இந்து சமூகத்தின் பெண்களின் பிறப்பிலிருந்து இறப்பு வரை 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் துன்பமான, வருத்தத்துடன் கூடிய நீண்ட நெடிய கதை. பெண்கள் பூப்பெய்வதற்கு முன்னரே இளம் வயதில் மிக அரிதான சமயங்களைத் தவிர 5-10 வயதுக்குள்ளேயே பெரும்பாலும் திருமணம் நடைபெற்றது.
பெண்களுக்குக் கல்வி அளிக்கப்படவில்லை. ஏனெனில், படித்தால் விதவையாகி விடுவார்கள் என்ற அக்காலத்திய ஒரு குருட்டு மூட நம்பிக்கையே ஆகும்.
19ஆம் நூற்றாண்டின் முதல் அரைப்பாதியில் சில செல்வந்தர்களின் குடும்பத்தினர் தங்கள் எஸ்டேட்டுகளைப் பராமரிக்க, தங்கள் பெண்களை அனுமதித்தனர். இது தவிர, கிறித்தவ மிஷனரிகள் பெண் கல்வி முன்னேற்றத்திற்குப் பாடுபட்டனர்.இந்நிலையில், கல்வி கற்ற குடும்பத்தினர் பெண் களுக்கு ஆதரவு அளித்தாலும், பழைமையை நம்பு கிறவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். 19ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம் வரை மிகக் குறைந்த அளவே பெண்கள் கல்வி பயின்றனர். கிழக்கிந்தியக் கம்பெனியின் சமூக முன்னேற்றத் திற்கான செயல்பாடுகளில் பெண் கல்வியும் ஒன்றாக இருந்தாலும் அவர்கள் அதைப்பற்றிக் கவலைப்பட வில்லை; எந்த நடவடிக்கைகளையும் நடைமுறைப் படுத்தவில்லை.
பெண்கள் நோய்வாய்ப்பட்டபொழுது, பெண் மருத்துவர் இல்லாதபொழுது, நோயின் அறிகுறிகளைத் தங்கள் உறவினர் அல்லது தெரிந்த ஆண் மருத்து வரிடம் எடுத்துச்சொல்லி மருத்துவம் பெறுவர். பெண் நோயாளி, ஆண் மருத்துவரைப் பார்க்க சம்மதித்தாலும் ஒரு திரைக்குப்பின் அமர்ந்து கையை மட்டும் தெரியும்படி நீட்டியபடி இருக்க, நோயாளியின் நாடி பார்க்கப்பட்டது. ஒரு கண் மருத்துவர் கண் புரையை அகற்ற பெண்ணின் உடலை முழுவது மாகத் துணியால் மறைத்த நிலையில் கண்ணைச் சுற்றி ஓட்டையிட்டு அதன் வழியாகக் கண் புரைக்கான அறுவை புரிந்தார்.
பர்தா முறை
இதைவிட பர்தா முறையில் மிகவும் பரிதாபமானது. கருவுற்ற பெண் பிரசவ நேரத்தில் எவ்வளவு துன்புற்றாலும் ஆண் மருத்துவரால் மருத்துவம் அளிக்க மறுக்கப்பட்டு, கருவுற்றவர் இறந்து போவது நாளும் நடைபெறும் காட்சியாக இருந்தது.
பர்தா வழக்கத்தைத் தாண்டி, மூட நம்பிக் கையும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. சான்றாக, குழந்தை பிறக்கும் காலம் ஒரு பேய்க்கு உடைமையானது என்பதாகும். பிரசவத்திற்குப் பிறகு குழந்தை பெற்ற தாய்க்கோ அல்லது சேய்க்கோ நோய் வந்தால் அது துப்புரவு இன்மையாய் இருந் தாலும், அது பேயினால் என்று நினைத்து மருத்துவம் அளிக்கப்படமாட்டாது. இதனால் அதிக அளவு மரணம், தாய்க்கும் சேய்க்கும் ஏற்பட்டது.
