வரலாறு, வர்க்கச்சண்டைகளின் பதிவுகளே என்பதும், அது மாறிக்கொண்டிருப்பது என்பதும் நிதர்சனமானவை.  இவ்விரண்டிற்கும் தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம்.  தொழில்நுட்பம் ஒரு மக்கள்கூட்டத்தினை இரண்டாக உடைக்கும்.  தொழில்நுட்பம் கொண்ட சமூகம் ஆளும் வர்க்க மாகவும்,அல்லாத சமூகம்,ஆளப்படும் வர்க்க மாகவும் அமைகிறது. இப்போக்கு உலகம்முழுதும் வரலாற்றுச் சம்பவங்களாக நிகழ்கிறது. இதற்கு,இந்திய வரலாறும், இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் தமிழகத்தின் வரலாறும் விதிவிலக்கன்று. 

உலக வரலாற்றின் பொதுப்போக் கோடுதான் தமிழகமும் இயங்கியுள்ளது. சிந்து நாகரிகம் கி.மு.மூவாயிரத்தில் பெர்சியப் பகுதி யுடன் வணிகவுறவு கொண்டிருந்தது. இது ஒரு வகையான உலகியல் போக்கு;இந்திய வரலாற்றில் ஒருகட்டம். இந்தியாவிற்குள் அலெக்ஸாண்டரின் படையெடுப்பு ஒரு சமூகவுறவினை உருவாக்கியது. அதனுடன் சில தொழில்நுட்பங்களும் வந்திருக்க வேண்டும்;இந்தோ-பாக்டிரிய இனம் உருவாக வழிவிட்டது. இது,இந்திய வரலாற்றின் அடுத்த கட்டம். மூன்றாம்கட்டமான குப்தர்காலத்தில் ஓர் அகன்ற பாரதத்தினை உருவாக்குதற்கு சமஸ்கிருதமும்,பிராமணப் பண்பாடும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இதே மாதிரியான வரலாற்றுப்போக்குகள் தென்னிந்தியாவிலும் நடந்தேறின. வெவ்வேறு திணைப்புலங்களிடையிலான சமூகப் போக்குகளின் உள்ளுறவுகளே வரலாற்றுச் செல்நெறிகளாக அறியப்படுகின்றன. கிறித்தவ சகாப்தத்தின் முன்னும் பின்னுமாக, தென்னகம்-குறிப்பாக,தமிழகம் வட புலத்தோடு பண்பாட்டு உள்ளுறவினைக்கொண்டு இந்தியமயமாதலை ஒருவணிக வழிகளைக் கொண்டு தென்கிழக்காசிய நாடுகளுடனும், மத்திய தரைக்கடல் நாடுகளுடனும் ஓர் உலகமயமாதலை அல்லது கண்டமயமாதலை உருவாக்கியுள்ளது. இங்கு,வணிகம்என்றபொருளியலும்,கடற்பயணம்என்ற தொழில்நுட்பமும் இணைந்து தொழிற் பட்டுள்ளன.இப்படி,

இந்தியமயமாதலும், உலக மயமாதலும் தமிழகத்தில் ஒருங்கே செயற்பட்டு உள்ளன.  இவை, தமிழ்ச் சமூக வரலாற்றில் பிரதி பலித்துள்ளன. இக்கட்டங்களைக் கடந்துதான் தென்னகச் சமூகம் பண்டைக்காலத்திலிருந்து இடைக்காலத்திற்கு மாறியது. மாறிவரும் கால கட்டத்தின் சமூகவியல் போக்குகளை கி.பி.ஐந்நூறு வாக்கிலிருந்து தெளிவாகக் காணலாம்.  உலக அளவில் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு புனித ரோமானியப் பேரரசு வீழ்ந்து சரியும் முற்றுப் புள்ளியாக அமைந்தது;தமிழகத்தில் பல்லவர் எழும் தொடக்கப் புள்ளியாகவும் அமைந்தது.

இப்படி,மாறி வரும் இடைக்காலத் தமிழகத்தின் /தென்னகத்தின் வரலாற்றினை ஆய்ந்தெழுத சான்றுகள் திராவிடமொழிகளிலும், இந்தோ-ஆரியமொழிகளிலும், இந்தோ- அய்ரோப்பிய மொழி களிலும் உள்ளன. இனி, தென்கிழக்காசிய மொழி களான சீனம், ஜாவன், தாய், மலாய் போன்ற மொழிகளிலும் சான்றுகளைத் தேடவேண்டியிருக்கும்.  தமிழகத்தின் ஆய்வுத்துறையில் என்ற தொடரினை ராபர்ட் கால்ட்வெல் தொடங்கி வைத்தார். எட்கட்ஸ் தர்ஸ்டன் என்ற உடற்கூறியல் ஆசிரியர் எழுதிய தென்னிந்தியக் குலங்களும்,குடி களும் என்ற நூல் தொகுதிகளே பண்பாட்டுக் கூறுகள் என்ற பின்னணியில் தென்னிந்திய மக்கள் வரலாற்றினைப்பற்றிய நல்ல ஆய்வியல்நூல் எனலாம். 

இந்திய வரலாற்றில் தென்னகத்தின் பங்கு என்ன என்பதனை எடுத்துரைக்க S.KrishnaSwami Aiyangar முயன்றார்.  இந்நூலின் மையப் பொருள் தமிழகத்தைச் சுற்றியே அமைந்தது. K.A.Nilakanta Sastri, Foreign Notices of South India என்ற நூலின் மூலம் தென்னிந்தியாவைப் பற்றி உலகின் வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்ட குறிப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பின் அடிப்படையில் அறிஞர்களின் கவனத்தினை ஈர்த்தார். இவர்கள் அனைவரும் பன்மொழிப்புலமைகொண்டவர். சான்றுகளைக்களஆய்வில்தேடுவதில் வல்லவர். இவர்களின் வரலாறு எழுதும்முறை மக்கள் வரலாறு என்ற முத்திரையுடன் இல்லை.  எனினும், அதில் அச்சாயல் இருந்தது.  தொடர்ந்து, பின்னவர்கள் அரச குடும்பங் களை மையப்படுத்தி ஆய்ந்தனர். 

தென்னகத்தின் பெரும்பாலான நிலப்பிரதேசங்களை தம் ஆளு கைகளுக்குள் வைத்திருந்தவர் என்று இரு அரசர்களான முதலாம் ராஜராஜனையும்,கிருஷ்ண தேவராயரையும் குறிப்பிடுவர். இவ்விருவரின் ஆட்சியில் தான் தென்னகம், தென்கிழக்காசிய நாடுகளோடு வணிகப் பிணைப்பினை உருவாக்கியது. கூடுதலாக,கிருஷ்ணதேவராயர் மேற்குலக நாடுகளுடன் வணிகத்திற்கும் வாய்ப்பளித்தார்.

இவ்விரு அரச குடும்பத்தினரின் ஆட்சிக்குப் பிறகு தென்னகச் சமூகம் பெரும் மாறுதலுக்கு உள்ளானது. இம்மாறும் காலகட்டத்தினை விளக்குவதற்கு பேரா.நொபொரு கரஷிமா தம் நூலிலுள்ள பதினைந்து கட்டுரைகளுக்கும் மூலச்சான்றுகளாகத் தமிழ்மொழிக் கல்வெட்டுகளையும்,செப்புப் பட்டயங்களையும், இலங்கையின் தமிழ்க் கல்வெட்டுகளையும், தென்கிழக்காசிய மொழிகளில் உள்ள சான்று களையும், கூடுதலாக அகழாய்வில் கிடைத்த சீனத்து பீங்கான் சில்லுகளையும், தெலுகு, கன்னட மொழிக் கல்வெட்டுகளையும், சிறப்பாக சீனமொழிவரலாற்று ஆவணக்குறிப்புகளையும்தாமேமொழிபெயர்த்துப் பயன்படுத்தியுள்ளார்.  இவ்வனைத்து வகைச் சான்று களையும்கொண்டு எவ்வாறு தென்னகச்சமூகம் பண்டைக் காலத்தினின்றும் இடைக்காலத்திற்கு நகர்ந்தது என்று நுணுகி ஆய்கிறார். 

