மாமனிதர் அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த ஆண்டு இந்தியா முழுவதுமாகக் கொண்டாடப் படுகிறது. புதிய இந்தியா வடிவம் பெறுவதற்குத் தகுந்த வகையில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் அவன் தன் வாழ்க் கையை முழுவதுமாக அர்ப்பணித்தார்.

ambedkar 264இந்திய விடுதலைப் போராட்டத்தில் தாழ்த்தப் பட்ட மக்களை ‘அரிஜனங்கள்’ என்று சிறப்பாகக் குறிப்பிட்டு அந்த மக்களின் வாழ்நிலையை உயர்த்திய மகாத்மா காந்தியைப் போலவே, மாமனிதர். அம்பேத்கர் விலங்குகளைப் போல நடத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட உழைக்கும் வர்க்க மக்களிடையே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உணர்வை வளர்த்து அவர்களை மனித நிலைக்கு உயர்த்தினார். அவர்களிடையே விழிப்புணர் வையும், தன்னம்பிக்கையையும் உருவாக்கினார். அந்த முயற்சியில் அவர் பலவகையான எதிர்ப்புக் களைச் சந்தித்துக் கடைசி வரை தொடர்ந்து போராடினார். அவருடைய மனம் தளராத தனித் தன்மையை உணர்ச்சி நிறைந்த தமிழ் உரை நடையில் உணர்வுபூர்வமாக ஒரு வரலாற்று நூலாக ஏ.எஸ்.கே. அவர்கள் வடிவமைத்துள்ளார். செறிவான மொழி நடையில் ஏராளமான தகவல் களை இந்த வரலாற்று நூலில் இவர் அடக்கி யிருப்பது ஒரு தனிச்சிறப்பு.

ஒருவருடைய உயர்வும், தாழ்வும் அவருடைய பிறப்பு சார்ந்ததல்ல. ஒவ்வொருவரையும் அவர் சார்ந்துள்ள வாழ்க்கைதான் வடிவமைத்து உரு

வாக்குகிறது என்பதைத் தாழ்த்தப்பட்ட இன மக்களிடையே பிறந்து வளர்ந்து ஒரு மாமனிதராக உருவான அம்பேத்கரின் வாழ்க்கை, உணர்த்தும் சமூக அறிவியல் கண்ணோட்டம் இந்த வரலாற்று நூலின் வாயிலாகப் புலப்படுகிறது. ‘தாழ்த்தப் பட்ட மக்களின் இறுதி விடுதலை’ எவ்வாறு ஏற்படும் என்பதைக் குறிப்பதும் இந்நூலின் ஓர் அம்சமாகும்.

மண்வளம், மனிதவளம், நீர்வளம், இயற்கை வளம் மிகுந்த இந்தியாவில் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பகுதி மக்கள் ‘தீண்டப்படாதோர்’ அல்லது ‘சாதி நீக்கம் செய்யப்பட்டவர்’, ‘கீழோர், சண்டாளர், தீண்டப்படாதவர்’, ஆதி திராவிடர்’, ‘நாம சூத்திரர்’ போன்ற இன்னும் பிற இழிவான அடையாளங் களோடு மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் கிராமப்புறங்களில் அறியாமையும், ஏழ்மையும், வறுமையும் நிறைந்த வாழ்க்கைச் சூழலில் இந்த வகைப்பட்ட மக்கள் எப்படி யெல்லாம் இழிவாகவும், கேவலமாகவும் நடத்தப் படுகிறார்கள் என்பதை அம்பேத்கர் தன்னுடைய இடையறாத போராட்ட வாழ்க்கையில் மிகுந்த நேர்மையுடன் தன்னுடைய வரலாற்றின் வாயி லாகவும் அரிய பணிகளின் வாயிலாகவும் உலகுக்கு உணர்த்தியதையே உள்ளடக்கமாகக் கொண்டிருக் கிறது இந்த வரலாற்று ஆவணம்.

