ramakrishnan 450 copyபடைப்பாளி நேர்கோட்டில் சிந்தித்தால் படைப்புக்கள் வராது. பரிமளிக்காது. மாறுபட்டு சிந்திக்க வேண்டும் என்பது கருத்தாக இருக்கிறது.

மாறுபட்டு சிந்திக்கிறேன் என்று வக்கிரமாகச் சிந்தித்து படைப்புக்களைக் கொடுப்பதும், படிப்பவர் களின் மனங்களைக் கெடுப்பதும், எதற்காக இதைப் படித்துத் தொலைத்தோம் என்று எண்ண வைப்பதும் நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புக்கள் வரிசையில் சிறுகதைகளின் பங்காக நிறைய இருந்து கொண் டிருக்கிறது.

மாறுபட்டுச் சிந்திக்க வேண்டும் என்றால் வக்கிரமாகத்தான் சிந்திக்க வேண்டுமா? நடைமுறை யதார்த்தத்திலிருந்து சற்றே விலகி வித்தியாசமாகச் சிந்தித்து, அந்த யதார்த்தத்தோடேயே இதனைக் கலந்து கலையழகு மிளிர, சுவைபட ஒரு படைப்பைக் கொடுக்க முடியாதா என்று யோசித்தோமானால் அப்படிக் கொடுக்கும் ஒரு சில படைப்பாளிகள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் நம்மிடையே.

தொடர்ந்து அவர்கள் தங்கள் படைப்பை அவ்வாறுதான் அளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவர்களின் படைப்புக்களைப் படித்தால் மனம் நோகுவதில்லை. கசடு விழுவதில்லை. அழுக்கு ஏறுவதில்லை.

மாறாக இதமாக வருடிக்கொடுத்தது போன்ற உணர்வுதான் நமக்கு ஏற்படுகிறது. வாழ்க் கையின் மெல்லிய சோகங்களுக்கு அரு மருந்தாக அமைகின்றது.

இந்த மக்களின் வாழ்க்கையோடு கலந்ததுதான் இலக்கியம். மக்களின் வாழ்க்கைதான் இலக்கியம். அதிலிருக்கும் அவலங்களை, அதை மீறி எழும் எழுச்சி களை மட்டும் சொன்னால்தான் இலக்கியமா? அந்த மக்களின், மனிதர்களின் மென்மையான உணர்வுகளை லேசாகத் தட்டிப் பார்ப்பதும், அந்த உணர்வுகளின் எழுச்சியில் அவன் கொள்ளும் ஆறுதல்களைக் கலை யழகு மிளிர  வடித்தெடுப்பதும் கூட சிறந்த இலக்கிய முயற்சிகளாகப் பல சமயங்களில் அமைந்துதான் விடுகின்றன.

தேவப்பிரகாஷ் என்ற அரசு ஊழியர் அப்படிப் பட்ட ஒரு மென்மையான மனிதராக இந்தக் கதை முழுவதும் இதமாக வலம் வருகிறார். பெயர் வைப்பது கூடத் தன்னின் பல கதைகளிலும், பிற படைப்பாளி களின் படைப்புக்களிலும் ஏற்கனவே சொல்லப் பட்டதாக, வந்ததாக இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனம் இந்தப் படைப்பாளிக்கு. ஒரு படைப்பாளியின் வெற்றியே இம்மாதிரியான முயற்சியில்தான் இருக்கிறது. தேர்ந்த இயக்குநர்கள் தன்னின் முன் படத்தில் இருந்த லொகேஷன்களை முற்றிலுமாகத் தவிர்த்து விடுவார்கள்.

