இயலிலும் இசையிலும் முத்திரை பதித்த கவி கா.மு. ஷெரீப் நாடகத்திலும் தம் பார்வையைச் செலுத்தியுள்ளார்; குறிப்பிடத்தக்க நாடகங்களைப் படைத்து நாடக இலக்கியத்திலும் முத்திரை பதித்து அவர் முத்தமிழ்க் கவிஞராகத் திகழ்கிறார்.

மன்னவன் காதலி, புதுயுகம், புலவர் புகழேந்தி, தாயுமானவர், பெண் தெய்வம் (பாசம் தந்த பரிசு), பொற்கொடி முதலிய உரைநடை நாடகங்களைக் கவிஞர் எழுதி வெளியிட்டுள்ளார்.

புதுயுகம்

‘புதுயுகம்’ எனும் நாடக நூலைக் கவிஞர் 1953 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டுள்ளார். இந்த நாடகத்தில் 44 காட்சிகள் உள்ளன. சேகர், செல்லம், ரெகுநாதன், சப் இன்ஸ்பெக்டர், லேடி டாக்டர், வள்ளி, முருகன், விநோதன், வயோதிகர், முத்துப் பண்டாரம், புஷ்பா, நோஞ்சான், ராஜா, கமலா ஆகிய பல பாத்திரங்கள் இந்நாடகத்தில் இடம்பெற்றுள்ளன.

ka mu sherif‘புதுயுகம்’ என்ற இந்த நூலிலே, மனித சமுதாயம் ஏக குரலில் ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு தத்துவம், கருவூலம் கொண்டிருக்கிறது என்று கவிஞர் குறிப்பிடுகிறார்.

இந்த நூலை எந்தக் கட்சிக்காரரும் - எந்தப் ‘பாலி’னரும் பகிரங்கமாகப் படிக்கலாம். தனிப்பட்ட தாக்குதல்களோ ஆபாசப் பகுதிகளோ இதில் துளியும் கிடையாது.

கதாபாத்திரங்கள் எல்லாம் சுயேட்சையாகத் தோன்றுகிறார்கள். சுயேட்சையாக உலவுகிறார்கள். சுயேட்சையாகப் பேசுகிறார்கள். ஆனால், சேகர் மட்டுமே பருவத்தின் கோளாறால் சிந்திப்பின்றி நடந்து தீமை புரிந்து விடுகிறான். என்றாலும் கடைசி வரையிலும் அவனும் தீயோனாகவே இருந்துவிடவில்லை. கதாபாத்திரங்கள் அனைத்தும் என் சொந்தச் சிருஷ்டியே எனினும், ‘நோஞ்சா’னே எனது விருப்பத்திற்குரியவன். காரணம் அவனைப் போன்ற அப்பாவிகளை - கபடமற்ற உள்ளம் படைத்தோர்களைக் - காண்பது அரிதாக இருக்கிறது.

படித்த பெண்கள் முழுமைக்கும் என்று சொல்லாவிட்டாலும் ஒரு சிலருக்காவது பிரதிநிதித்துவம் பெற்று விளங்குகிறாள் கமலா. படித்த பெண்கள் முழுமைக்கும் இவள் போன்றோர் பிரதிநிதிகளாக ஆகிவிடக் கூடாதென்பதற்காகவே இவள் இக்கதையில் இடம் பெற்றிருக்கிறாள்.

‘புஷ்பா’வின் பிறப்புக்கள் சமுதாயத்திலிருந்து வேரறுக்கப்பட வேண்டும். ‘ரெகுநாதன்’ தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும். தவணைக் கடை ‘ச.க.’ போன்றோர்களின் இருதயங்கள் மாற வேண்டும் என்பதை விளக்கவே இவர்களும் கதையில் வருகிறார்கள்.

‘செல்லம்’ நமது நாட்டில் - நம் கண்முன் நடமாடும் ஓர் உருவம். இவள் போன்றோருக்காக இன்று நாடே பரிதாபப்படுகிறது.

