ஜசியா வரியைப் பற்றி நமது பார்ப்பன ஆதிக்கக் கல்வி முறை தவறான கருத்தை மக்களிடையே பரப்பி வைத்து இருக்கிறது. அதன் சுருக்கம் இது தான். இந்துக்களைக் கொடுமைப்படுத்துவதற்கு என்றே பாபர் இந்துக்கள் மீது ஜசியா வரி எனும் வரியை விதித்தார். இவ்வரி இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். இஸ்லாமியர்கள் இவ்வரியைச் செலுத்தத் தேவை இல்லை. அவருக்குப் பின் வந்த அக்பர் இக்கொடுமையைக் களைய ஜசியா வரியை நீக்கினார். ஆனால் அவுரங்கசீப் தன் மூன்று சகோதரர்களைக் கொன்று, தன் தந்தையைச் சிறைப் படுத்தி ஆட்சியில் அமர்ந்த பின், இவ்வரியை மீண்டும் விதித்தார். ஏனெனில் அவரங்கசீப் சகிப்புத்தன்மை இல்லாத ஒரு இஸ்லாமிய மதவாதி. இது போன்ற கருத்தை மதவாதிகள் மட்டும் அல்லாமல் அரசின் கல்வித் துறையே பரப்புவது வேதனைக்கு உரியது. ஆனால் உண்மை என்ன?

பாபர் முதன் முதலாக முகலாய அரசை நிறுவியபோது, ஆட்சியை நடத்துவதற்காக மக்களிடம் இருந்து வரி வசூல் செய்யும் திட்டத்தை வகுத்தார். இஸ்லாமிய மதச் சட்டத்தின் படியே வரிகளை விதிக்க அமைச்சர்கள் ஆலோசனை கூறிய போது பாபர் அதை மறுத்தார். இஸ்லாமிய மக்களிடம் இஸ்லாமியச் சட்டப்படி வரி வசூலிக்கலாம் என்றும், இந்துக்கள் மீது இஸ்லாமியச் சட்டங்களைத் திணிப்பது முறையல்ல என்றும், வேறு வழிகளைக் காணும் படியும் அவர் கூறினார். இதன்படி தோன்றியது தான் ஜசியா வரி. அதாவது ஜசியா வரி என்பது இந்துக்களைக் கொடுமைப்படுத்த அல்ல; மாறாக இந்துக்களுக்கு மதச் சுதந்திரம் அளிக்கும் வகையில் தான் ஜசியா வரி விதிக்கப்பட்டது.

இவ்வரி அவருடைய மகன் ஹுமாயூன் காலத்திலும் தொடர்ந்து அக்பரின் காலத்திலும் இருந்தது. அக்பர் பல பழக்க வழக்கங்களில் பலவீனமானவர். குறிப்பாகப் பெண்கள் விஷயத்தில் மிகவும் பலவீனமானவர். இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். இந்த மண்ணில் ஆரியர்கள் புகுந்து நிலைபெற்ற காலத்தில் இருந்து அதிகார மையங்களில் பார்ப்பனர்களே நிரம்பி வழிகின்றனர். அது முஸ்லீம்கள் ஆட்சியாக இருந்தாலும் சரி; வெள்ளைக்காரர்கள் ஆட்சியாக இருந்தாலும் சரி. ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இணைப்பாய் இருந்து அதிகாரம் செய்து ஆட்டிப் படைத்தவர்கள் பார்ப்பனர்களே.

இவ்வாறு அதிகார மையங்களில் இருந்த பார்ப்பனர்கள் அக்பரின் பலவீனங்களைப் பயன் படுத்திக் கெண்டு, தங்களுக்குச் சாதகமாகப் பல திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டனர். அவ்விதம் நிறைவேற்றிக் கொண்ட ஒரு திட்டம் தான் ஜசியா வரி நீக்கம். அவருக்குப் பின் வந்த ஜஹாங்கிரும், ஷாஜஹானும் கேளிக்கை களிலும் பொறுப்பற்றும் காலம் கழித்தனர். அவர்கள் ஜசியா வரி பற்றியோ, அதன் நீக்கம் பற்றியோ தெரிந்து கொள்ளவே இல்லை. இந்நிலையில் ஷாஜஹானின் களியாட்டங்கள் எல்லை மீறிக் கொண்டு போவது குறித்து அவருடைய மகன்களில் ஒருவரான அவுரங்கசீப் மிகவும் கவலை கெண்டார். இதைப் பற்றித் தன் சகோதரர்களிடம் பேசினார். தந்தையை ஆட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு, மூத்த சகோதரனின் தலைமையில் நல்லாட்சி நடத்த வேண்டும் என்றும் கூறினார். ஆனால் மற்ற மூன்று சகோதரர்களும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அது மட்டும் அல்ல. அவுரங்கசீப்பைத் தந்தையிடம் காட்டிக் கொடுக்கவும் முனைந்தனர். இதனால் வெகுண்டு எழுந்த அவுரங்கசீப் தன் மூன்று சகோதரர்களையும் கொன்றுவிட்டுத் தன் தந்தையைச் சிறை வைத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின் ஆய்வு செய்த போது முஸ்லீம்கள் மட்டுமே வரி கட்டுவதையும், இந்துக்கள் வரி கட்டாமல் இருப்பதையும் கவனித்தார். அதைச் சரி செய்யும் பொருட்டே இந்துக்கள் மீது ஜசியா வரியை மீண்டும் விதித்தார்.

அவுரங்கசீப் மதச் சகிப்புத் தன்மையே இல்லாத மத வெறியர் என்றும், இந்துக்களைப் பலவிதங்களில் கொடுமைப்படுத்தினார் என்றும் அவர் மீது இன்னொரு அபாண்டமான குற்றச்சாட்டும் உண்டு. ஆனால் அவரு டைய படைப் பிரிவில் முக்கியத் தளபதியாக இருந்தவர் ஜெய்சிங் என்ற இந்துதான். இவருக்குக் கீழ் தான் முஸ்லீம் தளபதிகள் இருந்தனர். அவருக்குக் கீழ் இருந்த அப்ஸல்கான் செயிஸ்டகான் ஆகிய தளபதிகள் சிவாஜி யைப் பிடிக்கப் போய்த் தோல்வி அடைந்த பின், ஜெய்சிங்தான் சிவாஜியைச் சிறை பிடித்து வந்தார். அவுரங்கசீப் இந்துக்களைச் சகிப்புத் தன்மை இல்லாமல் நடத்தி இருந்தார் என்றால், ஒரு இந்துவை மேல்நிலைத் தளபதியாகவும், முஸ்லீம் தளபதிகளை அவருக்குக் கீழும் வைத்துக் கொண்டு இருந்திருப்பாரா? மேலும் அவர் இந்துக்களை எதிரிகளாகவே நினைத்து இருந்தால் ஒரு இந்துத் தளபதி சிவாஜியைச் சிறைப் பிடித்து அவரிடம் ஒப்படைத்து இருப்பாரா?

அது மட்டும் அல்ல. தமிழ் நாட்டில் இருந்து சென்ற, சைவ சித்தாந்த ஞானியான குமரகுருபரருக்கு மடம் கட்டக் காசியில் இடம் அளித்து இருப்பாரா? காசியில் அவுரங்கசீப் அளித்த அந்த இடத்தில் குமரகுருபரர் கட்டிய மடம் இன்றும் இயங்கிக் கொண்டு இருக்கிறதே?

Pin It