Thaninayagam 350தென் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பியரின் காலனியச் செயல்பாடுகள் தொடங்கின. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்தினர். இப்பகுதியில் உள்ள இந்தியா, இலங்கை, மலேசியா, பர்மா மற்றும் பல்வேறு தீவுகளில் தமிழ் மொழியைப் பேசும்/பேசிய இனத்தின் ஒரு பகுதியினர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலம் முதல் குடிபெயரத் தொடங்கினர். காலனி ஆட்சியினர் இவ்வகையான குடிபெயர்தலுக்கு வழி வகுத்தனர்.

இவ்விதம் குடிபெயர்ந்த மக்கள் கூட்டம் அந்தந்த வாழ்விடங்களில், காலனிய காலத்தில் எவ்வகையான ஆதிக்கச் செயல்பாடுகளுக்கு முகம் கொடுத்தனர்? காலனிய ஆதிக்கம் மற்றும் ஆட்சி அதிகார மாற்றம் பெற்ற பின்காலனிய காலங்களில் எவ்வகையான ஆதிக்கச் செயல்பாடுகளுக்கு முகம் கொடுத்தனர்? என்று வேறுபடுத்தி உரையாடுவது அவசியம்.

 காலனிய காலத்திற்குப் பின்பு, பின்காலனிய காலத்தில் தமிழ் மொழியைப் பேசும் மக்கள் எதிர் கொண்ட சிக்கல்களை, புலமைத்துவ தளத்தில் எதிர் கொண்ட பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அடிகளின் செயல்பாடுகளை

அவரது நூற்றாண்டு நிறைவில் நினைவுபடுத்தி உரையாடுவது அவசியம். நூற்றாண்டு நினைவில் ஒரு புலமையாளன் (Intellectual)  தனது தேசிய இனம் எதிர்கொண்ட பல்வேறு சவால்களையும், தனது கண்ணோட்டத்தில் உள்வாங்கி, எவ்வகையான புலமைச் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்திப் போராடினார் அல்லது ஆதிக்கத்துக்கு/ ஒடுக்குமுறைக்கு எதிரான புலமைத்துவச் செயல்பாடுகள் எத்தகையன? என்று உரையாடுவதின் மூலம் ஒரு சமூகத்தில் புலமை யாளனுக்கும் சமூக நிகழ்வுக்குமான உறவை அறிந்து கொள்ள இயலும்.  இந்தப் பின்புலத்தில் பேராசிரியர் தனிநாயகம் அடிகள் குறித்த இந்த உரையாடல் அமைகிறது.

இந்த உரையாடலை வசதி கருதிப் பின்வரும் பல்வேறு பொருண்மைகளில் வரையறை செய்து கொள்ளலாம். ஒவ்வொரு பொருண்மையிலும் தனி நாயகம் அவர்களின் எதிர்கொள்ளலைப் புரிந்து கொள்ள முயலலாம்.

-  உலகம் முழுவதும் அறியப்படாதிருந்த தமிழ்த் தேசிய இனங்கள் வாழும் சிறு தீவுகள் குறித்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியமை.

-  இலங்கையில் உருவான சிறுபான்மை தேசிய இனம் சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்வதில் பேராசிரியர் தனிநாயகம் மேற்கொண்ட செயல்பாடுகள்.

-  மலேசியாவில் தனிநாயகம் அடிகள் வாழும் காலத்தில் தென் - தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ் பேசுவோர் குறித்த அடையாள மீட்டெடுப்பை மேற்கொண்ட முறைமைகள்.

மேற்குறித்த தமிழ்க் குடிகளின் பண்பாட்டு வரலாறுகளைப் பின்காலனியச் சூழலில் உலக வரை படத்தில் இடம்பெறச் செய்வதற்காக மேற்கொண்ட புலமைத்துவச் செயல்பாடுகளை அதாவது காலனியம் மூலம் பெற்ற புதிய கண்டுபிடிப்புகளால் தமிழ் மொழிக்கு உலக அங்கீகாரம் வேண்டிச் செயல்பட்ட முறைகளைப் பின்கண்ட வகையில் புரிந்துகொள்ள இயலும். தென் - தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர் சிறுபான்மை இனமாகக் கருதுவதை மறுபரிசீலனை செய்யும் நோக்கில் இத்தன்மை அமைவதைக் காண் கிறோம். இவை வருமாறு:

- உலகில் தொல்பழம் மரபுகளைக் கொண்ட தாகக் கருதப்படும் எகிப்தியம், கிரேக்கம், உரோமன் ஆகிய பிறவற்றோடு தமிழ் மரபுகள் ஒப்பீட்டு அளவில் பெறுமிடம் - குறிப்பாக ஒழுக்க மரபுகள் (Ethics)  சார்ந்து உருப் பெற்றுள்ள கருத்துநிலைகள்.

-  உலகக் கல்வி வரலாற்றில் தமிழ்க்கல்வி மரபு எத்தகையது என்பதற்கான உரையாடல்கள்.

-  உலகச் செந்நெறி இலக்கிய மரபில் தமிழ்ச் செவ்விலக்கிய மரபுகள் பெற்றிருக்கும் இடம் குறித்த உரையாடல்.

