குமரி ஆதவன் கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர். சமகால எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். அவரின் சமீபத்திய வரவு ‘ஆட்டுக்குட்டியின் அலறல்’. வேரல் புக்ஸ் வெளியீடாக வந்திருக்கும் கவிதைத் தொகுதி.

வாழ்கையைப் போலவே மொழியும் பன்முகப்பட்டது. பன்முகப்பட்ட வாழ்க்கை, மொழிகளில் தன் சொந்த முற்றத்தில் கொஞ்சம் எடுத்து இந்தப் பிரதியின் வழியாகத் தந்திருக்கிறார் ஆதவன்.

அழிந்துபோன பால்யம், நிறுவன கிறிஸ்தவ மதம் இவற்றைத்தான் பிரதியின் பெரும்பாலான கவிதைகள் பிரதிபலிக்கின்றன. பால்யத்தை எழுதுகையில் ஓர் இழப்பின் வலியையும் நிறுவனப்படுத்தப்பட்ட மதத்தை எழுதும்போது அறம்சார் சீற்றத்தையும் கவிதைகளுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். வெற்றியும் பெற்றிருக்கிறார்.

kumari aadhavan Aattukuttiyin Alaralநாவலில் இடம்பெறுவதுபோல் ஏராளமான கதாபாத்திரங்கள் கவிதைப் பிரதிக்குள் வந்து செல்கிறார்கள். அருளாயிப்பாட்டி, காளியம்மா, அவரின் பீடி, மரியம்மா, உறவுத்தா, அவரின் மீன் கூடை என்று பெண் கதாபாத்திரங்கள்; பானை உடைச்சான் தாத்தா, ரெத்தினம் தாத்தா, ஆசான், ராப்பாடி, வெள்ளை சாகிப்பு, அப்பா என்று ஆண் பாத்திரங்கள்; இவர்கள் போக மணி, பத்தாயம், பனைமரம், உலக்கை என்று புழங்கு பொருட்களும் இயற்கையும் பிரதிகளில் இடம்பெறுகின்றன.

இவர்கள் ஒவ்வொருவரின் வழியாகவும் தொலைந்துபோன தன்னுடைய கிராமத்தை அவர் மீண்டும் எழுத்தின் வழியாக மீட்டுருவாக்கம் செய்ய முயற்சித்திருக்கிறார். நம்முடைய பார்வைக்கு கிராமம் என்பது இயல்பாக எந்தவிதமான பாகுபாடும் பார்க்காத நிலமாய்த் தோன்றும். ஆனாலும் அந்தக் கிராமம் எப்படி இயல்பற்றும் இருந்தது என்பதைக் கவிதையின் பல்வேறு குரல்கள் நமக்கு உணர்த்தி விடுகின்றன.

தலைச்சுமடில் மீன்விற்கும் பெண்ணை முக்குவச்சி என்றுதான் பொதுசமூகம் பார்த்தது. உறவுத்தாவாக பார்ப்பது எல்லாம் பெரும்பேறு. முக்குவச்சி என்பது வெறும் தொழில்சார் அடையாளம் மட்டுமல்ல. அந்த அடையாளத்தின் மீது சுமத்தப் பட்டிருக்கும் நாற்றம், சுத்தம், அசுத்தம் உள்ளிட்ட பண்பாட்டு மதிப்புகளையும் உள்ளடக்கியது. ஒவ்வொருவரின் சாதி குறித்து அறிந்து கொண்டே மனிதர்கள் எப்படி அறியாதவர்கள் போல் இயல்பாக இருந்தார்கள் என்பதை ஆதவனின் கவிதைகள் நமக்குக் காட்டித்தருகின்றன.

ஒருகாலத்தில் உள்ளூர் பெண்களின் பிரசவம் பார்க்கும் மருத்துவச்சியாக இருந்து பிறகு காஜாபீடி வலித்துக்கொண்டே உடல் உழைப்பால் தன்னுடைய வாழ்க்கையைக் கடத்திச்செல்லும் காளியம்மா, நாயர் வீட்டில் வேலை செய்கிறார், தண்ணீர் எடுக்கிறார், அவர்கள் வீட்டு அழுக்குத் துணிகளை துவைக்கிறார். வயோதிகம், மரணம், உடல் எரித்தல் என்று அந்தக் கவிதையில் வாழ்ந்து முடிக்கிறாள். வாழ்ந்து முடிக்கும் காளியம்மா அம்பட்டச்சி காளியாகவே கடைசியில் மிஞ்சுகிறாள்.

“தட்டான்குளக்கரையில் காளியம்மா எரிகையில் / ஒரு நூற்றாண்டுக்கான காஜா பீடியும் / சேர்த்தே புகைத்ததாய் ஒரு நினைவு;/ விடாது பற்றிப்படர்ந்து/ கொளுப்பேறிக்கிடந்த/ விஷச்செடி அருகே நின்ற கூட்டம் சொன்னது/ அம்பட்டச்சி காளி எரிகிறாளென்று” (ப.60)

தவறவிட்ட பால்யம், கவிதை சொல்லி­யிடமிருந்து மட்டுமல்ல, மண்ணில் இருந்தும் தவறி­விட்டது. அதன் அழுகுரலை கேட்கும் நிலையை நம்முடைய செவிப் புலன் இழந்தும் விட்டது இல்லாவிட்டால்,

“ஏதோவொரு சுழல் காற்று/ காதுகிளியும் அலறச்சத்தம் / காக்காய்களின் அழுகை / குயில்களின் முகாரி பாட்டு / வவ்வால்களின் ஓலம் / இவற்றிற்கிடையில் கர்ஜித்தன பனைகள்” ( ப.51) இவற்றுள் ஒன்று கூட நமக்குக் கேட்காமல் இருந்திருக்குமா?

