பொதுவுடைமை இயக்கம், முற்போக்கு இலக்கியம் என்பதான எனது பயணத்தில் இடையீடு செய்து அறிவாராய்ச்சித் தளத்துக்கு அழைத்துச் சென்றவர். பேராசிரியர் நா.வானமாமலை. பேராசிரியரை நான் பார்த்தது கிடையாது; பழகியது கிடையாது. ஆனால் அவரின் ஆளுமை கல்விப்புல வட்டாரத்தில், இயக்கச் செயல்பாட்டரங்குகளில் எங்கும் பரவிக் கிடப்பதைக் கண்டுணர்ந்தேன். அவரைப் பற்றியும் அவருடைய எழுத்துக்கள் பற்றியும் முழுமையானத் தரவுகள் எதுவும் தொகுக்கப்படா நிலையில் எனது ஆய்வு தொடங்கியது. சில ஆண்டுகள் அவர் எழுதிய நூல்கள், கட்டுரைகள், இதழ்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் அவர் குறித்த அனுபவப் பகிர்வுகள் பலவற்றையும் தேடி அலைந்தேன். சென்ற இடமெல்லாம் வரவேற்பு; ஏதாவது தகவலோ, எழுத்துரையோ தந்தபடி இருந்தனர். ஒருபுறம் பேராசிரியரின்  கடும் அர்ப்பணிப்புமிக்க உழைப்புப் பிரமிப்பைத் தந்தது; மறுபுறம் அவர் உருவாக்கிய ஆய்வுச் சூழல் - ஆய்வுத் தடம் - ஆய்வாளர்கள், படைப்பாளிகள் எனத் தேடி வைத்த தோழமைச் சுற்றம் மனிதத்தின் உச்சமாய் மெய்ச் சிலிர்க்க வைத்தது.

இன்று பேராசிரியரின் படைப்புகள் நாட்டுடைமை யாக்கப்பட்டுள்ளன. நாட்டார் வழக்காற்றியலோடு மட்டுமே அவரைச் சுருக்கிப் பார்க்கும் நிலைமை மாறி உள்ளது. புதிய அறிவுத்துறைகள் பலவற்றின் முன்னோடி அவர் என்பது ஏற்கப்பட்டுள்ளது. அவர் உருவாக்கிய நெல்லை ஆய்வுக்குழுவும், அவர் நடத்திய ஆராய்ச்சி இதழும் தமிழாய்வு வரலாற்றில் தவிர்க்க முடியாத முன்மாதிரிகளாகி உள்ளன.

· · ·

பேராசிரியர் நா.வானமாமலை தமிழில் பன்முக ஆய்வின் முன்னோடி. தமது ஆய்வுக்கு அறிவுத்துறைகள் பலவற்றையும் அணுகுமுறைகளாகப் பயன்படுத்தித் தமிழ் ஆய்வினை வளர்த்தெடுத்தவர் அவர். இலக்கிய ஆய்வோடு நின்றுவிடாமல் வரலாறு, பண்பாடு, தத்துவம், மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல் எனப் பலவற்றிலும் ஆய்வுகளைத் தமிழுலகிற்கு வழங்கியவர். அறிவியல் வழி நின்ற சமூகவியல் பார்வையுடன் கூடிய மார்க்சிய நெறியை அடிப்படையாகக் கொண்டு இவர்தம் ஆய்வுகள் அமைந்தன.

சமூக வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அமைந்த இவரின் பிற ஆய்வுப் புலங்கள் போலவே இவர்தம் புத்திலக்கிய ஆய்வுகளும் அமைந்துள்ளன. கவிதை, சிறுகதை, நாவல், உரைநடை ஆகியவற்றைப் பற்றி இவர் எழுதியுள்ள கட்டுரைகள், நூல் திறனாய்வுகள், முன்னுரைகள், அணிந்துரைகள் ஆகியவற்றின் வாயிலாகவும் இலக்கியம் குறித்து இவர் எழுதியுள்ள பிற எழுத்துக்கள் வாயிலாகவும் இவர்தம் புத்திலக்கிய ஆய்வுக் கண்ணோட்டத்தையும், இலக்கியக் கொள்கை களையும் அறியலாம்.

