இடைக்காலத் தமிழகத்துப் பெண்களின் பண்பாட்டுக் கூறுகளை உலகப் பொதுப்போக்கின் பின்னணியிலும், இந்தியப் பின்னணியிலும் புரிந்து கொள்வது பொருத்தமாயிருக்கும். பண்பாடு என்பதனைத் தொடர்ந்து பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கை, வழிபாடு, விழாக்கள், நடை, உடை, பாவனை, கலை என்று விளங்கிக்கொண்டால் பெண்களின் பண்பாட்டுக் கூறுகளை அறியும் முயற்சி வெற்றிபெறும். இதற்கான சான்றுகளாக சிலை யுருக்கள், இலக்கியங்கள், கல்வெட்டுகள் அமைகின்றன.   சிலையுருக்கள் பெரும்பாலும் வழிபாட்டு ஊடகங்கள்.   இவை சுடுமண் பொம்மைகள், கல்லுருவங்கள், உலோகப்படிமங்கள், மரத்தினாலான பொம்மைகள், ஓவியங்கள், புடைப்புச் சிற்பங்கள். 

தாய் தெய்வம்

உலகம் முழுதும் தாய் தெய்வ உருக்கள் பெரு வுருவாக ஒரே சாயலில் அமைந்துள்ளன.  இயற்கை யினைத் தவிர்த்தால், மனிதன் பெண்ணைத்தான் முதலில் வணங்கியிருப்பான்.  தமிழகத்தில் கிடைத்த anthropomorphic கல்லுருவம் பெண்ணின் சாயலில் அமைந்துள்ளதனை கவனிக்க வேண்டும். தொடக்கத்தில் அவை அச்சமூட்டுபவையாகவே அமைந்தன. குழந் தையின் பார்வைக்கும், மனத்திற்கும் தாய் பிரமாண்ட மாகத் தெரிவது போல் அவள் உரு தொடக்கத்தில் தெளிவற்று படைக்கப்பட்டது. மனிதன் முதலில் கண்கொண்டு பார்த்த உருவம் தாயாகத்தான் இருக்கும். 

அவளை நேசித்திருப்பான்; பார்த்து பயந்தும் இருப்பான்.  எனவே பெண்ணை பெருவுரு செய்து வணங்கியதில் வியப்பில்லை. குழந்தை தாயிடமும், பொம்மையிடமும் தான் அழுகையினை நிறுத்தும். தொடக்க காலத்து தாயுருக்கள் ஆடையின்றி அமைந்தன. பெண் என்ற உயிர் இன்னொரு உயிரினை உருவாக்கித் தருவதனைப் பார்த்து ஆண் மிரண்டுபோயிருப்பான். பெண்ணே தொடக்கத்தில் மனிதனுக்கு சகல வித்தைகளையும் கற்றுத் தந்திருப்பாள். உலகப்போக்கோடு பொருந்தி வரக்கூடிய தாய்வடிவ வெண்கலச் சிலையுரு ஆதிச்ச நல்லூரில் கிடைத்துள்ளது. குழந்தையுள்ளத்தோடு தாயினை அணுகியதால் குழந்தைக்குத் தேவையான பால்மடியினை தொடக்கத்தில் சிலையுருக்களில் பெரிதாகப் படைத்ததில் வியப்பில்லை. 

பெண் கடவுளரின் சிலையுருக்கள், அவற்றின் ஆடை அணிகலன்கள், பாவனைகள் போன்றன அந்தந்த காலக்கட்டத்தின் சமூகத்தில் பெண்கள் பெற்றிருந்த நிலையினைக் காட்டுவதாகக் கொள்ளலாம். சிலை யுருக்கள் பெண்களின் சமூக அந்தஸ்தினையும் (social status) , இலக்கியங்கள் அவர்களின் குணவியல்பு களையும் (characteristics), கல்வெட்டுகள் அவர்களின் புழங்கு தளத்தினையும் (functional area) காட்டுவதாகக் கொள்ளலாம்.  

பெருவுருக்களில் காட்டப்பட்ட தாய்தெய்வங்கள்  தொடர்ந்து வேட்டைச் சமூகத்தினையும், வேளாண் சமூகத்தினையும் அடையாளப்படுத்தும் போது உழு படைக் கருவிகளையும், வேட்டைக்கருவிகளையும் தரித்தாள். உணவு சேகரிக்கும் சமூகநிலையினைக் காட்டும் தோண்டுகழியின் படிமலர்ச்சியான வேலா யுதமும், சூலாயுதமும்தான் வேலவனுக்கும், கொற்ற வைக்கும் அடையாளம். ரோமிலும், கிரேக்கத்திலும் வேட்டைக்கடவுள் பெண் (Artemis, Diana ). அவள் அம்புடன்தான் சிலையுருவாக்கப்பட்டாள்.

ஆயர்களின் காவல்தடியின் மாற்றுருவமே கிருஷ்ணனின் மூங்கில் குழல் என்று கருதலாம். இதுவே பிறகு செங்கோலாக உருமாற்றம் பெற்றது என்றும் கொள்ளலாம். தென்னகத்தில்தான் முழங்கை நீளமுள்ள இசைக்குழல்; வடக்கில் பெரிய விட்டமுள்ள ஒரு மீட்டர் நீளமுள்ள இசைக்குழல் உண்டு.  

சிலையுரு

இந்தியாவில் சிலையுருக்கள் மூன்றுநிலைகளில் உள்ளன: நிற்கும் நிலை, அமர்ந்தநிலை, படுத்தநிலை. இவற்றுள் நிறுவனமயமாக்கப்பட்ட சமயம் சார்ந்த பெண்ணுருக்கள் படுத்தநிலையில் இல்லை.