பால்யத்தை எழுதும்போது எழுதுபொருள் சார்ந்த எதனையும் விட்டுவிடக்கூடாது என்னும் எண்ணத்தில் மேய்த்துக் கொண்டிருப்பவனின் கையில் இருந்து கயிறு நழுவும்போது கால்நடை தன்போக்கில் செல்வதுபோல் கவிதையும் ஆங்காங்கே அதன்போக்கில் செல்கின்றன. ஒரு காலத்தில் குருவிகள் இருந்தன, பானை உடைச்சான், கலப்பை, பனைமரம் பேசிய கதை, காளியம்மாவும் காஜா பீடியும், பாட்டியின் சமையலறை, செபமாலையோடு அப்பா என பல கவிதைகள் இந்தச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளன.

தொகுப்பின் இன்னொரு பகுதி கத்தோலிக்க கிறிஸ்தவம் மீதான பார்வை. நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களைப் பொறுத்தவரை அவற்றுள் இருக்கும் சிக்கல்கள் நுண் அடுக்குகளுக்குள் ஒளிந்து எளிய மக்களை வேட்டையாடுகின்றன. திருச்சபைகள் வணிகத்தை மையப்படுத்திய செயல்பாட்டை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கல்வி (குறிப்பாக சுயநிதி கல்வி நிறுவனங்கள்), மருத்துவம், இதர தொழில்கள் என்று அது பரந்து கிடக்கிறது. இவற்றின் வழியான மூலதனக் குவிப்பு, அதன்மீதான அதிகார மோதல் என சபைகளின் அரசியல் மாறி­ விட்டது. பல்வேறு சிக்கல்கள் உருவாகி அது அதிகாரப் படி நிலைகளையும் எளிய மக்களையும் பாதிக்கத் தொடங்கி விட்டன. இவற்றை ஆழமாக பதிவு செய்துள்ளார் ஆதவன். ஆனால், கத்தோலிக்க மதம் சாராத ஒரு வாசகனுக்கு சில சொற்கள் பொருள்மயக்கம் தரும் அவற்றைத் தவிர்த்திருக்கலாம். சிக்கலில் சாமிகள் என்னும் கவிதை இவ்வகைப்பட்டது. சாமி என்னும் சொல் கத்தோலிக்கத்திற்கு வெளியில் என்னவாகப் புரிந்து கொள்ளப்படும் என்னும் கேள்வியும் எழுகிறது.

நிறைவாக தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் முதல் கவிதை. அந்தக் கவிதையின் தலைப்பே தொகுப்பின் தலைப்பாகவும் இருக்கிறது. ‘ஆட்டுக்குட்டியின் அலறல்’. ஆப்ரஹாமிய மதங்கள், நம்பிக்கைகளுக்குள் இருக்கின்ற தொன்மம் ஒன்றை எடுத்து கவிதையாக்கி இருக்கிறார் கவிஞர். ஆப்ரஹாமின் பக்தியை சோதிக்க விரும்பிய கடவுள் அவருடைய மகனை தனக்காகப் பலியிடச் சொன்னார். கடவுளின் வாக்கினை செயல் படுத்த ஆப்ரஹாம் முற்படும்போது கடவுளால் தடுத்தாள் செய்யப்பட்டு மகனுக்குப் பதில் ஆடு பலி கொடுக்கப்பட்டது என்பது தொன்மம்.

மேய்ப்பன், ஆடு, மந்தை போன்ற சொல்லாடல்கள் ஆப்ரஹாமிய மரபுக்குள் தொடர்ந்து புழங்கப்பட்டு வருகின்றன. மோசே, இயேசு போன்ற தூதர்கள் மேய்ச்சல் சார்ந்து அடையாளப்பட்டார்கள். எப்போதும் மேய்ப்பர்கள் பத்திரமாக இருக்கிறார்கள். அல்லது கடவுளின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். ஆட்டுக்குட்டிகள்தான் பாவம் எப்போதும் பலிபீடம் செல்கின்றன. தாய் ஆட்டின் கதறலும் குட்டியின் கதறலும் ஒரு போதும் கடவுளின் வெளியில் பிரவேசித்ததில்லை. குஜராத்தில் என்றாலும், பாலஸ்தீனத்தில் என்றாலும், மணிப்பூரில் என்றாலும், காஷ்மீரில் என்றாலும் குட்டிகளும் தாய்களும் சாகக்கடவான்கள்.

இந்தத் தொகுப்பை அன்பு அண்ணன் ஹெச்.ஜி.ரசூல் அவர்களுக்கு அர்ப்பணித்து இருக்கிறார். நிச்சயம் அவர் மகிழ்ந்திருப்பார்..

(ஆட்டுக்குட்டியின் அலறல், குமரி ஆதவன், விலை : 160 ரூ. வெளியீடு : வேரல் புக்ஸ், சென்னை.)

ஹமீம் முஸ்தபா