கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்று நூலை முன்வைத்து...

நூல் அறிமுகம்

1978 ஏப்ரலில் தமிழில் முதல் பதிப்பாக வெளி வந்த நூல் இது. ஆங்கில நூல் அல்லது ரஷ்ய நூலின் முதல் பதிப்பு எப்போது வந்தது எனத் தெரியவில்லை. ஏ.சீனிவாசனின் தமிழ் மொழிபெயர்ப்பு. மறு அச்சாக இப்போது என்சிபிஎச் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. 1247 பக்கங்கள், மேலும் 55 பக்கங்களில் மார்க்சின் வாழ்வுடன் தொடர்புகொண்ட புகைப் படங்கள், 7 பக்கங்களில் பதிப்புரை ஆகியவற்றுடன் வெளிவந்துள்ளது. நூலின் உள்ளடக்கம் பற்றிய பகுதி மட்டுமே 8 பக்கங்களில் உள்ளது.

karl_marx_450கடந்த ஒரு சில வருடங்களில் என்சிபிஎச் நிறுவனம் மார்க்சினுடைய மூலதனம் நூல், ஜீவாவின் படைப்புகள், ஜீவா காலத்திய ஜனசக்தி தலையங் கங்கள், சிங்காரவேலர் சிந்தனைகள் தொகுப்பு, அம்பேத்கரின் நூல்கள் தொகுப்பு, சங்க இலக்கியங்கள் தொகுப்பு, உங்கள் நூலகம் என்ற மாதப் பத்திரிகை வெளியீடு எனப் பல அற்புதமான வெளியீடுகளைக் கொண்டு வந்துள்ளது என்ற பின்புலத்தைக் கொண்டு பார்க்கும்போது, கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு என்ற இந்த மிகப்பெரிய நூல் வெளி யீட்டின் முக்கியத்துவத்தையும் உணர முடிகிறது. முன்பதிவுத் திட்டத்திலேயே இந்நூலின் பெரும் பாலான பிரதிகளும் விற்றுப் போய்விட்டன என்ற செய்தியை அறியும்பொழுது, மார்க்சின் வாழ்க்கை, மார்க்சின் படைப்புகள் பற்றிய கூடுதல் அக்கறை தமிழில் தோன்றியுள்ளது என்று அனுமானிக்கலாம். மார்க்ஸ் பற்றிய இத்தகைய கூடுதல் அக்கறையைத் தமிழில் உருவாக்கியதில் என்சிபிஎச் நிறுவனத்திற்கு முதன்மையான பங்கு உண்டு என்ற வகையில் என்சிபிஎச் நிறுவனம் பாராட்டுக்குரியது. மார்க்சியம் நவீனத் தமிழ்ப் பண்பாட்டின் பிரிக்கவொண்ணாத ஒரு பகுதியாக உருவாகிக்கொண்டிருப்பதில் என்சிபிஎச்சின் பங்களிப்பு இது எனவும் மதிப்பிடலாம்.

இளம் மார்க்ஸ்/முதிய மார்க்ஸ் என்ற விவாதத் திற்குப் பதிலாக

இந்நூல் தனிப்பட்ட ஓர் ஆசிரியரால் எழுதப் பட்ட நூல் அல்ல. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்பது அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்களைக் கொண்ட ஒரு குழுவினால் கூட்டாகத் தயாரிக்கப்பட்ட அதி காரபூர்வமான வெளியீடாகவே இது உள்ளது. பழைய சோவியத் நூல்களின் இறுக்கம் இந்நூலிலும் உள்ளது. நூலின் மொழி, நடை, கோட்பாட்டுரீதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒற்றைப்போக்கு ஆகியவற்றில் இந்த இறுக்கத்தைக் காணமுடிகிறது. நூலின் அறிமுக உரையில் இளம் மார்க்சின் எழுத்துகள், முதிய மார்க்சின் படைப்புகள் ஆகியவற்றுக்கிடையில் முரண்பாடுகள் கற்பிக்கும் போக்குகள் பெருகி வரும் சூழலில் இப்படி ஒரு நூல் தேவைப்படுகிறது என்று இதன் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இளம் மார்க்ஸ், முதிய மார்க்ஸ் ஆகியோருக் கிடையில் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டும் போக்கு ஐரோப்பிய மார்க்சியரிடையில் இருத்தலியச் செல்வாக்கு கொண்ட எழுத்தாளர்களிடையிலும் இன்னொருபுறம் லூயி அல்த்தூசர் வகைப்பட்ட அறிஞர்களிடையிலும் தென்பட்டது என்பது உண்மை. ஆனால் மார்க்சியம் இருத்தலியத்தோடு நடத்திய உரையாடலும் லூயி அல்த்தூசர் மார்க்சியத்திற்கு வழங்கிய பங்களிப்பும் இன்று மார்க்சியத்தின் வளர்ச்சிப் போக்கில் படைப்புத்தன்மை கொண்ட வெளிப்பாடுகளாகவே கொள்ளப்படுகின்றன. எனவே அந்த விவாதங்களை அர்த்தமற்றவை என அடியோடு நிராகரிக்கும் அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்க முடியாது என்றே கருதுகிறேன். குறிப்பாக, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டின் மார்க்சியருக்கு இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் நடைபெற்ற மார்க்சிய விவாதங்கள் புறக்கணிக்க முடியாதவை.

இந்த இடத்தில் இந்நூலை நாம் எவ்வாறு வாசிப்பது? என்ற ஒரு கேள்வி நமக்கு முக்கிய மாகிறது.

மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரமல்ல, அது ஒரு வழிகாட்டி என்ற லெனினுடைய சொற் களை நாம் நினைவுக்குக் கொண்டுவரவேண்டியது இங்கு அவசியமாகிறது. இச்சொற்களை மார்க்சின் வாழ்க்கை வரலாற்றுக்குப் பொருத்திப் பார்க்கும் போது, மார்க்ஸ் என்ற மிகப் பெரிய அந்தப் புரட்சிக் காரரது வாழ்க்கையை ஒரு மிகப்பெரும் தேடலாக நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். இளமைப் பருவத்திலிருந்தே அல்லது கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவந்த 1848லிருந்துகூட முற்ற முழுதான ஒரு மார்க்சியராக, பூரணத்துவம் கொண்ட ஒரு புரட்சிக் காரராக நாம் மார்க்சை உருவகித்தல் கூடாது. முதலாளிய சமூகம் ஐரோப்பாவில் வேர்கொண்ட பின்புலத்தில், பல ஐரோப்பிய நாடுகளில் தொழி லாளர் வர்க்க அமைப்புகள் உருவாகிக் கொண்டிருந்த காலத்தில், ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கம் தனது வேலைத்திட்டங்களைப் பல்வேறு திசைகளில் வடி வமைத்துக் கொண்டிருந்த வேளையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் என்ற இரண்டு அற்புதமான சிந்தனை யாளர்கள் அந்தப் போராட்டச் சூழல்களினுள் தலையிட்டு, அவற்றில் பங்கேற்று, படிப்படியாக ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கினார்கள் என்றே நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

1848 இல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை உருவாக்கியபோது மூலதனம் (1867) நூலின் கருத்துக் களும் அதன் மிகப் பிரும்மாண்டமான சாதனையாக உபரி மதிப்பு பற்றிய கொள்கைகளும் முழுவடிவில் மார்க்சிடம் தோற்றம் பெற்றிருக்கவில்லை என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். இதற்குப் பொருள் இளம் மார்க்சுக்கும் முதிர்ந்த மார்க்சுக்கும் தீர்க்கவியலா முரண்பாடு இருந்தது என்று ஆகி விடாது. மார்க்சியம் என்று இன்று நாம் அறிந் துள்ள வரையறுக்கப்பட்ட வடிவின் வரலாற்று ரீதியான, சிந்தனாரீதியான பரிணாமத்தை நாம் ஒத்துக்கொள்கிறோம் என்பது மட்டுமே இதன் பொருள். குறிப்பிட்ட இப்பரிணாமத்தில் சில அடிப்படையான, தீவிரமான திருப்புமுனைகள் இருந்துள்ளன என்று ஒரு விவாதம் எடுத்துச் செல்லப்படுகிறது என்றால், அதன் நியாயங் களை நாமும் பரிசீலிக்க வேண்டுமே தவிர அது போன்ற முடிவுகளைக் கண்டு பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை.