Divine Ladies   -க்கு ஒருக்களித்துப் படுக்கவோ, மல்லாந்து படுக்கவோ உரிமையில்லை போலும். புத்தர் ஒருக்களித்துப் படுத்தும், விஷ்ணு மல்லாந்து படுத்தும் அமைந்துள்ளனர். ஆனால், சமயம் சாராத மக்களின் கடவுளான பொள்ளாச்சிக்கருகிலுள்ள மாசானியம்மன் மல்லாந்து படுத்தநிலையில் அமைக்கப்பட்டுள்ளார்.    

வைதீக சமயங்களில் பெண்கள் படுத்துறங்க அணுமதி யில்லை போலும்; பவுத்தத்தில் காயசண்டிகை ஒரு தூங்குமூஞ்சி பாத்திரமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளார். சுபத்ரா தூங்கியதால் அபிமன்யுவினை இழந்தாள்.  இந்திரன் பர்ணசாலையில் நுழைகையில் அகல்யா விழித்திருந்தாள்.

 பெண்குணம்

உலகம் முழுவதும் மனிதனின் குணம் ஒரே மாதிரியாகத்தான் அமைந்துள்ளது.   இது பெண்ணிற்கும் பொருந்தும். இந்தியப் பெண்களின் குணத்தினை பிரதி பலிப்பதாக அவளின் பெயர்கள் இலக்கியத்தில் குறிக்கப் பட்டுள்ளன. அவை: ஆதிசக்தி, அதிதி, அம்பை, சாமுண்டி, உமா, துர்க்கா, சிம்மவாஹிணி, பிருகன் நாயகி, பார்வதி, மஹிஷாசுரமர்த்திணி, படாரி, பிடாரி, அம்பிகா, ஆரண்யவாசினி, மலைநங்கை, மூக்கரை நங்கை (சூர்ப்ப நகா), சப்தகன்னிகா, பரமேஸ்வரி, உண்ணாமுலையார், வித்யாக்கினி, நாநாதேச மங்கை, ஸ்தம்பேஸ்வரி, காமாக்ஷி, காமகோட்ட நாச்சியார், கண்ணகி, கமலாம்பிகா, காடுறையாள், காடுகிழாள், கானுறைச் செல்வி, காடமர்செல்வி, கொற்றி, கொற்றியாள், குலதேவி, முதியோள், பழையோள், நீலி, சூலி, சாலினி, சரஸ்வதி, கலைமகள், செல்லியம்மன் (பட்டியல் நீட்சிபெற வாய்ப்பு உண்டு).   இவ்வொவ் வொரு பெயருக்கும் சமூகப் பண்பாட்டுப் பின்னணி உண்டு. 

தமிழ் இலக்கியம் தாய் தெய்வத்தினை தொன் மூதாட்டி, முதுமூதாட்டி, முதியோள், முந்தை முதல்வி  என்றெல்லாம் சுட்டுகிறது. கானுறை தெய்வம், வன சாரிகை, கானமர்செல்வி, காடுகிழாள், ஆரஞர்தெய்வம் என்ற கடவுளரை முல்லைத் திணைக்குரிய கடவுளென்றும், வரையரை மகளிர் போன்ற பெயரினை குறிஞ்சித் திணைக்குரிய கடவுளென்றும்.  கொற்றவை, சூலி, சூர்மகள், சூரரமகளிர் போன்றவற்றை பாலைத் திணையின் கடவுளென்றும் கொண்டால் கடல்கெழுச் செல்வியை நெய்தலுக்குரிய கடவுளாகக் கொள்ளலாம்.  

கொற்கையில் கடல்கெழுச்செல்வி வணங்கப்பட்டிருக் கிறாள். கொல்லிமலையின் அருகிலுள்ள குகையின் ஓவியப்பாவையினை குறிஞ்சித்திணையின் கடவுளாகக் கொள்ளலாம். அணங்கு பொருந்திய மருதத்திணை யினின்றும் தோன்றியவளே கண்ணகி. இங்கு விளக்கிய படி திணைக்கடவுளர்களை ஏற்றுக்கொண்டால் இது தொல்காப்பியர் வகுத்த திணைக்கடவுளர்களுக்கு மாற்றாக அமையலாம் / இணையாகவும் அமையலாம்.    மணிமேகலை காப்பியம் புவியினை நீர், நிலம் என்று இரு பெருந்திணைகளாகப் பிரித்து, சம்பாபதி என்பவளை தரைக்காவல் தெய்வமென்றும் அதாவது மண்காக்கும் தெய்வமென்றும், மணிமேகலையினை கடல்காவல் தெய்வம் என்றும் திணைக் கடவுளர்களாக அறிமுகப்படுத்துகிறது. மணிமேகலையே கோவலனின் குலதெய்வமாகும்.

தாய்தெய்வங்கள் மனிதனின் அடிப்படைக் குணங்களான பசி, கோபம், வெறி, காமம் போன்ற வற்றை வெளிப்படுத்துவன. இத்தெய்வங்கள் தொடக் கத்தில் கால்களை அகற்றி விஸ்தாரமாக அமர்ந்திருந்தன.    இந்நிலையில் ஒருவர் நெடுநேரம் முதுகுவழியின்றி அமர்ந்திருக்க முடியும். அது பேறுகாலத்தின் இருக்கை நிலையில் ஒன்றாகும்.

அடுத்தடுத்த காலங்களில் அவள் கால்களை ஒடுக்கி அமரவைக்கப்பட்டாள். கால்தூக்கி நடனமாடலாகாது என்று தடுக்கப்பட்டாள். உருத்த நோக்கு கொண்டு இணையாகக்   கூத்தாடிய தில்லை காளி சிற்றம்பலத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டாள்; அடங்கிப்போனவள் பூர்ணகும்ப மரியாதையுடன் வளாகத்திற்குள் அரவணைக்கப்பட்டாள். இந்தியாவில் நேர்கொண்ட பார்வையுடனான நடனப்பெண் ரூபங்கள் சமைக்கப்படவில்லை. தலைகுனிந்த நிலையிலும், நாணியும், கோணியுமே அமைந்துள்ளன.

