library 350வளர்ந்த நாடுகள் தன் மக்களுக்கு மூன்று நிலைகளில் நூலகங்களை அறிமுகப்படுத்துகின்றன.

1. பொது நூலகம்,

2. நிறுவன நூலகம்,

3.வீட்டு நூலகம்.

பொது நூலகம் என்பது மனித வாழிடங்களின் தொகுப்புகளான கிராமம், நகரம், மாநகரம் என்னும் பரப்பில் இயங்கும் அனைவருக்கும் பொதுவான படிப்பகம். நிறுவன நூலகம் என்பது கல்வி நிறுவனங்கள், வேலை செய்யும் அலுவலகங்கள் முதலியவற்றில் பொதுவான, குறிப்பிட்ட துறை சார்ந்த நூல்களால் அமையும் நூலகம்.

வீட்டு நூலகம் என்பது தான் சார்ந்த துறை ரீதியிலான நூல்களுடன் தன் குடும்ப உறுப்பினர் களுக்கு (குறிப்பாக குழந்தைகளுக்குத்) தேவையான அறிமுகப் புத்தகங்களுடன் அமையும் நூலகம். இதில் நிறுவன நூலகம், வீட்டு நூலகங்களைவிட பொது நூலகங்கள் குடிமக்களின் கல்வித்தரத்தை மேம் படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

வளர்ந்த நாடுகள் உருவாக்கியிருக்கும் பொதுநூலகங்களின் அக,புற அமைப்புகள் நமக்குப் பிரமிப்பூட்டுபவை. ஜெர்மனியின் கொள்ன் நகரில் உள்ள பொது நூலகத்திற்குப் போயிருந்த போது, அதன் கம்பீரமான புறகட்டமைப்பே வியப்பில் ஆழ்த்தியது. அதன் வாயிலில் இருக்கும் வரவேற்புப் பலகையில் நாற்பத்தாறு மொழிகள் நம்மை வரவேற்கின்றன.

“அன்பார்ந்த வரவேற்புகள்” என்று தமிழும் புன்னகைக்கின்றது. கொள்ன் நகரின் அப் பொது நூலகத்தை அவ்வளவு நேர்த்தியாகக் கட்டமைத்திருக்கிறார்கள். வளர்ந்த நாடுகள் தான் நூலகக் கட்டமைப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகின்றன.

நூலகத்தின் நூல் அடுக்கு, நாற்காலி, மேசை போன்ற அறைகலன்கள் அனைத்தும், சொகுசான அனுபவத்தை அளித்து வாசிக்கும் மனநிலையை ஊக்கப் படுத்தும் விதத்தில் அமைந்திருக்கின்றன. மதுரை போன்று பழங்காலந்தொட்டு கலாச்சார மையமாக விளங்கும் ஒரு நகரம் தான் ஜெர்மனியின் கொள்ன் (கொலோன்) நகரம். அங்கே அமர்ந்திருந்த போது இந்திய, தமிழக பொது நூலகங்களின் நிலை குறித்த நினைவோடை மனதில் தோன்றியது.

இந்தியாவில் வீட்டில் நூலகம் வைத்திருப்பவர்கள் மிகச் சிலர். புத்தகங்கள் வீட்டில் தேவையில்லாமல் இடத்தை அடைத்துக் கொண்டு இடைஞ்சலாக இருக்கின்றன என்று மனைவி புலம்புவதாக சில எழுத்தாளர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். நிறுவனம் சார்ந்த நூலகங்களை எத்தனை நிறுவனங்கள் வைத்துப் பராமரிக்கின்றன என்று சொல்வதற்கில்லை.

ஆனால், பொது நூலகங்கள் என்று பார்த்தால் கல்கத்தா பொது நூலகம், தில்லி தீன்மூர்த்தி பவன், பாரளுமன்ற நூலகம், சென்னை கன்னிமரா நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், உ.வே.சா. நூலகம், மறைமலையடிகள் நூலகம் போன்ற பொது நூலகங்களும், ரோஜாமுத்தையா, ஞானாலயா போன்ற தனியார் நூலகங்களையும் நாம் பெருமையாகப் பேசுகின்றோம். இவையெல்லாம் வீற்றிருப்பது பெரு நகரங்களில். கல்வியறிவுடைய, கல்வியில் தேர்ந்த பெருநகர வாசிகளுக்கு உதவுபவை.