மகளிர் மரணம் மூட நம்பிக்கையுடன், கருவுற்றவர் வாழும் நிலையையும், அவர் பழக்க வழக்கங்களையும் சார்ந்தும் இருந்தது. எடுத்துக் காட்டாக, உடற்பயிற்சி இன்மை, சத்துணவு இன்மை, சூரிய ஒளியின்றி வாழும் இல்லம், சுத்தமற்ற காற்று இல்லா சூழ்நிலை ஆகியவற்றினால் உடலில் இரத்தச் சோகை, வைட்டமின் குறைபாடு களினால் அதுவும் குறிப்பாக, வைட்டமின் ‘டி’ குறைபாடுகளினால், எலும்பு நலிவு கருவுற்ற காலங்களில் ஏற்பட்டது. சில நேரங்களில் வலிப்பு, கை, கால்களில் வீக்கம், இரத்தக் கொதிப்புடன் சன்னி கண்டு இறக்க நேரிட்டது.
மேலும் பிரசவ நேரத்தில் அப்பெண் வீட்டின் ஒரு தூய்மையற்ற மோசமான மூலையில் யாரும் அவருக்குப் பணிவிடை செய்யாத நிலையில், தனிமையில் கிடத்தப்படுவார். யாராவது பணிவிடை செய்ய முன்வந்தாலும், அவர் தூய்மையற்றுக் காணப் படுவார். இந்நிலையில், கருவுற்றவரும் குளிக்காது, தன் உடைமைகளைக் குழந்தை பிறக்கும்வரை மாற்றாது இருப்பதென்பது வழக்கமாக இருந்தது.
கருவுற்றவர் பிரசவிக்க அரசு அல்லது நகராட்சி மருத்துவமனைகளில் எந்தவிதத் தடையும் இல்லாத பொழுதும் அங்குப் பிரசவம் பார்க்க பெண் மருத்துவ உதவியாளர் இல்லாமையால் கருவுற்றவர்கள் செல்வது கிடையாது. மேலும் இவர்கள் பெண் தாதி, மருத்துவர்களைவிட தங்கள் வீட்டிற்கு வரும் உள்ளூர் மருத்துவச்சிகளிடம் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர்.
பிரசவத்தின்போது இத் தாதிகள் பிரசவம் பார்க்கும் முறைகள் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமாக இருந்தன. மேரி பிரான்சிஸ் பில்லிங்கன் என்ற இதழாசிரியர் இதைப்பற்றி 19ஆம் நூற்றாண்டு இறுதியில், “முதலாவதாக கருவுற்ற பெண்ணைச் சுவருக்கு அருகில் நிற்க வைத்து, தாதி தன் தலை யினாலோ அல்லது மடக்கிய தன் கால் முட்டி யினாலோ அடிவயிற்றில் தன் முழு பலத்துடன் அழுத்துவார்கள். இதனால் கருப்பை சுருங்கி விரிய முனையும். இத்துடன் சில மருந்துப் பட்டைகளின் கசாயத்தையும் கொடுப்பார்கள். முதிரா குழந்தை இறந்து பிறந்தாலும், மூங்கில் இலைக் கசாயத்தில் செப்புக்காசை முக்கி எடுத்தபின் குடிக்கக் கொடுப் பார்கள்,” என்று எழுதுகிறார்.
இதேபோல ஆர்.ஜெ. பிளாக்மேன் தன் “IndianIndianHouse Nursing (1913)” என்ற நூலில் “தன்னுடைய சாதாரண உடையை மாற்றி, ஓர் அழுக்குத் துணியைக் கட்டிக்கொண்டு, தாதி பிரசவம் பார்க்க வருவார்கள். கருவுற்றவருக்கு வலி வந்த ஆரம்ப காலத்திலேயே தாதி வந்துவிட்டால் கருவுற்ற தாய்க்கு மிக ஆபத்தாக அமையும். இதுவே சற்றுத் தாமதமாகப் பிரசவத்தின் கடைசி கட்டத்தில் வந்தால் தாய் தப்பிக்க வழி உண்டு. ஏனெனில், பிரசவத்தின் ஆரம்ப கட்டத்தில் தாதி வந்தால் கருவுற்றவரை அறைக்குள் ஓடவிட்டு, பாரமானதைத் தூக்க வைத்து, மண் தரையில் சம்மணமிட்டு உட்கார வைப்பார். இதில் பிரசவ வலி தோன்றி குழந்தை வெளிவராவிட்டால், வயிற்றின்மேல் கனமான பொருளை வைத்து புணர்வாயில் (யோனியில்) கந்தலான துணியைத் தக்கைபோல அடைப்பார்கள். இந்தச் செயல்களினால் கருப்பை சுருங்கி, பிரசவம் நிகழும். ஆனால் மேற்குறித்த செயல்களால் குழந்தை களுக்குக் காயம், தாய்க்கு இரத்த ஒழுக்கு மற்றும் புட்டம் கிழிவு ஆகியவை ஏற்படும் (State Medicine(State Medicineand Epidemic Disease in 19th century, 1933, p. 257).
