திருப்பூர் அருகே திருமலை கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையலராக நியமிக்கப்பட்ட அருந்ததிய சமூகத்தைச் சார்ந்த பாப்பாள், உள்ளூர் ஜாதி வெறியர்கள் எதிர்ப்பால் அதிகாரிகளால் இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு - ஜாதி எதிர்ப்பு இயக்கங்களிடமிருந்து வந்தன. பிறகு மீண்டும் பாப்பாளின் சொந்த ஊரான திருமலைக் கவுண்டன் பாளையத்துக்கே மாற்றப்பட்டார். இப்போது ஜாதி வெறியர்கள் பாப்பாள் குடும்பத்தை அச்சுறுத்தி வருவதாக பாப்பாள் கணவர் பழனிச்சாமி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளார். பாப்பாள் நியமனத்துக்குப் பிறகு சில ஜாதி வெறியர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை மதிய உணவை பள்ளியில் சாப்பிடக் கூடாது என்று கூறி, வீட்டிலிருந்தே உணவு தயாரித்துக் கொடுத்து பள்ளிக்கு அனுப்புகிறார்களாம்.

இதே போன்று, திருச்சி புத்தூரிலிருந்து ஒரு தலித் அர்ச்சகர் சந்திக்கும் ஜாதிக் கொடுமைகள் குறித்து ஒரு செய்தி வந்துள்ளது.

தமிழ்நாடு அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்த கே.சிவசங்கரன் (34) திருச்சி புத்தூரில் உள்ள அம்மன் கோயிலில் அர்ச்சகராக இந்து அறநிலையத் துறையால் 2016ஆம் ஆண்டு தற்காலிகமாக நியமிக்கப் பட்டார். இரு பிரிவினருக்கு இடையே தகராறு காரணமாக 20 ஆண்டுகாலமாக பூட்டப்பட்டுக் கிடந்த அந்தக் கோயிலுக்கு சிவசங்கரன் அர்ச்சகராகப்பட்ட வுடன் உள்ளூர் பெரியவர்கள் நண்பர்கள் உதவியுடன் நன்கொடை திரட்டி கோயிலைப் புதுப்பித்து வழிபாடுகளையும் நடத்தி வந்தார். திருச்சி அருகே உள்ள காயாமாணிக்கம் அவரது சொந்த கிராமம். 94 வயதுடைய அர்ச்சகர் தந்தை மரணத்துக்கு புத்தூர் பக்தர்கள் வந்தபோது சிவசங்கரன் ‘தலித்’ என்பதை அறிந்தனர். அதற்குப் பிறகு உள்ளூர் ஜாதி சமூகம் அவமானப் படுத்தி புறக்கணிக்கத் தொடங்கி விட்டது. பூட்டிக் கிடந்த கோயிலை தனது சொந்த முயற்சி யால் சீர்திருத்தி புதுப்பித்ததைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ‘ஜாதி’ வெறி - இவரைப் புறக்கணிப்பது குறித்து உள்ளம் குமுறுகிறார் சிவசங்கரன்.

“காலங்காலமாக திணிக்கப் பட்ட ஜாதியப் பாகுபாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இறைப் பணியாற்ற வந்தேன். தற்காலிக மாகமாவது ஒரு அரசுப் பணி கிடைத்த மகிழ்ச்சியில் இருந் தேன். இப்போது காலம்கால மாகப் பின்பற்றப்பட்டு வரும் ஜாதிய சிந்தனையிலிருந்து விடுபட மறுக்கிறவர்கள் என்னை ஒதுக்குகிறார்கள்” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடுக்கு (ஆக. 4, 2018) அளித்தப் பேட்டியில் கூறி யுள்ளார். தமிழ்நாட்டில் கிராமங் கள் இன்றும் ஜாதி வெறியர் களின் கோரப் பிடிகளில் சிக்கி யிருப்பதற்கு இந்த சம்பவங்கள் சான்றுகளாக நிற்கின்றன.

ஜாதியைக் காப்பாற்றிக் கொண்டே தமிழர் பெருமையை எத்தனை காலத்துக்குப் பேசிக் கொண்டிருக்கப் போகிறோம்?

Pin It