பள்ளிக்குப் போகுமுன்பே, எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுத்த என் தந்தையாரின் நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் உண்டு. அன்றாடம் எடுத்துப் படிக்கச் சொல்லும் புத்தகங்களில், கபீர்தாசர் சரித்திரமும் இருக்கும். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர், அன்னை சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர், அருட்பிரகாச வள்ளலார் என்று தொடரும் வரிசையில் கபீர்தாசரும் வருவார். துணி அட்டை போட்ட க்ரௌன் அளவிலான புத்தகம், நீல வண்ணத்தில். பலமுறை படித்த அதன் பக்கங்களை எனக்கும் முன்னதாக எப்படித்தான் அவ்வளவு விரைவில் கரைத்துக் குடிக்கமுடிந்ததோ, கரையானால்! தனியாக அன்றிக் கூட்டாகக் கூடிக் கரையான் வகையறா, அட்டையை மட்டும் விட்டுவிட்டு உள்ளே அரித்துக் கரைத்து விழுங்கிவிட்டது. அவற்றுக்கு அடுத்த பிறவி மனிதப்பிறவியாய் அமையின் கபீர்தாசர் சரித்திரத்தை என்னைவிடவும் அதிகமாய் அவை உள்வாங்கி வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். ‘ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து’ அல்லவா? அது ஒருவற்கு மட்டும்தானா என்ன?
அதற்குப் பின்னர், சூழல் வாய்க்கிற போதெல்லாம் வாசிக்கக் கிடைக்கும் கபீரின் வாசகங்களை, மீளவும் உள்வாங்கிக் கொள்ள, எழில்முதல்வன் மொழிபெயர்த்த ‘கபீரின் நூறு பாடல்கள்’ கைவசமானது. எந்த இடத்தில் இருந்து கபீரைப் படித்தாலும் என் சொந்த ஊரில் இருக்கிற நினைவை, அவர் கொண்டு வந்துவிடுவார். மறைந்து ஒரு மாமாங்கத்துக்கும் மேலான என் தந்தையாரும், அவர் ‘மாமா’ என்று அழைக்கும் ‘முகம்மது அலி மச்சானின்’ அத்தாவும், அப்பாவின் சீடர்களுள் ஒருவரான, சுலைமான் அண்ணனும் என் மனதுக்குள் நிறைவார்கள். அவர்கள் நிறைந்த, பாரதியின் ‘தராசுக் கடை’ ஒத்த எங்கள் பலசரக்குக் கடையில், கபீரையும், பரமஹம்ஸதாசரையும் நான் வாசிக்கக் கேட்டவர்கள் அவர்கள். அது ஒரு சத்சங்கம்.
அது மட்டுமா? எங்கள் ஊரில் ராமர் பஜனை மடமும் உண்டு. பள்ளிவாசலும் உண்டு. வாரந்தவறாமல் சனிக்கிழமைதோறும் பஜனை மடத்தில் அழைத்துச் சென்று பாடிப் பயில்விப்பது என் தந்தையின் வழக்கம். அதில் தவறாமல் இடம்பெறுகிற பாடல்களில் ஒன்று, ‘ரகுபதி ராகவ ராஜாராம்’. அந்தப் பாடலில் இடம்பெறும், ‘ஈஸ்வர அல்லா தேரே நாம்’ என்ற தொடரைப் பாடுகிறபோது, ‘ராமநாமத்தையும்’ இணைத்து எண்ணிக் கொள்வேன்.
உறங்கிவிழிக்கிற சில நாட்களில் எதேச்சமாக நினைவுக்கு வரும் முகங்களில் ஒன்று கபீரின் திருமுகம். கூடவே, அவர்தம் இந்தக் கவிதையும்.
‘கனவில் முனகும்போது மறந்தும் (அந்தப்)பெயர் சொல்பவனுடைய காலுக்கு என் தோல் செருப்பு’
உடனே, மனதில் கனல் அனல, ‘அந்தப் பெயர்’ யாருடையது என்று தேடுவதற்கு வேலையேயின்றி, அவர் இன்னொரு கவிதையில் சொல்லுவார்.
‘ராம் ரஹீம் கேசவன் கரீம்-
இவர்களுக்கு இடையே ஒரு மாறுபாடு இல்லையே,
உனக்கு இருவரும் ஒன்றுதானே
‘ஏக மேநத்விதீயம்’- ஒன்றே உண்டு.
இரண்டாவது கிடையாது.
