எஸ். வையாபுரிப் பிள்ளை, (12 அக்டோபர் 1891 - 17 பிப்ரவரி 1956) இருபதாம் நூற்றாண்டின் முதன்மைத் தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை, கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளி­யிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராகச் செயற்பட்டவர். வழக்குரைஞராகவும் பணிபுரிந்தார். பிறகு மூன்று ஆண்டுகள் திருநெல்வேலியில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். வையாபுரிப் பிள்ளையின் நெல்லை வாழ்க்கையில் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக, “இரசிகமணி” டி.கே.சிதம்பரநாத முதலியார், நீலகண்ட சாஸ்திரியார், வ.உ.சி. பேராசிரியர் சாரநாதன், பெ.அப்புசாமி போன்றோர் இருந்திருக்கிறார்கள்.vaiyapuripillaiதமிழாய்வு

தொடக்க காலத்தில் சட்டக்கல்லூரியில் படித்த பிறகு வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த காலத்தில், வையாபுரிப் பிள்ளை எழுதி வெளிவந்த பல கட்டுரைகளும் இலக்கிய ஆய்வுகளும் அவரை அறிஞர்கள் மத்தியில் பேசப்பட வைத்தன. உ.வே.சாமிநாதய்யருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை வையாபுரிப் பிள்ளையைத் தான் சாரும். ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்குப் பெரும் பங்கு உண்டு.

வையாபுரிப்பிள்ளை 1926 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியின் (ஏழு தொகுதிகள்) பதிப்பாசிரியர் பொறுப்பேற்றார். 1936 ஆம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக விளங்கினார். 1946 வரை அப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு, பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கினார்.

வையாபுரிப் பிள்ளை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலத்தைப் பொற்காலம் என்று கூறுவார்கள். சுமார் நான்கு ஆண்டுகள் அப்பதவியில் வையாபுரிப் பிள்ளை இருந்த காலகட்டத்தில்தான் மலையாள மொழி லெக்சிகன் (சொற்களஞ்சியம்) பதிப்பிக்கப்பட்டது. அதன் உறுப்பினராகவும் பணியாற்றிய பெருமை வையாபுரிப் பிள்ளைக்கு உண்டு. இந்தக் காலகட்டத்தில் தான், பின்னாளில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக விளங்கிய வ.ஐ.சுப்பிரமணியம் ஆய்வு மாணவராக வையாபுரிப் பிள்ளையிடம் பணியாற்றி அவரது வாரிசு என்ற பெயரையும் பெற்றார்.

இரா.பி.சேதுப்பிள்ளையைப் போலவே கம்பனின் கவிநயத்தில் தன்னைப் பறிகொடுத்த வையாபுரிப் பிள்ளை, “இரசிகமணி” டி.கே.சியுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதி மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகிய இருவரிடமும் வையாபுரிப் பிள்ளைக்கு நெருங்கிய அறிமுகம் இருந்தது. தனது சிறைவாசத்துக்குப் பிறகு, அரசியல் வாழ்வில் வெறுப்புற்றிருந்த வ.உ.சி., ஏட்டிலிருந்த இளம்பூரணரின் தொல்காப்பிய உரையைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு படியெடுத்தார். அதனை எஸ்.வையாபுரிப் பிள்ளையிடம் காட்டி செப்பம் செய்தார். வையாபுரிப் பிள்ளையையும் அதன் பதிப்பாசிரியராகத் தன்னுடன் இருக்குமாறு கேட்டதையும், ஆனால் இவரோ நீங்களே பதிப்பாசிரியராக இருந்தால் போதும் என்று மறுத்து விட்டதாகவும் அந்த உரைப் பதிப்பின் முன்னுரையில் வ.உ.சி நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளை தமிழியல் ஆய்வைத் தமது வாழ்நாள் பணியாக மேற்கொண்டவர். தாம் மேற்கொண்ட ஆய்வில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் உழைத்தவர். போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் இடையே அவரது ஆய்வுப்பணி நிகழ்ந்தது.