இத்தனைக்கும் லூயி அல்த்தூசர் 1845க்கு முந்திய மார்க்சுக்கும் 1845க்குப் பிறகான மார்க்சுக்கும் நடுவில் ஓர் இடைவெளி உள்ளது என்று கூறிய போது, இளம் மார்க்ஸ் அந்நியமாதல் போன்ற மானுடவியல் தளத்தில் நின்று யோசித்தார் என்றும் 1845க்குப் பிறகு முழுக்க ஒரு சமூகவியல் தளத்தில் நின்று யோசித்தார் என்றும்தான் அந்த இடை வெளியை விளக்குகிறார். வேறுவார்த்தைகளில் சொல்லுவதானால், ஹெகல், ஃபியர்பாக் போன் றோரின் மரபுரீதியான ஐரோப்பிய மெய்யியல் சட்டகத்திலிருந்து விடுபட்டு 1845க்குப் பிறகு மார்க்ஸ் தனக்கென ஒரு புதிய (சமூக அமைப்பியல்) சட்டகத்தை உருவாக்கிக் கொண்டார் என்றே அல்த் தூசர் குறிப்பிடுகிறார். மார்க்சியத்தை அதற்கு முந்திய தத்துவங்களிலிருந்து கறாராக வேறுபடுத்திக் காட்டு வதற்கு அல்த்தூசரின் அளவுகோல் உதவத்தான் செய்கிறது. இந்த அணுகுமுறையில் மார்க்சியத்திற்குப் பாதகமான எதுவும் உள்ளதாகத் தெரியவில்லை.

இன்னொருபுறம், அந்நியமாதலை மட்டும் ஆகப்பெரும் பிரச்சினையாகச் சித்திரித்து இருத் தலிய வகைப்பட்ட சிந்தனையாளர்கள், மார்க்சின் பொருளாதாரச் சிந்தனையைவிட அந்நியமாதல் பிரச்சினையே மார்ச்சியத்தை முழுமையாக எடுத்துக் காட்டுவதாகக் கூறுகிறார்கள். 1845க்கு முந்திய இளம் மார்க்ஸ் அந்நியமாதல் பற்றி அதிகம் எழுதினார் என்பது உண்மை. இதன் முக்கியத்துவம் என்ன? அந்நியமாதல் பிற்கால மார்க்சின் பொருளாதாரச் சிந்தனையைவிட அதிக அடிப்படையானது என்பதல்ல அதன் சிறப்பு. மார்க்சின் பொருளாதாரச் சுரண்டல் குறித்த கருத்தாக்கத்தைத் தாண்டி, கருப்பின மக்கள், தலித்துகள், பெண்கள், பழங்குடிகள் ஆகியோரின் மீது உடைமைச் சமூகம் பிரயோகித்த அடக்குமுறை, ஆதிக்க வடிவங்களை அந்நியமாதல் என்ற மானுட வியல் பரப்பு தழுவி நிற்கிறது என்பதே அதன் சிறப்பு. பொருளாதாரச் சுரண்டல் என்ற பிரச்சினை யோடு பொருளாதாரமல்லாத ஆதிக்கங்கள், ஒடுக்கு முறைகள் என்ற பிரச்சினை ஒன்றுபடவேண்டும் என்ற தேவையை அந்த விவாதம் குறித்து நிற்கிறது.

குறிப்பாக, இத் தேவையைக் கறுப்பின மக்கள், பெண் விடுதலை இயக்கத்தினர், தலித் சிந்தனையாளர்கள், பழங் குடியினர் கோருகின்றனர். சுரண்டலால் மட்டு மல்ல, பலவகை ஒடுக்குமுறைகளால் பாதிக்கப் பட்டுள்ளோம் என்பது இவர்களது வாதம். மார்க் சியரைப் பொறுத்தமட்டில், நாங்கள் சுரண்டலுக்கு எதிரானவர்கள், ஒடுக்குமுறைகளுக்கு எதிரானவர் களல்லர் என்று கூறமுடியுமா? சுரண்டலையும் எல்லாவகை ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்பவர்கள் தாம் மார்க்சியர்கள். சுரண்டலைக் காத்துநிற்கும் ஒடுக்குமுறையின் வடிவங்கள், ஒடுக்குமுறையின் வழிப்பட்ட சுரண்டல் என்ற இருவழிப்பாதை சமூக வரலாற்றில் தொழில்பட்டு வந்திருக்கிறது என்பதை மார்க்சியம் மறுக்காது. மார்க்சியரின் வேலைத்திட்டங்களில் பொருளாதாரமும் அரசியல் அதிகாரமும், பொருளாதாரமும் பண்பாட்டு அரசியலும் ஆகிய சேர்க்கைகள் உருவாகவேண்டும் என்பதே இதன் பொருள்.

நூலின் பரப்பும் விவாதப் பண்பும்

இந்த நூலில் 16 இயல்களும் ஓர் அறிமுக இயலும் உள்ளன. ஒவ்வொரு இயலும் 50 பக்கங்களிலிருந்து 120 பக்கங்கள் வரை நீண்டவையாக உள்ளன. மார்க்சின் வாழ்க்கை வரலாற்றை அரசியல்ரீதியான சில முக்கியமான கட்டங்களாகப் பகுத்து இவ் வியல்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில இயல்களைத் தனியான சிறு நூல்களாகவே பதிப்பித்து வெளி யிடலாம். சுமார் 100 பக்கங்கள் கொண்ட பத்தாவது இயலான “மூலதனம்: மார்க்சின் முதன்மையான நூல்” என்ற பகுதியைத் தனித்த சிறு பிரசுரமாக வெளியிடலாம். தமிழில் மார்க்சின் மூலதன வாசிப்பை வசதிப்படுத்த அவ்வகையான பிரசுரம் பயன்படலாம்.

இந்நூல் 1200 பக்கங்களுக்கு மேற்பட்ட மிகப் பெரிய நூலாக அமைந்து போய்விட்டதாலேயே, அதுவும் பல ஆசிரியர்களால் எழுதப்பட்ட நூலாக அமைந்துள்ளதாலேயே இந்நூலுக்குள் ஒரு விரிந்த பரப்பு, ஒரு பன்முகப்பண்பு, இந்நூலுக்கு உள்ளாகவே ஒரு விவாதப்பண்பு உருவாகியிருப்பதாகத் தோன்று கிறது. நூலின் பதிப்பாசிரியர்களின் விருப்பத்திற்கு மாறாகக்கூட (அல்லது அவர்களே விரும்பியிருக் கலாம்) மார்க்சின் அரசியல் வாழ்க்கை சந்தித்த பல வகை ஏற்ற இறக்கங்களையும் ஒவ்வொரு அரசியல் சந்தர்ப்பத்தில் மார்க்சின் எதிர்பார்ப்புகளையும் அவற்றின் வெற்றி அல்லது தோல்விகளையும் விரி வாகச் சித்திரிப்பனவாக இந்நூலின் இயல்கள் அமைந் துள்ளன. ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர் வர்க்க அரசியலில் மார்க்சின் எல்லா எதிர்பார்ப்பு களும் எப்போதுமே வெற்றி பெற்றன என்ற ஒற்றைப் போக்கான மதிப்பீடு இந்நூலில் இடம்பெறவில்லை. பல வேளைகளில் மார்க்சின் எதிர்பார்ப்புகள் தோல்வி அடைந்ததை நூல் விவரிக்கிறது. அந்த ஏற்ற இறக்கங்கள், தோல்விகள் ஆகியவற்றிலிருந்து மார்க்ஸ் மிக நுட்பமாகப் படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டு தொடர்ந்து அவரது கோட் பாட்டு வெளியை விரிவாக்கிக் கொண்டார் என்பதிலேயே அவரது சிறப்பு அமைந்துள்ளது.

