கீற்றில் தேட...

இந்தியாவில் அரை மணி நேரத்திற்கு ஒரு விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலையும் நிலவுகிறது. மத்திய அரசு அமைப்பான தேசிய குற்றத்தகவல் ஆவண மையம் (National Crime Record Bureau) அளிக்கும் தகவலின்படி கடந்த 1997 முதல் 2006ம் ஆண்டு வரையான 10 ஆண்டுகளில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 304 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அரசுத்துறை புள்ளி விவரம் அளிக்கும் தகவல் இது என்றால் உண்மையான புள்ளிவிவரத்தை நாமே அனுமானித்துக்கொள்ள வேண்டியதுதான். இந்நிலையில் மாறிவரும் பருவநிலைக்கு ஏற்ப வளர கூடியது என்றும் விவசாயிகளுக்கு லாபகரமானது என்றும் உயிரியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான மரபணு மாற்று பயிர்களை இப்பொழுது அரசு முன்வைக்கின்றது.

அரிசி உணவுக்கும் நீரிழிவு நோய்க்கும் நம்மை ஆளாக்கிய ‘உணவு இரட்சகர்’ எம்.எஸ்.சுவாமிநாதன் கூட இதனை முன்மொழிகிறார். உன்மையில் புதிய தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான இந்த விவசாய முறை மக்களின் பசி தீர்க்கவா அல்லது பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை லாப பசி தீர்க்கவா என்பது நம் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி. விடைகாண மக்களின் பசி போக்கியதாக கொண்டாடப்படும் முதலாம் ‘பசுமை புரட்சி’யை பற்றி பார்ப்போம்.

1950 களில் சோவியத் ரசியாவை தொடர்ந்து சீனா வியட்னாம் என ஆசியா எங்கும் கம்யூனிச ‘பூதம்’ பரவுவதை தொடர்ந்து முதலாளித்துவ பாதையை கொண்ட அமெரிக்கா கலக்கம் கொண்டது. ஆசியாவை தன் கட்டுக்குள் வைக்க ஆசியாவின் மிக முக்கிய உணவான அரிசியை கைப்பற்ற திட்டம் திட்டியது. அமெரிக்க முன்னாள் வேளாண்மை செயலாளர் ஏர்ல் பட்ஸ் ஒருமுறை ‘உணவை ஆயுதமாக பயன்படுத்த முடியும் ஏன்றால் அது எங்களுக்கு மகிழ்ச்சியானதே’ என்று கூறியதை நாம் இங்கு நினைவில் கொள்ளலாம்.

இதன்படி அரிசி உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளாத நாடான அமெரிக்கா, ராக்பெல்லர் மற்றும் போர்டு நிறுவனங்களின் நிதி கொண்டு உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம் பிலிப்பைன்சு நாட்டில் 1960ல் துவங்கப்பட்டது. அரிசி பயிரை தன் வாழ்நாளில் கண்டிராத இராபட் கேன்டிலர் இதன் இயக்குனராக நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனம் ஆசியாவின் இயற்கை சார்ந்த விவசாய முறையை மாற்றும் வகையில் புதிய பயிர் வகைகளையும் இயற்கை உரங்கள் அல்லாத வேதியல் உரங்களையும் ஆசியா எங்கும் பரவலாக்கியது. இவ்வேதியல் உரங்கள் இரண்டாம் உலக போருக்காக உற்பத்தி செய்யப்பட்ட வேதியல் பொருட்களின் அடிப்படையிலானது என்பது குறிப்படத்தக்கது.

பல நாட்டு விஞ்ஞானிகளை அதிக அளவு ஊதியம் கொடுத்து இந்த நிறுவனம் நியமித்தது. இருந்த போதிலும் இவர்களால் இந்தோனேசியா மற்றும் தைவான் நாடுகளின் அரிசி வகையை கொண்டு மிஸி 8 என்னும் குள்ளமான பயிர் வகையை மட்டுமே உண்டாக்க முடிந்தது. இந்த பயிர் வகைகளை பசுமை புரட்சி என்னும் பெயரில் ஆசியா எங்கும் பரப்பியது. இந்த பயிர் செழிப்பாக வளர அதிக அளவு தண்ணீர், வேதியல் உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகள் தேவைப்பட்டன. இவை விவசாய முறையை செலவுமிக்கதாக மாற்றியது. மேலும் பல்வகை பயிர் கொண்ட விவசாய முறையை ஒற்றை பயிர் விவசாய முறையாகவும் மாற்றியது.