இவற்றுக்கு வணிகமும், நிலவுடைமையுமே காரணம் என்பது கருப்பொருளாகும்.  அதற்குச் சமய நிறுவனங்களும் எவ்வாறு இயங்கின என்பதனை விளக்குவதே இந்நூலாகும் (South Indian Society in Transition : Ancient to Medieval, OUP,2009). வணிகர்கள் சமயத்தினையும், அரசினையும் பயன்படுத்தி வளர்ந்ததுபோல் நில வுடைமைச் சமூகமும் இயங்கியது.  இவர்கள் அனை வருக்கும் சேர்த்து உழைத்தவர்கள்தான் குடிகள். இவர்களை ஒருங்கிணைத்தது அரசு. அதற்கான சட்ட வரைவு இலக்கியம். அதனை வெளிப்படுத்தியது செப்புப்பட்டயங்களும்,கோயில்கல்வெட்டுகளும் பிற ஆவணங்களும். எனவேதான், அவற்றை மூலச் சான்றுகளாகப் பயன்படுத்தியுள்ளார்.

இயற்கைக்கும்,மனித சமூகத்திற்கும் இடையிலான உறவினை விளக்கும் சம்பவங்களே வரலாறு எனலாம். மூலவளங்களான இயற்கையினை மனிதச் சமூகம் பயன்படுத்துகையில் போட்டியும், சண்டைகளும், அதற்கான முஸ்தீபுகளும்,போட்டியில் வென்றவர் வளங்களைத் தக்க வைத்துக்கொள்ள எடுக்கும் முயற்சிகளுமே வரலாறு என்று சொல்லத் துணியலாம்.  அப்படி எடுக்கும் முயற்சிகளில் வணிகம்,சமயம்,போர் போன்ற கருத்தியல் நிறுவனங்களும் இயங்கியுள்ளன. இதில் இந்தியாவைப் பொறுத்தும்,தமிழகத்திலும் சாதிகளும் இயங்கி யுள்ளன.

குறுநிலவட்டம்

ஆய்வுக்களத்தினைக் குறுநிலவட்டத்திலிருந்து பெருநிலவட்டத்திற்கு நகர்த்துவது இவரின் ஆய்வுக் கூறுகளில் ஒன்று. இதனால்,வெவ்வேறு வட்டாரங்களிடையிலான சமூக, பொருளியல் கூறுகள் எளிதில் புலப்படும். பெருநில வட்டத்தின் பண்பாட்டுக் கூறுகள் குறுநில வட்டத்தில் பாயும். குறுநில வட்டத்தின் பண்பாட்டுக்கூறுகள் அவற்றைத் தாக்குப்பிடித்து உள்ளிழுத்துக்கொள்ளும். முந்தைய பத்தியில் சொன்னபடி,போரும், வணிகமும், நில வுடைமையும் சமூகத்தினை ஒரு நிலையினின்று மறுநிலைக்கு எப்படி நகர்த்துகிறது என்பதனைக் கண்டறிவதே இந்நூலின் மைய இழையாகும். இதற்கான ஆய்வுக்களம் புதுக்கோட்டை வட்டாரம் தொடங்கி இந்தியப் பெருங்கடல் வரைக்கும் குளத்தின் அலை வட்டம் மையத்திலிருந்து கரை நோக்கி விரிவது போன்று விரிகிறது.  இதற்கு ஒட்டுமொத்த சமூகஇயக்கத்திற்கும் அடிப்படையான குடியினின்றும் தம் ஆய்வினைத் தொடங்குகிறார்.

குடி : உரிமைச்சொற்கள்

நிலவுடைமையினைச் சுட்டும் பல சொற்கள் சான்றுகளில் பதியப்பட்டுள்ளன.  அவை:காணி, காராண்மை, மீயாட்சி, குடிக்காணி, குடி நீங்காக்காணி, குடிநீக்கியகாணி, ஜென்மக்காணி, பற்று, படைப்பற்று என்று ஒரு பட்டியலே இடலாம். இவ்வுரிமையினைக் கொண்டவர்கள் அரையன், பேரையன், உடையான், நாடாழ்வன், மூவேந்த வேளான் போன்ற பட்டங்களைக் கொண்டவர்கள். இவர்களே அதிகாரத்தினை நிர்ணயிப்பவர்கள்.

மேற்சொல்லப்பட்ட இருவகைச் சொற்றொகுதி களின் அடிப்படையில் நிலவுடைமைச் சமூகத்தின் இயல்புகளையும் கூறுகளையும் அது மாறிவரும் நிலையினையும் ஆசிரியர் விளக்குகிறார். அதற்கான தம் ஆர்வத்தினையும் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்: “இரண்டாம் உலகப்போரின் கால கட்டத்திலிருந்து மாறிவரும் இவ்வுலகத்தினை தாம் அவதானித்துக்கொண்டிருப்பதாகவும் இதுபோன்ற மாற்றங்களை இடைக்காலத்திய தென்னக மக்களும் பெற்றிருப்பார்கள் என்றும்,எனவே அது போன்றவற்றை அறிந்து பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தம் அவாவினை வெளிப்படுத்துகிறார்.  அப்படியொருமாற்றம் குடி என்ற நிலவுரிமையில் நிகழ்ந்ததனை விளக்குகிறார்.

குடி ஓர் இனத்தினையும்,அதன் உரிமையினையும் குறிக்கும் தமிழ்ச் சொல். சங்க இலக்கியத்திலும், பழந்தமிழ்க் கல்வெட்டுகளிலும், தொடர்ந்து பல்லவர், பாண்டியர், சோழர் செப்பேடுகளிலும், இன்றைய பேச்சு வழக்கிலும் இச்சொல் பயன்பாட்டில் உள்ளது.  தமிழக வரலாற்றில் நிலவுடைமைச் சமூகக்கூறு களின் அச்சு இச்சொல்தான்.  குடி என்ற நிலவுடை மையில் பல உள்ளடுக்குகள் இருந்தன. இவற்றுள்அரசு,பிராமணர்,வெள்ளாளர், போர்க்குலத்தவர்,நிலத்தில் உழைக்கும் குடிகள் அனைவரும் களமாடியுள்ளனர்.  அதிகாரத்தளத்திற்கும்,சூழலிற்கும் தக்கபடி இவ்வுரிமையின் சட்டத்தன்மை இளகியும், இறுகியும் மாறிவந்துள்ளன. தம் தம் திணைப் புலங்களில் தனித்த அடையாளங்களுடன் வாழ்ந்து வந்த மக்கள் குடி என்று அடையாளம் காணப்பட்டனர். அத்திணைப் புலத்திற்கு அவர்கள் உரிமை யுடையோர் என்று பொருள். அவர்கள் தன்னியல் பாக வாழ்ந்தபோது மண்ணின்மீதான அவர்களின் உரிமையில் சிக்கல் இல்லை. 

தமிழகத்தின் வடக்கில் பல்லவர் எழுச்சியுறும்போது நிலக்கொடைகளைச் சமயம்சார்ந்த நிறுவனங்களுக்கும், நபர்களுக்கும் வழங்கினர்.  அப்போது குடி என்ற நிலவுரிமையின் மேல் சிக்கல் எழுகிறது.  தம் நிலத்தில் உழுது பயிரேற்றித் தன்னியல்பாக உரிமையுடன் வாழ்ந்த குடிகள் அரசுருவாக்கத்தின்போது அரசர்க்குக் குடிகள் என்று மாற்றப்படுகின்றனர்.  குடி என்ற பழந்தமிழ்ச் சொல்லிற்கான பொருளும் மாற்றப்படுகிறது. சமயத்தினை முன்னிறுத்தி இப்படி யொரு சமூகமாற்றத்தினைத் தொடங்கியவர் பல்லவரே.