-  நவீன தமிழ் அச்சு மரபை உலகிற்கு அறிமுகப்படுத்தல்.

மேற்குறித்த பின்புலத்தில் அமைந்த தமிழ் இனத்தின் பண்பாட்டு விழுமியங்களை நடைமுறைப் படுத்துவதற்கென மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பின்கண்டவாறு தொகுக்கலாம்.

- உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு நேரடிக் கருத்துப் பரப்பல் செய்ததோடு, பல்வேறு மொழிகளையும் கற்று அதன்மூலம் தன் நிலைப்பாட்டைப் பதிவு செய்ய மேற்கொண்ட முறைமை.

-              பின்காலனிய காலத்தில் உருவான, மேற்குலக நாடுகளின் கீழைத்தேய அணுகுமுறையை உள்வாங்கிச் செயல்பட்டமை. குறிப்பாக, அச்சு ஊடகம், நிறுவன உருவாக்கம் ஆகிய செயல்பாடுகள் சார்ந்து.

-              உலகம் முழுவதுமான இந்தியவியல் புரிதலில் குறுக்கீடு செய்து, தமிழியலைக் கட்டமைத் தமை. குறிப்பாக, உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தியமை.

உலகில் வாழும் தமிழர்களைப் பேராசிரியர் தனிநாயகம் பின்வரும் வகையில் வகைப்படுத்துகிறார் (1973).

-              தமிழ் தேசிய இனம் எனும் அடையாளத் தோடு வாழ்பவர்கள்

-              தமிழைத் தாய்மொழியாக மட்டும் கொண்டிருப் பவர்கள்

-              பண்பாட்டு அடையாளத்தோடு தமிழர்களாக இருப்பவர்கள், மொழியை இழந்தவர்கள்

-              தமிழ் பேசும் பகுதியில் இருந்து குடியேறி மொழி, பண்பாடு ஆகியவற்றை இழந்தவர்கள்.

இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் முதல் பிரிவில் அடங்குவர். பிரெஞ்சு காலனிய ஆதிக்கத் திற்கு உட்பட்டுச் சிறுசிறு தீவுகளில் வாழ்வோர் நான்காம் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியைப் பேசும் தமிழர்கள், மொரீசியஸ், ரீயூனியன் பகுதிகளில் வாழ்பவர்கள் பண்பாட்டு அடையாளத்தோடு வாழ்பவர்கள்.  தமிழ் மொழியைப் பேசும் மலேசியாவில் வாழும் தமிழர்கள் இரண்டாம் நிலையினர். இப்போது 1980களுக்குப் பின் உலகம் முழுவதும் குடியேறியுள்ள ஈழத் தமிழர்கள் தாய்மொழியாகத் தமிழைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களது குழந்தைகள் மொழியை இழக்கத் தொடங்கியுள்ளனர்.

போரால் குடியேறிய இம்மக்களைப் புதிய பிரிவாகவே கருதவேண்டும். தனிநாயகம் அடிகள் தமது தொடர்ச்சியான பயணத்தின் மூலம், பண்பாட்டு அடையாளங்களை மட்டும் கொண்டிருப்பவர்களும் பண்பாடு, மொழி ஆகிய இரண்டையும் இழந்தவர் களும் வாழும் பகுதிகளுக்குச் சென்று அவர்களைக் குறித்த பதிவுகளைச் செய்துள்ளார்.

இந்தியாவிலிருந்து குடிபெயர்தல் என்பது 1826இல் பர்மா, 1827இல் இலங்கை, 1836இல் மொரீசியஸ், ரீயூனியன், 1838இல் மலேசியா, 1853இல் மார்த்தீனியன் தீவு, 1860இல் நேட்டால், 1903இல் பிஜித் தீவு என்று தொடர்ச்சியாக நிகழ்ந்ததை அறிகிறோம். இப் பகுதிகளில் தமிழ் மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?

சுமார் 200 ஆண்டுகளிலிருந்து 120 ஆண்டுகள் இடை வெளியில் குடியேறிய இவர்களது வாழ்க்கை எவ்வாறு உள்ளது? என்பது குறித்த உரையாடல் மூலம், கடந்த முப்பது ஆண்டுகளில் குடியேறிய தமிழர்கள், எதிர் காலத்தில் எத்தகைய நிலையில் இருப்பர் என்பது குறித்த ஒரு வரலாற்று நிலைப்பாட்டை முன்வைக்க முயலலாம்.