தத்துவத்திலிருந்து நடைமுறைக்கு

நூலின் தருக்கவியலை அல்லது மார்க்சின் வாழ்வுப் போக்கை இங்குச் சரியாகக் குறித்துக்கொள்ள முயலுவோம். மார்க்ஸ் ஒரு தத்துவவியல் அறிஞ ராகத் தன் வாழ்க்கையைத் துவக்குகிறார். ஹெகல் என்னும் பிரும்மாண்டமான ஜெர்மானிய தத்துவ அறிஞரின் தருக்கவியல் குறித்த மலைப்பு, மார்க்சின் சமய மற்றும் சமூக விமர்சனத்திற்கு உகந்ததான தத்துவத்தின் ஆற்றல் ஆகியவை அவரை முதற் கட்டத்தில் இயக்கியிருக்கலாம். ஆனால் விரைவில் அவர் நடைமுறை அரசியலில் ஆர்வம் கொண்ட வராக ஆகிறார். இந்த உருமாற்றத்தைத் தத்துவத்தின் போதாமை அல்லது இயலாமை என்று கொள்ள லாமா? அப்படிச் சொல்லிவிடமுடியவில்லை. மாறாகத் தத்துவமும் செயல்பாடும் சந்திக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு அவர் வந்து சேர்ந்ததாகக் கொள்ள வேண்டியுள்ளது. தத்துவம் தொழிலாளர் வர்க்கத்தில் தனது பௌதீக ஆயுதத்தைக் கண்டுகொள்கிறது, தொழிலாளர் வர்க்கம் தத்துவத்தில் தனது கருத்தியல் ஆயுதத்தைக் கண்டுகொள்ளுகிறது என்ற பிரபல மான மார்க்சின் நிலைப்பாட்டை இங்குக் காண் கிறோம். இப்போது மார்க்சிற்கு அறிவே (சுநயளடிn) எல்லாவற்றையும் சாதித்துவிடும் என்ற உணர்வு கரைந்து விடுகிறது. நடைமுறை சார்ந்த அறிவு, அறிவு சார்ந்த நடைமுறை என்ற இயங்கியல் உருவாகிவிடுகிறது. மார்க்சியத்தின் உருவாக்கத்தில் இது ஒரு மைல் கல். கோட்பாடும் நடைமுறையும் என்ற இணைப்பு இங்கு உண்டாகிவிடுகிறது.

engels_450இளம் ஹெகலியரின் அணியின் மார்க்ஸ் இடம் பெற்றிருந்தபோது அவரும்கூட முதலில் அறிவுபூர்வ மான, தருக்கரீதியான விமர்சனம் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். சமூகம் அறிவுபூர்வமானதாக இல்லை என்பதால் அறிவை அளவுகோலாகக் கொண்டு சமூகத்தை அதற்கு ஏற்ப இயைபு படுத்த வேண்டும் என்று அவர் கருதியதுண்டு. மதம் குறித்த விமர்சனம் பிற எல்லா விமர்சனங்களுக்கும் தொடக்கம் என்று அவர் கருதியிருந்தார். மதம் என்ற கருத்தியல் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் உழைக்கும் மக்கள் புரட்சிகர நடைமுறைகளுக்கு முன்வரமாட்டார்கள் என்று அவர் கருதியிருந்தார். ஆனால் இளம் ஹெ கலியர்களின் கருத்தியல் விமர்சனத்தைக் கடந்து அவர் செயல்பாட்டுரீதியாகச் சமூகத்தை விமர்சித்தல் என்ற நிலைப்பாட்டை நெருங்கிவருகிறார். கருத்தியல் விமர்சனம் என்ற ஆயுதம் போதாது, ஆயுத விமர்சனம் அதாவது நடைமுறையிலான விமர்சனம் தேவை என்ற முடிவுக்கு வருகிறார். மார்க்சிடம் சொல்லை விட செயல் அதிக ஆற்றல் கொண்டது என்ற முடிவு வலுப்படுகிறது. மார்க்ஸ் ஒரு நடுத்தர வர்க்க அறிவுஜீவியாக இருந்த நிலையிலிருந்து கீழிறங்கி உழைக்கும் மக்களை நெருங்கி வருகிறார். இளம் ஹெகலியரிடமிருந்து மார்க்ஸ் விலகிச் செல்லும் இத்தருணம் இப்போதைய மார்க்சிய-பின்னை நவீனத்துவ விவாதங்களுக்குக்கூட நமக்கு முக்கிய மானது.

ஃபியர்பார்க் பற்றிய கருத்துரைகள்

நடைமுறையும் தத்துவமும் என்ற மார்க்சின் சேர்க்கை அவரது “ஃபியர்பாக் பற்றிய கருத்துரைகள்” என்னும் 11 ஆய்வு முடிவுகளைப் படித்துப் புரிந்து கொள்வதற்குப் பயன்படும். அச்சில் மூன்று பக்கங் களே உள்ள மிகச் சிறிய கருத்துரை இது. பதினொரு ஆய்வு முடிவுகளாக சின்னஞ்சிறு வரிகளில் வரிசை யாக எண்கள் இடப்பட்டு இந்தக் கருத்துரை தரப் படுகிறது. நான் மாஸ்கோவில் படிக்கும்போது எனது ஆசிரியர், இந்த 11 ஆய்வு முடிவுகளை அர்த்தம் புரிந்து படித்துக் கொண்டால் மார்க்சியம் உனக்கு வயப்பட்டுவிடும் என்று கூறியது நினைவுக்கு வருகிறது. 300-400 பக்கங்களில் எழுதப்படும் ஒரு டாக்டர் பட்ட ஆய்வேட்டின் முடிவில் ஆய்வாளர் தான் கண்டுபிடித்த புதிய கருத்துக்களைச் சுருக்க மாகவும் இறுக்கமாகவும் “ஆய்வு முடிவுகள்” என்ற தலைப்பில் எழுதுவார். மார்க்ஸ் அந்த 300-400 பக்க ஆய்வேட்டை எழுதவில்லை. ஆனால் ஆய்வு முடிவுகளை மட்டும் தனக்குத்தானே தெளிவுபடுத்திக் கொள்ளுவதற்காக எழுதிப் பார்த்திருக்கிறார். ஆய்வு முடிவுகளை மனக்கணக்காக எழுதிப்பார்த்த மார்க்ஸ், ஆய்வேட்டை அதற்குப்பின்தான் எழுதவேண்டி வருகிறது. மார்க்சின் மரணத்திற்குப் பிறகுதான் எங்கெல்ஸ் அந்த 11 ஆய்வு முடிவுகளை மார்க்சின் நோட்டுப் புத்தகங்களிலிருந்து கண்டெடுத்திருக் கிறார்.

இருத்தலிய செல்வாக்கு கொண்ட மார்க்சியர்கள் 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில் பொருள் (Matter, Material) என்ற மார்க்சின் கருத்தாக்கத்தைச் செயல்பாடு என்றே புரிந்து கொள்ளவேண்டும் என்று ஒரு மிகப்பெரிய விவாதத்தைத் துவக்கி னார்கள். அந்தோனியோ கிராம்சி மார்க்சின் தத்துவத்தை அவரது சிறைக்குறிப்புகளில் பல இடங்களில் செயல்பாட்டின் தத்துவம் என்றே குறிப்பிட்டிருந்தார். இதுவும் இருத்தலிய மார்க்சியர்களின் விவாதங்களோடு சேர்ந்து கொண்டது. அந்த விவாதங்களுக்குத் தொடக்கமாக அமைந்த பிரதிகளில் மார்க்சின் ஃபியர்பாக் பற்றிய கருத்துரை முதன்மையான தாகும்.

பொருள் என்பதை மார்க்ஸ் சடப்பொரு ளாகவோ பௌதீகப் பொருளாகவோ கொள்ள வில்லை என்ற விவாதம் இங்கு முதன்மைப்படுகிறது. சமூக வாழ்வில் பொருட்பண்பு கொண்ட அல்லது பொருள்வகைப்பட்ட ஓரடிப்படையை மார்க்ஸ் காண முயன்ற அந்த நாட்களில் அது உழைப்பு என்றும் நடைமுறை என்றும் உற்பத்தி உறவுகள் என்றும் அவர் கண்டறிந்தார் என்ற விவாதம் ஃபியர் பாக் பற்றிய கருத்துரைகளிலிருந்து கிடைக்கிறது.

உழைப்பு, நடைமுறை ஆகிய பொருட்பண்பு கொண்ட அடிப்படைகளில் பௌதீக சக்திகளும் சமூக விமர்சனப் பண்பு கொண்ட அறிவும் இயங் கியல் ரீதியாக ஒன்றுபடுகின்றன என்ற விளக்கம் இங்குக் கிடைக்கிறது. பொருளும் கருத்தும் இயங் கியல்படும் தளமாகச் செயல்பாட்டுத் தளம் உரு வெடுக்கிறது. உழைப்பு இயற்கையை மாற்றுகிறது. வர்க்கப் போராட்டம் என்ற சமூக நடைமுறை சமூக எதார்த்தத்தை மாற்றியமைக்கிறது. பொருள் முதல்வாதம் என்றால் சூழல்களைக் கொண்டு சமூகத்தை விளக்குவது என்ற பழைய நிலையி லிருந்து, சூழல்களை மாற்றும் வர்க்கச் செயல் பாடே பொருள்முதல்வாதத்தின் அடிப்படை என்ற வரையறை இங்குத் தோற்றம் பெறுகிறது. வர்க்கச் செயல்பாட்டில் தன்னுணர்வு, பிரக்ஞை ஆகியவை இரண்டறக் கலந்து தொழில்படும் என்ற புதிய நிலை சொல்லப்படுகிறது.

