பிரபல முற்போக்கு இலக்கியவாதி முல்க்ராஜ் ஆனந்த் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கதை களிலிருந்து கவனமாகப் பொறுக்கியெடுக்கப் பட்டு, பேராசிரியை திருமதி.மெர்சிலதா அவர் களால் மொழிபெயர்க்கப்பட்ட ஏழு சிறுகதைகளின் தொகுப்பு இந்தக் “கூண்டுக்கிளி”. இவற்றில் “தீண்டத் தகாதவன்” கதை முல்க்ராஜ் அவர்களின் பிரபலமான நாவலாகும். இதை நம் பேராசிரியை, அதன் உள்ளடக்கம் சிதைந்து போகாதவாறு செதுக்கிச் சுருக்கிச் சிறுகதை வடிவமாக்கி அழகு தமிழில் தந்துள்ளார். எஞ்சியவை அனைத்தும் முல்க்ராஜ் ஆனந்த் அவர்கள் எழுதிய சிறுகதைகளே.

mulkraj_anand_400“தீண்டத்தகாதவன்” கதை பற்றிப் பக்கம் பக்கமாக விவரித்துக்கொண்டு போகலாம். அவ்வளவு விஷயம் அதனுள் அடங்கியுள்ளது.

இக்கதையில் தோட்டி வேலை செய்து வரும் ‘பக்கா’ என்ற சிறுவன் மூலம், நம் நாட்டில் தலை விரித்து ஆடும் சாதிப் பேய் எடுத்துக்காட்டப் படுகிறது. ஒரு வகையில் சொல்வதாக இருந்தால் இப்படைப்பை நம் நாட்டுத் தலித் இலக்கியத்தின் முன்னோடி என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்கு இப்படைப்பில் தலித் மக்களின் அவல நிலை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு உதாரணமாக அப்படைப்பிலிருந்து இதோ சில வரிகள்:

‘ஓரமாகப் போ, கீழ் ஜாதிப் புழுவே’ என்று யாரோ தன்னை நோக்கிச் சத்தம் போடுவதை அவனால் கேட்க முடிந்தது.

“ஏய், பன்றிப்பயலே! நீ, ஏன் உன் வருகையை எனக்குச் சத்தம் போட்டுத் தெரிவிக்கவில்லை? நீ என்னைத் தொட்டுத் தீட்டுப்படுத்திவிட்டாய் என்று உனக்குத் தெரியுமா? வில் போல் வளைந்த கால் களுடைய தேளுக்குப் பிறந்த கோழிக் கண்ணா! இனிமேல் நான் இன்னொரு முறை குளித்து என்னைச் சுத்தம் செய்தாக வேண்டுமே! இன்றைக்குக் காலையில் தான், புதிதாக இந்த வேட்டியையும், சட்டையையும் நான் அணிந்தேன்.”

இன்னொருவர் சொல்லுகிறார் : “உங்களுக்குத் தெரியுமா - இந்த உலகம் எந்தக் கதியில் போய்க் கொண்டிருக்கிறதென்று? இந்தப் பன்றிகளுக்கு வரவர ரொம்பத் திமிராகி விட்டது.”

அவர் மீண்டும் தொடர்கிறார் : “என் வீட்டுக் கழிவறையைக் கழுவிக்கொண்டிருக்கிற இவன் சகோதரர்களில் ஒருவன் அன்றைக்குச் சொல்கிறான்- தினம் தருகிற சோறு போக, ஒரு ரூபாய்க்குப் பதிலாக மாதத்திற்கு இரண்டு ரூபாய் தரவேண்டும் என்று.”

“என்னமோ, இந்தத் தெருவே அவனுக்குச் சொந்தம் மாதிரி அல்லவா நடந்து வந்தான், நாயின் மகன்” - இது பக்காவினால் தொடப்பட்டுத் தீட்டான மனிதனின் வியப்புமிக்க பேச்சு.

