1990ஆம் ஆண்டாக இருக்கலாம்.  மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் மேற்குச் சாலை பிளாட்பாரம் நெடுக ஆங்காங்கே பழைய புத்தகக்  கடைகள் விரிக்கப்பட்டிருக்கும்.  நேதாஜி சிலைக்கு அருகில் உள்ள தெற்கு சந்தில் நிறைய பழைய புத்தகக் கடைகள் இன்றும் உள்ளன.  இங்கு புத்தகங்கள் வாங்கும் பழக்கம் ஏற்பட்டது.  படிக்கும் காலத்தில் நல்ல புத்தகங்கள் பாதி விலைக்குக் கிடைப்பதும் வாங்குவதும் சந்தோசம் தரக்கூடியதாக இருந்தது.  அவ்விதம் வாங்கப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பு நூலில் ஆர்.சூடாமணி கதையும் இருந்தது.  இலக்கிய சிந்தனை அமைப்பு வெளியிடும் வருடத்தின் சிறந்த சிறுகதைத் தொகுப்பு அது.  கணவனை இழந்த பெண் தன் எட்டு வயது மகனிடம், கணவரின் நண்பரான ‘அங்கிளை’ திருமணம் செய்து கொள்ளட்டுமா என்று தன் விருப்பத்தைக் கூறுகிறாள். 

அம்மா தனக்கே சொந்தம் என்று விரும்புகிற பேதைப் பருவத்திற்குரிய பையன் மறுக்கிறான்.  தாயும் பின் திருமணத்தைத் தவிர்த்து விடுகிறாள்.  அம்மா நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் கிடக்கும் போது மகனுக்குப் பழைய நினைவுகள் வருகின்றன.  தவறு செய்துவிட்டதாக உணர்கிற அம்மாவின் கனவுகள், விருப்பங்கள் தன்னால் அழித்தொழிக்கப்பட்டதற்காக வருந்து கிறான்.  அவன் விரும்பிய அந்த அப்பாவின் நண்பர் இந்த தருணத்தில் அம்மாவைச் சந்தித்தால் ஆறுதலாக இருக்கும் என்று நினைத்து அவருக்குச் செய்தியைச் சொல்கிறான்.  இரண்டொரு நாள் கழித்து அவரும் வருகிறார்.  அம்மா முன் அமர்கிறார்.  இது இந்த உறவை மிக நுட்பமாக உள்ளத்தின் தத்தளிப்போடு மகனின் பார்வையில் ஆர்.சூடாமணி எழுதியிருந்தார்.  இக்கதைக் கரு வித்தியாசமாகவும் புதிய உலகத் தையும் சொல்வதாகவும் இருந்தது.  என்னை அக் கதை பாதித்தது.

இதே கதையை மையமாக வைத்துப் பெண்ணை ஆணாக்கி பையனை மகளாக்கி ‘கேளடி கண்மணி’ படத்தை வஸந்த் எடுத்தார்.  எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.  படத்தைப் பார்த்ததும் ஆர்.சூடாமணி ஏமாற்றியிருப்பதாக நினைத்தேன்.  இந்தக் கதையின் தலைப்பு மறந்துவிட்டது.  ஆர்.சூடாமணியின் மறைவைக் கேள்விப்பட்டதும் அவரின் கதைகளைப் புரட்டிப் பார்க்கத் தோன்றியது.  அவரின் முழுமை யான தொகுப்பு ஒன்று கூட என்னிடம் இல்லை.  ஆனால் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்புகளில் - கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் ஆர்.சூடாமணியின் கதைகள் இருக்கின்றன.  ஆச்சர்யம்.  எல்லாத் தொகுப்புக் கதைகளிலும் வேறு வேறு கதைகள் இருக்கின்றன.  இரண்டு முறை இருக்கும் கதைகள் இல்லை.  மேற்சொன்ன கதை 1988 ஆம் ஆண்டுக் கான இலக்கிய சிந்தனை வெளியிட்ட ‘இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்’ தொகுப்பு நூலில் இருந்த என்னிடம் இருந்த தமிழ்ச் சிறுகதைத் தொகுப்புகளில் உடனடியாகப் பதின்மூன்று சிறு கதைகள் இருந்தன.  என் புத்தக அடுக்குகளை நுழைந்து புரட்டினால் இன்னும் நான்கைந்து கதைகள் இருக்கும் என்றே நினைக்கிறேன்.  பல்வேறு கதைத் தொகுப்புகளின் வழியாக சூடாமணியை நல்ல படைப்பாளியாக அறிந்திருந்தேன். 