இத்தனை இடர்பாடுகள் இருந்தும் கருவுற்ற பெண்களுக்காக அரசு, மருத்துவமனைகள் காலனி ஆட்சியில் இருந்தபோதிலும் அதில் பெண்கள் குறைந்த அளவே சிகிச்சை பெற்று பயன் பெற்றனர். இதற்கான காரணம். Ôஅன்றைய பர்தா முறையும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பெண் மருத்துவர், செவிலியர் இல்லாததுமாகும்.Õ இதன் காரணமாகவே பெரும்பாலும் கருவுற்ற பெண்கள் முறையான பயிற்சி பெறா பாரம்பரியத் தாதிகளிடம் முரட்டுத் தனமான, பழம் பாணியான மருத்துவ முறையாய் இருப்பினும் சிகிச்சை பெற்றனர்.
இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் முயற்சி யினால் மகளிர் மேலை மருத்துவம் கற்க மதராஸ் ராஜதானியில் பெண்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. இதனை முதன் முதலில் மதராசில் பெற்ற பெருமை ஸ்கர்லிப் என்ற இங்கிலாந்து பெண்மணியைச் சாரும். இதற்குப் பேருதவி செய்தவர் டாக்டர் டி. பால் போர் (Bal Four). ஆனால் சென்னை பொது ஜன செயல் துறை இயக்கம் அனுமதி அளிக்காது, இது “முதிர்ச்சியற்ற செயல்” என்று கூறி அனுமதி மறுத்தது. இருப்பினும், டாக்டர் பால் போர் விடா முயற்சியினாலும், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.சி பர்நெல் ஆதரவுடனும் 1875இல் ஸ்கர்லிப் மதராஸ் மருத்துவக் கல்லூரியில் படிக்க அனுமதிக்கப்பட்டு மருத்துவப் பட்டயம் பெற்றார்.
கோஷா மருத்துவமனை
1878-1882இல் ஸ்கர்லிப் இங்கிலாந்திற்கு மேல் படிப்பிற்காகச் சென்ற பொழுது, விக்டோரியா ராணியைச் சந்தித்து, இந்தியப் பெண்மணிகளுக்குத் தகுந்த பெண் மருத்துவர் இல்லை என்று எடுத்துக் கூறி, பிறகு இளவரசர் வேல்ஸ் மற்றும் இளவரசி வேல்ஸ் ஆகியோரிடமும் இதைப்பற்றிக் கூறினார். இந்தியாவிற்கு வந்து, தனது மருத்துவத் தொழிலை ஆரம்பித்து அளவுக்கு மிஞ்சிய நோயாளிகளுக்கு மருத்துவம் செய்தாலும், அதில் தான் மனநிறைவு கொள்ளாது பெண்களுக்காக மட்டும் ஒரு மருத்துவ மனை தொடங்குவதிலேயே நாட்டம் கொண்டார். இதற்கு உதவிட, மதராஸ் கவர்னர் மனைவி லேடி கிராண்ட் டஃபரின் (Grant Dufferin) மற்றும், சர்ஜன் ஜெனரலிடம் உதவி நாடினார். இவர்கள் துணையுடன் மதராசில் முக்கியப் பிரமுகர்களுடன் ஒரு கூட்டம் நடைபெற்றது. இம்மருத்துவமனையை எப்படித் தொடங்குவது என்பது பற்றியும் மற்றும் அதற்கான செலவினங்கள் குறித்தும் பேச மேதகு லேடி கிராண்ட் டஃபரின் தலைமையில் 1885 மார்ச் 6ஆம் தேதி ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் கஸ்தூரி பாஸ்யம் அய்யங்கார், திவான்பகதூர் ஆர். ரெங்க நாதராவ், விஜயநகர ராஜா, வெங்கடகிரி ராஜா, நீதியரசர் முத்துசாமி அய்யர், ராஜா சர் செவாலியர் ராமசாமி முதலியார் ஆகியோர் உயர்சாதி மற்றும் கோஷா பெண்களுக்காக மருத்துவமனை உருவாக்கக் கூடினர். இம்மருத்துவமனையை உருவாக்க அக் கூட்டத்திலேயே ரூ. 70 ஆயிரம் திரட்டப்பட்டு, 1885 டிசம்பர் 7ஆம் தேதி மேதகு லேடி கிராண்ட் டஃபரினால் மருத்துவமனை திறக்கப்பட்டது. இம்மருத்துவமனையை நிறுவ முயற்சி எடுத்த டாக்டர் ஸ்கர்லிப் முயற்சியால் இம்மருத்துவ மனைக்கு இராணி விக்டோரியா பெயர் வைத்திட இராணியின் அனுமதி பெற்று சூட்டப்பட்டது.
