பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நினைவுக் கட்டுரை

புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்று சித்தன்ன வாசல். தொன்மையும் பழமையும் புதுமையும் கல்வெட்டுகளாக, ஓவியமாக, சிற்பமாக நிரம்பப் பெற்ற இடம். சித்தன்ன வாசலுக்குப் பல முறை சென்றிருக்கிறேன். இப்பொழுது இருக்கின்ற ஒழுங்குமுறை, முள்வேலித் தடை, நுழைவுக் கட்டணங்கள் அப்போது இல்லை. சமணப் படுக்கையில் ஏறுவதற்குத் தயக்கம் என்பதைத் தவிர வேறெந்தத் தடையும் இருந்ததில்லை. குன்றில் ஏறி ஐந்து நிமிடங்கள் நண்பர்களோடு படுத்திருந்திருக்கிறேன். முட்புதர், குடைவு, குறுகிய வழி வழியே மலையில் ஏறுகையில் இப்போது நான் ஏறிக்கொண்டிருப்பது ஏழடிப்பாட்டம் என்றோ, குடைவான மலைக்குள் வடிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு படுக்கையின் பெயர் அதிட்டானம் என்றோ, இதில் பதினேழு படுக்கைகள் இருக்கின்றன, அவற்றில் ஆறு படுக்கைகளில் பத்து சமணர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்றோ தெரிந்துகொள்ள ஆர்வமிருந்ததில்லை. அதேநேரம் இம்மலையைச் சுற்றிலும் இருக்கின்ற தற்கால மற்றும் நாட்டார் வழிபாட்டு அடையாளங்களுடன் ஓரளவு நான் பரிச்சயமாகியிருந்தேன்.

சித்தன்ன வாசல் என்றால் பலருக்கு முதலில் நினைவுக்கு வருவது ஓவியம்தான். அடுத்து சமணர்களின் படுக்கை. சித்தன்ன வாசல் மலையிலும் மலையின் அடியிலும் இன்னும் பிற அடையாளங்கள் உண்டு. நாட்டார் வழிபாட்டு தெய்வங்கள் நிரம்பப் பெற்ற இடம் இது. இதற்குள் சிவன், பிடாரி, பைரவர், அய்யனார், பால்குடி அய்யனார், அடைக்கலம் காத்தார், கன்னிகள், குழுமிக்கருப்பர், புல்லிக்கருப்பர், இருளப்பர், காவல்காரன், குறத்தியம்மன், இராசாத்தி அம்மன், பிரமநாதன், உதிரக்காளி, மந்தையம்மன், வெள்ளச்சியம்மாள், நொண்டி அப்பச்சி, சொரிக்காரன், வண்ணார்கோவில், எல்லைக்கருப்பர் எனப் பல கோவில்கள் உண்டு. எல்லாம் கைக்கு அடக்கமான வழிபாட்டுத் தலங்கள். சிறிய சிறிய அடையாளங்கள். புதர், குடைவு, பத்தைக்குள் இக்கோவில்கள் உள்ளன. நான் முதன் முதலில் சித்தன்ன வாசலுக்குச் செல்கையில் நான் பார்த்துத் திரும்பியது இந்தக் கோவில்களைத்தான்.

இரண்டாம் முறை இங்கே சமணர் படுக்கையும் பல்லவர் கால ஓவியங்களும் இருப்பதாகத் தெரிந்துகொண்டு இம்மலையை ஒரு சுற்று பார்வையிடக் கிளம்பினேன். பார்வையில் ஓவியங்களும் சமணப்படுக்கையும் கண்களில் படுவதற்குப் பதிலாக புதர் மறைவில் காதல் ஜோடிகளே தெரிந்தார்கள். மூன்றாம்முறை கல்லூரி களப்பயணம். ஒரு வரலாற்று ஆய்வாளருடன் சென்றிருந்தோம். அங்கேயே ஒரு ஆய்வாளர் இருந்தார். இருவரும் சித்தன்ன வாசலை ஒரு சுற்று சுற்றி ஏற்றிறக்கி, இதற்குள் மறைந்துள்ள வரலாறுகளை விளக்கத் தொடங்கினார்கள். இருவர் சொல்வதும் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தது. இவர் சொல்வதை அவர் மறுத்தும் அவர் சொல்வதை இவர் மறுத்தும் குறுக்கிட்டும் சொன்னதில் இருவருக்குமிடையில் சொற்போர் மூண்டது. ஏழரைப்பாட்டத்திலுள்ள படுக்கை சமணர் படுக்கை என்றார், ஒருவர். மற்றொருவர் அதை மறுத்து அசீவகப் படுக்கை என்றார். குடைவரைக் கோவிலில் வரையப்பட்டிருந்த ஓவியத்தை ஒருவர் பல்லவர் கால ஓவியம் என்றார். மற்றொருவர் பாண்டியர் காலத்தியது என்றார்.siddanna vasalஇதன்பிறகு சித்தன்ன வாசல் வெறும் மலையாகவோ, குன்றாகவோ மட்டும் தெரிந்திருக்கவில்லை. உறங்கும் வரலாற்றுக் குன்றாகத் தெரியத் தொடங்கியது. தூரத்திலிருந்து பார்க்கையில் இம்மலை அழகாகவும் அருகில் சென்று பார்க்கையில் வரலாற்றுக் குழப்பம் தருவதாகவும் இருந்தது. இந்தக் குழப்பத்திலிருந்து தெளிய நான் இம்மலையைப் பற்றிய வரலாற்று நூல்களைத் தேடத் தொடங்கினேன்.

