bharathi lekanath

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் சுதந்திர வேட்கை, தேசாபிமானம், காலனிய எதிர்ப்பு என ஒரே கருத்தியல் கொண்ட இயக்கங்களும், பத்திரிகைகளும், படைப்பாளிகளும் நிறைய இருந்தனர். அவற்றின் ஒருங்கிணைவுதான் இந்திய விடுதலையை சாத்திய மாக்கியது. அக்காலத்தில் பாரதி போன்ற படைப் பாளிகள் உணர்ச்சிப்பூர்வமான விஷயங்கள் மூலம் தங்கள் கருத்தியலை சாமானியரிடத்தும் கொண்டு சென்றார்கள். தேச விடுதலை, பெண் விடுதலை, சமூக மாற்றம் என பாரதியின் கருத்தியலோடு ஒன்றிணைந்திருந்த அவரது சமகாலத்துப் படைப்பாளிகள் பலர் இந்திய மொழிகளில் உண்டு (மலையாளம்-நாராயணகுரு; தெலுங்கு-குரஜாடா அப்பாராவ்; வங்காளி-இரவீந்திரநாத்தாகூர், நஸ்ரூல்இஸ்லாம்; இந்தி-பாரதேந்து அரிச்சந்திரர்).

இவ்வாறு மொழி வேறுபாடுகளைக் கடந்து பாரதியின் கருத்தியலில் ஒன்றிணைந்த இந்தியக் கவிஞர்கள் பலர் இருப்பினும் அவரது வாழ்வியலோடு இயைந்த வாழ்வுடையார் யாருமில்லை. ஆனால் இந்தியாவிற்கு வெளியே பாரதியின் சமகாலத்தில் வாழ்ந்த நேபாளிக் கவிஞர் லேகநாத்பௌடியாலின் வாழ்வியல், பாரதியின் வாழ்வியலோடு எதிர்பாராத ஒற்றுமைகளைக் கொண் டிருக்கிறது. இன்று நவீனக் கவிதையின் தந்தை என்னும் இலக்கிய அடையாளம் இவ்விரு கவிகளுக்கும் தத்தம் மொழிகளில் உண்டு. நவீனத் தமிழ்க் கவிதையின் தந்தை யாக பாரதி இனம் காணப்படுவதைப் போன்று, நவீன நேபாளிக் கவிதையின் தந்தையாக லேகநாத்பௌடியால் விளங்குகிறார். தத்தம் மொழிகளில் நவீனக் கவிதையின் மூலகர்த்தாக்களாக விளங்கும் இவ்விருவருக்கும் கருத்தியல் ஒற்றுமையை விட வாழ்வியல் ஒற்றுமையே பிரதானமானது.

1882 டிசம்பர் 11-இல் எட்டயபுரத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறக்கிறார் பாரதி. பாரதி பிறந்து இரண்டு ஆண்டுகள் கழித்து 1885இல் மேற்கு நேபாளத்தில் அர்க்கவுன்-அர்சலே என்னும் இடத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில்தான் லேகநாத் பௌடி யாலும் பிறக்கிறார். 1880-களில் இந்தியா பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழும், நேபாளம் ராணா (இந்து இராஜபுத்திரர்கள்) குடும்ப ஆட்சியின் கீழும் இருக் கின்றன. ஐந்து வயதிலேயே தாயை இழந்த பாரதி தனது பதினான்கு வயதில் செல்லம்மாளை திருமணம் செய்கிறார். லேகநாத்தும் தனது பதின்ம வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார். பெண்களுக்கு ஏழு வயது முடிவதற்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்னும் ‘மனுஸ்மிருதி’யின் வழியைப் பின்பற்றும் பிராமணக் குடும்பத்தில் பிறந்த இவ்விரு கவிஞர்களுக்குமே பதின்ம வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