இம்மருத்துவமனை தொடங்க, திருவாங்கூர் ராஜா, புதுக்கோட்டை ராஜா, ஆற்காடு இளவரசர் ஆகியோரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
(The Madras Centenary Commemoration, volume,(The Madras Centenary Commemoration, volume,New Delhi, Asia Education Service, 1994)
சேப்பாக்கத்தில் மருத்துவமனை
இம்மருத்துவமனை தொடக்கத்தில் நுங்கம் பாக்கத்தில் மூர்கார்டனில் உள்ள மாண்புமிகு மிர் ஹ§மாயூன் ஷா பகதூரின் வீட்டில் வாடகையின்றி ஆரம்பிக்கப்பட்டது. பிறகு, திருவல்லிக்கேணியிலிருந்து சேப்பாக்கத்திற்குச் சிறிது தெற்கில் அரசு 1890இல் இடத்துடன், மருந்து வாங்க ரூ. 10 ஆயிரம் அளித்த பிறகு, மருத்துவமனைக்கான கட்டடங்கள் நிரந்தரமாகக் கட்டப்பட்டன. கண்காணிப்பாளர் வீடு கட்ட விஜயநகர ராஜா ரூ. 32 ஆயிரம், உள்நோயாளிகள் பிரிவு கட்டடங்கள் கட்ட மதராஸ் விக்டோரியா மகாராணியின் மகளிர் சேமநல நிதியிலிருந்து ரூ. 50 ஆயிரம் பெறப்பட்டு அவற்றின் பிரசவக்கூடம் மற்றும் தொற்றுள்ளவருக்குப் பிரசவம் பார்க்க ஒரு கூடம், லேடி பாஸ்யம் அய்யங்காரினால் கட்டப் பட்டு மருத்துவமனை திறக்கப்பட்டது. அப்போது கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றவர் குமாரி ஹென்ரிக் (Hendric).
ஆரம்பத்தில் இம்மருத்துவமனை டஃபரின் நிதியத்தின் கண்காணிப்பில் இருந்து வந்ததை, அரசு 1921 ஏப்ரல் 16ஆம் தேதி தனக்குக் கீழ் கொண்டு வந்தது. இதன் முதல் கண்காணிப்பாளராக மேரி பியூடன் (Mary Beadon) பொறுப்பு வகித்தார். பிறகு குமாரி மேதகு லசாரஸ்சும், மதுரமும் முதல் இரண்டு இந்தியக் கண்காணிப்பாளர்கள் என்ற பெருமை பெற்றனர்.
இம்மருத்துவமனை செயல்பாடுகளில், குறிப் பிடும் படியான ஒரு செய்தி. பிராமணர், சூத்திரர், இஸ்லாமியர் ஆகியோருக்குத் தனித்தனியான படுக்கைக்கூடங்களும் இருந்தன. உயர்சாதிக்கென்று உயர்சாதிக்காரர்களால் தனிச் சமையலும் நடை பெற்றது. (Billington Women in India, p. 107)
பிரசவத்திற்காகத் தொடங்கிய இம்மருத்துவ மனையில் பொதுவாக மற்ற நோய்களுக்கும் தனித் தனிப் பகுதிகள் தற்பொழுது இயங்கி வருகின்றன.