தன்னுறுப் பினைக் காட்டி நின்ற பெண், காலம் செல்ல சிற்றாடையில் மறைக்கப்பட்டாள்; பிச்சாடனரோ மறைக்காமலே நாய்களுடன் ஊர்முழுக்க உலா வந்தார்.   ஆலிலைகண்ணன் ஆடையின்றியே காணப்படுகிறான்; வேலவன் கோவணத்துடன் காணப்படுகிறான்.  இதுவே, சைவத்திற்கும் வைணவத்திற்குமான இடைவெளி.  

ஆடை

மார்கச்சை

மனிதனுக்கான உணவினைத் தன் மார்பிலேயே வைத்திருந்ததால் தாய்தெய்வம் அதனை மறைக்காமல் காட்டி நின்றாள். ஒருகாலத்தில் குழந்தைப்பேறுக்குப் பின், பெண் கச்சையின்றியே இருந்தாள். மதுராவின் தேவதைச் சிற்பங்கள் கச்சையின்றி மார்பினைக்காட்டி குடிநீரினைக் குடுவையிலும், உணவினைத் தட்டில் ஏந்தியும் வனப்புடன் நிற்பன.

இடைவார் போன்று மெல்லிய நூலிழை ஆடையே உண்டு. இடது தோளினின்றும் குறுக்காக நீண்டுதொங்கும் நூலிழை ஆடை இக்ஷவாகு காலத்தில் ஆணிற்கும் பெண்ணிற்கும் பொதுவானது. வஸ்தர-யஜ்ன-பவிதா என்று இந்நூலிழை ஆடை யஜூர் வேதத்தில் குறிக்கப்படுகிறது. குப்தர், பல்லவர், சோழர் காலத்திய சிற்பங்களில் இதுபோன்ற ஆடையினைக் காணலாம். பெண் சிற்பங்களின் மார் களுக்குக் குறுக்கே பெருக்கல் குறி போன்று இவ்வாடை ஓடும்.  ஸ்வர்ண-வைகாஷகா என்று இருபுறமும் பூநூல் போட்டது போன்று இந்நூலிழையாடை பல்லவர், சோழர் காலங்களில் மாற்றம் பெறுகிறது.  

மார்பினில் வளமையினைக் காட்டியிருந்த பெண் கடவுள் காலம் செல்ல கச்சையால் மறைத்துக் கொண்டாள். இது ஒரு பண்பாட்டு மாற்றம். மார் கச்சை பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உண்டு. தமிழகத்தில் மகாபலிபுரத்து சிற்பங்களில் மார்கச்சை அறிமுகப் படுத்தப்படுகிறது. பாண்டிநாட்டில் லாடக்கோயிலில் சுப்ரமண்யருடன் கூடிய தெய்வானை மார் கச்சையுடன் காணப்படுகிறாள்; வள்ளிக்கு இல்லை. இதனடிப் படையில் சிலப்பதிகாரத்தின் காலத்தினைக் கணிக்கலாம்.  

தொடக்கத்தில் மார்பின் பூண்பகுதி மட்டும் மறைக்கப் பட்டுள்ளது. அடுத்த நிலையில் அதனுடன் நெடுக்காக தோள்வார்  (shoulder straps ) இணைக்கப்பட்டுள்ளது.    தென் இந்தியாவில் விஷ்ணு இரு மனைவியருடன் சிலையுருவாக காணப்பட்டால், விஷ்ணுவின் வலப் புறமுள்ள பெண் மட்டுமே மார் கச்சையுடன் காணப் படுகிறாள். அதாவது தோள்வாருடன் கூடிய மார்கச்சை.  

கங்கா-பார்வதியுடன் அமைந்த சிவனின் சிற்பத்தில் பார்வதி மார் கச்சையுடன் இல்லை.  பொதுவாக சீதேவி-பூதேவி, வள்ளி-தெய்வானை, ருக்மணி-சத்யபாமா இவர்களுடன் முறையே விஷ்ணு, சுப்ரமண்யர், கிருஷ்ணன் அமைந்திருந்தால் அவர்களின் வலப் பக்கமுள்ள பெண்களுக்கு மட்டுமே மார் கச்சை உண்டு.   இதனைப் பெண்களிடையேயான பண்பாட்டு மாறு பாடாகவும் காணலாம்.

சுப்ரமண்யர் பொறுத்து வலப்புறமுள்ள தெய்வானை மனைவி; இடப்புறமுள்ள வள்ளி காதலி. இதனைப் பிற கடவுளர்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். இந்தியாவின் பிற இடங்களில் விஷ்ணுவிற்கு ஜோடிகளாக ஸ்ரீதேவியும் பூதேவியும் இருக்க வங்காளப்பகுதியில் ஸ்ரீதேவியும் சரஸ்வதியும் அமைந்துள்ளனர். இதனை ஒரு வட்டாரப் பண்பாடாகக் கருதலாம்.  ஸ்ரீ ஒரு காலத்தில் கார்த்திகேயனுடன் இணைக்கப்பட்டாள். இவள் முதலில் அசுரர்களிடம் வாழ்ந்து அவர்களின் நிலை தாழ்ந்தவுடன் விலகிவந்து இறுதியில் இந்திரனுடன் வாழ்வதற்காக வந்தாள் என்று மகாபாரதம் கூறுகிறது. ஜலந்தரன் என்ற அரக்கனின் மனைவி பிருந்தாவினை விஷ்ணு மயக்கினான் என்று பிற்காலத்திய புராணங்கள் கூறும். ரிஷிபத்தினிகளை தாருகாவனத்தில் மயக்கியது யார்? என்பது அனைவரும்  அறிந்த ஒன்று.  