இவ்வாறு ஜாதி இந்துக்கள் அச்சிறுவன் பக்காவை ஒதுக்கித்தள்ள, இசுலாம் மதத்தைச் சேர்ந்த ‘டோங்கா’ ஓட்டி அவனுக்கு ஆறுதல் கூறுகிறான். “அவன் போகட்டும், பரவாயில்லை, “அவன் போய்த் தொலையட்டும். நீ வா, தலைப் பாகையை எடுத்துக் கட்டிக் கொள்” என. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் சனாதன இந்துக்களின் பார்வையில் இசுலாமியனும் ஒரு தீண்டத்தகாதவன் தான். எனவே, பக்காவின் நிலையை அவனால் ஓரளவுக்கேனும் பரிவுடன் புரிந்துகொள்ள முடிந்தது.

“உலகில் உள்ள தீண்டத்தகாதவன் யாராயினும், அல்லது இந்தியன் அல்லாத வேறு யாராலும் இத்தகைய நூலை எழுதமுடியாது” என, தீண்டத் தகாதவன் முன்னுரையில் பிரபல ஆங்கில எழுத் தாளர் திரு.இ.எம்.பாஸ்டர் குறிப்பிட்டிருப்பது மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது. நம் மொழி பெயர்ப்பாளர் மெர்சிலதா அவர்களின் வார்த்தை களில் சொல்வதாக இருந்தால், “இப்படி கற்பனையை விட நிதர்சனத்தை எந்தவிதப் படாடோபமுமின்றி அவரால் எப்படி இயல்பாகச் சொல்ல முடிந்தது; அவரது இளமைப் பருவ மற்றும் பள்ளிப் பருவத் தோழர்கள் அனைவரும் அடித்தள மக்களாக இருந்த காரணத்தினாலே, சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள தோட்டிச் சிறுவன் ஒருவனுக்குக் காலைப் பொழுதில் ஏற்படும் அவலத்தை அவரால் இப்படி விவரிக்க முடிகிறது எனலாம்.

“கூண்டுக்கிளி” கதை, ‘கெட்டழிந்த மண்’, ‘காலணிகள்’ - ஆகிய மூன்றும் ஆதரவற்ற பெண் களின் நிலையை விவரித்துச் செல்கின்றன. “ராமின் இரு சீமாட்டிகள்” என்னும் கதை, ஆங்கில ஆட்சியில் எழுந்த புதிய கலாசாரத்தை எதிர்கொள்ளும் இந்தியர் களின் நிலையை நையாண்டியாகச் சொல்லுகிறது. உறைபனிக் காலத்தில் காஷ்மீரத்தை விட்டுப் பிழைப்புத் தேடி டில்லி வந்த ஒரு காஷ்மீர்ப் போர்வை வியாபாரியைப் பற்றியது “காஷ்மீரி” கதை. இக்கதையில் ஆசிரியர் வியாபாரியிடம் மேற்கொண்ட உரையாடல் மூலம், காஷ்மீர் பிரச் சினையால் ஏற்பட்ட அம்மக்களின் வாழ்வியல் மாற்றங்கள், விடுதலையுணர்வு ஆகியவை நுட்பமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு வலுசேர்க்கும் வகையில், காஷ்மீரச் சிங்கம் என்று அழைக்கப்படும். ஷேக் அப்துல்லாவின் சமூக அரசியல் பார்வையும் முல்க்ராஜ் ஆனந்த் அவர்களால் கலைநயத்தோடு சொல்லப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில், பெரும்பாலும் (ராமின் இருசீமாட்டிகள்’ கதையைத் தவிர) சமூகத்தின் அடித்தட்டு மக்களின் சமூகப் பொருளாதார, பண்பாட்டு அம்சங்களும், சாதி சமய மற்றும் அரசியல் ஆதிக்கங்களால் அல்லல்படும் எளிய மக்களின் வாழ்க்கையும் ஆசிரியரால் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன.

