இருபத்தோராம் நூற்றாண்டில் அசுர வளர்ச்சியடைந்திருக்கும் துறைகளில் முதன்மையானது தகவல் தொழில்நுட்பத்துறை. உலகமயமாக்கல் சூழலில் போட்டி போட்டு வளர்ந்துகொண்டிருக்கும் தொழில்நுட்பத்தால் இன்று தகவல் பரிமாற்ற சாதனங்கள் பெருகிவிட்டன.

பரந்துவிரிந்திருக்கும் இணையப் பரப்பிலும் காற்றலையிலும் அலைபேசி, கணினி, டேப்லெட் போன்ற மின்னணுக் கருவிகள் வழி நம் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள வாட்ஸ்அப், ட்விட்டர், இமெயில், ஃபேஸ்புக், பிளாக், இணையதளம் என எண்ணற்ற தொடர்பு சாதனங்கள் வந்துவிட்டன. இன்னும் புதிதுபுதிதாகத் தோன்றிக்கொண்டும் இருக்கின்றன. பெருகிவரும் இத்தொடர்பு சாதனங்கள் அனைத்தும் மனிதனது ஒட்டுமொத்தக் கருத்துப்பரிமாற்றத்தில் வெறும் 7 சதவிகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் அதுதான் யதார்த்தம் என்பதை ஆய்வுகள் நிறுவுகின்றன.

மனிதன் தன் கருத்துக்களைப் பிறரோடு பகிர்ந்து கொள்ள, 7 சதம் மொழிக் குறியீடுகளையும் (பேச்சு, எழுத்து முதலியன), 38 சதம் ஒலிவடிவங்களையும் (மணியோசை, ஒலிப்பான் போன்றவை), 55 சதம் மொழிசாராக் குறியங்களையும் (சைகைகள், பாவணைகள், கலைப்பொருட்கள்) பயன்படுத்துகிறான் என்று ஆல்பெர்ட் மெஹ்ராபியன் தன் ஆய்வின் மூலம் நிறுவுகிறார்.1

இந்த அடிப்படையில் மனிதனின் கருத்துப் பரிமாற்றத்தை, 1.மொழி சார்ந்த கருத்துப்பரிமாற்றம் (Verbal communication), 2.மொழிசாராக் கருத்துப் பரிமாற்றம் (Non-verbal communication) என இரு வகைப்படுத்துகின்றார்கள் தகவல் தொடர்பு அறிஞர்கள். மொழி சார்ந்த கருத்துப்பரிமாற்றம் என்பது மனிதன் பேச்சு, எழுத்து வழி நிகழ்வதாகும். அவற்றின் துணையின்றி நிகழ்வதே மொழிசாரா கருத்துப் பரிமாற்றமாகும்.

இப்பூமியில் மனிதனைத் தவிர பிற உயிரினங்கள் அனைத்தும் பேச்சு, எழுத்து முதலிய மொழிசார்ந்த கூறுகளின் துணையின்றியே தன் கருத்துக்களை இயல்பாகப் பரிமாறிக்கொள்கின்றன. சிந்திக்கத் தெரிந்த மனிதன் மட்டுமே பேச்சையும், எழுத்தையும் துணைக்கு அழைக்கிறான். மனிதர்களுக்கிடையிலான கருத்துப்பரிமாற்றத்தில் அதிகம் பயன்படுவது மொழிசாராக் குறியீடுகளே என்று ஆல்பெர்ட் மெஹ்ராபியன் கூறுவது எப்படியென்றால், நாம் ஒருவரைப் பார்த்து வணக்கம் தெரிவிக்கும் போது, நாம் பயன்படுத்தும் வார்த்தையை(மொழி) விட, முகப்பாவணையே பிரதானமானதாக, முக்கியத்தொடர்புக்கூறாக விளங்குவதைச் சுட்டுகிறார். இந்த முறையில் தான் அன்பு, கோபம், வெறுப்பு போன்ற உணர்வுப்பரிமாற்றங்களும் நிகழ்கின்றன. முகபாவனை, சைகை முதலியவற்றோடு மனிதன் ஒரு கருத்தைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் பொருட்களும் (சிவப்பு, வெள்ளை, பச்சைக் கொடி அல்லது துணி போன்றவை) மொழியின் துணையின்றி ஒரு தகவலை பிறருக்குத் தெரிவிக்கும் மொழிசாராக் குறியங்களாக விளங்குகின்றன.