நம்முடைய ராமன் ரஹீமே.
கரீம் கேவசன்.
அல்லாவும் அதே ராமனே.
ஐயத்தை ஒழி.
விசும்பரர்- உலகத்தைத் தாங்குபவர் ஒருவரே.
இரண்டாமவர் வேறு ஒருவரும் கிடையாது.
இப்படியான நல்ல உள்ளத்துடன் உலகத்து எழுந்தருளுங்கள்...’
அந்த விடியல் அதிக உற்சாகம் நிரம்பியதாகவே இருக்கும். கூடவே, இன்னொரு ஏக்கமும் எழும். மொழிபெயர்ப்பில் இந்த வாசகத்தைப் படிக்கிற மாதிரியே மூலமொழியில் அவர்தம் பாடல்களைக் கேட்டால்...?
அதையும் சாத்தியமாக்கியது, ஆரோவில். வடக்கிலிருந்து வந்த கபீர்தாசரின் அருள்தொண்டர்கள், இருநாட்களோ என்னவோ, ‘கபீர் சங்கீதத்தை, ஆங்கில விளக்கத்தோடு, ‘பாரத்நிவாஸில்’ வழங்கியது கேட்கப் பரவசம்...
அந்தக் கணத்தில் என் கிருங்காக்கோட்டை ராமர் பஜனை மடத்தில் இருக்கிற பக்தியுணர்வும் தானாக எழுந்தது. அதுவும் இதுவும் மாறிமாறி ஒன்றிய அந்தப் பொழுதில், ‘கபீர் தரிசனம்’, குபீரென நிகழ்ந்தது.
விழிமூடித் தியானித்த நிலையில் உபதேசம் செய்யும் பாவனையில், அவர் திருமுகத்தோற்றமே, அலாதி...
இப்படியான உணர்வுகளை என்னுள் மீளவும் எழுப்பியது, அண்மையில் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்ட, ‘கபீர் சொல்கிறான்... (கபீர்தாசரின் நூறு கவிதைகள்) என்னும் நூல். கவீந்திரராகிய இரவீந்திரர் (இரவீந்தரநாத் தாகூர்) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததில் இருந்து தமிழாக்கித் தந்தவர், டாக்டர் வெ.ஜீவானந்தம். சன்னக்குரலில் மந்திரம்போல் அவர் சொல்லும் வாசகங்களைக் கேட்கிறபோது அவர்தம் கண்களைப் பார்ப்பேன். அதில், சாந்தமாய்க் கனலும் அகல்ஒளிச்சுடர். புத்தகத்தைத் திறக்கிறபோது, அதனோடு தொடர்புடைய மக்களையும் நினைக்காமல் எப்படி முடியும்?
அப்போதுதான் ஆரோவில்லில் இருந்து, அக்கா (கவிஞர் இரா.மீனாட்சி) கைபேசி வாயிலாக அழைத்தார். இந்த விவரத்தைச் சொன்னபோது, தாகூர் மொழிபெயர்த்த ஆங்கிலக் கவிதைகளின் நகல்பிரதிகள் நம் கைவசம் இருந்ததையும், அவர் காட்டியதையும் நினைவுகூர்ந்தார். இப்படியான நல்லுணர்வுகளுடான நல்லோரையில் இந்த நூலின் உள்ளே கண்ணடி பதித்தேன்.
சொல்லருவியாய் அப்துல் காதரின் வாழ்த்துரை, ‘எமதர்மனும் உயிர் கொடுத்துப் படிக்க விரும்பும் சமதர்ம சாத்திரம்’ இப்படிச் சொல்ல, கவியருவியான காதருக்குத்தான் வரும்.
வசனநடையில் கோட்டையூர் ஏ.கே.செட்டியார், தாகூரின் ‘கீதாஞ்சலியைத்’ தந்ததுபோல், ஈரோடு மருத்துவர் வெ.ஜீவானந்தம், தாகூர் வழியில் தமிழாக்கித் தந்த கபீர், விழிகளில் ஒளிபாய்ச்சுகிறார்.
கண்கள் பரவசத்தோடு எழுத்துகளின்மீதூர, காதுகளில், மௌனம் கபீரின் ஞானத்தை முணுமுணுக்கிறது. அமுதூறும் உணர்வின் பிரவாகத்தில், இந்தப் பூமி, மண் பானையாகிறது. வனைபவனும் உள்ளே இருக்க, அவனை வணங்குபவனும் வனங்களும், எழுகடல்களும், எண்ணற்ற விண்மீன்களும் மாயக்கல்லும், மதிப்பிடுபவனும் ஒன்றாக, ஏகாந்த நாதம் இதனுள் எழுகிறது. வற்றாச்சுனைகளும் சுரக்கின்றன. கபீர் சொல்கிறார்:
கபீர் சொல்கிறேன்...