வேல்ஸ் இளவரசர் இந்திய வருகையை நினைவுகூர, 1922இல் பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட பணத்தால் குழந்தைகள் மருத்துவ மனை, பழைய மருத்துவமனையை ஒட்டியபடி கட்டப்பட்டு, 1936 ஏப்ரலில் 52 படுக்கைகளுடன் திறக்கப்பட்டது.
ஆண்டுக்கு ஆண்டு நோயாளிகளின் வருகை பெருகிய இன்றைய காலகட்டத்தில் ஓர் ஆராய்ச்சிக்கான மருத்துவமனையாகக் கஸ்தூரிபாய் மருத்துவமனை என்று பெயர்மாற்றம் பெற்று நடைபெற்று வருகிறது.
வேலூரில் மகளிர் மருத்துவமனை / சி.எம்.சி. தோற்றம்
டாக்டர் இடா ஸ்கட்டருக்கு முன் அவர் தந்தை டாக்டர் எச்.என்.ஸ்கட்டர் நடத்திய மருத்துவ மனையில், ஆரம்ப காலத்தில் மருத்துவம் பெற மிக கவனத்துடன், கொஞ்சம் வெட்கத்துடன் மற்றும் பீதியுடனே கீழ்மட்ட சாதியினரே வந்தாலும், பிறகு இந்நிலை படிப்படியாக மாறியது. குறிப்பாக, உயர்மட்ட இந்துக்களும், இஸ்லாமியர்களும்கூட எந்தத் தயக்கமுமின்றி மருத்துவம் பெற்றனர். இதில் ஒரு செய்தி என்னவெனில், மருத்துவமனையில் மருத்துவம் பெற்ற பலர், மருத்துவமனைக்குள்ளேயே கிறித்தவ சமயத்தைத் தழுவினர். இது அம்மருத்துவ மனையை நடத்திய ஆங்கில மிஷனரிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இந்நிலையில், டாக்டர் ஸ்கட்டர் ஒவ்வொரு மிஷனரியும் ஒரு கையில் வேதத்தை வைத்துக்கொண்டு, மருத்துவம் செய்ய மற்றொரு கையைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால், பல மிஷனரிகள் (1830) இது போல் மருத்துவ சேவை செய்யாது உள்ளனர் என மனம் வருந்தினார். இதற்குப் பிறகே தந்தையுடன் டாக்டர் இடா ஸ்கட்டர் 1900இல் இந்தியாவிற்கு வருகையுற்ற காலத்தில் மிகச்சில இந்திய, மேலை நாட்டு மகளிர் மருத்துவர் மற்றும் பயிற்சி பெற்ற தாதிகள் ஆகியோரால் பிரசவம் பார்க்கப்பட்டது. என்னென்ன உத்திகளைக் கையாண்டால் மகளிர் மருத்துவத்தை மேம்படுத்தலாம் என்ற நோக்கோடு இந்தியாவின் சிறந்த மருத்துவ மேதைகளுடன் இடா ஸ்கட்டர் நட்பு கொண்டாடினார்.
அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வட இந்தியாவில் வசித்த அமெரிக்க மிஷனரியான சி. ஸ்வெய்ன் (C. Swain), ஐரிஷ் திருச்சபையைச் சேர்ந்த சூசன் பிரவுன் (Susan Brown), பூனே டாக்டர் லென்டிஸ் பெர்னார்ட் (Lentice Bernard), டாக்டர் பிராட்லி (Dr Bradley), ரெபெகா வாக்கர் (Rebecca Walker), டாக்டர் ஃபென்னி காமா (Dr Fenny Cama), முதன்முதலில் இந்தியாவில் மருத்துவப் பட்டம் பெற்ற டாக்டர் ஆனந்தபாய் ஜோஷி, பிறகு வெளிநாட்டில் பட்டம் பெற்ற மருத்துவப் பெண்மணி, மற்றும் ராயபுரம் மருத்துவ மனையைத் திறக்கக் காரணமாக மால்டிடா மாக்ஹெல் (Maltida Mchail) ஆகியோர்களாவர். (Improvement of the Conditions of Child Birth in India, p. 2)
டாக்டர் இடாவிற்கு ஏன் இந்த ஆர்வம் தோன்றியது?