பேராசிரியர் ஆய்வில் ஈடுபட்ட காலத்தில் தேசிய இயக்கம் வளரத் தொடங்கியது. இவரையும் தேசிய உணர்வு ஆட்கொண்டது. பாரதியார், வ.உ.சிதம்பரனார், வ.வே.சு.ஐயர், சுப்பிரமணிய சிவா, மகாத்மா காந்தி ஆகியோரின் கருத்துத்தாக்கம் இவரிடம் காணப்பட்டது. ஆரிய - திராவிட வாதம் வடமொழி - இந்தி எதிர்ப்பு சாதி, சமயப் பிணக்குகள் நிலவிய சூழலில் இவர் வாழ்ந்தார். அந்தச் சூழலின் பாதிப்பும் இவரது எழுத்துக்களில் நிழலிட்டது. இவர் மறைமலை அடிகளின் மாணவர். எனினும், அவர் பிற்காலத்தில் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம் தமிழ் வளர்ச்சிக்கு உகந்ததன்று எனத் துணிந்து உரைத்தார். பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் புலமையைப் பாராட்டியவர்; அவரது மனோன்மணீயத்தைப் பதிப்பித்தவர். இருப்பினும், அவரது ‘திராவிட வாதம்’ அறிவியல் வழியான மொழி நூல் உணர்ச்சிக்குப் புறம்பானது எனக் கூறினார்.

இந்தியாவின் பொது மொழியாக இந்தி வருவது தமிழ் வளர்ச்சிக்குத் தீமை பயக்குமெனில், அதை எதிர்ப்பதில் தவறில்லை என்றும், இது விஷயத்தில் பொறுமையாக இருக்கவேண்டும் என்றும் எழுதினார். வடமொழி அறிவு, வடமொழியில் திரண்டுள்ள அறிவுச் செல்வத்தைப் பெறும் வேட்கை, வடமொழி தொடர்பான ஆய்வு நூல்களைப் படித்துப் பெற்ற புலமை, இந்தியச் சூழலில் வடமொழி பெற்றிருந்த செல்வாக்கு, இந்திய மொழி - இலக்கியாப் பண்பாடுகளில் அதன் தாக்கம் முதலியவை இவரை வடமொழிபால் ஈர்த்ததில் வியப்பில்லை. இந்தக் கண்ணோட்டத்தில் தமிழுக்கும் - வடமொழிக்கும் உள்ள உறவை ஆராய்ந்தார்; தமிழின் இந்தியத்துவத்தை அறிய முனைந்தார். திராவிட தேசியத்துக்கு எதிராக இந்தியத் தேசியத்தையும், தமிழ் வாதத்துக்கு எதிராக வடமொழி வாதத்தையும் இவர் சார்ந்திருந்தார். (வையாபுரிப்புள்ளை. இராம.சுந்தரம். 1989)

அவரது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2,943 புத்தகங்கள் இருந்தன.

அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளும், ஓலைச்சுவடிகளும் நூற்றுக்கணக்கில். அவை அனைத்தையும் கொல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டார் வையாபுரிப் பிள்ளை.

நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர் அவர். மனோன்மணியம் உரையுடன் தொடங்கி 1955 இல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்தது வரை தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றினார்.

சொற்களின் வரலாற்றினையும் அகராதியியல் பற்றின வரலாற்றுத்தகவல்களையும் விரிவாக எழுதிய இவர் தமிழ்க் கலைச் சொல்லாக்கம் பற்றிய கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்.

கலைச்சொல்லாக்கக் கோட்பாடு

கலைச்சொல்லாக்கத்தில் ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் தமிழையும் வளப்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வையாபுரிப்பிள்ளை