இன்னொரு வகையில் சொன்னால் இவையெல்லாம் ஆய்வு நூலகங்கள். ஆரம்ப நிலை வாசகனுக்குரிய நூல்களைக் கொண்டிருந்தாலும், பல்வேறு துறை சார்ந்த விஷயங்களை பல்வேறு வடிவங்களில் ஆவணப்படுத்தி ஆய்வாளர்களுக்கும் தேர்ந்த வாசகர்களுக்கும் அளிப்பது அவற்றின் முக்கிய நோக்கம். இவையெல்லாம் கல்வியறிவை மேம்படுத்துவதற்கு உதவுகின்றன. ஒரு நாட்டின் கல்வியறிவை மேம்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு அதைப் பரவலாக்குவதும் அவசியமானது. நான்கு அறிவாளிகள் இருக்கும் ஊரை விட நாற்பது அறிவாளிகள் இருக்கும் ஊர் எல்லா விதத்திலும் வளர்ந்திருக்கும்.

கல்வியறிவு பெரு நகரங்களில் வசிக்கும் பணக்காரர்களுக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் மட்டும் கிடைத்தால் போதுமா? பாமரர்கள், படிக்காதவர்கள், ஏழைகள் என இந்திய மக்களின் பெரும்பான்மையினர் குழுமியிருக்கும் கிராமங்களுக்கு கல்வியறிவை எப்படி கொண்டு செல்வது?கல்வியறிவில் முன்னேறிய நகரங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கல்வியறிவை மெல்ல சுவாசிக்கத் தொடங்கியிருக்கும் இந்தியக் கிராமங்களுக்குக் கிடைத்திருக்கிறதா? ஒரு கிராமத்தின் அடிப்படை வசதிகளில் நூலகத்தையும் இணைக்கும் அளவிற்கு இன்னும் நம் மனநிலை முன்னேறவில்லை என்றே தோன்றுகிறது. கல்வியறிவை பரவலாக்க பள்ளிக்கூடங்களோடு பொது நூலகங்களும் அவசியமானவை.

மேற்கத்திய நாடுகளில் இந்தச்சிந்தனை நடைமுறைக்கு வந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. கிராமப்புற மக்களின் கல்வி வளர்ச்சிக்குப் பொது நூலகங்கள் எவ்வளவு அடிப்படையானவை என்பதைப் பற்றியும், கிராமப்புற மக்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த பொது நூலகங்களை எவ்வாறு பயன் படுத்துவது என்பதைப் பற்றியும் நாம் சிந்திக்கத் தவறி விட்டோம்.

ஆனால் வளர்ந்த நாடுகள் மிகுந்த பொறுப்போடு கிராமப்புறங்களில் பொது நூலகங்களை செயல்படுத்தி நல்ல பலனை அடைந்திருக்கின்றன.

தமிழகத்தில் பொது நூலகங்களை பரவலாக்கி வாசிப்புத்திறனை வளர்க்கும் நோக்கில், தமிழ்நாடு பொதுநூலகங்கள் சட்டத்தை (1948) அடிப்படையாகக் கொண்டு 1972-ல் தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது.

இன்று அதன் கீழ் 4042 பொது நூலகங்கள் இயங்குகின்றன. அவற்றை, தமிழக அரசின் பொது நூலக இயக்குனர் குழுமம் ஆறு வகையாகப் பகுத்திருக்கிறது.

1. மாநில மைய நூலகம்-2, (கன்னிமரா நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம்), 2. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒன்று என்ற விகிதத்தில் மாவட்ட மைய நூலகங்கள்-32, 3. கிளை நூலகங்கள்-1664, 4. ஊர்புற நூலகங்கள்-1795, 5. பகுதி நேர நூலகங்கள்-539 (தொடக்கப்பணியில் பல புதிய நூலகங்களும் உள்ளன), 6. நடமாடும் நூலகங்கள்- 10.