முருகன் - வள்ளி, ராஜாவின் பாட்டனாக வரும் வயோதிகர் போன்றோர்களை இன்னும் நமது ‘ராஜா’ நிலைக்குத்தானே வந்து விடுகிறார்கள்? இதை இளைஞர் உலகம் மாற்ற முற்பட வேண்டும். குறிப்பாக நாம், புதுயுகத்தை நாடி முன்னேற வேண்டும். இந்த வழியில் பாடுபட வருபவர்கள் புகழ்ச்சிக்கு அடிமையாகிவிடக் கூடாது.

“புகழ்ச்சியிருக்குதே அதுக்குள்ள போதை

வேறு எதுக்குமே கிடையாது! ஒரு தடவை

கேட்கும்போது மனிதன் சந்தோஷப்படுகிறான்.

மறுதடவை கேட்கும்போது மயங்கி

விடுகிறான். அப்புறம் அவனிடத்திலுள்ள

அனைத்தையும் கொள்ளையடித்தாலும்

அவனுக்குப் புரிவதேயில்லை.....”

இது இந்நூலில் வரும் தோட்டி முருகனின் வசனம், பொதுநல ஊழியர்கள் புகழ்ச்சிக்கு அடிமையாகிவிட்டால், மனித சமுதாயம் வேலியற்ற பயிராகிவிடும் என்பது எனது முடிவு. ஆகவே, எனது கருத்துக்களின் முன்னோட்டமாக இந்நாடக நூலை எழுதினேன். இதை, குணச்சித்திர நடிகரான திரு. எஸ்.வி. சுப்பையா அவர்கள் பெரும் முயற்சியும் சிரமமும் மேற்கொண்டு, தானும் பங்கேற்று நடித்த நடந்த 1.11.1952 இல் விழுப்புரம் விஜயலட்சுமி தியேட்டரில் அரங்கேற்றினார். பார்த்த மக்கள் பாராட்டினார்கள். என் கருத்துச் சிதையாமல் நாடகம் நடத்திக் காட்டிய நடிகர் திரு. எஸ்.வி. சுப்பையா அவர்களை நான் மறக்க முடியாது.

புதுயுகத்தைப் போல மிகக் குறுகிய காலத்தில் படவுலகு புகுந்த நாடகம் வேறு எதுவுமில்லை. 1.11.1952 இல் அரங்கேற்றப்பட்ட புதுயுகம் 3.11.1952 இல் பிரபல மியூஸிக் டைரெக்டரான உயர்திரு

ஜி.ராமநாத ஐயர் கண்களில் பட்டது. 4.11.1952 இல் என்னுடன் பேசி ஒப்பந்தம் செய்துகொண்டு தனது சொந்தப் பொறுப்பில் ஸ்ரீசாயி கானாம்ருதா பிக்சர்ஸ் என்று ஒரு படக்கம்பெனியையும் ஆரம்பித்து 9.11.1952 இல் சென்னை சியாமளா ஸ்டுடியோவில் ஷூட்டிங்கைத் தொடங்கிவிட்டார்! இன்று புதுயுகம் படமாக வளர்ந்து முடியும் தறுவாயிலிருக்கிறது. என் கதையை நாடகமாக நடித்துக்காட்டிய திரு. சுப்பையா அவர்களைப் போல் படமாகத் தயாரித்து வெளியிட முன்வந்த உயர்திரு ஜி. ராமநாத ஐயர் அவர்களுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று கவிஞரே பலவாறு இந்நூல் குறித்துக் குறிப்பிடுகிறார்.

மன்னவன் காதலி

‘மன்னவன் காதலி’ எனும் நாடகத்தையும் கவிஞர் இயற்றியிருக்கிறார். 42 காட்சிகள் இந்நாடகத்தில் உள்ளன.