சொல்லப் போகும் திரைக்கதைக்கான இடங்கள் பொருத்தமாக அமையும் வரை மனம் ஓயாது. ஒரு புதிய படத்தைக் கொடுப்பதற்கான அடையாளங்களில் அது முக்கிய இடம் வகிக்கிறது என்பதை அவர்கள் நன்கு உணர்ந்தவர்களாயிருப்பார்கள். அதுபோல்தான் இந்தப் படைப்பாளியின் படைப்புக்களும். ஏற்கனவே சொல்லப் பட்ட எந்தவொரு விஷயமும் மறந்தும் கூட, அவர்கள் அறியாமலே கூட, மற்ற படைப்புக்களில் தலைகாட்டி விடுவதில்லை. அதனால்தான் படிக்கும் வாசகன் புத்துணர்ச்சியடைகிறான். சே! எங்கிருந்தப்பா கிடைக்குது இந்த மனுஷனுக்கு இப்படியாப்பட்ட விஷயங்களெல்லாம்? என்று பிரமிக்கிறான். வளர்ந்து கொண்டிருக்கும் படைப்பாளி பொறாமையடைகிறான். அவரைப் போல் நாமும் எழுத வேண்டும் என்று உத்வேகமடைகிறான்.

இவர் ஒரு அரசு ஊழியர் இல்லை. வேறு எந்தப் பணிகளிலும் இல்லை. எழுத்தையே தவமாக, வாழ்க்கை யாகக் கொண்டு வெற்றி கண்டவர். எந்தவொரு பணி யிலுமே அர்ப்பணிப்பு ஒன்றுதான் ஒருவனை உச்சத்திற்குக் கொண்டு போகும் என்பது சர்வ நிச்சயம். வாழ்க் கையையே எழுத்துக்காக அர்ப்பணித்து, உச்சியில் சென்று ஜம்மென்று  அமர்ந்து கொண்டவர் இவர். இப்பொழுது அங்கிருந்துதான் எல்லோரையும் பார்க்கிறார். மனதில் பொறாமை கொள்ளாத ஒருவன் இப்படித்தான் நினைக்க முடியும். நினைக்க வேண்டும். அதுதானே முறை. அது தானே அழகு. அதுதானே நிறைவு. வெற்றி கண்டவன் எங்கிருக்க வேண்டுமோ, அது தானே நிகழும். அதை யாரும் தடுப்பதற்கில்லை.

எல்லா மக்களின் வாழ்க்கை நிலைகளும் இவருக்கு அத்துபடியாகியிருக்கிறது. பார்க்கும் பார்வையிலேயே புரிந்து கொள்ள முடிகிறது. எழுத்துக்கென்றே தன் வாழ்க் கையை அர்ப்பணித்த அந்த ஒப்படைப்பு இவருக்கு அதை சாத்தியமாக்கியிருக்கிறது. அரசு ஊழியரைப்பற்றி எல்லாரும்தான் எழுதியிருக்கிறார்கள். எத்தனையோ விஷயங்களைச் சொல்லித்தான் இருக்கிறார்கள். அரசு அலுவலகங்களையும், அதன் சூழ்நிலைகளையும் வர்ணித்திருக்கிறார்கள். அதிலிருந்தெல்லாம் சொல்லப் படாத்து இந்த மனுஷனுக்கு எங்கிருந்து கிடைத்தது? நமக்குத் தோன்றும் விஷயங்களையே, யாருக்கும் தோன்றாதது போல் சொல்கிறாரே இவர்? அதனதன் இருப்பை அப்படி அப்படியே சொல்வதுதான் படைப்பா? இவர் சொல்வது போலல்லவா சொல்ல வேண்டும். ஒரு நல்ல படைப்பாளிக்கு அப்படியல்லவா சொல்லத் தெரிய வேண்டும். சொல்லப்படும் விஷயங்கள் எல்லோர் கண்ணிலும் இதுநாள்வரை பட்டதுதான் என்றாலும், தொடர்ந்து பட்டுக் கொண்டிருப்பவைதான் என்றாலும், அவைகளைச் சொல்ல வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை? சொன்னால் எப்படிச் சொல்வது என்று ஏன் தோன்ற வில்லை? இப்படிச் சொன்னால்தான் சுவையாக, வித்தியாசமாக இருக்கும் என்று இப்போது இவர் முன் வைக்கிறாரே அது ஏன் நமக்குத் தோன்றவில்லை? அதுதானய்யா ரசனை. ஆழ்ந்த ரசனை. ஒரு சாதாரணன் பார்க்கும் பார்வைக்கும், ஒரு முதிர்ந்த படைப்பாளியின் பார்வைக்கும் காணும் மாறுபாடு என்பது அதுதானே...!

