மனிதன் வரலாற்றில் வாழ்கிறான். புதிய வரலாற்றைப் படைக்கிறான். வரலாற்று உணர்வு வளரும் சமூகத்தின் அச்சாணி. தனி மனிதர்கள் வரலாற்று மனிதர்களாக உருவாவதை தவிர்க்க முடியாது. மனிதர்கள், நிகழ்வுகள், முரண்கள், போராட்டங்கள், கண்டுபிடிப்புகள் ஆகிய வளர்ச்சியின் கூறுகளே வரலாற்றுக் காரணிகளாக திகழும். அவ்வகையில் வாழ்க்கை வரலாறுகள், தன் வரலாறுகள் போன்றன சமூக வரலாற்று உருவாக்கத்துக்குத் தரவுகளாக அமையும்.
‘பெருந்தலைவரின் நிழலில்’ பெருந்தலைவர் காமராசர் குறித்த பழ. நெடுமாறனின் வரலாற்று நூல். இது காமராசரின் வாழ்க்கை வரலாற்றின் பகுதியா, பழ. நெடுமாறனின் தன் வரலாற்றின் பகுதியா என்றால் இரண்டும்தான் எனச் சொல்லலாம். இன்னொரு வகையில் விடுதலைக்குப் பின்னான கால் நூற்றாண்டு இந்திய, தமிழக அரசியல் வரலாற்றின் சிறுபகுதி என்றும் கொள்ளலாம்.
“வாழையடி வாழையென
வந்த தமிழ்ப் பெருமரபில்
ஏழைமகன் ஏழையென
இன்னமுதே நீபிறந்தாய்!
நிமிர்ந்தால் தலையிடிக்கும்
நிற்பதற்கே இடமிருக்கும்
அமைவான ஓர்குடியில்
ஐயா நீ வந்துதித்தாய்!”
எனக் கவியரசு கண்ணதாசன் சொல்வது போல மிகவும் ஏழ்மையான வாழ்க்கைச் சூழலில் பிறந்தவர் காமராசர். அவர் பிறந்த குலமும் அன்றைய நிலையில் மிகச் சாதாரணமானதுதான். இவருக்கு கல்வியறிவும் அதிகமில்லை. மாறாக, விடுதலை இயக்கத்தில் பெருந்திரள் மக்களை ஈர்த்து வழிநடத்திய காங்கிரஸ் பேராயக் கட்சியின் தலைவர்கள் பெரும்பாலும் பெருஞ் செல்வர்கள்; நிலவுடைமையாளர்கள்; உயர்குடிப் பிறப்பினர்; ஆங்கிலக் கல்வி கற்றவர்கள். இச்சூழலில் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தன்னலமற்றத் தன்மை, நாட்டுக்குழைக்கும் நாட்டம் ஆகியவற்றை மட்டும் மூலதனமாகக் கொண்டு உருவானவர் காமராசர். அனுபவ அறிவாற்றலை மிகச் சரியாகப் பயன்படுத்தி வளர்ந்தவர் அவர். அன்றைய தமிழ்நாட்டுக் காங்கிரஸின் முன்னணித் தலைவர்களாக விளங்கிய சேலம்
பி. வரதராஜூலு நாயுடு, ஈ.வே.இராமசாமி நாய்க்கர், திரு.வி. கலியாணசுந்தர முதலியார் ஆகிய மூவரின் அரவணைப்பில் வளர்ந்தவர் காமராசர். இந்த மூவரின் கருத்துச் செல்வாக்கும் காமராசரிடம் கடைசிவரை இருந்தது. 1903-ல் பிறந்த காமராசர் 1919-ல் பதினாறு வயதில் பொது வாழ்வுக்கு வருகிறார். பல்வேறு போராட்டங்கள், இயக்கங்களில் பங்கேற்கிறார். பொறுப்புகளில் செயல்படுகிறார். 1940 தொடங்கி பன்னிரண்டு ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக உள்ளார். 1954 தொடங்கி 1964 வரை ஒன்பதரை ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விளங்கினார். 1964-ல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராகிறார்.
