1942 ஆகஸ்ட், 9 ஆம் நாள். ‘பாரத மாதாவுக்கு ஜே, மகாத்மா காந்தி வாழ்க, ஜவஹர்லால் நேரு வாழ்க...’ பெரும் முழக்கங்களுடன் வீதிகளில் ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தது அந்த மாணவர் கூட்டம். அன்றைய தஞ்சை மாவட்டத்தின் திருவிடைமருதூரிலுள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்தான் அவர்கள்.

காவல்துறையினர் விரைந்துவந்தார்கள். மாணவர்களைக் கலைந்துசெல்லுமாறு சொன்னார்கள். மாணவர்களோ மறுத்தார்கள். தலைமை யேற்று வந்தவர்களை முன்னே வருமாறு அழைத் தார்கள். கோவிந்தராஜன், மகாலிங்கம், நீலகண்டன், இஸ்மத்... கைது செய்தார்கள். 15 நாள் சிறை.

am_gopu_4001942-இல் மும்பை காங்கிரஸ் மாநாட்டில் ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் நிறை வேற்றப்பட்டதைத் தொடர்ந்து, காந்தி, நேரு என நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது இந்தச் சின்ன ஊரில் ஏற்பட்ட எழுச்சியின் அடையாளம்தான் இது!

அந்தக் கோவிந்தராஜன் என்ற சிறுவன்தான், இன்றைக்கு மூத்த கம்யூனிஸ்ட் தோழரான ஏ.எம். கோபு. அன்று, 12 வயதில் தொடங்கிய போராட்டம் இன்றைக்கும் மாறாமல், மறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது 70 ஆண்டுகளாக! கம்யூனிஸ்ட் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடிகளில் ஒரு வரான ஏ.எம்.கோபுவினுடைய அரசியல் வாழ்வின் எழுபதாவது ஆண்டு விழா இப்போது கொண்டாடப் படுகிறது.

திருநீலக்குடியில் தொடங்கி, நாகப்பட்டினம், கும்பகோணம், புதுக்கோட்டை எனப் பள்ளி, கல்லூரிப் படிப்புகளைத் தொடர்ந்த ஏ.எம்.கோபு, பட்டப் படிப்பைப் படித்துத் தேறியது சேலம் சிறையில் இருந்தபோது!

குடும்பச் சூழல் காரணமாகப் படிப்புக்காக ஊர் ஊராகத் துரத்தப்பட்ட கோபு, நாகப்பட்டினத்தில் உறவினர் வீட்டில் தங்கிப் படித்த காலத்தில், மாணவனாகவே தீவிர அரசியலுக்குள், பொதுவுடைமை இயக்கத்துக்குள் இழுக்கப்பட்டுவிட்டார். இன்டர் மீடியட் படிப்பு அரைகுறையாகத் தடைப்பட்ட போதிலும் அரசியல் தீவிரமாகத் தொடர்ந்தது. தஞ்சை மாவட்டம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே, பொதுவுடைமை இயக்கத்தினரிடையே, முனைப் பானவர்களில் ஒருவரானார்.

நாடு விடுதலை பெற்றது. ஜனசக்தி இதழில் பணியாற்றுவதற்காகத் தோழர் பாலதண்டாயுதத் தால் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார் கோபு. மக்களைக் கடந்து, புதிய பணி. இதுவும் அறிவதற் கான பல வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. 1948, பிப்ரவரியில் கொல்கத்தாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாடு. தோழர் பி.டி. ரணதிவே பொதுச் செயலராகிறார் - ‘தொழிலாளர்கள் ஒன்று பட வேண்டும், புரட்சியின் மூலம் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும்’ எனத் தீர்மானம். நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்படுகிறது. தலை வர்கள் பெரும்பாலும் தலைமறைவாகிவிட்டார்கள். மே மாதத்தில் ‘ஜனசக்தி’க்கும் முடிவு வந்தது. மயிலாடுதுறையைத் தளமாகக் கொண்டு செயல் படக் கோபுவுக்குக் கட்சிக் கட்டளை.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் ஒடுக்கப் பட்ட மக்கள் இன்று தலைநிமிர்ந்து வாழ்கிறார்கள் என்றால் அதற்கான முழுப் பங்கும் கம்யூனிஸ்ட் களை மட்டுமே சாரும்.

தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிராமம். அதி காலையில் வயல் வரப்பில் ஒரே பரபரப்பு. தலை வேறு, முண்டம் வேறு எனத் தனித்தனியே கிடக் கிறது ஊர்ப் பண்ணையாரின் உடல் (ஊரும் பேரும் இப்போது வேண்டியதில்லை).

