kerala ladies

அன்றைய கேரளத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் ‘மருமக்கள் தாயமுறை’ என்றொரு முறை வழக்கத்தில் இருந்து வந்தது. மருமக்கள் தாய முறை என்றால் ஒரு குறிப்பிட்ட குலத்திலுள்ள அல்லது சாதியைச் சார்ந்தவர்களுடைய பரம்பரைச் சொத்து, அந்தக் குடும்பத்திலுள்ள குடும்பத் தலைவரின் மறைவிற்குப் பிறகு (அவருக்கு ஆண் வாரிசுகள் இருந்தாலும் கூட) அவருடைய பிள்ளை களுக்குப் போய்ச் சேருவதற்குப் பதிலாக அவருடைய உடன்பிறந்த சகோதரிகளின் வயிற்றில் பிறந்த ஆண்பிள்ளைகளுக்குப் (மருமக்களுக்கு) போய்ச் சேர்ந்து விடும்.

இந்த முறை பின்னர் ‘மக்கள் தாயமுறை’யாக மாறியது. இதன்படி, குடும்பத் தலைவரின் மறைவுக்குப் பின்னர் அந்தக் குடும்பத்தின் சொத்து முழுவதும் முறைப்படி பெற்ற பிள்ளைகளுக்குப் போய்ச் சேரும்.

மேற்கண்ட இரண்டு முறைகளில் கேரளத்தில், மருமக்க தாயமுறையே நீண்ட காலமாக பின்பற்றப் பட்டு வந்தது. இந்த முறை, குறிப்பாக சாதிப்படி களில் மேல்தட்டு மக்களான நம்பூதிரி குலத் தினரிடையேயும், நாயர்குல மக்களிடையேயும் தான் அதிகமாகக் காணப்பட்டு வந்தது. அன்றைய காலகட்டத்தில் கேரளம் முழுவதும் இந்த மக்கள் பிரிவினரின் கைகளில்தான் இருந்து வந்தது.

கேரளத்தில் இருந்தது போல் தமிழ்நாட்டிலும் இந்த முறை வழக்கத்தில் இருந்திருக்கலாம் என, யூகித்தறிய முடிகிறது.

உதாரணத்திற்கு, தமிழகத்தின் தென்பகுதி யான நாஞ்சில் நாட்டில் வழக்கத்திலிருந்த இந்த முறையினால் தமிழர் குடும்பங்கள் சீரழிவதையும், சிரமப்படுவதையும் கண்டு, அந்த முறையை மாற்றி யமைக்க வேண்டும் என்ற அவாவினால் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை ‘மருமக்கள் வழி மான்மீயம்’ என்ற ஒரு நையாண்டி இலக்கிய நூலையே எழுதி இருக் கிறார். மட்டுமல்ல; இந்த மருமக்க தாயமுறையை மாற்றியமைக்கும் காரியத்தில் தமிழர்களை ஈடுபடுத்தி வெற்றி காணச் செய்வதற்கும் இந்த நூல் பேருதவி புரிந்தது.

இது ஒருபுறம் இருக்க, ஒரு குடும்பத்தில் திருமணம் நடந்து முடிந்ததும், தாலி கட்டிய பெண்ணை, மாப்பிள்ளைப் பையனுடன் அவனுடைய வீட்டிற்கு அனுப்பி வைப்பதுதான் இன்றைய வழக்கம். ஆனால், கேரளத்தில் திருமணத் திற்குப் பிறகு தாலி கட்டிய மாப்பிள்ளைப் பையன், பெண் வீட்டிலேயே தங்கிவிடுவான். மாப்பிள்ளைப் பையனின் குடும்பத்தில் விசேஷமாக ஏதாவது நடைபெறும் நாட்களிலும், பண்டிகை நாட் களிலும் மட்டும் தான், அவன் தன் குடும்ப வீட்டிற்கு வந்து போவது வழக்கம்.

