உங்கள் குழந்தையின் பள்ளி ஆசிரியர் ஒரு நாள் உங்களிடம் வந்து உங்கள் குழந்தை வகுப்பில் உள்ள இன்னொரு குழந்தையின் பென்சிலைத் திருடி விட்டான் என்று சொல்லும்போதோ, அல்லது பக்கத்து வீட்டுக்காரர் Ôஉங்கள் பையனைக் கொஞ்சம் கண்டித்து வையுங்கள். எங்கள் பையனுக்கு புதிதாக வாங்கிக் கொடுத்த செல்ஃபோனைத் திருடிக் கொண்டான்' என்று சொல்லும்போதோ பெற்றவர்களாகிய உங்களின் மன நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். குற்ற உணர்வும் அவமானமும் உங்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கும். பொய் சொல்லுவதையாவது கொஞ்சம் பொருத்துக்கொள்ளும் சமூகம் திருடுவதை அவ்வளவாகப் பொருத்துக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை.

சிறு குழந்தைகளை வெளியில் அழைத்துக்கொண்டு போகும் போதோ அல்லது மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போதோ, சட்டென்று தங்களைக் கவரும் பொருள்களை எடுத்துக் கொண்டு எவ்வளவுதான் திருப்பிக்கொடுத்துவிடு என்று சொன்னாலும் கொடுக்க மாட்டார்கள். அது நம்முடையது இல்லை என்று சொன்னாலும் கேட்க மாட்டார்கள். களேபரப் படுத்தி விடுவார்கள். ஒரு குழந்தை அடுத்தவரின் பொருள் மீது ஆசைப்பட்டு எடுத்துக்கொண்டு விட்டது என்பதால் உடனடியாக நாமும் அந்தக் குழந்தையைத் திருடன் என்றும் சொல்லிவிட முடியாது.

child stealingதிருடுதல் என்றால் என்ன?

திருடுதல் என்பதற்கு அடுத்தவரின் பொருளை அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு, அப்பொருள் தன்னுடையது என்று உரிமை கொண்டாடுவது என்று பொருள் கொள்ளலாம். அடுத்தவரின் பொருளை எடுப்பதை விடவும் அதற்கு உரிமை கொண்டாடுவது மிகவும் தவறாகிறது.

உரிமை கொண்டாடுதல் பற்றி குழந்தைக்குத் தெரியுமா?

குழந்தைகளுக்கு மூன்று வயதுக்குப் பிறகுதான் ஒரு பொருள் தன்னுடையதா இல்லையா என்று அறியும் தன்மை வருகிறது. பெற்றோர்களும் சமூகமும் அவர்களுக்கு 'பொருள்களின் மீது உரிமை கொண்டாடுதல் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக் கொடுக்கும் போது குழந்தைகளும் புரிந்து கொள்கிறார்கள். இந்தப் பொருள் நம்முடையது, இந்தப் பொருள் நம்முடையது இல்லை, அதனால் இதை நாம் வைத்துக்கொண்டு உரிமை கொண்டாட முடியாது. உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். நமக்குத் தேவையென்றால் நாம் வேறு வாங்கிக் கொள்ளலாம்' என்று ஒவ்வொரு முறையும் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லும்போது அவர்களும்' உரிமை கொண்டாடுதல்' என்ற இந்த பண்பைக் கற்றுக் கொள்கிறார்கள். மேலும் அந்தப் பொருளை அடைய வேண்டும் என்றால் பணம் கொடுத்துக் கடையில் வாங்க வேண்டும் என்றும் சொல்லும்போது பணத்தின் முக்கியத்துவம் பற்றியும் சொல்லிக் கொடுத்து விடுகிறோம். ஒரு ஐந்து வயதுக்குள் இதைச் சொல்லிக் கொடுக்க முடியவில்லை என்றால் பின்னாளில் மிகவும் சிரமப்பட்டுத் திருத்த வேண்டியிருக்கும்.

ஏன் திருடுகிறார்கள்?

எந்த சூழ்நிலையில் இருக்கும் குழந்தைகள் திருடுவதைத் தொடர்ந்து செய்கிறார்கள் என்று பார்ப்போம். இன்னொரு குழந்தையிடம் இருக்கும் பொருள் தன்னிடம் இல்லை என்று பார்க்கும் குழந்தை ஒரு உந்துதலில் அந்தப் பொருளை எடுத்துக் கொண்டு விடுகிறது. வீட்டில் தன்னை யாரும் அங்கீகரிக்க மாட்டேன் என்கிறார்களே என்று ஏங்கும் குழந்தையும் சட்டென்று ஒரு பொருளை எடுத்து வைத்துக்கொண்டு இப்போதாவது பெற்றோர்கள் தன்மீது பார்வையைத் திருப்புகிறார்களா என்று எதிர்பார்க்கிறது. மேலும் குழந்தைகள் வளரும் குடும்ப, சமூகச் சூழல் சரி­யில்லாதபோது, அங்கே திருடுவது ஒரு குற்றமாகப் பார்க்க்கப்படாத போது, குழந்தைகள் இந்தப் பழக்கத்தைத் தொடரும் நிலை வந்து விடுகிறது. ஒரு சில பெற்றோர்கள் குழந்தையின் இப்பழக்கத்தைப் பெருமையாகப் பேசும்போது அதைக் கேட்கும் குழந்தைக்கு மீண்டும் செய்யத் தோன்றுகிறது.