பழ. நெடுமாறன் மிக அழகாக இந்நூலை அமைத்துள்ளார். 1958-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் தலைவர்களில் ஒருவராக முதலமைச்சர் காமராசரை முதன் முதலாகச் சந்திக்கிறார். பின்னர் 1964 தொடக்கம் காமராசர் மறைவெய்தும்
1975 வரை பெருந்தலைவரின் நம்பிக்கைக்குரியவராய், நிழலாய், மனசாட்சியின் நீட்சியாய் தான் விளங்கிய அனுபவத்தை உலக, இந்திய, தமிழக அரசியல் பின்புலத்தில் இந்நூலில் பதிவு செய்கிறார்.
அறுநூற்றைம்பது பக்கங்களில் அறுபத்தெட்டு இயல்களில் சுவைபட நூல் அமைந்துள்ளது. தனி மனிதர் என்ற நிலையில் காமராசரின் பண்பு நலன்கள் பல இடங்களில் சுடர்விடுகின்றது. எந்த நிலையிலும் தன் குடும்பம், உறவுகள் தன்னைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் கவனமாக காமராசர் இருந்தார். கடைசிவரை வாடகை வீட்டிலேயே குடியிருந்தார். வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு எவ்வித விருந்தோம்பல் உபசரிப்பு களும் கூடாது. காரணம் “எனக்கே கட்சி சோறு போடு கிறது. இந்த அழகில் விருந்து வேறா” என விளக்கம் தருவார். இப்படி பல நெகிழ்வான நிகழ்வுகள் நூல் முழுதும்.
அரசியல் தலைவர் என்ற நிலையில் எவ்விதப் பாரம்பரியப் பின்புலமோ, நிர்வாக அனுபவமோ இல்லாத காமராசர் முதலமைச்சராக எப்படி முன்னும் பின்னும் ஒப்பாரற்று செயலாற்ற முடிந்தது என்பதை மிகத் தெளிவாக நூல் சுட்டுகின்றது. சுயநலம் இல்லாப் பொதுநல உள்ளம் வாய்த்தால் எல்லாம் சாத்தியம்தான். மக்கள் நலன், வெகு மக்கள் பயன்பாடு, உடனடி சுகத்தைவிட தொலை நோக்குப்பலன் என்பவைதான் காமராசரின் உயர்ந்தச் செயல்பாடுகளின் ஊற்றுக் கண்கள். அதேபோல விருப்பு, வெறுப்பற்ற மனநிலை அரசியலில் தனக்கு எதிர்நிலை எடுத்த சி. சுப்பிரமணியம், பக்தவத்சலம் போன்றோரை தன் அமைச்சரவை சகாக்களாக்கினார். இந்தியாவின் கேடுகளில் பெருங் கேடான சாதி விசயத்தில் கறாராக இருந்தார். சுய சாதி அபிமானத்தை விட்டொழித்தவர் என்பதற்கு இந்நூலில் பரவலாகச் சான்றுகள். குத்தூசி குருசாமி கூட்டிய
சாதி ஒழிப்பு மாநாட்டிற்கு இவரையே தலைமைக்கு அழைத்தார். காரணம், எந்தச் சாதி சங்க மாநாட்டிலும் கலந்து கொள்ளாதவர் என்பது தான். அதேபோல இந்து அறநிலையத் துறைக்கு ஒடுக்கப்பட்டப் பிரிவைச் சேர்ந்த பரமேஸ்வரனை அமைச்சராக்கியது. கக்கனை காங்கிரஸ் மாநிலத் தலைவராகவும், உள்துறை அமைச்சராகவும் ஆக்கியது போன்றவற்றை பழ. நெடுமாறன் எடுத்து மொழிகிறார்.