இந்தக் குடும்ப உறவுகளின் அடிப்படையில் கேரளச் சமூகத்தை எடுத்து ஆராயும் போது, பண்பாட்டு ரீதியாக சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

அதாவது தனிச்சொத்துடைமை அதிகமாக உள்ள ஒரு குடும்பத்தில் திருமணத்தின் பொருட்டு அந்தக் குடும்பத்தின் சொத்துக்கள் பிரிந்து இன்னொரு குலம் அல்லது சாதியினரின் கைகளில் போய்ச் சேருவதைத் தடுத்து நிறுத்துவதற்காக நிலவுடைமைச் சமூக அமைப்பின் போது அரச பரம்பரையினராலும், மேல்தட்டுப் பிரிவினராலும் உருவாக்கப்பட்ட ஒரு வழக்கமாக இது, இருந்திருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.

ஒரு காலகட்டம் வரையில் மேல்தட்டிலுள்ள நம்பூதிரி குலத்து மக்களிலிருந்து கீழ்த்தட்டிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர் வரையில் இருந்து வந்த இந்த மருமக்க தாயமுறை, இப்போது வழக் கொழிந்து, மேல்தட்டைச் சார்ந்த நாயர்குல மக்கள் பிரிவினரிடையே மட்டும்தான் (அதுவும் சிறிய அளவில்) காணப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் உச்சகட்டத்திலிருந்த இந்த முறை, கால வளர்ச்சிப் போக்கில் இன்று புறந்தள்ளப் பட்டு விட்டது. இப்படி, அது புறந்தள்ளப்பட வேறு பல சமூக, வரலாற்றுக் காரணங்களும் இருக்கலாம்!

இதே குடும்ப உறவுமுறை இன்று தமிழ் நாட்டிலும் பரவலாகக் காணப்படுகிறது. ஆனால், அது மருமக்க தாயமுறையல்ல; மக்கள் தாயமுறையாகும்.

அதாவது, ஒரு குடும்பத்திலுள்ள இளம் பெண்ணை அதே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மாமனுக்குத் தாலிகட்டி வைப்பார்கள். காரணம் என்னவென்றால் அந்தப் பெண்ணுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் பிறக்கும் ஆண் வாரிசுக்குத் தான் அந்தக் குடும்பத்தின் பூர்வீகச் சொத்து போய்ச் சேர வேண்டும். அந்தக் குடும்பத்திற் குள்ளே வேறொரு குடும்பத்தைச் சேர்ந்தவரோ அல்லது வேற்றுச் சாதியினரோ திருமணத்தின் பொருட்டு உள்ளே புகுந்துவிடக்கூடாது, என்பதே இதன் உள்நோக்கமாக இருக்கலாம்.

(ஒரு குடும்பத்திலுள்ள பெண்ணொருத்தி சாதிவிட்டு சாதியோ, குலம் விட்டு குலமோ திருமணம் செய்துகொண்டால், அந்தச் சாதி அல்லது குலத்திற்கு ஏற்படும் மானபங்கத்தை விட சாதிக்கலப்பிற்கு அல்லது குலக்கலப்பிற்கு அப்பெண் வித்திடுகிறாள் என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்). அத்துடன், அப் பெண்ணின் வயிற்றில் பிறக்கும் வாரிசு, ஆண் வாரிசாக இருந்தால் முறைப்படி அவனுக்கும் அக் குடும்பத்தின் பங்கு போய்ச் சேர வேண்டுமல்லவா!

இது போக, அந்தப் பெண்ணின் சாதியினர் அல்லது குலத்தினர் காலம் காலமாக கட்டிக் காத்து வந்த குலமரபும் சீரழிந்துவிடக்கூடாது என்ற பயமும் இதனுள் அடங்கி இருப்பதை நாம் உணரமுடிகிறது.

