பழமையும் பெருமையும் வாய்ந்த இந்திய நாடு ஆங்கிலேயர்களிடத்தில் இருநூற்றைம்பது ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்தது. நாடு சுதந்திரம் அடைவதற்காகப் பல தலைவர்கள் போராடினர்;சிறைப்பட்டனர்;உயிர் துறந்தனர். அத்தகைய தலை வர்களில் அகிம்சை வழியில் நாட்டு விடுதலைக்கும்,சமுதாய விடுதலைக்கும்,இந்திய நாடு மட்டுமின்றி தென்னாப்பிரிக்க மக்களின் சுதந்திரத்திற்காகவும்,சமுதாய மேம்பாட்டிற்கும் அரும் பணியாற்றியவர் மகாத்மா காந்தி ஆவார் என்பதை இக்கட்டுரையின் மூலம் காணலாம்.

சமுதாயம்:

காந்தியடிகள் இந்திய விடுதலைக்கு மட்டுமின்றித் தென்னாப்பிரிக்க நிறவிடுதலைக்கும் போராடியவர். மக்கள் பசியின்றி, பிணியின்றி, சுதந்திர உரிமை யுடன் சமுதாயத்தில் வாழும் வண்ணம்,போராடி வெற்றி கண்டவர். அவரது சமுதாயப் பணிகள் அளப் பரியனவாகும்.  அவ்வகையில்‘மனித தெய்வம் காந்தி காதை’என்னும் காவியத்தில் இடம்பெற்றுள்ள சமுதாயப் பணிகளைப் பின்வருமாறு காணலாம்.

தென்னாப்பிரிக்க இந்தியரின் நிலை:

தென்னாப்பிரிக்க இந்தியர்கள் கறுப்பு நிறத் தவர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர். அவர் களுக்கான உரிமை மறுக்கப்பட்டது.  காந்தியார் அவர்களது உரிமைகளுக்காகப் போராடினார்.
இந்தியருக்கு உழைக்கத்தான் உரிமையுண்டு. அதனால் பெறும் கூலியை அனுபவிக்க உரிமையில்லை. அதைக் கர்வத்துடன் வெள்ளையர் கவர்ந்து கொண்டனர். இந்தியர்கள் வறுமையிலும்,பசியிலும்,பிணியிலும் வாடி வதங்கினர். இதனைக் கண்ட தொழிலாளர்கள் ஒன்று திரண்டனர். காந்தியடிகள் துணையுடன் உரிமைக்கு வழிவகுத்தனர். இதனால் அந்நியர்கள் பயங்கொண்டனர்.  பலவித அடக்கு முறைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டனர்.  அதனால் காந்தியார் தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

அண்ணலைக் கண்ட தென்னாப்பிரிக்க இந்தி யர்கள் பலர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.  அப் போது அண்ணல் மக்களிடம் ‘பல மதத்தினரும் பல கருத்து வேறுபாட்டுடன் வாழ்கின்றோம். இது ஒற்றுமைக்கு வழிவகுக்காது. எனவே ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு.  நாம் ஒன்றுபட்டு நம் குறைகளை அரசுக்கு எடுத்துக் கூறுவோம். சமநிலை வாழ்க் கையை ஏற்படுத்துவோம்’ எனக் கூறினார்.

இதன் மூலம் சமுதாயம் ஒன்றுபட்டு ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழமுடியும் என மக்களுக்குப் போதனை கூறியதை அறியலாம். இதனால் மக்களுக்குச் சாதகமான சூழலும், உரிமையும் கிடைக்கும் என்று நம்பினார்.

அண்ணல் வழக்கு முடித்து தாயகம் புறப்பட்டுப் போகும் சமயத்தில் பத்திரிகையில் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்ற செய்தியைப் படித்து மனம் கலங்கினார். இதற்கு முடிவு எட்ட இன்னும் ஒரு திங்கள் தங்குவது என முடிவு செய்தார்.  அடிகளுடன் ஒத்துழைக்க அப்துல்லா என்பவர் இசைந்தார். இங்கிருந்த பல இந்தியர்களும் ஒன்று கூடி முடிவெடுத்தனர். மகாத்மா காந்தி அந்த நாட்டின் அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் எடுத்துக் கூறினார்.  மக்கள் வாக்களிக்கும் உரிமை கோரினார்.  இதனை,

போக்க றப்புது நாட்டில் வந்து பு

குந்த இந்தியர் தேர்தலில்

வாக்க ளித்திடும் உரிமை ஒன்றும்

மறுப்பதற்கொருவிதியினை

(ம.தெ.கா.கா,பா.எண்500) என்னும் பாடல் வழி அறிந்து கொள்ளலாம்.

செல்வச்சீமான் கல்லென்வாகு:

செர்மனியில் மிகச்சிறந்த செல்வந்தர்குடியில் பிறந்தவர் சீமான் கல்லென்வாகு என்பவராவார். அவர் காந்தியடிகளின் மீது மிகுந்த பற்றுடைய வராகத் திகழ்ந்தார்.  அண்ணல் காந்தியடிகள் தென்னாப்பிரிக்க மக்களுக்கான உரிமையைப் பெற்றுத் தருவதில் முன்னின்று போராடுவதைக் கண்டு மனம் மகிழ்ந்தார்.