குடி என்ற பரம்பரை பரம்பரையாக ஒரு நிலத்தின் மீதான ஆளும் உரிமையினை நீக்கி புதிதாகக் கட்டப்பட்ட ஒரு சமணப் பள்ளிக்கு முதன்முதலில் நிலம் பல்லவர்களால் கொடை யளிக்கப்பட்டது.  அந்நிலத்தினின்றும் நீக்கப்பட்ட குடிகள்-அதாவது, உண்மையான உரிமையாளர்கள் என்னவானார்கள்?மேற்சொன்னபடி அரசருக்குக் குடிகளானார்கள். இது ஒரு சமூக மாற்றமே. தமிழகவரலாற்றில் முதல்முறையாக விளைநிலத்தினை அனுபவித்து வந்த குடிமக்கள் ஒரு சமயம் சார்ந்த நிறுவனத்திற்காக விரட்டப்பட்டுள்ளனர்.  அதாவது, பரம்பரை பரம்பரையாக அனுபவித்துவந்த நில வுரிமை முறியடிக்கப்பட்டுள்ளது. 

இதனை முடித்தது சமயம்.காலம் செல்லச் செல்ல,குடி என்ற சொல்லின் பொருள் மாறுகிறது.  கோயில்களுக்கும், பிராமணர் களுக்கும், தனியாருக்கும் கொடையளிக்கும்போது இச்சொல் நிலத்தின்மீதான மேலுரிமையினை-அதாவது, மீயாட்சியினைச் சுட்டுகிறது.  சில சூழலில் கொடையளிக்கப்பட்ட நிலத்தின்மீதான உழும் உரிமையினைச் சுட்டுகிறது.  அடுத்த கட்டத்தில் நிலத்தின் விளைச்சலை அனுபவிக்கும் மீயாட்சி ஒருவருக்கும் (கோயிலும், பிராமணரும்:இவர்கள் நிலத்தினை உழமாட்டார்),நிலத்தில் உழும் உரிமை பிறிதொருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலைதான் நிலத்தினை உழும் குடிகளை,கொடை யளிக்கப்பட்ட போது நிலத்தோடு பிணைத்து அடிமைகளாக்கியுள்ளது. இப்படி சமயம்சார்ந்த நிலக்கொடை அடிமைச் சமூகம் உருவாக வழிவிட்டது. குடி என்ற சொல் வரி என்ற பொருளில் விளைச்சலில் பெரும்பங்கினைக் குறிக்கிறது.  இவ்விவசாய உற்பத்தி தான், சமூக மாற்றத்திற்குப் பெரிய காரணமாகும்.  அதனை நடத்தியவை அரசும், கோயிலும்.

வரலாற்று மாற்றங்களுக்கான காரணங் களைக் கீழ்க்காணுமாறு நூலாசிரியர் வரிசைப்படுத்துகிறார்.

1. சோழர் அரசு, பிராமணர்களுக்கும் அலுவலர் களுக்கும் நிலக்கொடை வழங்கியதால் தனியார் நிலவுடைமை அதிகரித்து நிலத்தின் மீதான கூட்டுரிமை குறைந்தது.

2. அரசு, தம் அரசியல் கொள்கைகளை மாற்றிக் கொண்டு நிலவுடைமை, வரிவசூல் இவற்றினை வெள்ளாளர்களுக்குச் சாதகமாக்கியது.

3. சமூகம் மாறும் காலகட்டத்தில் சோழர் சமூகம் சாதியச்சமூகமாக உருவெடுத்தது.  அதனுள் மலைக்குடிமக்களும் இணையும்போது பிராமணர்,வெள்ளாளர்களுக்கான சலுகையும் நிலவுடைமையும் சரிந்தன.

4. பெரிய நாடு,சித்திரமேழிபெரியநாடுபோன்ற அமைப்புகள் புதிய நிலவுடைமையாளர்களான போர்க்குலத்தவரால் உருவாக்கப்பட்டன. இதனால், தேங்கியிருந்த முன்னாள் நிலவுடைமையாளர்கள் தம் ஆதிக்கத்தினை வெளிப்படுத்த இயலாமல் தோற்றனர்.

5. பதின்மூன்றாம், பதினான்காம் நூற்றாண்டுகளில் உருவான சமூக பொருளியல் மாற்றங்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகரத்து ஆட்சிக்கு வழிவிட்டன.

இம்மையக் கருத்துகளையே கீழ்த் தந்துள்ள பத்திகள் விளக்குகின்றன;சில கருத்துகளும் சொல்லப்படுகின்றன.

அரசும் கோயிலும்

தொடக்க காலத்தில் கோயிலுக்குக் கொடை யளிக்கப்பட்ட நிலத்திலிருந்து வட்டார ஆட்சி யாளருக்கு வரவேண்டிய வருவாயினை நாட்டாரும்,ஊராரும் நீக்கி அதனைக் கோயில் பூசனைகளுக்கோ,அதுசார்ந்தபிராமணர்களுக்கோதிருப்பியுள்ளனர். கோயிலுக்குக்கொடுப்பதும், பிராமணர்களுக்குக் கொடுப்பதும்,அரசர்களுக்குக் கொடுப்பதும் ஒன்றாகவே கருதப்பட்டன. பன்னிரண்டாம் நூற்றாண்டில் மாக்கலம் என்றொரு புதுவகையான வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இது ஒரு அரசியல் கொள்கை மாற்றமாகும்.  இது கோயிலை முன்னிறுத்தி நடந்துள்ளது.

புதுக்கோட்டை

பதின்மூன்று,பதினான்காம் நூற்றாண்டுகளில் புதுக்கோட்டை வட்டாரத்தில் ஒரு தனித்த அரசியல் போக்கு நடந்தேறியுள்ளது. தெலிங்ககுலகாலபுரத்து நகரத்தாரின் இரு வியாபாரிகள் நிலத்தினை வாங்கி அந்நிலத்தினைக் கோயிலுக்குக் கொடையளித்து அந்நிலத்துக்குத் தாங்கள் குடிகளாகிக் கொண்டார்கள். அதாவது,உழும் உரிமையினை மட்டும் தக்க வைத்துக் கொள்ளமுடிந்தது. புதிதாக எழுந்த போர்க்குலத்த வரும் தம்மை இவ்வாறு அழைத்துக்கொண்டனர். இதனைக் காராண்கிழமை என்றும் சுட்டுவர். இப்படித் தான் இடைக்காலத்தில் கோயில்கள் பெருத்த செல்வக் களஞ்சியங்களாயின. ஆனால், கோயிலைவிட மேலானவர்கள் ஆட்சியர்கள். 

அதாவது,நகரத்தார்கள். அவர்கள் குடிகள் செலுத்தவேண்டிய இறை,குடிமை,என்ற வரிகளைத் தவிர்த்துள்ளனர்.  நகரத்தாரே அரையன் ஒருவரையும் அவனுடைய சகோதரர் ஒருவரையும் அதே கோயிலுக்குக் குடி களாக்கியுள்ளனர். கோயில்சார்ந்த பொருளியல்,அரசியலோடு ஒட்டிக்கொண்டால் ஆட்சியினைப் பற்றலாம் என்பது அரையர்களின் கணக்கு;கோயில் சொத்துக்களுக்கு அரையர்களையே பாத்தியதை யாக்கி சலுகைகளையும் வழங்கிவிட்டால் புதிதாக எழும் அரசியலில் பக்குவமாக நடந்துகொள்ளலாம் என்பது நகரத்தார் கணக்கு.  இக்காலகட்டத்திற்குப் பிறகுதான் இவ்வட்டாரத்தில் ஆடிக்குறுவை,ஐப்பசிக்குறுவை, சித்திரைக்குறுவை போன்ற பருவகாலப்பயிரின் பெயர்களும் இஞ்சி,மஞ்சள்,வாழை, கருணை, கரும்பு, எள், வரகு, கமுகு, வெற்றிலை போன்ற பணப்பயிர்களின் / வணிகப் பயிர்களின் பெயர்களும் அடிக்கடி கல்வெட்டு களில் பதியப்பட்டுள்ளன. 

