chettinadu 400தமிழக வரலாற்றில், செட்டிநாடு என்று, ஒரு வளநாடோ, கூற்றமோ, மண்டலமோ, கோட்டமோ, நாடோ, கிராமமோ இருந்ததில்லை. இப்போதும் இல்லை.

அப்படியானால், செட்டி நாடு என்றும் செட்டி நாட்டு அரசர் என்றும், பெயர்கள் மட்டும் எப்படி ஏற்பட்டன?

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிர மாண்டமான ஒரு கல்வி நிறுவனத்தை பெரும் பொருட்செலவில் உண்டாக்கினார் கானாடு காத்தான் அண்ணாமலை செட்டியார். அவருடைய கல்வித் தொண்டைப் பாராட்டி ‘ராசா சர்’பட்டத்தை 1929ஆம் ஆண்டு கொடுத்தது வெள்ளையர் அரசு.

அன்றிலிருந்து தன்னை ராசா என்று பிரகடனப் படுத்திக் கொண்டார் அண்ணாமலை செட்டி யார். ராசா என்றால் அரண்மனை வேண்டு மல்லவா?

சென்னைக் கடலலைத் தாலாட்டில் ஒரு மாளிகையைக் கட்டி, அதற்கு அரண்மனை என்று பெயர் சூட்டிக் கொண்டார்.

அரசரும் அரண்மனையும் இருந்தால் மட்டும் போதுமா? நாடு வேண்டுமல்லவா? தங்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, கானாடு காத்தான் கிராமத்தில் ஒரு ரயில் நிலையத்தை ஏற்படுத்த அந்த ரயில் நிலையத்திற்கு ‘செட்டி நாடு’என்று பெயர் சூட்ட வைத்தார்கள்.

இந்த ரயில் நிலையைப் பெயர்தான் இன்றைக்கு, நாட்டுக்கோட்டை செட்டியார் சாதிமக்கள் வாழ் கின்ற எழுபத்தைந்து ஊர்களையும் தாண்டி காரைக் குடி, திருமயம், திருப்பத்தூர் தொகுதிகளின் பெரும்பகுதியை ‘செட்டிநாடாக’முத்திரை குத்த வைத்திருக்கிறது.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் காலத்திற்கு முன்பு, சோழ நாட்டிலும், தொண்டை நாட்டிலும் வாழ்ந்தவர்கள் இவர்கள்.

இந்தச் சாதி இளம்பெண் ஒருவரிடம் பண்பு தவறி நடந்திருக்கிறான் ஒரு சோழ மன்னன். அதைக் கண்டித்து செட்டியார் சாதித் தலைவர்கள் அனை வரும் தீக்குளித்து உயிர் விட்டிருக்கிறார்கள். இதன் பிறகே செட்டியார்கள், சோழ நாட்டி லிருந்து பாண்டிய மன்னனின் வரவேற்புடன் இன்றைய வாழ்விடங்களுக்கு வந்திருக்கிறார்கள்.

செட்டியார்களின் வருகைக்கு முன்பு, இந்தப் பகுதியில் ஏழுகிளைக் கள்ளர்கள், வல்லம்பர்கள், முத்தரையர்கள், உழைக்கும் மக்கள் பெரும்பான் மையாக வாழ்ந்திருக்கிறார்கள்.

இந்த ஏழுகிளைக் கள்ளர் குடும்பங்களில் ஒரேயொருமுறை மட்டும் பெண்ணெடுத்து மணம் செய்துகொண்டிருக்கிறார்கள் செட்டியார்கள். இதன் விளைவுதான், இன்றைக்கும் நாட்டுக் கோட்டை செட்டியார் வீடுகளில் திருமணம் நடந்தால், மாமச்சீர் கொண்டு செல்வதை மரபாகக் கொண்டிருக்கிறார்கள் ஏழுகிளைக் கள்ளர்கள்.

சோழ நாட்டில் இருந்து செட்டியார்கள் புலம் பெயர்ந்த போது, இவர்களோடு கவிச்சக்கர வர்த்தியும் புலம்பெயர்ந்திருக்கிறார்.