அதனால் இவர் அண்ணலுக்குத் தென்னாப் பிரிக்காவில் நிலம் வாங்கித் தந்தார். அதில் அண்ணலை அமர்த்தி நிர்வாகம் செய்யச் செய்தார். அதில் தாமும் எளியவராய்ப் பணி செய்தார். நிலத்துக்கு அண்ணல் தால்சுதாய்ப் பண்ணை எனப் பெயரிட்டார்.  இப்பண்ணையில் இந்தியர் பலர் உழைத்துப் பண்ணை முன்னேற்றத்திற்குப் பாடுபட்டனர். உழைப்பினால் பண்ணை வளம் பெருகியது.  பலர் இப் பண்ணையில் குடிபுகுந்தனர்.இதனை,

கருணைக் கடலுக்கு உயிர்நட்பினர் - கல்லென் வாகர்

வருணத் தினில்வெண் மையைமேனி மரீஇய தென்ன

கல்லென் வாகரின் நிலக்கொடை 

(ம.தெ.கா.கா, பா.எண் 714) என்னும் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன.

உழைப்புக்கேற்ற ஊதியம்:

உழைப்பாளி ஒரு நாட்டின் முதுகெலும்பு என்பதில் அண்ணல் காந்தியடிகள் உறுதியுடன் இருந்தார்.  இதைத் தம் போதனையாகவும் எடுத் துரைத்து வந்தார்.  உழைப்பாளிகளுக்காகப் போ ராடினார். கூலி உயர்வுக்காகப் போராடிய முதல் தேசியவாதி எனவும் அண்ணலைப் போற்றலாம். தொழிலாளிகள் மீதான வழக்குகளில் அண்ணல் காந்தியடிகள் பங்கேற்று வாதாடினார்.

தென்னாப்பிரிக்காவில் அண்ணல் தந்த இரண்டு வழக்குகளை விசாரணை செய்த நீதிபதி ஒரு வழக்கில் மன்னனுக்கு அதிகாரம் தந்து மற்றொரு வழக்கான உழவர்களின் அடிமைத்தனத்திற்கு முடிவுகூறாமல் ஒருபக்க நீதி தந்தார். இது கண்ட அண்ணல் மனம் வருந்தினார். அண்ணலின் வழக்குரையை மேலதி காரி அலட்சியம் செய்தார். இந்தியக் குற்றவாளிகளுக்கு இலண்டனில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியத் தாய்நாட்டில் உழைத்தவர்கள் கூலி கேட்டுப் பிழைக்கும் வழி இல்லையே என அண்ணல் வருந்தினார்.  பின் வழக்குப் பணிக்கு முடிவு கட்டினார். அடிமைத் தனமும்,கொடுமையும் எங்குத் தலை தூக்குகின்றன எனக் கண்டார். அங்கு அண்ணல் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார்.  அறப்போரில் இறங்கினார்.

பலவகையாக அண்ணல் பரிந்துரை செய்த போதும்

அலமரும் உழவர் அல்லல் அறிவதற்கு ஆர்வம் காட்டார்

நிலவரி குறைப்பதற்கு நினைக்கிலர் மறுத்து விட்டார்

இலைவழி இனி என்று அண்ணல் மீண்டனர் என்செய

(ம.தெ.கா.கா, பா.எண். 292) என்னும் மேற்காணும் பாடலடிகள் இதனை வெளிப்படுத்தும்.

கடவுட் கொள்கை:

சமுதாயத்தில் வாழுகின்ற மக்களுக்குக் கடவுள் பற்றிய சிந்தனை அவசியம்.  தெய்வத்தோடு பொருந்திய வாழ்க்கை சிறக்கும் ‘கடவுளை நினை மனமே’,‘தெய்வம் உண்டென்றிடு தெய்வம் ஒன்றென்றிடு’என முன்னோர் பலரும் தெய்வ நம்பிக்கையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். அண்ணல் காந்தியடிகளும் தெய்வக் கதைகளை இளமையிலேயே கேட்டு அறிந்துகொண்டதன் விளைவாகத் தெய்வ பக்தி நிரம்பியவராக இருந்தார்.

கடவுட் கொள்ளையைப் பற்றி மகாத்மா:

மகாத்மா கடவுளைப் பற்றிக் கூறுகையில் “என்னுடைய எண்ணத்தில் கடவுள் என்றாலும் உண்மை என்றாலும் ஒன்றுதான். உண்மையைத் தவிர வேறு எந்தக் கடவுளுக்கும் நான் சேவை செய்வதில்லை”என்கிறார். மேலும் “சாவுக்கு மத்தியில் வாழ்வு நிலைத்திருக்கிறது.  பொய்க்கு நடுவே உண்மை நிலைத்திருக்கிறது. இருளின் மத்தியில் ஒளி நிறைந்திருக்கிறது.  இதைப்போலவேகடவுள்,உயிரும்,உண்மையும்,ஒளியுமாய்இருக்கிறார். தினசரி வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்களை வெல்ல பிரார்த்தனையை விட இவ்வுலகில் வேறு என்ன இருக்கிறது?” என்று மகாத்மா கூறுகிறார்.

