தமிழ்நாட்டின் எல்லையினை, “வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுகம்” எனத் தொல்காப்பியம் காட்டியது. இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின்னர் அது ‘வடதணிகைத் தென்குமரி’ எனச் சுருங்கிப்போய்விட்டது. தமிழகத்தின் வடக்கெல்லையில் இழப்பு நேரும் சூழல் எழுந்தபோது, அறிஞர் மங்கலங்கிழார் போர்க்குணத்துடன் ஆற்றிய புகழார்ந்த செயல்கள் வரலாற்றுச் சிறப்புக் கொண்டவை; என்றென்றும் தமிழ் மக்களின் வணக்கத்துக்குரியவை!

                மொழிவகையில் தமிழராகவும், நில வகையில் தெலுங்கராகவும் வாழ்ந்த மக்கள், தமிழரென்பதையே மறக்கத் தொடங்கிய, நிலையில் சித்தூர், தணிகைப் பகுதி மக்களுக்குத் தமிழுணர்வு ஊட்டியவர் மங்கலங்கிழார்!

                அறிஞர் மங்கலங்கிழார், தமிழ்த்தென்றல் திரு.வி.க., தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், பன்மொழிப்புலவர்’ கா.அப்பாத்துரையார், வரலாற்று அறிஞர் மா.இராசமாணிக்கனார் முதலிய தமிழ்ச் சான்றோர்களைத் தணிகைப் பகுதிக்கு அழைத்து வந்து, வாழ்ந்து சிறந்த அத்தமிழ் மக்களுக்குத் தாழ்ந்து போன நிலையை உணர்த்தியவர்! தமிழுணர்வை ஊட்டியவர்!!

                தமிழகத்தின் வட எல்லையில் வாழ்ந்த தமிழர்கள், தம்நிலையை உணர்ந்தனர். தமிழகப் பகுதியோடு தங்களை இணைத்துக் கொள்ளும், போராட்டத்திற்கு ஆதரவு நல்கினர். ‘சிலம்புச் செல்வர்’ மா.பொ.சியின் ‘தமிழரசுக் கழகம்’ எழுச்சிக்கும் கிளர்ச்சிக்கும் உரமூட்டியது. மங்கலங்கிழாரின் உள்ளம் கொதித்தெழுந்தது. தணிகையில் ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, திருத்தணிகை உள்ளிட்ட பகுதிகளைத் தமிழகத்தோடு சேர்க்கப் போராடினார். அப்போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டார்.

                வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் என்னும் கிராமத்தில் ஐயாசாமி – பொன்னுரங்கம் தம்பதியினருக்கு 1895 ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் குப்புசாமி என்பதாகும்.

                புளியமங்கலத்தில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் சென்னை சென்று தமது தமக்கையார் வீட்டில் தங்கி, பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றார். அப்போது, தமக்கையின் கணவர் திடீரென்று மரணமடைந்துவிட்டதால், உயர்நிலைப் பள்ளிக் கல்வியை இடையிலேயே விட்டுவிட நேர்ந்தது.

                தமக்கையார் குடும்பத்தைக் காப்பாற்ற தச்சுத்தொழில் செய்தார். ஓய்வு நேரங்களில் தமிழறிஞர் டி.என்.சேஷாசல ஐயர் நடத்தி வந்த இரவு பள்ளியில் சேர்ந்து பயின்றார். செந்தமிழ்ப் பனுவல்களைச் ‘சிந்தாமணிச் செல்வர்’ மே.வீ.வேணுகோபாலப்பிள்ளையிடமும், தமிழ் இலக்கணக் இலக்கியங்களைத் தமிழறிஞர் க.ரா.கோவிந்தராசு முதலியாரிடமும் கற்றார். ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சி.யுடன் நட்புக் கொண்டு அவருடன் இணைந்து திருக்குறளில் நன்கு தேர்ச்சியும் பெற்றார்.

                ‘கலவல கண்ணன் செட்டியார்’ உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் தமது தந்தையார் பார்த்த ‘ஊர்மணியக்காரர்’ பணியைத் தாமே ஏற்றார்.

                ‘கலாநிலையம்’ என்னும் இலக்கிய இதழ் மங்கலங்கிழாரின் மேற்பார்வையில் வெளிவந்தது. இதழைத் தொடர்ந்து நடத்துவதில் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டது. இதழ் தொடர்ந்து வெளிவர ‘கலாநிலையம்’ குழுவினர் சென்னை, மதுரை, திருச்சி, சிதம்பரம் முதலிய நகரங்களில் நாடகங்கள் நடத்தி நிதி திரட்டினர். அவ்வாறு நடந்த நாடகங்களில் மங்கலங்கிழார் பெண் வேடம் ஏற்று நடித்தார்.

