sharmila seyyith 400ஷர்மிளா சையதின் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த முகநூல், யூ டியூப், இணையதள வன்முறையை எப்படி எதிர்கொள்வது என்பதே நம் முன் உள்ள கேள்வி. ஷர்மிளா சையத் தமிழின் முக்கிய படைப்பாளி. உம்மத் நாவலின் ஆசிரியர். சிறகு முளைத்த பெண், ஒவ்வா போன்ற கவிதை நூல்களைப் படைத்த கவிஞர், முஸ்லிம் கலாச்சாரத்தளத்தின் சமூக செயல்பாட்டாளர். இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்களில் மீள் குடியேற்றம், சமூக பொருளாதார மறுகட்டமைப்பு குறித்த சீர்மை நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.

போலி ஊடக பிரச்சாரம்

ஷர்மிளா சையதின் புகைப்படத்தோடு பதிவேற்றப் படும் எறாவூர் டாட் காம், 2014 செப்டம்பருக்குப் பிறகு செயல்படுகிறது. இது ஷர்மிளாவின் அதிகாரபூர்வமான தளமாக இல்லை. இதில் இஸ்லாமிய தாவா தொடர் பான சில பதிவுகளும் இடப்பட்டுள்ளன. மரணத்திற்குப் பிறகு மனிதனின் நிலை, அல்லாஹ்விடம் நெருங்கு வதற்கு என்ன அமல் செய்யவேண்டும் என்பது போன்ற இஸ்லாமிய பரப்புரை வீடியோ ஆல்பங்கள் பதிவேற்றப் பட்டுள்ளன. அல்மனார் குரான் ஸ்டடி சென்டர் துபாயின் பதிவுகளாக இவை இடம் பெற்றுள்ளன. இந்த முயற்சி என்பது ஷர்மிளா சையதை மதசார்பற்ற நிலையி லிருந்து இஸ்லாத்திற்கு அழைப்புப் பணிவிடுக்கும் ஒரு தாவா பெண்ணாக உருமாற்றம் செய்யும் முயற்சியாக நிகழ்ந்துள்ளது.

ஷர்மிளா சையதின் புகைப்படங்களை பதிவேற்றி அதன் கீழ் மிகவும் மோசமான குறிப்புரைகளை எழுதத் தூண்டும் இந்த குழுவினர் வகாபிகளில் ஒரு பிரிவினர் எனவும் தெரிய வருகிறது. தர்கா பண்பாடு தொடர்பான கல்முனை கொடியேற்ற நிகழ்வுகளை விமர்சிக்கும் இதன் ஒரு பதிவு சூபிய சிந்தனை மரபுகளையும், அந்த அறிஞர் களையும் சூபி ஜமாஅத் உலமாக்கள் எனப்படும் கப்ரு வணங்கி கூட்ட பூசாரிகள் எனவும் மோசமாக விமர்சிக்கிறது. எனவே வகாபிய அடிப்படைவாதத்தின் தடயங்களை இந்த போலி இணையப் பக்கத்தில் நாம் கண்டடைய முடிகிறது.

பாலியல்தொழில் விவாதம்

இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வ மாக்குவதா கூடாதா, அதன் உள்ளார்த்தம் என்ன உப விளைவுகள் என்னென்ன என்பது குறித்த பிரச்சினையில் பிபிசிக்கு செவ்வி ஒன்று அளித்த காரணத்தால் அடிப் படைவாதிகள் ஷர்மிளா சையத் மீது பத்வாரீதியான (மார்க்கத் தீர்ப்பு) தாக்குதலை தொடுத்தனர் . எறாவூரில் இவர்தம் சகோதரி நடத்தி வந்த ஆங்கில பாலர் பாட சாலையும் தீவைத்து கொளுத்த முயன்ற சம்பவம் இதன் தொடர்ச்சி. இமெயில், இணைய வெளி வாயிலாக மிரட்டப்பட்ட சம்பவங்களும் விதிவிலக்கல்ல.