பிரார்த்தனை ஒரு மனித ஆத்மாவைத் தெய்வநிலைக்கு உயர்த்துகிறது என்பதனை அறியலாம்.இதனை,

புறத்தினில் குண்டு தாக்கும் போதிலும் அமைதி குன்றாது

அறத்தினை நிறுத்த வந்தார் - அல்லலைத் தாங்கு கின்ற

திறத்தினை அருள்கென்று, ஈசன் திருவருள் சிந்தித் தாரால்

நிறத்தினில் வேல்பாய்ந் தாலும், தளர்வரோ நிறையின் மிக்கார்?

(ம.தெ.கா.கா, பா.எண் 147) என்னும் பாடலடிகள் விளக்குகின்றன.

கடவுள் நம்பிக்கை பற்றிக் கூறுகையில் “கடவுள் சுவர்க்கத்தில் இல்லை. அவர் அனைத்து மக்களின் உள்ளத்திலும் உள்ளார்”என்கிறார். “நம்மிடம் உள்ள சக்தி எல்லாம் நமக்குக் கடவுளிடமிருந்துவந்ததுஎனவும்,இறைவன்இவ்வுலகில்இல்லாமலில்லை.  இல்லையென்றால் நாம் அனைவரும் இருளில் நடமாட வேண்டிய நிலை ஏற்படும். மனத்தூய்மையும் கடவுள் நம்பிக்கையும்,சத்தியா கிரகமும் இல்லாதவர்க்குக் கடவுள் துணை நிற்க மாட்டார்” என்பதே மகாத்மாவின் கடவுளைப் பற்றிய போதனைகளாகும்.

காந்தியின் பகுத்தறிவு:

காந்தியடிகள் தெய்வ நம்பிக்கையோடு இருந்தாலும் பகுத்தறிவைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கிறார். மகாத்மாகாந்தி,பகுத்தறிவுபற்றிக்கூறுகையில்“அறியாமைக்கும்,ஒழுங்கீனத்திற்கும் இட மளிக்காது தடுப்பதே பகுத்தறிவாகும்”எனக் கூறுகிறார். பகுத்தறிவு ஒரு வாயிற் காவலன் என்கிறார். மனிதனின் அறிவு வளர கீதை போன்ற நூலைக் கற்க வேண்டும் என மக்களுக்குமகாத்மாபோதிக்கிறார்.  கீதை, வாழ்க்கையின் உயிர்நாடி, ஆன்மாவைச் செம்மைப் படுத்த அது போதிக்கிறது. ஆன்மாவிடம் வாழ்கிறது. அதுஆன்மாவைத் தூய்மையாக்குகிறது எனலாம்.

சனநாயகம் :

மகாத்மா காந்தி சனநாயகத்தைப் பற்றிக் கூறு கையில் “உண்மையான,சனநாயகம் உருவாக வேண்டுமென்றால் நாம் பொருளாதாரத்தில் தாழ்ந்த இந்தியனையும்,செல்வந்தனையும் ஒன்றாக்க வேண்டும். பாகுபாடு இன்றியாரும் இந்த அரசை நடத்தலாம். என்று நாம் எண்ண வேண்டும். எவரும் தனிமனித சுதந்திரத்தை மறுப்பதன் மூலம் எந்த சமுதாயமும் நீக்க முடியாது.  எந்த அரசு பலவீனனுக்குச் சம வாய்ப்பு அளிக்கிறதோ அந்தக் கட்சியே உண்மை யான கட்சி” என அண்ணல் கூறுகிறார்.  பயிர் நிலத்தில் களர் (உப்பு) ஏற்பட்டால் அது நல்ல நிலத்தைச் சாப்பிட்டு விடுகிறது. இது எத்துணைத் தீமையோ அதைவிடத் தீமையானது சாதிப் பிரிவினையாகும். இது மக்களைப் பிளவுபடுத்தும் என்றும் மக்கள் அனைவரும் தமக்குத் தாமே கொள்கை கோட்பாடுகளால் கட்டுண்டு வரம்பு மீறாமல் தேச நலனுக்காக ஒன்றுபட்டு உழைப்பதே சனநாயகம் என்பதை போதித்தார்.

காந்தி எவ்வகையான ஆட்சி முறையை விரும் பினாரோ,கட்டமைத்தாரோ அவ்வாறான ஆட்சி மாற்றமே இப்பொழுது நிலவி வரும் மக்களாட்சித் தத்துவமாகும்.

பொருளாதாரச் சிந்தனை:

தனிமனிதனின் வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பது பொருளாதாரமாகும்.  தாழ்ந்தவனும் உயர்ந்தவனும் பொருளாதார மேம்பாட்டில் தத்தம் நிலைகளில் வாழவேண்டும் என அண்ணல் விரும்பினார். தனிமனிதத் தேவை நிறைவு பெற்றுவிட்டால் தேசநலன் காக்கப்படும் என்பதனை அண்ணல் உரைத்து வந்தார். பொருளாதார நிலையில் மக்கள் சிக்கன வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும் என்பதனை உணர்த்தினார்.