வளநாட்டு மன்னன் வளவன் மாறன், வளநாட்டு அமைச்சன் அறிவுடை நம்பி, வளநாட்டு அரசவை உறுப்பினன் அன்பரசன், வளநாட்டுத் தளபதி, நல்லூர் கிராமத் தலைவன் மகன் பின்னாள் வளநாட்டுத் தளபதி அழகு வேட்கை, நல்லூர்க் கிராமத்தலைவன் முதியவன் அம்பலம், புறவளநாட்டு மன்னன் பெருங்கணைவேள், அன்பு நாட்டரசன், அன்பு நாட்டு மிட்டாதார், அழகு வேட்கையின் ஆட்களான வேழம், நாகம், வளவன் மாறனின் காதலி மல்லிகா, மல்லிகாவின் தாய் தனலட்சுமி, மிட்டாதாரின் வேலைக்காரி முத்தம்மாள், நாகத்தின் மனைவி அரும்பு ஆகியோருடன் வேழத்தின் மனைவியும் அரண்மனைப் பணிப்பெண்களும் சேவகர்களும் இந்நாடகத்தின் பாத்திரங்களாகக் கவிஞரால் படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நாடகத்தின் தோற்றத்தைக் குறிப்பிடும் கவி கா.மு. ஷெரீப், “இல்லாத கதாபாத்திரங்கள் மேல், நாட்டில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை ஏற்றி நூல் செய்கின்ற வழக்கொன்று உண்டல்லவா அந்த முறையையொட்டி - அந்தக் காலச் சூழ்நிலைச் சம்பவங்களைப் புனைந்து, இந்தக் கதை அமைக்கப்பட்டது. மேலும் எட்டாம் எட்வர்டு மன்னன் காதலுக்காகச் சக்கரவர்த்திப் பதவியைத் துறந்த செய்தி, மக்கள் மனத்தில் ஆழப் பதிந்திருந்த காலத்தில் இந்த நாடகம் எழுதப்பட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்வது அவசியமாகிறது” என்று குறிப்பிடுகிறார்.

பெண்தெய்வம் (பாசம் தந்த பரிசு)

1954 ஆம் ஆண்டு கவிஞரால் எழுதப்பட்ட ‘பெண் தெய்வம்’ என்ற இந்நாடகம் மயிலாடுதுறையில் முதன் முதலில் அரங்கேற்றப்பட்டது. தமிழகத்து ஊர்களில் இந்நாடகம் வாரக் கணக்கில் நடத்தப்பட்டது. இதனை ஸ்ரீதேவி நாடக சபையினர் 1960களில் நடத்திக் கொண்டிருந்தனர். திருச்சிராப்பள்ளி வானொலி நிலையமும் அந்நாளில் ஒன்றரை மணிநேர நாடகமாக இந்நாடகத்தை ஒலி பரப்பியது. நாடக நடிகர் பங்காரு சாமி முதன்முதலில் இந்நாடகத்தை மேடையேற்றினார். ‘பெண்தெய்வம்’ நூலாக 1962 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கவிஞரால் வெளியிடப்பட்டது. 55 காட்சிகளையுடைய இந்த நூலை ‘பாசம் தந்த பரிசு’ என மயிலாப்பூர் இன்ப நிலையம் அந்நாளில் வெளியிட்டது.

பெரிய மனிதர் நல்ல சிவம், அவரது மகள் லட்சுமி, லட்சுமியின் காதலன் குமார், குமாரின் நண்பன் மூர்த்தி, நரிக்குறவப் பெண் - மூர்த்தியின் மனைவி, ராணி - மூர்த்தியின் புதல்வி, மாலா - ராணியின் தோழி, மோகன் - குமாரின் மைந்தன், ஜானகிராமன், மோகனின் தோழன் முனியன், வேலைக்காரன் ஆகியோர் இந்நாடகத்தின் மாந்தர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர்.