பொது நூலகங்களை ஊக்குவிப்பதில் பிற மாநிலங் களை விட தமிழகமே முன்னனியில் இருக்கிறது. குஜராத், ராஜஸ்தான், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் பொது நூலகத்தை நிர்வகிப்பதற்கான நூலகச் சட்டங்களையே 21ம் நூற்றாண்டில் தான் உருவாக்கியிருக்கின்றன. தமிழகத்தில் அதிகமான நூலகங்களை உருவாக்கி கல்வியறிவை பரவலாக்குவதில் கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய இரு மாவட்டங்கள் முன்னிலையில் இருக்கின்றன.

கிராமங்களில் புதிதாக பொது நூலகங்களை நிறுவுவதற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்தும், ஊராட்சி முதல் தமிழக அரசின் பொது நூலகத்துறை வரையான ஆளுகைத் தரப்பிலிருந்தும் எழும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதை என் பட்டறிவால் அறிந்திருக்கிறேன். இன்று ஒரு கிராமத்திற்கு பொது நூலகம் கொண்டு வர வேண்டுமென்றால், அது தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையால் மட்டும் முடியாது. நூலகத்திற்குரிய இடத்தை வழங்கும் அதிகாரம் கிராம ஊராட்சியிடம் இருக்கிறது.

முதலில் நூலகம் தற்காலிகமாக இயங்க ஒரு வாடகையில்லாக் கட்டிடத்தையும், பின்பு நிரந்தரமான கட்டிடத்திற்கு 4-5 சென்ட் நிலத்தையும் ஊராட்சியிடம் பொது நூலகத்துறை கோருகிறது. இவற்றை அளிக்க முடியாமல் ஊராட்சிகள் பொது இடப் பற்றாக் குறையால் தள்ளாடிக்கொண்டிருக்கின்றன.

கடந்த இருபது ஆண்டுகளில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் கிடைத்ததிலிருந்து கிராமப்புறங்களில் இருந்த பொது இடங்கள் கணிசமான அளவிற்கு பஞ்சாயத்துத் தலைவர், ஒன்றியத்தலைவர் போன்றோரின் பெயருக்கு முறைகேடாகக் கைமாறிவிட்டன. அதனால் இன்று கிராமங்களிலேயே பொது இடங்களின் அளவு குறுகி விட்டது. இத்தகைய சூழலில், அங்கு அரசு நிறுவனங்களை நிறுவுவது பெரும் சவாலாக இருக்கிறது. நூலகம் போன்ற பொது நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்குவதில் ஊராட்சிகளும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள் கின்றன. அதில் முதன்மையாக இருப்பது சாதி.

பல்வேறு சாதியினர் வசிக்கும் கிராமங்களில் எந்தப்பகுதிக்கு ஒரு அரசு நிறுவனத்தைக் கொண்டு சென்றாலும் அது அப் பகுதியில் வசிக்கும் குறிப்பிட்ட சாதிக்கு வசதியாக செய்யப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் ஏராளம். பல நேரங்களில் அரசு நிறுவனங்களை தடுத்து நிறுத்தும் அளவிற்கு இப்பிரச்சினை வளர்ந்திருக்கிறது. அது மட்டுமன்றி, ஊராட்சித் தலைவர்களிடம் கல்வி பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமை, ஊராட்சி நிர்வாகம் கிராமத்திற்கு வரும் எல்லாத் திட்டங்களிலும் கமிஷன் எதிர்பார்க்கும் நிலை போன்ற பல்வேறு காரணங்கள் பல அரசு நிறுவனங்களை அடைப்படை வசதியோடு இயங்கவிடாமல் குறுகிய கட்டிடங்களிலும் வாடகை வீட்டிலும் குடியமர்த்திக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் இன்று இயங்கிக்கொண்டிருக்கும் நூலகங்கள் பலவற்றிற்கு சொந்தக்கட்டிடம் இல்லை, வாடகைக் கட்டிடத்தில்தான் இயங்கிக் கொண்டிருக் கின்றன. தபால் நிலையம், வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறையின் விதி களின் படி, கிராமங்களில் முதலில் பகுதிநேர நூலகம் என்ற சோதனை முறையில்தான் பொது நூலகங்கள் தொடங்கப்படுகின்றன. அதாவது பகுதிநேர நூலகம், ஊர்ப்புற நூலகம், கிளை நூலகம் என்ற முறைமையில் கிராமப்புற நூலகங்களின் வளர்ச்சியை தமிழக அரசு கட்டமைத்திருக்கிறது.