நாட்டரசன் கோட்டையிலும், தேவ கோட்டைக்கு தென்மேற்கே சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கல்லங்குடி எனும் ஊரிலும் தனது நிறைவுக்காலம் வரை கவிச்சக்கர வர்த்தி வாழ்ந்திருக்கிறார்.

நாட்டரசன் கோட்டையில், செட்டியார் களால் பாதுகாக்கப்படும் கவிச்சக்கரவர்த்தியின் சமாதியை, அப்பகுதியின் அனைத்து மக்களும் கல்விக் கோயிலாக வழிபடுகிறார்கள்.

கவிச்சக்கரவர்த்தியின் உறவினர்கள் வாழ்ந்த கல்லங்குடி கிராமத்தில் இருந்த சிவன்கோயில், அவருடைய வழிபாட்டுக் கோயிலாக இருந்திருக் கிறது. இன்றைக்குப் பாழடைந்து கிடக்கும் அந்தச் சிவன் கோயிலில் கவிச்சக்கரவர்த்தியின் முழு உருவச்சிலை இருக்கிறது.

கம்பருக்கு உதவிசெய்த, அவரை இராமாவ தாரம் நூலை எழுதத் தூண்டிய சடையப்ப வள்ளல் கூட ஒரு செட்டியாராகத்தான் இருக்க வேண்டும். அந்தச் சடையப்பச் செட்டியார் தான் கம்பரை நாட்டரசன் கோட்டைக்கும், கல்லங் குடிக்கும் அழைத்துவந்து பாதுகாத்திருக்க வேண்டும்.

இந்தப் பகுதி நாட்டார்களின் பாதுகாப்பில் கோட்டை வீடுகளைக் கட்டி வாழ்ந்து கொண் டிருக்கும் செட்டியார் குடும்பங்களுக்கு, இந்தப் பகுதியில் ஐநூறுக்கும் அதிகமான ஊர்களில் வாழ்கின்ற ஏழுகிளைக் கள்ளர்களும் உடல் வலு மிகு முத்தரையர்களும், காரைக்குடியை ஒட்டிய பல கிராமங்களில் வாழும் வல்லம்பர்களும் துணையாக இருந்துள்ளனர், இன்றளவும் இருந்து கொண்டுமிருக்கிறார்கள்.

உழைக்கும் மக்கள் உட்பட இங்கே வாழ்கின்ற அத்தனை பேராலும் ஆளப்படுகின்ற மொழி வழக்கைத்தான் பொதுவாக செட்டிநாட்டு வட்டார வழக்கு என்கிறார்கள். ஆகவே இது ஒரு சாதிய மொழி வழக்காகக் கொள்ள இயலாது.

இது வட்டாரத்தில் மிகச் சிறந்த சொல்லாக ‘ஆத்தா’என்ற சொல்லைக் கூற வேண்டும். இது பெற்றவளை விளிக்கும் சொல் ஏழுகிளைச் சீமையின் அத்தனை ஆண்களும் தங்கள் தாயை, தமக்கையை, தங்கையை, மகளை, அக்கா மகள்களை, தங்கை மகள்களை, பேத்தி களை, மருமகள்களை வாய் நிறைய மனம் நிறைய அழைக்கும் சொல், அருள் நிறைந்த சொல், அன்பின் ஈரம் கசியும் சொல் இது. மனைவியைத் தவிர அத்தனை பெண்களையும் அழைக்கத்தக்க மாசற்ற வார்த்தை இது. காமத்தின் நிழல்கூட நெருங்க முடியாத கருவறை மூலச்சொல்.

யாய், ஞாய், தாய் என்று தன்னிலை முன்னிலை படர்க்கையில் பதிவான பெற்றவளைக் குறித்த இலக்கியப் பதிவுகள், இங்கே நாத்தா, நோத்தா, ஆத்தா என்று பேச்சு மொழியாக வட்டார வழக்காக ஆளப்படுகின்றன.

இவற்றைப் போன்றே எந்தை, நுந்தை, தந்தை என்பவை நய்யா, நொய்யா, அய்யா என்று பேசப் பட்டன; அம்மா அப்பா என்ற சொற்களின் ஆதிக்கத்தால் அவை மிகச் சிறுபான்மையாகி விட்டன.