நிகழ்காலப் பிரச்சினைகளைத் தனது சிறுகதை களுக்குக் களனாக்கிக் கொண்டவர்.  பிற சக தமிழ்ப் பெண் எழுத்தாளர்களிடமிருந்து சூடாமணி வேறு படும் இடம் முக்கியமானது.  ஜனரஞ்சக இதழ்களில் வெளிப்பட்ட பெண் எழுத்துக்கள் பெரும்பாலும் பிரச்சினைக்கு முற்போக்குச் சிந்தனையைத் தீர்வாக வைக்கிற தன்மை இருப்பதைக் காணலாம்.  இது ஜெயகாந்தனின் பாதிப்பால் விளைந்த விளைவு என்று சொன்னால் தவறில்லை.  ஆர்.சூடாமணி தன் கதைகளில் மனிதர்கள் எவ்விதம் பிற்போக்கானவர்களாக இருக்கிறார்கள் என்று காண்பதில் பயணப் படுகிறார்.  அதே சமயம் மகத்துவமான தருணங் களை நோக்கிப் பாய்வதற்கும் விருப்பமான கதைக் காரராகவும் இருக்கிறார்.  வாழ்வின் பல்வேறு பிரச்சினைகளில் மனிதமனம்படும் தத்தளிப்பு களை மிகையில்லாமல் மீட்டெடுத்து இலக்கிய ரூபமாக்கியவர் சூடாமணி.  ஏமாற்றங்களையும் சுயநலபோதைகளையும், மற்றவர் உள்ளத்தைப் புரிந்துகொள்ளாத மானிடர்களையும் குடும்பம், பெண்களைச் சூழ்நிலைக் கைதிகளாக்கி நசுக்கு வதையும், காலமாற்றம் கொண்டுவரும் சிந்தனை களால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளையும் பகிர்ந்துகொள்ளாத மனப்போக்குகளையும் பெண்களைத் தங்களுக்குச் சாதகமான பகடைக் காய்களாக உருட்டுவதையும் மிக அமைதியான ஆழ்ந்த பார்வையில் கதைகளாக்கி இருக்கிற கதைகளை ஒரு அனுபவமாக உருமாற்றுவது என்பது சாகசமான ஒரு கலை.  அதனை ஆர்.சூடாமணி வெற்றிகரமாகச் செய்திருக்கிறார். 

அனுபவத்தின் முதிர்வினால் விளையும் பண்புகளைத் தேர்ந்த சொற்களால் எளிய விதத்தில் சரியான இடத்தில் சரியான தொனியில் எழுதிவிடுகிறார்.  அகத்தின் கோணம் கதாமாந்தர்களின் தன்மைக்கேற்ப உருவாகி வருவதை இவரின் படைப்பியக்க பலம் என்று சொல்லலாம்.  காலத்தின் கதியில் தோன்றும் மோதல்களை இவர் கதைகளாக்கியிருப்பதிலிருந்து தமிழ்ச் சமூகத்தின் 50 ஆண்டுக்கால அசைவியக்கத்தைக் காண முடியும்.  இவ்விதமாகக் குடும்பத்தில் நிகழ்ந்த மோதல்களை, மாற்றங்களை அபூர்வமாக மனிதர்களிடம் தோன்றும் புரிதல் ஆர்.சூடாமணி தன் கதைகளில் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்.  அனுபவம் திரண்டு சிந்தனைத் தெறிப்பாக மொழியில் விழுவதையும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.  ஆண் பெண் - குழந்தை மாந்தர் களைச் சமநிலையோடு அணுகிய பெண் படைப் பாளி இவர்.  ஜனரஞ்சக இதழ்களில் செய்திக் கதைத் தன்மையிலிருந்து விலகி ஓரளவு படைப் பூக்கத்தை மதித்த கதைக்காரர்.