1820இல் டாக்டர் ஜான் ஸ்கட்டர் இந்தியாவில் மதுரை மற்றும் சென்னையில் துயருற்றவர்களுக்குத் தன் பணியை அர்ப்பணித்து வந்தார். பிறகு இராணிப்பேட்டையில் வசித்தபோது 1870 டிசம்பர் 9இல் இவருக்கு இடா ஸ்கட்டர் பிறந்தார். இடா சிறுமியாகத் தன் பெற்றோருடன் வசித்தபோது, ஓர் இரவு மூன்று முறை உள்ளூர்வாசிகள் தங்கள் வீடுகளுக்குப் பிரசவம் பார்க்க அழைத்தனர். இடாவிற்குப் பேறு கால மருத்துவம் பற்றிய பயிற்சி இல்லை. ஆகவே, ஏதும் செய்ய முடியவில்லை. தந்தை ஒரு டாக்டராக இருப்பினும், சமூகத்தில் இருந்த சில சமூகக் கட்டுப்பாடுகளின் காரணமாக, ஆண் டாக்டர் என்பதால் பிரசவம் பார்க்க அனு மதிக்கப்படவில்லை. விடிந்தவுடன் இடாவிற்குப் பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. இரவில் இடாவை மருத்துவம் பார்க்க அழைக்கப்பட்ட வீடுகளில் இருந்த மூன்று கருவுற்ற பெண்களும் இறந்து விட்டனர். அப்போது, “இதுவே இந்திய மகளிரைக் காப்பாற்ற, மருத்துவ நிறுவனங்களை நிறுவ, கடவுள் கட்டளையிட்ட நாள்!” என்று இடா நினைத்தாராம்.
இதன்பிறகு, அமெரிக்காவிற்குச் சென்று, பிளடெல்பியாவில் உள்ள கார்நெல் (CORNEL) பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, 1895இல் மருத்துவப் பட்டம் பெற்று இந்தியாவிற்குத் திரும்பினார்.
முதன்முதலில் மருத்துவத் தொழிலைத் தன்னுடைய தந்தையின் வீட்டிலேயே தொடங்கினார். இதுவே பிறகு மேரி தாபர்செல் மருத்துவமனை ஆனது. அதன் பிறகு, ஒரு மருத்துவ ஆலோசனைக்கூடம் 1906இல் ஆரம்பிக்கப்பட்டு, அங்குப் போய்வர குதிரை வண்டி பயன்படுத்தப்பட்டது. இவருக்கு உதவியாக இருவர் வேலைக்கு அமர்த்தப்பட்டு ஒருவர் ஆவணங்களை ஒழுங்குபடுத்தவும், மற்றொருவர் மருந்து தயாரித்துக் கொடுக்கவும் உதவி வந்தார்கள். பிறகு இது 1924இல் தொட்டிப்பாளையத்திற்கு மாற்றலானது.
வேலூரில் கிறித்தவ மருத்துவக் கல்லூரி 1918இல் டாக்டர் இடா ஸ்கட்டரால் ஆரம்பிக்கப்பட்டது. இவரே இதன் முதல் முதல்வர். ஆரம்பத்தில் மகளிர் மருத்துவர்களுக்குத் தகுந்த பயிற்சி அளிக்கப் பட்டது. ஆரம்பத்தில் எல்.எம்.பி. 1933 வரை நடை பெற்று, பிறகு டி.எம். & எஸ். படிப்பும் நடை பெற்றது. 1942இல் மதராஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்தது.
முதல் தொகுதியில் 25 மாணவர்கள் படித்தனர். இடா ஸ்கட்டர் 1944-இல் ஓய்வு பெற்றார். பிறகு, சிறப்பு நிலை முதல்வராக 1947 வரை நீடித்தார். இவ்வாண்டு 10 ஆண்கள் படிக்க தேர்வு ஆனார்கள். இக்கல்லூரி அமெரிக்கன் காலேஜ் ஆப் ஏசியா நிதி மூலம் நடைபெற்றது. இதற்குப் பெரும் உதவியாகப் பணியாற்றியவர் திருமதி ஹென்றி வபிய போடி.