புதுக்கோட்டை மாவட்ட வரலாற்று ஆர்வலர் புலவர் பு.சி.தமிழரசன், சித்தன்ன வாசலை ஆய்வு செய்து ஓர் ஆராய்ச்சி நூல் வெளியிட்டார். நூலின் பெயர் சித்தன்ன வாசல். இவர் புதுக்கோட்டை வரலாற்றுப் பேரவை நிறுவனர். இவர் புதுக்கோட்டையை மையமாகக் கொண்டு இன்னும் பல நூல்கள் எழுதியுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட வளநாடுகளும் கோயில்களும், புதுக்கோட்டை மாவட்ட வரலாறு குறுநில மன்னர்கள், புதுக்கோட்டை மாவட்டச் சங்ககால மன்னர்கள், கொடும்பாளூர் வேளிர், புதுக்கோட்டை மாவட்ட முத்தரைய மன்னர்கள், நார்த்தாமலை வரலாறு, பெரும்பிடுகு முத்தரையரான சுவரன் மாறன் ஆகிய நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை. இந்நூல் பேராசிரியர் க. நெடுஞ்செழியனின் ஆய்வு நூலான சித்தண்ணவாசல் நூலுக்கும் பிந்தியது.

இவ்விரு நூல்களையும் படிக்கையில் இரு ஆய்வுகளும் ஒருசில வரலாற்றுடன் ஒத்தும் பெரும்பான்மையாக முரண்பட்டும் இருந்ததை புரிந்துகொள்ள முடிந்தது. இருவர் கருத்துகளும் ஒத்துப்போகிற இடமாக இவ்வூரின் பழைய பெயர் ‘சிறுபோசில்’ என்பதாக இருந்தது. அதேநேரம் இவ்வூருக்கான பெயர்க்காரணத்துடன் இரு நூல்களும் முரண்கொண்டன.

சிறுபோசில் காரணப்பெயரும் மறுப்பும்

சிறுபோசில் என்பது சித்தன்ன வாசலின் பழைய பெயர். போசில் என்கிற ஊர் சிற்றூராய் இருந்ததால் சிறுபோசில் என்றானது. போசில் என்கிற சொல் கன்னடச் சொல் என்கிறார் ஐராவதம் மகாதேவன். கன்னடம் என்பது தமிழுடன் சமஸ்கிருதம் கலந்த மொழி. சைன சமயம் கர்நாடகம் வழியே தமிழகத்திற்கு வந்தது. அதோடு கன்னடம் மொழியும் வந்தது. அப்படியாக வந்த சொல் போசில் என்கிறார் அவர்.

க.நெடுஞ்செழியன் ஐராவதம் மகாதேவனின் கருத்தை மறுக்கிறார். கன்னட மொழி புதிய கன்னடம் பழைய கன்னடம் என்று இரண்டு திரிபுகளைக் கொண்டிருக்கிறது. பழைய கன்னடத்தில் ப, பா, பு, பூ என்கிற வரிசை உண்டு. புதிய கன்னடத்தில் இவ்வரிசை இல்லை. ப என்பது ஹ என்பதாக திரிந்துள்ளது. இதன்படி பா - ஹா, பொ - ஹொ, போ - ஹோ. கன்னடத்திலிருந்து போசில் என்கிற சொல் தமிழகத்திற்கு வந்திருக்குமேயானால் அது ஹோசில் என்றே வந்திருக்கும். மேலும், சிறுபோசில் என வடிக்கப்பட்ட கல்வெட்டு புது கன்னடக் காலம் என்பதால் போசில் என்கிற சொல் கன்னட மொழியாக இருக்க வாய்ப்பில்லை. மேலும், போசில் என்கிற சொல் கன்னடம் என்று சொல்வது தமிழகத்தின் தொன்மை அடையாளங்களை வடமொழியாக்கும் முயற்சி என்கிறார்.