மகாத்மா அயல்நாட்டில் கல்வி கற்றோர்க்கு அறிவுரை கூறுகையில் ‘தன்கையே தனக்குதவியாக இருக்க வேண்டும்’ என்கிறார்.  இதற்கு மாறாக இருக்கும் மக்களைப் பார்த்து அண்ணல் தனக்கு வேலை செய்ய வேறு ஒருவரைப் பணியில் அமர்த்துவதா?என்கிறார்.  இது கூடாது,அப்பணியைத் தாமே செய்து கொள்ள வேண்டும் என்கிறார். மேலைநாடு சென்று பாரிஸ்டராகத் திரும்பி வந்த காந்தி தம் பணிகளைத் தாமே செய்து வந்தார்.  எனவே,மக்களைப் பார்த்து,ஆடம்பரமாக வாழ்ந்தால் பொருளாதாரம் அழிந்து வாழ்க்கை பாழ்படும் என்கிறார். இதற்கு மாறாக,சிக்கனம்,சத்தியம்,உண்மை எனச் சீமான் முதல் எளியோர் வரை கடைப்பிடித்தால் மட்டுமே நாடு உயரும் என்கிறார் அவர். 

மேலும்,சிக்கன வாழ்வு குறித்துக் காந்தி கூறுகையில்,“பொருளாதாரம் என்பது மக்கள் அத்தியாவசிய தேவைகளைத் தாமே தேடிக்கொள்ள வேண்டும். அதாவது உணவு,உடை, இருப்பிடம்,படிப்பு போன்ற பல வசதிகளையும் மக்களாகிய நாம் தாங்களாகவே கூட்டுறவால் தேடி நிறைவேற்றிக் கொள்ளவேண்டும். இதற்கு எந்த நாடு முட்டுக் கட்டையாக இருக்குமோ அந்நாட்டினர் சமுதாய சிந்தனைகளை மறந்தவர்களாகிவிடுவர்.

திட்டங்களை எளிமையான முறையில் அடைந்து வாழா விட்டால் இந்தியர்களாகிய நாம் வாழ்வில் ஒரு போதும் தன்னிறைவடைய முடியாது;வாழ்க்கையும் அஸ்திவாரமில்லாக் கட்டடமாகிவிடும்” எனக் கூறுகிறார்.

அண்ணலாரின் கோட்பாடுகளில் சுயம் என்பது ஒரு பகுதியாக உள்ளது. மனிதர்கள் ஒவ்வொரு வரும் சுயமாக வாழத் தெரிந்து கொண்டால் அவர் களது வாழ்க்கை மேம்படும் என்பதனை உணர்த்துகிறார்.

சுகாதாரம்:

மக்கள் சுகாதாரமாக வாழ்வதற்கு அண்ணலார் அறிவுரைகள் பல பகன்றார். தாமே முன்னின்று பல பணிகளை மேற்கொண்டார். மும்பை போன்ற இடங்களில் பாலியல் விழிப்புணர்வுகளை மேற் கொண்டுள்ளார். நாட்டில் திடீர் எனத் தொற்று நோய் பரவியது.  இதனை முடிவுகட்ட எண்ணிய அண்ணல், ஆர்வலர்கள் பலரை இணைத்துக் கொண்டு பல இடங்களைத் தூய்மை செய்தார். பலருக்குச் சுகாதாரத்தைப் பற்றி எடுத்துக் கூறினார். பல சேரிப் பகுதிகளில் தீண்டாமைப் பாகுபாட்டைக்களைந்தார். பலர் இல்லம் நுழைந்து மருந்து தந்து சுகாதார மடையப் பாடுபட்டார். நாடு முழுவதும் துப்புரவுப் பணியைச் செய்தார்.இந்நிகழ்வினை,

தீண்டாத சாதியர்வாழ் சிறுகுடிலும் நுழைந்திடுவார்

வேண்டாத ஒதுக்கறையும் வெறாதுசுத்த மாக்கிடுவார்  

(ம,தெ.பா. 539) என்னும் பாடலடிகளில் கவிஞர் புனைந்துள்ளார். தீண்டாமையை அகற்றப் பெரிதும் பாடுபட்டவர் அண்ணலார் என்பதனை வரலாறு பதிவு செய்துள்ளது.

அறப்போர் :

அண்ணல் வெள்ளையர்களுக்கு எதிராகப் பல அறப்போர்களை நிகழ்த்தினார். பொறுமை காக்க முடியாமல் மக்கள் வெள்ளமெனத் திரண்டனர். காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைப் போல மக்கள் திரண்டனர். ஆனால் அவர்களை அண்ணலார் அணையெனத் தடுத்து அறவழியைக் காட்டினார். அண்ணலின் அறிவுரையே ஓர் அறவுரை யாக அமைந்திருப்பதனைப் பின்வரும் மேற்கோளால் அறியலாம்.

