‘கொள்ளிவைக்க ஒரு ஆணரசு இல்லையே!

‘கொள்ளிக்குப் பிள்ளைஇல்லை! கொடுப்பினை யாருமில்லை’

இருந்தா நல்லபிள்ளை இருக்கணும்! இல்லைன்னா...

கொள்ளிக்குப் பிள்ளை இல்லாம இருக்கணும்!’

போன்ற வழக்காற்று மொழிகள் இன்று வரை நம் நாட்டுப்புறங்களில் பேசப்பட்டு வருபவை. கொள்ளி வைத்தலென்பது பழைய ஒன்றை அழித்துவிட்டுப் புதிய ஒன்று அதன் அதிகாரத்திற்கு வருவதாகும். உரிமை கொண்டாடி உடைமையை ஆள்வது. இதில், மிகுஅதிகாரம் என்பது இயற்கையாகிய ஐம்பூதங்களையும் தனதாக்கிக்கொள்ள முயற்சித்து, அதற்காக எதையும் செய்து, வென்று சாதிக்கத் துணிவதாகும். மனிதகுலம் தோன்றி இன்றுவரை வரலாறென்பது வர்க்கப் போர்கள் தோன்றி மாறிமாறி வந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளாகும்.

மனிதன் சுகிர்த்து இன்பங்கொண்டு நுகரும் யாவுமே உடைமையாய் உரிமையாய்க் கொண்டு வழிவழி வந்தன. அதற்கான போராட்டங்கள் வலு வானவர்களுக்கும் வலுவற்றவர்களுக்கும் காலங் காலமாகத் தொடர்ந்து மாறி மாறி வருபவை.

உரிமையும் உடைமையும்

மனிதன் உயிர்வாழ இன்றியமையாத முதற் பொருள் உணவு. உணவு உற்பத்திக்கான நிலங்கள் உடைமையாகி உரிமையாகின. காணி, காராண்மை, மீயாட்சி, குடிக்காணி, குடிநீங்காக்காணி, குடிநீக்கிய காணி, ஜென்மக்காணி, பற்று, படைப்பற்று, பறைக்காணி, வெள்ளாம்பத்து, குசவன்குண்டு, அய்யங்காணி, ஆவுடையன்வாய்க்கால் என்றிவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.

குடியும் குடித்தனமும்

‘குடி என்பது ஓர் இனக்குழுவையும் அதன் உரிமையினையும் குறிக்கும் சொல்லாகும். இலக் கியங்கள், கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள் செப் பேடுகள் நாட்டார் வழக்காறுகள் போன்றவற்றில் ‘குடி’ என்னும் சொல் வழங்கி வருகிறது. ‘குடி’ என்னும் அமைப்பில் ‘குடித்தனம்’ அதாவது, குடியை நிர்வகிக்கும் அதிகார அமைப்பு முறை, குடித்தனம் என வழங்கி வரப்பெறுகின்றது. அரசர், அந்தணர், வேளாளர், வணிகர், போர்வீரர் போன்றவர்கள் இந்த அதிகார அடுக்குமுறையில் அடங்குவர்.

குடி, குடும்பமாகி, குடும்பம் சேரியாகி; சேரி கிராமமாகி; கிராமம் நகரமாகி; நகரம் நாடாகி ஒன்றையொன்று படிநிலைகளில் அதிகாரம் கொண்டு ஆள்பவைகளாகத் திகழ்கின்றன. இதனையே, ‘குடிஉயரக்கோன்உயரும்’ என்றார் ஒளவையார்.

கொடையும் தானமுறையும்

காலம் செல்லச் செல்ல, குடிமுறை மாறித் தானம் மற்றும் கொடையளிப்பு செய்யும் நிலத்தின் மீதான மேல்வாரம், அதாவது அந்நிலத்தின் மீதான மேல் அதிகாரம், கோயில்களுக்கும் அந்தணர்களுக்கும், தனிநபர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் நிலத்தின் விளைச்சலை அனு பவிக்கும் அதிகாரம் கோயிலுக்கும் அந்தணருக்கும் கிட்டியபோது, கோயிலாரும் அந்தணரும் நிலங் களை உழுவதில்லை. நிலத்தில் உழும் உரிமையுடைய குடிகளை, கொடையளிக்கப்பட்டபோது உழும் குடிகள் அடிமைகளாகப் பிணைக்கப்பட்டனர். அடிமைகள் சோற்றுக்காக உழைத்தார்கள். சிலர் வரி என்ற பொருளின் தன் பெரும் உழைப்பை ஈட்டிக் கொடுத்தார்கள்.