திருமணம் செய்த ஓராண்டுக்குப்பின் 1898-இன் பிற்பகுதியில் தன் அத்தை குப்பம்மாளின் அழைப்பின் பேரில் பாரதி காசிக்குச் செல்கிறார். பாரதி காசிக்குச் செல்லும் போது அவரது வயது பதினைந்து. இந்துக்களின் கலாச்சார மையமாகவும், புண்ணிய பூமியாகவும் விளங்கும் காசிக்கு, சமஸ்கிருதம் படிப்பதற்காக லேகநாத் 1900-இல் நேபாளத்திலிருந்து வந்து சேர்கிறார். அப்போது அவரது வயதும் பதினைந்துதான். பாரதி காசியில் ஜெய் நாராயணா கலாசாலை என்னும் ஆங்கிலப் பள்ளியில் பயிலும் போதே, ஆங்கிலம் மட்டுமின்றி சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளையும் கற்று தேர்ச்சி பெறுகிறார். லேகநாத் சமஸ்கிருதம் பயில்வதற்காகவே காசிக்கு வந்து, ஒன்பது ஆண்டுகளில் (1900-1909) சமஸ்கிருதமொழி, செவ்விலக்கியங்கள் அனைத்தையும் ஆழமாகக் கற்கிறார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் இவ்விரு கவி களையும் காசியில் கூட்டியிருக்கிறது.

பாரதி 1898 முதல் 1902 வரையும், லேகநாத் 1900 முதல் 1909 வரையும் காசியில் இருக்கிறார்கள். குறிப்பாக 1900-1902 வரை யான காலகட்டத்தில் இவ்விரு கவிகளும் பிறமொழிக் கல்வி பயில்தல் என்னும் ஒரே நோக்கில் காசியில் தங்கியிருந்த போது இருவரும் சந்தித்துக் கொள்வதற் கான வாய்ப்பு இருந்திருக்கலாம். பதின்ம வயதினரான அவர்கள் ஒருவேளை சந்தித்தும்கூட இருக்கலாம். பின்னாளில் அவர்கள் பெருங்கவிகளாக உருவெடுத்த பின்பு ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்ததற்கான எந்த அறிகுறியும் அவர்களது எழுத்தில் இல்லை. ஆயினும் காசியில் ஒரே நோக்கத்தில் (மொழி பயில்தல், சமஸ்கிருத இதிகாசம், புராணம் பயில்தல்) இயங்கிய அவர்கள் பயின்ற கல்விக்கூடங்கள், தங்கியிருந்த இடங்கள், புழங்கிய பகுதிகள் முதலியவற்றை ஆராய்ந்தால் சில ஆதாரங்கள் கிடைக்கக்கூடும்.

1897-இல் தனது பதினைந்தாவது வயதில், தன் கல்வி கற்றலுக்கு பொருளுதவி வேண்டி, எட்டயபுரம் ஜமீன் வெங்கடேசுர எட்டப்பனுக்கு எழுதிய கவிதை வடிவக் கடிதமே இன்று நமக்குக்கிடைக்கும் பாரதியின் முதல் படைப்பாக இருக்கிறது. அந்தக் கவிதை பாரதியின் தமிழ்ப் பற்றிற்கு ஓர் அடையாளமாக இருப்பினும் பிறமொழிகள் பற்றிய பாரதியின் அப் போதைய பார்வையும் வெளிப்படுகிறது.

“செந்தமிழ்த் திருமொழி சிறிது மாதரிப்பவர்

இன்மையின் இந்நாள் இனிது கற்பவர்க்கு

நன்மை பயவாது நலிந்திட, மற்றைப்

புன்மொழி பலவும் பொலிவுற லாயின;

.............................. என் தந்தையார்

என்னையும் புறமொழி கற்க வென்றியம்புவர்

என்னயான் செய்குவ தின்றமிழ் கற்பினோ

பின்னை ஒருவரும் பேணார் ஆதலின்

கன்னயானம் மொழி கற்கத் துணிந்தனன்.”

தமிழ்மொழிக்கு அன்றைய சமூகத்தில் இருந்த ஆதரவையும், மதிப்பையும் எடுத்துரைத்து, தன் தந்தையின் வழிகாட்டலையும் புறந்தள்ளி தமிழைக் கற்கத் துணிந்த தனக்கு உதவ வேண்டுகிறார் பாரதி. நூறாண்டுகள் கடந்து, இன்றும் தமிழின் நிலையும், தமிழ்கற்பவரின் நிலையும் பாரதியின் காலத்திலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை.