அல்த்தூசரின் சமீபத்திய மார்க்சிய வாசிப்பில் நடைமுறை என்ற கருத்தாக்கம் பொருளாதார நடைமுறை, அரசியல் நடைமுறை, கருத்தியல் நடைமுறை என்ற பலவகை நடைமுறைகளாக இருக்கமுடியும், அவை கூட்டாகச் செயல்பட்டு புரட்சிகர சமூக மாற்றத்தை மிகைநிர்ணயம் செய்கின்றன என்ற கருத்தும் கிடைக்கிறது.

கம்யூனிஸ்ட் அறிக்கை

கம்யூனிஸ்ட் அறிக்கை (1848) மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் மிக அற்புதமான சாதனை என்பதில் சந்தேகம் கிடையாது. இருப்பினும், இது சில முக்கிய விவாதங்களுக்குத் துவக்கமாக உள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டும். இரண்டு விவாதங்களை இங்கு குறிப்பாகச் சொல்லவேண்டும். ஒன்று முதலாளியத்தின் வரலாற்றுரீதியான முற்போக்குப் பாத்திரம் குறித்தது. மார்க்ஸ் நில உடைமைச் சமூகத்தை அழித்து முதலாளியம் நிலைகொள்ளும் போது அது பழைய சமூகத்தை மிக அடிப்படை யாக அழித்தொழிக்கிறது என்றார். இந்த வகையில் பூர்ஷ்வா வர்க்கம் பழமைக்கு எதிரான புரட்சிகர சக்தி என்று அவர் மதிப்பிட்டார். பூர்ஷ்வா வர்க்கம் தனது வரலாற்றுக் கடமையை ஆற்றும் என மார்க்ஸ் எதிர்பார்த்ததால் இந்த முடிவுக்கு அவர் மிக உறுதியாக வந்து சேர்ந்தார். இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் அவர் பூர்ஷ்வா வர்க்கத்தையும் முதலாளியச் சமூகத்தையும் முற்போக்கான சக்தி களாக மதிப்பிட்டார். ஆனால் 1848இல் பிரான்சிலும் பிரஷ்யாவிலும் எழுந்த ஜனநாயக எழுச்சிகளை அந்நாடுகளின் பூர்ஷ்வா வர்க்கங்கள் மிகக் கொடுமை யாக அழித்து ஒழித்தன. அதாவது பூர்ஷ்வா வர்க்கம் அதன் வரலாற்றுக் கடமையை ஆற்றவில்லை. இதனை எப்படிப் புரிந்து கொள்ளுவது? பூர்ஷ்வா வர்க்கம் நில உடைமையோடு சமரசம் செய்து கொள்ளத் தயாராக இருந்தது. விவசாயிகளையும் தன்னோடு சேர்த்துக் கொண்டது. சனநாயகம் கோரிய நடுத்தர வர்க்கங்களையும் தொழிலாளர் வர்க்கத்தையும் அது தோற்கடித்தது. எனவே முதலாளியத்தின் முற்போக்குப் பாத்திரம் என்பது ஒரு கோட்பாடாகவே தங்கிவிடுகிறதே தவிர, நடைமுறையில் அது தொழில்படவில்லை.

முதலாளியத்தின் முற்போக்குப் பாத்திரம் காலனிய நாடுகளில் முதலாளிய ஆதிக்கங்களின் வரலாற்றுப் பாத்திரம் என்ன? என்ற விவாதத்திற்கு இட்டுச் செல்கிறது. பூர்ஷ்வா வர்க்கம் நிலஉடைமைச் சக்திகளோடு சமரசம் செய்துகொள்ளாது என்று மார்க்ஸ் அறிக்கையில் நம்பினார். ஆனால் காலனி நாடுகளில் காலனிய ஆதிக்கமும் சரி, ஆட்சிப் பொறுப் பேற்கும் தேசிய பூர்ஷ்வாவும் சரி நில உடைமைச் சக்திகளோடு சமரசம் செய்துகொள்ளும் என்ற எதார்த்தத்தைச் சந்திக்கிறோம்.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் மற்றொரு விவாதத் திற்குரிய கருத்து: மொத்த சமூகமும் முதலாளி அல்லது தொழிலாளி என்ற இரண்டில் ஒன்றாக வரலாற்றுரீதியாக அணிசேரும் என்று மார்க்ஸ் அறிக்கையில் குறிப்பிட்டார். இரண்டில் ஒன்றாக என்று கூறும்பொழுது, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் விவசாயிகளின் பாத்திரம் மார்க்சால் அடியோடு புறக்கணிக்கப்படுகிறது என்ற குற்றச் சாட்டு எழுகிறது. இரண்டில் ஒன்றாக அது குறையும் என்று கூறும்பொழுது, விவசாயிகளின் முதலாளிய எதிர்ப்பு பிற்போக்கானதாகச் சித்திரிக்கப்படுவதற்கு இடமேற்படுகிறது. உண்மையில் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன், அமெரிக்க நாடுகளில் விவசாயிகளின் முதலாளிய எதிர்ப்பு மிகப் புரட்சிகரமான ஒரு சக்தியாகும். இன்றைய பின்னைக் காலனியச் சூழல் களில் இந்நிலை மேலும் வலிமைப்படுகிறது. முத லாளிய எதிர்ப்பு என்பதைத் தனித்த ஓர் அரசிய லாக மேலெடுத்துச் செல்லவேண்டும் என்ற கருத்து சமீப காலங்களில் தீவிரமடைந்து வருகிறது.

1848 புரட்சிகளின் தோல்விக்குப் பிறகு

மார்க்ஸ் எதிர்பார்த்ததற்கு மாறாக, 1848இல் ஐரோப்பிய நாடுகளின் சனநாயகப் புரட்சிகள் பூர்ஷ்வா வர்க்கத்தால் கொடூரமாகத் தோற்கடிக்கப் பட்டன. மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையில் பூர்ஷ்வா வர்க்கத்தின் முற்போக்குப் பாத்திரம் பற்றி எழுதிய கருத்துக்களை மறுபரிசீலனை செய்ய வேண்டி வந்தது. 1848 தோல்விகளுக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் புரட்சிகர சக்திகளுக்கு மிகப்பெரிய தேக்கம் ஏற்பட்டது. அக்காலத்தை மார்க்ஸ் தனது கருத்துக்களைத் திருத்திக் கொள் வதற்குப் பயன்படுத்திக் கொண்டார். 1848-50களில் ஐரோப்பிய நாடுகளில் புரட்சிகர எழுச்சிகளைப் பற்றியும் அவற்றில் பூர்ஷ்வா வர்க்கம் முடியாட்சி யாளர்களுடன் அணிசேர்ந்துகொண்டது பற்றியும் மார்க்ஸ் இரண்டு முக்கியமான நூல்களை எழுதினார். மார்க்ஸ் “1848-50 களில் பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள்” என்ற தலைப்பில் ஒரு நூலை 1850லும், “லூயி போனபார்ட்டின் 18ஆம் புரு மெயர்” என்ற நூலை 1851-52 லும் எழுதி வெளி யிட்டார்.

இதே காலத்தில் எங்கெல்ஸ் “ஜெர்மனியில் விவசாயிகள் யுத்தம்” என்ற ஒரு நூலையும் “ஜெர் மனியில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்” என்ற மற்றொரு நூலையும் எழுதி வெளியிட்டார் என்பதும் முக்கியமாகும். இந்த நான்கு நூல்களிலும் வரலாற்றுப் பொருளாதாரம் பற்றிய கோட்பாடுகளும் தொழி லாளர் வர்க்கக் கட்சிகளின் அரசியல் அதிகாரம் நோக்கிய நகர்வுகள் குறித்த புதிய வரையறைகளும் காணக்கிடைக்கின்றன. ஜெர்மனியில் விவசாயிகள் யுத்தம் என்ற எங்கெல்சின் நூல் 16 ஆம் நூற்றாண்டில் பிராட்டஸ்டண்ட் கிறித்தவத்தின் தோற்றம் பற்றிய தாக இருந்தபோதிலும் அது அக்காலத்திய விவசாயி களின் நிலஉடைமை எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றியதாகவும், பொதுவாக மார்க்ஸ், எங்கெல்சின் விவசாயிகள் மீதான கூடுதல் கவனம் பற்றியதாகவும் அமைந்தது. மார்க்சின் கம்யூனிஸ்ட் அறிக்கையையும் 1848 புரட்சிகளின் தோல்விகளுக்குப் பிறகான நான்கு நூல்களையும் ஒப்பிட்டு ஓர் வாசிப்பை நாம் நிகழ்த்த வேண்டும். அறிக்கையின் எதிர்பார்ப்பு களைக் கடந்த சிக்கலான, செழுமையான எல்லை களுக்குள் மார்க்ஸ் 1849-50களில் பிரவேசிப்பதை வாசிப்பவர் உணரமுடியும்.