‘தன்னாற்றல்' பிறமொழிச் சொற்களை எடுத்தாளுதல் என்ற இரண்டு வகையினால் தமிழ்மொழியில் சொற்கள் பெருகின. மேனாட்டு விஞ்ஞான சாஸ்திர பதங்கள் பலவற்றிற்குத் தக்க தமிழ்ச்சொற்கள் காணுதல் அருமை. வேண்டும் இடங்களில் ஆங்கிலச் சொற்களை எடுத்துக் கொள்ளுதல் பொருத்தமேயாகும். இவ்வாறு செய்வது நமக்கு நன்மை தரும் என்றே நான் கருதுகிறேன். ஆனால் வேறு சிலர் இவ்வாறு கருதாது ஆங்கிலமே தலைமை பூண வேண்டுமென்று விவாதிக்கிறார்கள். தமிழின் தலைமைக்கு இவர்கள் இடையூறாக நிற்பவர்கள். (எஸ்.வையாபுரிப்பிள்ளை 1989:61)

என தமிழின் தலைமையை முன்னெடுக்கிறார். ஆங்கிலத்தலைமைக்கு இடமளிப்போரை இடையூறு செய்வோர் எனச் சுட்டிக் காட்டவும் தவறவில்லை.

மேலும் அறிவியல் கலைச்சொல்லாக்கத்துக்கு ஆங்கிலச் சொற்களையும் சமஸ்கிருதச் சொற்களையும் ஏற்றுக் கொள்வது தவறாகாது என்பதைத் தமிழ் மறுமலர்ச்சியின் மூலவராகக் கருதப்படும் சுந்தரம் பிள்ளையின் நூற்றொகை விளக்கத்தை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்.

அவ்விளக்கம் வருமாறு:

“நூற்றொகை விளக்கத்திலுள்ள முக்கியமான ஒரு பகுதியைக் குறித்து, இங்கே குறிப்பிட வேண்டியது கட்டாயமாகின்றது. கலைச்சொல்லாக்கம் என்ற தொடர் இப்பொழுது எங்கும் முழங்குகிறது. மாநாடுகள் கூட்டப்படுகின்றன. சாதிச் சச்சரவுகளை விளைவித்துத் தம் ஆத்திரங்களை தீர்க்க இதுவே தக்கநேரம் என்று பலரும் இதில் சேர்ந்துள்ளார்கள்; பலவகை முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சுந்தரம் பிள்ளை கைக்கொண்ட முறை நமக்கு ஊக்கம் அளிக்கிறது. நூற்றொகை விளக்கத்திலே ஆங்கிலத்திலுள்ள பல விஞ்ஞான சொல்லுக்குரிய மொழிபெயர்ப்புச் சொற்களை இப்பேராசிரியர் தந்திருக்கின்றார். அறிவுப் பெருக்கம் ஒன்றே குறிக்கொள்ளப் பட்டது. இதற்கு இடையூறு விளைப்பனவெல்லாம் தற்கொலையாகும் என்பது நன்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சிக்கும் தமிழரது அறிவு வளர்ச்சிக்கும் வேண்டுவன செய்தவர்களில் சுந்தரம் பிள்ளை தலை சிறந்தவர். இவர் காட்டிய முறை கைக்கொள்ளத் தக்கதென்பது கூறவும் வேண்டுமோ?” (எஸ்.வையாபுரிப் பிள்ளை 1952:244)

கலைச்சொல்லாக்கம் சாதிச்சச்சரவுகளைத் தோற்றுவிக்கிறது என வையாபுரிப்பிள்ளை கூறுவது உவேசா கூட்டிய தமிழன்பர் மாநாட்டையும், அதற்கு மாற்றாக இ.மு.சு. கூட்டிய சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டையும்தான். தமிழன்பர் மாநாடு வடமொழிக் கலைச் சொல்லாக்கத்துக்கு ஆதரவான நிலையையும், சென்னை மாகாணத் தமிழர் மாநாடு அந்நிலைக்கு மாறாக தமிழ்ச்சார்பு நிலை எடுத்ததால், வடமொழி எதிர்ப்பு நிலையையும் மேற்கொண்டிருந்தது. இங்கு மனங்கொள்ளத்தக்கது.