கிட்டத்தட்ட 1930, 1940-களிலேயே நாவலா சிரியரும், சிறுகதை எழுத்தாளருமான திரு.முல்க்ராஜ் ஆனந்த் அவர்களால், தலித் மக்களின் வாழ்வும், பெண்களின் அவலமும், படைப்புகளாக்கப்பட்டு இருப்பது நம்மை வியப்பிலாழ்த்துகிறது. மட்டுமல்ல! இம்மாதிரிப் படைப்புகள் நம் நாட்டில் ஆங்காங்கே பல மொழிகளில் வெளிவந்திருந்த போதிலும்கூட, அவை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்யப் படாமலேயே இருந்திருக்கின்றன அல்லது அறிந் திருந்த பண்டிதர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் போன்றவர்கள், இவற்றையெல்லாம் ஏன் நாம் தமிழுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என, உதா சீனப்படுத்தியிருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் சரி, இப்போதாவது முல்க்ராஜ் ஆனந்த் அவர்களின் சிறந்த கதைகள் நம் பேராசிரியை மெர்சிலதா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழுக்கு வந்து சேர்ந்திருப்பது, இலக்கிய ரசனையுள்ள வாசகர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்.

இன்னொரு முக்கியமான விஷயம் மொழி பெயர்ப்பின் தரம் பற்றியது. கதைகளுக்குள் நாம் புகுந்த உடனே, நம் கையிலிருப்பது பிரபல இலக்கிய வாதி முல்க்ராஜ் ஆனந்த் அவர்கள் எழுதிய கதை களா? அல்லது பேராசிரியை திருமதி மெர்சிலதா அவர்கள் தமிழில் எழுதிய கதைகளா? என, நமக்கு ஆச்சரியம் தருகின்றன. அந்த அளவுக்கு மொழி பெயர்ப்பு மிக அருமையாக அவருக்குக் கைவரப் பெற்றிருக்கிறது. படைப்பு இலக்கியங்களோடு தொடர்பு இல்லாத பெரும்பாலான நம் பண்டிதர்கள், பேராசிரியர்கள் பலர் செய்யும் மொழிபெயர்ப்புக்கள் போன்று அல்லாமல் கதைகள் அவற்றின் பின் புலத்தோடு படித்துப் புரிந்து ஜீரணித்துத் தன்வயப் படுத்தப்பட்டுச் செய்யப்பட்டிருக்கிறது.

இம்மொழி பெயர்ப்பு நாவலாசிரியர் பொன்னீலன் அவர்கள் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், பேராசிரியை மெர்சிலதா அவர்களின் மொழிபெயர்ப்பு நம் தமிழோடும் தமிழ்ப் பண்பாட்டோடும் இரண்டறக் கலந்து, நகல் தன்மை இழந்து, அசல் தன்மை பெற்று நிற்கிறது. ‘தாய்’ நாவலை மொழிபெயர்த்துத் தந்த திரு.ரகுநாதன் ‘சக்கரவர்த்தி பீட்டர்’ நாவலை மொழிபெயர்த்த திரு.எஸ்.ராமகிருஷ்ணன், மக ரெங்கோவின் ‘வாழ்க்கைப் பாதை” நாவலை தமிழில் மொழிபெயர்த்துத் தந்த நாவலாசிரியர் பொன்னீலன், “ஒரு தோட்டியினுடைய மகன்” நாவலை மொழிபெயர்த்துத் தந்த திரு.சுந்தரராமசாமி, இவர்கள் போன்ற சிறந்த மொழிபெயர்ப்பாளர் களின் வரிசையில் பேராசிரியை மெர்சிலதா அவர்களையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

கூண்டுக்கிளி

(சிறுகதைகள்)

முல்க்ராஜ் ஆனந்த்

தமிழில் : ஆர்.மெர்சிலதா

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

விலை : ரூ.50.00

Pin It