மொத்தம் முப்பத்தியெட்டுப் படிகள் இருக்கின்றன அந்த அலுவலகத்தில். தேவபிரகாஷ் பலமுறை அப்படி களை எண்ணியிருக்கிறார். அலுவலகத்திற்கு வந்த புதிதில் அப்படி எண்ணுவது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. ஆனால் இப்போது படிகள் இருப்பதே கண்ணிற்குத் தெரிவதில்லை. கால்கள் தானாகவே ஏறிப் போய் விடுகின்றன. ஒரு வேளை தன்னைப்போல் புதிதாக வேலைக்குச் சேர்ந்த எவராவது படிகளை எண்ணக்கூடும்.

மோகன்குமார் உட்கார்ந்திருக்கும் இடத்தின் அருகில் உள்ள ஜன்னலை ஒட்டி ஒரு வாதாமரமிருக் கிறது. ஆனால் அதன் இலைகள் அசைவதேயில்லை. தூசி படிந்து வெளிறிப்போன நிலையில் ஒரு நோயாளியைப் போல் அந்த மரம் நின்று கொண்டிருக்கிறது.

அரசு அலுவலகத்தின் ஊடாக ஒரு மரமாக இருப்பது துரதிருஷ்டவசமானது. யாரும் தண்ணீர் ஊற்ற மாட்டார்கள். மரத்தின் மீது பாக்கு போட்டு கோழையுடன் வழியும் எச்சிலைத் துப்பியிருப்பார்கள். மூன்றாவது மாடியில் வேலை செய்பவர்கள் சாப்பிட்டு மிச்சமாகித் தூக்கி எறியப்பட்ட உணவுகள் யாவும் மரத்தின் மேலாகத்தான் விழுந்திருக்கின்றன.

மனதில் பொறாமையின்றி, ஆழ்ந்து, அமிழ்ந்து ரசிக்கப் பழகிக்கொள்ளுங்கள். எழுத்தின் அழகு நம்மை வசீகரிக்கும். ஓடிப்போய் அந்தப் படைப்பாளியை ஆவியைச் சேர்த்துக் கட்டிக் கொள்ளச் சொல்லும். அரசு அலுவலகமும், மாடிக் கட்டடங்களும் நாம் கண்டது தான். அந்தப் படிகளில் ஏறுவதும், இறங்குவதும் என்ன முக்கிய நிகழ்வா? என்று தோன்றும். தினம் தினம் ஏறி இறங்கியவர்களைக் கேளுங்கள். அவர்களில் ஒருவருக் காவது இவர் சொல்லும் அனுபவங்கள் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். வாழ்க்கையில் எல்லா மனிதர்களுமா ஜடமாக இருக்கிறார்கள்? ரசனையும், உணர்ச்சியும், கொந்தளிப்பும், மகிழ்ச்சியும், வருத்தமும் இன்னும் பலவுமாக இருப்பவர்கள்தானே இந்த வாழ்க்கையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் படிகளில் ஏறி இறங்குவது ஆரம்பத்தில் கிளர்ச்சியூட்டுவதாக இருக்கும் ஒருவருக்கு பின்னால் அது ஒன்றுமில்லாததாகிப் போகிறது. அதை எப்படிச் சொல்வது? படிகள் இருப்பதே கண்ணுக்குத் தெரியாமல் போன அவருக்கு, கால்கள் இப்போது தானாகவே ஏறிப் போய் விடு கின்றன. சொல்லும் முறையில் ஒருவனின் இயந்திரத் தனமான வழக்கமான வருகையும், பழக்கமும் மனதில் நின்று விடுகின்றது அங்கே.  அரசு அலுவலக வளாகங் களில் நிற்கும் மரம் தூசி படிந்து, வெளிறிப்போய் ஒரு நோயாளியைப் போல் நின்று கொண்டிருந்தது என்பதைச் சொல்லும்போது நாம் காலம் காலமாய்ப் பார்த்த காட்சிகள் நம் கண் முன்னே விரிகிறது.

