எதையும் போற்றிப் புகழ்ந்து பாராட்டி மகிழ்வது நமது தமிழ் மரபு. அதிலிருந்து குறிப்பிடத்தகுந்த விதத்தில் மாறுபட்ட ஒரு நூலாக வெளிவந்துள்ள இந்த நூல் தமிழுக்குப் புதுமை. அக்கறை மிகுந்த ஒரு துணிச்சலான முயற்சி! உலகளாவிய அளவில் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நிகழ்ந்தவை பற்றிய சமூக அறிவியல் அடிப்படையிலான ஆய்வு நூல் என்று இதைக் குறிப்பிடலாம். திறந்த மனத் தோடும். அக்கறையோடும், துணிச்சலோடும் உருவாக்கிய உண்மைக்கு நெருக்கமாக உள்ள ஓர் அரிய நூல் இது! ஏராளமான தகவல்களைத் தகுந்த ஆதாரங்களுடன் முன்வைத்துத் தெரிவிக்கும் இந்த அரிய ஆய்வு நூல் கற்பிப்பவை பலப்பல! அர்ப் பணிப்பும், தோய்ந்த அனுபவங்களும் நிறைந்த தோழர் தா. பாண்டியன் அவர்களின் ஒரு மகத்தான சாதனை இது!
மனித வரலாற்றில் வேகமாக நிகழ்ந்த வளர்சிதை மாற்றங்கள் எல்லாமே கடந்த முந்நூறு ஆண்டுகளைச் சார்ந்தவை. நிலவுடைமை வாழ்க்கை முறை சிதைந்து முதலாளித்துவ வாழ்க்கை முறையின் வளர்ச்சி நிகழ்கின்ற காலகட்டம் இது! அதே சமயத்தில், சோசலிச வாழ்க்கை உருவானதும் இந்தச் சூழலில்தான்.
உழைப்பு, உற்பத்தி, பகிர்வு போன்றவைதான் ஒரு சமுதாய அமைப்பின் அடித்தளம். அந்த உற்பத்தி முறைகள் சார்ந்தே மக்களின் கூட்டு வாழ்க்கைக் குரிய கலாச்சாரப் பண்பாட்டு சித்தாந்தத் தத்து வங்கள் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் படுகின்றன. சமுதாய வடிவங்களுக்குள் தனியுடை மையும், வர்க்க முரண்களும், ஏற்றத்தாழ்வுகளும், சுரண்டலும் தோன்றி வளர்ந்து விரிந்து மனித வாழ்க்கையை அவல நிலைக்கு இட்டுச் செல்லு கின்றன. அதற்கான எதிர்க்குரல்களும், எதிர்வினை களும் வெளிப்பட்டு நிலைமைகளைச் சரி செய்யத் தொடங்குகின்றன. மனித வாழ்க்கையின் இயங்கி யலே இப்படித்தான் வரலாற்றில் ஓர் உயிர்ப்பினை நிலைப்படுத்துகிறது. நெருக்கடி மிகுந்த காலந் தோறும் புதிய புதிய சிந்தனைகள் தோன்றி வரலாற்றின் தொடர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் மாமனிதர்கள் மக்களுக்குள்ளிருந்து தோன்றி வெளிப்படுகிறார்கள் என்பது தான் வரலாறு. அந்த வரலாற்று இயங்குதலில் பொது வுடைமைக் கருத்துக்களை வடிவமைத்து நடை முறைகளையும் அடையாளம் காட்டியவர் கார்ல் மார்க்ஸ்.
