தலையில் புத்தகம் சுமந்து விற்றவர் என்ற தலைப்புடன், தாமரை இதழில் ஒரு அட்டைப் படம் வெளியிடப்பட்டது. தாமரை, அட்டைப் படத்தில் வெளியிடப்பட்டுள்ள அவர், இதைப் பார்த்தவுடனேயே, ஒரு விதமான கூச்ச உணர்வைப் பெற்றிருப்பார். நம்மை ஏன் இவர்கள் இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டும் என்று அவர் யோசித் திருக்கக்கூடும். இத்தகைய உணர்வுகளை இயல்பாகப் பெற்றவர்களை மிகவும் அபூர்வமாகத்தான் இன்றைய காலத்தில் பார்க்க முடியும்.

விளம்பரத்தை மையப்படுத்திய காலத்தில் நமது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. பொருட் களை விளம்பரப்படுத்தி, விற்பதில் மட்டுமல்லாது, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதிலும் ஒவ்வொரு மனிதனுக்கும் கூடுதல் ஆர்வம் மிகுந்து வருகின்ற காலம். தன்னைத்தானே புகழ்ந்து கொள்ள, கட் அவுட்டுகளுக்கும், போஸ்டர் களுக்கும் பெரும் செலவு செய்வது, அரசியல் முதல் அனைத்திலும் அடிப்படை விதியாக அமைந்து விட்டது. இந்தப் பின்னணியில் தான் அட்டையில் வெளியிடப்பட்டுள்ள தோழர் இராதாகிருஷ்ண மூர்த்தியைப் போன்றவர்கள் மிகவும் அபூர்வமாகத் தெரிகிறார்கள். நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவரது வாழ்க்கை இன்றைய சமூகம் ஆராய்ந்து பார்க்கத்தக்க சிறப்புகளைக் கொண்டுள்ளது.

ஆரம்பகால, கம்யூனிஸ்டுகளிடம் தன்னல மறுப்பு, அர்ப்பணிப்பு, இலட்சியப் பிடிப்பு ஆகியவை கூடுதலாக இருந்ததாகவே தெரிகிறது. கட்சி தலைமையகங்களில் அன்று கம்யூன் என்ற கூட்டு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். இது லட்சிய வாழ்வுக்கான பயிற்றுவிப்பு. மிகப் பெரிய பொருளாதாரப் பின்னணியில் பிறந்த மோகன் குமாரமங்கலம், பார்வதி கிருஷ்ணன் போன்றவர் களும், மிகச்சாதாரணப் பின்னணியில் தோன்றிய தோழர்களும் ஒரே இடத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். தன்னலமறுப்பிற்கான கூட்டு வாழ்க்கையின் பயிற்சி இது. இந்திய சமூகத்திலே, பௌத்த சங்கத்தில்தான் இப்படிப்பட்ட கூட்டு வாழ்க்கைக்கான முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.

அர்ப்பணிப்பு மிக்க அன்றைய வாழ்க்கையி லிருந்து தோன்றிய  சில அபூர்வங்களை இன்றும் நம்மால் பார்க்க முடிகிறது. தோழர் சி.சுப்பிரமணியம் அவர்கள் தொண்ணூறு வயதைக் கடந்து விட்டார். பிரிட்டிஷ் இந்தியாவின் மிக உயர்ந்த பொறுப்பான ஐ.சி.எஸ். படிப்பிற்காக லண்டன் சென்றவர். வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தியடிகள் லண்டன் சென்றபோது, அவரை அங்கு வரவேற்க இவரும் மாணவராக சென்றிருக்கிறார். கல்வியை இடை நிறுத்தம் செய்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியை அமைப் பதற்கு, தமிழகம் திரும்பி தன்னை முழுநேர ஊழியராக அறிவித்துக்கொண்டிருக்கிறார். எட்டாண்டுகளுக்கு முன் ஒரு நாள், இவரைப் புகைப் படம் எடுப்பதற்கு அனுமதிகோரினோம்.  தியாகம் செய்வது விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அல்ல, என்று உறுதியுடன் மறுத்துவிட்டார். அடுத்த தலைமுறைக்கு முன்னுதாரணங்கள் காட்ட வேண்டாமா? என்றோம். ஆனால் அவர் உறுதியை யாராலும் மாற்ற முடியவில்லை.