‘கேள்... என் சகோதரனே
என்அன்பு இறைவனும்
இதனுள் தான்...’ (பா-6, ப.13)
பரிபூரண தரிசனம். பக்கத்தில் என் பாலபருவத் தோழன் துங்கப்துல் ரகுமானும், ஜெயபாரதியும், கோபிநாத்தும், கூடவே, ஜோசப் சார் மகள் இளவரசியும்... ‘இந்தக் கபீர், முஸ்லீமா? இந்துவா? என்ன சாதி?’ எங்கள் ஊரைச் சார்ந்த யாரோ ஒருவர் கேட்பது மட்டும் கேட்கிறது. முகம் தெரியவில்லை. இது ஒருவேளை எங்கள் ‘தராசுக் கடை’யில் கேட்ட குரலாகவும் இருக்கும். தேடிப் பார்க்கலாம் என்று சற்றே மூடியிருந்த புத்தகத்தைத் திறந்தால், முதற்பாடலில் கபீர் கேட்கிறார்:
‘என் சேவகனே,
அங்கே யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய்?
இதோ... நான்.
உன்னருகில் உள்ளேன்.
நான் அந்த ஆலயத்திலில்லை.
நான் அந்த மசூதியிலுமில்லை.
நான் காபாவிலுமில்லை.
கைலாயத்திலுமில்லை.
நான் சம்பிரதாய சடங்குகளில்
யோகாவில் துறவில்
எதிலும் அடங்கியவனல்ல
நீ எனது உண்மை சேவகனானால்
என்னை நீ இங்கே
இப்பொழுதே காணலாம்.” (பா.1,ப.11)
எப்படி? எங்கே? என்ற கேள்வி என் மனதுள் எழுகிற அதே கணத்தில் மீளவும் கபீர் என் முன்.
கபீர் சொல்கிறேன்...
‘ஓ... யோகியே
கடவுள் எல்லா மூச்சிலும்
மூச்சுக்காற்றாய் உள்ளான்...’ (பா-1,ப.11)
‘எல்லார் மூச்சிலுமா? எல்லா மூச்சிலுமா?’ சந்தேகம் எழும்ப மீளவும் கண் பதிக்கிறேன். ‘எல்லா மூச்சிலும். சரிதான். தாவரங்களும் சுவாசிக்கின்றன. நானும். கபீர் வாசனை, குபீரென எழுகிறது. கவியருவி அப்துல் காதர் எழுதியதுபோல, ‘ஆன்மாவில் அத்தர்வாசல் திறக்கும் மகிழ்ச்சி சுரக்கிறது.’துங்குவுக்கு, அத்தர் வாசனையாக இருக்கலாம். இளவரசிக்கு மெழுகின் மணமோ, வேறு சென்ட்டின் மணமோ எழுந்திருக்கலாம். எனக்குள் சாம்பிராணி வாசனை... இவையெல்லாம் கலந்தும் கடந்தும் எழும் இறைவாசனை...
மகாகவி பாரதி மேற்கோளிட்ட தாயுமான வாசகமும் கூடவே நினைவுக்குள் மலர்கிறது.
வாசக ஞானத்தால் வருமோ சுகம் பாழ்த்த
பூசல் என்று போமோ புகலாய் பராபரமே
பூசல் போய், ஏசலும் போய், ஈசனாய், அல்லாவாய், இயேசுவாய், இராமனாய், எல்லாமுமாய் நிறைகிற காற்றாய் வலம் வருகிறான், இறைவன். கவியருவி காதர் மேல் விளக்கம் அளிக்கிறார்.
“காற்றிற்கு வடிவமில்லை; வண்ணமில்லை; சுவையில்லை; காற்றை யாராலும் அடக்கி, அடைத்துவிட முடியாது. காற்றுக்கு யாரும் தனியுரிமை கொண்டாட முடியாது. குறிப்பாக, எல்லோரையும் தோஷமின்றித் தொட்டுத் தழுவுகிறது. தீண்டாமைக்குக் காற்றிடத்தில் வேலையே இல்லை. வேறுபாடில்லாமல் எல்லா உயிர்களையும் இயக்குவது காற்றுத்தான்...” (ப.6)
இந்தக் காற்றில்தான் அன்று கபீர் நேரிடையாகச் சொன்ன வாசகமும் கலந்திருக்கிறது; இந்தப் புத்தகத்தைத் திறக்கிறபோது, அதுவும் உயிர்க்கிறது; உலகத்தையும் உயிர்ப்பிக்கிறது.
