2nd worlwar book 450தொடர்ந்து மனித சமுதாயம் வரலாற்றில் மாறிக்கொண்டும், வளர்ந்து கொண்டும், விரிந்து கொண்டும் இருப்பதைக் காண முடிகிறது.  தொடக்கத்தில் பல வகையான மாற்றங்களுக்கு உள்ளான மனித குலம், ஒரு கட்டத்தில் சமுதாயமாக வாழத் தொடங்கி, சிற்றரசுகளாக வடிவம் பெற்று, மாறிமாறி வளர்ந்து, பேரரசாக விரிந்து வாழத் தொடங்கியது.  மனித வரலாறு நெடுகிலும் பல வகையான போர்கள் நடந்து வந்ததை, ஆவணங்கள் அடிப்படை ஆதாரமாக விளங்கிப் புலப்படுத்துகின்றன. வரலாற்றில் போர்களுக்கான காரணங்கள் குறித்த மாறுபட்ட கருத்துக்களும் உலகளாவிய அளவில் சொல்லப்பட்டு வருவதைக் காண முடிகிறது.

மனித சமுதாயம் தனது ஆக்கங்களின் வாயி லாகவும், அழிவுகளின் வாயிலாகவும் தொடர்ந்து இருப்பதோடு மட்டுமல்லாமல், மாற்றங்களினூடே, தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த உண்மையை அறிவியல் கண்ணோட்டத்துடன் விரிவாக விளக்குவது “இரண்டாம் உலக யுத்தம்” என்னும் இந்த நூலின் அடிப்படை நோக்கமாக அமைந்துள்ளது.

அங்கும் இங்குமாக, முன்னும் பின்னுமாக பல வகையான வடிவங்களில் சொல்லப்பட்ட இரண்டாவது உலக யுத்த வரலாறு இந்த நூலில் ஒரு முழுமையான தொகுப்பாக அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு.  தகுந்த புள்ளி விவரங்களோடு தகவல்கள் முன் வைக்கப்பட்டுள்ளதால் இந்த யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவு மனதைக் கலக்குவதாக உள்ளது.  இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னணியில் அடங்கியிருந்த பல வகையான தகவல்களை ஆசிரியர் விருப்பு வெறுப்பு இல்லாமல் தெளிவாக விளக்குகிறார்.

இதன் முன்னுரையில் நூலாசிரியர் வி.அ. மத்சுலேன்கோ இரண்டாம் உலக யுத்தப் பின்னணியைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்குவது வாசிப்புக்குத் தூண்டக் கூடியதாக உள்ளது.

பதினெட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு, உலகம் முழுவதுமாகப் பெரு மளவில் விரிவாக மாற்றங்கள் நிகழ்ந்தன.  அதைக் கருத்தில் கொண்டு, அடுத்து வந்த நூற்றாண்டுகளில் உலகளாவிய அளவில் நிகழ்ந்த நிகழ்வுகளை ஆய்வு செய்தால் பலவகையான உண்மைகளைக் கண்டறிய முடியும்.

அதை, “முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி மேலும் ஆழமடைந்து வந்த சூழ்நிலைகளில் தோன்றிய இரண்டாம் உலக யுத்தம் (1939-1945), ஏகாதிபத்திய அரசுகள் பின்பற்றிய ஆக்கிரமிப்பு சோவியத் எதிர்ப்புக் கொள்கையின் நியதியான விளைவாக அமைந்தது.  உலகம் முழுவதையும் தனக்கு அடிமைப்படுத்தி அடக்கியாள வேண்டும் என்று முயலும் ஏகாதிபத்தியத்தின் சாராம்சத்திலேயே இந்த யுத்தத்தின் காரணங்கள் அடங்கியுள்ளன.” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

அதோடு, இன்னொரு கண்ணோட்டத்தையும் அவர் அடையாளப்படுத்துகிறார்: “ஒருபுறம் ஹிட்லரின் ஜெர்மனி, பாசிச இத்தாலி மற்றும் இராணுவ வெறி கொண்ட ஜப்பானும், மறுபுறம் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்க ஐக்கியநாடும் இருந்தன.  ஆனால், இந்த இரு தரப்புகளுக்கிடையே கடுமையான போராட்டம் நிலவினாலும் சோவியத் யூனியனின்பாலும், சோசலிசக் கட்டுமானத்தில் அது அடைந்த வெற்றிகளின்பாலும், சர்வதேச அரங்கில் இதன் செல்வாக்கு வளர்ந்து வருவதன்பாலும் உள்ள வர்க்க வெறுப்பு இந்நாடுகளுக்குப், பொதுவானதாக இருந்தது.”