மேலதிகார வர்க்கத்தினர், பொதுவாக ஆண் பெண் இனஉற்பத்தியில் கவனமாய் இருந்தார்கள். உரிமையும் அதிகாரமும் பறிபோய்விடும் என்ற பயத்தில் தன் பெண்டு பிள்ளைகளுக்குக் காவல் இருந்து அவர்களையும் தன்வீட்டு அடிமைகளாக்கி வைத்தனர்.

பாவமும் பழியும்

அதிகாரத்தை மீறுவோர்களுக்குப் பாவம், பழி நேரும் என்று மிரட்டி வைக்கப்பட்டது. ஏழு காராம்பசுவைக் கொன்றபாவம், கங்கையில் விசத்தைக் கலந்த பாவம், நரகத்தில் போக நேரிடும் என்ற பாவம், தாய் தந்தையைக் கொன்ற பாவம், கோயிலை இடித்த பாவம் போன்ற சொற்களைக் கையாண்ட தோடு மட்டுமல்லாது கல்வெட்டுக்களாகவும் ஆக்கிவைத்தனர். அதிகார உணர்வை மீறாமலிருக்க குற்ற உணர்வு திணிக்கப்பட்டது. இராஜதுரோகம், நாட்டுத் துரோகம், சிவத்துரோகம், இனத்துரோகம், குருத்துரோகம் என்றவாறு அவை நீண்டன.

தள்ளிவைப்பும் கொள்ளிவைப்பும்

குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்படும் நபர் களை ஊர்ப்பொது மன்றத்தில் வைத்து அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்தி, உடற்குறை செய்து, கூடைமண் வைத்து, ஊரை வலம் வரச் செய்து அவ்வூரை விட்டோ தெருவை வீட்டோ விலக்கி வைப்பது சிலரை நாடு கடத்துவது. சிலர் வீட்டைத் தீயிட்டுக் கொளுத்துவது, சிலரை உயிருடன் தீயிட்டுக் கொளுத்துவது, சிலர் வீட்டில், உப்புபுளி அரிசி, தீ போன்ற அத்தியாவசியமான பொருட் களை வாங்கவிடாமல் தள்ளிவைப்பது, தடுப்பது கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பது, சுடு காட்டில் பிணத்தை எரியூட்ட விடாமல் தடுப்பது. பொதுக்குளத்தில் குடிநீர் எடுக்க விடாமல் தடுப்பது, போன்ற கொடுஞ்செயல்களைச் செய்துவந்துள்ளனர்.

இலக்கியங்களும் கல்வெட்டுக்களும்

குறுந்தொகைப் பாடல் 231இல், தலைவன் தலைவியைக் காண வராத செய்தியைக் கூற வந்த புலவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ,

“ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்

சேரி வரினும் ஆர முயங்கார்

ஏதிலார் சுடலைபோலக் காணாக் கழிப மன்னே...”

குறுந்.231)

என்று பாடுகின்றார். இப்பாடலின் வழிக் கீழ் மக்களது சுடுகாட்டைப் பார்ப்பதுகூடப் பாவம் எனக் கூறுகின்றார். இந்நிலை அக்காலத்து இருந்த ஒன்றாகும். ஆசாரக்கோவையில்,

“... இணை விழைச்சு கீழ்மக்கள்

மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்

ஐயரா தாடுக நீர்” (ஆசாரக்...)

என்ற பாடல் வந்துள்ளது.

கீழ்மக்களை மற்றவர்கள் தீண்டலாகாது. அவ்வாறு தீண்டுவோராயின் உடனடியாக நீராடுதல் மிகவும் இன்றியமையாதது என்கிறது. இதன் மூலம் கீழ்மக்கள் என்போர் இழிந்த நிலையினராகவே கருதப் பட்டனர். ஊமைகளாய், அடிமைகளாய்; உழைக்கும் மக்களாய் இருக்கும் அவர்களைத் தீண்டுவதோ பார்ப்பதோ பாவமான செயல் எனக்கருதி அவர் களைச் சமுதாயத்தை விட்டே ஒதுக்கி வைத்துள்ளனர். பார்ப்பன இனமே உயர்வானது என ஆசாரக்கோவை,

“ஐம்பூதம் பார்ப்பார் பசுதிங்கள் ஞாயிறு

தம் பூதமெண்ணா திகழ்வானேன் தன் மெய்க்கண்

ஐம்பூத மன்றோ கெடும்”

என்ற இப்பாடலில், “இரு தெய்வம் பார்ப்பார் இடைபோகார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எவரும் பார்ப்பார் இருவருக்கிடையில் செல்லக் கூடாது என்பது இதன் பொருளாகும். மேலும்,

“தலைஇய நற்கருமஞ் செய்யுங்கா லென்றும்

புலையர் வாய் நாள்கேட்டுச் செய்யார் - தொலைவிலா

அந்தணர் வாய்ச் சொல் கேட்டுச் செய்க அவர் வாய்ச் சொல்

என்றும் பிழைப்ப தில்லை.”