தோழர் சி.எஸ். வழித் தடத்தில் நடந்து வருபவர்களில் தோழர் ராதாகிருஷ்ணமூர்த்தியும் ஒருவர், தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை சம்பந்தப் பட்டவர்கள் நேர்மையுடன் சுயபரிசோதனை செய்து கொள்ளும் ஆழ்மனம் சார்ந்தவை. இதன் மூலம் மட்டுமே ஒருவர் மனநிறைவைப் பெற முடியும். புற உலகின் ஆரவாரங்கள், கைதட்டல்களில் ஏக்கம் கொண்டு திரிவதும் மானுடத்தின் லட்சிய பயணம் சார்ந்தது அல்ல, என்பதில் தெளிவைக் கொண்டு அன்றைய பாரம்பரியத்தைச் சார்ந்தவர். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் எத்தனையோ புகழ் மிக்க மேடையில் மிகமிக அரியதாகவே பார்க்க முடியும். பெரும்பாலும் பார்வையாளர் பகுதியில் கடைசியில்தான் இவர் அமர்ந்திருப்பார்.

ராதாகிருஷ்ணமூர்த்தி அவர்களின் தொடக்க கால வாழ்க்கை இந்திய சுதந்திரப் போராட்டத் தோடும், புரட்சிகரத் தலைமறைவு இயக்கத்தின் செயல்பாடுகளுடனும் இணைந்தே வளர்ச்சி பெற்றது. மாணவர் பருவத்திலேயே இவருக்கான இந்த வாழ்க்கை தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கல்லூரிக் கல்வி சென்னை மாநிலக் கல்லூரியில்தான் தொடங்கியிருக்கிறது.

இவரது மாணவர் பருவம், விடுதலைத் தீ மூண்ட காலத்தில் அனல் வீசும் கோபநெருப்புக் கிடையில் அமைந்திருந்தது. குடும்பப் பின்னணியும், இவரது புரட்சிகர செயல்பாட்டிற்கான ஊக்கத்தை வழங்கியுள்ளது. இவரது மூத்த சகோதரர் ராவுரி சுப்பிரமணியம் அவர்கள், எம்.எஸ்.எம்.ரயில்வே தொழிற்சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர், இந்தப் பின்னணியில், கம்யூனிஸ்டுகளுக்கு எல்லாம், சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டிய தோழர் ராஜேஸ்வரராவ் போன்றவர்களிடம் பழகும் வாய்ப்பை இளமைக் காலத்திலேயே இவர் பெற்றிருந்திருக்கிறார்.

தமிழகம் தந்த மாபெரும் இசைக்கலைஞர்களில் எம்.பி.சீனிவாசன் அவர்கள் மிகவும் முக்கிய மானவர். மிகச் சிறந்த திரையிசைப் பாடல்களைப் படைத்தளித்தவர். சூழ்ச்சிமிக்க திரையுலகிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இவர் தன்னை விடுவித்துக் கொண்டார். சேர்ந்திசை என்னும் மானுடம் இணைந்து  நின்று இசைக்க வேண்டிய கூட்டிசையை தமிழகத்தில் வளர்த்தெடுக்கப் பெரிதும் பாடு பட்டார். அது இன்றும் கேரளத்தில் தனது வெற்றி வாழ்க்கையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

தோழர் எம்.பி.சீனிவாசன் இவருடைய கல்லூரி தோழர் என்பது குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது. இதைப் போலவே மார்க்சீயக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்களில் ஒருவராகப் புகழ்பெற்றுள்ள தோழர் பி.ராமச்சந்திரன், மத்திய அமைச்சராகப் பிற்காலத்தில் பொறுப்பேற்றிருந்த கே.ஆர்.கணேஷ், வழக்கறிஞர் கே.வி.சங்கரன் ஆகியோருடன் சேர்ந்து கல்வி பயின்றார்.

