அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு பேசிய சீமான், “பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர் வழியில் காங்கிரசை ஒழிக்க வேண்டும்.'' என்று இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். ஏற்கனவே, பெரியாரையும், முத்துராமலிங்கத்தையும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவர்கள் என்ற ஒரே நேர்கோட்டில் இணைத்து மிகப்பெரிய பிழை செய்தார். இப்போது, அம்பேத்கரை, முத்துராமலிங்கத்தோடு இணைத்ததோடு மட்டுமில்லாமல், முத்துராமலிங்கத்தைக் காங்கிரஸ் ஒழிப்பு வீரர் என்று பட்டம் கொடுத்து மகிழ்கிறார் சீமான்.

காங்கிரசு ஒழிப்பும்பெரியார் அம்பேத்கர் உழைப்பும்:

காந்தி உயிருடன் இருக்கும்போதே, காந்தி ஒழியவேண்டும், காங்கிரசு ஒழியவேண்டும் என்று திண்ணமாக சொன்னவர் தந்தை பெரியார். காந்தி இருக்கும் வரை (காந்தியம் இருக்கும் வரை) இந்தியா ஒழியாது. இந்தியா இருக்கும் “இந்து'' மதம் ஒழியாது. “இந்து'' மதம் இருக்கும்வரை “சாதி'' ஒழியாது. ஆகவே, காங்கிரசு ஒழிய வேண்டும் என்று பெரியார் போராடினார். இதே நோக்கத்திற்காகத்தான் காங்கிரசு ஒழிய வேண்டும் என்று அம்பேத்கரும் அறிவுறுத்தினார். ஆனால், நமது சீமானோ, முத்துராமலிங்கத்தின் வழியில் காங்கிரசு ஒழிய வேண்டும் என்கிறார். காங்கிரசு ஒழிய வேண்டும் என்று சனாதனவாதிகளின் விருப்பத்திற்கும், பெரியார் அம்பேத்கரின் நோக்கத்திற்கும் உள்ள பாரிய வேறுபாட்டினைச் சீமான் உணரவில்லை என்பதையே அவரது பேச்சு நமக்கு காட்டுகிறது.

முத்துராமலிங்கமும், காங்கிரசு ஒழிப்பும்:

முத்துராமலிங்கம் தமிழகத்தின் ஆரம்பகால காங்கிரசுத் தலைவர்களில் ஒருவர். காங்கிரசின் தேசியக் கொள்கையை தெய்வீகத்துடன் தொடர்புபடுத்தி அரசியல் நடத்தியவர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தோற்றுவித்த “கோல்வால்கரை'' வைத்துத் தமிழகத்தில் பொதுக்கூட்டம் நடத்திய பெருமை தமிழகத்தில் முத்துராமலிங்கத்தையே சேரும். காங்கிரசின் இந்திய வல்லாதிக்கத்தையும், "இந்து' பாசிச சிந்தனையையும் கொள்கையாகக் கொண்டவர் தான். பிறந்த “மறவர்'' சமூகத்தைப் பார்ப்பனர்களின் அடியாட்களாக மாற்றுவதைத் தன் வாழ்நாள் பணியாக கொண்டவர். பஞ்சமர்களுக்கும் நாடார்களுக்கும் எதிரான கருத்தியலை “மறவர்'' சமூகத்திடம் விதைத்துவிட்டு சென்றவர் முத்துராமலிங்கம். பார்ப்பன விசுவாசியான முத்துராமலிங்கம் ஊட்டி வளர்த்த சாதிய உணர்வு இன்றும் தென்மாவட்டங்களில் பரமக்குடி படுகொலைகளாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சரி, முத்துராமலிங்கத்தின் கொள்கைக்கும், காங்கிரசின் கொள்கைக்கும் என்ன பிணக்கு? எதனால் காங்கிசிலிருந்து அவர் விலகினார்?

