மழலையர் பள்ளி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை அன்னியமொழி ஆதிக்கம் செய்யும் கால மிது. தாய்மொழி நம் பிள்ளைகளுக்குக் கிடைக்க வில்லையே என்று கவலைப்படுவோர் இன்று மிக மிகச் சிலராக அருகிவிட்டனர். பெரும்பாலோர் அறிந்தோ அறியாமலோ தாய்மொழிக் கல்வியைப் புறக்கணிக்கத் துணிந்துவிட்டனர்.

aavarani anandhanஇத்தகைய நேரத்தில் மாணவர்களும் இளைஞர்களும் ஆசிரியர்களும் தமிழ் மொழியின் ஏற்றத்திற்கு உழைத்த செந்நாப் புலவர்களில் சிலரை யேனும் சுருக்கமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்திருக்கிறார் பன்னூலாசிரியர் ஆவ ராணி ஆனந்தன் அவர்கள்.

இவர் நல்ல ஆசிரியர்; சமூக ஆர்வலர்; பல குறும்படங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டி வருபவர்.

இப்போது அவர் ‘வண்ணங்களால் ஆனது வாழ்க்கை’ எனும் கட்டுரைத் தொகுப்பு நூலைத் தமிழ்கூறு நல்லவருக்கு நல்கியுள்ளார்.

இந்நூலுள் விருந்தோம்பல், உயர் தனிச் செம்மொழி, தொல்காப்பியமும் தொல்காப்பி யரும், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர், பெரியாரின் தமிழ்ப்பணி, மறைமலையடிகளின் தனித் தமிழ், புரட்சிக் கவிஞர் முதலிய பன்னிரண்டு நல்ல கட்டுரைகள் உள்ளன.

பாரத நாட்டின் தலைமையமைச்சராக இருந்த பண்டித நேரு ஒருமுறை நியூயார்க்கு நகருக்குச் சென்றிருந்தார். அந்நகர மிகப்பெரிய செல்வந்தர் நேருவை விருந்துக்கு அழைத்திருந் தார். அழைத்தவர் தான் செய்யும் விருந்துக்கான செலவைப் பற்றி மிகையாக அளந்து கொண் டிருந்தார்.

இதைக் கேட்ட நேரு அவர்கள் சினத்துடன், ‘நான் ஏழை நாட்டின் பிரதமர். எங்கள் நாட்டில் உபசரிப்பே முதன்மை. பணமல்ல’ என்று கூறி எழுந்து போய்விட்டார்.

‘விருந்தோம்பல்’ கட்டுரையில் இச்செய்தியை மிக அழகாக எடுத்துக்காட்டி விருந்தின் பொருளை மிகத் துல்லியமாகச் சித்தரித்துள்ளார் ஆசிரியர்.

தாவரங்களுக்கு உயிர் உண்டு என்று இந்த நூற்றாண்டில் சொன்னவர் சகதீச சந்திரபோசு.

இதே செய்தியைத் தொல்காப்பியரும் சொல்லி யிருக்கிறார் என்று

‘ஒன்றறிவதுவே உற்றறிவதுவே’

எனும் நூற்பாவைக் காட்டி இலக்கியமும் அறி வியலும் கட்டுரையில் அறிவியல் செய்திகளும் உள எனச் சான்று காட்டுவது வியப்பில் ஆழ்த்து கிறது.

உயர்தனிச் செம்மொழிக் கட்டுரையில் செம் மொழிக்குத் தகுதியான பதினொரு கூறுகளும் தமிழுக்கு உள்ளன என எடுத்துக்காட்டுவது (பக் 23) மிகவும் நுட்பமான செய்தியாகும்.

‘தொல்காப்பியமும் தொல்காப்பியரும்’ கட்டுரையில் தொல்காப்பியரின் ஆசிரியர் அகத்தியர் எனவும் அவர் மாணவர் பன்னிருவர் எனவும் ஆசிரியர் கூறுவது வரலாற்று ஆதாரமிலாச் செய்திகள். ஆனால் தொல்காப்பிய நூற் செய்தி களைத் தொல்காப்பியம் பயிலார்க்கு இரத்தினச் சுருக்கமாக எடுத்துக் கூறியுள்ளார்.

‘திருக்குறள் மக்கள் முன் ஓர் அரிய இலட்சி யத்தைத் தோற்றுவித்து அதை அடையும் நெறி யையும் தெளிவாக்குகிறது. உலகியலில் பல துறை களிலும் இருந்து வாழ்பவர்களுக்கு வாழும் நெறி முறைகள் குறித்து வழிகாட்டுகிறது’ என வள்ளுவர் கட்டுரையில் குறளின் உள்ளடக்கத்தைச் சில சொற் களில் படிப்பார் காமுறச் சொல்வது குறிப்பிடத் தக்கது.

