சென்ற அக்டோபர் 2ஆம் தேதி நடந்த கிராம சபையில், ஒரு விவசாயி கேள்வி கேட்டார் என்பதற்காக அந்த கிராமப் பஞ்சாயத்தின் செயலர் காலால் எட்டி உதைத்தார் என்ற செய்தி ஒரு வாரம் சமூக ஊடகங்களில் ஒரு பெரு விவாதம் முன்னெடுக்கப்பட்டது. அது நீதிமன்றம் வரை சென்றது. அந்த பஞ்சாயத்து ஊழியரைக் கண்டிக்காதவர் எவரும் இல்லை. அந்த நிகழ்வு பத்திரிக்கைச் செய்தியாக மட்டும் இல்லாமல், மாத வாரப் பத்திரிக்கைகளிலும் இடம் பெற்றது. இந்த நிகழ்வு நடந்தது காந்தி பிறந்த தினத்தன்று. அகிம்சா மூர்த்தியின் பிறந்த நாளில் நடக்கும் கிராமசபை அவருக்குச் சிறப்புச் செய்யும் வகையில் கண்ணியத்தோடும், நேர்மையோடும், உண்மையோடும் செயல்படுவதற்குப் பதில் அவர் கோட்பாடான அகிம்சைக்கு எதிர் திசையில் அந்த கிராமசபையை நடத்தியது மக்களாட்சியை களங்கப்படுத்திய செயல். அதைச் செய்தது ஒரு கிராமப் பஞ்சாயத்து ஊழியர். ஒரு ஊழியர் இந்தச் செயலை செய்கிறார் என்றால் அவர் அதை அவர் செய்ய நிச்சயமாக ஊழியராக இருந்தால் அதைச் செய்திருக்க முடியாது. அவரின் பின்புலம் அவரை அப்படிச் செய்ய வைத்திருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதில் பங்குபெற்ற ஒரு சட்டமன்ற உறுப்பினர் அந்த கிராமசபையின் தலைவராக இருந்து கிராமசபையை நடத்திய பஞ்சாயத்துத் தலைவர் அந்த நிகழ்வில் பங்கேற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் அனைவருக்கும் அது ஒரு தலைகுனிவான நிகழ்வு. அவர்கள் அனைவரையும் வெட்கித் தலை குனிய வைத்துவிட்டது.

அந்த ஊழியர் அந்த விவசாயியை தாக்கியதைவிட அங்கு வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர், அந்த மன்றத்தை தலைமை தாங்கி நடத்திய பஞ்சாயத்துத் தலைவர், அதில் பங்கேற்றிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் நடந்து கொண்டது, அவர்களையெல்லாம் இந்த ஊழியர் எந்த அளவுக்கு சாதாரணமாக எடுத்துக்கொண்டார் என்பதைத்தான் காட்டுகிறது. அது மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசாங்க இயந்திரத்தை, சட்டம் ஒழுங்கை, கேலிக்கூத்தாக்கிவிட்டது. இந்த நிகழ்வை பொதுக்கருத்தாளர்கள்தான் சமூக ஊடகத்தின் வழியாக விவாதித்தனர். ஒரு சில பத்திரிக்கைகள் ஆர்வம் காட்டி செய்தி வெளியிட்டன. அரசியல் கட்சிகளோ, அரசாங்கமோ, அதிகாரிகளோ யாரும் இதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அரசுத் தரப்பிலிருந்து எந்த கடும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் நாம் சந்திக்கும் அடுத்த சோகம். இதைவிட மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது அவர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வாங்கியது. இது அக்டோபர் மாத நிகழ்வு.