இம்மாதிரி சாதிவிட்டுச் சாதி, குலம்விட்டு குலம் நடைபெறும் திருமணத்தின் பொருட்டு வேறு சாதி உறவுகள் அச்சாதிக்குள் நுழையும் போது குலமரபு அழிவதோடு அங்கே சாதிக் கலப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

‘அகமண வழக்கம் அல்லது கதவடைத்த அமைப்பு - தனித்து இயங்குவது இந்து சமூகத்தின் போக்காக (Fashion) இருந்தது. அகமண வழக்கம் பிராமணர்களிடம் பிறந்தது. பின்னர் ஏனைய பிராமணர் அல்லாத உட்பிரிவினரும் அல்லது வர்க்கத்தினரும் முழு விருப்பத்தோடு பின்பற்றத் தொடங்கியதால் அவர்களும் அகமண வழக்கத் தினராயினர்’ என்பார், டாக்டர் அம்பேத்கார், இந்தியச் சாதியமைப்பு பற்றி வரலாற்று ரீதியாக விளக்கும் போது.

ஆக, இந்தச் சமூக உறவுமுறை இப்படித்தான் மேலிருந்து கீழ்த்தட்டு வரையில் படிப்படியாக இறங்கி வந்திருக்க வேண்டும்.

பண்டைய கேரள வரலாற்றைப்பற்றி எழுதிய கேரள வரலாற்று அறிஞரான திரு. இளம்குளம் குஞ்ஞன் பிள்ளையும் இதே கருத்தை முன்வைப் பதைக் காணலாம்.

கலை இலக்கியப் பண்பாட்டு ஆய்வாளரும், தத்துவ ஆசிரியருமான பேராசிரியர் நா. வானமாமலை அவர்களும் இது சம்பந்தப்பட்ட ஒரு குறிப்பைத் தருகிறார்.

அதாவது “.....தொடக்கக் காலத்தில் புதிதாகக் காடுவெட்டித் திருத்தவும், கால்வாய் வெட்டவும் ஆட்கள் தேவையாயிருந்தது. பக்கத்து குறிஞ்சி நிலத்தையும், முல்லை நிலத்தையும், மருத நிலத் தலைவர்கள் கைப்பற்றத் தொடங்கினார்கள். ஒவ்வொரு வேளை குறிஞ்சி மக்கள் பெண்களையும், முல்லை மக்கள் பெண்களையும் மணந்து கொண் டார்கள். மணம் செய்து கொடுக்க மறுத்தால் போர் செய்து ஆக்கிரமித்துக் கொண்டார்கள்” என்கிறார், பேராசிரியர் நா.வா அவர்கள்.

நிலவுடைமைச் சமுகம் சாதிய ரீதியாக இறுகி, சிக்கலடையாத சங்க காலச் சமூகத்தில் கூட அகமண முறை என்ற பெயரில் அவ்வளவு கெடுபிடி இருந்த தாகத் தெரியவில்லை.

கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் நிலவுடைமை சமூக அமைப்பு உருவாகி, வளர்ச்சி பெறுவதற்கு முன்னால் ஒரு குலத்திற்கும் இன்னொரு குலத் திற்கும் இடையே, திருமண விஷயத்தில் ‘கொடுக்கல் வாங்கல்’ நடைபெற்று, பிறகு அது காலப்போக்கில் தடைபட்டுப் போயிருக்கலாம்.

ஆக, நிலவுடைமைக் காலத்தில் தனிச்சொத் துரிமை தோன்றியதற்குப் பிறகுதான் சமூகத்தில் அகமணம் தொடங்கப்பட்டு, உறுதியாகக் கடைப் பிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அனுமானிக் கலாம்.