தொடர்ந்து அவர் சூழ்நிலைமைகளின் மாற்றத்தைக் குறிப்பிடுகிறார்:  “இரண்டாம் உலக யுத்தம், ஏகாதி பத்திய யுத்தம் என்ற வகையில் முதலாளித்துவ அரசுகளின் இரண்டு கோஷ்டிகளுக்கிடையே தொடங்கியது.  சோவியத் யூனியனின் மீது பாசிச ஜெர்மனி தாக்கியதால் சோவியத் யூனியன் யுத்தத்தில் இறங்க நேரிட்டதும், ஹிட்லர் எதிர்ப்புக் கூட்டணி தோற்று விக்கப்பட்டதும், யுத்தத்தின் நியாயமான, பாசிச எதிர்ப்புத் தன்மையை ஊர்ஜிதப்படுத்தின.”

அடுத்த கட்ட நிலைமையை அவர் மேலும் தெளிவுபடுத்துகிறார்: “யுத்தத்தின் போக்கில் சோவியத் யூனியனின் அரசியல் இலட்சியங்களும், அமெரிக்கா, பிரிட்டன்,  பிரான்ஸ் மற்றும் மேற்கத்திய வல்லரசுகளின் அரசியல் இலட்சியங்களும் எல்லாவற்றிலும் ஒத்துப்போகவில்லை.  ஆனால், பாசிச அரசுகளை முறியடிப்பதில், இந்நாடுகளுக்கு இருந்த பொது அக்கறை இராணுவ - அரசியல் கூட்டின் அடிப்படையாக அமைந்தது.”

மேலும், அங்கு உருவான புதிய நிலைமைகளைப் பற்றி அவர் கூர்மையாக வெளிப்படுத்து கிறார்:  “ஐரோப்பாவில், நேசநாடுகள் இரண்டாவது போர் முனையைத் தொடங்கும் பிரச்சினையில் முரண்பாடுகள் மிக வெளிப்படையாகவும், கூர்மை யாகவும் வெளிப்பட்டன.  சோவியத் யூனியன் தன்னந் தனியாகவே பாசிச ஜெர்மனியை முறியடிக்கும் என்பது 1944-ஆம் ஆண்டு கோடையில் அனை வருக்கும் தெள்ளத் தெளிவாகப் புரியும் வரை அமெரிக்காவும், பிரிட்டனும் இந்தப் போர் முனையைத் தொடங்குவதை இழுத்தடித்தன.”

அவருடைய யுத்தம் பற்றிய மதிப்பீட்டை இப்படித் தெளிவுபடுத்துகிறார்:  “இரண்டாவது உலக யுத்தம் மனிதகுல வரலாற்றிலேயே மிகப்பெரும் யுத்தமாக அமைந்தது.  உலக மக்களில் 80 சதவிகிதத் திற்கும் அதிகமானோர் இந்த யுத்தத்தில் இழுக்கப் பட்டனர்.  இராணுவ நடவடிக்கைகள் மூன்று கண்டங் களிலும் பெரும் கடல் பரப்புகளிலும் நடைபெற்றன.

“பாசிச ஜெர்மனி மற்றும் அதன் கூட்டாளிகளின் தாக்குதலை தன்மீது ஏற்றுக்கொண்ட சோவியத் மக்களின் மாபெரும் தேசபக்தயுத்தம் (1941-1945) இரண்டாம் உலக யுத்தத்தின் முக்கிய அங்கமாகும்.  சாராம்சத்தில் மூன்று ஆண்டுகளுக்கு சோவியத் மக்கள், பாசிச ஜெர்மனியின் தலைமையிலான அரசுகளின் கூட்டணியை எதிர்த்துத் தன்னந்தனியாகப் போரிட்டனர்.  கிழக்கிந்தியப் போர் முனையில்தான் பாசிச ஜெர்மனியின் இராணுவ பலம் தவிடு பொடி யாக்கப்பட்டது.  கடுமையான  சமர்களில் பாசிசம் முறியடிக்கப்பட்டது.  இரண்டாம் உலக யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிட்ட நாஜி ஜெர்மனி 1945-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி சரணடைந்தது.  செப்டம்பர் 2-ஆம் தேதி குவாண்டுங் இராணுவம் சோவியத் இராணுவத்தால் முறியடிக்கப்பட்ட பின் இராணுவ வெறி கொண்ட ஜப்பான் நிபந்தனையின்றி சரணடையும் ஒப்பந்தம் கையெழுத்தானது.”