மேற்குறித்த குடிபெயர்தல் ஒருபுறமிருக்க, சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் பேராசிரியர் தனிநாயகம் அக்கறை செலுத்தினார். இலங்கையில் சிறுபான்மை இனமான தமிழர்களின் மொழி, அந்நாட்டில் ஆட்சி மற்றும் கல்வி மொழியாகச் செயல்படுவதில் சிக்கல்கள் உருவாயிற்று. 1948இல் இலங்கையில் குடியேறிய தமிழகத் தோட்டத் தொழிலாளர்கள் குடியுரிமை பறிக்கப்பட்டது. 1956இல் சிங்களத் தனிச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இது குறித்து தனிநாயகம் அடிகளின் பதிவு பின்வருமாறு:

“நான் அரசியலிலும் கல்வித் துறையிலும் இரு மொழிகள் பன்மொழிகள் இயங்குந் தன்மையை ஒருவாறு கற்றவன். இரு மொழி நாடுகள், பன்மொழி நாடுகளுக்கு நேரில் சென்று இருமொழி அரசியல், பன்மொழி அரசியல் எவ்வாறு தொழிற்படுத்தப்படுகின்றன என்பதை நன்கு நேரில் கண்டறிந்தவன். இருபதாம் நூற்றாண்டில் மொழியுரிமைகள் பண்டைய நாடுகள் அனைத்திலும் முற்றும் ஒப்புக்கொள்ளப் பெற்று நிலவுகின்றன. நம் ஈழ வளநாட்டில் சிங்கள மொழியுடன் தமிழ் மொழியையும் அரசின் மொழியாகவும் (National Language) ஆட்சி மொழியாகவும் (Official Language) அமைக்காததைப் போல் பெருங்கொடுங் கோன்மை வரலாற்றிலேயே இல்லையென்று கருதுகின்றேன்” (தமிழ் பேசும் இனத்தார்க்கு வேண்டுகோள், 1961).

இதற்கான களப்பணியில் தந்தை செல்வநாயகம் அவர்களுடன் இணைந்து செயல்பட்ட தனிநாயகம் அடிகள் பண்டரநாயக்கா அவர்களிடம் நேரடியாகச் சென்று உரையாடினார். அவர் இச்சிக்கலை வாள் முனையில் தீர்ப்பதாகக் கூறினார். சிங்கள அரசின்  இத்தகைய செயல்பாடுகளில் அடிகள் மனரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டார்.  தனிநாயகம் அடிகளின் அரசியல் ஈடுபாட்டைச் சிங்கள அரசினர் தடை செய்தனர்.  அவருக்கு மறைமுகமான அச்சுறுத்தல் உருவாக்கப்பட்டது. அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகளும் நடைபெறத் தொடங்கின. இச் சந்தர்ப் பத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப் பட்ட இந்தியவியல் துறைக்குப் பேராசிரியராக அழைக்கப்பட்டார். சிங்கள அரசிற்குத் தெரியாமல் தமிழகம் வழியாக மலேசியா சென்று அப்பணியை ஏற்றுக் கொண்டார்.

சிங்களப் பெரும்பான்மைத் தேசிய இன ஆதிக்கத் திற்கு எதிரான போராட்டத்தால் பேராசிரியருக்குத் தன் நாட்டில் வாழும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இன்று நூற்றுக்கணக்கில் இதே செயல் நடைமுறைப்படுத்தப் பட்டு வருவதை அறிகிறோம். பேராசிரியர் இந்தப் பின்புலத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தை அடிப் படையாகக் கொண்டு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை மீட்டெடுக்கும் பணியைத் தொடங்கினார்.

மலேசியப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப் பெற்ற இந்தியவியல் துறை, உலகத்தின் பிற நாடுகளில் செயல்பட்ட இந்தியவியல் துறைகளிலிருந்து வேறு பட்ட முறையில் செயல்படத் தொடங்கியது. ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களின் இந்தியவியல் துறை என்பது சமசுகிருத மொழி - பண்பாடு பற்றிய துறைகளாகவே செயல்பட்டன. சமசுகிருதம் என்பதே இந்தியர் சமசுகிருதப் படிப்பு சார்ந்த செயல்பாடுகளே இந்தியா; வியல் படிப்பு என்று இன்றும்கூட சில ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. செக்கஸ்லோவாகியா நாட்டில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் இன்றும் அதே நடைமுறை தொடருகிறது. கூடுதலாக வங்காளம் மற்றும் இந்தி மொழிகளுக்கான துறைகள் உள்ளன. சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை இன்று இந்தி மொழிக்கு ஒதுக்கப்படுகின்றது. இந்நிலைக்கு மாற்றான இந்தியவியல் துறையை மலேசியப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் கட்டமைத்தார். தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் திராவிட மொழிகள், குறிப்பாகத் தமிழ் மொழிக்கு முதன்மை கொடுத்தார். சமசுகிருதப் படிப்பிற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந் நிலைப்பாட்டை பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி போன்றவர்கள் எதிர்த்த போதிலும், தமிழ் மொழி சார்ந்த படிப்பிற்கு முதன்மை கொடுக்கும் துறையாக அதனைக் கட்டமைத்தார். அதன் வளர்ச்சியை, கடந்த 2011இல் அத்துறையை மதிப்பீடு செய்யும் தேர்வாளனாகச் சென்றபோது உணர்ந்தேன். இந்தியவியல் துறை என்பதைத் தமிழியல் துறை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று அப்பல்கலைக்கழகத் துணை வேந்தருக்குப் பரிந்துரை செய்து எழுதினேன். அது பரிசீலனையில் இருப்பதாக அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இவ்வகையில் தென்கிழக்கு நாடுகளில் தமிழுக்கான அங்கீகாரத்தைப் பல்கலைக்கழக மட்டத்தில் உருவாக்கியதில் தனிநாயகம் அடிகள் தனித்த இடத்தைப் பெறுகிறார். இந்தியாவில் தமிழ் ஆட்சிமொழியாக இல்லை. ஆனால் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் அவை ஆட்சி மொழிகளுள் ஒன்றாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இந்நிலை உருவாவதற்குப் புலமைத் தளத்தில் பேராசிரியர் இட்ட கால்கோள் ஆழமானது. இதே வேலையை அவரால் இலங்கையில் செய்ய முடியவில்லை என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