காலப்போக்கில் இந்தத் திருமண முறை மாறி (அதாவது தாய்மாமன் போய், தாய்மாமனின் மகன்களுக்கு) உடன் பிறந்த சகோதரிகளின் பெண் பிள்ளைகளை உடன் பிறந்தவர்களின் மகன் களுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்! இந்த வகையில் பார்த்தாலும் பாரம்பரிய சொத்துரிமை அந்தக் குலத்தில் பிறந்த வாரிசுகளின் கைகளிலிருந்து வேறு குலத்தினரின் கைகளுக்குப் போக வாய்ப்பில்லை.

இந்த உறவுமுறை இன்று, (தாய்மாமனுக்கு உடன்பிறந்த சகோதரியின் மகள்களைத் திருமணம் செய்து வைக்கும் நிலவுடைமைக் கால வழக்கம்)

கேரளத்தில் வேகமாக மாறி வருகிறது. மாறி வருகிறது என்பதைவிட வழக்கொழிந்து விட்டது என்றுகூடச் சொல்லலாம்! மட்டுமின்றி, அதற்குப் பிறகு கொண்டு வந்த தாய்மாமன்களின் மகன் களுக்குத் தாலிகட்டி வைக்கும் (முறைப்பெண் களைத் திருமணம் பண்ணும் வழக்கம்) நடை முறையும் இன்று நின்று போய்விட்டது. மட்டு மின்றி, தாய்மாமன்கள், தங்களுடைய உடன் பிறந்த சகோதரிகளின் பெண்பிள்ளைகளை தங்கள் சொந்தப் பிள்ளைகளுக்கு நிகரானவர்களாகக் காணும் போக்கு இங்கு நிலவி வருகிறது. அவர் களின் பையன்கள் தங்களுடைய முறைப்பெண் களை உடன் பிறந்த சகோதரிகளைப் போல் காணத் தொடங்கிவிட்டார்கள். அது மட்டு மின்றி, ‘முறைப் பெண்கள்’ என்ற வகையில் அப் பெண்களைக் கேலியோ, கிண்டலோ செய்யும் வழக்கம் இங்கே அடியோடு நின்றுபோய்விட்டது. இது போன்றுதான் மதினிமார்- கொழுந்தன்கள் உறவு முறையிலும்!

காலம் மாற மாற, அதற்கேற்றவாறு கேரளப் பண்பாட்டில் நிரம்ப மாறுதல்கள் நிகழ்ந்திருக் கின்றன. ஆனால், அதே வேளையில் நாம் மேலே கண்ட மாதிரியான மாற்றங்களை (குறிப்பாக குடும்ப உறவுகளில்) தமிழ்நாட்டில் காணமுடிவ தில்லை. குடும்ப உறவுமுறைகளைப் பொறுத்த மட்டில் தமிழ்நாட்டில், இன்னும் நிலவுடைமைக் காலக் குடும்ப உறவுமுறைகளே மேலோங்கி யிருப்பதைக் காணமுடிகிறது. வரலாற்றுப் போக்கில் சமூகத்தில் ஏற்பட்ட அரசியல், பொரு ளாதார மாற்றங்களை ஒட்டி கேரளத்தில் பிரம் மாண்டமான முறையில் பண்பாட்டு மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இது அந்த அளவுக்கு நிகழவில்லை. இதற்கு, பல காலமாக தமிழகத்தை ஆண்டு வந்த அரசியல் கட்சிகளுக்கும் பங்கு உண்டு, என்பதை இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேரளத்தில் மேற்கண்ட மாறுதல்கள் நிகழ, பண்பாட்டுப் போராளிகளான திரு.ஸ்ரீநாராயண குரு, மகான் அய்யங்காளி, வைகுண்டசாமி, கவிஞர். பண்டிட் கருப்பன், கே.பி. வள்ளோன், வி.டி. பட்டாதிரிப்பாட், கம்யூனிஸ்ட் தலைவர்கள் அக்கட்சி கொண்டுவந்த சட்டதிட்டங்கள்,- என, இவைகளெல்லாம் கேரளத்திலுள்ள குடும்ப உறவுகளின் மாறுதலுக்கு வித்திட்டன.