தாழ்த்தப்பட்ட மக்களின் இழிவான நிலைமை ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதைக் குறிப்பிடும் வரலாற்றா சிரியர் இப்படி மனத்தவிப்புடன் குறிப்பிடுவது புதிய வெளிச்சத்தைத் தருகிறது: “இவர்கள் இந்து மதத்தில் இடம் பெற்று வந்துள்ளனர். ஆனால், அன்று முதல் இன்றுவரை, ‘உயர் ஜாதி இந்துக்கள்’ என்று கூறப்படும் பகுதியினர் இவர்களை மனிதர் களாகவே கருதுவதில்லை. மிருகங்களுக்குக் கொடுக்கக்கூடிய அந்தஸ்தைக் கூட கொடுக்க மறுத்து வந்துள்ளனர். இதற்குப் பிரதான காரணங்கள் வேதங்களும், உபநிடதங்களுமே யாகும். ஏனெனில், இந்து மதம், சனாதன தர்மம் என்னும் அனைத்தும் வருணாசிரம தருமத்தின் பேதங்களும், சூத்திரர்கள் குறிப்பாக ‘சண்டா ளர்கள்’ என்று வேதங்கள் கூறும் தாழ்த்தப்பட்ட வர்கள் சொல்லொணாக் கொடுமைகளுக்கு இரை யாகக் காரணமாக இருந்து வந்துள்ளன.”

இந்திய வரலாற்றுப் போக்கில் தொடர்ந்து இருந்துவரும் இந்த இழிவான வாழ்க்கை நிலை மையை, “பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற் பகுதியிலும் இருபதாவது நூற்றாண்டிலும் பல சமூகச் சீர்திருத்த எண்ணம் படைத்தவர் தோன்றினர். ஆனால், அவர்கள் நல்லெண்ணம்தான் அவர் களை ஊக்குவித்ததே தவிர வேறு ஒன்றுமில்லை” என்கிறார் இந்த நூலாசிரியர்.

தொடர்ந்து அவரே உணர்ச்சிப் பெருக்குடன் குறிப்பிடுகிறார். “ஆனால், தாழ்த்தப்பட்ட சமுதாயத் திலேயே பிறந்து, இளமைப் பருவத்திலிருந்து ‘பறையன்’ படும் பாட்டை, அனுபவபூர்வமாகத் தானே அத்தனை கஷ்டங்களையும் பட்டு, தன் மக்கள் மனிதர்களாகக் கருதப்படவேண்டும், அதற்காகத் தன் உடல் பொருள் ஆவி அத்தனையும் அர்ப்பணம் செய்து, தன் சமுதாய மக்களை விட்டுப் பிரியும் போது, சமுதாயம் அனைத்துமே ஓர் உயர்ந்த கட்டத்தை அடையச் செய்தவன் இந்திய உபகண்டத்தில் தோன்றினான்.”

“அவர்தான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்”

“தாழ்த்தப்பட்ட மக்களின் ஈடு இணையற்ற தலைவர் அம்பேத்கர் என்ற உண்மை இந்திய உபகண்டத்தில் மூலை முடுக்கிலும், பட்டி தொட்டி களிலும் எல்லா அரசியல் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.”

“இதைச் சுருக்கமாக இந்நூலில் காணலாம்” என்ற தொடக்க உரையுடன் இந்த வரலாறு தொடர்ந்து விரிவதை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

இருபதாம் நூற்றாண்டு உலகம் முன் எப் போதும் இல்லாத அளவுக்கு சிறியதும், பெரியது மான சமுதாயப் புரட்சிகளின் வாயிலாக மனித வரலாற்றை வளப்படுத்தியது. ஏராளமான அழிவு களினூடாகப் பயணம் செய்த மனித சமுதாயம் தன்னைப் பல வகைகளிலும் புதுப்பித்துக் கொண்டது. இரண்டு உலகப்போர்களை உலக மக்கள் நிகழ்த்தினார்கள். பழைய சமுதாய அமைப்புக்கள் தகர்ந்தன. புதிய மக்களாட்சியும், சோசலிசச் சமுதாய வாழ்க்கையும் உலகில் பரவலாக நிறுவப்பட்டன. உலக வரலாற்றில் இந்தக் கால கட்டத்தில் தான் மாமனிதர்கள் அங்கங்கே பரவ லாகத் தோன்றி வரலாற்றை முன்னோக்கி நகர்த் திருக்கிறார்கள். அழிவுகளுக்கிடையில் ஆக்க ரீதியான மாற்றங்கள் நிகழ்ந்தன.