ஒரு கிராமத்தில் பொது நூலகம் கொண்டுவர வேண்டுமானால் முதலில் மூன்று புரவலர் களையும் இருநூறு உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும். அதற்குரிய கட்டணமாக புரவலர் கட்டணம் ரூ.1000, உறுப்பினர் கட்டணம் (ஆண்டு சந்தாவுடன் சேர்த்து) ரூ.20. என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மூன்று புரவலர், இருநூறு உறுப்பினர்களின் கூட்டுத்தொகையான ரூ.7000த்தை மாவட்ட நூலக ஆணைக்குழுவுக்கு அனுப்பிய பின்பு, நூலகத் திறப்பிற்கான ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

அதோடு அந்தப் பணத்தை(ரூ.7000) வங்கியில் டெபாசிட் பண்ணி அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் வரும் வட்டிப் பணத்தை (சுமார் ரூ.300), அந்நூலகத்திற்கு பத்திரிக்கை (ஒரு நாளிதழ், இரண்டு வார இதழ்) வாங்க செல வழிக்கிறது. ஒரு நாளிதழ், இரண்டு வார இதழ், அருகிலுள்ள கிளை நூலகத்திலிருந்து கைமாற்றாக அளிக்கப்படும் நூறு நூல்கள் முதலியன மட்டுமே புதிதாகத் தொடங்கப்படும் ஒரு பகுதிநேர நூலகத்தில் இருக்கும். அறைகலன்களான நாற்காலி, மேசை, நூலடுக்கு முதலியவற்றை யாரிடமாவது நன்கொடை யாகப் பெற வேண்டும்.

பகுதி நேர நூலகம் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு புரவலர், இருபது உறுப் பினர்களைக் கட்டாயம் சேர்க்க வேண்டும். அதற்குரிய தொகையை அந்தந்த மாதம் மாவட்ட தலைமை நூலகத்திற்கு அனுப்ப வேண்டும். அதை மாதம் தவறாமல் அனுப்பும் போது, ஒருநூலகம் அரசுக்குச் செலுத்தியுள்ள பணத்தின் அடிப்படையில் அந்நூலகத்திற்கு அரசு செலவழிக்கும் பணத்தின் அளவு உயரும் (நூலகத்திற்கு வாங்கும் நாளிதழ்,பருவ இதழ்களின் எண்ணிக்கை அதிகரித்தல்).

அரசுக்கு ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்துவதில் தாமதமோ, தடையோ ஏற்பட்டால் பொது நூலகத்துறை அந்த நூலகத்திற்கு பத்திரிக்கைகள் வாங்க மாதந்தோறும் வழங்கும் தொகையை நிறுத்திவிடும். இந்நிலை புதிதாகத் தொடங்கப்படும் பகுதிநேர, ஊர்ப்புற நூலகங்களுக்கு மட்டுமே. அதுதான் ஒரு கிராமத்தின் நூலகத் தேவையை (நூலகப் பயன்பாட்டை) அறிந்துகொள்ள தமிழக அரசு வைத்திருக்கும் அளவுகோல்.

பகுதிநேர நூலகத்திலிருந்து ஊர்ப்புற நூலகமாகவும், ஊர்ப்புற நூலகத்திலிருந்து கிளை நூலகமாகவும் தரம் உயர்த்த, உறுப்பினர் சேர்க்கை, புரவலர் சேர்க்கை முதலியவற்றோடு பயன்பாட்டுக்காலமும் கவனத்தில் கொள்ளப்படுகின்றது.