என்ற பாடலில், புலையர்களது வாய்மொழி உதவாது. அவர்களிடம் நாள் நட்சத்திரம் கேட்கலாகாது. அந்தணர் சொல்லும் சொல் ஒருபோதும் பிழை யாவதில்லை என்ற கருத்தை வலியுறுத்துகின்றது. ஆனால், திருக்குறளில் அவ்வாறில்லாது “அச்சமே கீழ்களது ஆசாரம்” என மொழியப்பட்டுள்ளது.

மேலும், நீதி நூலான நாலடியாரில்,

“தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்

காணின் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய்

அவன்றுணையா வாறுபோயிற்றே, நூல் கற்ற

மகன்றுணையா நல்ல கொளல்”         (நாலடி 136)

என்று கூறப்பட்டுள்ளது. தோணி இயக்குபவன் கடைநிலைச்சாதியாய் இருந்தாலும் அவனைத் துணையாகக் கொண்டு செல்வோரை அவன் காப்பாற்றுகின்றான். எனவே, அவனை இழிவாகக் கருதி இகழ வேண்டாவாம் என மொழிகின்றது.

கல்வெட்டுக்களில் சாதிகளும் சாதிநீக்கமும் தள்ளிவைப்பும்

முற்காலத்தில் இறந்தவர்களைப் புதைக்க முது மக்கள்தாழிகள், ஈமத்தாழி, இடுகாட்டுப் பேழை, ஈமப்பேழை எனப் பலவகைத் தாழிகள் இருந்துள்ளன. கல்வெட்டுக்களில் சாதிமுறையிலான இடுகாடுகள் இருப்பது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. தஞ்சை பெருவுடையார்கோவில் கல்வெட்டுக்களில் வெள்ளான் சுடுகாடு, பறைச்சுடுகாடு, கம்மான் சுடுகாடு என்பன இடம்பெற்றுள்ளன. இடுகாட்டுக் கென நிலம் ஒதுக்கப்பட்டு, அதற்கென அரசு வரி நீக்கமும் செய்யப் பெற்று இறையிலியாகக் கொடுத்த செய்திகள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.

“இவ்வூர் ஈழச்சேரியும் பறைச்சேரியும் வெள்ளான் சுடுகாடும்

பறைச்சுடுகாடும் இதற்கிடையுமாக இறையிலி நீங்கு நிலன்”

(தெ.இ.க.55)

எனத் திருவானைக்கா கல்வெட்டு விளக்குகின்றது. இடுகாட்டுக்குச் செல்லத் தனித்தனி வழிகள் அமைக்கப்பட்டதை,

“பிணம் போகிப் பெருவழி”

(திருத்துறைப்பூண்டி கல்வெட்டு.4)

என்று கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

மேலும், தஞ்சாவூர் கல்வெட்டு 5,

“கம்மான் சேரி குடியிருக்கையும் பிடாரி

   கோயிலும் திருமுற்றமும்

வெள்ளான் சுடுகாட்டுக்குப் போம் வழியும்”              (தஞ்சை.க.வெ.5)

என்று குறிப்பிடுகின்றது.

சுடுகாட்டில் பிணம் எரிக்க வெட்டியான், தலையாரி, புலை, சக்கிலி போன்றோர் அப்பணி யிலமர்த்தப் பெற்றனர். இதனை ‘வெட்டுமை பார்ப்பது’, ஊழியஞ் செய்வது’ என்று குறித்தனர். இவர்களைத் தவிர வேறு இனத்தவரும் பிணஞ்சுடும் பணியில் ஈடுபட்டனர். அதன் காரணமாக அப் பணியைச் செய்தவர்களை அவ்வினத்தார்கள் ஒதுக்கி வைத்தனர். அவர்களோடு தொடர்பின்றி இருக்க வேண்டும், தள்ளி வைக்கப்பட்ட வீட்டில் தண்ணீர் அருந்துவதுகூடப் பாவம் என்ற நிலையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, அவ்வாறு கட்டுப் பாட்டை மீறுபவர்களையும் தள்ளிவைப்பது என்ற முச்சரிக்கை எழுதப்பட்டது. குறிப்பாக, புதுக் கோட்டை குடுமியான்மலையில் வாழ்ந்த முத்தரையர் இனத்தைச் சேர்ந்த சிலர், சவங்காத்தல், தீச்சட்டி ஏந்துதல், பிணம் தூக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதை அவ்வூர்ச் சபையார் கூடி அவர்களை இச்செயல்களைச் செய்ய வேண்டாமெனக் கட்டளை இட்டனர்.