இது தவிர, 8 வட அமெரிக்க மிஷனரிகளும், 5 பிரிட்டிஷ் மிஷனரிகளும் உதவிக் கரம் நீட்டின. தற்பொழுது 39 இந்திய தேவாலயங்களுடனும் மிஷனரி சபைகளுடனும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, டென்மார்க் தேசத்தின் மிஷனரிகளும் உதவுகின்றன.
1907இல் ஸ்கட்டர் வேலூர் செவிலியர் பயிற்சி நிலையத்தைச் செல்வி யூக்டனை (Houghton) தலைமை மருத்துவராகப் பணியமர்த்தி ஆரம்பித்தார். இதன்மூலம் முதன்முதலில் வீடுகளுக்குச் சென்று, மேலை மருத்துவ முறையில் செவிலியர்கள் பிரசவம் பார்க்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, டாக்டர் ஸ்கட்டரால் பள்ளி கொண்டாவிலும், குடியாத்தத்திலும் மருந்தகங்கள் தோன்றின.
இவருடைய மகத்தான மருத்துவசேவையைப் பாராட்டி இந்திய அரசு 1939இல் “Kiser I India” என்ற விருதுடன் தங்கப்பதக்கமும் வழங்கியது. (Growth(Growthof Medical Education, p. 59)
கல்யாணி மருத்துவமனை: (மெதோடிஸ்ட் மதராஸ் மிஷனரி சங்கம்)
கல்யாணி மருத்துமனையைத் தொடங்கியவர் திவான்பகதூர் நாராயணய்யர் சுப்பிரமணியம். இவர் பாரிஸ்டர் படித்து வழக்கறிஞராக மதராஸ் உயர்நீதி மன்றத்தில் பணியாற்றியபிறகு அட்மினிஸ்ட்ரேடிவ் ஜெனரல் மற்றும் மதராஸ் ஆபிஸ் டிரஸ்டியாகப் பணி யாற்றியவர். இவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். என்றாலும், பிறகு கிறித்துவமதத்தைத் தழுவியவர். இவர் மதராஸ் மைலாப்பூரில் தன் தாய் கல்யாணி நினைவாக மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனையை உருவாக்கி லண்டன் மெதோடிஸ்ட் மிஷனரியிடம் இதனை நடத்துமாறு ஒப்படைத்தார். பின்னர் இம்மருத்துவமனை தென்னிந்தியக் கிறித்துவ சபையினரால் நடத்தப்பட்டது. இம்மருத்துவ மனையை 1909இல் திறந்தவர் மெதோடிஸ்ட் மிஷனரியைச் சார்ந்த லேடி ஒயிட். அந்நிலையில் 24 படுக்கைகளுடன் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் செவிலியர்களால் நடத்தப்பட்டது. இம்மருத்துவமனை இன்றும் பெரிய அளவில் மிகச் சிறப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.(Improvement(Improvementof the Conditions of Child Birth, P. 122,V. Gayathri thesis. o. 213)
ஆர்.எஸ்.ஆர்.எம். மகளிர் மருத்துவமனை
சர் ராமசாமி முதலியாரின் தங்கிப் பார்க்கும் பிரசவ மருத்துவமனை வட சென்னையில் மணியக் காரச் சத்திரத்தில் 1880இல் டியூக் பக்கிங்ஹாமினால் தொடங்கி வைக்கப்பட்டது. இம்மருத்துவமனையின் பராமரிப்புக்காக, ராமசாமி முதலியாரின் அறக் கட்டளை ரூ. 15 ஆயிரம் வழங்கியது.
பொது மருத்துவமனைகளில் சேர்ந்து பிரசவம் பார்க்க விரும்பாத மேல்குடி மக்களும், தங்கள் ஆசாரத்தையும், சமூகப் பழக்க வழக்கங்களையும் விட்டுக் கொடுக்காது இருப்பவர்களும் அப்படி விட்டுக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படு மானால் இறப்பதற்குக் கூடத் தயாராக இருந்தவர் களும் இந்த மருத்துவமனையில் சேர்ந்து மருத்துவம் பெற்றனர். இதன் காரணமாக மருத்துவமனை தொடங்கிய முதல் ஆண்டு 150 பெண்கள் பிரசவம் பார்த்துக் கொண்டார்கள்.