மேலும் இவர் புழை, பாழி என்கிற இரு சொற்களைக் கொண்டு போசில் என்பது தமிழ்ச்சொல் என நிறுவுகிறார். பாழி என்பதற்குப் படுக்கை என்று பொருள். தமிழர்களின் ஆதி சமயமான ஆசீவகத் துறவிகளின் இருப்பிடம் பாழி. இச்சொல் சைன சமயக் காலத்தில் பள்ளி என்பதாகத் திரிந்தது. இவ்விரு சொற்களின் உள்ளார்ந்த பொருள் படுக்கை. இதேபோன்று புழை என்கிற சொல்லின் பொருள் உள்துளை. வாயில் என்றும் பொருள் கொள்ளலாம். இச்சொல்லே பொசில் என்றாகி பிறகு போசில் என்றானது என்கிறார் அவர்.

முதல் கல்வெட்டு

சித்தன்னவாசல் குன்றின் மீது வடிக்கப்பட்ட முதல் கல்வெட்டில்தான் சிறுபோசில் என்கிற சொல் இடம்பெற்றுள்ளது. “எருமி நாடு குமிழ் ஊர் பிறந்த காவுடிஇ தென்கு சிறுபோசில் இளையர் செய்த அதிட்டானம்” இங்கு, எருமி நாடு என்பது இன்றைய மைசூர். எருமைக்கு வடமொழியில் மகிசம் என்று பெயர். மகிசம் ஊர் பிற்காலத்தில் மைசூர் ஆகியது. எருமி நாடாக மைசூர் இருக்கையில் புதுக்கோட்டை செனிகுல மாணிக்கபுரம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்நிலம் சிறுபோசில், நார்த்தாமலை அதைச் சுற்றிய நிலங்கள் கச்சமங்கலம் என்றும் இதற்கும் கிழக்குப் பகுதி கலசமங்கலம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலம் பன்றி நில நாடு. காட்டுப் பன்றிகள் ஆதிக்கம் செய்த நிலம். இதைக்கொண்டு அணுகுகையில் எருமை நாட்டின் குமிழூர் ஊரைச் சேர்ந்த காவுதி என்கிற துறவி சிறுபோசில் நாட்டிற்கு வருகிறார்.

காவுதி ஆண் துறவியா, பெண் துறவியா என்பது நீண்ட கால விவாதப் பொருள். ஐராவதம் இவரைப் பெண் துறவி என்கிறார். காவுதி மற்றும் அவருடன் வரும் துறவிகளுக்கு பன்றி நாட்டார்கள் வரவேற்புக் கொடுக்கிறார்கள். கல்வெட்டின்படி சிறுபோசில் என்கிற ஊரைச் சேர்ந்த இளையர், காவுதி தங்குவதற்கு அதிட்டானம் அமைத்துக்கொடுக்கிறார். இங்கு இளையர் என்கிற சொல்லுக்கு ஐராவதம் துறவிகள் என்று பன்மையில் விளிக்கிறார். பு.சி. தமிழரசன் செல்வந்தர் அல்லது மாணவர் என்று ஒருமையில் குறிக்கிறார்.

காவுதி என்பவர் யார்?

இச்சொல் மீது மூன்று கதைகள் உலாவுகின்றன.

கதை - 1

மயிலையார் இப்படிச் சொல்கிறார். கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் வட இந்தியா பாடலிபுத்திரத்தை மௌரிய அரசன் சந்திரகுப்தன் ஆட்சி செய்கிறான். இவன் அரசாட்சியைத் துறந்து சைன சமயத் தலைவராக இருந்த பத்திரபாகு முனிவரிடம் சீடனாகிறான். பத்திரபாகு சீடர் மற்றும் ஆயிரக்கணக்கான சைனத் துறவிகளுடன் தென்னிந்தியா நோக்கி வருகிறார். கன்னட நாட்டில் சிரவண பௌகொள என்கிற இடத்தில் தங்கி சைனம் பரப்புகிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் விசாக முனிவரின் தலைமையில் தமிழகத்திற்கு வருகிறார்கள். இவரது சீடர்களில் ஒருவர் காவுதி.