சமீபகாலமாக கேரளத்தில், இங்குள்ள பெற்றோர்களே சாதிமதம் பாராமல் தங்கள் பிள்ளைகளின் திருமணங்களை நடத்தி வைக்கும் பழக்கம் பெருகியுள்ளன. பல குடும்பங்களில் பிள்ளைகளின் பரஸ்பர விருப்பத்தை அடிப்படை யாகக் கொண்டே திருமணங்கள் நிச்சயிக்கப்படு கின்றன. கேரளத்தைப் பொறுத்தமட்டில் இங்குள்ள இந்து, கிருஸ்தவ, இசுலாமியக் குடும்பங்களில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த ‘அகமண வழக்கம்’ இன்று பெரிய சிக்கலைச் சந்திக்க ஆரம் பித்துவிட்டது. ஆண்-பெண்களிடையே காணப்படும் உயர்ந்த கல்வியறிவு, பரந்த உலகக் கண்ணோட்டம், விசாலமானப் பார்வை- போன்றவைகளெல்லாம் கேரளத்தில் வளர்ந்து வரும் கால கட்டத்திற்கு ஏற்ப பண்பாட்டு மாறுதல்கள் நிகழ முக்கிய காரணங்களாகும்.

இங்கே, குடும்பங்களில் ஆணாதிக்கம் குறைந்து, ஆண் பெண் சமத்துவம் நிலவத் தொடங்கி விட்டது. நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் எவரும் தங்கள் கணவன்களைப் பார்த்து, ‘ஏங்கோ, இன்னா பாருங்கோ, ஏ...மாமா’ என்றெல்லாம் மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டிருந்த காலம் இங்கே மலையேறிவிட்டது. கணவன்-மனைவி இருவருமே பரஸ்பரம் பெயரைச் சொல்லி அழைக்கும் புதிய வழக்கம் இங்கே தொடங்கிவிட்டது.

இனி கேரள உறவுமுறைச் சொற்கள் பின் வருமாறு:

அம்மா - அம்மே

அப்பா - அச்சன்

பெரியம்மா - வலியம்மா

பெரியப்பா - வலியச்சன்

சித்தி - கொச்சம்மா

சித்தப்பா - கொச்சச்சன்

அக்கா - சேச்சி

அத்தான் - அளியன்

தங்கை - அனியத்தி

அண்ணன் - சேட்டன்

மதினி - சேட்டத்தி

தம்பி - அனியன்

கொழுந்தி - அனியத்தி

தாய்வழி தாத்தா - அச்சாச்சா அல்லது அப்பூப்பன்.

தந்தை வழி தாத்தா- அச்சாச்சா

தாய் வழி பாட்டி - அம்மூம்மா

தந்தை வழி பாட்டி- அச்சாம்மா

தாய் மாமன் - அம்மாவன்

அத்தை - அம்மாயி

மாமனார் - அம்மாயியப்பன்

மாமியார் - அம்மாயியம்மா

குழந்தை - குட்டி, கொச்சி

மனைவி - பார்யா

கணவன் - பர்த்தாவு

என்று அழைக்கிறார்கள்.

கிருஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால்,

அப்பா - அப்பச்சி

அம்மா - அம்மச்சி

மாமியார் - அம்மா

மாமனார் - அச்சா

பெரியம்மா - வலியம்மச்சி

பெரியப்பா - வலியப்பச்சி

என்று அழைக்கிறார்கள்.

இசுலாமியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால்

அப்பா - வாப்பா

அம்மா - உம்மா

என்றும் அழைக்கிறார்கள்.

கேரளம் தொட்டடுத்த மாநிலமாக இருந் தாலும் கூட தமிழ் உறவுமுறைச் சொற்களை மலையாளச் சொற்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் நிரம்ப வித்தியாசங்களைக் கொண்டிருக்கிறது.

Pin It