அந்தச் சூழலில்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் கண்கண்ட தெய்வமாகத் தோன்றினார் அம்பேத்கர். அவருடைய இளம்பருவ அனுபவங்கள் அவருடைய உள்ளார்ந்த மன ஆற்றலைத் தூண்டியதன் விளை வாக அவர் கல்வியில் மிகுந்த அளவுக்கு ஈடுபாடு காட்டி மேலும், மேலும் உயர்ந்து அயல்நாடு சென்று அமெரிக்காவில் கல்விகற்றுப் பட்டம் பெற்றுத் திரும்பினார். இந்தியாவிற்குத் திரும்பிய அவர் பல உயர்பதவிகளை வகுத்தார். சமூக அறிவியல் சார்ந்த பல வகையான துறைகளை தொடர்ச்சியான தன்னார்வ வாசிப்பினால் ஆழமாகப் புரிந்து கொண்டார்.

எதார்த்த வாழ்க்கையின் அம்சங்களையும், இலட்சியவாதக் கருத்துக்களையும் ஆழமாக ஆய்வு செய்து மதம் தொடர்பான கருத்துக்களை அப்பால் தள்ள, நிகழ்கால மக்களின் எதார்த்தமான வாழ்க் கைத் தேவைகளைக் கண்டறிந்து தனது கட்டுரை களின் வாயிலாகவும், உரைகளின் வாயிலாகவும் அவற்றை வெளிப்படுத்தினார். ஆத்திகத்தை ஆழ மாகவும், தீவிரமாகவும் விவாதித்துப் புறந்தள்ளி நாத்திகக் கண்ணோட்டம் வளரப் பல வகை களிலும் முயற்சி செய்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தியுடன் உடன்பட்டும், முரண்பட்டும் சமுதாயத் தளத்தில் இயங்கினார். ஆனாலும், அவர் மகாத்மா காந்தியை உயர்ந்த தளத்தில் வைத்திருந்து போற்றினார். தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்விற்காக அவர்கள் இருவரும் முரண்பட்டு தனித்தனியாகப் போராடினார்கள். அம்பேத்கர் இந்து மதக் கோட்பாடுகளைப் பல நிலைகளிலும் வைத்து விமர்சிப்பதைத் தொடர்ந்து செய்தார். புத்தமதத்தை விரும்பி அதில் சேர்ந்தார். அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் பொறுப்பில் உயர் நிலையில் இருந்து செயல் பட்டார். தன்னுடைய கருத்து நிலையில் எவரிடமும் சமரசம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து வாழ்க் கையில் போராடிக் கொண்டிருந்தார்.

அம்பேத்கரின் வரலாற்றுக் கடமையை அவர் எப்படியெல்லாம் செய்து முடித்தார் என்பதை ‘அம்பேத்கர்’ வாழ்க்கை வரலாற்று நூலில் மனம் திறந்து, வியந்து, உவந்து நேர்மையாக வெளிப் படுத்தியுள்ளார்.

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டி யாக இருக்கும் காரணத்தால் அவரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் நோக்க மாகும். அவருடைய வாழ்க்கை வரலாறே தாழ்த்தப் பட்ட மக்களின் போராட்ட இயக்க வரலாறாகும். இந்தச் சிறிய நூலில் உலகளாவிய அளவில் பல வகையான தகவல்களும், ஆவணங்களும் அடங்கி யுள்ளன.

