நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மதுரை புரட்சிக் கவிஞர் மன்றமும் இணைந்து நடத்திய தோழர். பசு.கவுதமன் எழுதிய ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்’ எனும் நூலின் முன்வெளியீட்டுப் பரப்புரை விழா 19-02-2017 அன்று மதுரை மணியம்மை மழலையர் பள்ளியில் நடைபெற்றது.

புரட்சிக்கவிஞர் மன்றத் தலைவர் தோழர் டி.வரதராசன் வரவேற்புரையாற்றினார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தலைவர் ஆர். நல்லகண்ணு தலைமை தாங்கினார்.

முன்னிலை உரையாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் கவிஞர் சண்முகம் சரவணன் இந்நூல் வெளிவர நிறுவனம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

‘செம்மலர்’ மாத இதழ் ஆசிரியர் தோழர் எஸ்.ஏ. பெருமாள் நூல் பரப்புரை குறித்துப் பேசு கையில் இராமானுஜர் காலத்தில் வைணவ மதத்தைப் பரப்பும் முயற்சியில் அனந்த சயனப்புத்தர் சிலைகள் பள்ளி கொண்ட பெருமாள்களாகவும், புத்தர் சிலை களை மகாவிஷ்ணு உருவங்களாகவும் மாற்றப் பட்டன. தமிழ்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டு களாக மண்சோறு சாப்பிடுதல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் இந்து மதத்தைத் தூக்கி நிறுத்தும் பழக்கவழக்கங்களாக மாறி விட்டது.

nallakannu 600இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ் போன்ற மத வெறி அமைப்புக்கள் மறுபடியும் மூடநம்பிக்கைகளை முன்வைத்து இயங்கத் தலையெடுத்துள்ளன.

தந்தை பெரியார் ஜாதி, மத வெறிகளுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடினார். தோழர் என்ற சொல்லையே தந்தை பெரியார்தான் உச்சரித்தார். பெரியாரைப் பற்றி உலக அளவில் ஆய்வு அறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் ஒரு முயற்சியாக “நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டுமென்ற நூலின் முன்வெளியீட்டு பரப்புரை நிகழ்கிறது.”

தலைமையுரையாக மூத்த தோழர் ஆர். நல்ல கண்ணு பேசுகையில், “பொதுவாக நூலை வெளியீடு செய்துதான் பேசுவார்கள். ஆனால் வரப் போகிற நூலுக்கு முன்னதாகவே பரப்புரை செய்யப்படுவதும் அதற்கான பெருவிழாவாக இந்நிகழ்ச்சி நடப்பதும் பாராட்டிற்குரியதாகும்.

நியூ செஞ்சுரி நிறுவனம் பல அரிய நூல்களை இந்த சமுதாயத்திற்கு வழங்கி வருகிறது. பழமை யான நூல்களை மறுபதிப்புச் செய்தும் வெளியீடு செய்து வருகிறது.

இந்த நூல் பெரியாரின் மொழி, கலை, பண் பாடு, இலக்கியம், தத்துவம் குறித்த முழுமையான பதிவுகளை வருடம் என்று குறிப்பிட்டுச் சொன்னால் 1925 முதல் 1973 வரையிலுமான தகவல்களை உள்ளடக்கியதாக வருகிறது.

இன்று நாடெங்கும் மதவெறி சக்திகள் ஆட்சி, அதிகாரம் இவைகளின் துணையோடு ஜாதி வெறி, மூடநம்பிக்கைகளை மக்களிடம் பரப்பி வருகின்றன.

பெரியாரும், தோழர் சிங்காரவேலரும் இணைந்து பொதுவுடைமைக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொல்வதிலும் செய்வதிலும் ஓயாது உழைத்தார்கள்.

இன்றுள்ள சூழ்நிலைகளைப் பார்க்கும் போது பெரியாரின் கொள்கைகள் காலத்தின் தேவை. உடல் நிலை சரியில்லாத நேரத்திலும் ஊர் ஊராகப் போய் இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கொள் கைகளை மக்களிடம் பரப்பினார்.

பெரியாரின் லட்சியங்கள் காலங்களை வென்று நிற்பது மட்டுமல்ல; இன்றுள்ள சூழ்நிலையில் பெரியாரின் கொள்கைகள் அவசியம் தேவை. சொல்லப் போனால் இன்றுதான் பெரியார் அவசியம் தேவைப்படுகிறார் என்று குறிப்பிட்டார்.

விழாவில் 4000க்கும் மேற்பட்ட பக்கங்கள் அடங்கிய ஐந்து தொகுதிகளும் முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ 2000ஐ சுமார் நூறு தோழர்கள் முன்பணமாகக் கொடுத்து பதிவு செய்து கொண்டனர்.

நூல் ஆசிரியர் பசு. கவுதமன் ஏற்புரையாகக் கூறுகையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் ‘உங்கள் நூலகம்’ மாத இதழும் இந்த நூலை உருவாக்குவதில் துணை செய்ததாகக் குறிப்பிட்டார்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவன மதுரை மண்டல மேலாளர் திரு. அ.கிருஷ்ணமூர்த்தி, அனைவருக்கும் நன்றி கூறினார்.

தொகுப்பு: ந.பாண்டுரங்கன்

Pin It