sk ganga 350 copyகல்லூரிக் காலத்தில் ஆரல்வாய்மொழி கலை இலக்கியப் பெருமன்றக் கிளையில் அங்கமாகி ஒரு அமைப்பாளனாக, ஒரு படைப்பாளியாக, ஒரு விமர்சகனாக, ஒரு மொழிபெயர்ப்பாளனாக பன்முகங்களில் பரிணமித்துக் கொண்டிருந்த, எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதர்களின் நெஞ்சங்களை தன் நேசத்தால் நாளும்பொழுதும் நெகிழ வைத்துக்கொண்டிருந்த ஏ.எம்.சாலன் என்னும் தோழன், யாரும் எதிர்பாராத நிலையில், எல்லோரையும் தவிக்க விட்டுவிட்டு, கழிந்த பிப்ரவரி 10ம் தேதி நள்ளிரவுக்குப் பின்னிரவில் திடுதிப்பென்று தன் பௌதீக வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டார்.

ஆரல்வாய்மொழி அழகியநகர் ஊரைச் சார்ந்த திரு.அணஞ்சான், திருமதி பேரின்பம் ஆகியோருக்கு மூத்தப் புதல்வனாக 29.05.1960 அன்று பிறந்த மதி, கலை இலக்கியப் பெருமன்றத்துக்காரனாகியபோது ஏ.எம்.சாலனாக உருவானார். நாட்டுப்பாடல் சேகரிப்பில் அக்கறை கொண்டிருந்த அவர் நாளடைவில் ஒரு சிறுகதையாசிரியராகவும் பரிணமித்தார். அழகியநகர் பகுதியைச் சார்ந்த ஒரு இளைஞர் கூட்டத்தையே தன் அன்பாலும் அரவணைப்பாலும் ஒன்றுதிரட்டி கலை இலக்கியப் பெருமன்றத்துக்கும், இளைஞர் பெருமன்றத்துக்கும் உரம் சேர்த்த ஒரு அமைப்பாளனாகவும் அவர் வளர்ந்தார்.

மத்திய அரசு பணிநிமித்தம் ஏ.எம்.சாலனின் வாழ்வு புகழ்பெற்ற கொச்சி மாநகரில் நங்கூர மிட்டது. தன் கடைசிக்காலம் வரையிலும் அவர் கொச்சிவாசியாகவே வாழ்ந்தும் வந்தார். ஆனாலும் ஆரல்வாய்மொழி தொப்புள்கொடி உறவுக்கும் உண்மையாகவே இருந்தும் வந்தார். அவருடைய பெரும்பாலான இலக்கியப்பணிகள் அவருடைய கொச்சி வாழ்க்கையில் பூத்த மலர்களே. “வட்டத்தை மீறிய விரிவுகள்,” “அழுக்கு,” “ஒதுக்கப்பட்டவர்கள்” என்னும் சிறுகதைத் தொகுப்புக்களும், “படைப்பு, படைப்பாளி, விமர்சனம்,” “தலித் பண்பாடு சில பார்வைகள்” என்னும் கட்டுரைத் தொகுப்புக்களும், “ஓ.என்.வி. குருப்பின் சில கவிதைகள்,” “தேர்ந்தெடுத்த மலையாள சிறுகதைகள்,” “விளம்பர உலகம்,” “கானலில் நீர் தேடிய மான்கள்,” பி.கே.வாசுதேவன் நாயரின் “எனது வாழ்க்கைப் பயணம்” என்னும் மொழியாக்க நூல்களும் ஏ.எம்.சாலன் என்னும் படைப்பாளியின் பன்முகங்களுக்கு அடையாளங் களாகத் திகழ்கின்றன.

அன்றாடம் நாம் சந்திக்கும் எளிய மனிதர்களின், அடித்தட்டு மக்களின் உறவுப்பின்னல்களில் விளையும் மோதல்களையும், உணர்ச்சித்தளங்களில் உருவாகும் முரண்மோதல்களையும் சிறுகதைகளில் எதார்த்தமாக வடித்தவர் ஏ.எம்.சாலன். அதே வேகத்தில் விவேகத் துடன் அவர் கருத்தியல் களங்களில் இயங்கியபோது விளைந்த அவருடைய கட்டுரைகள் அவரின் முற்போக்கு இடதுசாரி முகத்தை நமக்கு பரிச்சயப்படுத்துகின்றன.

ஏ.எம்.சாலனின் படைப்புலகில் மிகவும் காத்திரமான இடத்தை வகிப்பவை அவருடைய மொழிபெயர்ப்புக்களாகும். மலையாளத்திலிருந்து அருமையான சிறுகதைகளைத் தமிழுக்கு ஆக்கித் தந்த அவர், மலையாள மகாகவி ஓ.என்.வி.குருப்பின் கவிதைகள் சிலவற்றையும், கேரளா முன்னாள் முதல்வர் பி.கே.வாசுதேவன் நாயரின் “எனது வாழ்க்கைப் பயணம்” என்னும் நூலையும் எளிய தமிழில் மொழியாக்கம் செய்திருந்தார். அவருடைய மொழியாக்கங்கள் அசல் படைப்புக்கள் என்னுமளவுக்கு வாசக நெஞ்சங்களை வசியப்படுத்தியவை.

59 வயது நிறையுமுன்னே தன் அன்பு மனைவி திருமதி பானுமதியையும், மக்களையும், மருமக்களையும், பேரக்குழந்தைகளையும், குடும்பத் தாரையும் மட்டுமல்லாமல், இயக்கத் தோழர் களையும் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு, தன் கதைக்கு ஒரு முடிவைத் தேடிகொண்ட ஏ.எம்.சாலனின் இழப்பு ஈடுசெய்யமுடியாத ஒரு இழப்பு.

குமரி மாவட்டத்தில் ஒரு பண்பாட்டுச் செயல் பாட்டாளனாக மலர்ந்த ஏ.எம்.சாலன் மலையாள இலக்கிய உலகிலும் ஒரு பண்பாட்டுச் செயல் பாட்டாளனாக வாழ்ந்துகொண்டிருக்கையில், இன்னும் இன்னும் சாதிக்க வேண்டிய பருவத்தில் மறைந்தது தமிழுக்கு மட்டுமல்ல, மலையாளத்துக்கும் இழப்பே.

பிறந்த மண்ணுக்கு மட்டுமல்லாமல், தொழில் சார்ந்து வாழ்ந்த கொச்சி மாநகருக்கும் பெருமை சேர்த்த ஏ.எம்.சாலனின் வாழ்வும் படைப்புகளும் காலத்தை வென்று பயணிக்கும் திறம்படைத்தவை என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

Pin It