புத்திலக்கிய வடிவங்களை ஏற்றல்

பண்டைய இலக்கிய ஆய்விலும், சமூகப் பின் புலத்திலான வாய்மொழி இலக்கிய ஆய்விலும் தீவிர கவனம் செலுத்திய நா.வா. 1950களுக்குப் பின் (நாட்டின் விடுதலைக்குச் சற்றுமுன் தொடங்கி) பேரலையாக உருவெடுத்த தமிழ் உரைநடை இலக்கியத்தின் (புதுக் கவிதை, சிறுகதை, நாவல்) மீது கவனத்தைச் செலுத்தினார்.

புதுக் கவிதையைப் படைப்பிலக்கியத்திலும், சிற்றிதழ்ச் சூழலிலும் இயங்கிய தொ.மு.சி.ரகுநாதன் போன்றவர்களே ஒப்புக்கொள்ளாத நிலையில் அதனை ஏற்று, அதற்குள்ளாக உள்ளடக்க அடிப்படையில் முற்போக்கு, பிற்போக்கு என இருமைப்படுத்திய இவரின் துணிவே புதுக்கவிதை எழுச்சித் திசையில் பயணிக்க உந்து சக்தியாயிற்று.

அதே போல சிறுகதை எனும் இலக்கிய வடிவத் தினையும் அக்கறையோடு வரவேற்கிறார். “சிறுகதையில் வாழ்க்கையென்னும் பரந்த நிலப்பரப்பை ஒரு ஜன்னல் வழியே பார்க்கிறோம். ஏதோ ஒரு கூறு அதன் பல்வேறு அம்சங்களோடும் நம் அகக்கண்ணில் தெரியும்படி கதையாசிரியன் கதையைச் சொல்லுகிறான்.” (புதிய முளைகள் சிறுகதைத் தொகுப்பு - முன்னுரை) என அவர் சுட்டுவது கருதத்தக்கது.

நாவல் இலக்கியம் மனித வாழ்வின் முழுமைத் தன்மையைச் சித்திரிக்கும் இலக்கிய வடிவமாக இருப்பதைத் தமிழின் முதல் நாவலாசிரியர்கள் தொடங்கிப் பல்வேறு கருத்துநிலைப் பின்புலங் கொண்ட தற்கால நாவலாசிரியர்கள் படைப்புகள் வரை நோக்கி இவ்விலக்கிய வடிவத்தின் இன்றியமையா மையை நா.வா. விளக்குவார்.

“நமது அறிவு நிலையும் சமுதாய உணர்வு நிலையும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த நிலைமையோடு நின்றுவிடக் கூடாது. அப்படி நின்று விட்டால் அறிவு வளர்ச்சியும் உணர்வு வளர்ச்சியும் தேங்கிவிடுகின்றன. இறந்த கால அறிவையும், உணர்வையும் கொண்டு வெகு வேகமாக மாறிவரும் இந்நூற்றாண்டின் சமூகத்தையும் மனிதனையும் அறிய முடியாது. எனவே உரைநடை நூல்களைப் பேராசிரியர்கள் இலக்கியமென்று கருதாவிட்டாலும், நாவலும் கதையும் வருங்கால இலக்கியத்தின் முதன்மையான வடிவங்களாக இருக்கும்.” (தற்கால நாவல் ஒரு மதிப்பீடு-முன்னுரை) எனக் கல்விப்புல வட்டாரத்தில் நிலவிய பண்டிதத் தன்மையைச் சுட்டி, நாவல் இலக்கிய வடிவத்தை நா.வா. வரவேற்பதைக் காணலாம். மட்டுமல்லாமல் நாவல் இலக்கிய வடிவத்தின் படைப்பு அடித்தளத்தை, படைப்பாக்க நெறியை மிக நுட்பமாக வரையறுக்கிறார்.