புலவர் புகழேந்தி

கவி கா.மு. ஷெரீப் அவர்களால் 1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பெற்றது புலவர் புகழேந்தி நாடகம். 37 காட்சிகளையுடைய இந்நாடக நிகழ்வின் நிலைக்களங்களாக சோழ நாடு, பாண்டியநாடு, செஞ்சி ஆகியவை அமைந்துள்ளன.

சோழ இளவரசன் குலோத்துங்கன், சோழ நாட்டின் ஆட்சிப் பொறுப்பாளர் அவைக்களப் புலவர் ஒட்டக்கூத்தர், சோழ நாட்டமைச்சர் நாவுக்கினியர், சோழநாட்டுத் தளபதி வில்வல்லான், பாண்டிய நாட்டு மன்னன் வரகுண பாண்டியன், வரகுண பாண்டியனால் பாண்டிய நாட்டு அவைக்களப் புலவராகிச் சோழநாடு சென்ற தொண்டை நாட்டுப் புலவர் புகழேந்தி, பாண்டிய நாட்டமைச்சர் கொற்கைப்பதியார், சோழநாட்டு மகாராணி அரசமாதேவி, ஒட்டக்கூத்தரின் மனைவி கலாவல்லி, வரகுண பாண்டியனின் மகளும் குலோத்துங்கனின் மனைவியுமான தியாகவல்லி, பாண்டிய நாட்டு விறலி தியாகவல்லியின் தோழி கனிமொழி, ஒட்டக்கூத்தரின் அடைப்பக்காரன் எழுத்தாணி, எழுத்தாணியிடம் சீடனாகச் சேர்ந்த ஒரு அப்பாவியும் கவிதைப் பிரியனுமான மண்ணாங்கட்டி, ஒட்டக்கூத்தரின் சிறைக்கோட்டக் காவலன் சிங்கநாதன், செஞ்சிநாட்டு மன்னன் கொற்றந்தை ஆகியோருடன் பாண்டிய நாட்டுப் புலவர்கள், சோழநாட்டுப் புலவர்கள், காவலர்கள், தூதுவர்கள், பொதுமக்கள் இன்னும் பலரும் நாடக மாந்தர்களாகக் கவிஞரால் படைக்கப்பட்டுள்ளனர்.

“இயக்குநர் திரு.கே.எஸ்.கோபால கிருஷ்ணன் அவர்கட்காக 1970 இல் புலவர் புகழேந்தியின் வரலாற்றைத் திரைக்கதை அமைப்புச் செய்தேன். அது மிக விரிவானது. செலவு அதிகமாகும் என்பதால் திரைப்பட ஆக்கம் நடைபெற்றிடவில்லை. அந்தத் திரைக்கதை அமைப்பின் சுருக்கமே இந்த நாடகம். விரிந்த கடல் ஒன்றைச் சிறிய குளமாக்குவது போன்ற முயற்சி’” என்று குறிப்பிடுவதுடன் தொடர்ந்து கவிஞர் பல குறிப்புகளையும் தருகிறார்.

‘சென்னையில் உள்ள ரயில்வே முத்தமிழ் மன்றத்தார் இரண்டாண்டுகட்கு முன்னர் இவ்வாறு சுருக்கி அமைத்து, இந்த நாடகத்தை நடத்தினார்கள். இரண்டு மணி நேரத்திற்குள் நாடகம் நடந்து முடிவதைத்தான் சென்னை ரசிகர்கள் விரும்புகிறார்கள். இரவு ஏழு மணிக்குத் துவக்கி ஒன்பது மணிக்குள் நாடகம் முடிந்துவிட வேண்டும். செலவுச் சிக்கனம் கருதி, பெண் பாத்திரங்களையும் காட்சி ஜோடனைகளையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்திட வேண்டும். இந்த நாடகத்தில் அது நடத்திருப்பதைக் காணலாம். அரண்மனைக் காட்சிகள், ஆலயங்களின் காட்சிகள், துறைமுகக் காட்சிகள், நகரலங்காரங்கள், வீரர்கள் அணி, வில் பயிற்சி, வாள் பயிற்சி, போர்ப்பயிற்சி, நடனங்கள், வீரசாகசச் செயல்கள் போன்றவை இடம்பெற்றிடவில்லை. புலவர்கள் அணியும் பெரிதாக்கப்படவில்லை. அவ்வாறிருந்தும் இந்த நாடகம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் காரணமாகவே இது நூல் வடிவம் பெற்றுள்ளது’ எனச் சுட்டுகிறார்.