மனிதப் பயன்பாட்டில் உள்ள இந்த மொழிசாராக் கருத்துப்பரிமாற்றத்தை தகவல் தொடர்பு அறிஞர்கள் நான்கு வகையாகப் பகுக்கிறார்கள். அவை: செய்தல் குறியங்கள் (சைகைகள், முகப்பாவனைகள், பிற செய்கைகள்), கலைப்பொருள் குறியங்கள் (கருத்தை உணர்த்த மனிதன் பயன்படுத்தும் பொருட்கள்), சித்திரக்குறியங்கள் (சித்திரங்கள் வழி கருத்தை உணர்த்துதல்), கால இடக் குறியங்கள் (காலமும்,இடமும் ஒரு கருத்தை உணர்த்துதல்).

ஒவ்வொரு பண்பாட்டிற்கும் மரபு வழியான கருத்துப்பரிமாற்றக் கூறுகள் உண்டு. சீன மரபில் மிகப்பழமையான மொழிசாராக் கருத்துப்பரிமாற்றக் கூறாக புகை விளங்குகிறது. அக்காலத்தில், சீனாவின் அரணாக இருக்கும் சீனப்பெருஞ்சுவரின் உச்சியில் இருந்து கண்காணிக்கும் படைவீரர்கள் தம்மைத் தாக்கவரும் எதிர்படையின் பலத்தை, பெருஞ்சுவரின் இடையிலும், அடிவாரத்திலும் இருக்கும் சக படைவீரர்களுக்கு அறிவிக்க புகையையும் வெடியையும் பயன்படுத்தினார்கள். ஏனென்றால் கீழே இருப்பவர்களுக்கு கேட்கும் அளவிற்கு சத்தம் போட முடியாது. எதிரிகளின் எண்ணிக்கையை தன் படைவீரர்களுக்கு உணர்த்தி அவர்களை அதற்கேற்ப தயார்படுத்துவதற்காக இந்தப்புகை அறிவிப்பு அவர்களுக்கு உதவியது. சுவரின் உச்சியில் தம்மைத் தாக்கவரும் எதிரிகளை கண்காணித்துக் கொண்டிருக்கும் படைவீரர்கள், ஒருமுறை புகை போட்டு ஒரு வெடியும் போட்டால் 100 எதிரிகள் வருவதாகவும், 2 முறை புகை போட்டு 2 வெடி போட்டால் 500 எதிரிகள் வருவதாகவும், மூன்றுமுறை புகை போட்டு 3 வெடி போட்டால் 1000 எதிரிகள் வருவதாகவும் பொருள் கொண்டிருந்தார்கள். இவ்வாறு புகையும், வெடியும் ஒரு செய்தியை தெரிவிக்கும் மொழிசாராக் குறியீடுகளாக விளங்கின.

ரோமானியர்களிடமும் இவ்வகையிலான ஓர் புகை அறிவிப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து தொடர்கிறது. கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தலைவரான புதிய போப்பைத் தேர்ந்தெடுத்து மக்களுக்கு அறிவிக்கும் முறையில் புகை முக்கிய செய்திப்பரிமாற்ற சாதனமாக விளங்குகிறது. 1878ம் ஆண்டு முதல் போப் தேர்வு குறித்த அறிவிப்பை புகை மூலம் தெரிவிக்கின்றனர். போப் தேர்வு நடைபெறும் வாடிகன் சிஸ்டைன் தேவாலயத்தின் புகைக்கூண்டிலிருந்து வரும் வெண்புகைக்கும், கரும்புகைக்கும் முரண்பட்ட இரு பொருள்கள் உண்டு. புகைக்கூண்டிலிருந்து வெளிவரும் கரும்புகை, போப் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதையும், வெண்புகை நமக்கு புதிய போப் கிடைத்திருக்கின்றார் என்ற செய்தியையும் அங்கு கூடியிருக்கும் கத்தோலிக்கர்களுக்குத் தெரிவிக்கின்றன.