காவல்துறையினர் பரபரப்பாகக் குவிந்து விட்டனர். யார் இதைச் செய்தது? ஆனால், ஊரே உள்ளூர மகிழ்ந்து கிடக்கிறது.

இன்றைக்குக் கேள்விப்பட்டால் ‘அது எப்படி?’ என்று நம்ப முடியாத எத்தனையோ கொடுமைகள், அந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடந்துகொண்டிருந்தன. பெரும் பண்ணை யார்கள் நிரம்பிய தஞ்சை மாவட்டம் இதன் உச்சம்.

அப்போதெல்லாம், பல பகுதிகளில், தாழ்த்தப் பட்ட, ஏழை விவசாயப் பண்ணை அடிமைகளின் வீடுகளில் திருமணம் நடந்தால் மணமகளுக்கு முதல் இரவு பண்ணையாருடன்தான். அப்படிப் பட்ட ஒரு சம்பவம் அங்கேயும் நடந்த மறுநாளில் கோபுவும் அங்கே இருந்தார்.

நாடு முழுவதும் தலைவர்கள் கைது செய்யப் பட்ட காலத்தில், பண்ணையார் கொலைக்குப் பின் பரபரப்பானது தஞ்சை மாவட்டம். இதையும் ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, கம்யூனிஸ்ட் இயக்கத் தினரையும் அவர்களை ஆதரித்துக் காப்பாற்றும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களையும் சித்திர வதை செய்யத் தொடங்கியது காவல்துறை. எந்தச் சேரியும் இரவிலே தூங்க முடியாது. தினந்தினம் சோதனைகள்தான். ஆண்கள் வீட்டில் படுத்திருக்கவே அச்சப்பட்டார்கள்.

காஞ்சிவாய் என்றொரு கிராமத்துச் சேரி. குஞ்சிதபாதம் பிள்ளை என்ற காவல் அதிகாரி தலைமையில் காவல்துறையினரும் (உள்ளூர்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் எல்லாரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தால் ஒன்று சேர்க்கப்பட்டு விட்டதால்) ராமநாதபுரம் போன்ற தென் மாவட்டங் களிலிருந்து அழைத்துவரப்பட்ட அடியாள்களும் மனித வேட்டைக்காக இரவில் திடீரென ஊருக்குள் புகுந்தனர். பண்ணையார் கொலையில் சம்பந்தப் பட்டவர்கள் பதுங்கியிருப்பதாகத் தகவல். யாரும் கிடைக்காவிட்டாலும் காவல்துறையின் பெரும் சித்திரவதையை அந்தக் கிராம மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் அன்று மக்களுக்காகக் காவல்துறையினரை மாந்தை என்ற கிராமத்தில் எதிர்கொண்டது ஒரு குழு. நாட்டு வெடிகுண்டு வீசப் பட்டது. குஞ்சிதபாதம் பிள்ளை ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். எனினும், உயிர் பிழைத்தார். அன்றைக்குக் கோபுவும் அங்கே இருந்தார்.

தலைமறைவு வாழ்க்கை. கம்யூனிஸ்ட் தோழர்கள் எல்லாம் பட்டினியும் பசியுமாக. பெரும்பாலும் சேரிகள்தான் இவர்களின் புகலிடம். கடுமையான வறுமையிலும் ஒடுக்குமுறையிலும் பண்ணைத் தொழிலாளர்களான மக்கள். அவர்களுக்கும் ஒருவேளைச் சோற்றுக்கே தட்டுப்பாடு. மணலி கந்தசாமி, இரணியன், சிவராமன் எனப் பலரும் பல்வேறு இடங்களில் தலைமறைவு வாழ்க்கை.

தஞ்சை மாவட்டத்தையொட்டி, பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுவைப் பகுதிகளிலும் தலை விரித்தாடும் கொடுமை. அவர்களுக்கும் பாடம் புகட்ட வேண்டும். இவற்றுக்கான தீர்வு...