“டிரியர் மாவட்டத்தைச் சேர்ந்த டிரியர் நகராட்சி அதிகாரியின் அலுவலகத்தில் ஜனன, திருமண, மரணப் பதிவாளராகிய எனக்கு முன்னால் 1818-ஆம் வருடம் மே மாதம் 7ந் தேதியன்று பிற்பகல் 4 மணிக்கு டிரியரில் குடியுரிமைச் சான்றிதழுடைய திரு.ஹென்ரிஹ் மார்க்ஸ் (வயது 37, மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தொழில்) ஆஜராகி ஒரு ஆண்குழந்தையைக் காட்டினார். அந்தக் குழந்தை வழக்குரைஞராகத் தொழில் செய்கின்ற. டிரியரில் குடியுரிமைச் சான்றிதழுடைய திரு.ஹென்ரிஹ் மார்க்சுக்கும், அவருடைய மனைவி ஹென்ரியேட்டா பிரெஸ்பார்க்குக்கும் மே மாதம் 5-ந் தேதியன்று அதிகாலையில் 2 மணிக்கு டிரியரில் பிறந்ததாகத் தெரிவித்தார். தங்களுடைய குழந்தைக்கு கார்ல் என்று பெயர் சூட்ட விரும்புவதாக அவர்கள் தெரிவித்தார்கள்.
இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் தோன்றினார். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அவர் வகுத்த சோசலிச சமுதாயம் ரஷ்யாவில் நடை முறைக்கு வந்தது. அதன் விளைவாக, உலகளாவிய அளவில் துன்ப துயரங்களை அனுபவித்துக் கொண் டிருந்த உழைக்கும் மக்கள் படிப்படியாக விடுதலை பெற்றுப் புதிய உலகத்தை அவர்களுக்காகக் கட்ட மைக்கத் தொடங்கினார்கள். முதல் கட்டமாக ஆங்கில, பிரெஞ்சு, அமெரிக்கக் காலனி நாடு களாக விளங்கிய பெரும்பாலான அடிமை நாடுகள் விடுதலை பெற்றன. தன்னிச்சையாக இயங்கத் தொடங்கின. உலகளாவிய அளவில் தொடர்ந்து மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்தன. இப்போது, கம்யூனிஸ்டுகள் தலைமையேற்று நடத்திய வர்க்கப் புரட்சிக்கும், முதலாவது சோசலிச அமைப்புக்கும் நூறு ஆண்டுகளாகின்றன.
தொடர்ச்சியான மாற்றங்களின் பின்னணியில் கணக்கற்ற அளவில் உயிர்ச்சேதங்களும், பொருட் சேதங்களும் ஏற்பட்டன. அதன் விளைவாக மனித சமுதாயத்தில் வாய்ப்புக்களும், வசதிகளும் நிறைந்த வாழ்க்கை முறைகள் மக்களிடையே பரவலாகின. வியக்கத்தகுந்த விதத்தில் ஒரே நூற்றாண்டில் மனிதன் சார்ந்த எல்லாவிதத் துறைகளும் வளர்ச்சி அடைவதைக் காண முடிந்தது. இந்த வளர்ச்சிக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தவைதான் பொது வுடைமை இயக்கங்கள்.
“உலகம் முழுவதும் மக்கள் இயக்கங்கள் எழுச்சி பெற்ற போதும், ஜனநாயகப்பாதை மற்றும் புரட்சிப் பாதையில் செல்லும் பொதுவுடைமை இயக்கங்கள் முன்னேற்றத்தைக் காணாமல் பல பத்தாண்டுகளாகச் சரிவைச் சந்தித்துக் கொண் டிருக்கின்றன. இந்தச் சரிவு என்ற தோற்றப்பாடு உண்மைதானா என்ற கேள்வியில் தொடங்குகிறது இந்தப் புத்தகம். அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப் படுகின்றன. அவை பற்றிய விவாதங்கள் சார்பு களுடன் குறுக்கிக் கொள்ளாமல் மனிதகுல விடுதலைக்கான ஆழ்ந்த அக்கறைகளுடன் விரிந்து செல்கிறது.