பாலியல் தொழிலை சட்டமாக்குதலை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. பாலியல் குற்றத்திற்கு நூறு கசையடிகளை தண்டனையாக குரான் சொல்கிறது. ஷரீஅவின் அடிப்படையில் சில முஸ்லிம்நாடுகளில் குரானில் சொல்லப்படாத, ஆனால் ஹதீஸ்களில் சொல்லப்படுகிற சாகும்வரை கல்லால் அடித்து கொன்றுவிடச் சொல்லும் தண்டனை முறை பின்பற்றப் படுகிறது. இப் பின்னணியில் மறைவாகவும், பல நேரங் களில் பலவந்தமாகவும் பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் அந்த பாதிக்கப் பட்டவர்களின் நோக்கில் சட்ட அந்தஸ்து உதவுமா என்பது குறித்த ஒரு விவாதமாகவே ஷர்மிளா சையதால் முன்வைக்கப்பட்டது... பாலியல் தொழிலில் ஈடுபடுகிற பெண்களின் துயரம் சார்ந்தே இப் பிரச்சினையை மீள வாசிக்கமுடியும்... வளைகுடா நாடுகளுக்கு பணிப் பெண்களாக செல்லும் பெண்கள் பாலியல் அடிமை களாக மாற்றப்படுகிற அவலம், நிர்பந்தம் குறித்தும் இத்துடன் கவனிக்கப்பட வேண்டி உள்ளது. ஒரு சாதாரண முஸ்லிமின்மீது இஸ்லாமிய மதக்குருக்கள் தங்கள் விருப்பப்படி முர்தத் என மார்க்கத்தீர்ப்பு (பத்வா) வழங்குவது எவ்வளவு அபாயகரமானது என்பது குறித்து முஸ்லிம்களே கூட சரியாக விளங்கவில்லை என்பதுதான் வருத்தத்துக்கு உரியது.

எனக்கு அவர்களைத் தெரியாது, அவர்களுக்கும் என்னைத் தெரியாதென பேசும் ஷர்மிளாவின் கவிதைக் குரலில் இரு தரப்புகளின் சமனற்ற முரண் முன்னுக்கு வருகிறது. முஸ்லிம் பெண்ணுடல் சார்ந்த ஆடை விதிகள் விருப்பு, வெறுப்புகளின் மீது கொடுந் தாக்கு தல்களை நிகழ்த்துகிறது. முக்காடிட்டவள், தலை

குனிந்து நடப்பவள், குரல் தாழ்த்திப் பேசுபவர்கள், எதிர்குரல் எழுப்பாதவள் என்பதான அறங்களின் மீதான நம்பிக்கைகளை தகர்ப்பவளாக பெண் உருமாறுகிறாள்.

இந்த சுதந்திர வெளியின் மீது தாக்குதலைத் தொடுக்கும் ஒடுக்குமுறைக்கு எதிராக முஸ்லிம் அடையாளத்தையே முன்வைப்பதும் ஒரு மாற்றுத் தரப்பின் குரலாகக் கேட்கிறது. எனவேதான் அவள் நெற்றியில் ஸ§ஜுதுத் தழும்புள்ள பெண்ணாகவும் இருக்கிறாள். ஷர்மிளா சையதின் கவிதை பேசுகிறது.

இப்போது அவர்கள் சொல்கிறார்கள் என்னை

முர்தத் ஆனவள் இப்லீசின் சிநேகிதி என்று.

அகன்ற பரந்த என்நெற்றியில் இருப்பது

தினமும் முப்பத்திநான்கோ அல்லது அதிகமாகவோ

நான் சுஜுது செய்ததன் அடையாளம்.

கருத்தியல் வன்முறை

தற்போது இணையத்தில் உலவ விடப்பட்ட மூன்று யூ டியூப் பதிவுகளும் ஷர்மிளா சையதின் எழுத்து பொதுவெளியை இல்லாமல் செய்வதற்காக தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே கருத முடியும். இதன் பின்னணியில் நவீன தொழில்நுட்பம் தெரிந்த ஒரு பாசிச கும்பலே செயல்படுவதாகத் தெரிகிறது.

ஒரு யூ டியூபில் அண்மையில் காவல்துறை உதவி ஆணையர் ஒருவர் தனது கீழ் பணியாற்றும் பெண்காவல் ஆய்வாளரோடு பாலியல்ரீதியாகப் பேசிய ஆடியோவை பின்னணியில் ஒலிக்கவைத்து வீடியோ காட்சியில் ஷர்மிளாவின் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டன.

இரண்டாவது யூ டியூபில் ஒரு பெண்குரல் தனித்து குறிப்பிட்டு ஷர்மிளா சையதையும் அவரது அம்மா வையும் நோக்கி மிகவும் மோசமான வசவுக்குரலை பேசுகிறது.

மூன்றாவது யூ டியூபில் சவுதியிலிருந்து பேசும் அந்த இலங்கை முஸ்லிம் அடிப்படைவாதிகளின் குரல் பாலியல் பலாத்காரம் நிறைந்த சகிக்கமுடியாத வார்த்தை களைப் பயன்படுத்துகிறது. சிறீலங்கா முஸ்லிம் பெண் ணெனச் சொல்லக்கூடாது, வலைத்தளத்தில் புகைப் படங்கள் பதிவேற்றக் கூடாது என்பதான பொதுவான எச்சரிக்கைகளை இடையிடையே கூறிவிட்டு பெண் பாலுறுப்பு சார்ந்த வசவு வார்த்தைகளையும், அதிகாரப் புணர்ச்சி சார்ந்த வல்லுறவு வசனங்களையும் மிக மோசமான முறையில் பயன்படுத்தி இருக்கிறது. இதனை ஒரு சாதாரண மனநிலையில் பேசியிருக்க முடியாது. வன்மம் நிறைந்த மனமும் சொற்களும்... கருத்தியல் தீவிரவாதத்தின் குரூரமான அடையாளம் இது. துப்பாக்கியாலும் ஏவுகணைகளாலும் சுட்டுக் கொல்லு வதைப் போல இந்த வார்த்தைகளை அந்த அடிப்படை வாதிகள் தன் உம்மாவிடமும், அக்கா தங்கைகளிடமும், மனைவியிடமும் பேசுவார்களா...