கடவுளிடம் கேட்டுவிட்டுக் கபீர் சொல்கிறார்:
“படைப்பின் கடவுளே
உனக்குச் சேவகம் செய்வது யார்?
ஒவ்வொரு பக்தனும்
தான் படைத்த கடவுளையே வணங்குகிறான்.
ஒவ்வொரு நாளும் அவனுக்கு ஆராதனை
ஆனால், அவனைத் தேடுவோரில்லை.
பிரிவினையற்ற தேவன் பிரம்மன்
அவனே முழுமை.
பத்து அவதாரங்களை நம்புகின்றனர்
எந்த அவதாரமும் முழுமையல்ல
அவனவன் செயலின் விளைவை
அவனவன் அனுபவிக்கிறான்
உன்னதமானவன் இல்லாதவனே
யோகிகள், சன்னியாசிகள், ஞானிகள்
ஒருவரோடொருவர் மோதிக் கொள்கிறார்.”
கபீர் சொல்கிறான்...
“அன்பின் கருணையைக் கண்டவன் எவனோ
அவனே காக்கப்படுபவன்”. (பா.13, பக்.16-17)
காக்கப்படுவோர் பட்டியலில் கட்டாயம் இடம் பெற என்ன செய்ய வேண்டும்?
படுக்கையில் அமர்ந்த பக்கங்களைப் புரட்டுகையில், தூக்கம் கண்களைத் தழுவிக்கொள்ள, விழிமூடித் துயில் கொள்கிறது மனதும். அகக்குரலாய் ஒலிக்கிறது கபீரின் கவிக்குரல்.
“விழித்தெழு விழித்தெழு
என் இதயமே விழித்தெழு
என் உணர்வுகளே விழித்தெழுவீர்
உன்னதத் தலைவன் உன்னருகே
உள்ளான் உள்ளான் விழித்தெழு
அவன் மலர்ப்பாதம் நாடி ஓடு
தலைவன் உன் தலைமாட்டில்
எத்தனை காலம் உறங்கிவிட்டாய்
போதும், இக்காலை விழித்து எழு. (பா-20, பக்.21-22)
கபீரின் இந்தப் பள்ளி எழுச்சிப் பாடல் காலையில் எழுப்ப, தலைமாட்டில் பார்த்தால், தலையணைதான் இருக்கிறது. அதற்கடியில் பாதியாய்த் திறந்த புத்தகம். அதில் கபீர் சொல்கிறார்.
“சகோதரனே... என் இதயம் ஞானகுருவைத் தேடுகிறது.
அவன் என் கோப்பையை அன்பால் நிறைப்பான்
அவன் அதனை முதலில் பருகிப்
பின் அதனை எனக்களிப்பான்.
என் கண்ணின் திரைவிலக்கி
சத்திய பிரம்மனைக் காட்டிடுவான்
தன்னில் மறைந்திருக்கும்
பல உலகைக் காட்டிடுவான்
ஓயாத இசைவெள்ளம்
கேட்கச் செய்திடுவான்
இன்பம்- துன்பம் எல்லாமே
ஒன்றெனவே உணர்ந்திடுவான்
பேசும் ஒவ்வொன்றும்
அன்பாய் நிறைந்திடுவான்”
கபீர் சொல்கிறான்...
“அத்தகைய குரு அமைந்தால் பயமேது?
ஆதரவாய் அணைத்துக் காத்திடுவான் என்னை?” (பா.20, ப,22)
பக்கத்தில் இருந்த திருவாசகம் என்னைப் பார்த்துச் சிரித்தது. குருந்த மரத்தடி குருவாய் எழுந்தருளி இறைவன் காத்ததனால் வந்த அருள்வாசகம் அல்லவா அது?