தந்தையின் தாயை விளிக்கப் பயன்பட்ட ‘அய்யத்தா’என்ற சொல்லை நூறு ஆண்டு களுக்கு முன்னே துரத்திவிட்டது அப்பத்தா என்ற சொல்.

தந்தையின் தாயைக் குறித்த அப்பத்தா என்ற சொல்லையும் தாயின் தாயைக் குறித்த ஆயா என்ற சொல்லையும் இப்போது பரணுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது பாட்டி என்ற சொல்.

என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது ‘அம்மா’என்ற சொல்தான்.

தமிழகத்தில், பிற மாநிலங்களில், பிற நாடு களில் வளமும் தமிழர்களின் எண்ணிக்கை பத்துக் கோடி தாண்டுகிறது. அத்தனை தமிழர்களின் உள்ளங்களையும் இல்லங்களையும் கவர்ந்த, அட்டணக்கால் போட்டு அமர்ந்த சொல்லாக ஆதிக்கம் கொண்டுவிட்டது தாயைக் குறிக்கும் அம்மா என்ற இந்தச் சொல்.

தாயை, ஆத்தாவை, அன்னையை, ஆயியை, ஒளவையை, அன்னாயை, ஆயாவை நலுங்காமல் குலுங்காமல் பழைமையாக்கிக் கொண்டிருக்கும் சொல் இந்த அம்மா.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வாழ் விலக்கண, படைப்பிலக்கண, மொழியிலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் தாயைக் குறிக்கும் ‘அம்மா’இல்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளிலும், சங்கத் தொகுப்புகளான எட்டுத் தொகையிலும் பத்துப்பாட்டிலும் ‘தாயை’விளிக்கும் ‘அம்மா’இல்லை.

இரண்டாம் நூற்றாண்டுச் சிலம்பிலும் மேகலையிலும் ஏழாம் நூற்றாண்டு சிந்தா மணியிலும் ‘பெற்றவளை’விளிக்கும் ‘அம்மா’இல்லை.

நாயன்மார்களிலும் ஆழ்வார்களிலும் கவிச் சக்கரவர்த்தியிலும் ‘அம்மா’இல்லை என்கிறார்கள்.

ஆனால், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தனது மொழிக்கான எழுத்து வடிவத்தை உரு வாக்கிக் கொண்ட தமிழின் முதல் வார்த்தையே ‘அம்மா’தான் என்றும் ஆடு மாடுகளைப் பார்த்தும் கேட்டும் ‘அம்மா’என்று அழைக்கக் கற்றுக்கொண்டான் என்றும் சிலர் மேடைக்கு மேடை கதை அளப்பதை கேட்கவே செய்கிறோம்.

வேட்டைக்குத் துணை வந்த நாய் தானே மனிதனின் முதல் நட்பு விலங்காக முடியும் என் பதையோ, விலங்கிடமிருந்து தான் மொழியைக் கற்றுக் கொண்டோமெனில், அது ‘லொள் லொள்’ஆகத் தானே இருக்கும் என்பதையும் யோசிக்க மறுக்கிறார்கள்.

என்னைக் கலங்கடித்த ஒரு சொல், ‘கன்னிமாப் பொண்ணு’என்ற சொல். முப்பத் தைந்து வயதுவரை நான் பொருளறியாச் சொல் இது.

முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு இது. கலிப்புலி என்ற கிராமத்தில் இருந்து, மாலை நேரத்தில் கேதச் செய்தி வந்தது. நாளைக் காலை ஒன்பது மணிக்குள் தூக்கி விடுவார்கள் என்றார் கேதம் சொல்லி! ஆறாவயலில் இருந்து நான்கைந்து ஆண்களும் ஏழட்டுப் பெண்களும் சென்றோம்.

பெண்கள் உள்ளே சென்று, கட்டிப் பிடித்து முட்டி அழுது ஒப்புவைத்துக் கொண்டிருந்தார்கள். ஆண்கள் நாங்கள் கட்டிப் பிணைந்து கைநிரவி விரித்துப் போட்டிருந்த கைக்கோல் விரிப்பில் அமர்ந்தோம்.