“மரபுவழி இலக்கியப் புலவர்களும், மரபுவழி விமர்சகத் தடிக்காரர்களும் எதிர்பாராத சமூக அடித் தளத்தில் வேரூன்றிய, இலக்கியப் புதுமுளைகளைக் காண்கிறோம். சமூகமெனும் சேற்றில், கருத்தெனும் வித்து, இலக்கிய உருவமாக முளை விட்டுள்ளவும், வளர்ச்சி பெற்றுள்ளவுமான நமது நாட்டில் அவற்றால் அரை குறைத் தாக்கம் பெற்றுள்ள படைப்பாளிகள் சமுதாயச் சித்திரங்களையும், மனித இயல்புச் சித்திரங் களையும், சமுதாயத்திற்கும் மனிதனுக்குமுள்ள உறவு களையும் பரந்த பகைப்புலனில், பெரும் போக்காகவும், நுணுக்கமாகவும் தீட்டுவதற்கு முயன்றுள்ளார்கள். இச்சித்திரங்கள் புகைப்படங்களுமல்ல; கற்பனைப் படைப்புகளுமல்ல; படைப்பாளிகளின் சமூக-மனித உணர்வுகளில் உலக நிகழ்ச்சிபட்டுப் பிரதிபலித்து உருவான கலைப் படைப்புகள்” (அதே) ஆக, புத்தம் புதின இலக்கிய வடிவத்தைத் தமிழ் மரபின் தொடர்ச்சி யால் நா.வா. இனம் காட்டுகிறார். பொன்னீலனின் ‘கொள்ளைக்காரர்கள்’ முன்னுரையில் இலக்கிய வடிவம் குறித்த விவாதத்தையும் முன்வைக்கிறார்.

“கொள்ளைக்காரர்கள் யார்? என்ற கேள்விக்கு விடையளிக்கிறது இக்கதை. எனவே இது ஒரே கதைப் பொருள் கொண்டது. Unitary theme இருந்தால் சிறுகதை என்று நான் வரையறுக்கிறேன். எனவே இது சிறுகதை. நீளம் அதிகமாகிவிட்டதே சிறுகதை என்று சொல்லலாமா என்றால், சிறு என்பதை விடுத்து கதை என்று சொல்லிவிட்டுப் போங்கள். உங்களுக்குப் பிடித்தால் நெடுங்கதையென்று சொல்லிவிட்டுப் போங்கள். நாவல் என்று மட்டும் சொல்லாதீர்கள். ஒரு வரலாற்றுக் காலத்தின் சமூகப் போக்கின் சாரம் முழுவதையும் பல கதாபாத்திரங்களின் மூலம் வெளிப்படுத்துகிற கதைதான் நாவல்”

இதில் இரண்டு கருத்துகள் கவனிக்கத்தக்கன. ஒன்று ஒற்றைக் கருப்பொருளைக் கொண்டது சிறுகதை என்பது. மற்றது நாவல் குறித்த வழக்கமான வரையறை. தமிழ்ச் சூழலில் இன்றும் தெளிவு பெறாத குறு நாவல்/நெடுங்கதை/சற்றே நீளமான கதை ஆகியவற்றின் ஒரு பகுதியாகவே இதனைக் கொள்ள வேண்டும்.

‘உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்’ நூலில் தமிழில் சங்க இலக்கியக் குறிப்புரைகள், கல்வெட்டுகள், மெய்கீர்த்திகள் தொடங்கி, தற்கால மேடைத் தமிழ் வரை பல்வேறு காலச் சூழல்களில் உரைநடை உருவ-உள்ளடக்க மாற்றங்களை அடைந்துள்ளமையை மொழி யாளுமையை மையப்படுத்தி நா.வா. விளக்குகிறார். இலக்கிய வடிவ மாற்றங்களைச் சமுதாய இயக்கங்கள் நிகழ்த்திக் காட்டும் என நா.வா. இதன் வழி நிறுவுகிறார்.

யதார்த்தவாதப் படைப்புகளை இனம் காட்டுதல்

புதுக்கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்கள் நவீனத்துவத்தின் விளைச்சல்கள். ஐரோப்பியக் காலனியாக்கம், ஆங்கிலக் கல்வி முறை, அச்சு இயந்திர வருகை ஆகியவற்றின் உடனிகழ்வு உரைநடை இலக்கி யங்கள், இவற்றுக்குள்ளாக முற்போக்கு, பிற்போக்கு என்ற கருத்துநிலைகளை இனம் காண்பதும், யதார்த்த வாத மனிதநேயப் படைப்புகளை வாய்மொழி இலக்கிய மரபின் தொடர்ச்சியாக அடையாளம் காட்டுவதும் நா.வா.வின் தனித்தன்மைகளாகக் காணக் கிடைக்கின்றன.

புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் நூலின் மறுபதிப்பில் முன்பதிப்பிற்குப் பின் நிகழ்ந்துள்ள மாற்றங் களைச் சுட்டிக் காட்டுவது புதுக்கவிதையின் முற்போக்குத் தன்மைக்குச் சான்றாதாரமாக விளங்குகின்றது.