‘புலவர் புகழேந்தியின் காலம் கி.பி.1200 என்பர். இக்காலத்தே பெரும்புலவர் பலர் வாழ்ந்ததாகவும் கூறுவர். ஆனால், இந்த நாடகத்தில் அவர்களின் பெயர்கள்கூட இடம் பெற்றிடவில்லை. ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் மட்டுமே இடம் பெற்றால் போதும் என்கின்ற முடிவில் நாடகம் ஆக்கம் பெற்றுள்ளது’ எனும் கவிஞர், ‘புகழேந்தியை முதிய புலவராகவே இதுவரை கற்பித்து வந்துள்ளனர். ஏன் அவர் இளைஞனாக இருந்திடக் கூடாது? எனும் எண்ணம் என்னுள் எழுந்தது. அதன் விளைவாக இந்த நாடகத்தில் புகழேந்தி மணமாகா வாலிபராக வருகின்றார். புகழேந்திக்கும் ஒட்டக்கூத்தருக்கும் புலமைக் காய்ச்சல் இருந்தது. அதனாலேயே அவர்களிடையே மோதல்கள் நடைபெற்றன எனும் கதை முன்னர் உள்ளது. அதை மாற்றி வழக்குத் தமிழில் இலக்கியம் படைப்பதா என்பதில் அவ்விருவருக்குமிடையே மாறுபட்ட கருத்திருந்தது. அதுவே அவர்களின் மோதலுக்கு அடிப்படை எனக் கற்பித்திருக்கிறேன். இந்தக் கற்பனைக்கு நுகர்வாளரிடையே நல்ல வரவேற்பிருந்தது. அது நாடகத்திற்கு வலுவையும் ஊட்டிற்று. இக்கற்பனைக்கு அடிப்படை, அம்மானை நூற்கள் அனைத்துமே புலவர் புகழேந்தியின் பெயரால் திகழ்வதுதான்.

புலவர்களை ஆண்டுதோறும் துர்க்கைக்குப் பலியிட்டவரை சிறையிலடைத்துச் சித்திரவதை செய்தவர் என்றெல்லாம் ஒட்டக்கூத்தர் பற்றிக் கற்பனை வரலாறு உண்டு. ஆம், அது பாமர மக்கள் கட்டிய கற்பனை என்பதே என் கருத்து. எனினும், அந்தக் கற்பனையைத் தள்ளிடாமல் அதற்கோர் காரணத்தைக் கற்பித்துச் செம்மையான புலமையை, புலவர்களைத் தோற்றுவிக்கவும், தமிழின் மீது பயம் கலந்த பக்தி தோன்றிடவும் ஒட்டக்கூத்தர் நடித்த, நடத்திய நாடகமே அது என அவரைக் கொண்டே சொல்ல வைத்துள்ளேன். நான் செய்துள்ள இந்த மாற்றத்திற்கும் காரணம், தமிழ் நெஞ்சும் தமிழைக் கற்ற நெஞ்சும் கொலை நெறிப்பட்டதாக இருக்காது, இருந்திட முடியாது கூடாது என்பதே!