அண்ணல்,“இந்தியர்யாரும் பற்களைக் கடித்துக்கொண்டு கல்லெறிந்து வன்முறை செய்யாதீர். பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தாதீர். நாம் அனைத்திற்கும் அறவழியில் தீர்வு காண்போம்”என அண்ணல் அறிவுரை கூறினார். நாட்டு மக்கள் அறப்போர் வழி ஊர்வலமாகத் திரண்டனர்.  தங்கள் எதிர்ப்பை எழுத்து மூலம் அயலார்க்குத் தெரிவித்தனர்.  இதைக் கண்ட காவலர்கள் அஞ்சினர். அயலவர்கள் குதிரைப்படைகளைக் கொண்டு வந்து சாலையில் நிறுத்தி மக்களுக்குப் பயம் காட்டினர். இது கண்ட இந்தியர்கள் அஞ்சாது திரண்டு அணிவகுத்துச் சென்றனர்.

வன்முறை களைதல்:

அந்நியர் ஆட்சியில்,பாரத தேசம் முழுமைக்கும் அடக்கு முறைகட்ட விழ்த்து விடப்பட்டிருந்தது. மதங்களுக்குள்ளேயே மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் சூழ்நிலை உருவானது. சொந்தமண்ணின் சகோதரர்களே,ஒருவருக்கொருவர் மாறிமாறி சண்டையிட்டுக் கொண்டனர்.  இதைக் கேள்வியுற்ற அண்ணலார் வேதனையுற்றார்.

வங்காளத்திலும்,பீகாரிலும் வன்முறை நிகழ்ந்த போது இரு மதத்தினரையும் கண்டு அண்ணல் ஆறுதல் கூறினார். “அடிப்பவர்க்கு நல்லனவற்றைக்கூறுங்கள். அடியாள் தருபவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள். கண்ணீர் விட்டு அழுபவர்க்கு இடம் தந்து தேற்றுங்கள்” என்றார். காந்தி இஸ்லாமயர் வீட்டின் கதவு களைத் தட்டி அனாதைக் குழந்தைகளுக்கு உணவு பெற்றார். தாமும் ஆட்டுப்பால் வாங்கி அருந்தினார். இவையாவும் மனித வாழ்க்கையில் தோழமை நெறி என்றார்.

மகாத்மா காந்தி மக்களிடம் வன்முறையைக் களைந்திட வேண்டும் என்றால் மக்கள் கொலை புரிபவர்களிடம் மகிழ்ச்சியாகப் பேச வேண்டும் என்று கூறுகிறார். மாறாக, வன்செயலில் ஈடுபட்டால் நாட்டில் பிணமலை குவியும் என்கிறார். பாதகரிடம் அன்பு காட்டினால் தாம் செய்த கொலைக் குற்றத் திற்கு வருந்துவார்கள் எனக் கூறினார். காந்தி நாட்டில் அமைதியை நிலைநாட்டப் புது வழிகண்டார்.

உழைப்பின் மேன்மை:

உழைப்பின் மேன்மையில்தான் உன்னதமான வாழ்க்கை அமைந்துள்ளது.  “உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ”என்னும் மூத்தோர் வாக்கிற் கிணங்க மக்கள் உழைப்பின் மகத்துவத்தைப் போற்ற வேண்டும். ஆணும் பெண்ணும் சரிநிகர் சமமாக இருந்து உழைத்தால் பாரிலோங்கி இவ்வையம் செழித்திடும். இவ்வாறான உழைப்பை அண்ணல் காந்தியடிகள் கூறுகின்றார்.

ஒவ்வொரு ஆடவனும்,பெண்ணும் உடல் உழைத்து உண்பதை ஒரு தருமம் எனக் கருத வேண்டும் எனவும்,டால்ஸ்டாயின்கட்டுரையிலிருந்து அவருக்கு இச்செய்தி கிடைத்ததாகவும் மகாத்மா கூறுகிறார்.  ஆசிரம வாழ்க்கையில் உண்பதற்கு உழைப்பதை விடத் தொண்டிற்கும், பரோபகாரத்திற்கும் தம் வாழ்நாளை நாம் அர்ப்பணித்துக் கொள்வதே சிறந்ததாகும் என்கிறார். இந்த நிலையை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் கடைப்பிடித்தால் நாட்டில் பட்டினிச்சாவு இராது என மகாத்மா காந்தி தம் ஆசிரம வாழ்வில் கூறுகிறார்.  ஆசிரமத்தில் அண்ண லார் அமர்ந்த காலங்களில் தம் தேவைகளைத் தாமே பூர்த்தி செய்துகொண்டார் என்பதனை அவரது வரலாறு உணர்த்துகிறது.

அன்பும், அகிம்சையும்:

‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்றார் வள்ளுவர்.  அன்புடைய நெஞ்சம் அக வாழ்வில் தோய்ந்த தன்மைகளைச் சங்க இலக்கிய அகமரபுக் கோட்பாடுகள் எடுத்துரைக்கும். அண்ணலாரின் ஆன்மநேயத்துக்கு அடிப்படையாக அமைந்தவை அன்பு, அகிம்சை,உண்மை என்னும் தாரக மந்திரங்களே ஆகும். தமிழக மக்களின் அன்பைப் பெற்றதற்குக் காரணம் அகிம்சை,உண்மை,மத சகிப்புத்தன்மை என்ற கோட்பாடுகளே ஆகும்.  அண்ணலிடம் அப்படிப்பட்ட உயர்ந்த குணம் இருந்ததனால்தான் ‘மனிதர் காந்தி’யை மக்கள் ‘மகாத்மா காந்தி’ என்றனர் என ம.பொ. சிவஞானம் கூறினார்.