“இன்றைய புதுக்கவிதைகளில்

1.            புதிர்கள் குறைந்துள்ளன.

2.            இருவர்க்கங்களின் கருத்து மோதல்களிடையே நசுங்கி ஓலமிடும் ‘நடுநிலைக் கவிஞனது’ ஓலங்கள் மிகக் குறைவாகவே கேட்கின்றன.

3.            சமூக விமர்சனங்கள், பிரச்சினைகளுக்கு விடை தேடும் முயற்சிகளாக உருமாறியுள்ளன.

4.            மனிதநேசம், உலக முன்னேற்றத்தில் நம்பிக்கை, உலக மக்களின் நல்வாழ்வில் நம்பிக்கை ஆகியன அதிகமாகியுள்ளன. இக்குறிக்கோள் களுக்காகப் போராடுகிற மக்களின் போர்ப் பரணியாகக் கவிதை ஒலிக்க வேண்டும் என்ற நன்னோக்குத் தோன்றி வளருகின்றப் போக்காக உள்ளது.

5.            பிற்போக்குத் தத்துவங்களின் தாக்கம் (சர்ரியலிசம், எக்சிஸ்டென்ஷியலிசம், ஃபிராய்டிசம், நியோ ஃபிராய்டிசம்) குறைந்து, பொதுவாக மார்க்சியக் கொள்கையின் தாக்கம் மிகுந்துள்ளது.”

இது இவரின் ஏனைய கவிதை விமர்சனங்களுக்கும் பொருந்தும்.

சிறுகதைகளிலும் சமூகச் சிக்கல்களை வட்டார வழக்கில் சித்திரிக்கும் போக்குகளை முன்னிறுத்தி ஊக்கப்படுத்துவதை இவர் எழுதியுள்ள சிறுகதை முன்னுரைகளில் காணலாம். சு.சமுத்திரத்தின் தொடக்கக் காலப் படைப்பான ‘சத்தியத்தின் அழுகை’ தொகுப்பு முன்னுரையில்,

“சமுத்திரத்தின் கதைகள் பொதுவாகத் தற்காலச் சமுதாய அமைப்பின் முரண்பாடுகளையும், அவற்றின் நியாய அநியாயங்களையும் அலசிப் பார்க்கிற சமுதாய ஆய்வு நிரம்பியதாக உள்ளது. இவ்வாய்வின் விளைவுகள் கற்பனை, கலையுணர்வு, கலைத்திறன் ஆகிய ஊடகங் களின் வழியே கலைப்படைப்பாகின்றன. ஒரு தத்து வார்த்தக் கண்ணோட்டம் இருப்பதால் இப்படைப்புகள் வக்கிரித்து நிற்பதில்லை. புற உண்மைகளைக் கலை உண்மைகளாக மாற்றுவதில் வெற்றி பெறுகின்றன” எனக் குறிப்பிடுவது யதார்த்தவாதக் கலை அழகியலை இனம் காட்டுவதாக உள்ளது.

அதே போல தமிழன் தொடக்கக் கால நாவலாசிரியர் களான வேதநாயகம்பிள்ளை, ராஜம் அய்யர், மாதவையா ஆகிய மூவரின் நாவல்களை மிகச் சுருக்கமாகவும் அதே வேளை நுட்பமாகவும் மதிப்பிட்டு மாதவையாவை நடப்பியல் இலக்கியத் தந்தை எனக் கூறும் அளவுக்குப் புகழ்கிறார்.

“தத்துவ நோக்கைவிட மனித நேசமே சிறந்தது என்பதை நடப்பியல் வாழ்க்கையிலிருந்தே காட்டுகிறார். நடப்பியல் சமூகத்தின் குறைபாடுகளைப் போக்க வேண்டும் என்ற சீர்திருத்த ஆர்வம் இவரிடம் முனைப்பாக உள்ளது. இவருடைய இலக்கியப் பார்வை நடப்பியல் முற்போக்கானது. இவரை இவ்வகை ஆசிரியர்களுள் முதன்மையானவர் என்றும், புரட்சி கரமான மனித நேசக் கொள்கையின் தந்தையென்றும் கூறலாம். உலக ஒற்றுமைக்கும் மனித மேன்மைக்கும் வழியாக இவர் சமயப் பொறையையும் மனித இன நேசத்தையும் காட்டுகிறார். இக்கண்ணோட்டத்தின் செல்வாக்கை இவரின் நாவல்களில் காணலாம்.”