காரைக்கால் பகுதியில் ஒவ்வொரு மாதமும் ரயில்வே ஊழியர்களுக்கான ஊதியத்தைத் தண்ட வாளத்தில் ஒரு ‘டிராலி’யில்தான் எடுத்துக்கொண்டு போய் ஒவ்வோரிடத்திலும் தருவார்கள். உடன் பாதுகாப்புக்காகத் துப்பாக்கியேந்திக் காவலர்களும் செல்வார்கள். அப்படியொரு நாள் காரைக்கோயில் பத்து (கோயில் பத்து) நிலையத்திலிருந்து பணத் துடனும் பாதுகாப்புடனும் அதிகாரிகள் புறப்படு கிறார்கள். பேரளம் - மாயூரம் வரை செல்ல வேண்டும். சிறிது நேரத்திலேயே நடுவழியில் டிராலியின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்படுகிறது. உயிரிழப்பு ஏதுமில்லை. தாக்குதல் நடத்த வந்த குழுவினர், 37 ஆயிரம் பணத்துடனும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி யுடனும் தப்பிச் சென்றனர். அங்கேயும் கோபு இருந்தார்.

தஞ்சை விவசாயிகளின் வரலாற்றிலும் கோபுவின் போராட்ட வாழ்க்கையிலுமாகக் குறிப்பிடத்தக்க இன்னோர் இடம் - கோனேரிராஜபுரம். விளைச்சலில் பாதியை உழைப்பவனுக்குத் தர வேண்டும் என்ற வார நெல் பிரிப்புப் போராட்டம், இங்கேதான் வெற்றி பெற்றது. இங்கேயிருந்துதான் தஞ்சை மண் முழுவதும் பரவியது. இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர் கோபு. (1970-இல் நிலச்சுவான்தார்களிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் போராட்டத்துக்கும் கோபுதான் தலைமையேற்றார்).

இன்னமும் எத்தனையோ சம்பவங்கள், போராட்டங்கள். இவை எதுவுமே தங்களுக்காக அல்ல, மக்களுக்காக; மக்களுக்காக மட்டுமே. எந்தவித அரசியல் லாபம் கருதியுமல்ல. எந்தத் தருணத்திலும் கரணம் தப்பினால் மரணம்தான். உயிரைப் பணயம் வைத்துதான் ஒவ்வொன்றும் நிகழ்த்தப்பட்டது, கம்யூனிஸ்டுகளால். இத்தகைய சூழ்நிலையில், தனித்துத் தலைமறைவாக அலைந்த போது, திருவாரூரில் ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தபோது, துப்புக் கிடைத்து வந்த காவல் துறையினர், கோபுவைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். கோபுவின் வலக்கையில் சுட்டார் காவல்துறை அதிகாரி சந்தானம் - திருவிடைமருதூரில் ஊர் வலம் போன மாணவனான கோபுவைக் கைது செய்தவர்.

கோபு செத்துப் போய்விட்டார் என்றுதான் நினைத்தது காவல்துறை. பல மணி நேரம் கழித்து, இறப்பை அறிவிக்க வேண்டும் என்பதற்காகக் காலையில் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற போதுதான் தெரிந்தது, கோபுவுக்கு இன்னமும் உயிர் இழையோடிக் கொண்டிருக்கிறது என்பது. தொடர்ந்து சிகிச்சை, கைது, வழக்கு, சிறை.

திருச்சி மத்திய சிறையிலும் சேலம் மத்திய சிறையிலும் 4 ஆண்டுகள். சிறைத் தண்டனை முடிந்து, 1954-இல் வெளியே வந்தபோது கோபுவின் வயது 24! 24 வயதுக்குள்தான் இத்தனையும் நடந்தன. இப்போதும் அவருடைய வலக் கைக்குள் அகற்றப்படாத துப்பாக்கி ரவைச் சிதறல்கள் இருக்கின்றன.

தஞ்சை மண்ணில் ஒடுக்கப்பட்ட மக்கள், சவுக்கடி பட்டு சாணிப்பால் குடித்த காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர்கள் பி. சீனிவாச ராவ், களப்பால் குப்பு, வாட்டாக்குடி இரணியன், சாம்பவானோடைச் சிவராமன், எம். காத்தமுத்து என இன்னமும் எத்தனையோ பேர்...

வரலாற்றை யார் எழுதுகிறார்கள் என்பதைப் பொருத்துதான் அதன் தொனி அமைகிறது - அன்றும் இன்றும். எழுதப்படாத பக்கங்களில் இன்னமும் புதைந்து கிடக்கிறது ஒரு பெரும் வரலாறு.

ஏ.எம்.கோபு, இன்றைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினர், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத் தலைவர்.

போராட்டமே குணமாகிவிட்ட கோபு, சிறை வாழ்க்கைக்குப் பின், இயக்கப் பணிகளுடன் பத்திரிகையாளராகவும் தொழிற்சங்க செயற் பாட்டாளராகவும் இயங்கத் தொடங்கினார்.