“உலக, இந்தியப் பொதுவுடைமை இயக்கங்களுக்குள் மீள் பரிசீலனைகள், சுயவிமர்சனங்கள், காலத்திற்கேற்ப அணுகுமுறைகள் என வேகமாக நடைபெற வேண்டிய அவசியத்தை கவனப்படுத்தி ஆக்கபூர்வ விவாதங்களுக்கான தொடக்கப்புள்ளி யாக அமைகிறது இந்நூல்.”
பதிப்புரையில் இந்த நூலின் உள்ளடக்கத் தையும், தேவையையும் புலப்படுத்தும் வகையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அணிந்துரை வழங்கியுள்ள தோழர் ந.முத்துமோகன் இந்த நூலை நான்கு அடுக்குகளாகப் பகுத்து இதன் உள்ளடக்கத்தை எளிமை யாகப் புரிந்துகொள்ளச் செய்கிறார். அதனால், வாசிப்பு அனுபவம் தெளிவாகவும், எளிமையாகவும் உள்ளது.
அதன்படி, முதல் அடுக்கில் மார்க்சியம், சோசலிசம், சமத்துவம் ஆகியவை குறித்து சில அடிப்படையான பிரச்சனைகளைத் தோழர் முன் வைக்கின்றார். மார்க்சியம் குறித்து முன்வைக்கப் படுகின்ற ஆழமான சந்தேகங்களை இவை குறிக்கின்றன.
தொடர்ந்து இரண்டாவது அடுக்கில் ரஷ்யப் புரட்சி ரஷ்ய நாட்டில் சோசலிசம், அதன் வீழ்ச்சி ஆகியவை பற்றிய பிரச்சனைகளைத் தெளிவு படுத்துகிறார்.
அதற்குப்பின், மூன்றாவது அடுக்கில் இந்தியச் சூழல்களைப் பற்றியும், இந்தியச் சூழல்களில் கட்சித் தலைமையின் நிலைப்பாடுகள் குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. கட்சி வரலாற்றின் காலம் முழுவதையும் இக்கேள்விகள் ஊடுருவி நிற்கின்றன.
கடைசியாக, நான்காவது அடுக்கில் உட்கட்சி ஜனநாயகம் குறித்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ரஷ்ய முன்மாதிரியில் அமைக்கப்பட்டது. அது, இந்தியாவின் பல மொழி பேசும் மாநிலங்கள், சாதிகள், மதங்கள், மக்களின் உணர்வுகள் போன்ற சிக்கலான சொந்த எதார்த்தங்களைக் கணக்கில் கொண்டு உருவாக்கப்படவில்லை. ஜனநாயக மத்தியத்துவம் என்பது பொருந்தாத நடைமுறை யாக ஆக்கப்பட்டுள்ளது. இவைகளே உலகப் பொதுவுடைமைப் பாதையைப் புரிந்து கொள்ள இன்றைய கட்டாயத் தேவையாக உள்ளன.
தொடக்கத்திலேயே தோழர் தா. பாண்டியன் மிகமிக முக்கியமான 41 கேள்விகளை முன் வைக்கிறார்.
“இதுவரையில் சுரண்டல் முறையையே கொண்ட சமுதாய அமைப்புக்களும், அதன் காரணமாக ஆதிக்க வர்க்கமுமே ஆளும் சக்தியாக இருந்து வருவதை மாற்றி அமைக்க வேண்டும் - மாற்ற முடியும் என்ற மனிதகுல வரலாற்றின் தவிர்க்க முடியாத இயக்க இயல் வளர்ச்சிப் போக்கின் தீர்ப்பும் ஆகும் என கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாசேதுங், ஹோசிமின், பிடல் காஸ்ட்ரோ என பேரறிஞர்கள் விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து அதன் தத்துவப்படி அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று பலவாக வெடித்துச் சிதறிக் கொண்டிருப்பது ஏன்?”