கதை - 2

ஐராவதம் மகாதேவன் இப்படிச் சொல்கிறார். சந்திரகுப்தனின் பேரன் அசோகன். அவனது பேரர்கள் தசரா, சம்பிரட்டி. இவர்களில் தசரா - ஆசீவக சமயம். சம்பிரட்டி - சைன சமயம். சம்பிரட்டி தலைமையில் ஒரு குழுவினர் தென்னிந்தியா வந்து கர்நாடகத்தில் தங்கி அங்கேயிருந்து தமிழகம் வந்து, சைனம் பரப்பினர். அவர்களின் வழியில் வந்தவர் காவுதி. கன்னட மொழியில் கவுடா என்பதற்கு ஊர் அலுவலர் என்று பொருள். காவுடி என்றால் பெண் அலுவலர். கவுடா என்கிற துறவியின் மனைவி காவுதி.

கதை - 3

பு.சி. தமிழரசன் மேற்கண்டவர்களின் கருத்துகளோடு ஒத்துப்போகிறார். காவுதி ஈதன் என்பது இவரது பெயர். எருமையூர் நாட்டில் குழுமூரில் வாழ்ந்த சைன முனிவர் இவர். ஈதன் என்றால் வள்ளல் என்று பொருள். ஆகவே இவர் உழவராக இருக்க வேண்டும். காவுதி என்பது வேளாண்குடி பட்டம். காவுதி பட்டம் பெற்ற ஈதென், என்கிறார்.

கதை - 4

க. நெடுஞ்செழியன் மேலே சொல்லப்பட்ட கருத்துகளை மறுக்கிறார். கர்நாடகம் சிரவண வெள்ளைக் குளத்திலிருந்து சைன சமயம் தமிழகம் வந்தது எனில், சிரவண பகுதியில் ஏன் சைன சமயம் குறித்த எந்தத் தடயங்களும் இல்லை, என்பது இவர் எழுப்பும் முக்கியமான ஒரு கேள்வி.

தமிழ்நாட்டிலுள்ள சைன தடயங்கள் அசோகர் காலமோ, அவரது பேரன்கள் காலமோ அல்ல. இவர்களின் காலத்திற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தியது.

கவுடா என்கிற துறவியின் மனைவி பெயர் காவுதி என்றால் கவுடா எப்படி துறவியாக இருக்க முடியும்?

இம்மூன்று கேள்விகளினூடே காவுதி என்பவர் யாரென்று விளக்கம் தருகிறார். காவிதி என்றால் நடுவர் என்று பொருள். ஆசீவகத்தின் தலைவர் மற்கலிகோசலார். ஆசீவகர்கள் 96 வகை தர்க்கம் செய்வதில் வல்லவர்கள். எருமையூர் நாட்டு குமிழூரில் பிறந்த இவர்கள் தர்க்கப் போரில் தலைவராக இருந்தமையால் காவிதி என்று அழைக்கப்பட்டார்கள். இச்சொல் கல்வெட்டில் காவுடி என்று தவறாக வடிக்கப்பட்டுள்ளது. இங்கு காவுடி என்பது ஆசீவகர்கள். இச்சொல் பெண்பால் பெயராகவோ, பெண் துறவியாகவோ இருக்க வாய்ப்பில்லை, என்கிறார் இவர்.

சித்தன்னவாசல் - சித்தண்ணவாயில்

‘காவுடிஇ தென்கு சிறுபோசில் இளையர் செய்த அதிட்டானம்’ என்கிற இந்தக் கல்வெட்டு கி.மு. மூன்றாம் நூற்றாண்டு காலத்தியது என்கிறார் ஐராவதம். இக்காலத்தோடு ஒத்துப்போகும் பு. சி. தமிழரசன் மேற்கண்ட கல்வெட்டை இவ்வாறு பிரித்து ஊர்ப் பெயர்க்காரணத்தை விளக்குகிறார். தென் சிறுபோசில் - தெற்கு சிறுவாயில் - சிற்றன்னவாயில் - சித்தன்னவாசல்.

k nedunchezhiyanமேலும் இவர், மற்றொரு கதையைச் சொல்கிறார். இது வாய்மொழிக் கதை. காராளன் வெள்ளாளன் காலத்தில் பெரியண்ணன், சின்னண்ணன் என்கிற இருவர் இப்பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். பெரியண்ணன் ஆட்சி செய்த பகுதி அண்ணல்வாயில். சின்னண்ணன் ஆட்சி செய்தது சின்னண்ணவாயில். இதுவே பிறகு சித்தன்னவாயில் - சித்தன்னவாசல் என்பதாக மருவியது. இது வரலாற்றுடன் சற்றும் ஒத்துப்போகவில்லை.