இதனை வெறும் வயிற்றெரிச்சலின் வெளிப் பாடென கடந்துவிட முடியுமா... இந்த வீடியோ பதிவின் எச்சரிக்கை மிரட்டலையும்,போர்னோகிராபி வசவு வார்த்தைகளும். என்னவிதமான மன நோயின் வெளிப்பாடு.

பாலியல் அவதூறு பதிவுகளைத் தொடர்ந்து தற்போது ஷர்மிளா கொலை செய்யப்பட்டுள்ளதாக ஒரு கொலைப் புனைவை வதந்தியாக இணையத்தில் பரவ விட்டுள்ளனர். அவதூறுப் பின்னணியைத் தெரி யாதவர்கள் உண்மையென நம்பும் விதத்தில் அடிப் படைவாதிகள் இந்த கருத்தியல் பிரச்சாரத்தை செய்துள்ளனர். கற்பிதங்களை உருவாக்கி வெகுஜன மனநிலையைக் கலைத்துவிட்டு உண்மையாக பின்னர் அதனை அரங்கேற்றத் துடிக்கும் ஊடக பாசிசம் இதன் பின் உள்ளது. நகலுக்கும் உண்மைக்குமான எல்லையை அழிக்கும் முயற்சி இது. இவற்றையும் ஷர்மிளா எளிதில் கடப்பார் என்றே நாம் நம்புவோம்.

அடிப்படைவாதத்திற்கு எதிராக

இந் நிகழ்வுகளில் இருந்து இலங்கை ஏறாவூர் பகுதி யிலிருந்து சவுதி அரேபியா உள்ளிட்ட அரபுநாடுகளில் வசிக்கும் அடிப்படைவாதிகள் இந்த கருத்தியல்ரீதியான தாக்குதலுக்குக் காரணமாக இருக்கக்கூடும். அவர்களோ அல்லது வேறு யாராக இருந்தாலும் இது குறித்த சைபர் கிரைம் வழியிலான சட்ட நடவடிக்கை அந்தக் குழு வினருக்கு ஒரு எச்சரிக்கையாக மாற வேண்டும்.

ஷர்மிளா சையத் தனிநபர் அல்ல! அவர் பின்னால் மனிதநேயமும், மனித உரிமைகளின்பால் ஆழ்ந்த ஈர்ப்பும் கொண்ட எழுத்தாளர்கள் அணிதிரண்டு இருக் கிறார்கள் என்கிற செய்தியும் பரவலாக்கம் பெற வேண்டும். இந்த கருத்தியல் வன்முறைவாத பிரச் சினைக்கு ஒரு முடிவுகட்ட ஒரே வழி எழுதுவது... இன்னும் தீவிரமாக எழுதுவது...

பெண்ணின் உலகு கட்டுப்பாட்டுத் தளைகளால் பிணைக்கப்பட்டிருக்கிறது. பெண்ணின் தன்னிலைச் சிதைவின் சேதாரம் துயருறும் கணங்களால் நிரப்பப் படுகிறது. ஷர்மிளா சையது தன் கவிதையில் படைக்கும் பெண்ணெனும் தன்னிலை மிக இறுகிய பிணைப்பில் மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திர வெளியின் மீது ஆர்வத்தைக் கிளறுகிறது. பெண்ணெனும் சுயத்திலிருந்து முஸ்லிம் பெண்ணெனும் அடையாளத்தை சுமக்கையில் சமூக சமயவெளி ஏற்படுத்தும் நெருக்கடிகளிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறது. இயன்ற பலம் கொண்டு எதிர்த்துப் போராடிப் பார்க்கிற மனத்தின் வெடிப்புகள் கவிதைகளின் வரிகளினூடே பயணப்படுகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இந்த கருத்தியல் வன்முறைக்கான எதிர்வினையாக ஷர்மிளா சையதின் கவிதைவரிகளே ஒரு பொருத்தமான பதிலைச் சொல் கிறது.

திடமான அறிவுத்திடனுடன் ஆன்ம சமாதானத்துடனும்

கற்களைப் பொறுக்கி வீசுகிறேன்.

பீதியுள்ள பெண்களின் எச்சரிக்கையுணர்வை

மருட்டி வசப்படுத்தும்

சைத்தானை நோக்கி கல்லெறிவதை

இன்னும்தான் நிறுத்தவில்லை நான்.

Pin It