பூர்ஷ்வா வர்க்கம் தனது புரட்சிகர ஆற்றலை இழந்துவிட்டது; அது இப்போது ஓர் எதிர்ப்புரட்சி சக்தியாகவே மாறிவிட்டது; எனவே தொழிலாளர் வர்க்கமே சுயேச்சையான சனநாயகப் புரட்சிகளை நடத்தவேண்டும் என்று மார்க்ஸ் இப்போது எழுதினார். ஆளும் வர்க்கங்களின் நயவஞ்சகமே 1848இல் புரட்சிகளைத் தோற்கடித்தன என்றும் அவர் எழுதினார். தொழிலாளர் வர்க்கம் இனி சனநாயகப் புரட்சிகளை முன்னின்று நடத்தும் எனில் அது விவசாயிகளை நிரந்தரமாகத் தனது நேச அணிகளாகத் திரட்டிக்கொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு மார்க்ஸ் வந்து சேர்ந்தார். தொழி லாளர்-விவசாயிகள் கூட்டணி என்பது இனிவரும் நாட்களில் ஒரு நிரந்தரப் புரட்சியின் அணிகளாக அமையும் என்று மார்க்ஸ் எழுதினார். இரண்டில் ஒன்றாக விவசாயிகள் குறைய வேண்டும் என்ற பழைய நிலைப்பாட்டை மார்க்ஸ் இப்போது வலியுறுத்தவில்லை என்பது இங்குக் குறிப்பிடத் தக்கது. சனநாயகப் புரட்சி, சோசலிசப் புரட்சி ஆகியவை அடங்கிய புரட்சிகர சகாப்தத்திற்கு வெகுசனப் பாட்டாளி வர்க்கக் கட்சி தேவை என்றும் மார்க்ஸ் குறிப்பிட்டார்.

1848 சனநாயக எழுச்சிகளின் போது ஐரோப்பிய பூர்ஷ்வா வர்க்கத்தின் நடத்தை மார்க்சிடம் சில ஆழமான விவாதங்களைத் தூண்டிவிடுகிறது. குறிப் பாக, சனநாயகப் புரட்சியில் தொழிலாளர் வர்க்கத்தின் பாத்திரம்பற்றி அவர் திரும்ப யோசிக்கிறார். தொழி லாளர் வர்க்கத்திற்கு சனநாயகப் புரட்சியின் முக்கியத்துவமேகூட மார்க்சால் இங்கிருந்துதான் வார்த்தெடுக்கப்படுகிறது. சனநாயகப் புரட்சியில் தொழிலாளர் வர்க்கம் என்ற நிலைப்பாடு வலுப் படும் போது வெகுசனப் பாட்டாளிக் கட்சி என்ற விரிந்த காட்சியும் தென்படுகிறது.

சமூக அரசியல் இயக்கங்களின் ஒவ்வொரு தோல்வியின்போதும் மார்க்சின் படிப்பினைகள் முக்கியப்படுகின்றன. மார்க்ஸ் அம்மாதிரி சந்தர்ப்பங் களில் அவரது கோட்பாட்டு நிலைப்பாடுகளை விட்டு விலகி விடுவது கிடையாது. தான் தேர்ந்து கொண்ட பாதை தவறானது என்று கருதி விடுவது கிடையாது. மாறாக, ஒவ்வொரு தோல்வியின் போதும் அவர் மேலும் ஆழமாக சமூக அடித் தளங்களை (மக்களை) நோக்கிப் பயணப்படுகிறார். ஏன் தோற்றோம்? என்ற கேள்வி அவரைச் சிறிதும் நம்பிக்கை இழக்கச் செய்வதில்லை. மாறாக, இன்னும் சமூக எதார்த்தத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வில்லை என்ற சுயவிமர்சனத்திற்கே இட்டுச் செல்லு கிறது. சமூகத்தின் அடியாழங்களில் வெகுசனத் தளங்களில் அவருக்கு மிகவும் மதிப்பிற்குரிய படிப் பினைகள் கிடைக்கின்றன. தொழிலாளர்களிலிருந்து விவசாயிகளை நோக்கியும், முன்னேறிய முதலாளிய நாடுகளில் புரட்சி என்ற நிலையிலிருந்து போலந்து, அயர்லாந்து, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடு களின் எதார்த்தத்தை நோக்கியும் மிக அடர்த்தி யாக மார்க்ஸ் நகர்ந்த சந்தர்ப்பங்கள் இவை.

தோல்விகள், தேக்கங்களின் போது மார்க்ஸ் சமூகத்தின் ஆளும் வர்க்கங்களின் மீது தனது கவனத்தைக் குவிக்கிறார். அப்படிக் குவிக்கும் போதெல்லாம் ஆளும் வர்க்கங்களின் நயவஞ்சகங்கள் அவருக்குத் தெளிவாகின்றன. 1850களை ஒட்டிய ஆண்டுகளில் மார்க்ஸ் பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்தில், ஐரோப்பிய அரசுகளின் ராஜதந்திர நடவடிக்கைகள் பற்றிய ரகசிய ஆவணங்களை வாசித்தறிந்தார். தமது வர்க்க எதிரிகளைத் தோற் கடிப்பதற்காக ஆளும் வர்க்கம் எத்தகைய வஞ்சக மான கூட்டணிகளை உருவாக்கிக் கொள்ளுகிறது என்பதை மார்க்ஸ் கண்டறிகிறார். அம்மாதிரி சந்தர்ப்பங்களில் அவரது கோபம் வெகுவாகக் கூடுகிறது. தொழிலாளர் வர்க்கம் திரளுகிறது என் பதைப் புரிந்து கொண்டதும் ‘முற்போக்கானவை’ என நாம் கருதும் ஆளும் வர்க்கப் பகுதியினர் கூட எவ்வாறு உடனடியாகத் தமது போர்த்திட்டங் களை மாற்றிக் கொள்கிறார்கள் என்பது குறித்து அந்தோனியோ கிராம்சியும் எழுதியுள்ளார்.

அரசியல் பொருளாதார ஆய்வுகளை நோக்கி

தொழிலாளர் இயக்கங்களில் தேக்கங்கள் நேரிட்டபோதெல்லாம் மார்க்ஸ் வெகுசன வாழ்வின் அடியாழங்களை நோக்கி நகர்ந்தார் என்று மேலே குறிப்பிட்டோம். அப்படிப்பட்ட நகர்வுகளில் ஒன்றாக மார்க்சின் அரசியல் பொருளாதாரம் பற்றிய ஆய்வுகளையும் கொள்ளவேண்டும். தத்துவம், அரசியல் நடைமுறை என்ற வட்டாரங்களிலிருந்து மார்க்ஸ் அரசியல் பொருளாதாரம் நோக்கி நகர்ந் தார் எனவும் இதனைப் புரிந்துகொள்ளலாம். முன்பு ஹெகலியத் தத்துவத்தை விமர்சிக்கும்போது, அரசியல் அமைப்பின் ரகசியங்களை குடிமக்கள் சமூகம் எனப்படும் சமூக வர்க்கங்களின் பொருளாதார வாழ்க்கைத் தளங்களிலிருந்து புரிந்து கொள்ளவேண்டும் என்று மார்க்ஸ் கூறியிருக்கிறார். 1850களில் மார்க்சின் பொருளாதார ஆய்வுகள் மானுட வாழ்வின் அடியாழங்களைப் பற்றிய அக் கறையைக் குறிக்கின்றன.