“முதலாளித்துவம், மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர் வாழ்ந்து மறைகிற காலம் வரையில் பட்டறைத் தொழிலாகவே பால பருவத்தில் இருந்தது. தற்போது முதலாளித்துவம் அளவில் பெருத்திருக்கிறது. தொழில்நுட்பத்திலும் வளர்ந் திருக்கிறது. ஆகவே, நீங்கள் கூறும் இயக்க
இயல் விதிப்படியே அளவு மாறுபாடு குணமாறு பாட்டை ஏற்படுத்துமா இல்லையா?”
“அன்றைய தொழிலாளி வர்க்கம் எந்த உரிமையும் இல்லாமல், வேலைவாய்ப்பும் இல்லாமல் வாடிய காலம், வதைக்கப்பட்ட பருவம். ஆனால் தற்போது பணி உறுதிக்காப்புச் சட்டம் இருக்கிறது. ஊதியமோ பல மடங்கு உயர்ந்திருக்கிறது. போனஸ் வாங்கு கிறார்கள். தொழிலாளர்களின் குழந்தைகள் பல துறைகளில் உயர் பொறுப்புக்களுக்குச் செல் கிறார்கள். ஆகவே, தொழிலாளர்களும் குண மாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர் என முடிவுக்கு வரலாமா?”
“கம்யூனிஸ்டுக் கட்சிகள் ஐம்பது ஆண்டுகட்கு மேலாக ஆட்சி செய்த நாடுகளிலும் மதவாத சக்திகள் பலம் பெற்றது எப்படி?”
“சீன நாடு தற்போது கடைப்பிடித்துவரும் கலப்புப் பொருளாதாரக் கொள்கையை எவ்வாறு மதிப்பிடுவது?”
“அதே வழிமுறையை இந்தியாவில் கடைப் பிடிப்பதை எதிர்ப்பது ஏன்? அதை ஏற்கும் இதர கட்சிகளை விமர்சனம் செய்வது ஏன்?”
“சமுதாய வளர்ச்சிக்கான கம்யூனிஸ்டுக் கட்சியின் இன்றைய நிலை என்ன?”
இதுபோன்ற கேள்விகளை முன்வைத்து அவற்றிற்கு விடை காணும் வகையில் தங்குதடை யில்லாத தாராளமான தன்னிச்சையான ஆய்வு களை வரலாற்று இயங்கியல் கண்ணோட்டத்தில் தோழர் மேற்கொள்கிறார். அதற்கு, ஆதாரமாக ஏராளமான தகவல்களையும், தடயங்களையும் முன்வைத்து விளக்கம் அளிக்கிறார்.
வரலாற்றுக் கண்ணோட்டத்தில் சமுதாய இயங்கியலை ஆய்வு செய்வது அறிவியலுக்கு உகந்ததாக உள்ளது. இங்கிலாந்தில் தொடங்கிய தொழில்புரட்சியைத் தொடர்ந்து தோன்றிய முதலாளித்துவத்தின் இன்றைய வளர்ச்சி வரை நிகழ்ந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை விளக்குகிறார்.
“முதலாளித்துவ அமைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படுவதில் வரும் உபரி இலாபத்தை மூலதனம் போட்ட ஒருவர் அபகரித்துக் கொள்கிறார். உபரி மதிப்பை உற்பத்தி செய்யப் பாடுபட்ட பாட்டாளி களுக்கு கூலி என்ற பெயரால், அவர்கள் பெருக்கிய மதிப்பில் ஒரு சிறு தொகை மட்டுமே தரப்படுகிறது. அன்று முதல் இன்றுவரை முதலாளிகள் இதற்குக் கூறும் விளக்கம் என்னவென்றால்
1. தொழிற்சாலை கட்ட நிலம் வாங்கியது நான்.
2. அதன் மீது தொழிற்சாலைக்கான கட்ட மைப்பை உருவாக்கியது நான்.
3. உற்பத்தி செய்யும் கருவிகளை, இயந்திரங் களை வாங்கிப் பொருத்தியதும் நான்.
4. சரக்கு உற்பத்தி செய்ய மூலப் பொருட் களை சேகரித்துக் கொண்டு வந்து சேர்த்ததும் நான்.