வேளாண் ஊர்களின் Statellite Settlement என்ற குடிக்காடுகளின் எண்ணிக்கையும் கூடுகிறது.  குமிழி மடைகள், நீருரிமைகள் பற்றிய குறிப்புகளும் அதிகரிக்கின்றன.  இச்சூழலில் தான் அரசு மக்களும்,மறமுதலிகளும் தம் தந்தைக்கே காராண்கிழமைஉரிமைகளை வழங்கியுள்ளனர். தந்தைக்குப் பதில் தாமே கோயிலுக்கு வரி செலுத்தியுள்ளனர்.இங்குக் கோயிலை முன்னிறுத்திச் சொத்தும்,உறவும் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  படைப்பற்று என்ற புதிய நிலவுரிமை அறிமுகமாகிறது. இப்படைப்பற்றுத்தலைவர்கள் மடாதிபதிகளுக்கு நிலம் வழங்கி சமயப்பிரசார நிறுவனத்திற்குள் நுழைகின்றனர்.  மடமும்,கோயிலும்வளத்துடன் வளர்ந்தபின் கோயில் பெண்டிர்க்கு நிலத்தினை விற்றுள்ளனர். இச்சூழலில்தான் காசு,அச்சுவரி,பணம் போன்ற சொற்கள் வரிகளைச் சுட்டுதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்படி இவ்வட்டாரத்தில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்தது.

சோழர் அரசும் ஆணையும்

சோழர் அரசு,வலுப்பெற்று எழுந்தவுடன் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளில் பதினாறு அரசாணைகளை இட்டுள்ளது. இவை கோயில்களுக்கு வரிகட்டு தலில் இருந்து விலக்களித்துள்ளன. இதன்மூலம் அரசு சமூகத்தினைக் கட்டுப்படுத்துவதற்குக் கோயில் நிறுவனங்களைப் பிரதானமாகப் பயன்படுத்தியுள்ளது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கோயில் களுக்காக அரசு ஆதரவு குறைந்ததனை வட்டாரத் தலைவர்கள் நிறைவு செய்து ஈடுகட்டினர். புதுக்கோட்டை வட்டாரத்தில் அரசு மக்கள் அதனைச் செய்தனர்;திருச்சிராப்பள்ளி,செங்கற்பட்டு பிர தேசங்களில் நாட்டார்கள் செய்தனர். பதினான் காம் நூற்றாண்டின் அரசியல்குலைவு, உள்ளூ ராட்சியின் சிதைவு போன்றவற்றால் சமய நிறுவனங்கள் போதிய பாதுகாப்பினைப் பெற வில்லை. அவை தம்மைச் செப்பனிட்டுக் கொள்ளவும்,கடனை அடைத்துக்கொள்ளவும் இயலாமல் தவித்தன. இச்சூழலை,வட்டாரத்தலைவர்கள் சாதகமாகப் பயன்படுத்தினர்.  இப்படி அதிகாரமும்,கோயில் களும் அரசர்களிடமிருந்து குறுநிலவட்டத் தலைவர் ளுக்கு மாறின.

அரசின் நிலவுரிமைக் கொள்கை : காணியாளர்

சோழராட்சியின் இடைக்காலத்தில் மலிந்து கிடந்த நிலவிற்பனை பெருத்த நிலவுடைமையாளர்களை உருவாக்கியது.  அதுவே, சோழர்அரசு மறை விற்கு வழிவிட்டது.  இது இவ்வாறெனில் முதல் ராஜராஜன்,முதல் ராஜேந்திரன் தலைமையில் உருவான வீரியமிகு அரசியலில் சமூக,பொருளியல் மாற்றம் உண்டானது. இது,காவிரியின் தென் கரையிலுள்ள நிலவுடைமையாளர்களைப் பலப் படுத்தியுள்ளது. இக்காலகட்டத்தில்தான் நீர்ப் பாசன வசதியும் வலுப்பெற்றது. காவிரியின் வடகரையில் இருந்துவந்த மலைக்குடிமக்களான சோழர்படையினர் இதே இடைக்காலத்தில் சமூக,பொருளியல் தளங்களில் பலம் பெற்றனர். தென்கரையின் பழைய நிலவுடைமையாளர்களுக்கும், வடகரையின் புதிய நிலவுடைமையாளர்களுக்கும் போட்டி எழுந்தது. இது ஒரு சமூக மாற்றமே.  தென்கரை நாட்டவர், வடகரையில் நிலம்வாங்க முற்படுகையில் சோழர் அரசு தடைவிதித்தது.  புதிதாக உருவான படைக் குழு-நிலச்சுவான்தார்கள் அடிக்கடி நிலம் வாங்கு தற்கான பொன்னை எங்கிருந்து பெற்றனர்?இங்கு தான் ஜார்ஜ் டபிள்யூ.ஸ்பென்சர் முன்மொழிந்த போரும் கொள்ளையும் என்ற கொள்கை பொருந்திப் போகிறது. புதிதாக எழுந்த ஸ்ருதிமான், நந்தமான், பள்ளிஇனத்தினர், பிராமணர், வெள்ளாளர் நிலச்சுவான்தார்களுடன் நிலம் வாங்குதலில் போட்டியிட்டனர்.

நிலவுடைமையும் சாதியும்

இந்தியச் சமூகத்தின் சாதியப்படிநிலை ஒன்றை யொன்று இழிவு செய்வதன் மூலம் வெளிப்படுகிறது. இதனை மனிதன் இறைவனின் வெவ்வேறு உறுப்பு களினின்றும் தோன்றுகிறான் என்று வரிசைப் படுத்தி,காலடியில் பிறந்தோர் சூத்திரர் என்று சொல்வர்.  ஒரு மனிதனின் அடையாளமே தலை தான் என்பதால் பிராமணர் மண்டையிலிருந்து பிறந்தார் என்பர். சாதிப்பிரிவுகளிடையேயான ஒருங்கிணைவில் ஆகக்கடைசியில் உள்ளோர்தான்படுமோசமாகஇழிவுபடுத்தப்படுகின்றனர். 

பல அடுக்குள்ள மேல் தட்டுகளிடையேயான ஒரு மையில் பிறரை கடைசியரோடு இணங்கவிடாமல் மறுப் பதற்குக் கடைசியரின் செய்தொழிலும் இழிவுபடுத்தப் படுகிறது.  கல்வெட்டுகளில் ஓம்படைக் கிளவியில் நிலக்கொடைகளை எதிர்ப்பவர் சாதியின் பெயரால் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். இதுபோன்ற கருத்துகள் சமஸ்கிருதச் சட்ட நூல்களிலும், சமஸ்கிருதக் கல் வெட்டுகளிலும் உண்டு. அறக்கொடைகள் பற்றிய தொடக்ககாலக் கல்வெட்டுகளில் இதேபோன்ற குறிப்புகள் இல்லை. ஆனால்,தனியார்உருவாக்கிய அறக்கொடைகள் பற்றிய கல்வெட்டுகளில்இது போன்ற விவரங்கள் உள்ளன.  மனிதச்செயலினைஇழிவுபடுத்துதற்குக்கல்வெட்டில்பாவம்என்றசொல்பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலில் நிலவுடன் படிக்கையினை மீறுதல் பாவம் என்று சொல்லப் பட்டது;நரகத்திற்குப் போக நேரிடும் என்று அச்ச மூட்டப்பட்டது. 