உணவுக்கோட்பாடு

மனித வாழ்க்கையின் இன்றியமையாக் கூறு உணவாகும். நீரின்றியமையாது உலகு.  உணவின்றி அமையாது உயிர். உயிர்களின் அவசியத் தேவை உணவு. இந்தியாவில் தமிழர்களின் உணவு முறையான உணவே மருந்து என்னும் கோட்பாட்டில் நிலை நிற்பதாகும்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே                                                   

(திருமந்திரம் பா. எண். 704) என்று திருமூலர் கூறியுள்ளார். 

உடம்பை நோயின்றி வளர்க்க உணவு அவசியம். உணவு குறித்த அண்ண லாரின் பார்வை உடலியலார் மருத்துவக் கூற்றுப் படி அமைந்திருப்பதைக் காணலாம்.ஒருமுறை மகாத்மா காந்தி வங்காளத்தில் புனித யாத்திரை மேற்கொண்டிருந்தார். அப்பொழுது தமக்குத் தேவையான உணவை அவரே சமைத்துக் கொண்டார். அப்பொழுது அவருக்கு நெருங்கிய தொண்டர் ஒருவர் மகாத்மா உணவு சமைப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார். அண்ணல் வெண்டைக் காயும், கசப்புத் தரும் பாகற்காயும், கீரையும், உப்பும் சேர்த்துச் சிறிதளவும் நீரின்றி வேக வைத்தார். பின் சிறிதளவு ஆட்டுப்பால் ஊற்றி அப்பண்டத்தைப் புதிய உணவாகச் சாப்பிட்டார்.  வியந்து பார்த்த அத்தொண்டரைப் பார்த்து அண்ணல், “ஏன் இப்படிப் பார்க்கிறீர்? பசித்திருப்போருக்கு ருசி தெரியுமா? மனிதர் பசிக்குத் தான் உண்ண வேண்டும்.  நாட்டில் மிகப்பெரிய திண்டாட்டம் உணவுப் பற்றாக்குறை. 

இதைப் போக்க அனைவரும் எளிய உணவைத் தயார் செய்து உண்ண வேண்டும்”என அம்மனிதருக்கு ஆலோசனை கூறினார்.  அம்மனிதரும் அவ்வுணவில் ஆட்டுப்பால் கலந்து சாப்பிட்டார். ஆடம்பர உணவால் நாட்டில் பொருளாதாரம் சீர்குலையும்,நாட்டில் உணவுப்பற்றாக்குறை ஏற்படும் என மகாத்மா கூறினார். அண்ணலாரின் கருத்துக்கள் பொருளாதார அடிப்படையில் சிந்தித்துக் காணத்தக்கதாகும்.

தீமைக்கு மன்னிப்பு:

எதிரியை மன்னித்துவிடலாம், துரோகியை மன்னிக்க இயலாது என்பர்.  ‘பகைவனுக் கருள் வாய் நன்னெஞ்சே’என்னும் கூற்று போல அண்ணலாரின் வாழ்வில் ஒரு செயல் நிகழ்ந்தது.
மகாத்மாவைக் கொல்ல ஒரு வெள்ளைக்காரன் பணம் தந்து ஓர் முரடனை அமர்த்தினான்.  இதை அறிந்த மக்கள் அண்ணலை இரவும் பகலும் பாது காத்தனர். இதற்கு அண்ணல் “பஞ்சபூதத்தாலும் ஆன ஆன்மாவை எளிதாகக் கொள்ள இயலாது.  வினை மட்டுமே வலியக் கொல்லும். நாம் தீவினை செய்யவில்லை. நம்மை அப்பாவம் தீண்டாது.”என்றார். இது கேள்விப்பட்ட கொலையாளி தாமே அண்ணலிடம் சரண்புகுந்தான்,மனம் திருந்தி வாழலானான்.

பெரியபுராணத்தில் மெய்ப்பொருள் நாயனார் தம்மைக் கொல்ல வந்த முத்தநாதனுக்கு மன்னிப்பு வழங்கித் தம் மெய்ப்பாதுகாவலரிடம்,

“தத்தா! நமர்” எனத் தடுத்து வீழ்ந்தார்.”                                                          

(பெரியபுராணம் பா. எண். 482) என்று கூறுவார்.இவர் நமர் எனக் கூறி அவரைப் பாதுகாப்பாக ஊர் எல்லை வரை அழைத்துச் சென்று விடுவித்த மையை எடுத்துக்காட்டலாம்.

பின்னர் அண்ணலிடம் என் பிழையைத் தயவு செய்து மன்னியுங்கள் என்றான் அந்தக் கொலை யாளி.  அதற்கு, ‘மனிதன் செய்யும் அறியாமையை மன்னிக்கத்தான் வேண்டும்’ என அண்ணல் மன்னித் தார். ‘பிறர் மனம் வருந்தத் துன்பம் செய்வது நற்செயலுக்கு வழியமைக்காது’ எனக் கூறினார்.  இதனால் அவன் மனம் திருந்தினான்.