32 படுக்கைகளே கொண்ட இம்மருத்துவமனையில் நோயாளிகளைக் கவரும் வண்ணம் ஸ்பிரிங் கட்டில், படுக்கைத் தலையணைக்கு உறைகள், சுவருக்கு வண்ணப் பூச்சு, அறை நடுவில் அலங்காரப் பூச்செடிகள் ஆகியவை - அதாவது ஒரு சராசரி மருத்துவமனையில் கிடைப்பதை விடக் கூடுதலான வசதிகள் - இங்குத் தரப்பட்டன.
மருத்துவமனையும் சற்று விசாலமாக, காற்றோட்டமாக இருந்தது. இதில் ஒரு விதியாக உழைக்கும் பெண்கள், ஊட்டம் குறைவானவர்கள், 19 வயதுக்குக் குறைந்தவர்கள் பிரசவமாவதற்கு முன்பு 15 நாட்கள் தங்க அனுமதிக்கப்பட்டார்கள். (Billington, Women in India, p. 10)
இங்கிலாந்து ராணியின் 50ஆவது பிறந்த நாள் நினைவாக, மற்றொரு உள்நோயாளி தங்கும் பகுதி திறக்கப்பட்டு, பின்னர் மேலும் ஒன்று அவர் இந்திய வருகையை முன்னிட்டும் திறக்கப்பட்டது. ஏனெனில், இம்மருத்துவமனையின் அருமை பெருமைகளை அறிந்த மக்கள் நெடுந்தொலைவிலிருந்து ஏராளமாக வந்து மருத்துவம் பெற்றனர். இதன் காரணமாக சர் செவாலியர் ராமசாமி முதலியாரால் தொடங்கப் பட்ட இம்மருத்துவமனை இந்தியாவில் சிறந்த ஒரு மருத்துவமனையாக இயங்கியது. 1914இல் ராமசாமி முதலியார் இம்மருத்துவமனையை முனிசிபாலிடியிடம் ஒப்படைத்தார். இம்மருத்துவமனையே ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை என்று இன்றும் நடைபெற்று வருகிறது.
இப்பெண்களுக்கான மருத்துவமனையைக் கட்டிய சர் ராமசாமி முதலியாரைப் பற்றிய சில கூடுதல் செய்திகள்: சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அருகில் பழைய மூர் மார்க்கெட் எதிரில் ஸீக்ஷதராடனம் செய்யக்கூடிய யாத்ரிகர்கள் இலவசமாகத் தங்குவதற்கான சத்திரம், 1899இல் திருப்பாப்புலியூரில் தாய் சேய் மருத்துவமனை, காஞ்சிபுரத்தில் இன்னொரு மருத்துவமனை ஆகியவற்றையும் திறந்த வள்ளல் ஆர்.எஸ். ராமசாமி முதலியார் ஆவார்.
முடிவுரை
காலனி ஆட்சியில் பயிற்சிபெறா தாதிகளிட மிருந்து வீட்டில் பிரசவம் பார்ப்பதைத் தவிர்க்க, தங்கிச் சிகிச்சை பெறக்கூடிய லையிங்-இன்- ஹாஸ்பிடல் (Lying - in - Hospital) மதராசில் மே 1844இல் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1868 அக்டோபர் 17ஆம் நாள் மதராஸ் பொது மருத்துவமனையிலிருந்து பிரிந்து தாய் சேய் மருத்துவமனை எழும்பூரில் தொடங்கப்பட்டது.
இருப்பினும், இப்பொது மருத்துவமனைகளில் பெண் மருத்துவர், செவிலியர் மட்டும் பணிபுரியாத காரணத்தாலும், மேட்டுக்குடி மக்கள் எல்லோருக்கும் சமமான சிகிச்சை மற்றும் உணவை இதுபோன்ற மருத்துவமனைகளில் ஏற்றுக்கொள்ளாத காரணத் தாலும் சர். ராமசாமி முதலியார் மகளிர் மருத்துவ மனை மற்றும் கோஷா மருத்துவமனை ஆரம்பிக்கப் பட்டுள்ளதை வரலாறு தெரிவிக்கிறது. ஆனால், இதற்கு மாறாக எல்லோருக்கும் என்ற நிலையில் வேலூர் மகளிர் மருத்துவமனை தொடங்கப்பட்டு உள்ளதும் ஒரு செய்தியாகும்.