சோழர் தளர்ச்சியுற்ற பதின் மூன்றாம் நூற்றாண்டில் அரசுக் கட்டமைப்பினை இறுக்குதற்கு ஒரு கருத்து தேவைப்பட்டது. அது குற்றவுணர்வு. சிதறும் மக்களை இறுக்கிப் பிடிக்குள் கொண்டுவர உடன்படிக்கையினை மீறுவோர் மேல் குற்றவுணர்வினைத் திணித்து அரசக் கட்டளையிலிருந்து விலகவழியில்லாமல்ஆக்கினர். மீறுவதுராஜதுரோகம், நாட்டுத்துரோகம், சிவதுரோகம், இனத்துரோகம், குருதுரோகம் என்றுவரை யறுக்கப்பட்டது.  இவையனைத்தும் அரசக்கூறுகள்.  உடன்பாட்டுக்குள் வராதவரை நத்தமான்களும், மலையமான்களும் கீழ்ச்சாதி என்று விலக்கு கின்றனர். போர்க்குலத்தவர் மலிந்து வாழும் வறண்ட பகுதியில்தான் இதுபோன்ற போக்குகள் பதிவாகியுள்ளன. 

மக்கள் நெருக்கம் குறைந்த இது போன்ற பகுதிகளில் உழைப்புத் தேவைக்கு மக்களை ஒருங்கிணைக்கும் கருவியாக சாதிஉணர்வு பயன் படுத்தப்பட்டிருக்கலாம். இங்குதான் சாதியினை ஆயுதமாக எடுத்தோர் சாதியத்தால் வீழ்ந்தகதை உருவானது.  ஆனால் ஆண்கள் அடித்துக் கொண்ட சாதிச்சண்டையில் பெண்கள்தான் பலியாகியுள்ளனர். ஒரு கல்வெட்டில் அறக்கட்டளையினைப் புறக்கணிப்பவன் தன் மனைவியினைப் பிறருக்குக் கொடுத்தவனாவான் என்று சுட்டப்படுகிறான். அவர்களின் மனைவிமார்களின் நாசியும், மார்பும் வெட்டப்படும் என்று ஒரு கல்வெட்டு அசிங்கப் படுத்துகிறது. 

சிதைக்கப்படும் பெண்கள் மனைவியர் மட்டுமன்று; அவர்கள் அன்னையருமாவர்.  அதி காரம் சரியும்போது சாதியினைவைத்துச் சரிக் கட்டலாம் என்று நினைத்தோர்க்குச் சாட்டையடி காத்திருந்தது. இடங்கை,வலங்கை என்ற சாதிக் குழுக்கள் அணியெடுத்தன. இவர்கள் வேளாண் குழுவினர்,கைவினைஞர்கள் என்று பிரிந்திருந் தாலும் இவ்விரு அணிகளில் உள்ள உள்சாதியினர் தங்கள் கூட்டணியினை மாற்றிக்கொண்டேயிருந் தனர். இதற்குச் சில காரணிகள் உண்டு. சமூக அந்தஸ்தினை நிர்ணயிக்க சாதி தேவைப்பட்டது. அதிகார அந்தஸ்தினை நிர்ணயிக்க பொருளியல் தேவைப்பட்டது. இரண்டினையும் தக்கவைக்க அரசியல் தேவைப்பட்டது.  இவைதான் வலங்கை, இடங்கைச் சக்கரத்தின் ஆரைகள்.

கல்வெட்டுகள் சுட்டும் அனைத்து இனப்பெயர் களும் சாதிப்பெயர்கள் அல்ல. மலையாள முதலிகள், மறமுதலிகள்,அகம்படி முதலிகள், பன்னாட்டு முதலிகள் போன்றன சாதிப் பெயர் அல்ல.  இவை சமூக அந்தஸ்தினையும், தொழிலையும், குலத் தோன்றலையும், இரத்த உறவினையும் சுட்டுகின்றன. காட்டாக,நாட்டு முதலிகள் என்னும்சொல் சாதியினைச் சுட்டவில்லை.

சாதியர்களின் ஒருங்கிணைவினை ஒருமை என்ற சொல் கல்வெட்டில் விளக்குகிறது.  முப்பது,நாற்பதாண்டுக்கால சாதி பற்றிய ஆய்வில் சாதியப் படிநிலையின் தலையில் இருப்போர் பிராமணரா? அல்லது சத்திரியரா? என்ற வாதமும் சமூக நிலையில் சமயமா? அல்லது அரசியலா?என்ற வாதமும் தொடர்ந்தவண்ணம் உள்ளன என்று கேள்வி எழுப்பப்படுகிறது.  இரண்டும் இல்லை எனலாம்.  இதனை உருவாக்கியது ஒரு கருத்தியல்.  அதற்குப் பெயர் வாச்சாப்பு,வியாக்கியானம். அதாவது,தேவையானது வாயடிப்பதும், மூடிக்கொள் வதும். தென்னிந்தியாவில் சத்திரியர் என்றொரு சாதியில்லை என்ற நிலையில் வெள்ளாளர்கள் அதனை இட்டு நிரப்பினர் என்றும், பிறகு பிராமணர்- வெள்ளாளர் கூட்டணி இதனை இட்டு நிரப்பியது என்றும் கருத்து சொல்லப்படுகிறது. 

இதனை பிராமணர் என்ற சமயக் கருத்தியலும்,வெள்ளாளர் என்ற நிலவுடைமைக் கருத்தியலும் என்று கருத வேண்டும். வெள்ளாளர் என்பது சாதியன்று. வெவ்வேறு வேளாண்குழுக்களில் இருந்து எழுந்த பல படிநிலைகளைக்கொண்ட ஒரு மேட்டுக்குடி.  இது வட்டாரத்திற்குத் தக்கபடி மாறும்நிலை கொண்டது.  தென்னகத்தில் பிராமணர் என்ற சொல் பல பிராமணர் குழுக்களை உள்ளடக்கியது. சங்ககாலம் தொட்டு வாழ்ந்து வந்த அந்தணர், பார்ப்பார்,பிறகு வடமாள், அடுத்து ராமாநுசர் வழங்கிய அழகிய பிறாமணாள், சிவாச்சாரியார், குருக்கள் என்ற பலகிளைகளுண்டு. இக்குழுக்கள் சமயக் கருத்தினை உள்வாங்கி இயங்குவன.

வலங்கை இடங்கை முறைப்பாடு

வலங்கை, இடங்கை முறைப்பாட்டினை இரு சாதிக்குழுக்களிடையேயான சிக்கலாகக் கருத வேண்டியதில்லை. பழைய நிலவுடைமையாளருக்கும்,புதிய நிலவுடைமையாளருக்கும் இடையே நிகழ்ந்த அதிகாரப்போட்டி.  இவ்விரு குழுக்களின்கீழ், சாதிகள் இயங்கின.  முன்பு சொன்னபடி,இவற்றில் சில உள்சாதிகள் அணி மாறியும் இயங்கின. இவ்வியக்கம் சாதி இறுக்கத்தினை வலியுறுத்தி உழைக்கும் சாதியினைஅடிமையாக்கியதே தவிர அவர்களுக்கு விடுதலையளிக்கவில்லை. இந்த அணிகளில் தன்னை விரும்பிய ஒரு வில்லனிடமிருந்து விலகி, தான் விரும்பிய கதாநாயகன் இல்லத்தில் பதவிசாக அடிமைப்பட்டுக் கிடக்கும் காதலியைப் போன்றது உழுகுடிகளின் நிலை. இது ஆள்வோரின் கூட்டணி யன்றி ஆளாக்கும் கூட்டணியன்று.