முத்துராமலிங்கத்தை விட வயதில் குறைந்தவரும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய வரும் ஆகிய காமராசர் சாங்கிரசில் செல்வாக்குப் பெறத் தொடங்கினார். தான் பார்த்து வளர்ந்தவரும் தன்னைப் பார்த்தால் கைகட்டி நிற்கும் சமூகத்தைச் சேர்ந்தவருமாகிய காமராசர் நாடாளுமன்றத்தில் தனக்கு அருகில் சமஉரிமையுடன் உட்கார்ந்து பேசுவதை முத்துராமலிங்கத்தால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. “சாணான்'' சமூகத்தைச் சேர்ந்த ஒருவன், என் பக்கத்தில் உட்கார்ந்து, சரிசமமான மரியாதையை பெறுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை.'' என்று காங்கிரசிலிருந்து தான் விலகியதற்கு முத்துராமலிங்கம் காரணம் கூறுகிறார். இப்பொழுது புரிகிறதா? முத்துராமலிங்கம் ஏன் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று போராடினார் என்று! முத்துராமலிங்கத்தின் இந்த நோக்கத்திற்காகத்தான் நமது சீமானும் காங்கிரசை ஒழிக்கப் பாடுபடுகிறாரா? (அல்லது) தமிழ்த்தேசிய உணர்வோடு காங்கிரசை ஒழிக்கப்போகிறரா என்பதை நமக்குச் சீமான் தெளிவுபடுத்த வேண்டும். முதலில் அவர் தெளிவுபெற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம் முத்துராமலிங்கம் மட்டுமில்லாமல், பல “இந்துத்துவ'' சக்திகள் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். சாவர்க்கர், இராசாசி, நாதுராம் கோட்சேவில் தொடங்கி பால்தாக்கரே, சோ, சுப்பிரமணியசுவாமி போன்ற இந்துத்துவ சக்திகளும் காங்கிரசை ஒழிக்கத்தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் அரும்பணியைச் சீமான் எப்படி மறந்தார்? ஒருவேளை மறந்து விடுபட்ட பெயர்களோ?

தேர்தல் அரசியலும், முத்துராமலிங்கத்தின் அடையாளமும்: 

1925 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தை அழிப்பதற்காகப் பார்ப்பன இராசாசிக்குப் பார்ப்பனரல்லாத சமூகத்தைச் சேர்ந்த இருவர் உதவினர். அந்த இருவரில் ஒருவர் முத்துராமலிங்கம் மற்றொருவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ம.பொ.சி. (நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்) அதே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த காமராசரின் தலைவராகப் பெரியார் விளங்கினார். பெரியாரின் “தமிழர் தலைவர்'' என்கிற அடையாளத்தை ஒழிக்கவே, “மா.பொ.சி.''யைத் தமிழர் தலைவராகவும், சிலம்பு செல்வராகவும் அங்கீகாரம் கொடுத்து வளர்த்தெடுத்தர். இராசாசி மா.பொ.சி.யை வளர்த்ததன் மூலம் தனது அரசியல் எதிரியான காமராசரையும் உடைத்துவிடலாம் என்று இராசாசி கனவு கண்டார். அதேபோல், தென்மாவட்டங்களில் “திராவிட இயக்க அரசியலை'' ஒழித்துக்கட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் அவருக்குக் கருவியாகப் பயன்பட்டார். சூத்திரப் பட்டத்தைச் சூத்திரர்களைக் கொண்டே பெருமையாக சுமக்க வைத்தவர் பார்ப்பன சூத்திரதாரி “இராசாசி'' என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அண்ணாவை “வேசிமகன்'' என்று ஏசியதும், காமராசரை “சாதி''யைச் சொல்லித் திட்டியதும் தான் தேவரின் கொள்கை. அப்படிப்பட்ட தேவரைத்தான் ம.தி.மு.க. முதல் அனைத்துத் திராவிட இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்களும், காங்கிரசும், பாரதீய சனதாவும் தேர்தல் அரசியலுக்காகத் தூக்கிப்பிடிக்கின்றன. இப்போது, நமது சீமானும் அதே நோக்கத்திற்காகத்தான் “தேவரை''த் தூக்கிப் பிடிக்கிறார். ஏனென்றால், அப்போதுதான் தென்மாவட்டங்களிலுள்ள முக்குலத்தோர் வாக்குகளைப் பெறமுடியும்.