                ஏழைகளுக்கு எழுத்தறிவித்தல் எல்லாவற்றையும்விட மிகச்சிறந்த அறம் என்பதை உணர்ந்து தெளிந்தார். ஆதைத் தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்ட முடிவு செய்து குருவப்பேட்டை என்னும் ஊரில் உள்ள மக்களுக்குத் தமிழ்ப்பாடம் நடத்தினார். அதற்காக, ‘அறநெறித் தமிழ்ச் சங்கம்’ என்றோர் அமைப்பை உருவாக்கி, தமிழ்க் கல்வியும், தமிழ்ப் பற்றும் தழைத்துச் செழித்திட, தளர்வறியாது தொண்டாற்றிய செம்மல் ஆவார். அப்பெருந்தகையை மக்கள் அன்போடும் மரியாதையோடும் ‘தமிழ்மாமுனிவர்’ என்றே அழைத்தனர்.

                மங்கலங்கிழார், ‘வடவெல்லை’ ‘தமிழ்ப்பொழில்’ ‘தமிழ்நாடும் வடவெல்லையும்’, முதலிய ஆய்வு நூல்களையும், ‘தவமலைச் சுரங்கம்’, என்னும் சிறுவர் சிறுகதை நூலையும், ‘சகலவலாவல்லிமாலை’ க்கு உரை விளக்கமும் ‘நளவெண்பா’வுக்கு விளக்கவுரையும், மாணவர்களுக்கான ‘இலக்கண வினாவிடை‘யையும், ‘நன்னூல் உரை’ நூலையும் ஆக்கி தமிழுலகுக்கு அளித்துள்ளார்.

                ‘சந்திரகுப்த சாணக்கியர்’ என்ற திரைப்படத்தில் சாணக்கியராக நடித்தார். திரைப்படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தைப் பள்ளிக் கட்டிடங்கள் கட்ட நன்கொடையாக வழங்கினார். தாம் உருவாக்கிய தொடக்கப்பள்ளிக்குத் தாளாண்மைப் பொறுப்பேற்று, தமக்குரிய சொத்துக்களை விற்று ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கினார்.

                “தமிழ்ப் பெருந்தொண்டர் மங்கலங்கிழார், தன்னலங்கருதாது பணி பல புரிந்து தமிழுக்கும் தமிழர்க்கும் பாடுபட்டு உழைத்த சான்றோர், அவர்தம் நினைவைப் போற்றுதல் தமிழர்க்குக் கடமையாகும்” எனத் தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

                “வித்துவான்களின் தமிழ்த் தொண்டு கிராமங்களில் நடைபெறுதல் வேண்டுமென்று அறைகூவுவோருள் யானும் ஒருவன். அதைச் செயலில் நிகழ்த்திக் காட்டுவோர் சிலர்; அவருள் சிறந்து விளங்குவோர், அன்பர் ‘வித்தியானந்தர்’, அப்பெரியோர் தொண்டு நிகழும் எந்தக் கிராமத்தினின்றும் அழைப்பு வந்தால், யான் உடனே ஓடுவதை ஒரு வழக்கமான தமிழ்த் தொண்டாகக் கொண்டுள்ளேன்”- எனப் பாராட்டினார் திரு.வி.க.! தமிழின் இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சி பெற்று விளங்கியதால் மங்கலங்கிழாரை ‘வித்தியானந்தர்’ என அழைத்துச் சிறப்பித்தார்!

                “மங்கலங்கிழார், எனக்கு வழிகாட்டியாக விளங்கினார்; அவரைப் போன்று தாய்மொழிப் பற்றும் தமிழின உணர்ச்சியும் உடையவர்கள் தமிழினத்தாரில் வெகு சிலரே இருக்க முடியும்”. என ம.பொ.சி.கருத்துரைத்துள்ளார்.

                தம் வாழ்வின் இறுதி மூச்சுவரை தமிழுக்காகவும், தமிழரின் நலனுக்காகவும் தன்னலங்கருதாது தொண்டு செய்த மங்கலங்கிழார், தமது 58ஆம் வயதில், 1953 ஆகஸ்ட் திங்கள் 31 ஆம் நாள் இயற்கை எய்தினார்!

                “இமைப்போதும் தமிழ் மறவார்; இயன்ற தொண்டை இனிதாற்றும் அருளுள்ளம் உடையார்; அன்னார் அமைத்த தமிழ் நிறுவனங்கள் பலவாம்; இங்கே அவையனைத்தும் விளைந்த பயன் பெரிதேயாகும்!” – என மங்கலங்கிழாரைப் போற்றி புகழ்ந்துள்ளார் புரட்சிக்கவி பாரதிதாசன்! மங்கலங்கிழாரின் தூய தமிழ்த் தொண்டை இளைய சமுதாயம் அறிந்திட அவர் பிறந்த ஊரான புளியமங்கலத்தில், அவருக்குத் தமிழக அரசு மணிமண்டபம் அமைத்திட வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

- பி.தயாளன்

Pin It