பெரியநாடும் பேரிளமைநாடும்

வரலாற்றில் மக்கள் எழுச்சியுறும்போது ஒரு கருத்தியலை உருவாக்குவர். அதனை மண்சார்ந்த உரிமைப்போராட்டம் என்பர். இனமும்,மண்ணும் போராட்டத்தின் கண்கள்.  சித்திரமேழிப் பெரிய நாடு இவ்வாறு உருவாக்கப்பட்டதுதான். அரசின் அழுத்தத்தினை எதிர்த்துநிற்க பெரியநாடு என்ற கூட்டமைப்பு வெள்ளாளர்களால் உருவாக்கப் பட்டது என்றும், பிராமணரின் நிலத்தினை உழும் உழுகுடிகள் பிராமணர்களுக்கு எதிராக பேரிளமை நாடு என்ற அமைப்பினை உருவாக்கினர் என்றும் அறியப்படுகிறது.  சிதம்பரம், மன்னார்குடி, கீழ்க் காவிரிப்படுகை,வெள்ளாற்றுப்படுகை போன்ற பகுதிகளில்தான் இவ்வகை நாட்டுஅமைப்புகள் உருவாகியுள்ளன. அதாவது,இங்குப் புதிதாக ஒரு வெள்ளாளர்குடி எழுந்துள்ளனர். 

அதாவது, வெள்ளாளரில் ஒரு புதுஅடுக்கு உருவாகியுள்ளது.  இப்படி வெள்ளாளர்கள் இருஅடுக்கு நிலையில் இருந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். பதின்மூன்று, பதினான்காம் நூற்றாண்டுகளில் புதிதாக எழுந்த நிலவுடைமையாளர்களும் தங் களுக்கான நாட்டுஅமைப்பினை உருவாக்கிக் கொண்டனர்.  இக்காலகட்டத்தில் பள்ளிகள் தமக்கென்று நாடொன்றினை உருவாக்கினர்.  1073இல் சோழமண்டலத்தினை 28 நாடுகளில் இருந்தும் ஜெயங்கொண்ட சோழமண்டலத்தி லிருந்தும் 4800 பூமிகளில் இருந்தும், ராஜேந்திர சோழ பதினெண் பூமி விஷயம் என்ற நாட்டு அமைப்பு மேழிகுடிகள் என்னும் கூட்டத்தாரால் உருவாக்கப்பட்டது. அவர்களுக்கென்று வலங்கை மகாசேனை என்ற படையமைப்பும் இருந்தது. 

அழகிய சோழ மூவேந்தவேளான் என்ற அதிகாரியும் அங்கு பிரசன்னமாயிருந்தார்.  இதுபோன்ற சாதிக் கூட்டங்கள் கோயில் வளாகங்களில் நிகழ்ந்தன. இங்குதான் கோயில்கள் சாதிசார்ந்த அரசியல் ரூபம் எடுக்கின்றன. சித்திரமேழிபெரியநாடு பல புதிய சாதிகளை உள்ளடக்கியது.

பாடிகாவல்

சோழர் சரிவினையொட்டி பாடிகாவல் என்ற ஒரு புதுமாதிரியான அதிகார அமைப்பு வளம் குன்றிய வட்டாரங்களில் இயங்கியது. சோழ ராட்சியின் அதிகார வெளிச்சத்தில் இருண்டு போன இவ்வட்டாரத் தலைவர்கள் சோழர் சரிவில்  மிளிரத் தொடங்கினர்.  தங்கள் தங்கள் நில வட்டங்களைத் தாங்களே காத்துக்கொள்வதற்காக எடுக்கப்பட்டமுயற்சியே பாடிகாவல் என்னும் வரிவசூல்முறை. இது அதிகாரத்தினை நோக்கிய நகர்வு. இதில் பள்ளிச் சமூகத்தினைச் சேர்ந்த காட வராயர்கள், யாதவராயர்கள், சேதிராயர்கள், மலையமான்கள், சம்புவரையர்கள் போன்ற வட்டார இனத்தலைவர்கள் பாடிகாவல் தலை வரானார்கள்.  இவர்களும் தங்களை ஆண்ட அரசர்களைப்போன்று தங்கள் ஆளுகைகளுக்கு உட்பட்ட கோயில்நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளித்துள்ளனர். 

ஆனால், பணிமக்களும், உழவுக் குடிகளும் தொடர்ந்து கோயிலுக்காகப் பணி செய்யவேண்டுமென்று பணிக்கப்பட்டுள்ளனர். ராஜேந்திரசோழசம்புவரையர் என்ற பள்ளியினத்தின் பாடிகாவல்தலைவர் தேவதானநிலங்களுக்குப் பாடி காவல் வரியினின்றும் விலக்களித்துள்ளார். ஆனால் தகடூருடைய ராஜராஜதேவனென்ற அதியமான் தம் ஆளுகைக்குட்பட்ட நிலவட்டத்தில் குமாரக் காசாணம் என்ற வரியினின்றும் குயவர்களுக்கு விலக்களித்துள்ளார். இப்படி பாடிகாவல்முறை,சமூகத்தினை அடுத்த தளத்திற்கு நகர்த்தியுள்ளது. புதிதாக எழுந்த இவ்வட்டாரத் தலைவர்கள் தங் களினத்து மக்களைச் சமஉரிமையுடன் நடத்தினார்கள் என்று கருதவியலாது. அதிகாரப்பெருக்கம் சாதி அடுக்கினை அதிகமாக்கியது. மையத்தில் தொடங்கிய ஒரு சாதியப்புள்ளி பல உள்வட்டங்களைக் கொண்ட சுருள்கத்தியாக விரிவதாயிற்று. அரசர் களைப் போன்று இவர்களும் சமயத்தினையும்,சாதியினையும் போற்றினர். புதுக்கோட்டை வட்டாரத் தலைவர்கள் பாடிகாவல்முறை ஆட்சி அதிகாரத் தினை அடைவதற்கு சாதி பயன்பட்டதனைக் கல்வெட்டுச்சான்றுகள் விளக்குகின்றன.

தென்னகமும் தென்கிழக்காசியாவும்

தம் ஆய்வெல்லையினைக் குறுநிலவட்டத்தி லிருந்து பெருநிலப்பரப்பிற்கு நகர்த்துவது இவருடைய ஆய்வுப்பாணி. குறுநிலவட்டமான புதுக்கோட்டை,பெருநிலவட்டமான தென்னகம் என்று தொடர்ந்து தென்கிழக்காசியப் புவிபிரதேசத்திலும் களஆய்வு களிலும் பல சான்றுகளைத்தேடி இடைக்காலத்தின் வரலாற்றினை ஆய்ந்துள்ளார். வணிகமும்-அரசியலும் இருபட்டைவாள்  போன்றது.  இந்தியப் பண்பாட்டுக்கூறுகளைத் தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டுக்கூறுகளுடன் பொருத்திப்பார்க்கும் ஆய்வு வடஇந்திய அறிஞர்களால் முதலில் தொடங்கப் பட்டது. ஒரு அகன்ற பாரதம் என்ற அரசியல் பார்வை அதில் பொதிந்திருந்தது. நொபொரு கரஷிமா அதனை வேறு கோணத்தில் ஆய்கிறார். தம் முன்னோடிகளான T.N.Subramanian , K.A.Nilakantan Sastri இவர்களிடமிருந்து வேறுபடுகிறார்.

