gnanalaya

நூல்களின் யுகம் இது. ஓலையில் எழுதப்பட்டாலும் சரி, காகிதத்தில் எழுதப்பட்டாலும் சரி, கணினிச் சில்லில் எழுதப்பட்டாலும் சரி, மனித அறிவின் அனுபவங்களைத் திரட்டித் தொகுத்த வடிவத்தை நூல் என்றுதான் சொல்ல முடியும். மனித நாகரிக வரலாற்றின் மிகப்பெரும் சாதனை இந்த நூல். மாண்புமிகு மனிதர்கள் தங்கள் வாழ்வில் திரட்டிய அறிவை, அறத்தை, அன்பை, அழகைத் தொகுத்து, மனித குலத்துக்குத் தர மனிதகுலம் கண்டெடுத்த ஆற்றல்மிகு வடிவம்தான் நூல்.

நூல் என்பது அறிவின் சுரங்கம். அறத்தின் பெட்டகம், அன்பின், அழகின் அரிய பூந்தோட்டம். மொத்தத்தில் மானுடச் சாதனைகளின் கருவூலம். மனிதகுல வரலாற்று வேர்களின் தொகுப்பு.

மண்ணின் மேலே மனிதர்களைக் காணுகிறோம், சமூகங்களைக் காணுகிறோம், சாதிகளைச் சமயங்களைக் காணுகிறோம், நாடுகளைக் காணுகிறோம், ஆறுகளை, ஏரிகளை, மலைகளை, கடல்களை, பிரபஞ்சத்தின் அத்தனையையும் காணுகிறோம். இந்தக் கணத்தில் இவை அத்தனையுமே புத்தம் புதியவை. நேற்று இல்லாதவை. தடியாக, மரமாக, கிளையாக, இலையாக, பூவாக, காயாக, கனியாக, நாம் காணும் இவைகளின் வேர்களை எங்கே தேடுவது?

கல்வெட்டில், அகழ்வாய்வில் இன்னும் எத்தனை எத்தனையோ வழிகள் வேர்களைத் தேட வழிகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஆணிவேர் எது? மனிதகுலம் சேகரித்து வைத்திருக்கும் நூல்களே! இந்த நூல்களினுள்ளேதான் பிரபஞ்சத்தில் இன்று நாம் காணும் அனைத்தின் வேர்களும் பரவிக் கிடக்கின்றன. பரவிக்கிடக்கும் இந்த வேர்கள் வழிதான் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான ஆற்றல்கள் திரட்டப் படுகின்றன.

வேர்களை இழந்தவை எல்லாமே வளர்ச்சியை இழந்துவிடும், வாழ்வை இழந்துவிடும். அடையாளங் களையே இழந்துவிடும். ஆக, எல்லா வளர்ச்சிக்கும் ஆற்றல் தரும் முதன்மை ஆதாரமாக விளங்குவது நூல்களே. நூல்களின் வழியே அன்றி, மனிதரோ, சமூகமோ, இனமோ, நாடோ, வளர்வதற்கு வாய்ப்பே இல்லை. வாய்ப்பையிழந்தால் பிற உயிரினங்களைப் போல மனித இனமும் பொறுக்கித் தின்று படரலாம், வளர முடியாது. படர்வதும் ஒரு வளர்ச்சிதான் என்கிறீர்களா? அது கிடைத்தள வளர்ச்சி. ஆடு, மாடு, கோழி, குருவி, இவற்றிற்கிடையே ஏற்படும் வளர்ச்சி. ஆனால் மனிதர்களிடையே ஏற்படும் வளர்ச்சி வெறும் கிடைத்தள வளர்ச்சி மட்டுமல்ல, முதன்மையாக அது செங்குத்து வளர்ச்சி. புதியன தேடும் வளர்ச்சி. அனுபவங்களைத் திரட்டிப் புதியன ஆக்கும் வளர்ச்சி. இவ்வளர்ச்சியே மனிதரைப் பிற உயிரிகளிலிருந்து சிறப்பித்துக் காட்டுவது.