‘பெரியாரின் தமிழ்ப் பணி’ சர்ச்சைகளுக்கும் விவாதத்திற்கும் உரிய தலைப்பு. ஆனால் ஆசிரியர் விவாதங்களுக்குள் புகுவதைத் தவிர்த்துப் பெரி யாரின் எழுத்துச் சீர்திருத்தம், புராணம், மதம், கடவுள் கலவாத தமிழைப் பெரியார் கொண் டாடினார் என அவர் சொற்கள் மூலமே காட்டி யிருப்பது மெச்சத் தகுந்ததாய் இருக்கிறது.

வேற்று மொழிச் சொற்கள் தமிழில் அளவுக்கு மீறிக் கலந்து தமிழ்நடைக்கு மிகவும் கேடு செய்தன. அப்போதுதான் மறைமலையடிகளின் ‘தனித் தமிழ்’ இயக்கம் உருவானது.

‘தமிழர் அனைவரும் தமக்கும் இல்லங் களுக்கும் பிறவற்றிற்கும் தூய தமிழ்ப் பெயர் களையே சூட்டல் வேண்டும்’ எனும் மறைமலை யடிகள் கருத்தை முன்னெப்போதையும்விட இன்று கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது. விழிப்புடன் செய்ய தமிழர்கள் விரும்பவேண்டும்.

புரட்சிக் கவிஞர், உயிர் போன்றவை என்று இரண்டை மட்டுமே குறிப்பிட்டார்.

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
என்று தமிழை உயிர் என்றார்.
பொதுவுடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்
புனித மோடதை எங்கள் உயிரென்று காப்போம்

என்று பொதுவுடைமைக் கொள்கையை உயிர் என்றார். இதை ஆசிரியர் எடுத்துக்காட்டி யிருக்கும் திறமே திறம்!

ரஷ்யப் புரட்சியை மகாகவி பாரதி முதல் முதலில் பாடினார் தமிழில். நிலவுக்கு ஆளனுப்பி யதை முதலில் பாடிப் பரவசம் அடைந்தவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் அவர்கள். அதே வரிசையில் மே தினத்தை நம் மொழியில் பாடியவர் கவிஞர் தமிழ் ஒளி எனக் காட்டுவது கண்டு ஆசிரியரின் நுட்ப அறிவை வியக்கிறோம்.

சங்க காலத்திற்குப் பின்னும் 10ஆம் நூற்றாண்டிற்கு முன்னும் தமிழகத்தில் தோன்றிய பெண்பாற்புலவர்கள் இருவர் ஆவர். அவர்கள் ஆண்டாளும், காரைக்கால் அம்மையாரும் ஆவர். இவ்விருவரில் முதலில் தோன்றியவர் ஆண்டாள். அவர் தேர்ந்தெடுத்த சொற்களால் கொஞ்சும் தமிழில் சொக்க வைக்கும் வகையில் பாடுவதில் மிகவும் வல்லவர். அவர் பாடலில் ஒன்று.

கர்ப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்தன்
வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!

கண்ணன் வாயிலே வெண் சங்கு இருக்கிறது; அச்சங்கிடம் கண்ணன் வாய் எப்படி மணக்கிறது என்று கேட்க ஆண்டாளுக்கு ஆசை. கண்ணனின் வாயில் கர்ப்பூர மணமா? தாமரைப் பூ மணமா வீசுகிறது? அப்பவளவாய் தித்தித்திருக்குமா? விருப்போடு கேட்கிறேன், சொல்லமாட்டாயா சங்கே என்று கெஞ்சுகிறாள். அவள் கெஞ்சலைப் பார்க்கும் நமக்கும் கெஞ்சத் தோன்றுகிறது.

அப்படித் தோன்ற வைப்பவனே, வைப்பவளே தலைசிறந்த கவிஞன் அல்லது கவிஞை ஆகிறார். ஆண்டாளும் தலைசிறந்த கவிஞர் ஆகிறார்.

இத்தொகுப்புக் கட்டுரைகள் மூலம் கவிஞர் ஆனந்தன் தமிழின் ஆளுமைக்கு அரும்பங்காற்றிய அருந்தமிழ்ப் புலவர்களைச் சரியாக அறிமுகம் செய்துள்ளார். அவர் நூலைப் படித்து நம் மரபைப் பேணுவதும் வளர்ப்பதும் தமிழர்தம் கடமை.

வண்ணங்களால் ஆனது வாழ்க்கை...
ஆசிரியர்: ஆவராணி ஆனந்தன்
வெளியீடு: சுரதா வெளியீட்டகம்
2/98, தொடர்வண்டி நிலையச் சாலை,
சிக்கல் - 611 108, நாகப்பட்டினம் மாவட்டம்.
விலை: ரூ. 70/-

Pin It