‘இரண்டாம் உலக யுத்தம்’ என்ற இந்த நூலில் வி.அ. மத்சுலேன்கோ, இரண்டாம் உலக யுத்தத்தை 5 காலகட்டங்களாகப் பிரித்து விளக்கி உண்மைகளைத் தெளிவுபடுத்துகிறார்.

முதல் காலகட்டம் (1939 செப்டம்பர் 1-1941 ஜூன் 21) - யுத்தத்தின் தொடக்கம், மேற்கு ஐரோப்பிய நாடுகளினுள் ஜெர்மனியத் துருப்புகள் நுழைந்தன. 

இரண்டாவது காலகட்டம் (1941 ஜூன் 22-1942 நவம்பர் 18) பாசிச ஜெர்மனி சோவியத் யூனியன்மீது தாக்குதல் தொடுத்தது.  யுத்தம் விரிவடைந்தது.  பிலித்ஸ்கிரிக் (மின்னல் யுத்தம்) எனும் ஹிட்லர் சித்தாந்தம் தவிடு பொடியானது.

மூன்றாவது காலகட்டம் (1942 நவம்பர் 19-1943 டிசம்பர் 31) யுத்தத்தின் போக்கில் அடிப்படை மாற்றம், பாசிசக் கூட்டின் தாக்குதல் போர்த் தந்திரத்தின் தோல்வி.

நான்காவது காலகட்டம் - (1944 ஜனவரி - 1 - 1945 மே - 9) ஐரோப்பாவில் பாசிசக் கூட்டின் முறியடிப்பு, எதிரி ராணுவத்தை, சோவியத் யூனியனின் எல்லைகளுக்கு அப்பால் விரட்டியது.  இரண்டாவது போர்முனையை ஆரம்பித்தது.  ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்தது, பாசிச ஜெர்மனியின் முழுத்தோல்வி, இதன் நிபந்தனையற்ற சரணடைவு.

ஐந்தாவது காலகட்டம் (1945 மே 9- செப்டம்பர் 2) - ஏகாதியத்திய ஜெர்மனியின் முறியடிப்பு, ஆசிய மக்களை ஜப்பானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்தல் இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவு.

“இரண்டாம் உலக யுத்தம் மக்களுக்கு அளவற்ற துக்கத்தையும், சுமைகளையும், இழப்புகளையும் கொண்டு வந்தது.  இந்த யுத்தத்தில் 50 மில்லியனுக்கும் கூடுதலானோர் உயிரிழந்தனர். 4 திரில்லியன் டாலர்கள் பொருட் சேதம் ஏற்பட்டது.  ஐரோப்பா விலும், ஆசியாவிலும், மற்ற கண்டங்களிலும் எண்ணற்ற நகரங்களும், கிராமங்களும் தரைமட்ட மாக்கப்பட்டன.  மனித மேதமையின் ஏராளமான மாபெரும் படைப்புகள் மறைந்து போயின.  பல இலட்சக் கணக்கான மக்கள் காயங்கள், நோய் நொடிகள், பட்டினியால் வாடினர்.  ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட இரண்டாம் உலக யுத்தத்திற்கு அளிக்கப்பட்ட விலை இவ்வளவு பயங்கரமானதாக இருந்தது.”

இரண்டாம் உலகயுத்தம் தொடங்கிய சூழலை நூலாசிரியர் தகுந்த புள்ளி விவரங்களுடன் விளக்கு கிறார்: “யுத்தத்தின் தொடக்கத்தில் பாசிச ஜெர்மனியின் தலைமை போலந்தின் மேற்கு எல்லையில் பெரும் சக்திகளைக் குவித்தது.  இவற்றில் 62 டிவிசன்கள் (7 டாங்கி மற்றும் 4 மோட்டார் டிவிசன்கள் உட்பட) 2,800 டாங்கிகள், 6000 சாதாரண மற்றும் மார்டர் பீரங்கிகள், சுமார் 2000 விமானங்கள் (முதலாவது, நான்காவது வான் படைகளைச் சேர்ந்தவை) முதலியவை அடங்கியிருந்தன.  மொத்தம் 16 இலட்சம் பேர் இருந்தனர்.”