காமராசர் கொண்டுவந்த பல்வேறு திட்டங்கள், நெய்வேலி, ஆவடி, மணலி, திருச்சி, கொடைக்கானல் நிறுவனங்கள் - பரம்பிக்குளம் - ஆழியாறு போன்ற நீர் நிலைப் பெருக்குத் திட்டங்கள் துல்லியமாக நூலில் இடம் பெறுகின்றன.
அரசின் செயல்பாடுகளுக்கு அச்சாணிகளான அதிகாரிகளை காமராசர் அணுகியவிதம், அரசியல் தலையீடு அதிகமின்றி சுயமாக செயல்படும் அதிகாரத்தை அளித்தது போன்றவை நூலில் பதிவாகின்றன. பொதுக் கல்வி இயக்குநராக இருந்த நெ.து. சுந்தரவடிவேலுவின் படத்தினை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். ஓர் அதிகாரியின் படத்தை அவர் பணியில் இருக்கும் போது, முதலமைச்சர் பாராட்டித் திறப்பது, இன்றையச் சூழலில் நிறைவேறாத அதிசயம் தானே?
காமராசரின் சோவியத் பயணம் 21 நாட்கள் நடை பெறுகிறது. சோவியத் நாட்டில் லெனின் அவர்களின் இருபெரும் வளர்ச்சி திட்டங்கள் கல்வி, மின்சாரம் என்பதைக் கண்டறிகிறார். அக இருள் போக்கிடக் கல்வி, புற இருள் போக்கிப் புதுமைகள் படைத்திட மின்சாரம், ஆக இவ்விரண்டும் தமிழகத்தின் இரு கண்கள் எனத் திட்டங்கள் வகுத்திட முனைகிறார். காந்தி - நேரு - லெனின் ஆகிய மூவரின் சிந்தனைக் கூட்டுறவை காமராசர் பிரதிபலிக்கிறார்.
காமராசரின் அரசியல் வாழ்வில் அவர் கொண்டு வந்த ‘ரி றிறீணீஸீ’ இந்திய அரசியலில் பூகம்பமானது. அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவரானதும் மாநிலத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்களின் கருத்துக்களை அறிந்து முடிவெடுக்கும் ஜனநாயகப்பேற்றை உருவாக்கினார். தானே தலைமை அமைச்சராக ஆகும் வாய்ப்பு இருமுறை வந்தபோதும் அதனை நெஞ்சுரத்துடன் தவிர்த்தார்.
லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி ஆகிய இருவரையும் தலைமையமைச்சராக்கினார். காங்கிரஸ் இயக்க முன்னோடிகளை, அவர்தம் குடும்பங்களைப் போற்றிப் பாதுகாத்தார். அதே நேரத்தில் மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் தலைமைக்கு வருவதை நேரடி யாகவே எதிர்த்தார். ஜெ.பி. இயக்கத்தின் குழப்பத் தன்மையை எடுத்துரைத்தார்.
அகில இந்திய அரசியலின் பல்வேறு கூறுகள் இந்நூலில் ஆங்காங்கு சிதறிக்கிடக்கின்றன. கட்சி, ஆட்சி மற்றும் கொள்கை, அதிகாரம் ஆகியவற்றுக்கான உறவும் தொடர்பும் பகையும் பல இடங்களில் பதிவா கின்றன. தமிழ்நாடு, இந்திய அரசியல்வாதிகள் பலரின் அறியப்படாத முகங்கள் சிறு புள்ளிகளாக தெரிகின்றன. காந்தியமும், நேருவியமும் மெல்ல கரைவதன் அறிகுறிகளை சில நிகழ்வுகள் சுட்டி நிற்கின்றன. காமராசரிடம் ஒருவித ஜனநாயகத் தன்மை எப்போதும் குடிகொண்டிருந்ததை பழ. நெடுமாறன் பலவிடங்களில் பதிவு செய்கிறார்.