இன்று தோழர் ராதாகிருஷ்ணமூர்த்தி அவர்கள், புகழ்மிக்க புத்தக நிறுவனத்தைக் கட்டி உருவாக்கியவர்களில் முன்னணியில் இருப்பவர். ஆனால் ஆரம்பகாலம் முதல் இவருடைய கம்யூனிஸ்ட் வாழ்க்கையில் ஒரு சிறந்த பண்பைக் கண்டறிந்து கொள்ள முடியும். அது கட்சியின் கட்டுப்பாடு சார்ந்தது. கட்சி முடிவெடுத்து எந்தப் பணியை நிறைவேற்ற வேண்டும் என்று வழிகாட்டுகிறதோ அதைக் கடைப்பிடிக்கும் வாழ்க்கையையே அமைத்துக் கொண்டிருக்கிறார். இன்றைய பின்னணியில் அதனை யோசிக்கும்போது பல்வேறு சிந்தனைகள் நமக்குள் எழுந்துவிடுகின்றன.

கட்சியின் முழுநேர ஊழியராக இவர் 1946இல் புரட்சிகர வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார். பணியாளராக பொறுப்பேற்றிருக்கிறார். அப்போது அவருக்கு வயது 22. ஆரம்பத்தில் இந்திய கலை அமைப்பான, இந்திய மக்கள் நாடாளுமன்றத்திற்கு பொறுப்பேற்றுச் செயல்பட்டிருக்கிறார். இதன் பின்னர், அச்சுத் தொழிலாளர் சங்கம், துறைமுகத் தொழிலாளர் சங்கம், டிராம்வே தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு தொழிற்சங்கங்களில் கட்சி அளித்த பொறுப்புக்களை மிகவும் சிறப்புடன் நிறைவேற்றியுள்ளார்.

அன்றைய காலத்தில் கட்சி சட்டபூர்வமான பிரிவு, தலைமறைவுப் பிரிவு என்று இரண்டு பிரிவு களை வகுத்து வைத்திருந்தது. சட்டபூர்வமான பிரிவிற்குத் தோழர் சி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையேற்றிருக்கிறார்கள். தலைமறைவு பிரிவுக்குத் தோழர் ஏ.எஸ்.கே. அய்யங்கார் பொறுப் பேற்றுள்ளார். சட்டபூர்வப் பிரிவில் தான் தோழர் ராதாகிருஷ்ணமூர்த்தி செயல்பட்டிருக்கிறார். இந்த காலத்தில் தான் தமிழகத்தில் சிறந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் அனைவருடனும் இணைந்து பணி யாற்றும் வாய்ப்பை இவர் பெற்றுள்ளார்.

கட்சியின் அன்றைய அரசியல் நிலை வேறு விதமாக இருந்தது. 1948ஆம் ஆண்டு இவர் தலை மறைவு வாழ்க்கைக்குச் செல்ல வேண்டும் என்று கட்சி வழிகாட்டியது. தலைமறைவு வாழ்க்கையில் கைது செய்யப்பட்ட இவர், வேலூர் சிறைச்

சாலையில் பாதுகாப்புக் கைதியாக சிறை வைக்கப் பட்டார். இந்தக் காலத்தில் புகழ்மிக்க கம்யூனிஸ்ட் தலைவர்கள் ப.ஜீவானந்தம், ஏ.எஸ்.கே., கே.முருகேசன் போன்றவர்களும்  இதே சிறைச்சாலையில் இவருடன் இருந்தார்கள்.

வேலூர் சிறைச்சாலையில் ஆவேசமிக்க, இளைஞ ராகவே காணப்பட்டார் என்று இவருடன் சிறையி லிருந்த பல தோழர்கள் நினைவு கூர்கிறார்கள். சிறையி லிருந்த காலங்களில் சிறைவாசிகளுக்கான மனித உரிமைப் போராட்டங்களை முன்னின்று நடத்தி யுள்ளார். சிறைக்குள் கைது செய்யப்பட்டவர் களையும் மனிதர்களாக நடத்தப்பட வேண்டும் என்ற கருத்துநிலை கம்யூனிஸ்டுகளாலேயே வளர்த் தெடுக்கப்பட்டது என்றால் அது மிகைப்படுத்தப் பட்டதல்ல. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இது நிகழ்ந்தது.