அதே சமயத்தில் போலந்து நாட்டின் வலிமையைப் புள்ளி விவரங்களோடு குறிப்பிடுகிறார்: “பாசிச ஜெர்மனியத் துருப்புகளை போலந்து இராணுவம் எதிர்த்து நின்றது.  இதன் வசம் 39 காலாட்படை டிவிசன்களும், 11 குதிரைப்படை பிரிகேடுகளும், 3 மலையேற்ற பிரிகேடுகளும், 2 கவச மோட்டார் பிரிகேடுகளும், சுமாராக 80 தேசியப் பாதுகாப்பு பட்டாலியன்களும் இருந்தன.  மொத்தமாக 10 இலட்சம் போர்வீரர்கள் இருந்தனர்.  1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி இதன் வசம் 220 எளிய டாங்கிகளும், 650 சிறு பீரங்கி ஏந்திய டாங்கிகளும், கவச மோட்டார் வாகனங்களும், 4300 சாதாரண மற்றும் மார்டர் பீரங்கிகளும் 800 போர் விமானங்களும், 16 போர்க்கப்பல்களும், உதவிப் படகுகளும் இருந்தன.

“இராணுவ உற்பத்திக் குறியீடுகள் ஆயுதப் போராட்டத்தின் அளவுகளுக்குச் சான்று பகர்கின்றன.  யுத்த ஆண்டுகளில் (1939 செப்டம்பர் 1 முதல் 1945 செப்டம்பர் 2 வரை) ஹிட்லர் எதிர்ப்புக் கூட்டணி நாடுகளில் மட்டும் 5,88,000 விமானங்களும் (இவற்றில் 4,25,000 போர் விமானங்கள்) 2,36,000 டாங்கிளும், 14,76,000 சாதாரண பீரங்கிகளும், 6,16,000 மார்டர் பீரங்கிகளும் உற்பத்தி செய்யப்பட்டன; ஜெர்மனியில் சுமார் 1,09,000 விமானங்களும், 46000 டாங்கிகள் மற்றும் திடீர்த் தாக்குதல் பீரங்கிகளும், 4,35,000க்கும் மேற்பட்ட சாதாரண மற்றும் மார்டர் பீரங்கிகளும், மற்ற வகை ஆயுதங்களும் உற்பத்தி செய்யப்பட்டன.

தொடர்ந்து, யுத்தம் பற்றிய புள்ளி விவரங்களை நூலாசிரியர் வரிசையாகத் தொகுத்து வழங்குவது, இரண்டாம் உலக யுத்தம் குறித்த விரிவான வரலாற்றுப் பார்வையை உணர்த்துவதாக உள்ளது.

“மொத்தத்தில் 2,194 நாட்கள் (6 ஆண்டுகள்) நீடித்தது.  1.7 பில்லியன் மக்கள் தொகையை உடைய (இது உலக மக்கட் தொகையில் 80 சதவீதமாகும்) 61 அரசுகள் இந்த யுத்தத்தினுள் இழுக்கப்பட்டன.  ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்கக் கண்டங்களில் உள்ள 40 நாடுகளின் பரப்புகளிலும் அட்லாண்டிக், ஆர்க்டிக், பசிபிக் மற்றும் இந்துமகா சமுத்திரங்களின் பரந்த நீர்ப்பரப்புகளிலும் போர் நடவடிக்கைகள் நடைபெற்றன.  110 மில்லியனுக்கும் கூடுதலானோர் இராணுவ சேவைக்காக அழைக்கப்பட்டனர்.”