இந்தச் சிறப்பு வளர்ச்சியைப் பெறுவது எப்படி? அடிப்படையாக, முதன்மையாக, நூல்களின் வழியே தான். நூல்கள் தான் செங்குத்து வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கின்றன. அணு ஆராய்ச்சியில் வளர வேண்டுமா? அறிவியல் மேதை ஐன்ஸ்டீனை அவர் நூல்களின் வழி சந்தித்து உரையாட வேண்டும். அறவியல் ஆராய்ச்சியில் வளர வேண்டுமா? வள்ளுவப் பெருந்தகையை அவர் நூல்களினுள் சந்தித்துப் பாடம் கேட்க வேண்டும். அழகியல் வளர்ச்சி தேவையா? சங்கக் கவிஞர்களை, இளங்கோவடிகளை, கம்பனை, பாரதியை, இவர்களின் நூல்களினுள்ளே விருப்பம் போல சந்தித்து உரை யாடலாம். நூல்கள் இல்லையென்றால் நாம் மொட்டை யாகி, மிருகங்களாகி மேயப் போய்விடுவோம்.

இந்த உண்மைகளை உணர்ந்துதான் ஆதியி லிருந்தே நூல்களைச் சேகரிக்கத் தொடங்கியிருக் கிறார்கள் மாமனிதர்கள். தொகுத்து, வகுத்து, நூல்கள் சேகரித்துப் பயன்படுத்தப்படும் களஞ்சியம் நூலகம் எனப் பேசப்படுகிறது. உலகம் முழுவதும் நூல்களை நூலகங்களில் பேணிப் பாதுகாக்கும் பேரறம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்று செங்குத்து வளர்ச்சி கட்டாயமாகிவிட்டச் சூழலில், அவ்வளர்ச்சி வேண்டி ஒவ்வொரு தெருவிலும் ஊரிலும், நகரிலும், வட்ட, மாவட்ட, மாநில மையங் களிலும், பள்ளிகள், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங் களிலும் அறிவுக் களஞ்சியங்களாகிய இந்த நூல்கள் பேணிப் பாதுகாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நோபல் பரிசு அறிவிக்கும் வேளைகளில் 140 கோடி மக்களைக் கொண்ட என் மாபெரும் தேசத்தின் புகழ்மிக்கப் பெயர் ஏன் விடுபட்டுப் போகிறது? சில லட்சம் மக்களைக் கொண்ட சுண்டைக்காய் நாடு களெல்லாம் பரிசுகளை ஏன் பைகளில் அள்ளிஅள்ளிச் செல்கின்றன? பல காரணங்கள் உண்டு. அடிப்படைக் காரணம் நூலகத்துக்கும் நம் மக்களுக்குமான இடை வெளிதான். இந்நாட்டில் நூலகங்கள் இருக்கும், நல்ல நூல்கள் இருக்காது. நூல்கள் இருந்தாலும் நூலகர் இருக்கமாட்டார். எல்லாம் இருந்தாலும் நூல்களில் ருசியூட்டி, நூலகங்களைப் பயன்படுத்தும்படித் தூண்ட நம்மிடையே ஆசிரியர்களும் நூல் விரும்பிகள் இருக்க மாட்டார்கள். எல்லாமே பிழைப்புக்கென ஆகிவிட்ட காலமிது.

ஆசையோடு ஒரு நூலகத்துக்குப் போவோம். நூலகர் நம்மைப் பார்த்துக் கொட்டாவி விடுவார். ஒரு நூலைப் பற்றிக் கேட்டால், தேடச் சொல்லிக் கையைக் காட்டுவார். தேடினால், இருக்க வேண்டிய இடத்தில் எந்த நூலும் இருக்காது. இப்பெரு நாட்டின் மிகப்பெரும் சோகம் இது.

இந்தச் சூழலில்தான் வாசிப்பில் ருசிகண்டு, பயன்கண்டு, நல்ல நூல்களை மக்களுக்குத் தர வேண்டுமென ஆசை கொண்டு, நூலகம் அமைக்கும் தியாகிகள் ஒளி விளக்குகளாக ஆங்காங்கே நம் கண்ணுக்குத் தெரிகின்றனர். தமிழ்நாட்டில் மறைமலை யடிகளார் நூலகம், ரோஜா முத்தய்யா நூலகம், எட்டையபுரம் ரகுநாதன் நூலகம், பாவலர் சாமி. மாணிக்கம் அவர்கள் விருத்தாசலத்தில் நிறுவிப் போற்றி வரும் ஒரு லட்சம் நூல்களைக் கொண்ட ‘தமிழ் நூல் காப்பகம்’ என பல நூலகங்கள் உள்ளன. எல்லாவற்றின் மையமாகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் நூல் விரும்பிகள் இருந்தனர், இருக்கின்றனர், இன்னும் இருப்பர்.

இவற்றுள் தனித்துவம் பெற்று இன்று தலை நிமிர்ந்து நிற்பதில் முதன்மையானது எனப் புதுக் கோட்டை திருக்கோகர்ணத்தில் செயல்பட்டுவரும் ஞானாலயா நூலகத்தைச் சொல்ல முடியும்.