மகாபலிபுரத்தின் மஹிஷாசுரமர்த்திணியின் சிற்பம் புகழ் வாய்ந்தது. இளமையான நடுவயதுக்காரியினைப் போல் ஈர்க்கும் தோற்றத்துடன் காணப்படுபவர். தம் முழு பலத்தினையும் உடலில் ஏற்றியிருப்பார். முற்சோழர் காலத்திலும் இதுபோன்று ஈர்க்கும் தோற்றத் துடனான இவளின் சிற்பங்கள் உண்டு (புன்செய், கும்பகோணம்).

கி.பி.ஏழாம் நூற்றண்டினைச் சார்ந்தும் அதன் பிறகுமான பல்லவர், நுளம்பர், முற்சோழர் காலத்திய சாமுண்டியின் ரூபங்கள் மிகுந்த வனப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. இவை நாக-குஜ-பந்தம் என்ற மார் கச்சையுடன் காணப்படுகின்றன. மெல்லிய இளையதான கயிறுபோன்று பாம்பு மார்பினை முழுதும் மறைக்காமல்  lace  ஆக மேலாகத் தழுவிச்செல்கிறது.   இங்கு தோள்வார் இல்லை. கபாலமாலை உண்டு. 

நாகத்தினை ஆடையாகக் கொண்டவர் ஆண்கடவுள் மட்டுமன்று, பெண்கடவுளரும் உண்டு என்பதே இதன் பொருள். தென்னகத்தில் பாம்பு பிடிக்கும் பழங்குடிப் பெண்கள் உண்டு.

அவைதீக சமயத்தில் நச்சுப்பாம்பின் கடியினின்றும் மக்களைக் காக்கும் பெண் கடவுளர்கள் உண்டு. அரவம் தீண்டிய பெண்ணை சம்பந்தர் காப்பாற்றினார் என்பது பெண்ணின் வீரியத்தினைக் குறைப்பதற்கு உண்டாக்கப்பட்ட episode ஆகலாம்.  

 கி.பி.600-670 காலக்கட்டத்தில்  அகலமான மார் கச்சை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மகாபலிபுரத்தில் சேடிப் பெண்கள் மார்கச்சையுடன் இருக்க கடவுள் உருவங்களான ஸ்ரீதேவி, பார்வதி, லட்சுமி போன்றவை மார் கச்சை இன்றி உள்ளன. இதனை கடவுள்-பெண்கள் அணங்குடன் இருத்தப்பட்டனர் என்றும் சேடிப் பெண்களின் பாலூற்று அடைக்கப்பட்டது என்றும் கருதலாம்.

இன்னொருவகையில் மார் கச்சை அணியாத வர்களை மாதாக்கள் என்றும், அணிந்தவர்களை மாதாவாக ஆகப்போகிறவர்கள் என்றும் கருதலாம்.  ஆனால், துர்கையும், கந்தர்வப்பெண்களும் மார்கச்சையுடன் உள்ளனர். திருவொற்றியூரின் வட்டப்பாறை அம்மன் நாக-குஜ-பந்தத்துடன் காணப்படுகிறார்.  இவளுக்கு கபாலமலையும் உண்டு, தலையிலும் நாகமுண்டு. 

Janguli  என்ற பவுத்த சமயப் பெண்கடவுள் நாககுண்டலங்களும், நாகமேகலையும் அணிந்த வளாவாள்.   பாம்பின் வாலினைப்பிடித்து அநாயசமாக   தலைக்குமேலே சுற்றி தரையில் அடித்துக் கொல்லும் பெண்கள் உண்டு.

உமை

மகாபலிபுரத்தில் சோமஸ்கந்தர் சிற்பத்தில் உமை சிவனின் அருகில் ஸ்கந்தனுக்கு இடம்விட்டு அமர்ந் திருப்பார். இங்கு, ஆணுக்கும் பெண்ணுக்குமான உருவவிகிதம் (physical proposition)  பெருத்த வேறு பாட்டுடன் உள்ளது [உருவ விகிதம் வடக்கில் குறிப்பாக மிதுனச் சிற்பங்களில் சமமாக அமைந்துள்ளன.  தெற்குநோக்கி வரவர பெண் சிலைகளின் உருவ விகிதம் குறைகிறது.

இப்போக்கு தமிழ்நாட்டிற்கு வருகையில் ஐந்தில் மூன்று அல்லது மூன்றரைப்பங்கு என்று அமையும்போல் தெரிகிறது.  உற்சவமூர்த்திகளில் இதனைத் தெளிவாகக் காணலாம்]. போர்க்குலத்தவர் மிகுந்து வாழும் இராமநாதபுரம் பகுதியின் மூவரை வென்றான் கோயிலின் சிவகாமி சிவனிடமிருந்து சற்றுத் தள்ளியே நிற்கிறார். ஆனால், கர்நாடகத்தில் அனந்த் பூரில், உமை சிவனின் தொடையின்மேல் தன் வலது முழங்கையினை அழுத்திச் சார்த்தி சிவனின் மார்பில் ஒய்யாரமாய்ச் சாய்ந்துள்ளார்.  

உத்தரபிரதேசத்தின் உமை சிவனின் தோள்மேல் கழுத்தினைச் சுற்றி கைபோட்டு சிவனின் தொடைமேல் அமைந்திருக்கிறார்.   இதனைப் பண்பாட்டின் வட்டார வேறுபாடாகக் கருதவேண்டும். மகாபலிபுரத்தில் ராஜசிம்மன் பாணிக்கு முந்தைய தர்மராஜ ரதம், ராஜசிம்மன் கடற்கரை கோயில் போன்றவற்றில் சோமஸ்கந்தர் சிற்பங்களில் உமை மார் கச்சையுடன் இல்லை.