கேட்டாரும் அறியாதான் கேடொன்(று)இல்லான்
கிளையிலான் கேளாதே எல்லாம் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே
நாயினுக்குத் தவிசிட்டு நாயினேற்கே
காட்டாதன வெல்லாம் காட்டிப் பின்னும்
கேளா தனவெல்லாம் கேட்பித்(து) என்னை
மீட்டேயும் பிறவாமல் காத்துஆட் கொண்டான்
எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே. (திருவாசகம், சுட்டறுத்தல்-28)
‘முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளை, பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனை’த் தண்டமிழில், ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி’யாகக் கண்டு காட்டியவர் மாணிக்கவாசகர். கவிஞர் சிற்பி எழுதிய மார்கழிப்பாவையும் கூட இருக்கிற இத்தருணத்தில், எங்கோ இருந்து குயில் கூவுகிற இசை கேட்கிறது. அது மீளவும் திருவாசகத்திடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறது.
“கூவின பூங்குயில், கூவின கோழி
குருகுகள் இயம்பின...” (திருப்பள்ளியெழுச்சி-3)
என்ற பாடலுக்குக் கோவை வானொலி வாயிலாய் விளக்கம் அளித்த சிற்பி சொல்கிறார்:
“ஒளி, ஒலி இரண்டினாலும் ஆகியது உலகம். ஒளி முந்தியதா? ஒலி முந்தியதா? - நமக்குத் தெரியாது. ஆனால், உலகம் எப்படித் தோன்றியது என்று பேசும் விஞ்ஞானிகள் The Big Bang Theory என்று ஒன்றைச் சொல்லுகிறார்கள். முன்னொருநாள் பெருவெடிப்பால் அனைத்தும் வெடித்துச் சிதறியதாம். அதிலிருந்து கிரகங்களும், பிறவும் பிறந்தன என்பர். அன்றைய ஒலி இன்னும் கேட்கிறதாம். அதையே The music of the spheres, ‘பெருவெளியின் இசை’ என்கிறார்கள்.
“நம் பரிபாடல் இலக்கியத்தில்கூட, உலகின் ஆதித்தோற்றம்,‘கருவளர் வானத்து இசையினில் தோன்றி’ என ஒயில் பிறந்ததாகப் பேசப்பட்டுள்ளது. இதையே, ‘ஓம்’ என்கிறார்கள் நம் மூதாதையர்கள்.” (சிற்பி பாலசுப்பிரமணியம், மார்கழிப்பாவை, ப.218)
அதையே ஆம் என்கிறார் கபீரும். அதற்கான உறுதிப்பாட்டோடு அவர் தந்த பாடலின் தமிழ் வடிவம் இது.
‘எல்லாம் ‘ஓம்’இல் இருந்து பிறந்தன
அன்பே அவன் வடிவம்
அவன் வடிவற்றவன்
அவன் குணமேதுமற்றவன்
அவன் பிறப்பதுமில்லை
இறப்பதுமில்லை.
அவனுடன் கலக்க நினை.
வடிவற்ற அவனே.
ஆயிரமாயிரம் வடிவெடுக்கிறான்
அவன் தூய்மையானவன்.
அழிவற்றவன்
அவனது ஓயாத நடனத்தில் அலைகள் எழுகின்றன.
உடலிலும் மனதிலும் அவன் அடங்குவதில்லை.
அவன் உணர்வுகளில் மகிழ்ச்சியில்
துன்பத்தில் முழுகியவன்
அவன் ஆதி அந்தம் அற்றவன்
அவனுள் எல்லாம் அடங்கும் (பா-25, பக்.24-25)
அவனை எப்படி அடையாளம் காண்பது என்று காணாதவர்கள் கேட்கிறபோது கண்டவர்கள் காட்டுதற்குப் பட்ட பாட்டினைத்தான் உலகம் பக்திப் பாட்டெனப் போற்றிப் பரவுகின்றது. அது தமிழிலும் அம்பாரமாய்க் குவிந்து கிடக்கின்றது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருளாளர்களும், ‘கண்டறியாதன கண்டு, கண்டுகொண்ட வண்ணம் காட்டவும் செய்திருக்கிறார்கள்.
‘அருவாய் உருவாய் ஆயபிரான்’ அவனை,
‘ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமோ?
(திருவாசகம், திருத்தெள்ளேணம்-1)
என்று இசைத்துக் காட்டுகிறார் மணிவாசகர். அவருக்கும் முன்னதாக,
“ஒப்புடையன் அல்லன் ஒருவனும் அல்லன்
ஓரூரன் அல்லன் ஓர் உவமன் இல்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவன்அருளே கண்ணாகக் காணின் அல்லால்,
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று
எழுதிக் காட்ட ஒண்ணாதே (திருநாவுக்கரசர், 6-97-10)
என்று பாடிக்காட்டுகிறார் அப்பர்பெருமான்.