இந்த மாதம் (அதாவது நவம்பர் மாதம்) நடந்த கிராமசபையில் தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் கேள்வி கேட்டார் என்பதற்காக அவரை ஒரு கூட்டமே அடித்து வெளியே அனுப்பி விட்டனர். அந்த நிகழ்வும் சமூக ஊடகங்களில் இடம் பிடித்து மக்களாட்சி மீது நம்பிக்கை கொண்டோரை கொந்தளிக்கச் செய்தது. தொழில் நுட்பம் வளர்ந்திருந்த காரணத்தால் நிகழ்வுகள் ஒளிப்படமாக எடுத்து புலனத்தில் பதிவிட்டு விடுகின்றனர். உடனே அது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு மக்களைச் சென்றடைந்து விடுகின்றது. இதற்கு உணர்வு மிக்கவர்கள் உடனே எதிர்வினை ஆற்றுகின்றனர். ஒரு வகையில் இந்த சமூக ஊடகங்கள் ஆதாரங்களோடு செய்திகளை வெளியிட்டு மக்களுக்கு செய்திகளைத் தெரிவிக்கின்றனர். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் ஆதாரம், சாட்சி தேட வேண்டியது கிடையாது. அது ஒளிப்படமாக புலத்தில் இருக்கின்றது.panchayat meeting 370இந்தச் செய்திகள் பொது விவாதத்தில் இருக்கும்போது ஒரு நண்பர் எனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு “இந்த நிகழ்வு என்பது எதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதாக நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள். பெரும்பான்மை பஞ்சாயத்துக்களில் இதே சூழல் நிலவுவதால்தான் பொதுமக்கள் கிராமசபைக்குச் செல்வதில்லை. அப்படியே சாதாரண மக்கள் சென்றாலும் வருகைப்பதிவு கையேட்டில் அவர்கள் கையொப்பமிட்டுவிட்டு அவர்கள் தரும் ரொட்டியோ அல்லது வடையோ எதைத் தந்தாலும் வாங்கிக் கொண்டு, தேநீரையும் அருந்திவிட்டு செல்கின்றனர். பெரும்பான்மையான மக்களுக்கு இது ஒரு அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட மக்களின் மாமன்றம் என்பதைவிட இதுவும் ஒரு சடங்கு என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். எனவேதான் இதில் பங்குபெற்று மாற்றங்களை தங்கள் வீடுகளிலும், கிராமத்திலும் கொண்டுவந்து விடலாம் என்ற நம்பிக்கையை  பொதுமக்கள் இழந்துவிட்டனர்.

தமிழகத்தில் 50 சதவிகித உள்ளாட்சிப் பதவிகளை பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்தப் பஞ்சாயத்துக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தலைவர்களாக வருகின்ற பெண்களுக்கு எந்தவித புரிதலும் திறனும் இல்லாது பஞ்சாயத்துச் செயலரைச் சார்ந்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதைவிட மிக முக்கியமாக அவர்களின் கணவன்மார்களோ அல்லது குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களோ அந்தப் பதவியை தங்கள் வயமாக்கிச் செயல்படுவது ஒரு சிறுமைத்தனம். அதைப்பற்றி எந்த உயர் அதிகாரியும் கண்டு கொள்வதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தலைவர்களை கையெழுத்துப் போடவும், நாற்காலியில் உட்கார வைக்கவும் உருவாக்கப்பட்ட பொம்மைகள்போல் ஆக்கி விட்டனர். பஞ்சாயத்துச் செயலருடன் இணைந்து பஞ்சாயத்து நிர்வாகத்தை பெண் தலைவர்களின் குடும்ப ஆண் உறுப்பினர்களும் சரி, பட்டியலினத்து தலைவர்களை கையில் வைத்து நடத்தும் ஆதிக்க சாதியினரும் சரி பஞ்சாயத்து நிர்வாகத்தில் நிகழும் ஊழல்களை சென்று யாரும் கேட்கப்போனால் வன்முறை வரும் என்று எண்ணித்தான் கிராமசபை உறுப்பினர்கள் கிராமசபை கூட்டத்திற்குச் செல்வதில்லை.