மணி ஒன்பதைக் கடந்தது.

“தூரத்தில் இருந்து மகனோ மகளோ வர வேண்டி இருக்கோ?” அருகில் இருந்த உள்ளூர்க் காரரிடம் கேட்டேன்.

“கெழவிக்குப் புள்ளை குட்டி இல்லை”

“ஒம்போதைத் தாண்டிருச்சு. இன்னமும் பாடை கட்டலையே...?”

“கெழவிக்கு கல்யாணம் ஆகலை. கல்யாணம் ஆகாதவங்க அரை மனுஷிதானே... அரை மனுஷிக்கு பாடை கட்ட மாட்டம்ல! அந்தாக் கெடக்கில்ல கம்பு, அதுல ஒரு சீலையைத் தொட்டியாக் கட்டி, தூக்கிட்டுப் போயி செம்மிப்பிட்டு வர வேண்டியது தான்!”

“ஏன் கல்யாணம் நடக்கலை?”

“கன்னிமாப் பொண்ணை யாரு கட்டிக் கொடுப்பாக? யாரு கட்டிக்கினு போவாக?

“வெளங்கலை!” என்றேன்

“கன்னிமாப் பொண்ணுனா யாருனு தெரியாமக் கேக்கிறயனு நெனைக்கிறேன். கன்னிமாப் பொண்ணுனா புஷ்பவதி ஆகாத பொண்ணுனு அர்த்தம்!” என்றார் அவர்.

அந்த நொடியில் கலக்கமுற்ற என் சிந்தை தெளிவதற்கு ஐந்தாறு மரங்களாயின. அதுவும் கன்னிமாப் பொண்ணு என்ற தலைப்பில் என் கலக்கத்தை ஒரு சிறுகதையாக்கிய பிறகு!

சிலம்பின் நாயகி நாயகரான கண்ணகிக்கும் கோவலனுக்கும் அஞ்சலி செலுத்தும் நேர்த்திக் கடனை அடைக்கும், அவர்களின் நினைவுகளை ஏந்தும் இரண்டு சொற்கள் ‘கும்பிடுதனம்’ ‘அங்கப்பண்’

கும்பிடுதனம் - பெண்களுக்குரியது.

அங்கப்பண்- ஆண்களுக்குரியது.

கால் சட்டையுடன் குளித்து, தண்ணீர் சொட்டச் சொட்ட, தலைக்குமேல் இரு கரங்களையும் உயர்த்தி, தேங்காயைப் பற்றியபடி, இரண்டு கால் களையும் பின்னிக்கொண்டு, கோயில் பிரகாரத்தில் மூன்றுமுறை உருண்டுவர வேண்டும். இதுதான் அங்கப்பண். அங்கப்பண் எனில் உடலில் வருத்திக் கொள்ளல் என்று பொருள் கொள்ளலாம்.

குளித்து ஈரச் சேலையோடு, தண்ணீர் சொட்டச் சொட்ட, கோயிலின் வெளிப்பிரகாரத்தில் தாய்ப் பால் உறுப்பு மண்ணில் பதியுமாறு, குப்புற விழுந்து, இரண்டு கைகளையும் அகல விரித்து, மண்ணைக்குவிப்பதுபோல தரை தடவி, தலைக்கு மேல் கொண்டு சென்று, மண்ணை அள்ளியபடி எழுந்து, முன்னே அம் மண்ணை இறைத்து விட்டு, மண்ணை அள்ளிய இடத்திற்குச் சென்று, அந்த இடத்தில் நின்றபடி மீண்டும் குப்புற விழுந்து, மீண்டும் தாய்ப்பால் உறுப்பு மண்ணில் பதியு மாறு குப்புறவிழுந்து... இப்படி பிரகாரத்தை மூன்று வளையம் வருவதே கும்பிடுதனம். கும்பிடுதனம் எனில் பெண்கள் மார்பு மண்ணில் பதிய வணங்குதல் என்று பொருள் கொள்ளலாம்.