நம்மாழ்வாரோ,
“நாம், அவன், இவன் உவன்,அவள், இவள், உவள், எவள்
தாம் அவர், இவர், உவர், அது, இது, உது, எது,
வீம் அவை, இவை, உவை, அவைநலம், தீங்கு, அவை
ஆமவையயாய் நின்ற அவரே’’
(நம்மாழ்வார், முதற்பத்து, முதல் திருவாய்மொழி-4)
என்று அடையாளம் காட்டுகிறார். அடுத்து வந்த கம்பனோ,
“உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சர ணாங்களே”
என்று பாடி, ‘சரண் நாங்களே’ என்று சார்ந்தும், ‘சரண் ஆங்களே’ என்று சார்வித்தும் பாடுகிறான்.
தாகூர் மொழிபெயர்த்த ஆங்கிலக் கவியின் தமிழாக்கக் கபீர்பாடல் இப்படி நிறைவுறுகிறது.
‘அந்த ரகசிய வார்த்தையை எப்படிச் சொல்வேன்?
அவன் இவ்விதமில்லை, அவ்விதமில்லை
என்பதையெல்லாம் எப்படிச் சொல்வேன்?
அவன் என்னுள் என்றால்
பிரபஞ்சம் நகைக்கும்
அவன் இல்லை என்பதும்
பொய்யே ஆகும்.
அகவுலகும், புறவுலகும் பிரிக்க முடியாததாக்கியவன் அவன்.
உணர்வு, உணர்வின்மை என்பன அவனது காலடியாகும்
அவன் உருவமும் அற்றவன், மறைவும் அற்றவன்
அவன் வெளிப்பட்டவனில்லை. வெளிப்படாதவனுமில்லை
அவன் யார்?
என்பதை உணர்த்தும் வார்த்தை உண்டோ?” (பா-100, ப.55)
இந்த வார்த்தையைத் தேடித்தான், மகாகவி பாரதி ‘சொல் ஒன்று வேண்டும்’ என்று தேடிப் பாடினாரோ?
இந்த வார்த்தையைத்தான் தன் கீதாஞ்சலியில், தாகூர் ஒலிக்க முயன்றாரோ?
இந்த வார்த்தையைத்தான் நானும் நீங்களும் தேடிக் கொண்டிருக்கிறோமா?”
தேடிக் கண்டடைவோர் பாடியோ, படித்தோ, எழுதி வைக்கத்தான் இந்தப் புத்தகத்தில், எண்ணிடப்படாது ஒன்பது பக்கங்கள் ஒதுக்கிவைக்கப் பெற்றிருக்கின்றன போலும்.
“சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணே’
என்று வள்ளற்பெருமான் சொல்லிக் காட்டியதுபோல் இன்னமும் அழிந்து கொண்டிருக்கிறது இந்த உலகம். இந்தக் காலத்தில், காலத்தின் தேவை கருதி, கால காலத்துக்கும் உரிய சூஃபி நெறிக்கு வலுச்சேர்க்கும் கவிக்குரலாக, கபீர் குரல் ஒலிக்கிறது. இந்நூலை, கபீரின் 500 ஆண்டை ஒட்டி, தாகூர் வழிநின்று, தமிழில் மொழிபெயர்த்தவர்க்கும், தரமாகப் பதிப்பித்தவர்க்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்க வேண்டுமெனில், வாங்கிப் படித்துப் பயன் கொள்ளவேண்டும் என்று எழுதியா விளக்க வேண்டும்?
மூல நூல்
கபீர் சொல்கிறான்... (கபீர்தாசரின் நூறு பாடல்கள்), டாக்டர் வெ.ஜீவானந்தம் (மொ.பெ.), இரவீந்தரநாத் தாகூர் (ஆங்கில மொ.பெ.), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மு.ப. டிசம்பர், 2019.
துணைநின்றவை
- அறவியலும் பண்பாடும், பாகம்-3, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி, 2003.
- கம்பராமாயணம், சிற்பி பாலசுப்பிரமணியம், மார்கழிப் பாவை, கபிலன் பதிப்பகம், புதுச்சேரி,2009.
- திருவருட்பா,
- திருவாசகம்
- திருநாவுக்கரசர் தேவாரம்
- திவ்வியப்பிரபந்தம்