இந்த நூலகத்தின் மைய அச்சாகச் செயல்படும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, டோரதி தம்பதியினர் வித்தியாசமானவர்கள். தீவிர வாசகர்கள். இவர்கள் நூல் ரசனையே இவர்களைச் சாதி, மதம் கடந்த சமத்துவ இணையராக்கியது. ஒருவர் பள்ளிக் கல்வித்துறையிலும், மற்றவர் கல்லூரிக் கல்வித்துறையிலும் ஆசிரியர் பணியை அறப்பணியாகச் செய்துவந்தவர்.

எனக்கு இவர்களோடு 30 ஆண்டுக்கும் அதிகமான நட்பு உண்டு. புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த அந்தக் காலங்களில் இவர்களோடு நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். ஆழ்ந்த புத்தகப் பிரியர்கள். பிறரையும் வாசிக்கத் தூண்டுபவர்கள்.

கிருஷ்ணமூர்த்தியின் இலக்கிய உரைகளை அக்காலத்தில் கேட்டுக் கேட்டு வியந்திருக்கிறேன். நூல்களின் வரலாற்றைப் பேசுவார் அவர். புதியபுதிய பதிப்புகளாக அவை பிறப்பெடுக்கும்போது, உடை மாற்றி முகம் மாற்றிப் புதுவேடம் புனைவது பற்றி யெல்லாம் பேசுவார். மணிக்கணக்கில் பேசுவார். கேட்போர் வியப்படையப் பேசுவார். ஆங்கிலத் துறையில் பணியாற்றிய டோரதி அம்மா தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குக் கவிதைகளை மொழிபெயர்க்கின்ற அரிய கலையில் வல்லவராக விளங்குகிறார்.

ஞானாலய உருவாக்கமும் வியப்புக்குரியது. மாவட்டக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்த கே.வி. பாலசுப்பிரமணியன் அவர்கள் தன் புதல்வர் கிருஷ்ண மூர்த்திக்கு நூறு அரிய நூல்களைக் கொடுத்திருக்கிறார். மனப்பிரிவற்ற கிருஷ்ணமூர்த்தி- டோரதி இணையர் அந்த நூறை ஆயிரமாக, பல்லாயிரமாக வளர்த்துத் தங்கள் வீட்டு மாடியில் ஒரு நூலகமாகப் பெருக்கினர்.

நூலகக் கனத்தை வீட்டு மாடி தாங்காது எனப் பொறியாளர்கள் சொன்னதும், தங்கள் இருவரின் முழுச்சேமிப்பையும் செலவிட்டு, நூலகத்துக்கெனத் தனியாக அனைத்து வசதிகளோடும் கூடிய மாடி கட்டடம் கட்டினார்கள். நூல்கள் இரவல் கொடுக்கப் படாத இந்த நூலகத்தைப் பயன்படுத்த விரும்புவோர், எத்தனை நாட்கள் வேண்டுமெனினும் தங்கிக் கொள்ள இங்கு வசதிமிக்க இரு அறைகள் உள்ளன. தங்கி ஆய்வு செய்வோர், சொந்த விருந்தினராகவே நேரத்துக்கு நேரம் உணவும் தேவையான பிறவும் வழங்கிப் பேணப்படு கிறார்கள். வேறு எங்கும் கிடைக்காத வசதி இது எனக் கருதுகிறேன்.

இந்த நூலகத்தில் வீரமாமுனிவர் 1842-இல் வெளியிட்ட சதுரகராதி பாதுகாக்கப்படுகிறது. புதுமைப் பித்தன் முதல் நூலின் முதல் பதிப்பு பாதுகாக்கப் படுகிறது. இதுபோல் ஏராளமான முதல் பதிப்புகள் இங்கு உள்ளன. தொடரும் பதிப்புகளால், நூல்கள் நீர்த்துப் போகின்றன என்கிறார்கள் கிருஷ்ணமூர்த்தியார்கள். மறுபதிப்புகள் வராத அரிய நூல்களும், இங்கே நம் கண்ணைப் பறிக்கின்றன.