தீண்டாமை

இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுமையும், நிற - இன - மத வேறுபாடுகள் வேரூன்றிக் கிடக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறுவகையானவேற்றுமைகள் காணப்படுகின்றன.  நம் பாரத தேசத்தில் தீண்டாமை, பாவச் செயலாக,ஒரு குற்றமாகக் கருதப்பட்டது. அவர் தம் வாழ்நாளில் ஒருபகுதியைத் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவே கழித்துள்ளமையை அவரது வரலாற்றின் வழி அறிந்துகொள்ள முடிகிறது.

மகாத்மா அமைத்த ஆசிரமம் ஒன்றில் “தாதா பாய்”என்பவர் தன் மனைவி,மகளுடன் ஆசிரமத்தில் தங்க இடம் கேட்டார். மகாத்மாவும் உடன் சம்மதித்தார். இதற்கு முன் அந்த ஆசிரமத்தில்இருந்த உயர்குலத்தினர்,தாழ்ந்த குலத்தவர் எனக் கருதி தாதாபாய் வருகையை வெறுத்தனர். தாழ்ந்த சாதியினரை ஆசிரமத்தில் அனுமதிப்பதால் இதைப் பொறுக்க முடியாது எனப் பொருமினர். கத்தூரி பாயும் மறுத்ததனால் அண்ணல் மனம் வருந்தினார்.  மனைவிக்கு அறிவுரை கூறினார். 

‘பிறப்பினால் உயர்வு-தாழ்வு கிடையாது.  அவர்களது நடத்தையும் சிறப்பும்தான் அவர்களிடம் உயர்வு-தாழ்வை நிலைநிறுத்தும்’எனக் கூறினார். பல அறநூல்கள் சாதி என எடுத்துக் கூறினால் அறம் அவர்களைத் தண்டிக்கும் என்றார். அண்ணல் ஆசிரமத்தில் இருந்த அனைவருக்கும் அறிவுரை கூறினார்.

இளமைக் காலத்தில் அண்ணலின் தாயார் தீண்டத் தகாதவைகள் குறித்து ஒருமுறை கூறியபோதும் அண்ணல் ‘அவர்களும் நம்மைப் போல் மனித வர்க்கமே’எனக் கூறி ‘தீண்டாமை ஒரு பாவச் செயல்’ என உருக்கமுற வாதாடினார்.

“திருக்குலத்துப் பிறந்தவரைத் தீண்டுவது தகாது எனவே

அருட்குணத்துத் தாய்தடுத்தால் அவரும்நமைப் போல்மனித

வருக்கம் அன்றோ? வெறுத்திடுதல் மாபாவம் அன்றோ? என்று

உருக்கமுற வாதிடுவார் உத்தமத்தாய் வாய் அடைப்பாள்”                    

(ம.தெ.கா.கா, பா.எண். 177) என்னும் கவிஞரின் பாடல் வரிகள் இதனை உணர்த்துகின்றன.

சமுதாயத் தொண்டு

சமூகத்திற்கு ஆற்றும் தொண்டானது இறை வனுக்கு ஆற்றும் தொண்டுக்குச் சமமானது எனலாம். அண்ணலார் மக்களுக்குக் கடமையாற்றுவதையே தம் கொள்கையாகக் கொண்டிருந்தார்.

மகாத்மா காந்தி பலனை எதிர்பார்க்காமல் தொண்டு செய்தார்.  கடமையாற்றுவதில் அஞ்சா நெஞ்சமும்,சோர்வில்லாமையும் உள்ள உறுதிப் பாடும் உடையவர் ஆவார். மேற்கு வங்காளத்தில் இந்து, இசுலாம் கலகம் நடைபெற்றது.  அப்பொழுது நவகாளியில் உள்ள சிறு, சிறு கிராமங்களின் மூலை முடுக்குகளிலெல்லாம் தொண்டாற்றினார். முதுமையான வயதில் தனித்து வாழ்ந்த அவர் மதவெறியால் சண்டையிட்டுக் கொண்ட மக்களி டையே சமரசம் செய்து வைத்தார். அனைத்துச் சாதி மக்களிடமும் தீண்டாமைப் பாகுபாடு இன்றி ஒப்புரவுடன் பழகினார். நட்டில் அமைதியை ஏற்படுத்தினார். மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழவே அண்ணல் விரும்பினார்.

உழைப்பாளிகளின் தோழன்

காந்தியடிகள் உழைப்பாளிகளுக்காகப் பல முறை களம் கண்டவர். அவர்களுக்காக அறப்போர் பல நடத்தியவர்.

மழையின்றிப் பயிர் விளையாதபோது ஆங்கிலேயர்கள் உழவர்களிடம் வரிகேட்டுத் துன்புறுத்தினர். உழவர்களின் கால்நடைகளை ஓட்டிச் சென்றனர். பண்டம்யாவையும் அள்ளிச் சென்றனர். மக்கள் கேட்டபோது அவற்றைத் தர மறுத்தனர். அண்ணல் உழவர்களின் நிலையை அரசிடம் தகுந்த முறையில் எடுத்துக் கூறியும அரசினர் பிடிவாதமாக வரி வாங்கினர். மனம் புழுங்கிய அண்ணல் உழவர்களை ஒன்று திரட்டி அறப்போர் தொடங்கினார். மக்களும் அரசினர் அடித்தாலும் சிறைப்படுத்தினாலும் பண்டங் களைப் பறித்தாலும் வரிதர மறுப்போம் என்றனர்.