1850-57ஆம் ஆண்டுகள் ஐரோப்பிய முதலாளி யத்தின் அமைதியான வளர்நிலையைக் குறித்தன. ஆயின் மார்க்ஸ் முதலாளியம் மிக விரைவில் ஒரு நெருக்கடியைச் சந்திக்கும் என எதிர்பார்த்தார். இக்காலத்தில் மார்க்ஸ் முதலாளியப் பொருளா தார அமைப்பை மிக அடிப்படையாக ஆய்வு செய் வதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டார். ஆடம் ஸ்மித், டேவிட் ரிகார்டோ போன்ற முதலாளியப் பொருளாதார அறிஞர்களின் கோட்பாடுகளைப் பயின்று தொழிலாளர் வர்க்கத்தின் நிலைப்பாடு களிலிருந்து முதலாளியம் பற்றிய விமர்சனங்களை உருவாக்கத் தொடங்கினார். மார்க்ஸ் இதே காலத்தில் நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன் பத்திரிகையின் ஐரோப்பிய நிருபராகவும் பணிபுரிய முன்வந்தார். அவரது குடும்பத்தின் மிக ஏழ்மையான நிலையில் அந்தப் பணி அவருக்கு மிக அவசியமானதாக இருந்தது. ஒருபுறம் பொருளாதார வாசிப்புகளிலும் இன்னொரு புறம் டெய்லி ட்ரிப்யூனுக்காக இந்தியா, சீனா, இங்கிலாந்து, அயர்லாந்து, போலந்து ஆகிய நாடுகள் பற்றிய கட்டுரைகள் எழுதுவதிலும் அவர் தன் நேரத்தைச் செலவழித்தார். 1850-57 ஆகிய ஏழு ஆண்டுகளில் மார்க்சின் ஏழு குழந்தைகளில் நான்கு குழந்தைகள் அடுத்தடுத்து (1850, 1852, 1855, 1857) இறந்துபோனார்கள் என்ற கொடூரமான நிகழ்வினையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

jenny_marx_300மார்க்ஸ் எதிர்பார்த்தபடியே ஐரோப்பிய முதலாளியம் 1857இல் ஒரு மாபெரும் நெருக் கடியைச் சந்தித்தது. இக்காலத்தில் அவர் எட்டிய அரசியல் பொருளாதார முடிவுகள் 1857-58 கை யெழுத்துப் பிரதிகள் என்ற வடிவில் பிற்காலத்தில் வெளியாயின. இக்கையெழுத்துப் பிரதிகளில் மார்க்ஸ் வந்து சேர்ந்த சில முக்கிய முடிவுகளை மார்க்ஸ் பின்னால் மூலதனம் என்ற நூலில் விளக்கி யுள்ளார். முதலாளியம் என்ற சமூக அமைப்பு பற்றிய அவரது ஆய்வு அதன் மிகக் குறைந்தபட்ச அலகாகிய பண்டம் குறித்த பகுப்பாய்விலிருந்து தொடங்குகிறது. பண்ட உற்பத்தியிலிருந்து பரி மாற்றத்திற்கு, முதலாளியப் பரிமாற்றத்தில் உழைப்புச் சக்தி பண்டமாவது, பணம் மூலதனமாவது, இவை உபரி மதிப்பை உற்பத்தி செய்வது போன்ற விஷயங் களை மார்க்ஸ் இக்காலத்தில் தெளிவுபடுத்திக் கொண்டார். மூலதனம் நூலுக்கான மையமான கருத்துக்கள் இக்காலத்தில் மார்க்சிடம் உருவாகி விட்டன.

1857இல் மார்க்ஸ் “அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கான பங்களிப்பு” என்ற தலைப்பில் ஒரு நூலைத் தயார் செய்து அந்நூலுக்கு ஒரு முன்னுரையும் எழுதினார். நூலினுள் நாம் மேலே குறிப்பிட்ட அரசியல் பொருளாதாரக் கருத்துக் களைச் சுருக்கமாக மார்க்ஸ் வடிவமைத்தார். முன் னுரையில் அவரது அரசியல் பொருளாதாரக் கருத்துக்கள் சமூக வரலாற்றை எவ்வாறு பொருள் முதல்வாத நோக்கில் விளக்குகின்றன என்பதை விவரித்துள்ளார். இந்த முன்னுரை இன்றுவரை மார்க்சின் வரலாற்றுக் கோட்பாட்டை விளக்கு வதற்கான முதன்மையான பகுதியாகக் கொள்ளப் படுகிறது. வாழ்நிலை, சிந்தனை ஆகியவற்றிடை யிலான உறவு, உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியவற்றிற்கிடையிலான ஒத்திசைவு, பின் முரண் பாடு, சமுதாயப் புரட்சி, சமூக அடிப்படை, மேற் கட்டுமானம் ஆகிய பல முக்கியமான கருத்துக்கள், அவற்றில் பல இன்றுவரை பல காத்திரமான விவாதங்களை எழுப்புபவை, இம்முன்னுரையில் பேசப்பட்டுள்ளன.

1860களில்: புதிய பரப்புகளைத் தேடி

1860களின் முதலாண்டுகள் மார்க்சுக்குப் புதிய செய்திகளைக் கொண்டு வந்தன. குறிப்பாக, இரண்டு செய்திகள். 1861ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நவீனத் தொழில்முறைக்கு அறிமுக மாகியிருந்த வடமாநிலங்களுக்கும் அடிமை விவ சாயத்தை அடிப்படையாகக் கொண்ட தென் மாநிலங் களுக்குமிடையில் கறுப்பின மக்கள் குறித்த பிரச் சினை முற்றி அது ஆயுத மோதலாக உருவெடுத்தது. ஆப்ரகாம் லிங்கன் அப்போது அமெரிக்க அதிபராக இருந்தார். அவர் அமெரிக்காவில் அடிமை முறை ஒழிப்பை ஆதரிப்பவராக இருந்தார். தென்மாநிலங்கள் அடிமை முறையைத் தக்க வைக்கவும் அதனை வடக்கு நோக்கிப் பரப்பவும் விழைந்தன. மைய அரசின் ஆதரவு தமக்கு இல்லையென்பதை அவை உணர்ந்து அமெரிக்க ஐக்கிய அமைப்பிலிருந்து வெளியேற முடிவு செய்தன. வடமாநிலங்களின் பூர்ஷ்வாக்கள் அடிமைமுறையை ஆதரிக்கவில்லை யெனினும் அவர்கள் தென்மாநில தோட்ட முதலாளி களுடன் தமது கச்சாப்பொருட்களுக்காக உறவு வைத்துக் கொண்டிருந்ததால், ஐரோப்பாவில் நடந்ததுபோலவே, சனநாயக மாற்றங்களுக்கு எதிராகக் கூட்டுசேர்ந்து செயல்பட்டனர். ஆளும் வர்க்கங்களின் துரோகத்தை மார்க்ஸ் மீண்டும் ஒருமுறை உணர்ந்தார். ஆங்கிலேய அரசும் அமெரிக் காவில் அடிமை முறை ஒழிந்துபோவதை ஆதரிக்க வில்லை.

மார்க்ஸ் அமெரிக்கச் சூழல்கள்பற்றிச் சரியான மதிப்பீடுகளை முன்வைத்தார். கறுப்பர்/வெள் ளையர் என்ற நிறவேறுபாடு அமெரிக்க நாட்டில் உழைப்பாளிகளின் ஒற்றுமைக்குத் தடையாக இருப் பதையும், எனவே முதலாளியத்தின் வலுவான பாதுகாப்பு அரணாக விளங்குவதையும் மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். இங்கிலாந்தில் கறுப்பின மக்களுக்கு ஆதரவான மனோநிலை ஏற்படுவதற் கான பிரசார இயக்கத்தில் மார்க்சும் அவரது நண்பர்களும் பங்கேற்றனர். அமெரிக்காவில் கறுப்பின மக்களின் எழுச்சி சட்டபூர்வமான வழிகளை நம்பிக்கொண்டிருப்பதைக் கைவிட்டு, புரட்சிகரமான போராட்டமுறைகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்று மார்க்ஸ் எழுதினார். கறுப்பின மக்களின் எழுச்சி கணிசமான வெற்றி களை ஈட்டியபோது மார்க்ஸ் இது அடுத்து ஒரு புரட்சிகர அலையைப் பல்வேறு நாடுகளில் தூண்டி விடும் என்று கருதினார். மக்கள் போராட்டங்கள் வெற்றிபெறும் போதெல்லாம் மார்க்ஸ் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தத் தயங்கியதில்லை. அமெரிக்காவில் கறுப்பின மக்களின் போராட்டங்கள் பற்றிய மார்க்சின் மதிப்பீடுகள் இன்றுவரை கறுப்பு மார்க்சியத்தின் (Black Marxism) வரலாற்றில் சில முக்கியமான பக்கங்களைக் கொண்டனவாக உள்ளன.

1863இல் போலந்தில் மற்றுமொரு மக்கள் எழுச்சி துவங்கியது. அது போலந்தின் தேசிய இன விடுதலை குறித்த எழுச்சியாகும். மார்க்சின் நீண்ட நாளைய ஆதரவு போலந்து மக்களின் தேசிய விடு தலை குறித்ததாகும். போலந்து மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா ஆகிய இரண்டு பகுதிகளுக்கு இடையில் அந்த இரண்டு பகுதிகளிலுள்ள பேரரசு களாலும் அடக்கிவைக்கப்பட்டிருந்த நாடாகும். ஜெர்மனி உள்ளிட்ட பிரஷ்ய அரசு, பிரெஞ்சு அரசு, ஆஸ்திரிய அரசு, ரஷ்ய அரசு ஆகியவை கூட்டாகப் போலந்து மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தன. எனவே போலந்தின் விடுதலை ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் புரட்சியை வேகப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு மார்க்சிடம் இருந்தது. கூடுதலாக போலந்து குறித்த அவரது சிந்தனை தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற பிரச்சினை குறித்தும் சிந்திக்க வைத்தது. போலந்தின் தேசிய இனப் பிரச்சினை அந்நாட்டின் விவசாயிகளின் பிரச்சினையாக வளர்ச்சி அடைய வேண்டும் என்று மார்க்ஸ் விரும்பினார். போலந்து கீழை உலகின் பிரான்ஸ் என்று மார்க்ஸ் அப்போது எழுதினார். ஆயின் பேரரசுகளின் ராஜதந்திரத்தால் போலந்து மக்களின் கிளர்ச்சிகள் அடக்கி ஒடுக்கப் படுகின்றன என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். போலந்தின் அன்றைய எழுச்சிகளும் அவை ஒடுக்கப் பட்ட முறைமையும் சமீபத்தில் ஈழப் பிரச்சினை சுற்றியுள்ள பேரரசுகளால் கையாளப்பட்ட முறை மையை ஒத்திருப்பதைக் கண்டுகொள்ளலாம்.

