மார்க்ஸ் எழுதிய வற்றைப் படித்தவர்களுக்குத் தெரியும், அந்நாட்டு மக்களின் எழுச்சி எந்த அளவிற்கு ஒரு மாறுதலை ஏற்படுத்தும் என்று மார்க்ஸ் எழுதியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தமட்டிலும், இந்தியக் கை வினைஞர்களை மார்க்ஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அதுமட்டுமல்ல, வெள்ளையர்களது பொருளாதார நடவடிக்கைகள் இந்தியாவினை நவீன யுகத்திற்கு மாற்றுகிறது. இது வரவேற்கத் தக்கது என்று மார்க்ஸ் கூறுகிறார். ஆனால் எந்த இடத்திலும், இந்திய மக்கள் சோம்பேறிகள், முரடர்கள், பெண் தன்மை உள்ளவர்கள் நாகரீக மற்றவர்கள் என்று மார்க்ஸ் கூறவே இல்லை. ஏனென்றால் கறுப்பு, வெள்ளை, இனம், சாதி, மதம், மொழி எல்லாவற்றையும் கடந்து “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்று கூறியவர் மார்க்ஸ். எனவே மார்க்சையும் ஐரோப்பியக் காலனியச் சிந்தனையாளர்களுடன் சேர்த்து செயித் கூறுவது ஒரு சரியான பார்வையல்ல.

பின்னைக் காலனியம் பேசுபவர்கள் இதனை மேற்கு கிழக்கு என்று காண்பதை சற்று விரிவு படுத்தினால், எல்லோருமே காலனி ஆதிக்கவாதிகள் தாம் என்கிறார். துருக்கியர்கள், கான்ஸ்டான்டி நோபிளை பிடித்து, அங்கு இருந்த சென்ட் சோலை மாதா கோயிலை இடித்து, அல்ஜீரியா, ஸ்பெயின் போன்ற நாடுகளை தங்களது சாம்ராஜ்யத்தில் இணைத்ததும் காலனியம்தான். சோழர்கள் இலங் கையைத் தங்களது காலனியாக ஆக்கிக் கொண்டார்.

நாயக்கர்கள் தமிழகத்தினை தங்கள் பிடிக்குள் நீண்ட காலம் வைத்திருந்தனர். இதன் விளைவு பண்பாட்டு ரீதியாக தமிழ் இலக்கியம் தேக்க நிலையை அடைந்தது; தமிழ் இசை அநேகமாக மறைந்து போயிற்று. இவ்வாறு இந்தச் சொல்லிற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டே செல்லலாம். இப்படி இச்சொல்லை சற்று விரிவாக்கி இதற்கு விளக்கம் கொடுப்பவர்களும் உண்டு.

இதில் பழமையைக் காணும் போக்கு உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். வெள்ளையர்கள் இங்குள்ள பண்பாடு, சாதி ஆகியன பற்றிய விவரங்களைச் சேகரிக்கும் பொழுது தங்களது கண்ணோட்டத்தில் சில விளக்கம் கொடுத்தனர். இதனை மறுத்து அவற்றின் பழமையைக் காணும் பொழுது நமக்கு உண்மைகள் தெரியும். இது சிலரது வாதம். அப்படிக் காணும் பொழுது, கண்ட பின்னர், ஒவ்வொரு சாதியும் இன்று தங்கள் பழம் பெருமை பேசி வரலாற்றையே மாற்று கின்றனர். இது பின்னைக் காலனியத்தின் மூலம் இடம் பெறவேண்டும் என்றால் அது ஆரோக்கிய மானதல்ல.

காலனி ஆதிக்கவாதிகள், அவர்கள் பிடித்த நாடுகளை பொருளாதார ரீதியாக அடிமைப் படுத்தியதோடு மட்டுமல்லாமல் பண்பாட்டு ரீதியாகவும் அடிமைப்படுத்தினர். இது உண்மை. உதாரணமாக இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள் ஆகியோர் இச்செயல் களைச் செய்தனர். இதில் வெற்றி பெற்றவர்கள் ஆங்கிலேயர்கள், உதாரணமாக இந்தியர்களுக்குக் கல்வி புகட்ட வேண்டும். அவர்களை மனரீதியாக அடிமைப்படுத்த வேண்டும்; அவர்கள் அறிவு வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்றெல்லாம் ஹோரேஸ்வில்சன் என்பவர் அவரது Education of the Natives of India என்ற நூலில் கூறுகிறார்.

ஆங்கிலக் கல்வி இந்தியாவின் இந்த நோக்கத்தில் தான் கொண்டு வரப்பட்டது. இந்திய மொழி களையே அழிக்க வேண்டும் என்று பல ஆங்கிலே யர்கள் பேசி வந்தனர். இவை அனைத்தும் காலனி ஆதிக்கவாதிகள் செய்த செயல்கள். அவர்களுடைய அதிகாரத்தை நிலைநாட்ட அவர்கள் இவற்றை செய்தனர். இதனைப் பொதுமைப்படுத்தி அனைத்து மேற்கத்திய சிந்தனையும் கிழக்கினைப் பற்றிய இத்தகைய பார்வை உளது என்று கூறுவது தவறு. இத்தகைய நிலையை நாம் எடுத்தால் நமக்கு இங்கர் சால், வால்டேர், ரூசோ, மார்க்ஸ் ஆகியோர் கிடையாது. ஏனென்றால் காலனி நாடுகளை முதலில் அடிமைப்படுத்தியவர்கள் பார்த்த பார்வை வேறு.

பின்னர் பல நாடுகளுக்குச் சென்ற அறிஞர்கள் அங்கு உள்ள மக்கள் பற்றிய அருமையான ஆய்வு களைச் செய்துள்ளனர். தென் அமெரிக்கா சென்று அங்கு புராதன மக்களது சமுதாய அமைப்பினை ஆராய்ந்து ஒரு நூல் வெளியிட்ட பின்னர்தான், எங்கல்சின் “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற அடிப்படையான நூல் வெளியாயிற்று. இந்தியாவிலேயே அதிகார வர்க்கம் சாராத எத்தனையோ ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் இந்திய வரலாறு பற்றி பல விஷயங்களை வெளிக்கொண்டு வந்தனர். திராவிட மொழிகளுக்கு ஒப்பாய்வு இலக்கணம் எழுதி யவரே மேற்கத்தியர் தான். வேதங்களையும், உபநிடதங்களையும், மேற்கிற்கு அறிமுகம் செய்த வரே மேற்கத்தியரான மாக்ஸ்முல்லர் தான்.

இவற்றை எல்லாம் மனதில் கொண்டு தான் இந்தப் பின்னைக் காலனியத்தை அணுக வேண்டும். பழங்கால நிகழ்வுகளைத் தூசி தட்டி, புதுப்பித்துக் கொடுக்கும் பொழுது, வெறுப்பும், பகையும் தான் வளருமே ஒழிய இன்றைய யதார்த்தத்திற்குப் பொருத்தமாக அது இருக்காது.

ஆதாரம்:

  • Orientalism Edword Saith.
  • Introduction to Post Colonial Theory: Peter Childst R.T.Patrik williams.
  • Contemporary Literary Theory Maxmillan.
Pin It