அதே சமயத்தில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய “இந்தியாவில் சாதிகள்” என்ற சிறிய நூலையும் கற்றுத் தெளிவது இன்னும் பயன் விளைவிக்கக் கூடியதாகும். இந்த நூலில், சாதி களின் அமைப்பியக்கம், தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக் கருத்துக்கள் முழுவதுமாகவே அடங்கி யுள்ளன.

சென்ற நூற்றாண்டு 1916 மே மாதம் 9-ஆம் நாளன்று அமெரிக்க நாட்டு நியூயார்க், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த டாக்டர் ஏ.ஏ. கோல்டன் வைஸ்கரின் மானுடவியல் கருத்தரங்கில் படித்த ஆய்வுக்கட்டுரை. இந்தக் கட்டுரைக்கு இப்போது நூறு வயதாகிறது. கட்டுரையை அம்பேத்கர் வாசித்த போது அவருக்கு வயது 25.

அந்தக் கட்டுரையில் வியக்கத்தகுந்த வகையில் புதிய புதிய கருத்துக்களை முன்வைத்து விவரிக் கிறார்: ஆய்வுப் பொருளுக்கு வருவோம். நாம் நன்கு அறிந்த மானுடவியல் அறிஞர்களின் கூற்றுப் படி ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள், சீக்கியர்கள் ஆகியோர் அடங்கிய கலவையே இந்திய மக்கள் ஆவர். இவர்கள் அனைவரும் பன்னெடுங்காலத்திற்கு முன்னர் பல்வேறு திசை களிலிருந்தும், பலவகைப்பட்ட பண்பாடுகளோடும் இந்தியாவுக்குள் நுழைந்த பழங்குடிகளாவர். இவர்கள் அனைவரும் தங்களுக்கு முன்பே இங்கு வாழ்ந்து வந்தோருடன் போரிட்டுத் தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொண்டனர். இதைத் தொடர்ந்து வந்த போராட்டங்களுக்குப் பின், நிலையாகத் தங்கிப் பிறருடன் அண்டை அயலாராகி அமைதியாக வாழத் தொடங்கினர். பின்னர், இவர்களுக்குள் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்பின் மூலமாகவும், கலந்து பழகியதாலும் தத்தம் தனித் தன்மை வாய்ந்த பண்பாட்டினை இழந்து அவர் களுக்குள் ஒரு பொதுப் பண்பாடு உருவானது. எனினும் பலவகை இன மக்களின் தனித்தனி பண்பாடு மறைந்து ஒன்றுபட்ட ஒரே பண்பாடு ஏற்பட்டு விடவில்லை என்பதும் தெளிவு. இதனால், இந்திய நாட்டு எல்லைக்குள் பயணம் செய்யும் பயணி ஒருவர் இந்தியாவின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள மக்கள் உடலமைப்பிலும், நிறத்திலும் வேறுபட்டிருப்பதைக் காணலாம். அவ்வாறே தெற்கிலும் வடக்கிலும் உள்ள மக்களிடை யேயும் வேறுபாடு இருக்கக் காணலாம். இனங்களின் கலப்பு என்பது எப்போதும் ஒரே இயல்புள்ளதாக இருக்க வேண்டும் என்று ஆகாது. மானுடவியல் படி மக்கள் யாவரும் பலபடித்தான தன்மை கொண்டவர்களே. அந்த மக்களிடம் நிலவும் பண்பாட்டு ஒருமையே ஓரியல்பு தன்மைக்கு அடிப்படையாகும். பண்பாட்டு ஒருமைப்பாட்டி னால் இணைந்துள்ள இந்திய தீபகற்பத்திற்கு இணையாக ஒப்பிட்டுக் கூறக்கூடிய அளவிற்கு வேறு எந்த நாடும் இல்லை என்று துணிந்து கூறுவேன்”. இது போன்ற ஆழமான ஆய்வுக் கருத்துக்களை முன்வைத்துப் புதிய புரிதலுக்கு இந்தியர்களை இட்டுச் செல்லுகிறார்.