கதை உருவாக்கத்தில் சில பலவீனங்களால் படைப்பு என்ற எல்லைக்குத் தாண்டாமல் கதை என்ற எல்லையில் நின்று விடுகின்றன.  சரி செய்யக் கூடிய பலவீனங்கள்தான்.  ஆனால் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமலே இருந்திருக்கிறார்.  ‘இந்தச் சூழலில் இந்தச் சந்திப்பு நிகழுமா?’ என்று வாசகன் கண்டு சந்தர்ப்பத்தில், பண்பாட்டுச் சூழலில் வைத்து எழுதியிருக்க வேண்டும் என்று என்னைப் போன்ற வாசகர்களுக்கு உடனடியாகத் தெரியவரும்.  இந்தக் கவனக் குறைவு படைப்பின் நம்பகத் தன்மையைக் கெடுத்து அதனுடைய வீரியத்தை - ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைத்துவிடுகிறது.  சூடாமணியின் ஆகச் சிறந்த கதையான ‘நான்காம் ஆசிரமம்’ கதையிலேயே இந்தக் குறைபாடு இருப்பதைக் காணலாம்.

நம் வாழ்வில் காணும் முரண்களை எடுத்துக் கொண்டு கதைகளை அனுபவங்களாக மாற்றிக் காட்டிய படைப்பாளி ஆர்.சூடாமணி.  பலருக்குக் கைவராத இந்தப் படைப்பாளுமை அவரிடம் இருந்தது.  என்றாலும் சிறுகதைகளில் அவர் மகத்தான சாதனைகள் எதையும் செய்துவிட வில்லை.  வடிவரீதியிலான பரிசோதனை என்ற அம்சத்தில் சொல்லவில்லை.  எளிய வெளிப்பாட்டு உத்தியிலேயே நிகழவில்லை.  ஆர்.சூடாமணி நல்ல கதைகள் எழுதியவர் என்று எந்த இடத்திலும் தயங்காமல் கூறலாம்.  ‘விடிவை நோக்கி’, ‘நான்காம் ஆசிரமம்’, ‘டாக்டரம்மாவின் அறை’, ‘அந்நியர்கள்’, ‘ரோஜா’, ‘இரவுச்சுடர்’, ‘பதியன்’, ‘தேவகியைத் தேடி’, ‘இறுக மூடிய கதவுகள்’, ‘வீம்பு’, ‘ரயில்’, ‘நடன விநாயகர்’, ‘சாம்பலுக்குள்’, ‘புவனாவும் வியாழக் கிரகமும்’, ‘நாகலிங்க மரம்’, ‘நீலரிப்பனும் வானவில்லும்’, ‘குப்பம்மாவின் பெண்கள்’ போன்ற கதைகளை வாசகர்கள் படிக்க வேண்டும்.  அவரின் படைப்பாற்றலுக்கு மதிப்பைக் கூட்டுபவை.

ஆர்.சூடாமணியின் முகம் எப்படி இருக்கும் என்று பிற எழுத்தாளர்களின் புகைப்படங்களோடு வந்திருக்கும் தொகுப்புகளில் பலமுறை தேடியிருக் கிறேன்.  புகைப்படம் இல்லாமல் முகவரி மட்டுமே இருக்கும்.  ஒரு வாசகனுக்குப் படைப்பு மட்டும் முக்கிய மல்ல.  படைப்பாளியின் உருவும்தான்.  சூடாமணியின் புகைப்படம் இல்லாதது ஏமாற்றத்தைத் தந்த ஒன்று.  எழுத்தாளரான ருக்மணி பார்த்தசாரதி ஆர்.சூடாமணியின் தங்கை.  புகைப்படத்தில் அழகாக இருப்பார்.  75ஆம் வயதில் மறைந்தார்.  அந்த முகத்தோடு சூடாமணியை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டதுண்டு.  கிட்டத்தட்ட அது உண்மை தான். 

சூடாமணியின் மறைவை ஒட்டி வந்திருக்கும் இளம்பருவத்துப் புகைப்படம் ரொம்ப அழகாக இருக்கிறது.  79ஆம் வயதில் மரணமடைந்த சூடா மணியைச் சந்திக்கவில்லையே என்ற வருத்தம் இப்போது எனக்கு.  அப்படியெல்லாம் சக படைப் பாளிகளைத் தேடிச் சென்று பார்க்கும்படியாக வாழ்க்கை அமைந்திருக்கிறது.  சிறுவயதில் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட சூடாமணி தன் முகத்தை வெளியுலகிற்கு இல்லாததாக்கிக் கொண்டார்.  அம்மை நோயின் தாக்குதலில் போலி தாக்குதலுக்கு உள்ளானவர் என்ற செய்தியும் உண்டு.  களங்க மில்லாத அந்த இளம்பருவத்து முகத்தில் இந்த மரணத்தின் மூலம் பார்க்கக் கிடைத்தது அதிர்ஷ்டம் என்று எப்படிச் சொல்வது?

Pin It