இதனைப் புதுக்கோட்டைக் கல்வெட்டு 406 தெளிவாகக் கீழ்க்காணுமாறு விளக்குகின்றது.

“பின்னுக்கு இந்த ஊரிலே சாவுசெத்தால் கட்டையுமிட்டு

முக்காடு மிட்டு தீச்சட்டியுங்கொண்டு சுளுந்துக் கொளுத்தப்

போய் சவங்காத்து நின்று சுட்டு நடக்கையில் யிக்காரியம்

செய்ய பின் வையாது என்று போய்யிருக்கையில் யிந்தக்

காரியம் மட்டும் வேண்டாம் என்றுங் கட்டளையிடுகையில்”

(பு.க.வெ.406)

என்று சான்று பகர்கின்றது.

மற்றுமொரு கல்வெட்டில் இவ்வினத்தைச் சேர்ந்த சிலர் சுடுகாட்டுப் பிணம் எரிக்கும் பணியில் ஈடுபட்டதற்காக அவர்களைச் சாதி நீக்கம் செய்து புறத்தியாக வைத்திருந்ததைக் கூறுகின்றது.

“விசலூர்க் கோனாட்டு முத்திரையன் செவிந்திவன முத்திரையன்

உள்பட்டார்க்குக் கல்வெட்டிக் குடுத்தபடி இவர்கள் பட்டடை

காத்தும் பிணத்தின் முன்னே முக்காடிட்டு நடந்த படியினாலே

இவர்களை பிறவூர் வலையர் சாதிநீக்கி ஈனம்

பண்ணின படியினாலே”              (பு.க.வெ.926)

எனப் புதுக்கோட்டை கல்வெட்டு 926 விளக்கு கின்றது.

மேற்கண்டவற்றால் நாம் அறிவது யாதெனில், உயர் அதிகாரம் கொண்ட சிலர், தம் உடைமை களை உரிமை கொண்டாட எவரையும் அனுமதி யாது கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் சுய நலங் கொண்ட சில எழுதப்படாத சூக்கும சட்டதிட்டங் களை உண்டாக்கி, அதனை நடைமுறையாக்கினர். அதிகார வரம்புமீறி மிகுஅதிகாரக் கொடூரச் செயல் களாகச் சிலருடைய வீட்டைக் கொளுத்துவது, அந்நபரையே உயிருடன் வைத்துத் தீக்கிரையாக்குவது போன்ற மனித உரிமை மீறல்களைச் செய்து வரு கின்றனர். இஃது “இ.பி.கோ 436இன் படி கொடுங் குற்றமாகும். ஓர் இனத்தை, ஓர் நபரைத் தனிமைப் படுத்துவதும் தள்ளி வைப்பதும் மனித உரிமை மீறல் சட்டப் பிரிவு 12இல் அடங்கும் மாபெருங் குற்றமாகும்.”

தீண்டாமை ஒழிப்பு ஆணை

இவ்வாறிருந்த தீண்டாமையை ஒழிக்கச் சில நல்லெண்ணம் கொண்ட மன்னர்கள் முன்வந்தனர். அவ்வகையில் 1947-இல் மன்னர் இராஜகோபால தொண்டைமான் அவர்கள் டெல்லி சென்ற போது அண்ணல் மகாத்மா காந்தியைச் சந்தித்து உரை யாடினார். 1948 ஜனவரி 31 அன்று மகாத்மா காந்திஜீ சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஈமக்கிரியை நாளில், புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் சரிசமமாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று மன்னர் ஆணை யிட்டார். (புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, ப.151, 2004)

முடிப்புரை

கொள்ளி வைத்தலும் தள்ளி வைத்தலும் கூடாப்பாவம் என்ற அறவோர் வழி நிற்றலே அறம், தருமம்; நீதி ஆம்.

பயன் தந்த நூல்கள்

1.            ஆசாரக்கோவை

2.            திருக்குறள்

3.            குறுந்தொகை

4.            நாலடியார்

5.            தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி

6.            புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள்

7.            புதுக்கோட்டை மாவட்ட வரலாறு

Pin It