இன்றைய பஞ்சாயத்துச் செயலர்கள் தங்களின் ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட பிறகு அவர்கள் அனைவரும் ஓர் அரசு அதிகாரிகள்போல் செயல்பட ஆரம்பித்துவிட்டனர். அடுத்து ஒரு மூன்று ஆண்டு காலம் பஞ்சாயத்துக்கு தேர்தல் இல்லாத இருந்த நிலையில், தலைவர் செய்ய வேண்டிய அனைத்துப் பணிகளையும் இவர்கள்தான் கவனித்து வந்தார்கள். இதன் விளைவாக பஞ்சாயத்து செயலர்கள் தங்கள் ஆளுமையை வளர்த்துக் கொண்டனர். அடுத்து இவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கிராமப் பஞ்சாயத்து தலைவர்களிடம் இருந்தது. அதை அரசாங்கம் எடுத்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தமிழக அரசு தந்துவிட்டது.

இதன் விளைவாக இந்த பஞ்சாயத்துச் செயலர்கள் தாங்கள் வட்டார வளர்ச்சி அலுவலருக்குக் கடமைப்பட்டவர்கள், அவர்களுக்கு நாம் பதில் கூறினால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். கிராம உள்ளாட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிதாக வந்த தலைவர்களுக்கு தங்களுக்கு இருக்கும் பொறுப்போ கடமைகளோ, அதிகாரங்களோ எதுவும் தெரியவில்லை என்பது பஞ்சாயத்துச் செயலர்களுக்குத் தெரிந்த காரணத்தால் தாங்கள்தான் பஞ்சாயத்துத் தலைவரை வழிநடத்துகின்றோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். இதுதான் இன்று பஞ்சாயத்துக்கள் சந்திக்கும் பிரச்சினை. அது மட்டுமல்ல எதற்காக இந்த உள்ளாட்சி அரசாங்கமாக வந்ததோ, அந்தக் குறிக்கோள் நிறைவேறாது நம் அரசியலும், அதிகார வர்க்கமும் செய்து கொண்டுள்ளன. இதை உடைக்க வேண்டிய கடமை பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. ஆனால் அதை நம் ஊடகங்கள் செய்யத் தவறி­விட்டது. எனவே இதற்கான தீர்வுகாண சிந்தியுங்கள்” என்று கூறி முடித்தார்.

அவர் கூறியதில் எனக்கு பெரிய அளவில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இந்த நிலையில் செயல்படும் பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை என்ன என்பதில்தான் எனக்கு கருத்து வேறுபாடு அவருடன் உண்டு. நான் பார்க்கும் பஞ்சாயத்துக்கள், நான் சந்திக்கும் பஞ்சாயத்துத் தலைவர்கள் செய்திருக்கக்கூடிய சாதனைகள் என்பது மகத்தானவைகள். எழுநூறு பேர், ஆயிரம்பேர் கூடுகின்ற கிராமசபையை நான் பார்த்திருக்கின்றேன். அப்படி அதிக எண்ணிக்கையில் கூடுகின்ற கிராமசபை எண்ணிக்கை அதிகம் என்று நான் கூற மாட்டேன். எங்கு நல்ல தலைமை உருவாகின்றதோ அங்கு மாற்றங்கள் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. எங்கு மக்கள் பொறுப்புடன் நல்லவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எண்ணி, பணத்தையும், விருந்தையும் புறக்கணித்து செயல்படுகின்றார்களோ அங்கு நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுகின்றார்கள்.

அதற்குமேல் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைவர்களாக வந்தவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முயன்று பயிற்சியில் பங்கேற்று திறனை வளர்த்துக்கொண்டு மகத்தான செயல்களைச் செய்து சாதனை படைக்கின்றனர். அரசாங்கம் நிறைய நிதி செலவு செய்து பயிற்சியளிக்கின்றது பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு தலைவர்களாக வந்தவர்கள் அனைவருக்கும் மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. அத்துடன் பஞ்சாயத்து நிர்வாகத்தை முறையாக நடத்திட ஒன்பது புத்தகங்களை வழங்கி அவைகளைப் படித்து நிர்வாகத்தினை செம்மையாக நடத்துங்கள் என்று பயிற்சி முடிந்தபின் அறிவுரை கூறி அனுப்புகின்றனர். அந்தப் புத்தகங்களை யாரும் படித்துப் பார்ப்பது இல்லை என்பது நான் சந்திக்கும் பஞ்சாயத்துத் தலைவர்களுடன் உரையாடும்போது தெரிந்து கொண்டேன். அவர்கள் ஆர்வமாக என்னிடம் கேள்வி கேட்கும்போது, நான் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைக் கூறி அதைப் படித்தீர்களா என்று கேட்பேன். யாரும் படித்தேன் என்று கூறியது கிடையாது. அது மட்டுமல்ல, அந்தப் புத்தகத்தை படிக்க எங்களுக்கு நேரமே இல்லை என்று கூறிச் சமாளிப்பார்கள்.

