kavimani 350தேசிக விநாயகம் பிள்ளை (1876-1957) தமிழகத்தின் தலைசிறந்த தமிழியல் ஆராய்ச்சியாளர்; கவிஞர்; ஆசிரியர். காலனியம் நிலைபெற்று எழுந்த காலத்தில் உருவான தமிழ்ப் புலமை உலகில் மறுத்தொதுக்க முடியாத புலமையாளர்களில் ஒருவர். ஆயினும் அவர் ஒரு கவிஞர்; அதுவும் குழந்தைக் கவிஞர் என்ற எண்ணமே பொதுவாக மேலோங்கியுள்ளது. இந்த எண்ணத்தை அடியோடு மறுத்து வாதிட்டு இப்போது ஒரு நூல் வெளிவந்துள்ளது.

அ.கா. பெருமாள் அண்மையில் எழுதி, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள  “கவிமணி வரலாற்றாய்வாளர்” என்பதுவே அந்த நூல். ஏற்கனவே இந்நூலாசிரியர் கவிமணியின் இல்புனைவு எழுத்துகளையும் புனைவு எழுத்துகளையும் தொகுத்து, சீரிய முறையில் பதிப்பித்துள்ளார். கவிமணியின் சில ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார். இந்தப் பணிகளின் பெறுபேறாக இந்த நூலை அவர் எழுதியுள்ளார்.

தேசிக விநாயகம் பிள்ளை தமிழ்நாட்டின் கவிமணி என்ற எண்ணம் பொதுப்புத்தியில் ஆழமாகப் பதிந்துள்ளது. இந்த எண்ணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற அவாவில் இந்நூலாசிரியர், கவிமணியை ‘வரலாற்றாய்வாளர்’ என்று இந்நூலில் அழுத்திச் சொல்லியுள்ளார். ஆயினும் கவிமணியின் கவிதைப் பயணம் பற்றியும் இந்நூலில் ஒரு நீண்ட கட்டுரை உள்ளது.

வாழ்வும் பணியும், கவிமணியின் கவிதைகள், வரலாற்று ஆய்வாளர், கவிமணியும் நாட்டார் வழக்காறுகளும், கவிமணியின் சமகாலநோக்கு ஆகிய ஐந்து இயல்களையும், ஆறு பின்னிணைப்புகளையும் இந்நூல் கொண்டுள்ளது. மலரும் மாலையும் கவிதைத் தொகுதியில் உள்ள ஆங்கிலவழி மொழிபெயர்ப்புக் கவிதைப் பட்டியல், கவிமணியின் இல்புனைவு எழுத்துகளின் பட்டியல், இல்புனைவு எழுத்துகளில் கல்வெட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளின் சுருக்கம், கவிமணி குறித்து வெளிவந்த மலர்களும் நூற்களும் அடங்கிய பட்டியல், தெரிவு செய்யப்பட்ட கவிமணியின் சில கவிதைகள், கவிமணியின் வாழ்க்கைக் குறிப்புகள் என இவை ஆறும் பின்னிணைப்புகள் ஆகும்.

கவிமணி வாழ்ந்த காலத்தையும், அக்காலத்திற்கு முகம் கொடுத்து அவர் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும் இந்நூலின் ‘வாழ்வும் பணியும்’ என்ற முதலாவது இயலும், ‘கவிமணியின் சமகாலநோக்கு’ என்ற ஐந்தாவது இயலும் தகவல்களை அளிக்கின்றன. கவிமணியை இ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடு சந்தித்த நிகழ்வு பற்றிய வருணனையோடு தொடங்கி, முதலாவது இயல் கவிமணி வாழ்ந்த காலத்திற்குள்ளும் நிலத்திற்கும் சமூகத்திற்குள்ளும் அழைத்துச் செல்கிறது.

கவிமணி நாஞ்சில் நாட்டுக்காரர். சேர, சோழ, பாண்டிய மண்டலங்களுக்கு இடையில் நாஞ்சில் நாடு ஒரு தனித்துவமான பண்பாட்டு மண்டலம். இயற்கைச் சூழலாலும் சமூக வரலாற்றாலும் உருவான இந்தத் ‘தனித்துவத்தை’ இன்றுவரைகூட இழக்கவில்லை. காலனியக் காலம் முழுவதும் திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியின் கீழ், சேர நாட்டுப் பண்பாட்டின் தமிழ் முகமாக நாஞ்சில் நாடு விளங்கியது. ஆயினும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நவீன அம்சங்கள் முனைப்புப் பெறத் தொடங்கியதும் தமிழ் முகம் ஒடுங்கத் தொடங்கியது.

நாஞ்சில் நாட்டு வேளாளர் சமூகத்தவரில் 1876ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் சிவதாணுப் பிள்ளை, ஆதிலட்சுமி ஆகியோருக்கு மூன்றாம் மகவாகக் கவிமணி பிறந்தார். இவரது ஒன்பதாம் வயதில் தந்தை மறைந்தார். இவர் வாழ்ந்த காலத்தில் நாஞ்சில் நாட்டு வேளாளர் சமூகம் எத்தகைய இடுக்கண்ணில் பட்டு உழன்றது என்பதற்கு, அவரது மருமக்கள் வழி மான்மியமே சான்று பகர்கின்றது. இக்குறுங்காப்பியம் காட்டுவதுபோல, மருமக்கள் வழியினாலும் மூடநம்பிக்கைகள் முதலிய இன்னும் பிற சீர்கேடுகளாலும் நாஞ்சில் நாட்டு வேளாளர் சமூகம் துன்புற்றது.