இங்கே நூல்கள் அடுக்கப்பட்டு, எடுக்கப்படும் நேர்த்தி அறிவியல்பூர்வமானது. வாசகரின் தேவையை அறிந்து உதவ ஒரு நூலகரும் நியமிக்கப்பட்டிருக்கிறார். வசதியான, காற்றோட்டம் நிரம்பிய இடம், அமர்ந்து தேட, தேடியதை வாசிக்க ஆசையைத் தூண்டும் பிற வசதிகள் உள்ளன. அபூர்வமான இதழ்களின் தொகுப்புகள், 75 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களின் தொகுப்புகள் முதலியவற்றை சேதப் படுத்தாமல் இங்கே வாசிக்கலாம், நகலும் எடுக்கலாம்.

நூலகத்துக்குப் புதிதுபுதிதாக நூல்களைப் பதிப்பகங்கள் அனுப்பிக் கொண்டிருக்கின்றன. அரிய நூல்கள் இருந்தும் அனுபவிக்க வாரிசுகள் வாய்க்காத நல்லவர்கள் தங்கள் சேகரிப்புகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். நூல் ஆசிரியர்களும் தங்கள் படைப்புகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். வலுவான மூலதனத்தோடு வடிவம் பெற வேண்டிய ஒரு அறக்கட்டளையாக இதன் பரிணாமம் இன்று உள்ளது. இதற்கு உதவ வேண்டியது வளர்ச்சியைத் தேடும் தமிழர்களின் கடமை.

இந்த அரிய நூலகத்துக்கு வருகை புரிந்து வியப்படைந்தோர் பலப்பலர். தோழர் நல்லகண்ணு, அமைச்சர் தங்கம் தென்னரசு, குமரி அனந்தன், திலகவதி ஐ.பி.எஸ், கவிஞர்கள் கனிமொழி, தமிழச்சி, அமைச்சர் க. அன்பழகன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்து ராமன், இலக்கிய வள்ளல் நல்லி குப்புசாமிச் செட்டியார், வள்ளலார்களிலெல்லாம் வள்ளல் பாலம் கல்யாண சுந்தரனார், இப்படி நீளும் அந்தப் பட்டியல்.

“இந்நூலகத்தின் வளர்ச்சிக்குத் துணை செய்ய வேண்டுவது அனைவரின் கடமையாகும்” என்கிறார் இரா. நல்லகண்ணு. பழ. நெடுமாறனுக்கு இந்நூலகம் “ஒரு அறிவுப் புதையல்.” இது அவருடைய “பலன் கருதாத ஆயுட்காலப்பணி” என நெகிழ்கிறார் அசோக மித்திரன். வியப்பின் உச்சிப்படியில் ஏறி நின்றுகொண்டு, “எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால், கிருஷ்ணமூர்த்தி டோரதி தம்பதியருக்கு பத்மபூசன் விருது கிடைக்கச் செய்திருப்பேன்” எனக் கையுயர்த்துகிறார் மொழிப் பேரறிஞர் வி.ஐ. சுப்பிரமணியன். தான் இனி எழுதும் அனைத்தையும் டோரதி- கிருஷ்ணமூர்த்தி தம்பதியரின் அன்புக்குக் காணிக்கை ஆக்குவேன் என்று 1979 லேயே சொன்னார் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு. “தங்க இடமும், உண்ண உணவும் தந்து உபசரிக்கும் கிருஷ்ணமூர்த்தி- டோரதி இணையரை ஆனந்த விகடன் கொண்டாடு கிறது,” இந்தப் பட்டியலும் இன்னும் இன்னும் நீளும்.

பவழவிழா காணும் கிருஷ்ணமூர்த்தியையும் அவருடைய உயிர்த்தோழி டோரதியையும் பாராட்டியும், அறுபது ஆண்டுகளை நிறைவு செய்யும் ஞானாலயாவைக் கொண்டாடியும், நூலகத்துக்குத் தேவையான புதிய மின்னணுக் கருவிகளையும், இதர உபகரணங்களையும் வழங்கியும், புதுக்கோட்டை வாழ் பெருமக்கள் ஆகஸ்டில் பெருவிழாவுக்குத் தயராகிக் கொண்டிருக் கிறார்கள். இனிய இணையர் டோரதி- கிருஷ்ணமூர்த்தி இன்னும் நீண்டகாலம் முழுநலத்துடன் இந்த நூலக இயக்கப் பணியைத் தொடர வேண்டும். வலுவான நூலக வாரிசுகளும், மக்கள் ஆதரவும் இவர்களுக்கு வாய்க்க வேண்டும். ஞானாலயா ஒரு மாபெரும் ஞான அறக்கட்டளையாக விரிவும், பொலிவும், உயர்வும் பெற வேண்டும். அதன் ஒளியில் தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றும் பயனடைய வேண்டும்.

Pin It