முன்மாதிரியாக விளங்கும் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு  பெங்களூருவில் சமீபத்தில் ஒரு சிறப்புப் பயிற்சி நடைபெற்றது. அங்கு சென்று அவர்களுக்கு நான் வகுப்பெடுத்தேன். அப்போது அங்கு அந்தப் பயிற்சியில் பங்கு பெற்ற தலைவர்களிடம் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனம் தந்த ஒன்பது புத்தகத்தையும் படித்தவர்கள் யார் என்று கேட்டபோது ஒருவர் கூட நான் படித்தேன் என்று கூறவில்லை. ஏன் படிக்கவில்லை என்று கேட்டதற்கு "அந்தப் புத்தகங்கள் நாங்கள் படித்துப் புரிந்து கொள்ளும் அளவில் எளிமையாக தயாரிக்கப்படவில்லை. அவ்வளவும் ஒரு அரசு ஆணை எந்த மொழியில் இருக்கிறதோ அந்த மொழியில்தான் புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளது ஆகையால் எங்களால் படிக்க முடியவில்லை” என்று தெரிவித்தனர். அவர்கள் கூறிய பதிலையும் ஒரு நிலையில் புறந்தள்ள முடியாது.

எப்படிப் படிக்காமல் நீங்கள் எல்லாம் முன் மாதிரி தலைவர்களாக வந்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நாங்கள் எதோ ஒரு கடப்பாட்டுடன் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட எளிய நடையில் எழுதிய புத்தகங்கள் ஒரு சிலவற்றைப் படித்துள்ளோம். நாங்கள் லஞ்ச லாவண்யத்திற்கு ஆட்படாமல் இருப்பதால் எங்கள் பஞ்சாயத்துக்களில் பஞ்சாயத்துச் செயலர் எங்களை ஆட்சி செய்ய முடியாது. நாங்கள் இடுகின்ற பணிகளைத்தான் அவர் செய்தாக வேண்டும். அப்படித்தான் அவர்களை நாங்கள் வைத்திருக்கிறோம்” என்றனர். அவர்களிடம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடந்த கிராமசபை நிகழ்வுகள் எதைக் குறிப்பிடுகின்றன என்று வினவினேன். அத்துடன் வேங்கைவாசலில் தலித்துகளுக்கு நடந்த மோசமான நிகழ்வைப் பற்றியும் கேட்டேன். நான் கேட்ட கேள்விகளுக்கு இந்த நிகழ்வுகள் ஒட்டுமொத்த உள்ளாட்சித் தலைவர்களுக்கே அவமானம் என்ற உரத்த குரலில் அனைவரும் கூறினர். “அதற்குக் காரணம் அந்த கிராமத்தில் தலைமை இல்லாததுதான்” என்றனர்.

“தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதால் நம்மை தலைவர்களாக கருதக்கூடாது, அந்தக் கிராமத்தில் நடைபெறும் மாற்றங்களுக்கு வித்திடுபவர்களாக இருக்க வேண்டும், மக்களுக்கு வழிகாட்டக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருக்கக்கூடிய கிராமங்கள் குறைவே” என்றனர். “பஞ்சாயத்துக்கள் தனியாக அந்தரத்தில் இயங்கவில்லை, அது ஒரு சமூக பொருளாதாரச் சூழலின் பின்புலத்தில்தான் இயங்கி வருகின்றது. இந்தச் செயல்பாடுகளை சரி செய்யத் தேவையான திறமைகளை தலைவர்கள் வளர்த்துக்கொண்டு செயல்பட வேண்டும். அதைத்தான் நாம் முயன்று பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் அப்படிப்பட்ட தலைமைத்துவப் பயிற்சி அனைவருக்கும் கிடைப்பதில்லை” என்றனர்.