வரலாற்றை நான் மாற்றிடவில்லை. வரலாற்றுச் சம்பவங்கள் நடந்த விதத்தில் கற்பனைக் கலப்படம் உண்டு. இஃதொப்ப ரயில்வே முத்தமிழ் மன்றத்தினர் நடத்திய நாடகத்தைக் கூட்டவோ, குறைக்கவோ காட்சி மாறுதல்களோ செய்திடாமல் அவர்கள் மகிழ்ந்திடும் வகையிலேயே நூலாக்கம் செய்துள்ளேன்.

இக்கதை நடந்த காலத்தில் சோழநாடும் தொண்டை நாடும் புலமையில் மிகுந்திருந்தன என்பதைத் தமிழறிஞர்கள் அறிவார்கள். அந்த வரலாற்றுண்மையை இந்நாடகத்தில் பாண்டியன் வாயிலாகக் காணலாம்.

ஒட்டக்கூத்தர் புலவராக மட்டுமின்றி, புவியாளுவதில் திறமை மிக்க நிர்வாகியாகவும் இருந்ததாக அவர்தம் வரலாறு பேசும் உரையாடலில் இங்கே அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறைந்தது மூன்று மணி அளவிலேனும் நடத்தப்பட்டால் செப்பமான வரலாற்றுத் துலக்கமுடைய உயரிய இலக்கிய நாடகமாக இந்நாடகம் அமையும்’ என்றும் கவி கா.மு. ஷெரீப் இந்நாடகம் குறித்துக் குறிப்பிடுகிறார்.

ஓவியப் பாவலர் மு. வலவன் தம் ‘நெஞ்சத் திரையில் நினைவுக் கோடுகள்’ எனும் நூலில், “ஐயா அவர்கள் இந்நாடகத்தை எழுதியது கே.எஸ்.கோபாலகிருட்டிணன் தயாரிக்க இருந்த திரைப்படத்துக்காக, இப்படத்தில் ஒட்டக்கூத்தர் வேடத்தில் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் நடிப்பதாக இருந்தது. ஐயா அவர்களின் ‘பெண் தெய்வம்’ வெளிவராதது போல, இம்முயற்சியும் தோற்றுப் போய்விட்டது. என்றாலும் ஐயா அவர்களை அடிக்கடி நான் சந்தித்திட்டபோதெல்லாம் இத்திரைப்படக் கதை பற்றி என்னிடம் கூறி மகிழ்வார்கள். வெறும் திரைப்படக் குறிப்பாக இருந்த ‘புலவர் புகழேந்தி’ நாடகமாக உருவாகுவதற்கு தோழர் மா.ந. திருஞானசம்பந்தம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் சொல்லுந்தரமன்று.

ஐயா அவர்கள் எப்பொழுதும் எதிர்மறையாகவே சிந்தித்து எழுதுவார்கள். எல்லோரும் ஒட்டக்கூத்தரை ‘வில்லனாகவே’ பார்ப்பார்கள். ஐயா மட்டும், கூத்தரை நாயகனாக்கி, நாடகம் தீட்டினார். ஆனால் நாடகத்தின் தலைப்போ ‘புலவர் புகழேந்தி’ என்பது என்ன முரண்பாடு பார்த்தீர்களா! இலக்கியத்தில் இந்த முரண் அடைவதே ஒரு வெற்றி என்று இலக்கியத் திறனாய்வு நூல்கள் கூறும். இனி ஐயா அவர்களின் உரையாடல் தீட்டும் திறனுக்குச் சான்று பார்ப்போம். காட்சி 15 இல் காணும் உரையாடல் இது.

ஒட்டக்கூத்தர் (கோபத்துடன் எழுந்து) "இப்பொழுதும் சொல்கிறேன். என் உயிரின் மீது ஆணையிட்டுச் சொல்லுகிறேன்; தமிழிற்காக வாழ்பவன் நான்; தமிழின் உயர்விற்காகப் பாடுபவன் நான்; தமிழின் தரத்தைக் குறைப்பவர்களைக் கெடுப்பவர்களை நான் சும்மா விடமாட்டேன்”

ஒட்டக்கூத்தர் பேசவில்லை. நம் செரீபு ஐயா அல்லவா பேசுகிறார். அவர் வாழ்க்கை இலட்சியமே இங்கு நாடக வரிகளாய் நடை போடுவதைப் பார்க்கிறோம்.