குழந்தைகள் வளர்ந்து பதின்பருவத்தை அடையும்போது அவர்களின் கூடா நட்பு வட்டமும் இப்பழக்கம் மேலும் வளர உதவி செய்து விடுகிறது. மது, போதை, புகை என மற்றப் பழக்கங்களும் சேர்ந்து கொண்டு இளங்குற்றவளி என்ற நிலைக்குப் போகும்போது சமுதாயமும் தண்டித்து விடுகிறது.

இங்கே ஒரு விசித்திரமான திருட்டுப் பழக்கம் பற்றி சொல்ல வேண்டும். சிறு வயதில் இருந்தே சட்டென தங்களைக் கவரும் பொருள்களை எடுக்கும் பழக்கம் சிலருக்கு பின்னாளிலும் தொடர்ந்து விடுகிறது. இவர்கள் எடுக்கும் பொருள்களால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்றாலும் ஒரு வகையான மன உந்துதலில் எடுத்து வைத்துகொண்டு மகிழ்ச்சியடைவார்கள். மனதுக்குள் ஒரு கிளர்ச்சி வரும். அந்த உணர்வுக்காகவே மீண்டும் மீண்டும் எடுக்கிறார்கள். மருத்துவ உலகம் இதை கிளப்டோ மேனியா (ரிலிணிறிஜிளிவிகிழிமிகி) என்கிறது. அவ்வப்போது மீடியாக்களில் இந்த கிளப்டோமேனியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் பிரபலங்கள் கடைகளில் பொருட்களை எடுத்துவிட்டு மாட்டிக் கொண்ட செய்திகளைப் பார்க்கலாம்.

பெற்றோர்கள் என்ன செய்யலாம்?

மூன்று வயதுக்குப் பிறகு, குழந்தை அடுத்தவர் பொருளைத் திருடிக்கொண்டு வந்து விட்டால் என்ன செய்வது? உடனடியாகக் குழந்தையிடம் விளக்கிப் பேசுங்கள். உனக்குப் பேனா வேண்டும் என்றால் நாம் வாங்கிக் கொள்வோம். முதலில் இந்தப் பேனாவை எடுத்தவர்களிடமே போய்க் கொடுத்து விடுவோம். இனிமேல் எடுக்க மாட்டேன். மன்னித்து விடுங்கள் என்று கேட்போம் என்று குழந்தையிடம் பேசுங்கள். இப்படி அடுத்தவர்கள் பொருளை எடுப்பது தவறு என்று கண்டிப்பாகவும் உறுதியாகவும் சொல்லுங்கள். இந்த வாய்ப்பை குழந்தைக்கு நேர்மையை சொல்லிக் கொடுக்க உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள்.

எக்காரணம் கொண்டும் அடித்துத் தண்டனை கொடுக்க வேண்டாம். திருடன் என்று முத்திரை குத்த வேண்டாம். இப்படிச் செய்தால் நம் பெற்றோர்கள் அனுமதிக்க மாட்டார்கள். திருப்பித் தரச் சொல்லி விடுவார்கள் என்று குழந்தைகள் உணர்ந்து கொள்வார்கள். அவ்வப்போது குழந்தைகளிடம் இருக்கும் புதுப்புதுப் பொருள்களைக் கொஞ்சம் ஓரக்கண்ணால் பார்த்து, அந்தப் பொருள் எப்படி வந்தது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அடிக்கடி பிறரின் பொருளைத் திருடிக் கொள்ளும் பழக்கம் இருக்கும் குழந்தையிடம் சற்று அதிகமாகக் கவனம் வைக்க வேண்டும். இம்மாதிரியான வாழ்க்கை நெறிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கும் போது வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் ஒரே வகையான அளவுகோலை உபயோகிக்க வேண்டும்.

பதின்பருவத்தினருக்கு இப்பழக்கம் இருக்கும் போது கூடவே உடல்மொழி மாற்றம், முரட்டுத்தனம், புகை, போதை என மாறி விடுகிறார்கள். இவர்களிடம் பெற்றோர்களின் அறிவுறுத்தல், சமுதாயத்தின் திருத்தல் முயற்சி என்று எதுவும் பலனளிக்காமல் போகும் போது மனநல மருத்துவரிடம் செல்லும் நேரம் வந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

- மருத்துவர் ப.வைத்திலிங்கம், குழந்தைகள் நல மருத்துவர்

Pin It