 அடுத்த காலகட்டங்களிலும் உமைக்கு மார் கச்சை இல்லை. ஆதிவராகன் குகைக் கோயிலில் அரசியர் உருவங்கள் மார் கச்சையின்றி உள்ளனர். இங்குள்ள தொடக்க காலத்து குகைக் கோயில்களில் உமை பாதிமுகத்தினையே நேயர்களுக்குக் காட்டுகிறார். ராஜசிம்மன் காலத்தில் முழுவதுமாகக் காட்டுகிறார். சோழர் காலத்தில் நேயர்களை நேரடியாகக் காண்கிறார். இது பெண்ணின் சமூகப் பார்வையின் வளர்ச்சி முகத்தினைக் காட்டுவதாகக் கருதலாம்.  ஆனால், அங்கு அரசிகள் சிற்பங்கள் தலைகுனிந்தே இருப்பன. 

அணி

இடைக்காலத்திய இந்தியாவில் பெண்ணுருவங்கள் எளிய, மெல்லிய வார் போன்ற இடையாடையுடன் அமைந்துள்ளன. தமிழ் மரபில் பெண்ணின் சிற்றாடை வட்டுடை எனப்படும். மகாபலிபுரம் சிற்பங்களில் ஆயர்குலப்பெண்கள் ஆடையின்றிக் காட்டப்பட்டு உள்ளனர். இங்குள்ள பெண்ணுருவங்களின் கழுத்து மாலை அஜந்தா ஓவியப் பெண்களின் கழுத்துமாலையுடன் ஒத்திருப்பன. இதனைத் தென்னகத்தின் பொதுக் கூறு எனலாம். பல்லவர், முற்சோழர் காலத்தில் பெண்கள் மூக்குத்தி அணியும் வழக்கம் இல்லை.   

செங்கம் நடுகற்களிலுள்ள உருவங்களின் தலையலங் காரத்தின் பாணி மகாபலிபுரத்தின் சாமுண்டி உருவத்தில் காணப்படுகிறது. இது வட்டாரப் பண்பாடு,  அரசப் பண்பாடாக ஏற்றம் பெற்றதனைக் காட்டும்.   இங்குள்ள கொடிக்கால் மண்டபம், ஆதிவராக மண்டபம், திரவ்பதி மண்டபம் குகைகளில் துர்கையும் பரிவாரக் கடவுளரும் வில், கேடயம் போன்ற போர்க்கருவிகளுடன் காணப் படுகின்றனர். இங்கு, வில் வேட்டைக் கருவியாகவும் காணப்பட வேண்டும்.   

சாமுண்டி / மஹிஷாசுரமர்த்திணி

தென்னகத்தில் சாமுண்டியினையும், மஹிஷாசுர மர்த்திணியினையும் ஒன்றாகக் கருதும் மரபு உண்டு.   கி.பி.400-900 காலக்கட்டத்தில்  தமிழகத்தில் / தென்னகத்தில் இளமையுடனும், ஈர்ப்புடனும் அமைந்த சாமுண்டி சிலைகள் கி.பி.900 களுக்குப் பிறகு வங்காளம், ஒடிஷா, சாளுக்கியர் பகுதிகளில்  இளைப்புடன், மெலி வான உடல்வாகுடனும், குழிவான கண்களுடனும், எலும்பும்-தோலுமாகக் காட்டப்பட்டுள்ளன.   இதனை, அவ்வட்டாரங்களில் சாமுண்டியின் பலவீனத்தினைக் காட்டுவதாகக் கருதலாம்.  

தக்காணம், தென்னிந்தியப் பகுதிகளில் இவளின் வாகனம் குள்ளநரியாகக் காட்டப் பட்டுள்ளது. எல்லோராவில் சாமுண்டிக்கு வாகனமாக ஆந்தை காட்டப்பட்டுள்ளது. இவையிரண்டும் வேட்டை விலங்குகள், ஊண் உண்ணிகள்.  இவ் விரண்டு வாகனங்களும் ஆணா? பெண்ணா? தெரிய வில்லை. மஹிஷாசுரமர்த்திணியின் சிற்பங்கள் வெவ்வேறு ரூபத்தில் தென்கிழக்காசிய நாடுகளில் விரவிக் கிடக்கின்றன.

தமிழகத்தில் இவள் வெட்டப் பட்ட எருமைத் தலையின் மேல் நிற்பது இடைக் காலத்தில் எருமை பலியிடும் பூசாரியாக பெண் இருந் திருப்பாள் என்று கருத வைக்கிறது. காளையினை ஆண் அடக்குதல்போல் ஆண் எருமையினைப் பெண் அடக்கி யிருப்பாள். ஆண் எருமைகளுக்குத் திமிள் கிடையாது.    எனவே, எருமைத்தலை மேல் நிற்கும் மர்த்திணி கொன்றது ஆண் எருமையினையா? பெண் எருமை யினையா? என்ற கேள்வியினை எழுப்பலாம்.  ஆனால், ஐயப்பன் பெண் எருமையினைக் கொன்றதாக கதை உண்டு.  இப்படி இந்தியச் சமூகம் ஆணை வைத்து பெண்ணையும் பெண்ணை வைத்து ஆணையும் பலிபோடுகிறது.

தமிழ்ப் பெண்கடவுளர்கள்

தமிழகத்தில் பெண்கடவுளர்கள் தொடக்கத்தில் வேளாண் கடவுளர்களாகவும், வேட்டுவக் கடவுளர் களாகவும் அமைந்தனர். இது, பிறகு இந்திய மயமாதலோடு இயைந்தது. மரங்களில் தெய்வம் உறையும் என்பது தமிழர் நம்பிக்கை. மரத்தினை மூத்த சகோதரியாகக் கருதும் மரபினைத் செந்தமிழ்ப்பாக்கள் சுட்டுகின்றன. மா, பலா, ஆல், வேம்பு போன்ற பால்வடியும் மரங்களில் தாய்தெய்வம் உறைவதாக நம்பிக்கை உண்டு.