1968-இல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், கீழ வெண்மணியில் உயிருடன் கொளுத்தப்பட்டவர் களின் எண்ணிக்கை, 43 அல்ல, 44 என்பதை உறுதி செய்யக் காரணமாக இருந்தவர் கோபுதான். கருகிப் போய்க் கிடந்த ஒரு பெண், ஒரு சிறுவனையும் அணைத்துக் கொண்டு இறந்துபோயிருந்ததைப் பார்த்துச் சொன்னவர் இவர்தான்.

ஒரு காலத்தில் காந்தியுடையதும், இப்போ தெல்லாம் ஊடகங்களின் ஊதிப் பெருக்கலால் ஹசாரேக்களின் உண்ணாவிரதங்களுமே பேசப் படுகின்றன. ஆனால், இன்றைய இளைய தலை முறைக்கு அறியக் கிடைக்காத எத்தனையோ தொழிலாளர் தலைவர்களின் உண்ணாவிரதங்கள், பல்லாயிரம் உழைக்கும் மக்களின் வாழ்க்கையையே மாற்றியமைத்திருக்கின்றன.

கோபுவும் அத்தகைய மாற்றங்களுக்குக் காரண மாக இருந்திருக்கிறார்.

1970-களில் சென்னை அம்பத்தூர் டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிற்சாலையில் கூடுதல் வேலைச் சுமை, ஊதியக் குறைப்பு, மாதக் கணக்கில் ஆலை மூடல். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் களின் வயிற்றுப் பாடு. பிரச்சினையின் தீர்வுக்காக 10 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார் கோபு. உடல்நிலை மிக மோசமான நிலையில், தொழிலாளர் களும் மறியல் போராட்டத்தில் இறங்கினர். தடியடி, ரத்தக்களரி. தோழர் கே.டி.கே. தங்கமணியும் தடியடி பட்டார். சில நாள்களில் அரசே இறங்கிவந்து பேசித் தீர்த்துவைத்தது.

பெருங்களத்தூர் ஸ்டான்டர்ட் மோட்டார்ஸ் ஆலைப் பிரச்சினை. எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்பு. அந்த ஆலையின் தொழிற் சங்கத் தலைவராக இருந்த கோபு, உண்ணாவிரதம் தொடங்கினார். 11 நாள்கள். அரசே முன்வந்து, ஆலையை மீட்க ரூ.3.75 கோடி நிதியளித்து, உண்ணாவிரதத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்தது.

1988-இல் 60 வயதுக்குப் பிறகும் உண்ணா விரதம் இருந்தார். தஞ்சை டெல்டாவில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, நுகர் பொருள் வாணிபக் கழகத் தொழிலாளர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டபோது. எட்டு நாள்கள். அரசுடன் உடன்பாடு எட்டப்பட்டது. அனைவரும் வேலை பெற்றனர்.

உலகளாவிய தொழிலாளர் சம்மேளனத்தில் பொறுப்பு. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இதழான ‘ஜனசக்தி’யின் ஆசிரியராக 14 ஆண்டுகள். ஜனசக்தியிலும் ‘New Age’ ஆங்கில இதழிலும் ஏராளமான கட்டுரைகள். ‘ஜனநாயகம்’ போன்ற மார்க்சிய தத்துவ இதழ்களுக்காக ஏராளமான மொழிபெயர்ப்புகள்.

‘உலகத் தொழிற்சங்க வரலாறு’ என்றொரு நூல். இவை இவர் எழுதியவை. ஒருவரின் மறைவுக்குப் பின்னர் மட்டுமே ஏற்றிப் போற்றுவதும் புகழ்வதும் வழக்கமாகிவிட்டது நம் நாட்டில். ஆனால், கோபுவைப் போன்றவர்கள் எதையும் எப்போதும் எதிர்பார்ப்பதில்லை. இன்றைக்கும் எங்கேயாவது பஸ்ஸிலோ, ரயிலிலோ கழுத்தைச் சுற்றிக் கிடக்கும் சிவப்பு மப்ளருடன் யாரேனும் பயணம் செய்து கொண்டிருந்தால் உற்றுப் பாருங்கள் - அவர், கட்சி வேலையாக எங்கேனும் சென்றுகொண்டிருக்கும் 82 வயதான ஏ.எம்.கோபுவாகவும் இருக்கலாம்!

Pin It