மேற்கண்ட இரு மொழிசாராக் கருத்துப் பரிமாற்றங்களில் புகையும், அதன் நிறமும் ஒரு செய்தியை அறிவிப்பனவாக அமைகின்றன. அங்கு வேறெந்த மொழிப்பயன்பாடும் கிடையாது. இவ்வகை தகவல் பரிமாற்றத்தைத் தான் தற்காலத் தகவல் தொடர்பியல்2 மொழிசாராக் கருத்துப்பரிமாற்றம் (Non-verbal communication) என்று வகைப்படுத்துகின்றது. இது மிகப்பழமையான கருத்துப்பரிமாற்றக் கூறுகளில் ஒன்று. இத்தாலியர்கள் இன்றளவும் (2013-இல் புதிய போப் தேர்ந்தெடுத்தது வரை) இக்கருத்துப்பரிமாற்றக் கூறைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சீனர்களின் புகை அறிவிப்பு இன்று நடைமுறையில் இல்லை.

தமிழ் மரபில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தன் கருத்தை பிறருக்குத் தெரிவிக்க பல்வேறு வகையான மொழிசாராக் குறியங்களைப் பயன்படுத்தியிருப்பதை பழந்தமிழ் இலக்கியங்கள் உணர்த்துகின்றன. எதிரி நாட்டு மீது போர் தொடுக்க விரும்பும் மன்னன், திடீரென அந்நாட்டின் மீது தன் படையை ஏவுவதில்லை. அறம் சார்ந்த முறையில் போர் செய்வது அரசனின் அடிப்படைத்தகுதியாகக் கருதப்பட்ட சங்ககாலத்தில், எதிரியைப் போருக்கு அழைக்க சில செய்தல் குறியங்களைக் (Performance codes) கையாள்வது வழக்கமாக இருந்தது. தான் போருக்கு அழைக்கும் செய்தியை எதிர் நாட்டு மன்னனுக்குத் தெரிவிக்க முதலில், அவன் நாட்டு ஆநிரைகளைக் கவர்தல், காவல் மரங்களை வெட்டுதல் ஆகிய செயலில் இறங்குவர். எதிரி நாட்டு ஆநிரைகளைக் கவரும் போர்ச்செயலில் ஈடுபடும் வீரர்கள் வெட்சிப்பூவை அணிந்து செல்வர். ஆநிரை கவர்தல், காவல் மரங்களை அழித்தல் ஆகிய செய்தல் குறியங்களும், வெட்சிப்பூ அணிதல் என்னும் கலைப்பொருள் குறியமும் போருக்கு அழைத்தல் என்னும் செய்தியை உணர்த்தும் குறியங்களாக சங்ககாலத்தில் விளங்கின.

இதனை ஆலத்தூர்கிழாரின் புறநானூற்றுப்பாடல் பின்வருமாறு விவரிக்கின்றது,

கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்

நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப,

ஆங்குஇனி திருந்த வேந்தனொடு, ஈங்குநின்

சிலைத்தார் முரசும் கறங்க,

மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே.                                   (புறம்.36)

இந்த மரபு இன்றைய தமிழ்ச்சமுகத்தில் இருக்கிறதா? அதன் எச்சமாக ஒருவன் பொருளைக் கவரும் செயல் அவனை வம்புக்கு இழுக்கும் குறியீடாக இருக்கிறது. ஆனால் இதை தமிழ் மரபிற்கு மட்டும் உரியது என்று சொல்வதற்கில்லை. உலகின் பல கலாச்சாரங்களில் பொருளையோ,பெண்ணையோ கவர்தல் எதிரியை தன்னுடன் போருக்கு அழைக்கும் செயலாக இருந்திருக்கிறது.

