மக்கள் தொகையில் கால் பங்காக இருப்பவர்களின் மேன்மைக்கு மேன்மையாகத் தேவைப்படுவது எது? கல்விதான் என்று பட்டியல் இனத்தவர் மீது பரிவு இருப்பது போலப் பாசாங்கு செய்பவரும்கூடச் சொல்வர். பட்டியல் இனத்தவரில் பெரும்பான்மையோர் என்ன தொழிலில் இருக்கின்றனர்? 80 சதவிகித வேளாண்மைத் தொழிலில் இருக்கின்றனர் என்று எல்லா புள்ளி விவரங்களும் சொல்லும். பட்டியல் இனத்தவர் பொருளாதார முன்னேற்றத்திற்கும், சமூக வளப்பத்திற்கும் தடையாக இருப்பது எது? நிலம் இன்மை மற்றும் பட்டியல் இனத்தவர் மீதான வன்கொடுமைகளையும், தீண்டாமையையும் களைய வேண்டிய பொறுப்பு எந்தத் துறைகளிடம் இருக்கிறது? காவல் துறை மற்றும் நீதித் துறையும். பட்டியல் இனத்தவர்க்கான வளர்ச்சித் திட்டங்களை வழங்கும் துறைகளில் பெரும் பங்கு வகிக்கும் துறை எது? ஊரக வளர்ச்சி. பட்டியல் இனத்தவரின் உடல் நிலம் காக்க வேண்டிய துறை எது? மக்கள் நிலம் எனப்படும் மருத்துவத் துறை.
தமிழ்நாட்டைப் பொருத்த அளவில், பட்டியல் இனத்தவருக்கு இன்றியமையாத இணக்கமாக இருக்க வேண்டிய இந்த எட்டுத் துறைகளைப் பற்றி உலகத்திற்குத் தெரிய வேண்டிய பெரிய உண்மை ஒன்றுண்டு. அது என்னவெனில், 12 லட்சமாக உள்ள அரசுப் பணியாளர்கள் சற்றொப்ப 150 துறை அலகுகளில் (Departmental units) உள்ளனர். ஆனால், இவருள் 90 சதவிகித ஊழியர்கள் வெறும் 18 அலகுகளில் பணியாற்றுகின்றனர். இந்த 18 அலகுகளும் எட்டே துறைகளில் அடங்குகின்றன. இந்த எட்டுத் துறைகள் எவை தெரியுமா? இவைதான் பட்டியல் இனத்தவர் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும், உடல் நலனையும் காக்க வேண்டிய மேற்குறிப்பிடப்பட்ட எட்டுத் துறைகள். இந்த எட்டுத் துறைகளும் பட்டியல் இனத்தவர்க்குத் தமது பணியிடங்களில் என்ன பங்கு தந்துள்ளன? எல்லா துறைகளும் பணியாளர் பட்டியலை (Establishment List) மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையாவது வெளியிட வேண்டும் என்பது நடைமுறை. பல துறைகளில் இது செய்யப்படும்போது, இந்த எட்டுத் துறைகளில் ஒரு சில பதவிகளுக்குத் தவிர இந்தப் பணியாளர் பட்டியல் முறையாக வெளியிடப்படுவதில்லை. எங்கெங்கெல்லாம் பணியாளர் பட்டியல் வெளியிடப்படுவதில்லையோ, அங்கெல்லாம் பட்டியல் இனத்தவர் கண்டிப்பாக இருட்டடிப்புச் செய்யப்படுவர். அதன்படியே இத்துறைகளில் நடந்து வருகிறது.
இந்த எட்டுத் துறைகளிலும் (காவல் துறை தவிர) பட்டியல் இனப் பணியாளர் பங்கு, 10 சதவிகிதத்திற்குக் கீழ்தான் இருக்கிறது. குத்து மதிப்பாகச் சொல்லுவதானால், 2 லட்சம் பட்டியல் இனத்தவர் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு லட்சத்திற்கும் கீழாகத்தான் பட்டியல் இனத்தவர் இருக்கின்றனர். ஒரு லட்சம் பணியிடங்களுக்கு மேல் இவர்களுக்கு உரிய இடங்கள் மறுக்கப்பட்டு வருகின்றன என்றே கொள்ள வேண்டும்.