பெண்ணுக்குப் பேயோட்டுதல் ஆலமரத்தடியிலேயே நிகழும். மஞ்சள், வாழை, கறிவேப்பிலை போன்றவற்றை பெண்ணாக நினைத்துப் போற்றும் மரபு தமிழகத்தில் உண்டு. தமிழகத்தில் கறிவேப்பிலை ஒரு குறுமரம். அது, தானே பட்டுப் போகிற வரையில் வெட்டப்படுவது இல்லை.  

   வாழைக்கன்றினை பெண்ணாக மதித்து தாலிகட்டி கலியாண தோஷத்தினை முறிப்பர். கள்ளி என்று பெண்ணைத் திட்டுவது சாதிப் பெயரினைச் சுட்டுவது அன்று. கள்ளி ஓர் அழுத்தமான பால்வடியும் குறுமரம்.

இந்தியமயமாதலில் தமிழகத்தில் பெண் தெய் வங்கள் இயக்கிகளாக மாறுகின்றன. இவள் மன்றம், மரம், கோட்டம், துறை போன்ற இடங்களில் உறை பவள். ஒரு பவுத்த சமயத்து இயக்கி சுடுகாடுக் கோட்டத்தில் உறைபவளாக மணிமேகலை சுட்டுகிறது.   இதனை சுடுகாட்டு நாயகன் சுடலையாண்டிக்கு இணையாகக் காணலாம். இயக்கிகள், நிறுவனமயமான சமயங்கள் வலுப்பெற்றபின் பரிவார தேவதைகளாக மாற்றப்படுகின்றனர். இவற்றுள் அம்பிகா என்ற இயக்கி பிரபலமானவள். இவள் கலைச்சி, கன்னல்மொழிச்சி, பசுங்கொடிச்சி, தருமத்தி, நற்குணத்தாள், நற்சமய குணத்தாள், வேதத்தி, அருமறைச்சி, பன்னுதமிழ் வாய்ச்சி என்றெல்லாம் சுட்டப்படுகிறாள்.  

பன்னுதமிழ் வாய்ச்சி என்ற பெயரினை முதுவாய்பெண்டிர் என்ற செந்தமிழ்ச் சொல்லின் பொருளோடு ஒப்பிடவேண்டும்.    இது தமிழகத்தில் பெண்ணின் பண்பாட்டுத் தொடர்ச்சி.   அம்பிகாவின் பிற பெயர்கள்: இயக்கி, மரகதவல்லி, பகவதியம்மை, அம்பிகை, அம்பாலிகை, பரமசுந்தரி.   இவள் திருப்பரங்குன்றம் குடைவரையில் குழந்தை களுடன் மார் கச்சையின்றி அமைந்திருக்கிறாள்.  வைதீகக் கடவுளான உமா ஒரு குழந்தையுடன் விளங்க, அவைதீக அம்பிகா ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுடன் இருப்பது பண்பாட்டு வேறுபாடாகும்.

   குழந்தையின் முக்கியத்துவமும், குடும்பத்தின் முக்கியத்துவமும் கருத்துரு பெற்ற பிறகே இதுபோன்ற சிலையுருக்கள் உருப்பெற்றன என்று கருதலாம். தமிழகத்தின் மிக முக்கியமான தொல்லியல் தளங்களில் குழந்தையுடன் கூடிய சுடுமண் பொம்மைகள் கிடைத்துள்ளன.     இவற்றுள் சில குப்தர் காலத்துப் பாணியினை ஒட்டி அமைந்துள்ளன.   

ஆனைமலை குடைவரையில் அம்பிகா சிற்பத்தின் மேலே ஒரு மாங்கனி போன்ற உருவம் காணப்படுகிறது.   அறகளூர் குகையில் அம்பிகா மூன்று மாங்கனி கொண்ட மாங்கொத்தினைக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. கி.பி.780-இல் வடார்க்காடு மாவட்டம் திருப்பாண்மலையில் உருவாக்கப்பட்ட பொன்னியக்கியார் உருவம் ஒருகையில் மாங்கனி யினைக் கொண்டுள்ளது. தமிழில் இயக்கியினைச் சுட்ட அவ்வை என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.     அவ்வையாரம்மன், அவ்வைநோன்பு போன்றவற்றை இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.  

மக்கள் கடவுளும் அரசுகடவுளும்

மக்கள் கடவுளர்களே அரசு சார்ந்த சமய  நிறுவனக் கடவுளராக உருமாறுகின்றன. இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. தாமரை மீதான இயக்கி உருவத்தினை, தாமரை மீதான திருமகளின் உருவத்தோடு ஒப்புநோக்க வேண்டும்.  கஜலட்சுமி உருவத் தினை முதலில் பழங்குடி வம்சத்தினர்தான் காசுகளில் வெளியிட்டனர். பிறகு அதனை அரசவம்சத்தினர் பின்பற்றினர். வடக்கில் கொண்டபூர், பெத்தன்பூர் போன்ற இடங்களில் உள்ள இயக்கியின் கரங்களில் உள்ள கிளி தென்மதுரையின் மீனாட்சி கிளியினை நினைவூட்டுகிறது. இவை இந்தியமயமாதலின் ஒரு கூறாகலாம்.

தமிழகத்தில் சமண சமயப் பெண்கடவுளர்கள் கல்லுருவங்கள், பொன்னுருவங்கள், ஓவியரூபங்கள் என்று மூவகைகளில் காட்டப்பட்டுள்ளன. இவர்களுள் முக்கியமானவர்கள் சக்கரதாரிணி (மோகினியும் ஒரு சக்கரதாரிணியாவார்), சுவாலாமாலினி (இவளின் வாகனம் எருமை), அம்பிகா, பத்மாவதி, சித்தாக்கியார் போன்றோர்.   