போர்வீரர்களுக்கான அழைப்பு

சங்ககாலத்தில் முரசொலி படைவீரர்களைப் போருக்குத் தயார்படுத்துவதற்காக ஒலிக்கப்பட்டது. அனைவரும் போருக்குத் தயாராகுங்கள் என்னும் தகவலை படைவீரர்களுக்கு தெரிவிப்பதாக முரசொலி விளங்கியது. போருக்கு அஞ்சாத வீரனாகவும் போரில் மிகுந்த ஆர்வமுடையவனாகவும் அதியமான் நெடுமான் அஞ்சி விளங்கினான் என்பதைக் குறிப்பிடும் ஒளவையார் பாடல் முரசொலியின் பொருளை அழகாக விவரிக்கிறார்.

பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை

வளிபொரு தெண்கண் கேட்பின்,

அதுபோ ரென்னும் என்னையு முளனே! (புறம்.89)

பொதுமன்றில் கட்டிவைக்கப்பட்ட முரசின் மேல் காற்று வந்து மோத அது அதிர்ந்து சிறிது ஓசை உண்டாக்கினாலும் அதைப் போர் முழக்கம் என நினைத்து போர்க்களம் விரைய முயல்கின்றான் அதியமான். இவ்வாறு முரசொலி போர் செய்தியை அறிவிக்கும் கலைப்பொருள் குறியமாக (கிக்ஷீtவீயீணீநீtuணீறீ நீஷீபீமீs) சங்ககாலத்தில் பயன்பட்டது. முரசு முழக்கம் நம் பண்பாட்டில் இன்று வரை நடைமுறையில் இருக்கின்றது. முரசு முழக்கத்தின் அடிப்படை நோக்கம் (சங்ககாலத்திலிருந்து இன்று வரை) ஆட்களைத் திரட்டுவதேயாகும். சங்ககாலத்தில் முழங்கிய முரசுகள் பெரும்பாலும் போருக்காக ஆட்களைத் திரட்டும் வேலையைச் செய்ததோடு மட்டுமன்றி, பொதுமக்களிடம் ஒரு செய்தியை அறிவிக்கும் பொருட்டும் பயன்பட்டன. முரசு பிற்காலத் தமிழ்ப் பண்பாட்டில் ஒரு செய்தியை அறிவிக்க கூட்டத்தைக் கூட்டும் கருவியாக பயன்பட்டு மறைந்தது.

போரும் வெற்றியும்

சங்ககால மக்கள் எவ்வாறு இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு மலர்களே சாட்சி. போருக்குப் போகும் போது தும்பைப்பூ அணிந்தனர். போரில் வென்றால் வாகைப்பூ சூடினர். மேலும், மூவேந்தர்களுக்கும் உரிய பூக்களாக பனம்பூ, அத்திப்பூ, வேப்பம்பூ ஆகிய மலர்கள் இருந்தன.

மெல்லிய தோள்களுடைய மகளிர் தன் உடம்பில் பட்ட புண்களுக்கு மருந்திட்டுக் கொண்டிருக்கும் போது, தன்னைப் புண்படுத்திய பகைவர் மீது கோபம் கொண்டு திடீரென எழுந்த தலைவன் வேகமாகப் போகும் போது தும்பைப்பூமாலையை அணிந்து கொள்கிறான். அத்தும்பைப்பூமாலை தலைவன் போருக்குச் செல்கிறான் என்னும் செய்தியை அம்மகளிருக்கு உணர்த்துகின்றது என்பதை அடைநெடுங்கல்வியாரின் பாடல் மூலம் அறியலாம்.

