“சுமைசுமந்து சோர்ந்திருப்போரே என்னிடம் வாருங்கள் இளைப்பாறுதல் தருகிறேன்” என்ற சுவர் வாசகம் என் மனதை எப்போதுமே சிலிர்க்க வைக்கும். என் அப்போதைய மனநிலை சார்ந்தும் எழுதப்பட்டுள்ள இடங்கள் சார்ந்தும் பல உணர்வுகளை சட்டென்று எழுப்பும்.

சுமை சுமக்கக் காத்திருப்போரே இங்கே வாங்க இதோ இருக்கின்றன கருத்துக் கருவூலங்கள் எடுத்துச் செல்லுங்கள், உங்கள் சமூகப்பணிகளைக் காத்திரமாகத் தொடருங்கள் என சிலருடன் நிகழும் உரையாடல்கள் எப்போதுமே தூண்டும். அத்தகைய ஆளுமைகளுள் ஒருவர்தான் நாங்கள் அன்புடன் மணி அண்ணாச்சி என அழைக்கும் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்.

aa sivasubramanian 417அவருடனான ஒவ்வொரு உரையாடலும் கலகலப்பான கதையாடலாக பேத்தி பேரன்களுக்குச் சொல்லும் கதைகள் போல ஒரு நிகழ்த்து கலையாக இருக்கும். அவரிடமிருந்து திரும்பும்போது மனம் அசைபோடத் தொடங்கும். அவர் சொன்ன கதைகள் சாதாரண மனித வரலாற்றுள் பொதிந்து கிடக்கும் அசாதாரண வரலாற்றுத் தருணமாக, அவற்றுள் ஊடாடி நிற்கும் மாபெரும் தத்துவங்களாக, மெல்ல மெல்ல மொட்டவிழ்ந்து சமூகப் பக்கங்களைப் புரட்டச் செய்யும் மாயம் மிக இயல்பாகவே நிகழும்.

பேராசிரியர் நா.வா. அற்புதமான வாழை.பற்பல பக்கக்கன்றுகளோடு வளர்த்துச் செழித்தவர்.ஒவ்வொரு பக்கக்கன்றும் இன்று தத்தம் பக்கக்கன்றுகளோடு பச்சைப் பசேலென்று செழித்தும் சினந்தும் காற்றைத் தழுவித் தாண்டவமாடுவது நிறைவான மனநிலையை எப்போதுமே தரும்.

கூட்டான தோழமை நிறைந்த கதகதப்பான ஒன்றுகூடல், தத்துவ உரையாடல், கலை இலக்கிய ஆக்கங்கள், அவைபற்றிய எதிரும்புதிருமான விவாதங்கள் விமர்சனங்கள், விளையாட்டுகள் இப்பண்புகள் ஒரு சேர நடக்களியிட்ட இடமே அன்றைய நெல்லை ஆய்வுக்குழுக் கூட்டங்கள்.மகத்தான சாதனைகளுக்கு விதைகள் தூவிய நாற்றுகள் பாவிய இடமும் இதுதான்.

ஒரு ஆளுமையைப் பற்றி யோசிக்கத் தொடங்கினால் ஒருகூட்டம் ஆளுமைகள் பற்றியேதான் யோசிக்க மனம் கூடுகிறது. ஒவ்வொருவரின் தனித்துவத்தையும் மீறித்துளிர்விடும் கூட்டுப்பண்பே இந்த அவதானிப்பிற்குக் காரணம்... இந்த தனித்தன்மையின் பெயர்தான் நா.வானமாமலை என்ற சிந்தனைப்பள்ளி. பேராசிரியர் நா.வா. என்ற மாபெரும் பன்முக ஆளுமையின் பல்வேறுபட்ட விகசிப்புகளே இன்றைய தமிழ்க்கருத்தியல், தத்துவ இலக்கியப் புலங்களில் வலுவான பல பிரிவுகளுள் ஒன்றாக செயல்படுகிறவர்கள்.

அதிலும் குறிப்பாக பேராசிரியர் நா.வா. தனித்துவத்தோடும் தொலைநோக்கோடும் மிகக்கூர்மையாக செயல்பட்டு வழிகாட்டிய பலதுறைகளுள் ஒன்றான நாட்டார் வழக்காற்றியல் துறையில் வலுவாக செயலாற்றிக் கொண்டிருப்பவர், வழிகாட்டி வருபவர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான நட்பு, உறவு, உரசல், தோழமை; நெல்லை ஆய்வுக்குழு ஆசான்களோடும் கை கோர்த்து உரையாடி நடந்த இதமான காலங்கள்.