மூலதனம் என்ற முதன்மையான நூல்

1867 செப்டம்பரில் மார்க்சின் மூலதனம் முதல் பகுதி வெளியாகியது. கடந்த இரு நூற்றாண்டுக் கால வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய சம்பவம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது. உழைக்கும் மக்களின் விடுதலைக்காக அல்லும் பகலும் தொடர்ச்சியாக உழைத்த, சிந்தித்த ஓர் அறிஞனின் அடிப்படையான நூல் இது என்பது அதன் மிகப்பெரிய சிறப்பு ஆகும். மூலதனம் படைப்பு மார்க்சின் உச்சகட்ட உழைப்பின் விளைவு. ஏழ்மை, குழந்தைகளின் மரணம், ஜென்னியின் தியாகங்கள், மார்க்சின் வெறித்தனமான உழைப்பு ஆகியவற்றின் பதிவுகள் இந்த நூலில் உண்டு. இந்த நூலைப் பற்றிய ஜென்னி மார்க்சின் பதிவுகளை இங்குக் குறிப்பிடுவது அவசியம். “இவ்வளவு கடினமான சூழ்நிலைகளில் வேறு எந்த ஒரு புத்தகமும் எழுதப் பட்டிருக்காது. அதைப்பற்றி அதன் ரகசியக் கதையை நான் நன்றாக எழுத முடியும். அது மிகப்பெரிய அனந்தகோடியான அளவிலான மௌனமான தொல்லை, ஆவல், கவலை, ஏக்கம், மனவேதனை முதலியவைகளை வெளிப்படுத்திக் காட்டும். தொழி லாளர்களுக்கு அவர்களுக்காகவே எழுதப்பட்ட இந்த நூலை எழுதுவதற்கு எத்தகைய ஒரு தியாகத்தை அவர் செய்யவேண்டியிருந்தது என்பதைப்பற்றி ஸஅவர்கள்] தெரிந்து கொண்டால் நல்லது.” ஜென்னி மார்க்சின் தாய்மனம் “எத்தகைய தியாகம்” என்ற சொற்களுக்குப் பின்னால் எதை நினைத்திருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடியும். ஜென்னி மார்க்சின் நான்கு குழந்தைகள் 1850-57 ஆண்டு களில் இறந்துபோனார்கள் என்பதை நான் இங்கு நினைவுபடுத்த வேண்டுமா?

தொழிலாளர் வர்க்க இயக்கங்களில் கருத்தியல் போராட்டங்கள்

1860-ஐ ஒட்டிய ஆண்டுகள் மூலதனம் நூலின் மூன்று பகுதிகளுக்கான மிகப்பெரிய தயாரிப்புக் காலமாக அமைந்தன. இரவு, பகல், குடும்பத்தின் ஏழ்மை, உடல்நிலை பாராமல் மார்க்ஸ் உழைத்தார். அசுரத்தனமான அந்நூல்கள் அசுரத்தனமான உழைப்பைக் கோரின. “கற்பனாவாதமாக இருந்த சோசலிசக் கருத்துக்களுக்கு மார்க்ஸ் விஞ்ஞான அடிப்படைகளை வழங்கினார்” என்ற அடிக்கடி சொல்லப்படும் வார்த்தைகளை மூலதனம் நூலைக் கொண்டு அர்த்தம் புரிந்துகொள்ளவேண்டும். விஞ்ஞானம் என்று சொல்லுவதன் மூலம் மார்க்சி யத்தை மார்க்சியர்கள் ஒரு வறட்டுச் சூத்திரமாக ஆக்க விரும்புகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் தொழிலாளர் இயக்கத்தினரிடையில் பலவிதமான சோசலிசங்கள் பேசப்பட்டு வந்த அந்த நாட்களில் மூலதனம் என்ற நூல்தான் முதலாளிய உற்பத்தி குறித்த விமர்சனத்தை மிக மிக அற்புதமான வடிவில், மிக மிகப் பிரும்மாண்டமான வடிவில் வடிவமைத்திருந்தது. மூலதனத்தினுள் தொழில் படும் தருக்கவியல் மிக மிக ஆற்றல் கொண்டது. அது குறித்துப் பின்னால் பேசுவோம்.

சோசலிசத்திற்கு மார்க்ஸ் விஞ்ஞான அடிப் படைகளை வழங்கினார் என்ற சொற்களுக்குப் பின்னால் சோசலிசம் பற்றி அன்று வழக்கிலிருந்த பலவகைப் போக்குகளைப் பற்றிய சில முக்கிய விவாதங்களும் அமைந்துள்ளன. மார்க்சியத்திற்கு முன்னோடியாக தாமஸ் மூர், ஃபூரியர், ராபர்ட் ஓவன் ஆகியோரின் கற்பனாவாத முன்வரைவுகள் இருந்தமை பற்றிப் பலர் எழுதியுள்ளனர். இவற்றைத் தாண்டி சோசலிசம், கம்யூனிசம் போன்ற கருத் தாக்கங்களைப் பற்றி அன்று தொழிலாளர் தலை வர்கள் பலரிடையில் வழக்கிலிருந்த பல புரிதல் களைப் பற்றி மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையின் பிற்பகுதியில் எழுதியுள்ளார். இவற்றையும் தாண்டி மார்க்ஸ் அவரது காலத்தில் அவர் சேர்ந்து பணி புரிந்த பல தொழிலாளர் அமைப்புகளில் பேசப் பட்ட கம்யூனிசம் பற்றிய பலவகைக் கருத்துப் போக்குகளோடு தொடர்ந்து உரையாடிக் கொண்டும் போராடிக் கொண்டும் இருந்தார். மீண்டும் மார்க் சியம் என்பது எந்த ஒரு கட்டத்திலும் முடிந்த முடிவாக, மூடிய புத்தகமாக, முழு வரையறை களைக் கொண்ட திட்டமாக இருக்கவில்லை என் பதை இந்த விவாதங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

எது சோசலிசம்? கம்யூனிசம் என்றால் என்ன? அதனை எந்த வர்க்கம் எப்படிச் சாதிக்கும் புரட்சி கரப் போராட்டங்களில் அதன் நேச சக்திகள் யாவை? அரசியல் அதிகாரம் பற்றி புரட்சியாளர்களின் கருத்துக்கள் யாவை? போன்ற பல கேள்விகளில் மார்க்சுக்கும் அவரது தோழர்களுக்கும் இடையில் மிக உக்கிரமான கருத்து மோதல்கள் நிகழ்ந்தன. பிரான்சில் பிளாங்கிஸ்டுகள், ப்ரௌதனிஸ்டுகள், ஜெர்மனியில் லஸ்ஸலியர்கள், இத்தாலியில், ஸ்பெயினில் பகுனி ஸ்டுகள், ரஷ்யாவில் நரோத் னிக்குகள் எனப் பல தரப்பட்ட புரட்சிக்காரர்களோடு மார்க்ஸ் தொடர்ந்து கருத்துப் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தார். அன்றைய தொழிலாளர் தலைவர்களிடையில், கூலி உயர்வு போன்ற பிரச் சினைகளுக்காக வேலை நிறுத்தங்கள் கூடாது என்று கூறியவர்கள் இருந்தார்கள்; தொழிற்சங்கங்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று கூறிய தலை வர்கள் இருந்தார்கள்; அரசை அடியோடு ஒழித்து ஆங்காங்கே தொழிலாளர் சுயநிர்வாக முறையை வழக்கிற்குக் கொண்டு வரவேண்டும் என்று கூறிய தலைவர்கள் இருந்தார்கள்; முதலாளிய அரசு களின் ஒத்துழைப்புடன் தொழிலாளர் கூட்டுறவு நிறுவனங்களை உருவாக்கிக் கொள்ளவேண்டுமே தவிர புரட்சி அது இது என்று சொல்லக்கூடாது என்று கூறிய தலைவர்கள் இருந்தார்கள்; கட்சி என்ற அமைப்பு கூடாது, எல்லாவற்றையும் தொழி லாளர் அமைப்புகளின் எல்லை களுக்குள்ளேயே நடத்திக் கொள்ளவேண்டும் என்று கூறிய தலை வர்கள் இருந்தார்கள்; விவசாயிகளின் புரட்சியே எங்கள் நாட்டிற்குப் பொருந்தும், தொழிலாளர் வர்க்கமெல்லாம் இரண்டாம் பட்சமாகத்தான் என்று கூறிய புரட்சிக்காரர்கள் இருந்தார்கள்.