பகுதிநேர நூலகம் தொடங்கப்பட்ட ஓரிரு ஆண்டுகளில் கிளை நூலகமாகத் தரம் உயர்த்த எவ்வித முகாந்திரமும் கிடையாது என்று சொல்வதற்கில்லை. அது மாவட்ட நூலக அதிகாரியின் கையில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரமாக இருக்கிறது. சில பகுதி நேர நூலகங்கள் தொடங்கிய சில மாதங்களிலேயே ஊர்ப்புற நூலகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

சில பகுதிநேர நூலகங்கள் ஆண்டுக்கணக்கில் பகுதிநேர நூலகமாகவே இயங்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன. அரசு சந்தா செலுத்தி தபாலில் பெறும் பத்திரிக்கைகள் கிளை நூலகங்களுக்கும், மாவட்ட, மாநில மைய நூலகங் களுக்கும் மட்டுமே வருகிறது.

புதிதாகத் தொடங்கப்படும் பகுதிநேர நூலகம் காலை அல்லது மாலையில் மூன்று மணிநேரம் செயல் படுகிறது. கிளை நூலகங்களைப் பொறுத்தவரை மூன்று நிலைகள் உண்டு. அதாவது, முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என்று. முதல் தரம் மாவட்ட மைய நூலகங்களாகும், இரண்டாம் தரம் நகராட்சியில் அமையும் தலைமை நூலகம், மூன்றாம் தரம் கிராமப் புறங்களில் அமைபவை.

முதலிரண்டு தரத்தில் உள்ள கிளை நூலகங்கள் காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரையான பன்னிரெண்டு மணி நேரம் செயல்படும். மூன்றாம் தர கிளை நூலகமும் ஊர்ப்புற நூலகமும் 9.30-12.30, 3-6 என்ற முறையில் ஆறு மணி நேரம் செயல்படுகின்றன.

பகுதிநேர நூலகருக்கான தினக்கூலி ரூ.20. அதே நேரத்தில் கிளை நூலகத்தில் தற்காலிகமாகப் பணி புரியும் துப்புரவுத் தொழிலாளியின் தினக்கூலி ரூ.30. சுதந்திர இந்தியாவில் தற்காலிக அரசு ஊழியருக்கு தினக் கூலியாக 20 ரூபாய் கொடுக்கும் அநியாயம் தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையில் தான் இருக்கின்றது. ஊராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் திருவள்ளுவர் நூலகங்களின் நூலகருக்கு மாத ஊதியம் ரூ.700 லிருந்து 1500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கிராமப்புற மேம்பாடு & பஞ்சாயத் ராஜ் துறை 12-07-2013 அன்றே அரசாணை வெளியிட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் இயங்கும் பகுதிநேர நூலகங்களின் நூலகருக்கு இன்றளவும் ரூ.20தான் தினக்கூலியாக வழங்கப்படுகிறது. நூலகர் தினமான இன்று இந்த நூலகர்களின் துயரம் பற்றி சிந்திப்பார் யாரோ? இதை தமிழகத்தில் கல்வி சார்ந்த நடவடிக்கை களுக்கும், அரசுக்கும் ஏற்பட்ட அவமானம் என்று தான் சொல்ல வேண்டும்.

அதைவிடக் கொடுமை அந்த 20 ரூபாய் கூலியைக் கூட இரண்டு மாதம் கழித்துக் கொடுக் கின்றது அரசு. அதாவது ஜனவரி மாதச் சம்பளம் பிப்ரவரி இறுதியில் தான் கிடைக்கும். கிராமப் புறங்களில் பணியாற்றும் நிரந்தர நூலகர்களுக்குரிய அகவிலைப்படி, சம்பள உயர்வு முதலியவற்றையும் முறையாக வழங்குவதில்லை. நூலகர்களின் நலனில் கிராமப்புறங்களின் கல்வி மேம்பாடு அடங்கியிருக்கிறது என்பதை அறியும் நுண்ணறிவு இங்கே யாருக்குமில்லை. அதே போன்று மாவட்ட நூலக அதிகாரிகளையும் முறையாக நியமிப்பதில்லை.