தொகுத்த சான்றுகளின் அடிப்படையில் தென்கிழக்காசிய நாடுகளிடையிலான வணிக வலைப் பின்னலின் முடிச்சுகளை அவிழ்க்கிறார்.  அம்முடிச்சுகள் தென்கிழக்காசியாவின் வணிகத் தளங்களாகவும்,கடற்கரை நகரங்களாகவும் உள்ளன. இவ்வாய்விற்கு இவர் சீனமொழிச் சான்றுகளையும், பீங்கான் சில்லுகளையும் பயன்படுத்தியுள்ளது ஒரு புதுமை.  மறக்கடிக்கப்பட்ட சில கடற்கரை வணிக நகரங்களின் பெயர்களைக் கண்டுபிடித்துள்ளார்.  இப்போக்கில்,முன்பே சொன்னபடி சமய நிறுவனங் களும் பெருமளவில் பங்காற்றியுள்ளன.  இப்படி தமிழகத்தின் பல வணிகத்தளங்கள் ஏற்கெனவே சீனச் சான்றுகளில் சுட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும் காயல்பட்டினம்,பெரியபட்டினம், பாண்டிச்சேரி போன்ற கடற்புரத்து வணிக நகரங்களின் பழம்பெயர்களைப் புதிதாகக் கண்டுபிடித் துள்ளார். 

சீனமொழிச் சான்றுகளில் புதுச்சேரியினையும் பெரியபட்டினத்தையும் கண்டுபிடித்த தனைச் சுவைபடச் சொல்கிறார்.  Dabadan என்ற சீனச்சொல்லின் Da  என்ற phoneme  தமிழில் பெரிய என்ற சொல்லிற்கு இணையானது என்றும் badanஎன்பது தமிழில் பட்டினம் என்ற சொல்லிற்கு இணையானது என்றும் கண்டறிகிறார்.  எனவே, சீனமொழி வரலாற்றுக் குறிப்பில் சொல்லப்பட்ட  Dabadan பெரிய பட்டினத்தினைக் குறிக்கும் என்கிறார்.   Xincun என்று சீனமொழியில் சுட்டப்படுகிற இடம் புதுச்சேரி என்ற பாண்டிச்சேரி என்றும் அங்குதான் சீனத் தூதுவர்கள் வந்திறங்கினர் என்றும் நிரூபிக்கிறார்.

கடாரமும் கரஷிமாவும்

சோழர்படைகள் கடாரத்தினை வென்றன என்று வரலாறு கதைக்க -பதினைந்தாம் நூற்றாண்டின்  Zheng He என்பவர் தலைமையில் இந்தியப் பெருங் கடலில் சீனக் கடற்படையெடுப்பு நடத்தப்பட்டது என்று இன்னொரு வரலாற்றினைப் பதிவு செய்கிறார்.  இடைக்காலத்து வணிகவரலாற்றினைப் புரிந்துகொள்ள சீனத்துப் பீங்கான்சில்லுகள் கிடைத்த மதுரை, நாகப்பட்டினம், பெரிய பட்டினம், காயல்பட்டினம், புலிக்காடு போன்ற தமிழகத்தில் உள்ள இடங்களையும் புத்தளம்,மாந்தை போன்ற இலங்கையில் உள்ள இடங்களையும் கேரளத்தின் கொல்லம் என்ற இடத்தினையும் வரலாற்றுப்பூர்வமாக அறியவேண்டும். சீனத்துப் பீங்கான்சில்லுகள் இவ்விடங்களுக்கு வந்தது எப்படி?இங்குதான் தென்னிந்தியர்கள் தென்கிழக்காசிய நாடுகளுடன் உருவாக்கிய வணிக வலைப் பின்னலைக் கவனிக்கவேண்டும். இவ்விடத்தில் Songshiஎனப்படும் சீனமொழிச்சான்றுகளை நொபொரு கரஷிமா தருகிறார்.

Songshii எனப்படும் சீன வரலாற்றின் குறிப் பேடுகள் சீனநாட்டின் இடப்பெயர்களைச் சுட்டு கின்றன. அவை சுட்டும் சோழநாட்டிற்கும், சீன நாட்டிற்கும் இடையிலான கடற்பாதையினை அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளது. சோழர் அரசு மூன்றாவது முறையாக சீனாவிற்குத் தூதுக் குழுவினை அனுப்பி வைத்ததுபற்றி இவ்வேடுகள் சொல்லும் குறிப்பில் சிக்கல் உள்ளது.  இவ்வேடுகள் சுட்டும் Dihujialou Zhunian என்ற பெயர் முதல் குலோத்துங்கனைத்தான் சுட்டுகிறது என்பதில் சிக்கல் உள்ளது. 

1965-இல் Guangzhou என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் மேற்சொன்ன பெயர் உண்மையில் கடாரத்தின் அரசன்  என்பாரைத்தான் சுட்டுகிறது.  இவன் கடாரத்தின் அரசன் என்றால்,இவன் சோழஅரசன் என்று ஏன் சுட்டப்பட வேண்டும்? Songshi ஏடுகள் Zhunian அரசு - அதாவது சோழர்அரசு Sanfoqui அரசுக்கு-அதாவது, கடாரத்து அரசின்கீழ் இயங்கியது என்று சுட்டுகிறது. இக்கூற்று இராஜராஜனும் அவன் தனயன் ராஜேந்திரனும் கடாரத்தினை வென்றனர் என்ற கல்வெட்டுச் செய்தியினைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

கி.பி.பத்தாம் நூற்றாண்டிலேயே தென்னிந்தியாவில் வணிக வலைப்பின்னல் பின்னப்பட்டது. இவ்வாய்வுக்கான சான்றுகள் தென்கிழக்காசிய மொழிகளான தமிழ், கன்னடம்,தெலுகு,தாய்,சமஸ்கிருதம் இன்னபிற மொழிக் கல்வெட்டுகளிலும் திரட்டப்பட்டுள்ளன. வணிகத்தைப் பற்றிய சில முக்கிய விடயங்களைப் புரிந்துகொள்ள இலங்கையில் கிடைத்த கல்வெட்டுகள் பெரிதும் பயன்பட்டுள்ளன. வணிகர்கள் குழுக்களாக இயங்கினர்.  அவை: அய்நூற்றுவர், வளஞ்சியர், அஞ்சுவண்ணத் தார், மணிகிராமத்தார், திசை-ஆயிரத்து-அய் நூற்றுவர், நானாதேசிகள்.  இவையே தென் கிழக்காசிய வணிகத்தினை நிர்ணயித்தன.  இதனை விளக்கும் கல்வெட்டுகள் தமிழகத்திலும், கர்நாடகத் திலுமே 900-1300 வரை அதிகமாகக் கிடைத்துள்ளன. 

சோழர் சரிந்து பாண்டியர் மீளஎழுகையில் இவ் வணிகம் தளர்ச்சியுற்றது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் செழித்த காயல்பட்டினம் பதினான்காம் நூற்றாண்டில் சரிந்தது. இச்சூழலில்தான் மாலிக்காபூர் படையெடுப்பு நடந்தது. கடல் வணிகம் காயல்பட்டினத்தில் இருந்து பெரியபட்டினத்திற்கு நகர்ந்தது. இவ்வணிக மாற்றத்திற்குக் காரணம் படையெடுப்பாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

பத்தாம் நூற்றாண்டில் இயங்கத்தொடங்கிய இவ்வணிகர் குழுக்களின் நிலைப்பாடு காலம் மாற மாறிக்கொண்டேயிருந்தது. கேரளத்தில் பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே Joseph Rabban என்ற யூதவணிகர் அஞ்சுவண்ணம் என்ற பட்டத்துடன் சில சலுகைகளையும் அரசரிடம் பெற்றார். இக்குழுக்கள் அரசரோடும்,வட்டாரத் தலைவரோடும் நல்லுறவு கொண்டிருந்தன. இதே நிலை தமிழகத்திலும்,ஆந்திரத்திலும் தொடர்ந் தாலும் பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு இவர்கள் தனித்தியங்கினர்.  பெரும்பாலும் தமிழகத்தில் தங்கள் கல்வெட்டுகளில் சமகால அரசர்களின் ஆட்சியாண்டினைக் குறிப்பிடவில்லை. 