மேற்குறித்த எல்லாவகையான சோசலிஸ்டு களோடும் தொழிற்சங்க இயக்கத்தாருடனும்தான் மார்க்ஸ் ஒன்றாகி, வேறாகி, உடனாகி நின்று வேலை செய்யவேண்டியிருந்தது. அன்றைய நிலையில் மேலே குறிப்பிட்ட எந்த ஒரு நிலைப்பாட்டையும் அர்த்தமில்லாதது என்று விட்டொழித்துவிட முடியாது. வெவ்வேறு நாடுகளின் சூழல்களையும் அந்நாடுகளில் தொழிலாளர் இயக்கங்களின் வளர்ச்சி நிலைகளையும் அனுபவங்களையும் மேற்குறித்த நிலைப்பாடுகள் குறித்தன. ஒவ்வொரு நிலைப் பாட்டுக்கும் ஏதோ ஒரு நியாயம் இருந்தது.

இத்தகைய பல்வேறுபட்ட நிலைப்பாடுகளுக் கிடையில் மார்க்ஸ் பயணம் செய்தபோது, அவரிட மிருந்த சில நிறைகூறுகளை நாம் சுட்டிக்காட்டி யாக வேண்டும். மார்க்ஸ் பிற எல்லாப் புரட்சிக் காரர்களையும்விட மிகக் கடுமையான உழைப்பாளி யாக இருந்தார். மிகச் சிறந்த அறிவாளியாகவும் இருந்தார். நாம் ஏற்கெனவே இக்கட்டுரையின் தொடக்கத்திலிருந்தே சொல்லிவந்திருப்பதைப் போல, ஒவ்வொரு நிலைப்பாட்டையும் அக்குவேறு ஆணிவேறாகப் பகுத்தாய்ந்து, அவற்றுக்கிடையில் தனது நிலைப்பாடுகளை நிரூபித்துக் காட்டும் திராணி அவரிடமிருந்தது. எந்தப் பிரச்சினையையும் அதன் அடியாழங்களுக்குச் சென்று அவரது வாதங் களை முன்வைக்கும் நுட்பம் அவரிடமிருந்தது.

பிரச்சினைகளை வெற்றுவாதங்களால் வெற்றி கொள்ளும் முறையை அவர் பின்பற்றவில்லை; மாறாக, அப்பிரச்சினையின் முழுப்பரிமாணத்தையும் தோண்டி எடுத்து ஆய்வுசெய்யும் முறை அவருடையது. பிரச்சினைகளை அவற்றின் முழுப்பரிமாணத்தில் காண்பது என்பதற்கு அவரது மூலதனம் நூல் ஒரு சாட்சி. சமூக வரலாறு எனில் அதன் புராதன வடிவம், அதன் பிற வரலாற்று வடிவங்கள், இன்றைய வடிவம், எதிர்காலத்தில் சாத்தியப்படும் வடிவங்கள் குறித்த கணக்குகள் என முழுமையை எட்டுவதே மார்க்சின் அணுகுமுறை. இந்தியாவைப் பற்றி அவர் ஒரு வெகு சனப் பத்திரிகைக்குக் கட்டுரை எழுதும்போதுகூட அந்நாட்டைப் பற்றிய, அந்நாட்டின் வரலாற்றைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் திரட்டிப் படித்து விட்டு எழுதுவது என்பதுதான் அவரது முறையியலாக இருந்தது.

மார்க்ஸ் அவரது இளமையிலிருந்தே சமூகப் புரட்சி குறித்த இடைவிடாத தொடர்ந்த ஆய்வை முழுநேரப்பணியாகக் கொண்டிருந்தார். இளம் ஹெகலியத்திலிருந்து கம்யூனிஸ்ட் அறிக்கைக்கு, கருத்தியல் விமர்சனத்திலிருந்து வர்க்கப் போராட் டங்கள் என்னும் செயல்வடிவத்திற்கு வந்தமை, பின் அதனையே தனது தத்துவத்தின் அடிப்படை யாகக் கொண்டமை, சமூக வரலாற்றைப் பொருள் முதல்வாத நோக்கில் விளக்கியமை, தத்துவார்த்த நிலைப்பாடுகளிலிருந்தும் வரலாற்று அணுகுமுறை யிலிருந்தும் அரசியல் பொருளாதாரம் நோக்கிய நகர்வு, சமகால முதலாளியச் சமூகத்தின் பொருளா தாரத்தைத் தருக்கரீதியான விளக்கமுறைமைக்கும் விமர்சனத்திற்கும் ஆட்படுத்தியமை ஆகியவை மார்க்சை 19 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சிந்தனையாளராக நிரூபித்திருந்தன. மேற்குறித்த சிந்தனா ஓட்டங்களுக்கிடையில் எத்தனை பிசிறுகள், தொடர்ச்சியின்மைகள், போதாமைகள் அவரைப் பொறுத்தமட்டிலும் இருந்தாலும், மார்க்சின் சிந்தனை ஓர் உள் ஒழுங்கைக் கொண்டிருப்பதைக் காணமுடியும். மார்க்சின் சிந்தனை விஞ்ஞான பூர்வமானது என்று கூறப்படுவதன் பொருள் இதுவே.

மார்க்ஸ் மிக ஏராளமாக எழுதினார், ஆனால் மிகக் குறைவாகவே பிரசுரித்தார் என்று ஒரு கருத்து உண்டு. பிரசுரிப்பதில் அவருக்குப் பல பொருளா தாரச் சிரமங்கள் இருந்தன என்பது இது குறித்துச் சிலர் கூறும் விளக்கம். ஆனால் தனக்கு உறுதியாகவும் நிரூபிக்கப்பட்டதாகவும் இல்லாதவற்றை மார்க்ஸ் பிரசுரித்ததில்லை என்றும் ஒரு விளக்கம் சொல்லப் படுகிறது. சமூகப் புரட்சியைப் பற்றி எழுதுபவர் பத்திரி கைகளின் பிரசுரத் தேவைகளுக்கு ஏற்றபடியெல்லாம் பொறுப்பின்றி பிரசுரித்துத் தள்ளக்கூடாது என்பது மார்க்சின் அறமாக இருந்தது என்று சில ஆய் வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

முடிவுரை

மார்க்சின் வாழ்க்கை வரலாறு பல வகை களில் நமக்கு முக்கியமாக உள்ளது. அது ஒரு மிகப் பெரிய புரட்சிக்காரரின் வாழ்க்கை. அது ஒரு மிகப்பெரிய சிந்தனையாளரின் வாழ்க்கை. இருப் பினும், லஸ்சல் என்ற அவரது நண்பர் சொல்லு கிறார்: “புரட்சிகர செயல்பாட்டிற்கான நேரம் நெருங்கி வருகிறதெனில் மார்க்ஸ், இப்போது எழுதிக் குவித்திருப்பவற்றையெல்லாம் விட்டெறிந்து விட்டுப் போராட்டக்காரர்களோடு போய் களத்தில் நின்று கொண்டிருப்பார்.”

மார்க்சியம் என்ற அற்புதமான ஒரு சிந்தனை, அவரது வாழ்க்கை முழுவதிலும் ஒரு தொடர் நிகழ் வாக உருவாகிக்கொண்டிருந்தது. அது எப்போதுமே ஒரு முடிந்த சூத்திரமாக ஆகிவிடவில்லை.

சமூக அரசியல் அசைவுகளில் தேக்கங்கள் ஏற்பட்டபோதெல்லாம் மார்க்ஸ் மேலும் மேலும் சமூக வரலாற்றின் ஆழங்களையும் பரப்புகளையும் அகழ்ந்தெடுத்துக் கொண்டே இருந்தார். வாழ்வை அதன் எல்லாச் சிக்கல்களோடும் புரிந்து கொண்டே ஆகவேண்டும் என்ற பொருள்முதல்வாத இயங்கியல் அவரோடும் எப்போதும் பயணப்பட்டது.

Pin It