5. அது சரக்கான பிறகு விற்றுப் பணம் பெறுகிறபோது நான் இதுவரை செல வழித்த பணத்துக்கு உரிய வட்டியை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அரசாங்கம் விதிக்கும் வரிகளையும்
கட்ட வேண்டியிருக்கிறது. நிர்வாகம், விளம்பரம், விற்போருக்கு சன்மானம் என்பதோடு இந்தியா போன்ற நாட்டில் ஆளும் கட்சியினருக்கும், கத்தி காட்டி மிரட்டும் முரடர்களுக்கும் கப்பம்
கட்ட வேண்டியிருக்கிறது, ஆகவே, தொழிலாளிகள் எட்டு மணிநேர வேலை செய்தால், நான் பதினான்கு மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.”
இவ்வாறு முதலாளித்துவத்தின் சார்பில் முன்வைக்கப்படும் நியாயங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு நடைமுறையில் காணப்படும் பிரச்சினைகளை ஆய்வு செய்கிறார்.
“நாம் இப்போது எழுதுவது முடிந்த முடிவான கருத்து அல்ல! உண்மையைக் கண்டறிய என் உள்ளத்தில் எழும் எண்ணங்களை, கேள்விகளை உங்களோடு பகிர்ந்து கொண்டு விவாதிக்கவே விரும்புகிறேன்!”
இது குறித்து தன்னுடைய முயற்சியையும், நோக்கத்தையும் வெளிப்படையாக தோழர் தெரி விக்கிறார். இந்தியாவில் இடதுசாரி இயக்கம் தோன்றிய பின்னணியை இவர் தெளிவுபடுத்து கிறார்:
“இந்தியாவில் அரசியல் கட்சிகள் அமைக்கப் பட்டு இயங்கத் தொடங்கியது 1858-ஆம் ஆண்டி லிருந்து தான். அதுவும் ஹியூம் என்ற வெள்ளை யரால், படித்து ஆங்கிலம் பேசக்கூடிய இந்தியர் களை மட்டும் திரட்டி சமூகப் பிரச்சினைகள் பற்றிப் பேசுகிற ஒரு ‘மன்றம்’ போலத்தான் தொடங்கப் பட்டது. அந்த மன்றத்தில் கூடியோர் மக்களின் கோரிக்கைகளை ஆளும் பொறுப்பில் இருந்த வெள்ளை அதிகாரிகள் தீர்த்து வைத்து உதவும்படி கேட்டு மனுக்களை சமர்ப்பித்து வந்தனர். காலப் போக்கில் இங்கிலாந்து சென்று படித்துத் திரும்பிய இந்தியர்களில் சிலர் அரசியல் பற்றியும் அங்கு பேசத் தொடங்கினர். உதாரணமாக, தாதாபாய் நௌரோஜி, அரவிந்தர் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
“1857-இல் அந்நிய ஆட்சியை எதிர்த்து மன்னர்கள் - மகாராணிகள் (ஜான்சிராணி லட்சுமி பாய்) நடத்திய பெரும் போராட்டங்கள் அரசியல் கட்சிகள் என்ற பெயர் இல்லாமலே நடந்தன. அதைத்தான் இந்தியாவில் சுதந்திரத்திற்கான முதல் போர் என மார்க்ஸ் எழுதியுள்ளார். அதை ஆங்கிலேயர்கள் ‘சிப்பாய்க் கலகம்’ என்று மட்டும் வர்ணித்தனர். அந்தப் போரில் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்ற வேறுபாடில்லாமல் அந்நிய ஆட்சி எதிர்ப்பு என்பதில் இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்டும் போராடியதையும் மார்க்ஸ் எழுதி யுள்ளார்.