கி.பி.2ஆம் நூற்றாண்டு முதல் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குத் தமிழர்கள் குடி பெயர்ந்துள்ளனர். பின்னர் கி.பி.7ஆம் நூற்றாண்டு முதல் அவ்வகையான குடிபெயர்வு வணிக அடிப்படையில் வளர்ச்சி அடைந்திருப்பதைக் காண்கிறோம். பிற்காலச் சோழர்கள் அந்நாடுகள் மீது படையெடுத்துச் சென்ற வரலாறும் நாம் அறிந்த ஒன்றே. இவ்வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் ஆய்வுப் பணியில் தம் மாணவர்களான பேராசிரியர் சிங்காரவேலு மற்றும் அரசரத்தினம் ஆகியவர்களை ஈடுபடுத்தினார். இதன் மூலம் தமிழில் உள்ள பக்தி இலக்கியங்கள், கம்பனின் இராமாயணம் போன்ற பிரதிகள் அங்குள்ள மக்களின் பண்பாட்டு வாழ்வில் பெற்றிருக்கும் இடத்தை மதிப்பீடு செய்ய முடிந்தது.

இவ்வகையில், 18ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழர்களின் குடிபெயர்வு 18, 19ஆம் நூற்றாண்டுகளில் உருவான குடிபெயர்வு ஆகியவற்றின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதின் மூலம் சமகால ஈழத்தில் தமிழர்களுக்கு உருவாகியுள்ள சிக்கல்களுக்கு முகம் கொடுப்பதாகக் கருதினார். இதற்கான செயல்பாடு களாகவே பேராசிரியரின் புலமைத்துவச் செயல்பாடுகள் அமைந்தன.

தமிழர்களின் அறமரபு, கல்வி மரபு, செவ்விலக்கிய மரபு மற்றும் நவீன அச்சுப் பண்பாடு ஆகியவை குறித்த மதிப்பீடுகளை உலகம் தழுவிய அளவில் பரப்புரை செய்யும் நோக்கிலான ஆய்வுகளைத் தம் வாழ்நாள் தொண்டாகக் கொண்டு நடைமுறைப் படுத்தினார். இதனை விரிவான உரையாடலுக்கு உட்படுத்த வேண்டும்.  ஒரு தேசிய இனத்தின் அடை யாளங்கள் என்பவை அவ்வினம் கொண்டுள்ள சிந்தனை மரபையும் அடிப்படையாகக் கொண்டது. இதனை தனிநாயகம் அடிகள் பின்வரும் வகையில் பதிவு செய்துள்ளார்.

வழக்கு ஒழுக்கம் (Customary Morality),, உணர்ச்சி ஒழுக்கம் (Conscious Morality),, பகுத்தறிவு ஒழுக்கம் (Rational Morality), என்று பாகுபடுத்திப் பேசுகிறார். இத்தன்மை தமிழ் மரபில் திணை ஒழுக்கம்  என்று உருவாகி வந்துள்ளது. அறநூல்கள் இப்பின்புலத்தில் உருவாகின. இதில் திருக்குறள் இடம் தனித்திருப்பதை உரையாடலுக்கு உட்படுத்தியுள்ளார்.

“பல நூல்களில் பிளாட்டோவும் அரிஸ்டாட்டிலும் அரசியலைப் பற்றி விரித்துரைக்கின்றனர். திருக்குறளோ எழுநூறு குறட்பாக்களில் ஆயிரத்து இருநூறு அடிகளில் அரசியலுக்கும் குடிகளுக்கும் தனி மக்களுக்கும் பொருந்தும் நீதிகளைக் கூறுகின்றது... அரிஸ்டாட்டில் காலத்தில் கிரேக்க நாட்டில் பரவியிருந்த கொள்கைகளைப் போல் தமிழ்நாட்டிலும் நல்ல அரசைப் பற்றிய கொள்கைகள் வளம் பெற்றிருந்தன என்பதற்குத் திருக்குறளே சான்று. தமிழ்நாட்டில் பரவிய கருத்துக் களைத் தம் சிந்தனையின் கருத்துக் களுடன் சேர்ந்துதான் தம் நூலை யாத்திருக்க வேண்டும் திருவள்ளுவர். வள்ளுவர் கூறும் நீதிகளுக்கு மேற்கோள்களும் வரலாற்று ஆதாரங்களும் சங்க இலக்கியங்களில் நிரம்பக் கிடக் கின்றன”. (திருக்குறள் அறக்கட்டளைச் சொற்பொழிவு, 1968).