அதிலும் அரசு அலுவலகத்தின் ஊடாக ஒரு மரமாக நிற்பது துரதிருஷ்டமானது எனும்பொழுது அந்த மரமே உயிர் பெற்று நம்மிடம் வாயிழந்து வருந்துவது போலிருக்கிறது.  படைப்புக் கண் கொண்டு பார்க்கும் ஒரு படைப்பாளிக்கு அதை எப்படிச் சொல்லத் தோன்றுகிறது பார்த்தீர்களா? அந்த மரமும், அதன் மீது துப்பப்பட்டிருக்கும் பாக்குப் போட்டு மென்ற கோழையும், எச்சிலும், உணவுத் துகள்களும், ஏதோ வொரு வகையில் நம் மனதைச் சங்கடப்படுத்துகிறது தானே? அந்த வளாகத்தின் கவனிப்பாரற்றுப் போன இயற்கையின் சாட்சி, அதன் அவலக் காட்சி, சே...! என்ன மனிதர்கள்? என்ற வருத்தத்தை மனதில் ஏற்படுத்துகிறதுதானே? ஏற்படுத்த வேண்டும். இல்லை யென்றால் உங்களுக்கு ஆழ்ந்த ரசனை இல்லை என்று பொருள். கதை நிகழும் இடத்தின் சூழலை விவரிக்க முயலும்போது, தென்படும் யதார்த்தங்களை, இதற்கு முன் தன்னாலும், மற்றவர்களாலும் சொல்லப்படாத வகையில் எப்படிப் புதிதாக, அதேசமயம் யதார்த்தம் குன்றாமல் சொல்வது என்ற அந்த இடம்தான் படைப்பாளி நிற்கும் இடம்.

தேவப் பிரகாஷிற்கு உடனே ஒரு மானைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.

ஒரு சிறுகதையை எந்த இடத்தில் ஆரம்பிப்பது? எத்தனை முக்கியம் அது? ஒரு படைப்பாளி வெற்றி பெறும் இடம் அங்கிருந்துதானே? அலுவலகத்தில் பணி செய்யும் ஒருவன் திடீரென விபரீதமாக எதையாவது நினைத்துக் கொண்டால்? நகரில் எப்படி திடீரென்று மானைப் பார்ப்பது? மானைப் பார்க்க வேண்டும் என்று அர்த்தமில்லாமல் ஏன் நினைத்துக் கொள்கிறார்? இவருக்கென்ன கிறுக்கா? அதைப் பார்த்து என்ன செய்ய வேண்டும் இப்போது? அன்றாட சாதாரண சராசரி வாழ்க்கையில் இது ஏன் இவருக்குத் தோன்றியது?-என்னென்னவோ கேள்விகள் விழுகின்றன நம் மனதில். அதுதானே நோக்கம். அப்படி என்னதான் சொல்லப் போகிறார், அதையும்தான் பார்ப்போமே என்று கூடப் பயணிக்கத் தயாராகி விடுகிறோம்.   காட்டுக்குத்தான் புறப்பட்டுச் செல்ல வேண்டும். அல்லது இருக்கும் இடம்  மாநகரமாய் இருந்தால் மிருகக்காட்சி சாலையை நோக்கிச் செல்ல வேண்டும். தேவப்பிரகாஷ் என்ன செய்கிறார் பார்ப்போமே என்று கண்களை ஓடவிட்டு வரிகளை நகர்த்துகிறோம்.