சுப்ரமணியசுவாமியும், முத்துராமலிங்கத் தேவரும்

முக்குலத்தோர் சமூகத்தில் பிறந்த சமூகச் சிந்தனையாளர்கள் பலர் இருக்கின்றனர். மருதுபாண்டியர், (விடுதலை போராட்ட உணர்வுப் பெற்றவர்) பாண்டித்துரைத் தேவர் (நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர்), இராமச்சந்திர சேர்வை (இராமநாதபுரத்தில் ஆதிதிராவிட மாநாட்டை நடத்தியவர்), தினகரன்: (முதுகுளத்தூர் கலவரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்காகத் தன் உயிரை நீத்தவர்)

மேற்கண்ட நால்வரும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஆனால், சுயசாதி உணர்வின்றி, ஒரு மாற்றத்தை சிந்தித்தவர்கள் என்பது வரலாறு. ஆனால் இவர்கள் படத்தைக் காண்பித்து தேர்தல் அரசியலில் யாரும் வாக்குக் கேட்பதில்லை. பார்ப்பனிய ஆதரவாளரான முத்துராமலிங்கத்தைதான் அரசியலின் குறியீடாக அனைத்து அரசியல் கட்சிகளும் உருவகப்படுத்துகின்றன. பார்ப்பன சுப்ரமணியசுவாமியும், முத்துராமலிங்கத்தைத் தனது தலைவராகப் பிரகடனப்படுத்துகிறார். காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டும் வருகிறார். முத்துராமலிங்கம், சுப்பிரமணியசுவாமி இருவரும் இந்துத்துவ சக்திகள். ஏக இந்தியாவைக் கட்டமைக்கும் நோக்கம் உடையவர்கள். இருவருக்குமே காங்கிரசு பொது எதிரி. எனவே சீமான் முத்துராமலிங்கத் தேவர் வழியில் காங்கிரசை ஒழிப்பதும் ஒன்றுதான், சுப்ரமணியசுவாமி வழியில் காங்கிரசை ஒழிப்பதும் ஒன்றுதான். எனவே, இக்கட்டுரைக்கு இப்படியொரு தலைப்பு வைக்கநேரிட்டது.

வென்று எடுக்கப்பட வேண்டிய தமிழ்த் தேசியம்:

சீமான் அவர்களின் காங்கிரசை ஒழிக்கப்பட வேண்டும் என்கிற எண்ணத்தை நிறைவேற்ற வேண்டியது இன உணர்வு கொண்ட ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். அதற்கு நாம் தமிழ்த்தேசிய சக்திகளை இணைத்துப் போராட வேண்டும். மாறாக, இந்துத்துவ சக்திகளை இணைத்துக் கொள்ளக் கூடாது. மேலும், தமிழ்த்தேசிய அரசியலில் முத்துராமலிங்கத்தை தலைவராக அடையாளப்படுத்தும் போக்கு வருங்கால அரசியலுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். வடதமிழகத்தில் பெரும்பான்மையான இளைஞர்களுக்கு அறிமுகமே ஆகாத முத்துராமலிங்கத்தை 'தமிழ்த் தேசிய சக்தி'யாக உருவகப்படுத்தும் வேலையை 'சீமான்' இனிமேலும் தொடர் வேண்டாம். இது தொடரும்பட்சத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் எதிரான அரசியல் வடிவமாக தமிழ்த்தேசியம் உருப்பெறும். ஆகவே, பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு சாதி ஒழிந்த தமிழ் தேசம் அமைக்கப் போகிறோமா? அல்லது, முத்துராமலிங்கம் வழியில் சாதி உணர்வு கொண்ட இந்துப் பாசிசமா? எது நமக்குத் தேவை என்பதைச் சீமான் உணர வேண்டும்.