சக்கராயி

தன்னுறுப்பினைக் காட்டி குத்துக்காலிட்டு  அமர்ந்த நிலையில் சக்கராயி என்றொரு பெண்கடவுள் தமிழகத்தின் தாராசுரம் அருகே வணங்கப்பட்டு வருகிறாள். இதுபோன்ற சிலையுருக்கள் சில ஆந்திரத் திலும், கர்நாடகத்திலும் கரடு-முரடான நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வழிபட்டு வந்துள்னர்.    அசாமின் யோகினி கோயிலில் யோனியினை மட்டும் வழிபடும் வழக்கு இன்றும் உள்ளது. சில இடங்களில் இத்தெய்வத்திற்குத் தலை உண்டு; சில இடங்களில் தலைக்குப் பதில் நன்கு விரிந்த தாமரை மலர் காட்டப் பட்டுள்ளது.

நிறம்

பெண் தெய்வங்கள் வெவ்வேறு நிறங்களில் உள்ளன. காளி கருப்பென்றும், மீனாட்சி பச்சை யென்றும், சரஸ்வதி வெண்மையென்றும் அறியப் பட்டுள்ளனர். யுவான்சுவாங், தன் குறிப்பில் நீலம், பச்சை, வெண்மை நிறங்களில் அமைந்த தாரா என்ற பெண் தெய்வத்தினைக் குறிப்பிடுகிறார். தமிழ் மரபில் நீலாம்பிகை, பச்சையம்மாள், வெள்ளையம்மாள், சிகப்பி, கருப்பாயி, வாடாமல்லி, பொன்னாத்தாள் (ஒளிரும் மஞ்சள்) என்று பெண்களுக்குப் பெயரிடும் முறை உண்டு.

கூத்து

தமிழ்நாட்டுக் கோயில்களில் கரணக்கூத்துகளை / கழைக்கூத்தினை (acrobatics)) வெளிப்படுத்தும் பெண்ணுருவ புடைப்புச் சிற்பங்கள் கவனத்திற்குரியன.    இவை மிகவும் மெலிந்த உருவங்கள். இவர்களே வளைந்து நெளிந்து இக்கூத்தினைச் செய்யமுடியும்.  இன்றைக்கும் பெண்களே கம்பி வளையத்திற்குள் நுழைந்து வரும் விளையாட்டினைச் செய்வர்.   இவர் களுக்கு உடல் பெருக்காமல் இருக்க இத்துணூண்டு உணவு அளிக்கப்படும். இதனையே ரசிகர்கள் உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு என்பர். இசைக் கருவிகளை இசைக்கும் பெண்ணுருவச் சிற்பங்களும் இவ்வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. 

கன்னி(த்)தாய்

குடுமியான்மலை கோயிலில் உள்ள இரு ஒற்றைத் தூண்களில் உள்ள இரு சிற்பங்கள் நோக்கப்பட வேண்டியவை: (1) ஒரு தூணில் உள்ள கன்னியின் உருவம் (2) மறு தூணில் உள்ள தாயின் உருவம்.   இவ்விரு உருவங்களும் நிர்வாணநிலையில் உள்ளன.    இச்சிற்பங்கள் வடிக்கப்பட ஒரு கன்னியும் தாயுமே னீஷீபீமீறீs ஆக அமைந்திருப்பர். இவற்றினை பெண்ணின் உடற்கூறியலுக்கு பொருத்தமான சிற்பங்களாகக் காணலாம். இன்னோரிடத்தில் பிள்ளைப்பேறுக்காக வயிறுதள்ளும் நிலையினைக் காட்டும் சோழர் காலத்து பெண்ணோவியம் முக்கியமானது. தாராசுரத்தின்

கோயில் சுற்றாலையில் இதே போன்று வயிறுதள்ளும் நிலையில் ஒரு பெண்ணின் புடைப்புச் சிற்பம் காணப் படுகிறது. இங்கும் வயிறு கீழிறங்கிய நிலையில் நின்று கொண்டுள்ள பெண்ணை இருபுறமும் பெண்கள் தாங்கியுள்ளனர். நின்ற நிலையில் பிள்ளைப்பேறு எளிதாகலாம். புவியீர்ப்புவிசை காரணமாக சிசு எளிதில் வெளியேற வாய்ப்பு உண்டு. கர்நாடகத்தில் ஒரு கோயிலின் சிற்பத்தில் ஒரு பெண் பெஞ்சின்மேல் காலகட்டி அமர்ந்த நிலையில் பிரசவிப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. சிசுவின் தலை வெளியே நீட்டிக் கொண்டுள்ளது. இது இந்தியமுறைப் பிரசவமாக இருக்கலாம். 

வைதீகஉமை ஒரு குழந்தையுடனும் அவைதீக அம்பிகா ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுடனும் அமைந்திருந்ததனை முன்னர் பார்த்தோம். நூறு குழந்தைகளைப் பெற்றாள் காந்தாரி. அவற்றுள் ஒரெயரு பெண்குழந்தை துச்சலை. ஆனால். இவள் பாண்டவர் அணியில் சேர்ந்துகொண்டாள்.  ஆரிதி என்ற பவுத்த சமயக்கடவுள் 500 குழந்தைகளைப் பெற்றாள். இவள் குழந்தைகளைத் திருடி உண்ணும் பழக்கம் கொண்டவள்.

பானையோடுகள் / கல்வெட்டுகள்  

பழந்தமிழ்க் கல்வெட்டுகளில் உள்ள பெண்களின் பெயர்கள் சமயக்குரத்திகளைச் சுட்டுவன.  தமிழகத்தில், இதுவரை கிடைத்த பானையோடுகளில் பெண் பெயர்கள் இல்லை. இது பெண்ணுக்கென்று உண்கலம் இல்லை என்பதனைக் காட்டும். அண்மைக்காலம்வரை வீடுகளில் பெண்களுக்கென்று தனியே உணவுக்கலம் இல்லை. அவள் கணவன் உண்ட கலத்திலேயே உண்ணுதல் வேண்டும்.