ஒரு மாவட்ட நூலக அதிகாரி ஒன்றிற்கு மேற்பட்ட மாவட்டங்களின் நூலகப் பொறுப்புகளையும் கவனிக்க வேண்டியிருப்பதால் அவரால் சிறப்பாக செயல்பட முடிவதில்லை. நூலகத் துறையின் அலுவல் சார்ந்த பிரச்சினைகள் இன்று கிராமப்புற கல்வி மேம்பாட்டில் சில இடர்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

பொது நூலகங்களுக்கு ஆண்டுதோறும் வாங்கப் படும் நூல்களின் எண்ணிக்கையை மூன்று இலக்கத்தி லிருந்து நான்கு இலக்கமாக உயர்த்தியது கடந்த தி.மு.க ஆட்சி.பொது நூலகத்திற்கு நூல்களை கொள்முதல் செய்யும் போது தமிழக அரசு சில விதிகளைப் பின்பற்று கின்றது. அதாவது, முதல் பதிப்பை மட்டும் வாங்குதல், நாவல், கவிதை, சிறுவர் நூல், சமையல் குறிப்புகள் எனப் பல்வேறு தலைப்பின் கீழ் குறிப்பிட சதவீதத்தில் ஒவ்வொரு ஆண்டும் நூல்களை வாங்குதல் போன்றன.

இன்று தமிழகத்தில் உள்ள சில பதிப்பகங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த நூல்களை மறுபதிப்பு செய்யும் போது தனது பதிப்பகத்தின் முதல் பதிப்பு என்பதை மட்டும் குறிப்பிடுகின்றன. அதற்கு முன்பு அந்நூலை எந்த ஆண்டு எந்த பதிப்பகம் வெளியிட்டது என்பதை மறைத்துவிடுகின்றனர். நூலக ஆணை பெற வேண்டி பல பதிப்பகங்கள் இந்தக் காரியத்தில் ஈடுபடுகின்றன.

பதிப்பகங்களின் இது போன்ற நடவடிக்கைகளாலும், சில அரசியல் குறுக்கீட்டாலும் ஒரே நூலை இரண்டு பதிப்பகங்களில் ஒரே நேரத்தில் கொள்முதல் செய்து நூலகத்துறை ஏமாந்த வரலாறும் உண்டு. அதற்கு சிறந்த உதாரணம் இராஜம் கிருஷ்ணனின் ‘குறிஞ்சித்தேன்.’ களஆய்வு செய்து நாவல் எழுதும் இயல்புடைய இராஜம்கிருஷ்ணன் கலைமகள் இதழில் தொடராக எழுதிய குறிஞ்சித்தேனை, கலைமகள் காரியாலயம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நூலாக வெளியிட்டது. பின்பும் பல பதிப்புகளைக் கண்டது.

நீலகிரி மலையில் வாழும் தோடர் இன மக்களின் வாழ்வைக் குறிக்கும் அப்புதினத்தை, 2010லும் 2011லும் இருபதிப்பகங்கள் தங்களின் முதல்பதிப்பு என்னும் முத்திரையோடு வெளியிட்டிருக்கின்றன. நூலகத்துறை 2013-14ம் ஆண்டுக்குரிய நூல் கொள்முதல் பட்டியலில், அந்த ஒரே நூலின் இரண்டு பிரதியை சேர்த்திருக்கிறது.

நூலின் அட்டையை மட்டும் ஒரு பதிப்பகம் நீல நிறத்திலும், இன்னொரு பதிப்பகம் பச்சை நிறத்திலும் மாற்றியிருக்கின்றன. நூலின் பதிப்பு, எழுத்துரு மட்டுமன்றி இரு பதிப்பகங்களின் முகவரியும் கூட ஒன்றாகவே இருக்கின்றது.

அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் நூல்களே இல்லாத மின் நூலகங்களுக்கு முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழகத்தின் எத்தனையோ ஊராட்சிகள் பொதுமக்களிடமிருந்து வீட்டு வரி, தண்ணீர் வரியோடு நூலக வரியும் வசூலித்துக் கொண்டிருக்கின்றன ஊரில் நூலகமே இல்லாமல்!

12-08-2014 அன்று நூலகர் தினம் (நூலகத் தந்தை எஸ்.ஆர்.ரெங்கநாதன் பிறந்த நாள்)

Pin It