தமிழை மட்டும் வைத்து தமிழ்நாட்டில்கூட பிழைப்பு நடத்த முடியாது என்னும் உண்மையை, பாரதியின் வாழ்க்கையை இலக்கிய வாழ்வு - பத்திரிகை வாழ்வு எனப் பகுத்தறிவதன் மூலம் உணரலாம். அப்படிப் பட்ட சூழலிலும் பிறமொழிகளை விடுத்து தமிழ்தான் படிக்கவேண்டும் என்னும் அவரது மனநிலை அடுத்த ஆண்டே (1898) மாறுகிறது. காசியில் சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் முதலிய பிறமொழிகளை ஆர்வமாகக் கற்கிறார். தாய்மொழி உணர்வு, பிறமொழி அறிவு பற்றிய புதிய புரிதல்கள் அப்போது தான் அவரிடம் வேரூன்றுகிறது. பாரதி காசியில் பெற்ற கல்வி அவரது மொழி அறிவை விசாலப்படுத்தியிருக்கிறது. முக்கியமாக தமிழில் பாரதியின் அடையாளமாகத் திகழும் திட காத்திரமான சொற்கோவைகளை உருவாக்க அவரது பன்மொழிப் புலமையும் பின்புலமாக இருந்தது. மேலும், பாரதி பத்திரிகை துறையில் நுழைவதற்கு வடிகாலாய் இருந்ததும் அவரது பன்மொழிப் புலமையே. ‘சுதேச மித்திரன்’ நாளேட்டில் முதன்முதலாக பத்திரிகை யாளராக, உதவி ஆசிரியராக பொறுப்பு வகித்தபோது (1904), செய்தி அறிக்கைகளை மொழி பெயர்ப்பதும், செப்பனிடுவதும் தான் பாரதியின் முக்கியப் பணி.

காசி வாசம் லேகநாத்தை சமஸ்கிருதமயமாக்கு கிறது. சமஸ்கிருதம் கற்கவே காசிக்கு வந்தவர் சமஸ் கிருத செவ்விலக்கியங்களில் மனதைப் பறிகொடுத்தார். கி.பி.ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த சமஸ்கிருத மகா கவியான காளிதாசரின் ‘ருதுசம்ஹார’த்தின் தாக்கத்தால் ‘பருவங்களின் பிரதிபலிப்பு’ என்னும் காவியத்தை நேபாளியில் படைக்கிறார். பின்பு, நேபாளி மொழி சார்ந்த செயல்பாடுகளில் லேகநாத் அதிகம் ஈடுபட்டார்.

சிறுவயதிலிருந்தே கவிபுனையும் ஆற்றல் பாரதியைப் போன்று லேகநாத்துக்கும் இருந்தது. இருவரது கவிதையும் முதன்முதலில் அச்சேறிய ஆண்டு 1904. 1897-லிருந்து பல கவிதைகள் புனைந்தும் 1904 ஜூலையில் மதுரையிலிருந்து மு.ரா.கந்தசாமிக் கவிராயர் நடத்திய ‘விவேகபாநு’ என்னும் மாத இதழில்தான் ‘தனிமையிரக்கம்’ என்னும் பாடல் முதன்முதலில் அச்சில் வெளியாகிறது. அதேபோன்று லேகநாத்தின் இருகவிதைகள் முதன்முதலில் 1904-இல் இந்திய நேபாளி இதழான ‘சுந்தரி’யில் வெளிவந்தது.

பாரதி 1903-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எட்டயபுர ஜமீனின் அழைப்பை ஏற்று காசியிலிருந்து எட்டயபுரம் திரும்புகிறார். அங்கு ஜமீன்தாரின் அவைப் புலவராக பணியாற்றுகிறார். லேகநாத் 1909-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காசியிலிருந்து காத்மண்டு திரும்பியதும் அப்போது நேபாளத்தை ஆண்டு கொண்டிருந்த ராணா குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான பீம்ஷம்ஷெரின் ஆசிரியராகவும், புரோகிதராகவும் ஆகிறார். சிறிது காலத்திலேயே பாரதிக்கு அரண்மனை பணியில் வெறுப்பு ஏற்பட பணியில் சேர்ந்த ஓராண்டிலேயே விலகிவிடுகிறார். லேகநாத் பீம்ஷம்ஷெரின் ஆசிரியராகவும், புரோகித ராகவும் இருபத்தைந்து ஆண்டுகள் பணியாற்றுகிறார்.

சுயராஜ்யம், பெண்விடுதலை, சமநீதி, சமூக மாற்றம் என்று பாரதியின் சமூகப் பார்வையும், கவிதை, கதை, பத்திரிகை என இயங்குதளமும் பரந்துபட்டது. லேகநாத் தன் கவிதையின் மூலம் இந்து மரபோடு பிணைந்த (நேபாளி)மொழித்தூய்மையிலும், மொழி வளத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றினார். கருத்தியலில் இருதுருவங்களாக இருக்கும் இரு மகா கவிகளுக்கும் உள்ள இந்த வாழ்வியல் ஒற்றுமைகள் தற்செயலானவை.

Pin It