உடனே கிளம்பிப் போய் மானைக் காட்டி விட்டால் அப்புறம் கதை என்ன ஆவது?. அதிலென்ன சுவை? உள்ளே எப்படியெல்லாம் பயணம் நடை பெறுகிறது என்பதுதானே ஸ்வாரஸ்யம். ஒரு கதை சொல்லி தன் படைப்பை முழுமையான உள்ளடக்கமாக, சொல்ல வந்த விஷயத்தின் கட்டுக் கோப்பு குலையாத வகையில், அதே சமயம் படிக்கும் வாசகன் சிரமமின்றி உள்வாங்கும் விதமாய் அடுத்தடுத்ததான சம்பவக் கோர்வைகளை நெருக்கமாகக் கோர்த்துக் கொண்டே போனால்தானே கடைசிவரை கூடவே வருவான். இடையில் எதுவும் இளகிப் போனாலோ, நீர்த்துப் போனாலோ, ம்ம்ம்... சரி... ஒண்ணுமில்ல... என்று விட்டுவிட்டு அடுத்ததற்குத் தாவி விடும் வாய்ப்பு உள்ளதுதானே...! இங்கே அப்படியான பாதிப்பு எதுவும் நிகழாமல் உங்களைக் கை கோர்த்து உடன் அழைத்துச் செல்லும் மாயம்தான் நிகழ்கிறது.

முதலில் அவரைச் சொல்ல வேண்டும். பின் அவரிருக்கும் இடத்தை விவரிக்க வேண்டும். பிறகு மற்றவர்களைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அதற்குப் பிறகு இந்த சம்பந்தங்களோடு கதையையும் விடாமல் கூட்டிச் சென்றாக வேண்டும். படைப் பாளியின் பொறுப்பு எத்தகையது?

நீங்கள் அரசு அலுவலகங்களை அன்றாடம் கண்ணுற்றிருக்கிறீர்களா? அதன் யதார்த்த நிலையை ஜீரணித்திருக்கிறீர்களா? ஜீரணிக்கவே முடியாத நிலையில் இருந்தால் நீங்கள் ஒரு அரசு அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அல்லது இருந்தவர் என்று பொருள். அதுதான் இது -

அந்த அலுவலகம் பரபரப்பாகச் செயல்பட்டு அவர் அறிந்ததேயில்லை. அதுபோலவே அலுவலகத்தில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் ஒரு நாளும் முழுமையாக வந்ததேயில்லை. தினமும் நாலைந்து

காலி இருக்கைகள் கண்ணில் படுகின்றன. அதிலும் சுந்தரவதனி என்ற பெண் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக விடுப்பில் இருக்கிறாள். அவளது இருக்கை அப்படியே இருக்கிறது. அந்த மேஜை மீது கோப்புகள் தூசி படிந்து கிடக்கின்றன. சுந்தரவதனிக்கு என்ன செய்கிறது, ஏன் ஒருவரும் அவள் வீடு தேடிப்போய் பார்த்து வந்ததேயில்லை.

Òஅலுவலகத்தில் சுந்தரவதனி எப்போதுமே தலைவலி தைலத்தை தேய்த்துக் கொண்டு  கடுமையான முகத்தோடுதானிருப்பாள்.”

உடம்பு சரியில்லாத அவளை ஆப்பிள் பழங்களை வாங்கிக் கொண்டு  போய்ப் பார்க்கிறார் தேவபிரகாஷ். அவரை எதிர்பார்க்காத அவள் ஏதாச்சும் கடன் கிடன் வேணுமா? என்று கேட்கிறாள். வேவு பார்க்க வந்திருக்கிறாரோ என்று சந்தேகப்பட்டு இனிமே வர்றதுன்னா முன்னதாக ஃபோன் பண்ணிட்டு வாங்க என்று முகத்திலடித்தாற்போல் சொல்லி, கொண்டு வந்த ஆப்பிளை எடுத்துப் போகச் சொல்கிறாள். மனம் சங்கடப்பட்டு வெளியேறும் இவர், ஆத்திரத்தில் வீட்டிற்கு வெளியே இருக்கும் குப்பைத் தொட்டியில் அந்தப் பழங்களை வீசுகிறார்.

மனித உறவுகள் அர்த்தமற்றுப் போய்விட்டதாக வருத்தமுறுகிறார். மேலே சொல்லப்பட்டதுபோல் இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள்? என்று தோன்றக் கூடும். அரசு ஊழியர்களில் (அவர்களும் மனிதர்களா தானே) பலரை நீங்கள் இப்படிப் பார்க்கலாம். அந்தப் பலரில் ஒருவரை அடையாளம் கண்டு எழுதியிருப்பது தான் இங்கே அதிசயிக்கத்தக்கது.