சிறைக்குள் நடந்த போராட்டங்களில் தோழர் ராதாகிருஷ்ணமூர்த்தி, முன்னிலையில் நின்று எதிர்த்துப் போராடியுள்ளார். பல்வேறு உண்ணா விரதப் போராட்டங்களில் இங்குப் பங்கேற்ற இவர் போலீஸ் தடியடிகளால் பெரிதும் பாதிக்கப் பட்டார். சிறைச்சாலைக்குள் போலீஸ் சென்று தடியடி நடத்துவது மிகவும் அரிதானது. தாக்குதல் களை நடத்திய போலீஸ், இவர் மீதும் மற்ற தோழர்கள் மீதும் கடுங்குற்றங்களுக்கான வழக்கைப் பதிவு செய்தனர். இவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் சிறையில் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்காக, இவர் காளஹஸ்தி என்னும் ஊரைத் தவிர, வேறு எங்கும் நடமாடக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. 1951இல் தான் இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

மாணவர் பருவத்தில் தோழர் ராதாகிருஷ்ண மூர்த்தி பங்கேற்ற போராட்டங்கள் மிகத் தீவிர மானவை. கப்பற்படை எழுச்சி, இந்திய விடுதலைக் கான இறுதி நிர்ப்பந்தத்தை ஆங்கிலேயருக்கு கொடுத்தது. பம்பாயில் பிரிட்டிஷ் இந்தியக் கப்பற்படைக்கு எதிராக கப்பல்படை வீரர்கள் கிளர்ந்து எழுந்தனர். இதே நேரத்தில், பொது மக்கள் பம்பாய் நகர வீதிகளில் பாதுகாப்பு அரண் அமைத்து பிரிட்டிஷ் ராணுவத்தைச் சந்திக்க தயாராகிக் கொண்டிருந்தனர். அப்பொழுது சென்னையில் மாணவர்கள் மாபெரும் பேரணியை நடத்திக் கொண்டிருந்தனர். பேரணி நேரு பூங்காவிலிருந்து சென்னை மருத்துவக் கல்லூரியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி அருகில் ஊர்வலம் வந்தபோது கல்லூரி மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் இதில் கலந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.

பிரிட்டிஷ்காரரான அன்றைய போலீஸ் கமிஷனர் கியூர் என்பவருக்கு அது பெரும் கோபத்தை உருவாக்கியது. துப்பாக்கிச்சூடு நடத்தப் போவதாக மிரட்டிவிட்டு மாணவர்களிடம் அவர்களின் முகவரியைக் கேட்டிருக்கிறார். தோழர் ராதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முகவரியைக் கொடுக்க  மறுத்ததுடன் மற்ற மாணவர்களும் முகவரியைக் கொடுக்கமாட்டார்கள் என்று அறிவித்தார். மாணவர்களிடம் கோபம் கொந்தளிக்கத் தொடங்கியது. வேறு வழியின்றிப் பேரணி அனுமதிக்கப்பட்டது. அதுபோன்ற எத்தனையோ போராட்டங்களை நடத்திய அனுபவத்தை இளம் வயதிலேயே பெற்றிருக்கிறார் என்பது அவருக்குக் கிடைத்த உயரிய வாய்ப்பாக இப்பொழுதும் கருதிக் கொள்கிறார் தோழர். இதன் பின்னர் தொழிற்சங்கங்களில் சிறிது காலம் பணியாற்றிய இவர், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தனது உழைப்பை என்.சி.பி.எச்.சுக்கு மட்டும் செலுத்தி வந்துள்ளார். இந்தப் பணிகளை இவர், வாழ்வின் முழுமையான சாதனை என்றே குறிப்பிட்டார்.

சோவியத்து அரசு புத்தக நிறுவனங்களுடன் தொடர்பு கொண்ட புத்தக நிறுவனங்கள் ஆரம்ப காலங்களில் இந்திய மொழிகள் அனைத்திலும் செயல்பட்டன. சோவியத்து நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், இந்தப் புத்தக நிலையங்கள் பலவற்றால் இயங்க முடியவில்லை. இவை அனைத்திலும் இன்றும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனம் என்.சி.பி.எச். என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதற்காக நீரை ஊற்றி வளர்த்த தலைவர்களில் தோழர் சீனி வாசராவ், மோகன் குமாரமங்கலம் போன்றவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். காலப்போக்கில் இவர்களை அரசியல் பணிகள் ஈர்த்துக்கொண்டன. ஆனால் தோழர் ராதாகிருஷ்ணமூர்த்தி அவர்கள் மட்டும் இதில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டு இருந்தார்.

