அண்மையில் ஒன்றிய அரசின் உள்துறைச் செயலாளர், அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பிய ஒரு கடிதத்தில் (D.O. No. 22003/15/2019-14C, dated. 20.09.2021) இணையக் குற்றங்களைத் தடுக்கும் வகையில் அரசுத் துறைகள் செயல்படுவது குறித்த அறிவுரைகள் வழங்கப் பட்டிருந்தன.

அக்கடிதத்தில், இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாதமும் “சைபர் ஜாக்ரூக்தா திவாஸ்” (Cyber Jaagrookta Diwas) என்று ஒரு நாளை பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவற்றில் அனுசரிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது இணைய விழிப்புணர்வு நாள் என்பது அதன் பொருள். இக்கடிதம் ஆங்கிலத்தில் மட்டுமன்றி, இந்தியிலும் அனுப்பப்பட்டுள்ளது, ஒன்றிய அரசின் இந்தியை வளர்க்கும் கடமை உணர்ச்சியைக் காட்டுகிறது. என்றாலும் இப்போது பிரச்சினை அதுவன்று.

மேற்காணும் கடிதத்தைக் குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, அனைத்து அரசுச் செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் (Letter No. 1511066/IT(E2)/2021-5, dated. 04.10.2021), இணைய விழிப்புணர்வு குறித்து மேற்குறிப்பிட்டச் செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இந்தச் செய்திகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே தொடர்புறுத்தப்பட்டுள்ளன. தமிழில் அன்று.

 அதுமட்டுமின்றி, சைபர் ஜாக்ரூக்தா திவாஸ் என்றே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு, அன்றைய நாளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தி வார்த்தைகளின் ஆங்கில மொழி பெயர்ப்புக்கூட இல்லை. (பார்க்க – படம்).

it dept circularதமிழ்நாட்டில் இயங்கும் ஓர் அரசுத் துறை, தமிழ்நாட்டு அரசின் பிற துறைகளைத் தொடர்பு கொள்ள, ஏன் தமிழைப் பயன்படுத்தவில்லை என்பதே நமது கேள்வி. இது வெறும் மொழி சார்ந்த உணர்வினால் மட்டுமே எழுப்பப்படும் கேள்வியன்று. இவ்விடத்தில் விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்பதுதான் கவனிக்கத்தக்கது.

1956-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஆட்சிமொழிச் சட்டத்தின்படி, தமிழ்நாட்டின் ஆட்சிமொழி, தமிழ் மட்டுமே.

தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிட்டுள்ள அரசாணைகளின்படி, அரசு அலுவலகங்களில் பேணப்படும் பதிவேடுகள், கோப்புகள் அனைத்தும் தமிழிலேயே அமைதல் வேண்டும்.

மேலும் கடிதங்கள், ஆணைகள், காலமுறை அறிக்கைகள், பயணநிரல்கள், நாட்குறிப்புகள், பெயர்ப்பலகைகள், முத்திரைகள் முதலியன அனைத்தும் தமிழிலேயே அமைதல் வேண்டும் என்றும், அரசு அலுவலர்கள் / பணியாளர்கள் தமிழிலேயே ஒப்பமிடுதல் வேண்டும் என்றும் கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது வெளியிடப் பட்ட அரசாணையில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது (அரசாணை (நிலை) எண். 41, தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை (தவ1-1), நாள் 20.02.2008).

இந்நிலையில், ஒன்றிய அரசின் கடிதத்தினை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்காமலும், அதில் குறிப்பிடப் பட்டுள்ள இந்தி வார்த்தைகளை அப்படியே தொடர்புறுத்தியிருப்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அன்று. தமிழை ஆட்சிமொழியாக அறிவித்து, 60 ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஒன்றிய அரசின் ஆட்சிமொழிகளாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் இந்நாட்களில், தமிழக அரசின் தலைமைச் செயலகத்திலேயே இவ்வாறான விதிமுறை மீறல்கள் நடைபெறுவதைத் தொடக்கத்திலேயே தடுப்பது அரசின் தலையாயக் கடமையாகும்.

இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறா வண்ணம், அரசுச் செயலாளர்களுக்கு அறிவுறுத்துவதோடு, தேவை ஏற்படின் தமிழின் பயன்பாட்டினை மேலும் செழுமைப்படுத்தும் வகையில், தற்போதையச் சூழலுக்கேற்றப் புதிய விதிமுறைகளையும், ஆணைகளையும் பிறப்பிப்பதும் தேவையானச் செயல்பாடுகள்.

ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து தனது சிறப்பானச் செயல்பாடுகளால் மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் தமிழக அரசு, ஆட்சித்தமிழ் தொடர்பான நடவடிக்கைகளிலும் சீரிய முறையில் செயல்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கையாகும்.

வெற்றிச்செல்வன்

Pin It