கவிமணி மரபு வழியில் தமிழ்க் கல்வியையும் நவீன கல்விமுறையில் மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் கற்றார். பள்ளிக் கல்வியையும் புகுமுகப் படிப்பையும் ஆசிரியர் பயிற்சியையும் பெற்றார். பள்ளியிலும் பெண்கள் கல்லூரியிலும் 30 ஆண்டுகள் அறிவியல் மற்றும் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். சிறுவயதிலிருந்தே செய்யுள் இயற்றுவதில் ஆர்வமும் திறமும் பெற்று விளங்கினார். பின்னர் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் கவனம் செலுத்தி வந்தார். மிகவும் குறிப்பிடத்தகுந்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அத்துடன் சமகாலநோக்கு உடையவராக விளங்கினார் என்பதைப் பல நிகழ்வுகள் வாயிலாக இந்நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

கவிமணியின் காலம், சூழல் குறித்து எஸ்.வையாபுரிப் பிள்ளை எழுதியுள்ள கருத்து எடுத்துக் காட்டத்தக்கது. பாரதியின் கவிதைகளில் காணும் தேச உணர்ச்சி கவிமணியின் கவிதைகளில் இல்லை என்றும், அதற்குக் காரணம் நேரடி காலனி ஆட்சியில் அல்லாமல் சுதேச மன்னர் ஆட்சியின் கீழ் இருந்த வாழ்க்கை நிலமையே காரணம் என்றும் விளக்கிய பின்னர், “இவருடைய கவிகள் பெரும்பாலானவற்றில் தேசப் பக்தியின் நன்மணம் கமழ்ந்து வீசவில்லை. இதற்கு மாறாக, எப்பொழுதும் நிலைபேறாயுள்ளதும், நமது மக்களால் பெரிதும் போற்றப்படுவதுமாகிய இந்தியப் பண்பாட்டின் பெருநலமே (cultural interest) இவைகளில் நிரம்பித் ததும்புகிறது. பண்பாட்டின் உணர்ச்சி யன்றே கவிமணியின் பாடலுக்கு உயிர் நாடியாக உள்ளது ” என்று கூறுகிறார்.

இக்கூற்றில் உள்ள பண்பாட்டு பெருநலம் என்ற சொல்லுக்கு வையாபுரிப் பிள்ளை cultural interest என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இதனை இக்கால மொழியில் பண்பாட்டு ஆர்வம் என்று சொல்லலாம். 1950 களுக்குப் பிறகுதாம் பண்பாட்டு ஆய்வு, பண்பாட்டியல் என்ற சொற்கள் வந்துசேர்ந்தன. ஒருவேளை, வையாபுரிப் பிள்ளை, கவிமணியை ஒரு பண்பாட்டியலாளர் என்று கூற வருகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. கவிமணியின் கவிதைகளை எடுத்து விவாதிக்கும் போது, கவிமணியின் கவிதை மொழிபெயர்ப்புகள் எல்லாம் பண்பாட்டுத் தன்வயமாக்கலாக நிகழ்ந்திருப்பதை அவர் எடுத்துக் காட்டியுள்ளார். ஆயினும் அவர் கவிமணியின் ஆராய்ச்சி எழுத்துகளைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை.

இதற்கு மாறாக, இந்நூலாசிரியர் வரலாற்று ஆய்வாளர், கவிமணியும் நாட்டார் வழக்காறுகளும் என்ற இரண்டு தலைப்புகளில் கவிமணி ஒரு பண்பாட்டியல் ஆய்வாளராக விளங்கியுள்ளார் என எடுத்துக் காட்டுகின்றார். எனவே கவிமணியின் படைப்புகள், புனைவு ஆயினும் சரி, இல்புனைவு ஆயினும் சரி பண்பாட்டில் நிலைகொண்டுள்ளன என்ற எண்ணம் வலுப்பெறுகின்றது. ஆயினும், கவிமணி பண்பாட்டைக் குரங்குப் பிடி பிடித்துத் தொங்கிய பழமைவாதி இல்லை; பண்பாட்டை சீர்திருத்தம் செய்யும் எண்ணம் கொண்ட புதுமையாளர். இதற்கு அவரது படைப்புகளே சான்றுகள் ஆகும்.

இந்த வகையில் ‘கவிமணி வரலாற்றாய்வாளர்’ என்னும் இந்நூல் சுவையான நடையில், பல புதிய தகவல்களை அளித்து, கவிமணி பற்றி ஆழமான சிந்தனைகளைக் கிளப்பும் சிறந்ததொரு களஞ்சியம் ஆகும்.

கவிமணி வரலாற்றாய்வாளர்

அ.கா.பெருமாள்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41- பி, சிட்கோ இண்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட்

அம்பத்தூர், சென்னை - 600 098.

தொலைபேசி எண்: 044 - 26359906

விலை : ` 85/-

Pin It