இவ்வகையில் அரிஸ்டாட்டில், பிளாட்டோ, சாக்ரடீஸ் பேசிய பல்வேறு கருத்துக்களைத் திருக் குறளோடு ஒப்புநோக்கும்போது, திருக்குறள் பல்வேறு கூறுகளில் அவற்றிலிருந்து வேறுபட்ட கருத்துநிலையில் எழுதப்பட்டிருப்பதைப் பேராசிரியர் எடுத்துக்காட்டி யுள்ளார். அரிஸ்டாட்டில், பிளாட்டோ ஆகியோரின் கருத்துக்களை மூல மொழியில் வாசித்துத் திருக்குற ளோடு ஒப்புமை செய்துள்ளார். இதன் மூலம் கிரேக்க, ரோமானிய மற்றும் எகிப்து தொல்மரபுகளிலிருந்து வேறுபட்ட தமிழ்த் தொல்மரபு குறித்த பதிவைப் பேராசிரியர் செய்துள்ளார்.

இதன் மூலம் இந்திய மொழிகளில் தமிழுக்கான தொன்மை குறித்துப் பதிவு செய்கிறார். தமிழ்த் தேசிய இனத்தின் தொல் வரலாற்றை மீள்கட்டமைப்பு செய்கிறார். இதன் மூலம் உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் பேசுவோரின் அடையாள மரபை 1950களில் உருவான பின்காலனியச் சூழலில் கட்டமைப்பு செய்கிறார். சமசுகிருதம் மட்டுமே தொல்பழம் மொழியாகப் பேசப்பட்ட சூழலில் பேராசிரியர் செய்யும் இவ்வகையான குறுக்கீடுகள் தமிழ்த் தேசிய இனம் - இந்தியச் சூழலில், தென் மற்றும் தென்கிழக்கு ஆசியச் சூழலில் தனக்கான தனி மரபைக் கொண்டிருப்பதை உலகின் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்.

மேற்குறித்தவாறு நீதி மற்றும் ஒழுக்க மரபுகளின் தொடர்ச்சியாகத் தமிழர்களின் கல்வி மரபு குறித்தும் விரிவான ஆய்வைப் பேராசிரியர் செய்துள்ளார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமது முனைவர் பட்ட ஆய்வையும் இப்பொருளில்தான் மேற்கொண்டார். “பண்டைய இந்தியக் கல்வி ஆய்வுக்கான ஆதாரங்களைக் கண்டடைய பழந்தமிழ்ச் செவ்விலக்கியங்கள் வரைபட மற்ற கடலையும் அளந்தறியவியலாத ஆழங்களையும் அளிக்கவல்லன” (பண்டைய தமிழ்க் கல்வி, 2004:28) என்று பேராசிரியர் கூறுகிறார். சங்க இலக்கியங்களில் காணப்படும் பாணன், புலவன் மற்றும் குறிசொல்வோன் ஆகியோரைப் பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் கல்விப் போதனையாளராகப் பேராசிரியர் தெளிவுபடுத்துகிறார்.

இத்தன்மையும் கிரேக்க, ரோமானிய, எகிப்து தன்மை களிலிருந்து பல கூறுகளில் வேறுபட்டிருப்பதைக் காட்டுகிறார். மேலைச் சமூகங்களில் காணப்படும் பூசாரி, கவிஞர், நீதிபதி, சட்ட உருவாக்குநர், ஆசிரியர் என்ற பலதரப்பட்ட போக்குகளைத் தமிழ்ச் செவ்விலக் கியங்கள் வழியாக நாம் கண்டடைய முடிவதைப் பேராசிரியர் ஆய்வு செய்துள்ளார்.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நிலவிய கல்வி, சமய மரபைக் கொண்ட தல்ல. மாறாக, சமய மரபற்ற (Secular) கல்வி என்பதைத் தமது ஆய்வின் மூலம் வெளிப்படுத்துகிறார். வளர்ச்சி யடைந்த சமூகம் குறித்த அளவுகோல்களில் ஒன்று அச்சமூகம் பெற்றிருந்த கல்வி முறைகள் ஆகும். இவ்வகையிலும் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சி மரபை அடையாளப்படுத்துகிறார். இதன்மூலம் இத்தேசிய இனத்தின் தனித்தன்மைகளை வரையறை செய்கிறார்.

நீதி ஒழுக்க மரபு, கல்வி மரபு ஆகியவற்றைக் கொண்டிருந்த தொல்பழம் தமிழ்ச் சமூகம், எவ் வகையான செவ்வியல் இலக்கிய மரபையும் கொண் டிருக்கிறது என்பதை விரிவாகவே ஆய்வு செய்துள்ளார். “சங்க இலக்கியத்தில் இயற்கை நெறி மரபு” என்பது அவரது எம்.லிட்.பட்ட ஆய்வு. இதில் அவர் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களைக் குறித்து ஆய்வு செய்துள்ளார். மேற்குறித்த நீதிமரபுகள், கல்வி மரபுகள் குறித்த ஆய்வுகள் அவ்வகையில் நிகழ்த்தப்பட்டவை. 1945-1965 இடைப்பட்ட இருபது ஆண்டுகளில் இவருடைய இவ்வகையான ஆய்வுகள் நிகழ்ந்தேறின.