இதே காலகட்டத்தில் இந்தியாவில் மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் விவசாயிகளுக்கு ஏற்ற பல பயிர்களை ஆராய்ந்து கொடுத்தது. மேலும் இந்தியாவில் பல சூழலில் வளர கூடிய விவசாயிகளால் பாதுகாக்கப்பட்டு வந்த சுமார் 1,20,000 பயிர் வகைகளும் உள்ளன. இவை இந்தியாவின் உணவு இறையாண்மை பாதுகாத்தது. மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் பயிர்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதை தொடர்ந்து எதிர்த்தது. குறிப்பாக மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனரான ரிச்சாரியா மிகவும் கடுமையாக எதிர்த்தார்.

இதையும் மீறி அமெரிக்க அரசு, உலக வங்கி ஆகியவை காரணமாக உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் பயிர்களை அன்றைய விவசாய அமைச்சரான சி.சுப்ரமணியத்துடைய ஒப்புதலுடன் இந்தியாவில் அனுமதித்தது. இந்த இடத்தில் போர்டு நிறுவனத்துடனான நேருவின் உறவும் குறிப்பிடப்பட வேண்டியது ஆகும். இதனிடையே உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம் தன்னுடைய பயிர்கள் அனைத்தும் ஒன்றின் பின் ஒன்றாக பூச்சிகளுக்கு இரையாவதை தொடர்ந்து மிக பெரிய சரிவை நோக்கி சென்றது. உலகுக்கே படியளக்கும் என்று புனையப்பட்ட பயிர் வகைகள் பயன் அளிக்காததை சுவாமிநாதன் கூட Mazingira என்னும் இதழில் பதிவு செய்ய வேண்டி இருந்தது.

பாரம்பரிய பயிர்களைக் கொண்டு புதிய உயர்ரக விளைச்சல் பயிர்கள் உருவாக்கினால் மட்டுமே அழிவில் இருந்து மீள முடியும் என்ற நிலை உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு உருவானது. அதற்கு தேவையான பாரம்பரிய அரிசி வகைகளின் கூட்டம் இந்தியாவில் இருந்தது. உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் தூண்டுதல் காரணமாக மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திருந்து கட்டாய ஒய்வு கொடுக்கப்பட்டதை எதிர்த்து வழக்கிட்டு வென்றிருந்த ரிச்சாரியா மத்திய பிரதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்தினார். இந்த நிறுவனம் சுமார் 19,000 பாரம்பரிய பயிர்களை கொண்டிருந்தது. இந்த பயிர்களை ஆராய்வதற்காக உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம் கேட்டபோது அதனை ரிச்சாரியா மறுத்தார்.

உடனடியாக உலக வங்கியின் 4 கோடி மதிப்பிலான அரிசி ஆராய்ச்சி திட்டத்தின் காரணமாக மத்திய பிரதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் மூடப்பட்டது. உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் தொடர்புடையவரான அப்பொழுதைய மத்திய பிரதேச செயலாளர் தலைமையிலான கூட்டம் இந்த முடிவை எடுத்தது. மத்திய பிரதேச அரிசி ஆராய்ச்சி நிறுவன சேமிப்பில் இருந்த பயிர் வகைகள் Jawaharlal Nehru Krishi Vishwa Vidyalaya என்ற பல்கலைகழகத்திற்கு மாற்றுவதாகவும் முடிவானது. பின்னர் இந்த பல்கலைகழகத்தின் துணை ஆளுநர் உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறக்கட்டளை உறுப்பினராக ஆனார். அதன் தொடர்ச்சியாக விஞ்ஞானிகளுக்கு பயிர்களின் மரபணுக்களை இடம் மாற்றம் செய்வது எப்படி என்பது உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தால் கற்றுக் கொடுக்கப்பட்டது.

இதன்படி மேற்கூறிய பல ஆயிரம் பயிர் வகைகள் மரபணுக்களாக உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இந்திய நாட்டு விஞ்ஞானிகள் மூலம் கொள்ளை கொடுக்கப்பட்டது. இதனை 1982ல் JNKVV வை சார்ந்த ஸ்ரீவஸ்தவா உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தை சார்ந்த சீனிவாசனுக்கு எழுதிய கடிதம் மூலம் அறியலாம். இந்த மரபணுக்களை கொண்டு பல புதிய பயிர்கள் உருவாக்கப்பட்டது. இன்று பன்னாட்டு நிறுவனங்கள் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை மீண்டும் நம்மிடமே விற்பனை செய்கின்றன.

