முதன்மொழி மேழம் - விடை (ஏப்பிரல் - சூன் 2010) இதழில் திரு. கும்பலிங்கன் தொலைபேசி பற்றிக் கருத்துக் கூறியிருந்தார்.
தொலைபேசியே சரி என்றும், தொலைப்பேசியே சரி என்றும், இரண்டுமே சரி என்றும் கூறப்படுகின்ற மூவகைக் கருத்துகள் நிலவுகின்றன. இது பற்றிய ஐயம் நீக்கவே இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
சொற்கள் ஒன்றையன்று தொடர்ந்து நிற்பது தொடர். சொல்லாலும் பொருளாலும் அவை இணைந்து நிற்பது புணர்ச்சி. புணர்ச்சி, இயல்பு திரிபு (விகாரம்) என இருவகைப்படும். மாற்றம் ஏதுமில்லாதது இயல்பு; தோன்றல் திரிதல் கெடுதல் என்னும் மாற்றங்களில் ஒன்றும் பலவும் பெற்று வருவது திரிபு.
இரு சொற்களை ஒரு சொல் நீர்மையுடைத்தாக்குவதற்கும், அவற்றின் பொருளை விரிவாக்குதற்கும், அவை ஒன்றோடொன்று பொருந்தி நிற்குங்கால் ஓசை ஒழுங்கில்லாக் கரடுமுரடான நிலையை நீக்குதற்கும் திரிபின் மூவகை மாற்றமும் கூறப்பட்டன. இது, தமிழின் இயற்கையான காப்பு முறையாகும். இதனாலேயே புணர்ச்சி என்பது தொல்காப்பியத்தில் மயக்கம் என்றும் கூறப்பட்டது.
புணர்ச்சி, வேற்றுமை அல்வழி என இருவகைப்படும். இவற்றால் அமையும் தொடர்கள் பின்வருமாறு இருபதாம். அவை:
1) இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ளவை ஆறும் வேற்றுமைத் தொடர்கள்.
2) வேற்றுமை அல்லாதவை, தொகைநிலைத் தொடர் தொகாநிலைத் தொடர் என இருவகைப்படும். வினை, பண்பு, உவமை, உம்மை, அன்மொழி என்னும் ஐந்தும் தொகைநிலைத் தொடர்கள். முதல் வேற்றுமையாகிய எழுவாய்த் தொடர், எட்டாம் வேற்றுமையாகிய விளித்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத் தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினை முற்றுத் தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற் றொடர், அடுக்குத்தொடர் என்னும் ஒன்பதும் தொகா நிலைத் தொடர்கள்.
இவற்றுள் எழுவாய்த் தொடர், அடுக்குத் தொடர் என்னும் இரண்டும் தழாத்தொடர்கள். எஞ்சியவை பதினெட்டும் தழுவுதொடர்கள். தழாத் தொடர்கள் இரண்டும் இயல்பாகவே (புணர்ச்சித் திரிபு ஏதுமின்றி) நிற்கும் தன்மையின.
பொதுவாக உயிரீற்றுப் புணர்ச்சி குறித்தும், சிறப்பாக ஐகார ஈற்றுப் புணர்ச்சி குறித்தும் இலக்கண நூல்களில் கூறப்பட்டவை கீழே தரப்பட்டுள்ளன.
வேற்றுமை யல்வழி இஐ என்னும்
ஈற்றுப் பெயர்க்கிளவி மூவகை நிலைய
அவைதாம்
இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும்
உறழா குநவும் என்மனார் புலவர்
(தொல். எழுத்தியல் தொகைமரபு 16)
ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே
(தொல். எழுத்தியல் உயிர்மயங்கியல் 78)
என்று தொல்காப்பியமும்,
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
கசதப மிகும் விதவாதன மன்னே (நன்னூல் 165)
வேற்றுமை யாயின் ஐகான் இறுமொழி
ஈற்றழி வோடுஅம் ஏற்பவு முளவே (நன்னூல் 202)
என்று நன்னூலும் கூறுகின்றன. இவற்றால்,
1) வேற்றுமைப் புணர்ச்சியில் ஐகார இறுதியை உடைய பெயர்ச்சொல்லின் முன்வரும் வல்லினம் மிகும்.
2) அல்வழிப் புணர்ச்சியில்; இயல்பாதல், வல்லெழுத்து மிகுதல், உறழ்ச்சியாதல் (மிக்கும் மிகாமலும் வருதல்) என்னும் மூவகை நிலைகள் காணப்படும் என்னும் இலக்கண வரையறை தெளிவாகும். சான்றாவன:
தலை+பாகை = தலைப்பாகை - வேற்றுமையில் ஒற்றுமிகுதலும்,
தலை+பெரிது = தலைபெரிது - எழுவாய்த் தொடர் - அல்வழியில் இயல்பும்,
தலை+தாள் = தலைதாள் (தலையும் தாளும்) உம்மைத் தொகை
தலை+கடன் = தலைக்கடன் (தலைமையான கடன்) பண்புத்தொகை - எனக் கடைசி இரண்டு அல்வழித் தொடர்களில் உறழ்ச்சியும் காணப்படுகின்றன.