சித்தன்னவாசலில் மற்றொரு கல்வெட்டு உள்ளது. இது கி.பி நான்காம் நூற்றாண்டு காலத்தியது. அக்கல்வெட்டு இவ்வாறு வடிக்கப்பட்டுள்ளது. “மண்ணில் சீர்மதுரை ஆசிரியன் அண்ணல் / அகமண்டபம் புதுக்கி ஆங்கறிவர் கோயில் / முகமண்டபம் எடுத்தான் முன்.”

 இதன்படி அருந்தவ முனிவர் ‘அறிவர்’ என்றும் ‘அண்ணல்’ என்றும் அழைக்கப்படுகிறவர். அருந்தவ முனிவர்கள் சித்தர்கள். சித்தராகிய அண்ணல் எனும் அறிவர் கொண்டுள்ள இடம் சித்தர் - அண்ணல் - வாயில். இதுவே சித்தண்ணவாயில், என்கிறார் க. நெடுஞ்செழியன்.

அண்ணவாயில் பெயர்க்காரணம்

சித்தன்னவாசல், அண்ணவாசல் ஒன்றியத்திற்குள் உட்பட்ட கிராமம். இவ்வூரில் மகாவீரருக்குக் கோவில் உள்ளது. மகாவீரர் அண்ணல் என அழைக்கப்படுகிறவர். வாயில் என்பது வெளி. இதுவே அண்ணல்வாயில். கி.பி ஏழாம் நூற்றாண்டில் அப்பர், இவ்வூரை அண்ணல் வாயில் என்று குறிப்பிட்டுப் பாடியுள்ளார். “கண்ணுதலோன் நுண்ணுமிடம் அண்ணல் வாயில்". இதே ஊர் பதினான்காம் நூற்றாண்டில் பராக்கிரமன் பாண்டியன் கல்வெட்டு அண்ணல்வாசல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக்கொண்டு பார்க்கையில் அண்ணல்வாயில் அண்ணவாசல் என்றும் பிறகு அது அன்னவாசல் என்று மருவியதைப் போல சித்தண்ணவாயில் சித்தண்ணவாசல் என்றாகி பிறகு அது சித்தன்னவாசல் ஆகியிருக்கிறது. சித்தன்னவாசல் கல்வெட்டுகளில் மேலும் பல சொற்கள் உண்டு. இச்சொற்களை அணுகுவதன் மூலம் அவ்வூரின் வரலாற்றைக் காலத்துடன் பொருத்த முடியும்.

இளங்கௌதமன்

இளங்கௌதமன் கி.பி 820 ஆண்டு காலத்தவர். இவ்வாண்டில் மதுரையை ஆண்டது சிரீ வல்லபன். இவனது பட்டம் ‘அவனிப சேகரன்’. இவனது அவையின் புலவராக இருந்தவர் இளங்கௌதமன். இவர் சித்தண்ணவாயிலுள்ள அறிவர் கோவிலுக்குத் திருப்பணி செய்திருக்கிறார். இதை முன்னிட்டு வடிக்கப்பட்டதே இக்கல்வெட்டு என்பது க.நெடுஞ்செழியனின் வாதம்.

பு.சி. தமிழரசன் இதை மறுக்கிறார். இளங்கௌதமன் செல்வவளம் படைத்த சமண சமய ஆசிரியர். இவர் மதுரையில் சமணம் பரப்பியதால் மதுரை ஆசிரியர் என்றானார். இவர் நார்த்தாமலை பகுதியைச் சார்ந்தவர், இவ்வூரிலிருந்த சமணப் பள்ளியில் பயிற்சி பெற்றவர். இவரே சித்தன்னவாசலிலுள்ள சமணர் கோவிலுக்குத் திருப்பணி செய்தவர். அப்போது இப்பகுதியை ஆண்டவர்கள் முத்தரையர். மேலும் சித்தன்னவாயில் கலைப் படைப்புகள் முத்தரையர் காலப் படைப்புகள் என்கிறார். முத்தரையர்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்களான பெரும்பிடுகு, விடேல்விடுகு, மாற்பிடுகு யாவும் பல்லவர்கள் முத்தரையர்களுக்கு வழங்கியவை என்கிறார்.