அங்கப்பண் உருள்வதையும், கும்பிடுதனம் போடுவதையும் இக்காலத்தில் எல்லாக் கோயில் களிலும் காணமுடிகிறது. ஆனாலும் இவை, மழைத் தெய்வமான மாரியம்மனுக்கு மட்டுமே உரியவை என்பதை முத்தமிழ்க் காவலர் அய்யா கி.ஆ.பெ. விசுவநாதம் கூறித்தான் நான் அறிவேன்.

மும்பை வந்திருந்த முத்தமிழ்க் காவலர், அங்கப்பண், கும்பிடுதனம் பற்றி எங்களிடம் கூறியவை இப்போதும் காதில் ஒலிக்கிறது.

“வெட்டுப்பட்ட தன் தலையை இரு கை களாலும், தன்னிச்சையாய் இறுகப் பற்றியபடி, விடுதியில் உருண்டு துடித்து இறந்த கோவலனை நினைவூட்டுவது அங்கப்பண். வெட்டுப்பட்ட தலைக்குப் பதிலாக தலைக்குமேல் தேங்காயைப் பற்றியபடி உருள்கிறோம்.

கணவன் கொல்லப்பட்ட தகவலறிந்து ரௌத் திரத்தோடு, தலைவிரிகோலத்தோடு மதுரைத் தெருக்களில் விழுந்தெழுந்து மண்ணை வாரி இறைத்து, இங்கே நல்லவர்களே இல்லையா... சான்றோரும் உண்டுகொல் என்ற கேவலோடு, தேரா மன்னன் சாக வேண்டும், அவனது மதுரை சாம்பலாக வேண்டும் என்ற சாபத்தோடு தனது மார்பின் காம்பை திறுகியெறிந்து தனத்திலிருந்து கொட்டும் குருதியோடு கிறுகிறுத்து விழுந் தெழுந்து கதறினாலோ ஒரு மாமணியாய் வந்து திருமாமண் கண்ணகி, அவளுடைய அந்தச் செயலின் நினைவாக இன்றளவும் தாயர்கள் போட்டுக் கொண்டிருப்பதுதான் கும்பிடுதனம்.

சிலப்பின் காலத்திற்கு முன்பு கொற்றவை யாகிய காடு கிழானுக்குக் கோயில்கள் இருந்தன. ஆனால் மழைத் தெய்வமாகிய மாரிக்குக் கோயில்கள் இருந்ததில்லை.

கண்ணகியின் சாபத்தால் பன்னிரெண்டு வருடம் மழையில்லை. மழை வேண்டியும் ரௌத்திர வெக்கை ஆவியாய் அலையும் கண்ணகியின் ஆத்மாவைக் குளிர்காக்க வேண்டியும் புதிய கோயில்களை உருவாக்கி மன்னர்களும் மக்களும் வழிபடத் தொடங்கினார்கள். அப்படி உருவாக்கப் பட்டவையே மழைக் கோயில்களான மாரியம்மன் கோயில்கள். மாரியம்மன் கோயில்களில் அங்கப் பண் உருள்வதும் கும்பிடுதனம் போடுவதும், கோவலனின் படுகொலைத் துடிப்பையும், கண்ணகியின் ஆங்கார ரௌத்திரத்தையும் நினை வூட்டும் சடங்குகளே! இவை முத்தமிழ்க் காவலர் சொன்னவை.

மஞ்சுவிரட்டு என்ற சொல், சேதுபதி சீமை, தொண்டைமான் சீமை, வேலுநாச்சி சீமையில், புத்துணர்ச்சி பாய்ச்சும் ஒரு மந்திரச் சொல்.

பன்னூறு ஆண்டுகளாக இந்த விளையாட்டை போற்றி, அரவணைத்து தழுவிப் பிடித்து அடக்கி, வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், இன்றைய உழைக்கும் மக்களான, நேற்றைய போர்க்குடி மக்கள்.

ஏறு தழுவுதல் என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடும் வீர விளையாட்டு தான் மஞ்சுவிரட்டு. மஞ்சு என்றால் மழைமேகம் என்ற பொருளும் உண்டு. இங்கே, கரியநிறக் காளை என்ற பொருளில் ஆளப்படுகிறது. மஞ்சு விரட்டு என்றால் காளையை விரட்டிப் பிடிப்பது எனக் கொள்ளல் வேண்டும்.