ஐயா அவர்களின் இறுதிக் காலத்தில் உருவானது ‘புலவர் புகழேந்தி’ எனும் இலக்கிய வரலாற்றுக் கற்பனை நாடகம். அவர்கள் இளமையில் எழுதிய எத்தனையோ நாடகங்கள் நூல் வடிவம் பெறவில்லை. அவர்கள் எழுதிய சமூக நாடகம் ‘புதுயுகம்’ பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. ஐயா அவர்கள், என்னிடம் அந்நாளில் கூறிய மற்றொரு செய்தி, “அப்பொழுது தஞ்சாவூரில், திரு. ஏ.கே. வேலன் எழுதிய நாடகம் நடந்து கொண்டிருந்தது. மறுமுனையில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தார். வேலன் நாடகத்திற்கு வசூல் குறையத் தொடங்கியதால், நாடகக் கம்பெனியார் என்னிடம் வந்து முறையிட்டனர். நாடகத்தைப் பார்வையிட்ட நான், சில காட்சிகளை நீக்கி விட்டேன். சில காட்சிகளைச் சேர்த்தேன். நாடக முடிவையும் இன்பியல் முடிவாக மாற்றி விட்டேன். அதன் பின்னர் நாடகம் வெற்றி பெற்றது.

ஆனால் திரு. ஏ.கே. வேலனும், பாவேந்தர் பாரதிதாசனும், பகுத்தறிவுப் பிரச்சார நாடகத்தை நான் பாழ்படுத்தி விட்டதாகத் திட்டித் தீர்த்து விட்டார்கள் என்று நகைத்துக் கொண்டே, அவர்கள் சொன்னதை நினைவு கூருகிறேன். "இன்று தமிழ் நாடகத்துறை, முற்றிலும் ஆரியக் கலப்பால் பாழ்படுத்தப்பட்டுச் சீர்குலைந்து போயிற்று. நாடகம் என்ற போர்வையில் ‘நகைச்சுவைத் துணுக்குத் தோரணங்களே’ காட்சி அளிக்கின்றன. நவாப் இராசமாணிக்கம், தி.க. சண்முகம் போன்றோர் வளர்த்த நாடகக்கலை இன்று முற்றிலும் அழிந்து போனது காலத்தின் கோலமே” என்று அவர் குறிப்பிடுகிறார்."

இந்நாடகங்கள் தவிர ‘தாயுமானவர்’ எனும் நாடகத்தையும் கவிஞர் எழுதியுள்ளார். கவிஞர் எழுதிய ‘தாயுமானவர்’ எனும் வரலாற்று நாடகத்திற்குத் தமிழ் நாடு இயலிசை நாடக மன்றம் ரூ. 1500 பரிசளித்துள்ள குறிப்புள்ளது. தாயுமானவர் தவிர ‘பொற்கொடி’ எனும் நாடகத்தையும் இயற்றியுள்ள கவிஞர் அவ்வப்போது இயற்றி நடத்திய நாடகங்களையெல்லாம் நூலாக வெளியிடவில்லை. நாடக இலக்கியத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பினையாற்றியுள்ள கவிஞரின் நாடகத்திறனும் கதைத்திறனும் பாடற்றிறனும் எண்ணி மகிழத்தக்க வகையில் அமைந்துள்ளது. அவற்றினைப் போற்றுவதும் கொண்டாடுவதும் தமிழரின் தலையாய தமிழ்க் கடன்.

- பேராசிரியர் உ. அலிபாவா, தலைவர், தமிழியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்,

& அ. முகம்மது அசாருதீன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 620 024.

Pin It