இது போலவே, வருணாசிரம தர்மம், சதுர் வர்ணதர்மம், மனுதர்மம் போன்றவைகளை ஆய்வு செய்து தர்க்க ரீதியான முடிவுகளுக்கு வருகிறார். வருணாசிரம தர்மத்தை ஆதரித்து அதன் அடிப் படையில் தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்த முயலும் மகாத்மா காந்தியுடன், இவர் அடிப் படையிலேயே முரண்படுகிறார். சனாதன தர்மமே மக்களை இழிந்த நிலையில் வைத்திருப்பதற்குக் காரணமாக இருப்பதைக் காட்டி அதை அழித் தொழிப்பதன் வாயிலாகவே இந்திய மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவராக உள்ளார். தனது கட்டுரையின் வாயிலாகத்தான் கண்டறிந்த, உணர்ந்த கருத்துக்களை மிகுந்த துணிவுடன் அவற்றின் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் வெளிப் படையாகத் தெரிவிக்கிறார். பிராமணர்களும், சத்திரியர்களும் ஒருங்கிணைந்து உழைக்கும் வர்க்க மக்களாகிய தாழ்த்தப்பட்டவர்களை அடக்கி, ஒடுக்கிச் சுரண்டி வாழ்வதை விரிவாக விவரிக் கிறார். இந்திய அரசியலை மிகுந்த அக்கறையோடு ஆய்வு செய்து சமூகச் சீர்திருத்தம் பற்றிக் குறிப் பிடுகிறார். சமயம், சமுதாயம், அரசியல் சீர்திருத்தங் களால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான விடிவும் இல்லை என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறார். சாதிய அமைப்பு முறை ஒழிந்தால் மட்டுமே இந்திய மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்பதைத் தனது தர்க்க ரீதியான ஆய்வுக் கண்ணோட்டத்தின் வழியாக உணர்த்துகிறார். தான் கணக்கில் எடுத்துக் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான பிறருடைய கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு அவற்றின் குறைநிறை களை விமர்சன ரீதியாக நிறுவுகிறார்.

இந்து தர்மம் என்ற கருத்தை நிலைநிறுத்தும் பிராமணர்களே இந்திய மக்களின் நல்வாழ்விற்குத் தடையாக இருக்கிறார்கள் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டு அதற்கான ஆதாரங்களை நடைமுறை யிலிருந்து சேகரித்து விளக்குகிறார். இந்துக்கள், கிறித்தவர்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் என்று பல சமயத்தவர்களின் நடைமுறைகளை வெளிப் படையாகவே ஆக்கரீதியாகவே விமர்சிக்கிறார். தன்னுடைய கருத்துக்களை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற தெளிவான உறுதியான புரிதலோடுதான் துணிந்து வெளிப்படுத்துகிறார்.

கடிதங்களின் வாயிலாக இவருடன் நிகழ்த்தப் பட்ட கருத்துப் பரிமாற்றங்களை இந்தச் சிறிய நூலில் வெளியிட்டு விளக்கம் அளிக்கிறார். இவருடைய ஒவ்வொரு கருத்தும் புதுமையான தாக இருப்பதால் தொடர்ந்து சிந்திக்கத் தூண்டு கிறார். அவருடைய அனுபவங்களோடு மற்றவர் களின் அனுபவங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது புது வகையான கருத்துக்கள் தோன்று கின்றன அம்பேத்கரின் நேர்மையும், துணிவும், தார்மீகமும் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற் பட்டது. கருத்துக்களால் வேறுபடுபவர்களை இவர் ஆழ்ந்து நேசிக்கிறார் என்பது புலனாகிறது. தன்னுடைய வரலாற்றுச் சூழலில் சமுதாயம், அரசியல், ஆன்மிகம், கல்வி, நீதி, வாழ்க்கை முறைகள், அறிவியல் போன்ற எல்லாவிதத் துறை களிலும் ஆழ்ந்து சிந்தித்துக் கருத்துக்களைத் தேர்ந் தெடுத்து நிகழ்கால வாழ்க்கைக்குப் பொருத்த மாகக் காட்டுகிறார்.