இந்த கொள்ளையில் பின்புறம் இருந்து பணியாற்றியவர் திரு எம்.எஸ்.சுவாமிநாதன். தான் வகித்து வந்த அமைச்சரவைக்கான அறிவியல் ஆலோசனை குழுவின் தலைவர் பொறுப்பில் இருந்தும், திட்ட கமிசன் துணை தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகி (இதற்கு முன்பு வேளாண் அமைச்சகத்திற்கு செயலாளராகவும் இருந்துள்ளார்) உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் பொது இயக்குராக இணைந்த பின்தான் இந்த கொள்ளை நடந்தேறியது. இவ்வாறு பல முக்கிய பொறுப்பில் பண்யாற்றிய, நாட்டில் உணவு சார்ந்த அறிவியல் இரகசியங்களை அறிந்த விஞ்ஞானி தனியார் நிறுவனங்களால் நடந்தப்படும் நிறுவனத்தில் இணைவது என்பது உலகில் வேறு எந்த நாட்டிலும் நடந்திடாத ஒன்று.

மேற்கூறிய இந்த தகவல் அனைத்தையும் 1986 ஆம் ஆண்டு ஆங்கில இதழ் ஒன்றில் பதிவு செய்த கால்டு அல்வாரிஸ் இப்படி சுவாமிநாதனை பற்றி இன்னும் ஒரு தகவல் தருகிறார். என்சைக்ளோபீடியா பிரிட்டானியா வெளியிட்ட Science and The Future 1979 ஆண்டு மலரில் உள்ள கட்டுரை சுவாமிநாதனை இன்னும் இரண்டு விஞ்ஞானிகளோடு சேர்த்து முன்ணனி விஞ்ஞான மோசடியர்கள் (Scientific Frauds) என்று குறிப்பிட்டுள்ளது என்பது தான் அது.

இன்று இதே சுவாமிநாதன் அமெரிக்க பன்னாட்டு நிறுவன கூட்டணி இராண்டாம் பசுமை புரட்சிக்கு தயாராகிவிட்டது. இந்திய அமெரிக்கா இடையே 123 ஒப்பந்தம் 2005 ஆண்டு அறிவிக்கப்பட்ட அன்றே இன்னொரு ஒப்பந்தமும் அறிமுகமானது. “இந்திய அமெரிக்க வேளாண்மைக் கல்வி, ஆராய்ச்சி, சேவை மற்றும் வணிக தொடர்பிற்கான அறிவு முனைப்பு” என்கிற இந்த ஒப்பந்தம் முதலாம் “பசுமைப் புரட்சியின்” வெற்றியை (!?) தொடர்ந்து “என்றென்றும் பசுமைப் புரட்சியை” ஏற்படுத்துவதற்காக வரையப்பட்டுள்ளது. ஆனால் பழைய பசுமைப் புரட்சி போல நிறுவனங்கள் பின்னாலும் அரசு முன்பாகவும் இருந்து செயல்படாமல், இந்தப்புதிய “என்றென்றும் பசுமைப் புரட்சி”யானது நேரிடையாக தனியாருக்கும் இடம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் ஆர்ச்சர் டேனியல்ஸ் மிட்லேன்ட், வால்மார்ட், மான்சான்டோ போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் முதல், நம்நாட்டு வெங்கடேஸ்வரா, மாசானி பன்னை, ஐ.டி.சி, ரிலையன்ஸ் நிறுவனம் வரை இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்திய அமெரிக்க வேளாண்மை ஒப்பந்தத்தில் முக்கிய பகுதியாக இரு நாடுகளை சார்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்கள் கூட்டாக சேர்ந்து இயற்கைவளங்களின் உயிரியல் மரபணுவை ஆராயப் போகின்றன. அமெரிக்காவின் இயற்கை வளங்களை இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஆராய்வதற்கான வழிகள் எதுவும் ஒப்பந்தத்தில் இல்லாத நிலையில் இந்தியாவின் இயற்கைவளங்களே ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் என்பதை கூறத் தேவையில்லை. இந்த ஆராய்ச்சி செய்கின்ற போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கொண்ட பல்உயிரின ஒப்பந்தத்தைப் பற்றி ஒரு வரி கூட இந்திய அமெரிக்க வேளாண்மை ஒப்பந்தத்தில் இல்லை.