வடமொழி ஆதரவு/எதிர்ப்பு, ஆங்கில எதிர்ப்புக் கோட்பாட்டாளர்களுக்குப் பதிலாக சுந்தரம்பிள்ளையின் ஆங்கில நெறிமுறைகளையே எடுத்துக்காட்டும் வையாபுரிப்பிள்னை மொழிக்கலப்பு என்பது இயல்பானது என்கிறார். அறிவியல் கலைச்சொல்லாக்கத்தில் கலப்பு என்பது மொழிவளர்ச்சிக்கான முறையே எனக் கருதிய அவர் பிறமொழிக் கலைச்சொற்களையும் கலைச்சொற்களாகப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்.

“மேல் நாட்டு விஞ்ஞான சாஸ்திரங்கள் பற்றிய அளவில் நமது கல்வித்துறையில் இருப்பவர்கள் அறிவு வளர்ச்சி ஒன்றினையே முக்கிய நோக்கமாகக் கொண்டு ஆங்கிலம் முதலிய அந்நிய மொழிக் கலைச்சொற்களை எடுத்தால் மிகமிக விரிந்த மனப்பான்மையைக் கொண்டவர்களாய் இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் பிறநாட்டு மக்களோடு ஒப்ப விஞ்ஞான சாஸ்திரம் முதலியவற்றில் நாம் மேம்பாடு அடைய முடியும்.” (எஸ்.வையாபுரிப் பிள்ளை 1989:71)

வையாபுரிப்பிள்ளை தமிழைக் கடலாகவும் வழக்கில் புகும் சொற்களைப் பல ஆறுகளிலிருந்து வரும் நீராகவும் உவமிக்கிறார். இவர் மேலும் எழுத்து, சொல், புதிய வாக்கிய அமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய இலக்கணம் தமிழ் மொழிக்கு எழுத வேண்டும் என்றும் கூறுகிறார். (1947:154:155)avvai duraisami pillai

(ஔவை துரைசாமிப் பிள்ளை)

இதே கருத்தை உரைவேந்தர் ஔவை துரைசாமிப் பிள்ளையும் கூறியிருப்பது நினைத்துப் பார்க்கக் கூடியதாக உள்ளது.

“மேனாடுகள், அவர்கள் கூற்றின் படி லத்தீன் மொழியையே மேற்கொண்ட போது நாம் ஏன் அம்மொழிச் சொற்களை மேற்கொண்டு கலைச் சொல் வகையில் உலக மக்களோடு அறிவு ஒற்றுமை எய்தக் கூடாது? வடமொழிச் சொல் மேனாட்டு மக்கள் அறியாததாகலின் எல்லா நாட்டு மக்களுக்கும் தெரியக் கூடிய அச்சொற்களையே நம் மொழியின் எழுத்தோசைக்கு ஏற்ப அமைந்து வழங்குவதால் வரும் கேடு என்ன? தமிழில் உள்ளன போக இல்லாத கலைச் சொற்களைப் பிறநாடுகளில் வாங்கிய வண்ணமே கொண்டு தமிழோசைக்கேற்ப அமைத்துக் கொள்ளுவது தானே அறிவுடைய செயலாகும்.” (ஔவை துரைசாமிப் பிள்ளை: 1938-39, தமிழ்ப் பொழில்: 14, பக் 401-402)

இது முந்தைய காலத்திலிருந்த மொழிக் கொள்கையிலிருந்து வேறுபட்டது. தனித்தமிழ் இயக்கம் தோற்றம் கொண்ட காலகட்டம் இது.

மொழிக்கலப்பு என்பது ஒரு மொழி பேசும் குழுவினர், இன்னொரு மொழி பேசும் குழுவினருடன் தொடர்பு கொள்ளும்போது இயல்பாக நிகழும் பரிமாற்றமாகும். இந்த மொழியியல் அடிப்படை­யில்தான் வையாபுரிப்பிள்ளையின் கருத்துக்கள் அமைந்துள்ளன.

வையாபுரிப்பிள்ளையின் கலைச்சொல்லாக்கக் கோட்பாட்டை, தமிழில் கலைச்சொற்களை உருவாக்குதல், தமிழில் இல்லாதபோது ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ளுதல் எனத் தொகுப்பது பொருந்தும்.

- டாக்டர். சு. நரேந்திரன், எழுத்தாளர், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.

Pin It