‘காலா காந்தி’ எனக் கொண்டாடப்பட்ட போதும் ‘கருப்புக் காக்கையை கல்லால் அடியுங்கள்’ எனத் தூற்றப் பட்டபோதும் ஒரே மனநிலையில் இருந்தவர் காமராசர் என்பது கவனிக்கத்தக்கது. இந்த நிதானம் தான் அவரை சிறந்த தலைமையாக்கியது எனலாம்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு குறித்த முதல் திருத்தம் வர பெரியார் அடிப்படை வகுத்தார். காமராசர் துணை நின்றார். எல்லைப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றில் சரியான முடிவெடுத்தார். காலமும், சூழலும் கனியவில்லை. தமிழ் முதன்மை, தமிழ் வழிக்கல்வி, அனைத்து மொழிகளுக்கும் ஆட்சியுரிமை போல்வன கானல்நீராய் போய்விட்டன.
காமராசர் அறிஞர்களை, கலைஞர்களைப் போற்றினார். கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் மன மொன்றிப் பழகினார். ஜீவா, பாலன், பி. ராமமூர்த்தி, எம். கலியாணசுந்தரம், கே.டி.கே. தங்கமணி, ஆர். நல்லகண்ணு மற்றும் கேரளா, இந்தியத் தலைவர் களுடன் நல்லுறவைப் பேணினார். உலக அளவில் இந்தியா, சோவியத் அணியில் இருப்பதை உறுதி செய்தார். பெரியார், இராஜாஜி, அண்ணா ஆகியோருடன் அணுக்கத் தொடர்பில் இருந்தார்... என்றெல்லாம் நூலின் நுவல் பொருள் விரிந்து கொண்டே செல்கிறது.
இன்று அரசியல் ‘வெறுப்பு அரசியலாக’ச் சலிப்பைத் தருகிறது. காமராசரைக் கொல்ல முயன்ற பசுக் குண்டர்கள் இந்திய அடையாளத்தையே அழிக்க முயல்கிறார்கள். அதிகாரம் என்பதே லஞ்சம் ஊழல் என்றாகி விட்டது. பொது வாழ்வு என்பது சுகபோக சம்போகி களின் கூடாரமாகிவிட்டது. எளிமை, நேர்மை, தூய்மை, அர்ப்பணிப்பு என்பவை அகராதிப் பொருளை இழக்கத் தொடங்கிவிட்டன. நிலமும், மக்களும் கணம் தோறும் கதறிக் கொண்டிருக்கின்றனர். குறைகள் - விமர்சனங்கள் - எதிர்க்கருத்துக்கள் இருந்த போதும் இது மாதிரி தலைவர்கள் நம் காலத்தில் தான் வரலாற்றின் ஆகச் சமீபத்தில் தான் வாழ்ந்தார்கள் என்ற ஒற்றைவரி வரலாற்றையாவது எதிர்காலத் தலைமுறைக்கு விதைத்திட இம்மாதிரி நூல்கள் அவசியம் தேவை.
பெருந்தலைவர் காமராசர் அதிகம் பேசாதவர். ஆர்ப்பாட்டமில்லாதவர். பிறரைப் பாராட்டத் தெரியாத வரும் கூட. அவரால் அடையாளம் காட்டப்பெற்று ‘மாவீரன்’ எனக் கொண்டாடப்பட்டவர் அய்யா பழ. நெடுமாறன். தொடர்ந்து பல அரிய நுல்களைத் தரும் அவரையும் பாராட்டுவது தமிழ்க்கடமை.
பெருந்தலைவரின் நிழலில்
பழ.நெடுமாறன்
வெளியீடு : தமிழ்க்குலம் பதிப்பாலயம்,
119ஏ, டிப்போ லைன், சி.பல்லவபுரம்,
சென்னை - 600 0043
தொலைபேசி : 044-22440451
விலை: ` 600/-