ஏறு தழுவுதல், எருதுகட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் என்ற வரிசையில் முன்னணியில் நிற்கத் தகுதி வாய்ந்த சொல் மஞ்சுவிரட்டு.

இது எப்படி ஜல்லிக்கட்டு ஆனது? ‘ஐ’என்ற எழுத்தை இரண்டு மூன்று நூற்றாண்டுகளாகத் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஜல்லிக் கட்டு என்ற வார்த்தை முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு புழங்கியிருக்கமுடியாது.

சல்லிக்காசுகளை முடிந்து கொம்புகளில் கட்டி விரட்டியதால் இதை சல்லிக்கட்டு என்று அழைத்தார்கள் என்றும், சல்லிக்கட்டு கால வெள்ளத்தில் ஜல்லிக்கட்டு என்று மாறிவிட்ட தென்றும் கூறப்படும் காரணம் ஏற்புடையதல்ல.

இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த பலநூறு கிராமங்களில் பலநூறு வருடங்களாக நடக்கும் விளையாட்டு இது. அந்த மாவட்டங்களுக்கு உரிய விளை யாட்டும் கூட! இந்த கிராமங்களில் யாரும் எப் போதும் இதை ஜல்லிக்கட்டு என்று உச்சரித்ததும் இல்லை. உச்சரிப்பதும் இல்லை. மஞ்சுவிரட்டு என்று மட்டுமே சொல்வார்கள்.

சேவலின் காலில் கத்தியைக் கட்டி விளை யாட விடுவார்கள். இதை சேவல் கட்டு என்று தான் சொல்கிறார்கள். கத்திக் கட்டு என்று சொல் வதில்லை.

எருதை வடத்தில் கட்டி விளையாட விடு வார்கள். இதை எருதுகட்டு என்று தான் சொல் வார்கள். வடக்கட்டு என்று சொல்வதில்லை.

ஒரு மாட்டின் கொம்பில் அல்லது கழுத்தில் சல்லி, மாயை, வேட்டி, மெடல் என்று எதைக் கட்டி விரட்டினாலும் மாட்டு விரட்டு, எருது விரட்டு, மஞ்சு விரட்டு என்றுதான் அழைக்கப் படும். சல்லிக்கட்டு, மாயைக்கட்டு, வேட்டிக் கட்டு, மெடல்கட்டு என்று வழங்கப்படமாட்டாது.

மஞ்சுவிரட்டு, எருதுகட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் போன்ற பண்பாட்டுடன் இரண்டறக் கலந்த விளையாட்டுகளை வடபுலத்தவர்களின், மேலை நாட்டவர்களின் தலையீடுகளால், ஆதிக்கத் தால் நாம் இழந்து கொண்டிருக்கிறோம். விளை யாட்டுகளை மட்டுமின்றி, அவற்றின் உண்மை யான பெயர்களையும் இழந்து கொண்டிருக் கிறோம்.

திட்டுதலுக்கும் தூற்றுதலுக்கும் உரிய எத்தனையோ சொற்களை நாம் அறிவோம்.

நாதியத்த, வக்கத்த, போக்கத்த, மொட்டையாப் போக. திரும்பாமபோக, நாதியத்துப் போக, பட்டுக்கிடப்பான், பாவிபறப்பான், குழியிலக்க, அரசழிவான், சீப்பட்ட, தட்டுவாணி, தன்னைப் பேணி, தட்டுக்கொட்டி, துப்புக்கெட்ட என்று ஏராளமான சொற்கள் உண்டு. இவற்றில் இல்லாத ஒரு அழகியல் ‘உன் வாயில வண்ணப் புத்து வைக்க’வில் உண்டு (வண்ணப்புத்து- கலர்புல் கேன்சர்.)

சாதாரணப் புற்றுநோயல்ல, பலவண்ணப் புற்றுநோய் வரவேண்டும் என்று சாபமிடுவது நிச்சயம் அழகியல் நிறைந்த சாபம் தானே!

Pin It