“இதற்கான உண்மையான காரணம் என்ன என்று உங்களுக்குப் புரிகிறதா” என்றேன். “எங்களுக்கு அவ்வளவாகப் புரியவில்லை” என்றனர். இவை அத்தனைக்கும் ஒரு காரணம் மக்களை அரசாங்கம் மேய்க்கக் கற்றுக் கொண்டது. மக்களிடம் எந்த அரசும் உங்களுக்கு என்ன தேவை என்று கேட்பது இல்லை. அரசாங்க அதிகாரிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும், அவர்கள் டெல்லியில் இருந்தாலும் சரி, சென்னையில் இருந்தாலும் சரி, அவர்கள் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து முடிவெடுத்து நடைமுறைப்படுத்துகின்றனர். அரசு கூறுவதை மக்கள் கேட்க வேண்டும், அரசு மக்களிடம் சிந்தனை இருக்கிறது, திறன் இருக்கிறது, ஆற்றல் இருக்கின்றது, அவர்களுக்கும் வாழ்க்கை பற்றி கனவு இருக்கிறது என்று சிந்திப்பது இல்லை. மத்திய அரசாங்கம் தான் உருவாக்கியது ஒரு உள்ளாட்சி அரசாங்கத்தை. மாநில அரசாங்கம் தான் உருவாக்குகிறது ஒரு தன்னாட்சி பெற்ற உள்ளாட்சி அரசாங்கம் இயங்குவதற்கான வழிமுறைகளை. ஆனால் இவைகளை உருவாக்கிவிட்டு அவைகள் முறையாக நடைபெற வழிவகை செய்யாததன் விளைவு உருவாக்கப்பட்ட உள்ளாட்சி அரசாங்கத்தை குரங்கு கையில் கொடுக்கப்பட்ட பூமாலைபோல் ஆக்கி வைத்திருக்கின்றனர்.

உள்ளாட்சி அரசாங்கம்தான் பொதுமக்களுக்கு மக்களாட்சி பற்றி பயிற்சியளிக்கும் ஒரு பயிற்சிக்கூடம். அது கிராமசபையாக இருந்தாலும், ஊராட்சி மன்றக் கூட்டமாக இருந்தாலும், நிலைக் குழுக்களாக இருந்தாலும் அனைத்தும் நடத்துவதற்கு ஒரு முறைமை உண்டு. அந்த முறைமை யாருக்கும் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. கூட்டங்களில் உட்கார்வது, பேசுவது, விவாதிப்பது, விவாதத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய மொழி அனைத்தும் எழுத்து வடிவத்தில் இருக்கிறது. ஆனால் எவரும் இவைகள் பற்றி விளங்கிக் கொள்ளவில்லை.

மக்களாட்சியில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது, ஒருவரையொருவர் மதித்து நடத்துதல், அடுத்து சுதந்திரமாக யாரையும் புண்படாது கருத்துக்களை அனைவரும் புரியும் வகையில் எடுத்து வைப்பது. அனைவர் கருத்தையும் மதிப்பது. எதிர்க்கருத்துக்களை மதித்து வாங்குவது, என பல நியதிகளும் நடைமுறை ஒழுக்கங்களும் உள்ளன. இவைகளெல்லாம் பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் செல்பவர்களுக்கே கற்றுக் கொடுக்கவில்லை என்பது நாம் பார்க்கும் அடுத்த எதார்த்தம்.