வியக்கத் தகுந்த விதத்தில் நிகழ்ந்த இன் னொரு அனுபவம் சார்ந்த நீண்ட கட்டுரையும் இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. சென்ற 1936-ஆம் ஆண்டு லாகூரின் ஜாதி-பட் தோடக மண்டல் அமைப்பின் வருடாந்திர மாநாட்டிற்காக டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் தயாரித்த உரைதான் அது. அந்த மாநாடு நடைபெறவில்லை. காரணம், அந்த உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல என்று மாநாட்டின் வரவேற்புக் குழுவினர் கருதினார்கள். அதனால், அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது. இந்தக் கட்டுரையில் செறிவான கருத்துக்கள் பரவலாகக் காணப்படுகின்றன. அனைத்தும் புதிய கண்ணோட்டத்திற்கு நம்மை இட்டுச் செல்லும். மகாத்மா காந்தியைக் குற்றம் சாட்டும் சிறிய கட்டுரைகளையும் இந்த எளிய நூலில் காணமுடிகிறது. இருபதாம் நூற்றாண்டில் இருபெரும் சாதனைகளைப் புரிந்த இரு மாமனிதர் களின் ஆன்மிக வெளிப்பாடுகள் இதில் செறி வாகக் காணப்படுகின்றன.

இந்தியாவில் தொடர்ந்து நிலை நின்றுவரும் சாதிகள் குறித்து டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் இப்படிக் கூறுகிறார். “முரண்பாடுகள் நிறைந்த இந்த வாழ்க்கையை எத்தனை காலம்தான் வாழப் போகின்றோம். நமது சமூக வாழ்க்கையிலும் பொருளாதார வாழ்க்கையிலும், சமத்துவம் அற்ற இந்த ஏற்றத்தாழ்வுகளை நாம் தொடர்ந்து அனு மதித்தால் நமது அரசியல் ஜனநாயகம் என்பது ஆபத்திற்குள்ளாகும். இந்த முரண்பாடுகளை நாம் விரைவில் களைய வேண்டும். இல்லையென்றால் இந்த சமத்துவமற்ற நிலையால் பாதிக்கப்படும் மக்கள் இந்த அரசியல் ஜனநாயக அமைப்பை உடைத்து நொறுக்குவார்கள். நாம் அரும்பாடு பட்டு வடிவமைத்த இந்த சட்ட அமைப்பு நொறுங்கும்.”

நாடு விடுதலையடைந்து 67 ஆண்டுகள் ஆன பின்னாலும் பழைய நிலைமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. புதிய தலைமுறையினர் இது தொடர்பாக ஆழ்ந்து சிந்திக்கவும், செயல் படவும் நிறையவே வரலாற்றுக் கடமைகள் உள்ளன. அம்பேத்கரையும் அவருடைய தேசிய, சர்வதேசியப் பார்வையைப் புரிந்துகொள்ளவும், பயனடையவும் இந்த, இரு நூல்களையும் கற்றுப் புரிந்து கொண்டு தெளிவடைவது, ஒவ்வொரு வரும் புதிய சமூக அறிவியல் கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ள உதவும்.

இந்தியாவில் சாதிகள்

ஆசிரியர்: டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

பாவை பப்ளிகேஷன்ஸ்

16 (142) ஜானி ஜான் கான் சாலை

இராயப்பேட்டை, சென்னை - 600 014

போன்: 28482441

விலை ரூ. 30/-

 ***

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்

ஆசிரியர்: ஏ.எஸ்.கே

பாவை பப்ளிகேஷன்ஸ்

16 (142) ஜானி ஜான் கான் சாலை

இராயப்பேட்டை, சென்னை - 600 014

போன்: 28482441

விலை ரூ. 145/-

Pin It