இதுபோலவே, உலகளாவிய அளவில் முறை யான ஆதாரங்களை முன்வைத்து மனித சமுதாய வளர்ச்சியை இவர் அடையாளப்படுத்துகிறார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்டுக் கட்சி போன்றவற்றின் வளர்ச்சியை இனம் காண் கிறார்.
முதலாவது மற்றும் இரண்டாவது உலகப் போர்கள் நிகழ்ந்ததற்கான அரசியல், பொருளாதார, சமுதாயச் சூழல்களையும், சுருக்கமாகவும், தெளி வாகவும் விளக்குகிறார்.
சோவியத் யூனியனின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் உலகளாவிய அளவில் அது நிகழ்த்திய மாற்றங்களையும் சாதனைகளையும் வியக்கத்தகுந்த விதத்தில் காரண காரியங்களோடு புலப்படுத்துகிறார்.
“சோவியத் மக்கள் மூன்று கோடிப்பேர் உயிரைப் பறிகொடுத்து, நாஜி எனும் இனஆதிக்க - ஆரியக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைத்த தால் மனிதகுலமே விடுதலை கீதம் பாட முடிந்தது” என்பதையும் இவர் இனம்காட்டுகிறார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றத்தை இவர் குறிப்பிடத் தவறவில்லை. “கடந்த 1925 டிசம்பர் 26, 27 ஆகிய நாட்களில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில், ஒரு சிறிய அறையில் (வெங்காயக் கிடங்கு) இரகசியமாகத்தான் நிறுவன மாநாடு நடத்தப்பட்டது. அங்குதான், கட்சிக்கு இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி எனப் பெயர் சூட்டப்பட்டது. செங்கொடியில் அரிவாள், சுத்தியல், மூலையில் நட்சத்திரம் பொறித்த கொடி என்பதும் தீர்மானிக்கப் பட்டது.”
“நிறுவன மாநாட்டிலேயே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, உலக கம்யூனிஸ்டு இயக்கத்தின் ஒரு அங்கம் என அறிவிக்கப்பட்டது. அதாவது, இந்திய நாட்டுக்கு மட்டுமான கட்சி (இயக்கம்) அல்ல” என்பது அறிவிப்பாக வந்தது.
அதைத் தொடர்ந்து விடுதலை பெற்ற இந்தி யாவில் கம்யூனிஸ்டுக் கட்சியின் திட்டங்களும், நடைமுறைகளும் மக்களுடைய வாழ்க்கையில் நிகழ்த்திய மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் தகுந்த குறிப்புக்களோடு வெளிப்படுத்துகிறார். அதே சமயத்தில் கம்யூனிஸ்டுகளின் ஒப்பற்ற தியாகங்களையும் நினைவு கூர்கிறார்.
இந்திய விடுதலைக்குப் பிறகு நிகழ்ந்த தேர்தல் களில் அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வி களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். அதில், ஜன நாயகத்தை ஏற்றுக்கொண்ட இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் வெற்றி தோல்விகளைச் சுட்டிக் காட்டு கிறார்.
உலகளாவிய அளவில் சோவியத் யூனியன் மற்றும் சீனாவின் உறவுகளுக்கிடையில் நிகழ்ந்த பிளவுகள் உலகக் கம்யூனிஸ இயக்கங்களைப் பிளவு படுத்திய செய்திகளை முன்வைத்து அதற்கான காரண காரியங்களை விளக்குகிறார். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்து ஒரு பிரிவினர் தத்து வார்த்த அடிப்படையில் பிரிந்து சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் இயங்கத் தொடங்கினர். அவற்றின் விளைவுகளையும், எதிர்க் கட்சிகளின் நடைமுறைகளையும் இவர் ஆய்வுக்கு உள்ளாக்குகிறார். இந்தியாவின் புதிய வளர்ச்சியையும் இவர் கணக்கில் எடுத்துக்கொண்டே விரிவான ஓர் ஆய்வை நிகழ்த்துகிறார்.