ஆனால் இவைகளெல்லாம் உள்ளாட்சித் தலைவர்களுக்கு மேலோட்டமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. கிராமசபைகளும் உள்ளாட்சி மன்றங்களும் கூடிக் கலையும் மன்றங்கள் அல்ல. அங்குதான் கேள்விகள் கேட்க உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் கேள்வி கேட்பதுபோல் கிராமசபையில் கேள்விகள் கேட்க சாதாரண மனிதர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். கேள்விகள் கேட்கும்போது பொறுமையாக அனைத்துக் கேள்விகளுக்கும் தலைவர் பதிலளிக்க வேண்டும். கேள்வி கேட்பதிலும் ஒரு வரையறை உண்டு பதில் கூறுவதற்கும் ஒரு வரையறை உண்டு. அதேபோல் வாழ்வியல் பற்றிய அடிப்படை செய்திகளை பரிமாறும் இடம்தான் கிராமசபை. அங்கு ஒரு ஆரோக்யமான விவாதத்தை முன்னெடுத்து விவாத ஜனநாயகத்தை வளர்த்தெடுக்க வேண்டும். ஆனால் அந்த உன்னதமான மாமன்றத்தை இன்று வடை டீக்குள் சுருக்கி, கையெழுத்து வாங்கும் மன்றமாகவும், மனுக்கள் வாங்கும் மன்றமாகவும் மாற்றியதுதான் சோகத்திலும் சோகம். அதைவிட கொடியது, கேள்வி கேட்பவர்களை அடிப்பது உதைப்பது என்பது ஒரு துன்பியல் நிகழ்வு.

இதற்கு மிக முக்கியக்காரணம் இன்றுவரை கிராமசபை பற்றிய விழிப்புணர்வு கேரளத்தில் உருவாக்கியதுபோல் எங்கும் நிகழவில்லை. அங்கு மத்திய அரசின் நிதி உதவியில் கிராமம் கிராமமாக உள்ளாட்சித்துறை அமைச்சர் அந்தப் பணியினை மேற்கொண்டார். நம் தமிழகத்தில் எந்தச் செய்தியும் மக்களுக்குத் தெரியாமல் இருப்பது நல்லது என்று எண்ணும் மனோபாவம்தான் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் உள்ளது, அலுவலர்களுக்கும் உள்ளது. காரணம் ஊழல் என்பது நிதர்சனமாகிவிட்ட நிலையில், கேள்வி கேட்பதை எப்படி அவர்கள் ஆரோக்யமாக எடுத்துக் கொள்வார்கள். ஆகையால் பொதுமக்கள் குடிமக்களாக கேள்வி கேட்காமல் இந்த ஊழலை ஒழிக்க முடியாது. குடிமக்களுக்கு கேள்வி கேட்டு உண்மையை வெளியில் கொண்டுவரும் உரிமைகள் மட்டும் அல்ல அது பொறுப்பும் கூட. குடிமக்கள் இதற்குப் போராடாமல் இந்த ஊழலை ஒழிக்க இயலாது. இந்த அதிகாரப் பரவல் என்பது, விளிம்பு நிலை மக்களுக்கானது. அவர்களுடைய மேம்பாட்டை நிர்ணயிப்பது அவர்கள்தான். அந்த அடிப்படை­யில்தான் பெண்களுக்கும், தலித்துக்களுக்கும் பிரதிநி­தித்துவம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடைய பிரதி­நிதித்துவம் செயல்பட ஒரு போராட்டம் தேவையாக இருக்கிறது. காரணம் இன்றைய ஊழல் மயப்பட சூழலில் ஆளுகையும் நிர்வாகமும் நடைபெறுவதால். இன்றைய கிராமசபையில் நடைபெறும் நிகழ்வுகள் பல டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் அன்று கிராமத்தைப் பற்றி கூறிய கூற்றை இன்றும் நம் கிராமங்கள் பிரதிபலிக்கின்றன என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இதற்கான முன்னெடுப்பை மாநில அரசு செய்யவில்லை என்றால் சாதியக் கொடுமைகளும் வன்முறையும், ஆதிக்கமும் நிறைந்ததாகவே கிராமங்கள் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த அவப்பெயர் வராமல் இருக்க இன்றைய அவசியத் தேவை கிராமசபை பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் உருவாக்கப்படல் வேண்டும்.

க.பழனித்துரை, காந்தி கிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)

Pin It