இந்த மதிப்பீட்டின் வழியேதான் கா.சி.வேங்கட் ரமணி, தி.ம.பொன்னுசாமிப்பிள்ளை என்று தொடங்கி ஜெயகாந்தன், ராஜநாராயணன், பொன்னீலன் வரை பலரையும் நடப்பியல் நோக்கு நெறிப் படைப்பாளி களாக அடையாளம் காட்டுகிறார். கி.ரா.வின் ‘கோபல்லக் கிராமம்’ நாவல் திறனாய்வில் “இந்நூலை முற்போக்கு, பிற்போக்கு என்று வறட்டுத்தனமாக மதிப்பிட முடியாது. நாட்டுப் பண்பாட்டு மரபில் தோன்றிய ஒரு வரலாற்று நாவல் இது. இதில் மெய்யியல் பார்வை விஞ்சியும் இயல்பியல் ((Naturalism)) பார்வை குறைந்தும் காணப்படுகிறது. நாட்டுப் பண்பாட்டைப் (ஒரு சாதியாரின்) பரிபூரணமாக வெளிப்படுத்தும் சிறந்த படைப்பிலக்கியம் இந்நூல்” எனக் கூறுவதன் வழி ‘நாட்டார் நாவல்’ என்கிற வரையறையைத் தருகிறார்.

திறனாய்வு நெறிகள்

நா.வா. அடிப்படையில் மார்க்சியவாதி. காலமும், இடமும், வரலாற்றுச் சூழலும் படைப்பைத் தீர்மானிக் கின்றன. கலை மனித உணர்வின் வடிவங்களில் ஒன்று. அக உலகிற்கு வெளியே உள்ள புற உலகை அது அகத்தினுள் பிரதிபலிக்கிறது. அறியப்படும் பொருளும் அதன் அகப் பிரதிபலிப்பும் உற்பத்தி நிலைகளுக்கும் சமூக வரலாற்றுக்கும் கட்டுப்பட்டவை என்ற அறிதல் முறைக் கொள்கையை மீறியே கலை முகிழ்க்கிறது.

புற உலகில் உள்ள நிலைமைகளை அவ்வாறே நிழற்படம் போல வெளிப்படுத்துவதைக் கலை எனக் கொள்ள இயலாது. மனித மூளை என்பது வரலாற்றுக் கால மனித முயற்சிகள், சாதனைகள் அனைத்தின் கருவூல மாகும். இது புற உலகை மதிப்பிட்டுப் பொதுவிதிகளை உருவாக்குகிறது.

எல்லாக் கலைஞர்களும் சமூக வாழ்வின் முரண் பாடுகளில் இருந்துதான் கலைப்படைப்பைத் தொடங்கு கிறார்கள். வாழ்க்கையின் இயக்கப் போக்கை மேலும் மேலும் அறிந்துகொண்டு வரலாற்றுக் கண்ணோட்டமும் தத்துவ நோக்கமும் பெறும்போது அவர்களுடைய கலைப்படைப்புகள் செழுமையடைகின்றன என்பதான இயக்கவியல் வரலாற்று அணுகுமுறை நா.வா.விடம் இயல்பாக அமைந்திருந்தது.

உருவம், உள்ளடக்கம், அடிக்கட்டுமானம், மேற் கட்டுமானம், பிரதிபலித்தல் கோட்பாடு, அந்நியாமாதல் முதலிய மார்க்சிய அடிப்படைக் கூறுகள் முழுவதையும் உள்வாங்கி அதே நேரத்தில் சூத்திரத்தன்மைக்குச் சென்றுவிடாமல் விமர்சனப் பணியினை அவர் செய்தார்.