இரண்டாம் உலக யுத்தத்தின் விரிவுகளை வி.அ. மத்சுலேன்கோ தொகுத்துக் கூறுகிறார்:  “வரலாறு அறிந்த யுத்தங்களிலேயே இரண்டாவது உலக யுத்தம் தான் மிக அழிவுகரமானதாக இருந்தது.  ஐரோப் பாவில் மட்டும் போர் அழிவுகளினால் (முழுமை பெறாத புள்ளி விவரங்களின்படி) ஏற்பட்ட பொது வான பொருட் சேதத்தின் மதிப்பு 260 பில்லியன் டாலர்களாகும்.  (1938-ஆம் ஆண்டு விலைவாசிகளில்) போரிட்ட அரசுகளின் இராணுவச் செலவினங்கள் அவற்றின் தேசிய வருமானத்தில் 60-70 சதவீதமாக இருந்தன.  50 மில்லியனுக்கும் கூடுதலானோர் மாண்டனர்.  20 மில்லியனுக்கும் கூடுதலானோரைப் பறிகொடுத்த சோவியத் யூனியனுக்குத்தான் மிக அதிக இழப்பு ஏற்பட்டது.  சோவியத் நாட்டில் 1,170 நகரங்களும், 70,000 கிராமங்களும் குக்கிராமங்களும் இடிபாடுகளில் மூழ்கிக் கிடந்தன.  32,000 தொழில் நிலையங்கள் நாசப்படுத்தப்பட்டிருந்தன.  ஆக்கிர மிப்புக்கு எதிரான போராட்டத்தில் போலந்து (சுமார் 6 மில்லியன்), யுகோஸ்லாவியா (1.7 மில்லியன்) மற்றும் பிற அரசுகளுக்கும் பெரும் சேதங்கள் ஏற்பட்டன.  அமெரிக்க ஐக்கிய நாடு 4,00,000 நபர் களையும், பிரிட்டன் 3,70,000 நபர்களையும் பறி கொடுத்தன.  ஜெர்மனியின் தரப்பில் 13.6 மில்லியன் பேர்கள் கொல்லப்பட்டனர்: காயமடைந்தனர்; சிறை பிடிக்கப்பட்டனர்.  இதனுடைய ஐரோப்பியக் கூட்டு நாடுகளின் தரப்பில் 1.5 மில்லியனுக்கும் அதிக மானோர் பாதிக்கப்பட்டனர்.”

இந்நூலில் திட்டவட்டமான உதாரணங்களில், புதிய அதிகம் அறியப்படாத பத்திராலய ஆவணங்கள், சோவியத் மற்றும் அயல்நாட்டு அரசியல் பிரமுகர்கள், இராணுவ நிபுணர்களின் நினைவுக் குறிப்புக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இரண்டாம் உலக யுத்தத்தின் முக்கியமான சம்பவங்கள் விளக்கப் பட்டுள்ளன.  இராணுவ அரசியல் முடிவுகள் தரப் பட்டுள்ளன.

சோவியத் யூனியனின் கம்யூனிஸ்டுக் கட்சியும் மற்ற மார்க்சிய, லெனினியக் கட்சிகளும், “யுத்த மானது பொதுவாகவே கம்யூனிஸ்டுக் கட்சிகளுக்கு எதிரானது” என்ற லெனினியக் கூற்றை மெய்ப்பிக்கின்றன. “சமாதானத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான ‘எல்லாவற்றையும் செய்வோம் என்று தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் நாங்கள் உறுதி கூறுகிறோம்’ என்கிறார் வி.இ. லெனின்.  சோவியத் யூனியன் கம்யூனிஸ்டுக் கட்சி இந்த லெனினுடைய ஆணைக்கு எப்போதும் விசுவாசமாக இருந்துவந்துள்ளது; இப்போதும் இருக்கிறது.”  என்ற கருத்தை வி.அ. மத்சுலேன்கோ இந்த நூலின் வாயிலாக நிறுவுகிறார்.

விருப்பு வெறுப்பு உணர்வுகளைக் கடந்து அறிவியல் கண்ணோட்ட அடிப்படையில் ஏராளமான உண்மைத் தகவல்களை முன்வைத்து இந்த நூலை ஆசிரியர் நேர்மையாக வடிவமைத்துள்ளார்.  போர்க் களத்தில் முக்கியமான நிகழ்வுகளையும், விளைவு களையும் தகுந்த புள்ளி விவரங்களோடு குறிப்பிட்டு ஆவணப்படுத்தியிருக்கிறார்.  அறிவியல் கண் ணோட்டத்தில் ஒரு வரலாறு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

தமிழில் தெளிவாக, எளிமையாக, இயல்பாக மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்த ஆழமான அரியநூல் வாசிப்புக்கு உகந்ததாக அமைந்துள்ளது.  ‘உலகமயமாதல்’ என்ற புதிய சூழல்களைப் புரிந்து கொண்டு விழிப்புணர்வு பெறப் பொருத்தமாக அமைந்துள்ளது இந்தநூல்.

நூலாசிரியர் வி.அ.மத்சுலேன்கோவின் அக்கறையும், ஈடுபாடும், உழைப்பும், வெளிப்பாடும் போலவே, மொழிபெயர்ப்பாளர் இரா.பாஸ்கரனின் தனித்திறனும் இந்நூலில் வெளிப்படுகிறது.

இரண்டாம் உலக யுத்தம்
வி.அ.மத்சுலேன்கோ
தமிழில்: இரா.பாஸ்கரன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41- பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை - 600 098.
தொலைபேசி எண்: 044 - 26359906
விலை : ` 390/-

Pin It