இனி, தொலைபேசி பற்றிக் காணலாம்.
1) தொலை+பேசி = தொலைபேசி - தொலைவாக இருப்பாருடன் பேச உதவும் கருவி - எழுவாய்த் தொடர்.
2) தொலை+காணி = தொலைகாணி - தொலைவாக உள்ள காட்சியைக் காட்டும் கருவி - எழுவாய்த் தொடர்.
3) தொலை+பேச்சு = தொலைப்பேச்சு - தொலைவு ஆன பேச்சு - பண்புத்தொடர்.
4) தொலை+காட்சி = தொலைக்காட்சி - தொலைவு ஆன காட்சி அல்லது அக்காட்சியைக் காட்டும் கருவி - பண்புத்தொடர்.
இவை நான்கும் அல்வழித் தொடர்கள். முன்னவை இரண்டும் எழுவாய்த் தொடர்கள். அவற்றில் ஒற்றுமிகுதல் இல்லை.
பின்னவை இரண்டும் தொகை நிலைத் தொடர்கள். ஒற்று மிகுந்து வந்தவை.
தொலைபேசி, தொலைக்காட்சி என்னும் இரண்டு தொடர்களும் முறையே Tele-phone,Tele-vision என்னும் ஆங்கிலத் தொடர்களின் நேரடி மொழிபெயர்ப்புகள். முந்திய தொடரில் வருமொழி பெயர்ச்சொல்லாகவும், பிந்திய தொடரில் தொழிற்பெயராகவும் அமைந்தன. ஆங்கிலத் தொடர்களின் இக்குளறுபடியே தமிழ் மொழிபெயர்ப்பில் ஒற்றுமிகுமா மிகாதா என்னும் மயக்கத்தையும் உண்டாக்கிவிட்டது. பிந்திய தொடர் தொழிற்பெயரினதாக அன்றி, Tele-scope என்பது போன்ற ஒரு பெயர்ச்சொல்லைக் கொண்டிருப்பின், இவ் வையப்பாடு தோன்றியிராது. வேறு ஒரு கருவியின் பெயருக்கு Telescope என்னும் பெயர் அமைந்துவிட்டதால் ஆங்கிலர் Television என்னும் தொழிற்பெயர் ஈற்றுத் தொடரைத் தக்கவைத்துக் கொண்டனர்.
எனவே,
Telephone- தொலைபேசி
Telespeech - தொலைப்பேச்சு
Telescope - தொலைகாணி
Television - தொலைக்காட்சி
என வருதலே தமிழ் இலக்கண மரபுக்கும், தழாத் தொடர் தழுவுதொடர் ஆகிய இயற்கை இசைவுக்கும் பொருந்தும் என்பதைத் தேற்றமாய் அறிந்துகொள்ள வேண்டும்.
அன்றித் தொலைப்பேசி என்று வழங்குவதாயின் அது, தலை+பேன் = தலைப்பேன் (தலையில் உள்ள பேன்) என்னும் வேற்றுமைத் தொடரைப் போலாகி, (அருகில் இல்லாமல்) ‘தொலைவில் உள்ள பேச்சுக் கருவி’ எனப் பொருள்தரும் என்பதையும் அறிதல் வேண்டும்.
தொலைபேசி என்பது தொலைகின்ற பேசி என்றும் பொருள்படுவதற்கு அங்குள்ள நிலைமொழியின் பொருள்வேறுபாடே காரணமாகும்.
இனி, கைபேசியா? கைப்பேசியா? எனவும் அறிதல் தகும்.
‘கைபேசும்’ (அடிவிழும்) என்பது எழுவாய்த் தொடராதலின் அங்கு ஒற்றுமிகுவதில்லை.
‘கைப்பேச்சு’ (சிறுமைப்பேச்சு) என்றும், ‘கைப்பேச்சு கைப்பேச்சாகவே இருக்கவேண்டும்; வாய்ப்பேச்சாக மாறக்கூடாது’ என்பதில் உள்ள கைப்பேச்சு (கையால் பேசப்படும் பேச்சு - அடிதடி) என்பதும், முறையே பண்புத்தொடரும் வேற்றுமைத் தொடரும் ஆதலின் ஒற்று மிக்கது.
கைப்பேசி என்பது கையில் உள்ள பேச்சுக்கருவி என்று வேற்றுமைத் தொடராகவும், உருவில் சிறுமையாய் உள்ள பேச்சுக்கருவி என்று பண்புத் தொடராகவும் பொருள்படுங்கால் ஒற்று மிக்கது. கைபேசி - சிறிய பேச்சுக்கருவி என வருதல் இல்லை. கை என்பது சிறுமை என்றே பொருள்படும்.
இவற்றால், தொலைபேசி, கைப்பேசி என வழங்கு வதே தக்கதாம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.