இளங்கௌதமன் வடித்திருக்கும் நீண்ட கல்வெட்டு செய்யுளில் மேலும் பல கலைச்சொற்கள் வடிக்கப்பட்டுள்ளன. கடவுள் நீலன், அருந்தவ முனிவன், அமணன் காணி, அண்ணல் வாயில், அறிவர் கோயில், ஆதிவேந்தர்.

நீலன் என்பவர் சமணத் துறவி என்கிறார் ஐராவதம். இதையே நெடுஞ்செழியன் ஆசீவகர் என்கிறார்.

அருந்தவ முனிவன்

அசீவகர் செய்த தவங்கள் அருந்தவங்கள். ஐந்து நெருப்புகளுக்கு இடையில் அமர்ந்த வண்ணம் செய்யும் தவமான ஐந்தீத்தவம் இவர்களது தவத்தில் முக்கியமானது. இதுதவிர பேசாமை, அசையாமை, காலை மடித்து அமர்தல், கழுத்து வரையிலும் புதையுண்டு நிற்றல், வௌவால் போல் தொங்குதல்,.. போன்றவையும் அடங்கும். முனிவன் என்கிற சொல்தான் இன்று முனைவன் என்றும் முனைவர் என்றும் திரிந்துள்ளன

ஆதிவேந்தர்

கல்வெட்டு குறிப்பிடும் ஆதிவேந்தர் என்பவர் இரிசபத் தேவர். இவர் 2500 ஆண்டுகளுக்கும் முன்பு சமண சமயத்தைத் தோற்றுவித்தவர் என்கிறார், பு.சி.தமிழரசன். இதை மறுக்கும் நெடுஞ்செழியன், ஆதிவேந்தர் என்கிற சொல் சித்தண்ணவாயில் ஓவியத்துடன் தொடர்புடையது. இந்த ஓவியங்கள் தக்கிண ஓவியம் வகையைச் சார்ந்தது. அதாவது தென்னிந்திய ஓவியம். இவ்வோவியம் வடக்கே விந்திய மலை முதல் தெற்கே இலங்கை வரை பரவியுள்ளது. அஜந்தா, பாக் மலைக் குகை ஓவியங்களும் இலங்கை சிகிரியா மலைச்சுவர் ஓவியங்களும் இந்த வகையைச் சார்ந்தவை.

சித்தன்னவாசல் ஓவியங்கள் பாண்டியர் குலத்தைச் சேர்ந்த ஆதிவேந்தர் என்பவரால் வரையப்பட்டது. இவர் சேகரன் என்னும் சிரீ வல்லவன் எனும் பாண்டிய மன்னனுடன் தொடர்புடையவர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனாக இருக்கலாம், என்கிறார். இவன் ஆசீவகத்தைத் தழுவியவன். ஓவியக் கலைகள் மீது அதீத விருப்பம் கொண்டவன். இவனே இந்த ஓவியத்தை வரைந்தான், என்கிறார் க.நெடுஞ்செழியன்.

அமணன் காணி

அமணன் என்பவர் சமணர். சமணர் கோயில்களில் விளக்கு எரித்தல் முதலிய பணிகள் செய்வோருக்கு வரி நீக்கி வழங்கப்பட்ட நிலம், அமணன் காணி என்பது பு.சி. தமிழரசனின் வாதம்.

அமணர் என்பவர் அசீவகர். அசீவகர்களின் அடையாளம் யானை. அசீவகர்களை சைவர்கள் வீழ்த்துகிறார்கள். இதன் அடையாளமாக பெரியபுராணம் பாடலில் சிவபெருமான் யானை அரக்கனைக் கொன்று, யானையின் தோலை உரித்து, அதன் இரத்த ஈரம் உலர்வதற்குள்ளாக தன் உடம்பில் போர்த்திக்கொள்கிறார். இதனால் சிவபெருமான் சட்டநாதர் - சட்டை நாதர் என அழைக்கப்படுகிறார். சீர்காழி சிவனுக்கு சட்டநாதன் என்று பெயர். இங்கு யானை என்பது அசீவகர்.