இந்திய அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் வேளாண்மை துறையை வணிகமயமாக்க, அறிவுசார் சொத்துரிமையின் தேவையை வலியுறுத்துகிறது. குறிப்பாக வேளாண்மை துறையில் காப்புரிமையின் அவசியத்தை முன்வைக்கிறது. இந்திய அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் நம் நாட்டு வேளாண்மை விஞ்ஞானிகளுக்கு அமெரிக்கா மரபணுமாற்று தொழில்நுட்பத்தை மட்டுமல்ல; எப்படி காப்புரிமை பெறுவது என்பதையும் கற்றுக் கொடுக்க போகிறது. காப்புரிமை பெறுவது மட்டுமல்ல அதனை பன்னாட்டு மற்றும் இந்நாட்டு நிறுவனங்களிடம் எப்படி விற்பது என்பதையும் கற்றுக் கொடுக்கப்போகிறது.

இதற்காக அமெரிக்காவில் மட்டுமல்லாமல், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையம் கூட அறிவு சொத்துரிமைக்கான மேலாண்மை (Intellectual Property Management) என்ற சிறப்புப் பிரிவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காப்புரிமை உள்ளிட்ட அறிவு சொத்துரிமைச் சட்டங்கள் மீறப்படாமல் இருப்பதை கண்காணிக்க இந்தியா அமெரிக்கா இடையே ஒரு தனி ஒப்பந்தமும் (Memorandum of Understanding) 2006 ஆம் ஆண்டு கையெழுத்து ஆகியுள்ளது. ஆக, இந்திய விஞ்ஞானிகள், நம்நாட்டு விதைகளை எடுத்து அதன் மூலக்கூறுகளை ஆராய்ந்து புதிய பொருட்களை கண்டறிந்து, அதற்கு காப்புரிமை பெற்று அமெரிக்க நிறுவனங்களிடம் விற்பதற்கான இந்த ஒப்பந்தத்திற்கு, நம் நாட்டு மக்களிடம் பெற்ற வரிப்பணம் சுமார் ரூபாய் 3500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

நம்நாட்டு சட்டங்கள் மற்றும் பன்னாட்டு ஒப்பந்தங்களுக்கு எதிராக இயற்கை வளங்களை எளிதில் ஆராய்ச்சி செய்ய அனுமதி அளிப்பதன் மூலம் காலம் காலமாக இவற்றை பாதுகாத்து வரும் நம் மக்களிடமிருந்து இவற்றை அமெரிக்கா கொள்ளையடிக்க இந்த ஒப்பந்தம் துணைபோகிறது. அது மட்டுமல்லாமல் இப்படி ஆராய்ந்து (!) கண்டுபிடிக்கப்படும் பொருட்களுக்கு காப்புரிமை வழங்குவதன் மூலம் தற்போது பொதுச் சொத்தாக உள்ள இயற்கை வளங்களை, அமெரிக்க மற்றும் பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் விதைகள் மீதான சர்வாதிகாரத்திற்கு துனைபோகிறது இந்த ஒப்பந்தம் அனுமதியளிக்கிறது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் குடிமக்களுக்கு வழங்கி உள்ள பல அடிப்படை உரிமைகளில் உயிர் வாழ்வதற்கான உரிமை மிகவும் முக்கியமானது. உயிர் வாழ்வதற்கான உரிமை என்பது சத்தான உணவை உள்ளடங்கியது என்று உச்ச நீதிமன்றம் 80 களிலேயே கூறிவிட்டது. இந்த ஒப்பந்தம், வேளாண்மை நிறுவனமயமாவதற்கு மட்டுமே உதவும். மரபணு மாற்று பயிர்களை பெரு நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பயிரிட்டு ரிலையன்ஸ் பிரஷ், வால்மார்ட் போன்ற விற்பனை கூடங்களுக்கு விற்பனைக்கு வைக்கப் போகின்றன. பல மாதங்கள் ஆனாலும் கெடாமல் இருக்க செயற்கையாக நிறமூட்டப்பட்ட இந்த காய்கறிகளைத்தான் இனி நாம் உண்ணப்போகிறோம். இந்த விவசாய சிறப்பு பொருளாதார மண்டலங்களின் விவசாயம் செய்ய புதிய வகை விவசாய கூலிகளையும் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தபோகிறது.

காப்புரிமை பெற்ற இப்பயிர்களை விவசாயிகள் அதிக விலைகொடுத்து பயிர் செய்யவேண்டும், மேலும் மலட்டுதன்மை மிக்க இந்த பயிர்கள் மீது விவசாயிகளுக்கு எந்த உரிமையும் இருக்க போவதில்லை. ஆக உணவு உற்பத்திக்கே நாம் இனி நிறுவனங்களை தான் நம்பியிருக்க வேண்டும். உலகிற்கு உணவளித்த உழவர்கள் இனி தாங்கள் உண்ணும் உணவுக்கு வெளிநாட்டு நிறுனங்களிடம் கையேந்தும் அவலத்துக்கு என்னதான் தீர்வு?