இலக்கியத்தில் உருவமும் உள்ளடக்கமும் என்ற அவரின் நூலில் உருவ-உள்ளடக்க உள்விவகாரங் களை மிக நுட்பமாக விவாதிக்கிறார். இலக்கியத்தில் உள்ளடக்கம் மட்டுமே முக்கியமானது என அன்றைய மார்க்சியர் பலர் (மார்க்சிய அழகியலின் அடிப்படைகள்: அவ்னார்ஸீஸ்) வாதிட்டனர். நா.வா.வோ “உள்ளடக்கம் உயிர், உருவம் உடல் இவ்விரண்டிற்கும் உள்ள தொடர்பு போல் உள்ளடக்கமும் உருவமும் தொடர்பு கொண்டவை. உள்ளடக்கம் இல்லாத உருவம் உயிரற்ற உடல் போன்றது. உருவமற்ற உள்ளடக்கம் உடலற்ற உயிர் போன்றது” எனப் புரிந்து விளக்கினார்.

மேலும், நா.வா. உருவமா, உள்ளடக்கமா என்ற விவாதத்தில் இறங்காமல் அல்லது இதில் எது சிறந்தது, முக்கியமானது என்ற முடிவினைத் தேடாமல் அழகியல் நுட்பத்தின் இரண்டின் ஊடும்பாவுமானச் சேர்மானத்தை வலியுறுத்தி வழிமொழிகிறார்.

“கலைப்படைப்பில் உள்ளடக்கத் தெளிவும் உருவச் சிறப்பும் இருத்தல் வேண்டும்.... இரண்டும் இணைந்து தான் கலைப் படைப்பு ஒருமை ( Unity of Content and Form) தோன்றுகிறது” என்றும்,

“உள்ளடக்க உருவங்களின் இணைப்பும் ஒருமையுமே ஒரு கலைப் படைப்பை உள்ளம் கவரும் தன்மையுடைய தாக்குகின்றன” என்றும் அவர் தெளிவாகவே குறிப்பிடு கிறார்.

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், இலக்கியத்தில் உருவமும் உள்ளடக்கமும், இலக்கியத்தில் முற்போக்குப் பார்வைகள் ஆகிய கட்டுரைகள் நா.வா.வின் கலை அழகியல் முற்போக்குக் கண்ணோட்டத்திற்குச் சான்று பகர்வனாக அமைகின்றன.

தமிழ்ச் சூழலில் புத்தம் புதிதாய் உருவெடுத்த மார்க்சிய இலக்கியச் செல்நெறியை ஆரவாரத்தோடு நிலைநிறுத்தும் பணி அவருக்கு இருந்தது. இதனை ஒட்டியே அவர் மீதான எதிர் விமர்சனங்களும் தோன்றின.

இலக்கிய விமர்சனம் குறித்துகூட மிகவும் நெகழ்வான (நேர் அர்த்தத்தில் குறிப்பிடுகிறேன்) ஓர் அளவுகோலையே அணுகுமுறையாக அவர் பயன் படுத்தினார். பட்டியல்படுத்தல், தரப்படுத்தல் என தொழிற்பட்ட விமர்சகர்களைச் சுட்டும்போது, “தமிழ் நாட்டில் தற்கால இலக்கியம் பற்றிய விமர்சனங்கள் வளரவில்லை” என்று தங்களுக்கு விமர்சகர்கள் என்ற பதவியளித்துக் கொண்டுள்ள சிலர் உரக்கக் கூறுகிறார்கள். விமர்சனம் என்றால் கலைஞனுயை ஓராண்டு உழைப்பின் பயனாகப் பிறந்த படைப்பை

ஒரு கணத்தில் உடைத்தெறியும் சிலம்ப வித்தை யென்றெண்ணிக் கொண்டு இலக்கியத் தடி சுழற்றும் வித்தையைக் காட்டுபவர்கள் இவர்கள். இவர்களுக்குக் கலை என்றால் கலைதான். கலைக்குச் சமூக விளைவு எதுவும் இருக்கக்கூடாது. இருந்தால் அது அசிங்கம். நிலமில்லாமல் பயிரும், தாயின்றிச் சேயும் தோன்று கின்றது என்று இவர்கள் நம்புகிறார்கள். இவர்கள் ஒரு வகை” (தமிழ் நாவல் மதிப்பீடு) எனக் கடுமையாகச் சாடி, எது விமர்சனம் என்பதை முன்வைக்கிறார்.