பெரியபுராணம் அசீவகர்களைச் சாதி அமணர் என்கிறது. ஆசீவகர்கள் அழகிய தலைமுடியுடன் இருப்பவர்கள். அருகர்கள் என்கிற சமணர்கள் தலைமுடியை நீக்கிக் கொண்டவர்கள். சித்தண்ணவாயில் ஓவியங்கள் தலைமுடியுடன் காட்சியளிக்கிறது. ஆகவே இந்த ஓவியத்திலிருப்பவர்கள் சைனர்களோ, பௌத்தர்களோ அல்ல, அசீவகர்கள். ஆகவே அமணன் காணி என்பது அசீவகர்கட்குரிய கொடை.

இதுதவிர சித்தன்னவாசலுடன் தொடர்புடைய பல சொற்கள் உள்ளன.

அந்தமில் விளக்கு - முடிவு இல்லாமல் இரவு பகல் இரு நேரமும் எரியும் விளக்கு.

நீடொளி விளக்கு - இரவு மட்டும் எரியும் விளக்கு

மெழுக்குப்புறம் - சித்தன்னவாசல் கோவில் வாசலைச் சாணம் கொண்டு மெழுகி தூய்மையாக வைத்துக்கொள்ளும் பணியாளருக்கு வழங்கப்பட்ட வரி நீக்கப்பட்ட நிலம்

நெய்ப்புறம் - கோவில்களில் விளக்கு எரிய நெய் வழங்குவோர்க்கு வழங்கப்பட்ட வரி நீக்கப்பட்ட நிலம்.

ஏழடிப்பாட்டம் - சமணர்கள் உறைவிடமாக விளங்கிய மலையின் குடைவுப் பகுதிக்கு ஏழடிப்பாட்டம் என்று பெயர். மலையின் மேலிருந்து குடைவிற்குச் செல்லும் மலைச்சரிவு வழியில் ஆபத்தான நிலை இருந்தது. அடிகளை எட்டி வைத்து ஏழு பாட்டங்களாக பாதையைக் கடக்க வேண்டியிருந்திருக்கிறது. ஆகவே இதற்கு ஏழடிப்பாட்டம் என்று பெயர்.

படுக்கை - ஏழடிப்பாட்டத்தில் 17 படுக்கைகள் உள்ளன. இவ்வொரு முனையிலும் தலையணை போன்ற அமைப்பு உள்ளது. ஆறு படுக்கைகளில் பத்து சமணர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மலையில் தங்கிய சமணர்கள் மற்றும் காலங்கள்

ஏழடிப்பாட்டம் மலையில் தங்கியவர்கள் ஆசீவகர்கள் எனச் சொல்லும் க. நெடுஞ்செழியன் இப்படுக்கையில் வடிக்கப்பட்டுள்ள பெயர்களை காலத்தோடு பொருத்தி இவர்கள் ஆசீவகர்கள் என நிரூபிக்கத் தவறியிருக்கிறார். இவர்கள் அனைவரும் ஆசீவகர்களாக இருக்க வாய்ப்பும் கிடையாது. காரணம் இவர்கள் கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை வெவ்வேறு காலத்தவர்கள். பு.சி தமிழரசன் தன் நூலில் இவர்கள் அனைவரும் சமணர்கள் என்று கால வரிசைப் படுத்தியுள்ளார். இதன்படி, குழுவூர் காவுதி ஈதேன் - சிறுபோசில் இளையர் (கி.மு 300 - கி.பி 200); கடவுளன் திருநீலன் - திட்டைச் சாணன்

(கி.பி.4 ஆம் நூற்றாண்டு) ; சிறுபூரணச் சந்திரன்- நியத்தகரன், பட்ட காலழி, சேண்நாடன் சிற்சேனன் கணன், கம்போதல் சாத்தன் பெந்தோடன், நக்கன், கொற்றன் காயவன் (கி.பி.5 ஆம் நூற்றாண்டு); திருச்சாத்தன்- எருக்காட்டூர் கட்டுளன் (கி.பி 6 ஆம் நூற்றாண்டு); சிரி திருவாசிரியன்- உலகாதித்தன்

(கி.பி 7ஆம் நூற்றாண்டு) ; கடவுளின் திருநீலன் - சிரியன் காலா (கி.பி 8 ஆம் நூற்றாண்டு); இளங்கௌதமன் - திருவேற்றான் (கி.பி 9ஆம் நூற்றாண்டு); கச்சமங்கல முடையன்- திருப்பூரணன் (கி.பி 13 ஆம் நூற்றாண்டு).

ஆசீவகமா - சமணமா?