பொதுநல நோக்கம் கொண்ட நிறுவனங்களில் எவ்வாறெல்லாமோ பிரச்சினைகள் வந்துவிடு கின்றன. தன்னலத்தைத் தகர்த்துக் கொண்ட அர்ப் பணிப்பை உருவாக்குவது இங்குச் சுலபமானதாக இருப்பது இல்லை. இந்த வகைப்பட்ட அர்ப் பணிப்புக்கு இன்றுவரை மிகச்சிறந்த முன்னு தாரணமாகத் திகழ்பவர் தோழர் ராதாகிருஷ்ண மூர்த்தி என்றால் அது மிகைப்படுத்தப்பட்டதல்ல. இவருடைய அணுகுமுறைகளில் கூர்ந்து கவனிக்கத் தக்கது, கூட்டுச் செயல்பாடாகும். இது ஒரு இயக்கமாகவே வளர்ச்சி பெற்றுள்ளது. மிகுந்த மனிதநேயத்தோடு, இக்கூட்டு வாழ்க்கையின் நுட்பங்கள் அமைந்திருப்பது நம்மை வியக்க வைக்கிறது. என்.சி.பி.எச்.க்கு ஏற்பட்ட பல நெருக்கடிகளை இந்தக் கூட்டுச் செயல்பாடுகள் தான் அரணாக நின்றதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

இன்றைய தமிழக நூல் உருவாக்கத்தில் என்.சி.பி.எச். நிறுவனம் பெரும் பங்களிப்பைச் செலுத்தி வருகிறது. சென்ற ஆண்டு மட்டும் நான்கு கோடி ரூபாய்க்கு இந்த நிறுவனம் நூல்களை விற்பனை செய்திருக்கிறது. சொந்தப் பதிப்பாக, இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமான நூல்களைப் பதிப்பித்து வெளியிட்ட பெருமை இதற்கு உண்டு. சராசரியாக ஆண்டுக்கு இருநூற்று ஐம்பது புத்தகங்களை இது வெளி யிட்டுக் கொண்டிருக்கிறது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் ஒரு ஆலமரத்தைப் போலக் காட்சி தருகிறது. இதன் விழுதுகள் தமிழ்நாட்டில் பதினான்கு மையங்களில் தனது விழுதுகளை மண்ணில் பதிய வைத்துள்ளது. நவீன தொழில் நுட்பத்துடன் தனி அச்சகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. புத்தக நிறுவனத்தால் ஒரு உயர்நிலைப் பள்ளியும், மருத்துவமனையும் நடத்தப்படுகிறது. இந்த முயற்சிகள் அனைத்திலும் தோழர் ராதா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உழைப்பை அடித் தளமாகக்கொண்டு அமைந்துள்ளது.

பதினொன்றாவது தேசிய புத்தகக் கண்காட்சி, ஆகஸ்ட் மாதத்தில் டில்லியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கும் தோழர் ராதாகிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. என்.சி.பி.எச். நிறுவனத்தின் புத்தகங்கள் கூட அங்கு விற்பனைக்குச் செல்லவில்லை. அந்த விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர், தோழர் ராதாகிருஷ்ணமூர்த்தி அவர்களைக் குறிப்பிட்டுக் கூறியவை அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

புத்தக வெளியீட்டாளர்கள், புத்தகங்கள் மக்களைச் சென்றடைவதில் முக்கியமான பாத்திரத்தை வகிக் கின்றனர். புத்தகம் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் செயல்படக் கூடியவர். அவர் தலையில் புத்தகங்களைச் சுமந்து சென்று விற்றார் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவர் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் உருவாக்கிய ஆர்வம் தான் தங்களை எழுத வைத்து வருகிறது என்று என்னிடம் பலர் நேரில் கூறியிருக்கிறார்கள் என்று குடியரசுத் தலைவர் விழாவில் குறிப்பிட்டுள்ளார். குடியரசுத் தலைவரின் வலிமையும் நேர்மையும் கொண்ட இந்தச் சொற்கள் நம்மை ஒரு நிமிடம் சிலிர்க்க வைத்துவிடுகிறது.

ஓடிவரும் நதியைப் போல, தவழ்ந்து வரும் காற்றைப் போல கம்யூனிஸ்டுகளின் அர்ப் பணிப்பும், தனிப்பட்ட எந்தவிதமான பயனையும் எதிர்பார்க்காதது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தாமரை, அக்டோபர், 2005.

Pin It