சமஸ்கிருதக் கவிதை, ஆங்கிலக் கவிதை, கிரேக்கக் கவிதை, இலத்தீன் கவிதை ஆகியவற்றில் காணப்படும் இயற்கை மரபுகளிலிருந்து தமிழ்ச் செவ்வியல் கவிதையில் உள்ள செந்நெறி மரபுகள் வேறுபடும் புள்ளிகளைப் பேராசிரியர் விரிவாக ஆய்வு செய்துள்ளார். சங்கப் புலவர்களின் இயற்கை பற்றிய வெளிப்பாடுகள் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பியக் கவிஞர்களின் வெளிப்பாடுகளோடு ஒப்புமை உடைய தாக இருப்பதைவிட கிரேக்க, இலத்தீன் கவிதைகளோடு பெரிதும் ஒப்புமையுடையதாக இருப்பதாகக் கூறுகிறார்.

தொல் மரபுகளைப் போலவே, நவீன உருவாக்க மரபிலும் தமிழின் தொன்மையைப் பதிவு செய்பவ ராகவே பேராசிரியர் செயல்பட்டுள்ளார். ஓலைச் சுவடி களைத் தேடி சி.வை.தாமோதரனாரும், உ.வே.சாமி நாதரும் பயணப்பட்டதைப் போல் தமிழில் அச்சிட்ட முதல் நூல்களைத் தேடி உலகுக்கு அறிமுகப் படுத்தினார். தமிழ் அச்சுப் பண்பாட்டு வரலாற்றில் இச்செயல் மிக முக்கியமான ஒன்று. புன்னைக்காயலில் ஹென்ரீக்ஸ் அடிகளால் உருவாக்கப்பட்ட ‘Art daLingua Malabar’ என்னும் தமிழ் இலக்கணம் மற்றும் அகராதி வடிவில் அமைந்த நூலை உலகிற்கு மீண்டும் அறிமுகம் செய்தார்.

தமிழில் 1554இல் அச்சேறிய ‘கார்த்தில்யா’(Cartilla) மற்றும் 1578இல் அச்சான ‘தம்பிரான் வணக்கம்’ 1679இல் அச்சேறிய ‘தமிழ் போர்த்துகீசிய அகராதி’ ஆகியவற்றில் சில 1968இல் தூத்துக்குடி தமிழ் இலக்கியக் கழகத்தின் மூலம் மீண்டும் அச்சடிக்கப்பட்டன. இதற்கான மூல பணியைப் பேராசிரியர் செய்திருக்கிறார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 1600-1800 ஆண்டுகளில் தமிழ்தான் முதல் முதல் அச்சு வடிவம் பெற்றது. இக்காலங்களில் 250 தமிழ் நூல்கள் அச்சாக்கம் பெற்றிருப்பதைக் கிரகாம் ஷா (Graham Shah)  தமது பட்டியலில் பதிவு செய்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ் மொழி ஏன் முதல்முதல் அச்சு வடிவம் பெற வேண்டும்? இதற்கான பண்பாட்டுப் பின்புலம் சார்ந்த வரலாற்றை எவ்வகையில் கட்டமைப்பது?

ஆகிய பிற உரையாடல்கள், தமிழ் தேசிய இனத்தின் தொடர்ச்சியான பண்பாட்டு வரலாற்றைக் கண்டறி யவும் கட்டமைக்கவும் மூலத் தரவுகளாகும்.  இதனையும் பேராசிரியர் செய்துள்ளார்.

“உலகின் ஒரு பகுதியை அதன் மற்றொரு பாதியுடன் இணைத்துப் பொருள் கொள்வதன் மூலம் மனிதனின் சிந்தனைப் போக்கு, அவனது இலக்கு, அவனது முழுமை ஆகியவற்றை உலகிற்கு அறிவிக்க வேண்டியுள்ளது” (2004:17) என்று பேராசிரியர் எழுதி யுள்ளார். குறிப்பாகக் கல்விச் சிந்தனைகளை இப் பின்புலத்துடன் வலியுறுத்துகிறார். இதனை நடை முறைப்படுத்தியவராக இவரைக் கூறமுடியும். ஐந்து ஆண்டுகள் ஐரோப்பிய நாடுகள், இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்து, ஓராண்டு வட மற்றும் தென் அமெரிக்கா, ஒன்பதாண்டுகள் மலேசியா என்ற அளவில் அவர் வாழ்ந்துள்ளார். இதனைத் தவிர்த்து தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஜப்பான், ஆப்பிரிக்க நாடுகள், நடுகிழக்கு நாடுகள் என்று பல நாடுகளுக்கும் பயணம் மேற் கொண்டுள்ளார். இவ்வகையான வாழ்க்கை மற்றும் பயணத்தின் மூலம் பலமொழிப் பயிற்சி பெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

 பலமொழி இலக்கி யங்கள், பல்வேறு பண்பாடுகள் ஆகியவற்றை அறியும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. இதன் மூலம் பெற்ற அனுபவங்களைத் தனது மொழி, பண்பாடு சார்ந்த செயல்பாடுகளுக்கு எவ்விதம் பயன்படுத்துவது என்பது குறித்த புலமைக் கருத்தாடலை உள்வாங்கியவராகச் செயல்பட்டிருக்கிறார். இப்பயணங்கள் மூலம் பெற்ற தொடர்புகள், இந்நாடுகளில் அவர் பெற்ற கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் தமது மொழி/பண்பாடு சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டார்.