சித்தண்ணவாயில் குடைவரைக் கோவிலில் மூன்று சிலைகள் உள்ளன. சிலைகளுக்கும் மேலாக குடைகள் வடிக்கப்பட்டுள்ளன. மூன்றில் நடுவிலுள்ள சிலைக்கும் மேலாக மூன்று குடைகள் ஒன்றின்மேல் ஒன்றாக வடிக்கப்பட்டுள்ளன. முக்குடைக்கும் கீழாக உள்ளவரே ஆசீவகத்தின் தோற்றுநர் மற்கலிகோசாலார் என்கிறார். ஆசீவகம் சமயத்தைத் தொடர்ந்து சமணம், பௌத்தம் தோன்றி இதற்கு மாற்றாக சைவம் ஆழமாக காலூன்றுகையில் ஆசீவகத்தின் தோற்றுநர் மற்கலிகோசாலார் அய்யனாராக மாற்றப்பட்டார், என்பதைத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்திருக்கிறார் க. நெடுஞ்செழியன். நாட்டார் வழிபாடுகளிலும் கிராம தெய்வங்களிலும் அய்யனார்க்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது. அய்யனார் ஆதி தமிழர்களின் வழிபாட்டுக் கடவுள்.

சித்தண்ணவாயிலில் நடுவிலுள்ள சிலைக்கு வடிக்கப்பட்டுள்ள மூன்று குடைகள்தான் இன்றைய அய்யனார் கோவில் திருவிழாக்களில் அய்யனாருக்கு குடையாகப் பிடிக்கப்படுகிறது, என்கிறார் இவர். மேலும் சைவ சமயம் ஆழமாக வேர்விட்டு மற்ற சமய அடையாளங்களை அழித்தொழிக்கும் வேலையில் இறங்குகையில் ஆசீவகம் வைணவ சமயத்துடன் இரண்டறக் கலந்தது, என்கிறார்.

வரலாற்றின் ஆதாரப் பூர்வமான உண்மையை விடவும் மக்களிடம் புழங்கும் வாய்மொழிக் கதைகள் வலுவானவை. பெரியபுராணக் கதைகளை விடவும் இராமாயணம், மகாபாரதக் கதைகள் மக்களிடம் பெரும் புழக்கத்தில் இருப்பதற்குக் காரணம் பிந்தைய இரண்டு இதிகாசங்கள் மக்களிடம் வாய்மொழிக் கதையாக இருப்பதுதான். பெரியபுராணம் தென்னிந்தியா குறிப்பாக தமிழக நிலத்தை அடித்தளமாகக் கொண்ட கதைகளாக இருந்தபோதிலும் இராமாயணம், மகாபாரதம் கதையளவுக்கு பெரியபுராணம் வாய்மொழி கதையாடலைக் கொண்டிருக்கவில்லை.

இது சித்தண்ணவாயில் உட்பட அனைத்து புராதன அடையாளங்களுக்கும் பொருந்தும். சித்தண்ணவாயில் மலையின் மீது வடிக்கப்பட்டுள்ள படுக்கை சமணப் படுக்கை என்றும் இங்குக் குடையப்பட்டுள்ள குடைவரைக் கோவிலிலுள்ள மூன்று சிற்பங்கள் சமணர்கள் என்றும் நீண்ட காலமாக மக்கள் கதையாடலிலும் வழக்கத்திலும் இருந்துவருகிறது. இவை ஒரு வகையான வரலாற்றுத் திரிப்பு என்கிறார் க.நெடுஞ்செழியன். ஆனாலும் மக்கள் சித்தன்னவாசலிலுள்ள தடங்கள் யாவும் சமணர் என ஏற்று அந்த வரலாற்றுடன் இரண்டறக் கலந்துவிட்டார்கள். இந்த வரலாற்றை மாற்றுவதும் அல்லது திருத்துவதும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. அதேநேரம் ஒன்றின் வரலாறு தவறாக இருக்கும்பட்சத்தில் காலம் தக்க நேரத்தில் அதைத் திருத்திக் கொள்ளும். அப்படியாக வரலாற்றின் முந்தைய கட்டமைப்புகளை மறுஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்கிற புள்ளியில் கொண்டுவந்து நிறுத்துகிறார் க. நெடுஞ்செழியன். அதற்கான அவசியமும் தேவையும் கொண்டதாக சித்தண்ணவாயில் இருக்கிறது.

- அண்டனூர் சுரா

Pin It