அதே போலத் தனது விமர்சன அணுகுமுறையை “ஒரு கவிதையை ஒரு முறை படித்தவுடனே அதனைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் அதிமேதாவி நானல்ல. ஒரு கவிஞனது கவிதையைப் பலமுறை ஆழ்ந்து படித்த பின்னரே, முன்னர் அவன் எழுதிய கவிதைகளோடு ஒப்பிட்டு, அவனது இலக்கியப் போக்கை வகைப்படுத்த நான் முயலுவேன். நான் அவசர விமர்சனங்கள் எழுதுகிறவனல்ல. ஆழ்ந்த இலக்கிய ஆய்வின் முடிவு களையே நான் வெளியிட விரும்புகிறேன்” என குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

தமிழ்ச் சூழலில் வேதநாயகம் பிள்ளை, மாதவய்யா, கல்கி, ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, தி.ஜானகி ராமன், நீல பத்மநாபன், கிருத்திகா, சண்முக சுந்தரம், க.நா.சு, ராஜநாராயணன், சமுத்திரம், பொன்னீலன் உள்ளிட்ட படைப்பாளிகள் பலரின் படைப்பு நெறி களை ஆராய்ச்சி இதழின் வழியே வெளிக்கொணர்ந்தார்.  கா.சுப்பிரமணிய பிள்ளை, எஸ்.வையாபுரிப் பிள்ளை, இரா.இராகவய்யங்கார், ஏ.வி.சுப்ரமணிய அய்யர் போன்றோரின் ஆய்வு நெறிகளைத் தக்க அறிஞர்களைக் கொண்டு மதிப்பிட்டு ஆராய்ச்சி இதழில் வெளியிட்டார்.

நா.வா. புதிய இலக்கியப் போக்குகளான சர்ரியலிசம், எக்ஸிஸ்டென்ஷியலிசம், ஃபிராய்டிசம் போன்றவற்றைப் பரபக்கமாகவேனும் (தான் எதிர்த்த போதிலும்) அறிமுகப்படுத்தியவர்; மனித நேசம், போர்க் குணமிக்க மனிதநேசம், கற்பனாவாதம், புரட்சிகரமான கற்பனாவாதம், யதார்த்தவாதம், விமர்சன யதார்த்த வாதம், சோசலிச யதார்த்தவாதம் முதலிய இலக்கியப் போக்குகளை உற்சாகத்தோடு விளக்கிக்காட்டியவர்.

நா.வா. தன்னளவில் தான் வரித்துக்கொண்ட கொள்கைக்கு நேர்மையாக இருந்தவர். அறிவுத்தளத்தின் பல மட்டங்களிலும் பல களங்களிலும் பணி செய்தவர். அவர் காலத்தில் அவருக்குக் கைக்கு எட்டிய அறிவுக் கருவூலங்கள் அனைத்தையும் தமிழ் அறிவுலகுக்குப் பந்தி வைத்துவிட வேண்டும் என்ற பேரவாவில் இயங்கியவர். தான் மட்டுமல்லாது தன்னைப் போல் ஆய்வாளர் பலரையும் உருவாக்கி உச்சி முகர்ந்து மகிழ்ந்தவர். கட்சி/இயக்கம்/கொள்கை பற்றுறுதி காரணமாகவே பழிக்கப் பட்டவர். மீராவையும், பரிணாமனையும், பொன்னீலனையும் தட்டிக் கொடுத்ததைக் கட்சிக்காரர்களைக் கட்டி அணைக்கிறார் என எள்ளல் செய்தவர்கள் மாதவய்யாவை, கா.சி.வேங்கட்ரமணியை, ஹெப்சிபா ஜேசுதாசனை, சூரியகாந்தனைப் படைப்பு நோக்கிப் பாராட்டியதை எங்கும் குறிப்பிடாமல் இருட்டடிப்புச் செய்தார்கள்.

தமிழ்ச்சூழலில் அமைப்புச் சார்ந்து இயங்குபவர் களை அவர்களின் படைப்பு/ஆய்வு ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளாமல் கட்சிக்காரர்கள் எனக் கொச்சைப்படுத்துவது (பொதுவுடைமை/திராவிட இயக்கம்)கூட ஒரு விதத்தில் மனு அதர்ம வெளிப்பாடு தான்.

தமிழ்ச்சூழலில் பின்னால் தோன்றிய அந்நியமாதல், கிராம்ஷி போன்ற புதிய மார்க்சியப் போக்குகளுக்கும், தலித்தியம், பெண்ணியம் முதலிய விளிம்பு நிலை செல்நெறிகளுக்கும் ஏதோ ஒரு விதத்தில் நா.வா. உந்து சக்தியாக இருக்கிறார்.

Pin It