பெண்கள் ஆலிலையிலும், பூவரசு இலையிலும் ஈர்குச்சி வைத்து உணவிடும் இலை யினைத் தைப்பர். தொன்னையும் அப்படியே. இது ஒரு சிறந்த கைவினைத்தொழில். வைதீகக் கோயில்களில்  பெண்கடவுளர்க்கு என்று தனித்த தேர்வலம் கிடை யாது; சப்பரங்கள் உண்டு. தனித்த மாதா கோயில் களிலும், மாரியம்மன் கோயில்களிலும் தேர்வலம் உண்டு. 

சங்க இலக்கியத்தின் பாணினி மரபினையும், பாட்டியர் மரபினையும் தொடரும் காலங்களில் காணமுடியவில்லை.    பக்தி இலக்கியத்தில் காரைக்கால் அம்மையாரும், ஆண்டாளும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், இருவருமே பிறிதொரு வகையில் தோற்றனர். அம்மையார் இல்லறத்தினை துறக்க நேர்ந்தது. ஆண்டாள் வாழ்க்கையினையே துறக்க நேர்ந்தது. கழுத்தில் மாலையுடன் கருவறைக்குள் நுழைந்தவள் திரும்பவில்லை. கருவறைக்குள் பெண் நுழைவதனை வைதீகம் இன்றளவும் ஏற்கவில்லை.    இவர்களுக்குப் பிறகு பாய்ச்சலூர் பதிகத்தில்தான் பெண்குரல் ஒலிக்கிறது.

இகழ்ச்சி

தமிழக வரலாற்றில் பண்பாட்டு நிலையிலும் போரிலும் பெண்கள் பெருந் துயருற்றனர்.  குலோத்துங்க சோழன் 1192-இல் பாண்டியனைப் போரில் வென்ற போது பாண்டியன் மனைவியினை வேளத்துப் பெண்டாக்கினான். 1203-இல் குலோத்துங்கன் மதுரை யினைக் கைப்பற்றியபோது, பாண்டியன் தன் மனைவி யுடன் சோழமன்னனின் காலில் விழுந்தான். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனிடம் தோற்றபோது, சோழமன்னன் குலோத்துங்கன் தன் மனைவியுடனும் மகனுடனும் பாண்டியனின் காலில் விழுந்து வணங் கினான். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்

1253-இல் போசளரை பெரம்பலூர் எனுமிடத்தில் வென்றபோது தோற்றவனின் செல்வத்தினையும் பெண்டிரையும் கொண்டதாகக் கூறிக்கொள்கிறான்.    பங்காளிகளிடையேயான சண்டையில் பாஞ்சாலி இகழப்பட்டதுபோல், தமிழ் அரசர்களிடையிலான சண்டைகளில் பெண்ணரசிகள் இப்படி இகழப் பட்டனர். 

அரசு சார்ந்த  நிறுவனங்கள் வெளிப்படுத்திய சான்றுகள் வழியே இங்கு பெண்ணின் பண்பாட்டுக் கூறுகள் பேசப்பட்டன. இவை சாராத உற்பத்தி உறவுகளோடு நேரடியாக இயங்கும் பெண்களின் பண்பாட்டுக் கூறுகளை நாட்டார் பாடல்களிலும், கதைகளிலும்,  சில சடங்குகளிலும் காணமுடியும். அதற்குப் பாரிய அளவில் களஆய்வுகள் தேவை. உளவியல் அறிவு மிக முக்கியமான ஆய்வியல் tool ஆக பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்தியச் சமூகத்தில் பெண்ணின் கனவு மிக முக்கியமானது. பல மணிநேரம் கனவினைத் தொடர்ந்து சொல்லும் பெண்களைச் சந்தித்திருக்கிறேன். கனவா? கதையா? அன்று தெரியாத அளவிற்கு அவர்களின் சொல்லுரை வடிவமைக்கப்பட்டிருக்கும். பெண்களின் கனவு தனியே ஆய்விற்கு உட்படுத்தப்படவேண்டும்.   இம்முனைப்புடன் இக்கருத்தரங்கு தொடரும் என்று நம்புகிறேன்.

06-10-2014  அன்று ஏவிசி கல்லூரி (தன்னாட்சி) மயிலாடு துறையில் யூஜிசி நல்கையில் தமிழகத்தில் பெண்களும் பண்பாடும்: வரலாற்றுப் பார்வை என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நிகழ்ந்தது. அக் கருத்தரங்கின் கருப்பொருள் பேச்சாக (theme of the seminar ) இக்கட்டுரை அமைந்தது.  இக்கட்டுரைக்கான சில கருத்துகளை தொல்லியல் அறிஞர் வெ.வேதாசலம் அவர்கள் உறுதிப்படுத்தினார். அவருக்கு நன்றிகள் பல.

பயன்பட்ட நூல்கள்

இராமன், கே.வி, பாண்டியர் வரலாறு, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை,1977.

சண்முகம், ப. தமிழக மண் உருவங்கள், சேகர் பதிப்பகம், சென்னை, 2009.

பரமசிவன், தொ.அறியப்படாத தமிழகம், ஜெயா பதிப்பகம், பாளையங்கோட்டை,1997.

வேதாசலம், வெ. இயக்கி வழிபாடு, அன்னம் வெளியீடு, சிவகங்கை, 1989.

Kinsley, David, Hindu Goddesses: Visions of the Divine -Feminine in the Hindu Religious Tradition, Motilal Banarsidas, New Delhi,1987.

Lockwood (et al), Mahabalipuram Studies, Mahalakshmi, R. The Making of Goddess:Korravai- Durga in the Tamil Traditions, Penguin, New Delhi,2011.

Sethuraman,N.The Imperial Pandyas, Kumbakonam, 1978.

Sivaramamurti,C. Geographical and Chronological Factors in Indian Iconography in Ancient India: Bulletin of ASI, No.5.1950.

Pin It