இது அரசர்களுக்கு இணையாக வணிகர்கள் செல்வந்தர்களாக இருந்தனர் என்பதைக் காட்டும். இச்செல்வாக்கினைத்தான் சிலப்பதிகாரத்தின் நாயகன் காவிரிபுகும் பட்டினத்தில் காட்டினான். ஆனால்,அவனுடைய பொருளியல் அரசியல் அங்கேயே தோற்றது. விசாகப் பட்டினத்தில் அஞ்சுவண்ணத்தார் பற்றிய ஒரே யொரு தமிழ்மொழிக் கல்வெட்டு பொறிக்கப் பட்டுள்ளது;தெலுகுமொழிக் கல்வெட்டும் பொறிக்கப் பட்டுள்ளது. இது,வணிகம் நிலவட்டங்களையும்,மொழியினையும்கடந்து தொழிற்பட்டதுஎன் பதனை விளக்கும். அவ்விரு கல்வெட்டுகளும் ஒரு இஸ்லாமியப் பள்ளிக்குச் சலுகையளிக்கப்பட்ட செய்தியினைச் சுட்டுகின்றன.  இது, வணிகம், சமயம் கடந்தது என்பதனைக் காட்டும்.  அதே பள்ளிக்கு சுமத்ராவினைச் சேர்ந்த ஒரு அஞ்சுவண்ண வணிகருக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

கொடும்பாளூரினை மையமாகக்கொண்டு இயங்கிய மணிகிராமத்தார் என்ற வணிகர் குழுவினர் தமிழகத்தில் சோழர் சரிவோடு தளர்ச்சியுற்றனர். இவற்றுக்கு அரசியல் கொள்கைகளும் காரண மாகலாம் என்ற கருத்தினை நூலாசிரியர் தொடுக் கிறார்.  அரசியலும் வணிகமும் தொடர்புடையன என்று நிரூபிக்க சோழர்படைகள் கர்நாடகத்தில் ஆக்கிரமித்த இடங்களில் அய்நூற்றுவர் தம்மை அமர்த்திக்கொண்டனர் என்ற உண்மையினை முன்வைக்கிறார். பாதைகளும் வழிகளும் உருவாக்கப் படுவது படைநகர்விற்கும்,வணிகத்திற்கும் என்று கார்ல் மார்க்ஸ் சொன்ன தத்துவத்துடன் இவ் வரலாற்று உண்மை பொருந்திவருகிறது.

வணிகர்கள் அரசர்களுக்கு இணையாக இயங்கியுள்ளனர் என்பதற்குச் சான்றாக அவர்கள் தங்களை வீரகொடியார், வீரர், எரிவீரர், முனைவீரர், முனை வீரகொடியார், கொங்கவாளர், இளஞ்சிங்க வீரர், வில்லிகள் என்று அழைத்துக்கொண்டனர்.  இது ஒருபுறமிருக்க - வணிகச் சமூகமும்,நிலவுடைமைச் சமூகமும் ஒரே மாதிரியான அரசியல் போக்குகளைக் கொண்டிருந்தன என்பதற்கு இரு கல்வெட்டுகளை ஆசிரியர் ஒப்பாய்ந்துள்ளார். 

கி.பி.1050-இல் அய் நூற்றுவர் கல்வெட்டில் தங்கள் சமயதர்மம் செங் கோலினை முன்வைத்து - அதாவது, அரசாதிகாரத் தினை முன்வைத்து இயங்கும் என்பதனை வெளிப் படுத்தியுள்ளனர்.  சித்திரமேழிப்பெருமக்களார் 1062 -இல் வெளியிட்ட கல்வெட்டில் தங்கள் சித்திர மேழிதர்மம் செங்கோலினைத் தெய்வமாக வைத்து -அதாவது,அரசின் செங்கோலினை முன்வைத்து இயங்கும் என்று வெளிப்படுத்தியுள்ளார்.

சில கல்வெட்டுகளில் இவ்வணிகர்கள் விற்ற பொருள்களைப்பட்டியலிட்டுள்ளனர். அவை: மிளகு, பாக்கு, துணிகள், குதிரை, ஒட்டகம், மருத்துவப்பொருள்கள், மணப்பொருள்கள், சந்தனம், சூடம், எருமைமயிர், பசு, காளை, கன்று, எருமை, பட்டுத்துணி, காண்டாமிருகத்தின் கொம்பு, கஸ்தூரி, இரும்புப் பாளங்கள், நெல், வைக்கோல், தானியங்கள், சங்கு, உலர்கோதுமை, அவரை, கடுகு, புளி, இலவங்கம், மாலை, யானைத்தந்தம் இன்ன பிற.இப்பட்டியலில் சுட்டப்பட்டுள்ள பொருள்களின் ஒருவகை மேற்குக் கடற்கரைக்கும்,பிறிதொரு வகைப் பொருள்கள் கிழக்குக் கடற்கரைக்கும் வந்து இறங்கியிருக்க வேண்டும்.

வணிகர்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு வகையில் தங்களை அழைத்துக் கொண்டு உள்ளனர். தமிழகத்தில்தம்மை நாட்டுச் செட்டிகள்,தளச்செட்டிகள்,செட்டி வீரப்புத்திரர்கள்,மலைமண்டலத்து பலநகரங்கள்,முனைவீரகொடியார், அறுபத்துநான்குமுனை என்றும், இலங்கையில் தம்மை தவலத்துச் செட்டி, செட்டிபுத்திரன், கவரை, காத்திரிபன், ஓட்டன், உள்பசும்பைக்காரன், அங்ககாரன், ஆவணகாரன் ,பாவாடை வீரன் என்றும் அழைத்துக்கொண்டனர். கர்நாடகப் பகுதியில் இவர்கள் தம்மை எம்துநாட பதினறுவர்,அய்நூற்றுவ ஸ்வாமிகளு, செட்டிகுத்தாரு, கவுண்ட சாமி, பிரான், அம்மகாரன், பாரிகான், கவ்ரே, நகர, காத்திரிகாரு, வீரவணிகரு, வீரர், அக்காலே, கழனை, பணிசெய்மக்கள் என்றும் அழைத்துக் கொள்கின்றனர்.

வணிகத்தில் குறிப்பாக அய்ந்நூற்றுவர் தங்கள் கூட்டங்களைச் சமயம் என்றும் பெருநிரவி என்றும் அழைத்துக்கொண்டனர்.  இதில் சமயம் என்ற சொல்லிற்கு மதம் என்ற பொருளும் உண்டு. வணிகர்கள் சமயத்தினையும், அரசினையும் பயன் படுத்தி வளர்ந்ததுபோல் நிலவுடைமைச் சமூகமும் இயங்கியது.  இதற்குச் சாட்சியாகவும் அலுவல் நிறுவனமாகவும் இயங்கியதே கோயில்கள், சமணர் பள்ளிகள், இஸ்லாமியப் பள்ளிகள், பவுத்தவிகாரைகள் மற்றும் யூத Synagogue போன்றவை. இவர்கள் அனைவருக்கும் சேர்த்து உழைத்தவர்கள் குடிகள். உழவுத்தொழில்நுட்பம் தெரிந்த இவர்களின் உரிமைகள்தான் தொடக்கத்திலேயே அரசர்களால் பிடுங்கப்பட்டன. இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தது அரசு. அவற்றுக்கான சட்டவரைவு இலக்கியம். அதற்கான விளம்பரப் பலகைகள் தான் கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள், அலுவல் கோப்புகள்.

Pin It