மென்தோள் மகளிர் நன்று புரப்ப,

இமிழ்புற நீண்ட பாசிலைக்

கமழ்பூந் தும்பை நுதல் அசைத் தோனே. (புறம்.283)

சங்க காலத்தில் ஒரு குழு தும்பைப்பூவை அணிந்து அணிவகுத்துச்செல்கின்றது என்றால் அக்குழு போருக்குச் செல்கின்றது என்று பொருள். வாகைப்பூ சூடி மகிழ்ந்தால் அவர்கள் போரில் வென்றவர்கள் என்று பொருள். இவ்வாறு தும்பைப்பூ போருக்குச் செல்வதையும், வாகைப்பூ வெற்றியின் அடையாளமாகவும் விளங்குகின்றன. இம்மரபின் எச்சத்தை இன்றைய தமிழ்ச்சமுகத்திலும் காணலாம். வாகைப்பூக்கள் அரிதாகிப்போன இன்றைய காலகட்டத்தில் அப்பழஞ்சொல் மட்டும் எஞ்சி நிற்க, ஒரு காரியத்தில் அல்லது போட்டியில் வென்றவரை ‘வாகை சூடினார்’, ‘வெற்றி வாகை சூடினார்’ என்றெல்லாம் அழைக்கின்றோம்.

இது போன்ற மொழிசாரா கருத்துப்பரிமாற்றக்கூறுகள் சங்க இலக்கியத்திலும் பிற்கால இலக்கியங்களிலும் நிறைய உண்டு. அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த செய்தல் குறியங்கள் அவர்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள எவ்வாறு உதவின? அவை தமிழ்ப்பண்பாட்டிற்கு மட்டும் உரியனவா? இது போன்ற எத்தனை மொழிசாராக் கருத்துப்பரிமாற்றக் கூறுகள் இன்றளவும் தமிழ்ப் பண்பாட்டில் நிலைத்திருக்கின்றன? அப்படி நிலைத்திருப்பவை தற்காலத்திலும் அப்படியே இருக்கின்றனவா? அல்லது திரிந்து இருக்கின்றனவா? என்று ஆய்வது ஒரு பண்பாட்டின் தொடர்ச்சி - சிதைவு - மாற்றம் முதலியவற்றை அறிய உதவும்.

மொழிசாராக் கருத்துப்பரிமாற்றத்தின் ஒரு பகுதியான செய்தல் குறியங்கள் எனப்படும் செய்கைகள், சைகைகளிலிருந்து இன்று சைகை மொழி (Sign language) என்னும் தனித்துறையே உருவாகியிருக்கிறது. செவித்திறன் குறைவுடையவர்கள் சைகை மொழி மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்கின்றனர். இது ஒவ்வொரு சமூகப்பண்பாட்டிற்கு ஏற்ப அமையும். அமெரிக்க சைகை மொழி, இந்திய சைகை மொழி என பலவகையுண்டு.

அடிக்குறிப்புகள்:

1 Albert Mehrabian, Nonverbal Communication, p.248

2. Allen, Communication Interacting through Speech, 1974,pp.81,98. Dalmer Fisher, Communication in Organisations,1994,p.223. G.S. Raydu, Communication,1997, pp.218,316.

துணைநூற்கள்: ஒளவை துரைசாமிப்பிள்ளை, 1952, புறநானூறு, கழகம். (முதல் பதிப்பு:1947) 

Allen. 1974, Communication Interacting through Speech, Charles Emerrell Publishing co., Ohio. 

Dalmer Fisher.,1994, Communication in Organisations, Jaico Publishing co.,Bombay. 

Mehrabian, Albert., 1972, Nonverbal Communication. Chicago, IL: Aldine-Atherton. 

Raydu. G.S., 1997, Communication, Himalaya Publishing House, Mumbai, 

Renuga Devi.V., 2001, “Nonverbal Communication”, K.Karunakaran 60th Birthday Commemoration Vol. Park Trust,Thiruppur.

Pin It