தொல்பழம் தேசிய இனமான தமிழ் இனத்தின் பழைய வரலாற்றைச் சமகால நிகழ்வுகளுக்கு எவ்வகையில் பயன்படுத்துவது? மற்றும் நடைமுறைப்படுத்துவது என்பதே அவரது புலமைத்துவச் செயல்பாடாக இருந்தது. இவரைப் போன்ற வாய்ப்புகளைப் பெற்ற வர்கள் குறைவு. இவர் ஒருவரே தான் பெற்றதைத்

தனது சமூகத்திற்குக் கையளித்தார். இத்தன்மையைப் புலமைத்துவச் செயல்பாட்டின் சரியான நிலைப் பாடாகக் கொள்ள முடியும். ஒரு புலமையாளன் தன் குடியின் இருப்பு, அக்குடியின் வரலாறு, சமகாலத்தில் குடிசார்ந்த நிலைப்பாடுகளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் ஆகிய பரிமாணத்தில் அடிகள் செயல் பட்டிருப்பதைப் புரிந்துகொள்ள இயலுகிறது. புலமை யாளனின் வகிபாகம் (The role of Intellectual)  தன் சமூகத்தில் எவ்வகையில் உள்ளது? என்பதற்கான நல்ல அடையாளமாக பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அடிகளைப் புரிந்துகொள்ள முடியும்.

காலனிய அதிகாரம் கைமாறியபோது உருவான புதிய சூழல்களைப் பேராசிரியர் சரியாகப் பயன் படுத்தினார். அமெரிக்க அரசும், சோவியத் அரசும் பின்காலனிய காலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல்வேறு நிறுவனங்களை உருவாக்குவதிலும் அதன்மூலம் கருத்துப் பரப்பல் செய்வதிலும் முனைப்புக் காட்டினார். ஒவ்வொரு நாட்டிலும் தூதரகங்களை அமைத்து இப்பணியில் இறங்கினார்.

பேராசிரியர் கொழும்பு, தமிழ்நாடு என இரண்டு இடங்களிலும் தமிழியல் செயல்பாடுகளுக்காகச் சிறிய நிறுவனங்களை உருவாக்கினார். இதன்மூலம் 1952-1966 காலகட்டத்தில் ‘‘Tamil Culture என்னும் இதழைக் கொண்டுவந்தார். உலக நாடுகளில், சமசுகிருத மொழி பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த பலரும் தமிழியல் ஆய்வு சார்ந்து செயல்படும் சூழல் உருப்பெற்றது. 1955இல் பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனம் உருவானது.

ஃபிலியோசா, எமனோ, பரோ, கமில் சுவலபில் உள்ளிட்ட திராவிட மொழி ஆய்வாளர்களின் கட்டுரைகளை ‘‘Tamil Culture இதழில் வெளியிட்டார். தமிழின் முதன்மையான ஆய்வாளர்கள் அனைவரின் கட்டுரைகளும் இவ்விதழில் வெளியிடப்பட்டது. இச்செயல்பாட்டின் உச்ச வளர்ச்சி யாகவே 1964இல் உருவாக்கப்பட்ட உலகத் தமிழியல் ஆய்வு மன்றம் (IATR); இவ்வமைப்புவழி 1966இல் கோலாலம்பூரில் அவர் நடத்திய முதல் மாநாடு. சுமார் 44 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பங்குகொண்ட மாநாடு அது. ‘‘Tamil Culture இதழ்ச் செயல்பாட்டின் அடுத்த கட்ட நிலைப்பாடாக அது அமைந்தது.

1968இல் சென்னையில் அந்த மாநாடு நடந்தது. அதில் அடிகளாரின் நேரடிப் பங்கேற்பு குறைவு. ஆனால்  முதல் மாநாட்டில் படிக்கப் பெற்ற ஆய்வுக் கட்டுரைத் தொகுதிகள் இரண்டு, உலகம் முழுவதுமான தமிழியல் ஆய்வு குறித்த Tamil Studies Abroad ஆகிய நூல்களை மேற்குறித்த மாநாட்டில் வெளியிட்டார். 1973இல் பாரிசில் மூன்றாவது மாநாட்டை நடத்தியதில் பேராசிரியரின் பங்கு குறிப்பிடத்தக்கது. 1974இல் யாழ்ப்பாணத்தில் நான்காவது மாநாடு நடத்துவதற்கு இலங்கை அரசின் ஒத்துழைப்பு இல்லை. மாநாடு நடந்தது. ஒன்பது தமிழர்கள் உயிரிழந்தார்கள்.

இரண்டாவது மாநாடு முடிந்தபின் யுனெஸ்கோ உதவியுடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஒன்றை உருவாக்க அனைத்து வரைவுகளையும் பேராசிரியர் உருவாக்கித் தந்தார். அந்த நிறுவனத்தின் ஆய்வு இதழுக்கு (Journal of Tamil Studies)  ஆசிரியராகச் செயல்பட்டார். அந்நிறுவனம் உருவாக்கப்பட்டது; பேராசிரியர் அந்நிறுவனத்தின் தலைமையேற்று நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெற வில்லை.