கல்வித் துறையில் இன்னும் சரியான புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை. பல்கலைக் கழகங்களிலும், அரசுக் கல்லூரிகளிலும் விரிவுரையாளர் பணியிடங்கள் நூற்றுக்கணக்கில் இன்னும் பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்பட வேண்டியுள்ளன. 500 விரிவுரையாளர் பணியிடங்களைப் பட்டியல் இனத்தவருக்கு வழங்க ஆணையிடப்பட்டும் 5 ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் 400 பணியிடங்களும் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளி/கல்லூரிகளில் 5 சதவிகிதத்திற்குக் கீழாகத்தான் பட்டியல் இனத்தவர் உள்ளனர்.
நில உரிமை தொடர்பான வருவாய்த் துறையில் மாவட்ட வருவாய் அதிகாரி, துணை ஆட்சியர் பதவிகளைத் தவிர்த்த வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகிய பணியிடங்களில் பட்டியல் இனத்தவர் 10 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளனர். வட்டாட்சியர் போன்ற பணியிடங்களில், 5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளனர். மதுரை மாவட்டத்தில் 700 பேருக்கும் மேலுள்ள வருவாய்த் துறையில், பட்டியல் இனத்தவர் மொத்தம் 39 பேரே உள்ளனர்.
ஊரக வளர்ச்சித் துறையின் முக்கியப் பதவியான வட்டார வளர்ச்சி அதிகாரி, உதவி வட்டார வளர்ச்சி அதிகாரி பணியிடங்களில் 3 சதவிகிதத்திற்குக் கீழ்தான் பட்டியல் இனத்தவர் உள்ளனர். 2.82 லட்சம் சத்துணவுப் பணியாளர்களில் பட்டியல் இனத்தவருக்கு உரிய 19 சதவிகிதம் முழுமையாக இன்னும் அளிக்கப்படவில்லை. மக்கள் நிலத்துறையில் உதவி மருத்துவர் பணியிடங்களில் மட்டும் 120 இடங்கள், பட்டியல் இனத்தவருக்கு வராமலுள்ளன.
இப்படியாக இந்த எட்டுத் துறைகள்தாம் 90 சதவிகித பணியாளர்களைக் கொண்டிருக்கிறது என்ற போதிலும், பட்டியல் இனத்தவர் பங்கேற்பு முழுமையாக எய்தப் பெறவில்லை என்ற போதிலும், இந்த எட்டுத் துறைகளிலும் பட்டியல் இனப் பணியாளர் அமைப்பே இதுவரை அமைக்கப்படவில்லை என்பதுதான் பட்டியல் இனத்தவர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளத் தவறியுள்ளனர் என்பதன் சோகமாக இருந்து வந்துள்ளது. இதனால்தான் தமிழ் நாடு அரசு ஊழியர் அமைப்புகளில் பட்டியல் இனத்தவர் விழிப்புணர்வு இல்லாமல் போயிற்று. அரசு நிர்வாகிகளுக்கும் பட்டியல் இனத்தவர் பற்றிய அக்கறையோ, அச்சமோ இல்லாமல் போயிற்று.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, பட்டியல் இன ஊழியர்களுக்குப் பற்றாளர் கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என்ற அரசாணையை, இந்த எட்டுத் துறைகளிலும் எந்தவொரு அதிகாரியும் கடைப்பிடிக்க மறுத்து பட்டியல் இன ஊழியர்களிடமிருந்து விவரங்களை மறைத்து வைத்துள்ளனர். அதிகாரிகளிடம் நிலவரங்களை எடுத்துச் சொல்லும் வாய்ப்பையும் இல்லாமல் செய்து விட்டனர்.
ஆகவே, இந்த எட்டுத் துறைகளிலும் பட்டியல் இன ஊழியர்களும், அதிகாரிகளும் உறுதியான எழுச்சியான அமைப்பு கூட்டி விழிப்பாக இல்லாதவரை, அரசுத் துறைகள் எல்லாவற்றிலும் இவர்கள் உரிமை மறுக்கப்படுவதும், ஏய்க்கப்படுவதும் தொடரும் என்பதைப் பட்டியல் இனத்தவர் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
‘விழிப்பு இல்லாதவர் விடுதலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது.' - அண்ணல்அம்பேத்கர்
(இக்கட்டுரையாளர், அம்பேத்கர் அனைத்துலகப் பணியாளர் சங்கக் கூட்டமைப்பின் (‘அம்பு') தலைவர்)
- கிருத்துதாசு காந்தி