அவர் நடந்து வந்த பயணமும் கடந்த பாதைகளும் அசாத்தியமானவை. அவருடைய ஆய்வுகளை ஒருசேர மனதில் ஓடவிட்டுப் பார்க்கையில் பளிச்சிடுவது ஒன்றே ஒன்றுதான். மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்ற தேடல் என்ற குறியிலக்கே. நம்மில் பலரிடமும் இத்தேடல் உண்டு. இதை கெட்டிதட்டிப்போன சனாதன திசை நோக்கி இழுப்போரும் ஒட்டுமொத்தமாக மறுப்போரும் நம்மிடமுண்டு. இவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பதில் சொல்பவை,விவாதிக்க அழைப்பவை -மண் என்பது இந்திய/தமிழக யதார்த்தம்- புறவயமாகவும் அகவயமாகவும் -என்று வலிமையோடு போராடி நிரூபிப்பவை இவர் எழுத்துக்கள்.

ஆய்வுப்போக்கில் சொல்லாமல் சொல்லிச் செல்வது, மார்க்சீய ஆய்வுமுறையியலில் செய்துகாட்டியிருப்பது இந்த மண்ணிற்கான செயல்திட்ட வரைபடம். இதனை பண்பாட்டு வேலைத்திட்டமாகவும் அரசியல் வேலைத்திட்டமாகவும் வளர்த்தெடுத்துக் கொள்ள முடியும். கீழிருந்து வரலாற்றை எழுதுதல் என்றும், சமூக ஓர்மைகளுக்குள் ஒளிந்து கிடக்கும் எதிர்குரல்களை அடையாளம் கண்டு ஒன்றிணைப்பது என்றும் இதனை விரித்துக் கொள்ள முடியும். தொட்டிலிலிருந்து சுடுகாடுவரை அடக்குமுறைகளும் ஒடுக்குதல்களும் அடையாளம் காட்டாமல் மெல்லிய விஷப்படலமாக பரந்து விரிவதை, சமூக வெளிகளிலிருந்து பெண்களை சிறுபான்மையினரை நொறுக்கப்பட்ட சமூகத்தோரை நயந்தோ வலிந்தோ அப்புறப்படுத்தும் செயல்களை வர்க்க முரண்களின் நீட்சிகளாக இந்திய/தமிழ் சமூக வகைமாதிரிகளின் நுண்அரசியல் சொல்லாடல்களாக நம்மால் புரிந்து கொள்ளவும் முடியும். இதுதான் இவரது ஆய்வுப்புலங்களின் பொதுப்போக்கு தனித்தன்மை.

இன்றைய இந்தியா பன்னாட்டு மூலதனத்தின் பிடிக்குள் சிக்கித் தடுமாறுகிறது. இதனை பொதுப்புத்தியிலிருந்து மறைக்கவும் திசைதிருப்பவும் பன்னாட்டு மூலதனம் தங்களுக்குத் தோதான கலாச்சார மூலதனத்தையும் காவலர்களையும் சேகரம் செய்து ஆயுதபாணிகளாகத் திரியவிடுகிறார்கள். பன்னாட்டு பொருளாதார மூலதனத்தையும், கலாச்சார மூலதனத்தையும் நாம் எப்படி எதிரிடப் போகிறோம் என்ற திகைப்பும் திண்டாட்டமும் ஜனநாயக மனிதநேயச் சிந்தனை உள்ளோரிடமுண்டு. இச்சூழலில் நம் பண்பாட்டு வேர்களைத் தேடுவதும் அதன் பன்மைத் தன்மைகளைத் தொகுத்துக் கொள்வதும் பொருளாதார மூலதன எதிர்ப்புப் போராட்டங்களுக்கு இணையானது. இது இன்றைய மானுடத் தேவை, ஜனநாயகக் கடமை என சுட்டிக்காட்டும் பேராற்றல் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் எழுத்துக்களுக்கு உண்டு. நம் போராட்ட திசை வழிகளை இனம்காட்டி துலக்கிப் பாதை காட்டும் ஒளிச்சுடர் அவை.

அவருக்கு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் முது முனைவர் (D.Litt) பட்டம் வழங்கி சிறப்புச் செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்கும் பாராட்டிற்கும் உரியது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திணை காலாண்டிதழ் சார்பாக எங்கள் மனம்நிறைந்த வாழ்த்துக்களை பல்கலைக்கழகத்திற்கு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

மணி அண்ணாச்சி உங்கள் கரங்களை இறுகப் பற்றி கன்னத்தில் இனிய முத்தங்கள் பதிக்கிறோம்.

நன்றி: ‘திணை’ காலாண்டிதழ்

Pin It