வரிதரு கிலிர்எனின் வலிய வந்துயாம்

அரியகால் நடைகளும் அடுக லங்களும்

உரியபல் பண்டமும் உடன்பறிப்பம் என்று

எரிகனன்றனர் இரக்கம் ஒன்றிலார்                                                                      

(ம.தெ.கா.கா, பா.எண். 903) என்னும் டிகள்  உழைப்பாளிகளின்  துயர  நிலையை  வெளிப்படுத்துவனவாகும்.  இதனால் வெகுண்டெழுந்த அண்ணல் உழைப்போர் உரிமையை நிலைநாட்ட மக்களின் உதவியை நாடினார்.

உரிமைக்குப் போராட நடைமுறைச் செலவிற்கு நிதிதிரட்டினார். இந்தியர்க்கு வெள்ளையர் தரும் கொடுமைகளை விளக்கி காந்தியடிகள் இதழ்களில் எழுதினார். அனைத்து இந்தியர்களுக்கும் நிலை மையை விளக்கினார். மக்கள் ஒன்றுபட நெஞ்சில் உரமூட்டினார்.  இது கண்ட மக்கள் ஒன்றுபட்டு இணைந்து போராடினர். இதனால் ஆத்திரமடைந்த வெள்ளையர்கள் பொருமினர்.இதனை,

“நடை முறைக்கென நிதிதி ரட்டினர்

நாட்டி னில்குடி யேறும் இந்தியர்

படும்இ டர்ப்பெருந் துயரி னைப்பல

படவி ளக்கிஅச் சிட்ட ளித்தனர்”                                                                            

(ம.தெ.கா.கா, பா.எண். 512) என்னும் பாடலடிகள் எடுத்துரைக்கும்.  அதனால் அண்ணல் காந்தியடிகள்,ஒட்டிய வயிறுடன் கந்தை உடுத்தி கால் வயிற்றுக்கு உண்டு உழைக்கும் இந்தியர் நிலை யினை அரசுக்கு எடுத்துக் கூறினார். தலைக்கு ஐந்து பொன்வரியைக் குறைக்கச் செய்தார்.  மூன்று பொன்வரி என ஆட்சியரை ஆணையிடச் செய்தார்.

கல்வியும் தொண்டும்

காந்தியடிகள் ஆசிரமம் அமைத்துக் கல்வியறிவு ஊட்டிவந்தார்.  ஆயினும், உழைப்பாளிகளின் பிள்ளைகளுக்கும் கல்வியும் மருத்துவமும் தேவை என்பதனை உணர்ந்தார். சம்பாரன் விவசாயிகள் குடும்பங்களில் கல்வியறிவு இன்றி அறியாமையில் மூழ்கியிருப்பதை அண்ணல் கண்டார். அந்நிலையைப் போக்க மகாத்மா அனைவருக்கும் கல்வி என்ற முறையைக் கொண்டு வந்து எழுத்தறிவித்தார்.

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது

இல்லை நிலக்குப் பொறை                                                                                                          

(குறள் எண். 570)  என்று வள்ளுவரும் கல்லாமையின் இழிநிலையை நினைவுகூர்கிறார்.

நோயாளிகள் அவதியுறுவதைக் கண்ட அண்ணல் அனைத்து விவசாயிகளுக்கும் மருத்துவம் செய்து தக்க தருணத்தில் உதவி,பிணியைப் போக்கினார். அவர் பொது இடங்களில் துப்புரவுப்பணி செய்து வந்தார். பொது இடங்களைத் தூய்மையாய் வைத்துக் கொள்ள ஆலோசனையும் கூறினார் என்பன பற்றிய சமுதாயச் சிந்தனைச் செயல்களை நாம் காணலாம்.

அடிக்குறிப்பு

1. அரங்க.  சீனிவாசன், மனித தெய்வம் காந்தி காதை, (பா. 500)

2. மேலது, (பா. 714)

3. மேலது, (பா. 292)

4. மேலது, (பா. 147)

5. மேலது, (பா. 539)

6. திருமூலர் - திருமந்திரம், (பா. 704)

7. சேக்கிழார் - பெரியபுராணம் (மெய்ப்பொருள் நாயனார் புராணம்)

8. அரங்க. சீனிவாசன், மனித தெய்வம் காந்தி காதை, (பா. 177)

9. மேலது, (பா. 903)

10. மேலது, (பா. 512)

11. திருவள்ளுவர் - திருக்குறள் (எண் - 570)

துணைநூற் பட்டியல்

திருமூலர் - திருமந்திரம்
சேக்கிழார் - பெரியபுராணம்    (மெய்ப்பொருள்   நாயனார்புராணம்)
திருவள்ளுவர் - திருவள்ளுவர்
அரங்க. சீனிவாசன் - மனிததெய்வம் காந்திகாதை (ஆய்வு நூல்)வானதி பதிப்பகம்.

Pin It