இவ்வகையில் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி, தமது புலமைத்துவச் செயல்பாடுகளின் மூலம் தமிழ் மொழி, பண்பாடு சார்ந்த உலக அங்கீகாரம் பெறும் செயல்பாடுகளை நிகழ்த்திக் காட்டினார். பேராசிரியரின் இச்செயல்பாடுகளை இன்றைய சூழலில் எப்படிப் புரிந்து கொள்வது? தமது புலமைத்துவத்தைத் தன் மொழி, பண்பாடு சார்ந்த செயல்பாடுகளில் எத் தன்மையுடன் நடைமுறைப்படுத்தினார் என்ற உரை யாடலை முன்னெடுப்பது அவசியமாகும். தமிழர்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கும் இன்றைய சூழலில் அவரது செயல்பாடுகளின் முக்கியத்துவம் மேலும் கூர்மையடைந்துள்ளது. பேராசிரியரின் செயல்பாடுகளைக் கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்.

-              தமிழகச் சூழலில், இந்தியவியலுக்கு மாற்றாகத் தமிழியல் மரபுகளைக் கட்டி வளர்த்தவர்.

-              இலங்கைச் சூழலில், பெரும்பான்மையினரின் மொழி ஆதிக்கத்திற்கெதிராக, தன் மொழி வளர்ச்சி குறித்துச் செயல்பட்டார்.

-              மலேசியாவில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கான புலமைத்துவ ஆய்வு மரபை வளர்த்தெடுத்தார்.

-              காலனிய குடியேற்றத்தில் குடியேறிய தமிழர்கள் குறித்த கவனத்தை மீள்கொண்டு வந்தார்.

பேராசிரியரின் 1950-1980 என்ற முப்பது ஆண்டு காலத்தில் தமிழ் தேசிய இனத்தின் புலமைத்துவ மரபை உலகிற்கு அறிமுகப்படுத்தி தமிழ் தேசிய இனத்தின் அடையாளத்தை, சுயமரியாதையை வளர்த்தெடுத்தார். இதனை மேலும் வளர்த்தெடுப்பதற்குத் தடையாக திராவிட அரசியல் செயல்பட்டது; செயல்படுகிறது. பேராசிரியரின் இச்செயல்பாட்டை, உலகின் பல பகுதி களுக்கும் முன்னெடுக்கும் சூழல் அன்று இல்லை. இன்று முற்றுமுழுதான புதிய சூழல் உருவாகியுள்ளது.

ஈழப் போராட்டத்தின் விளைவாக 1980 முதல் உலகம் முழுவதும் தமிழர் பரவியுள்ளனர். இந்தத் தமிழ்ச் சமூகம் பேராசிரியர் அடையாளப்படுத்திய மரபை, தாம் வாழும் இடங்களின் சூழல் சார்ந்து, புதிய மரபுகளாகக் கட்டியெழுப்பும் தேவை இருப்பதாகக் கருதலாம்.

புலம்பெயர்ந்து சென்ற மக்கள் ஒரு பகுதியில் மொழி, பண்பாடு ஆகியவற்றோடு ஓர் இனமாக வாழுகிறார்கள். மலேசியா, சிங்கப்பூர் இவ்வகையில் அடங்கும். புலம்பெயர்ந்தோர் மொழியை மட்டும் இழந்த நிலை உருவாகியுள்ளது. மொரிசியஸ், ரியூனியன் இந்நிலைக்கு எடுத்துக்காட்டு. பல்வேறு தீவுகளில் மொழி, பண்பாடு இரண்டையும் இழந்துள்ளனர். இப்பொழுது கடந்த முப்பது ஆண்டுகளின் மூலம் புலம் பெயர்ந்த தமிழர்கள் மொழி, பண்பாடு என்ற அடை யாளத்தோடு கூடிய தேசிய இனமாக வாழவேண்டுமா? வாழ முடியுமா? என்ற உரையாடல் உருவாகியுள்ளது.

மொழியை இழக்கும் சூழல் தவிர்க்க முடியாமல் அமையும்போது, பண்பாட்டு மரபுகளை வாழுமிட மொழியில் பகிர்ந்துகொள்ளும் இனமாக வாழப் போகிறோமா! என்ற உரையாடல் முன்னெழுகிறது. இந்நிலைகளை அடுத்து, மொழி, பண்பாடு இழந்து ஆங்காங்குள்ள பொது நீரோட்டத்தில் கலந்து விடுவதா? என்ற கேள்விகளைப் பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அவர்களின் புலமைத்துவச் செயல்பாடுகளோடு இணைத்து உரையாடும் தேவைக்கான ஒரு சிறு நிகழ்வாக எனது மேற்குறித்த உரையாடலைக் கருதுகிறேன்.

(மே 16-18, 2014இல் தொறென்டோ பல்கலைக் கழகத்தில் (கனடா) நடைபெற்ற தமிழியல் ஆய்வு மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட நிறைவுச் சிறப்புரையின் (Pleneary) எழுத்து வடிவம்)

Pin It