“ஒரு ஆட்சியும், கட்சியும் 1990இல் சோவியத் யூனியனில் வீழ்ச்சியடைந்தது பலரையும் அதிர வைத்தது. 1917இல் உலகையே எழுப்பி நிறுத்திய காலம் மாறி 1990-இல் அனைவரையும் கலங்க வைத்துப் பல கேள்விகளையும் எழுப்பி விட்டிருக்கிறது.”
“1990 - தொடங்கி 1994க்குள் சோவியத் ஒன்றியம் ஜெர்மன் குடியரசு, செக், யுகோ, போலந்து, ஹங்கேரி, அல்பேனியா, பல்கேரியா, ருமேனியா ஆகியவற்றில் ஆட்சி நடத்தி வந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆட்சிப் பொறுப்பை இழந்தன. கட்சிக் கட்டமைப்பையும் நிலைகுலைய விட்டன. இதனால், எழுப்பப்படும் கேள்விகள் பலவாக இருப்பினும் மிக முக்கியமான கேள்விகளுக்கு மட்டும் விடை காண முயல்வோம்.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, நவீன காலனியாதிக்கம் உலகமயமாதல், தாராளமய மாதல், புதிய தொழில்நுட்பம் போன்ற கருத்துக் களின் வாயிலாக புத்துயிர் பெற்று வளர்கிறது.
ஒரு புதிய சூழலில் இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் கம்யூனிஸம் குறித்த கேள்விகளை பிடல் காஸ்ட்ரோவின் முன்வைத்து அவருடைய கருத்துக் களை அறிந்து அவற்றை ஒரு பேட்டியாக இந்த ஆய்வு நூலில் இணைத்திருக்கிறார் தோழர்.
“புரட்சிகர விழிப்புணர்வும், புரட்சிகரக் கொள்கைகளும், புரட்சிகர வழிமுறைகளும் இல்லாமற் போனதுதான் ஐரோப்பிய சோசலிச நாடுகளை நாசமாக்கியது. நான் அப்படித்தான் நம்புகிறேன்” என்ற ஒரு முடிவுக்கு வருகிறார் பிடல் காஸ்ட்ரோ.
இந்நிலையில் தோழர் தா. பாண்டியன் சாராம்சமாக ஒரு சில கருத்துக்களை உறுதியுடன் முன்வைக்கிறார்:
“எனவே, கம்யூனிசத்திற்கு வருங்காலம் உண்டா? இனியும் அது தேவையா? என்று கேட்போர் அதை மாற்றி மனித குலத்திற்கு வருங்காலம் உண்டா? உண்டெனில் அதைச் செய்யப் போவது யார்? எனத் தேடிக் கூற வேண்டும்.”
“செல்வம் உற்பத்தியாக உதவும் மூலத் தாய் இயற்கை. அது வடிவம் பெற உதவுவது மனித உழைப்பு. இந்த இருவரையும் விடுத்து உழைப் போடு, உற்பத்தியோடு சம்பந்தம் இல்லாத மூன்றாவது சக்தியான முதலாளி எவ்வாறு எப் போது, செல்வத்திற்குச் சொந்தக்காரன் ஆனான்?”
“எனவே, சமுதாய மாற்றத்தை விஞ்ஞானக் கண்கொண்டு மதிப்பிட வேண்டும். சாமியாரிசப் பார்வை கூடாது. இந்த வகையில், மனித குலம் முன்னோக்கி முன்னோக்கியே முன்னேறி வருகிறது. அது என்றும் பின்னோக்கிப் போனதுமில்லை; அது போகவும் போகாது.”
அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆழமாகவும், விரிவாகவும் ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த அரிய ஆய்வு நூல் ஓர் அருமையான தகவல் களஞ்சியம்.
பொதுவுடைமையரின் வருங்காலம்?
ஆசிரியர்: தா.பாண்டியன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,
அம்பத்தூர், சென்னை - 600 098
தொடர்புக்கு : 044 - 26251968
விலை: ` 250/-