அலுவலகத்தில் உள்ள யாருமே கண்டுகொள்ள வில்லையே என்று நினைத்து அதற்காக பிரயத் தனத்துடன் அலுவலரிடம் பொய் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றவருக்குக் கிடைக்கும் வரவேற்பு விரக்தி கொள்ள வைக்கும்தானே?

காரணமில்லாமல் ஒருவர் மற்றவரைப் பார்ப்பது கூட ஏன் இயலாமல் போயிற்று? பணம் தவிர வேறு எதுவுமே உலகில் முக்கியமானதில்லையா? ஏன் இப்படி மனக்குரலின் பேச்சைக் கேட்டு நாம் அவமானப்பட்டுப் போகிறோம்? இது என்ன நோய்? ஏன் நம் இயல்பு வாழ்க்கை இப்படி அர்த்தமற்றுப் போய்க் கொண் டிருக்கிறது?

என்று நினைத்து வேதனை கொள்கிறார். நியாயம் தானே? ஒரு மனிதனின் உடம்போடு ஒட்டிய சுயமும், வயது ஆக ஆக அவனுக்கு ஏற்படும் மன மாற்றங்களும், விலகலான எண்ணங்களும் தேவப்பிரகாஷின் பாத்திர மாக இக்கதையில் சமைக்கப்பட்டிருப்பது படிப்பவர் மனங்களில் பரிதாபத்தையும், கருணையையும் ஏற்படுத்து கின்றன.

அலுவலகத்தில் அவருக்கு விருப்பமானவர்கள் என்றோ, நண்பர்கள் என்றோ யாருமேயில்லை. மதியச் சாப்பாட்டைக் கூட தனியாகத் தனது மேஜையில் வைத்தே சாப்பிட்டு முடித்து விடுவார். அலுவலகத்தில் மட்டுமில்லை. ஒரு கோடிப் பேருக்கும் மேலாக வசிக்கும் இந்த மாநகரில் கூட அவருக்கு நண்பர்கள் என்று எவருமில்லை. முகம் தெரிந்தவர்கள், தெரியாத வர்கள் என்று இரண்டே பிரிவுதான். ஐம்பதாவது வயதில் நுழையும்வரை அவருக்கு ஒரு நாளும் இப்படி யான உணர்வுகள் ஏற்பட்டதேயில்லை. இப்போதுதான் ஏதேதோ கொந்தளிப்புகள் மனதில் தோன்றுகின்றன. திடீரென ஒரு எண்ணம் அவரது மனதில் தோன்றத் துவங்கி முழுவதும் ஆக்ரமித்து விடுகிறது. வேறு எந்த வேலை செய்தாலும் மனது அடங்குவதில்லை. ஒரு குரல், அழுத்தமான ஒரு குரல் அந்த எண்ணத்தை நிறை வேற்றும்படி அவரை வலியுறுத்திக் கொண்டே யிருக்கிறது. அந்தக் குரலைக் கண்டு கொள்ளாமல் விடும்போது மனது வேறு எந்த வேலையிலும் கவனம் கொள்ள மறுப்பதோடு, உடலிலும் மெல்லிய பட படப்பு உருவாகிவிடுகிறது. இன்றைக்கும் அப்படியான ஒரு குழப்பமான எண்ணமாகவே மானைக் காண வேண்டும் என்று மனதில் உதயமானது.

திடீரென்று மானைப் பார்க்க வேண்டும் என்கிற விசித்திர  எண்ணத்திற்கான உறுதி இங்கே ஸ்தாபிக்கப்படுகிறது.

உலகில் வேறு எந்த மனிதனும் இப்படித் தனது அலுவலகத்தைப் பாதியில் போட்டுவிட்டு மானைப் பார்க்கப் போக மாட்டான். தனக்கு ஏதோ நிகழ்ந்து விட்டது. தன்னை ஏதோ பிடித்து ஆட்டிக் கொண் டிருக்கிறது. என்றெல்லாம் நினைத்தவாறே கதையைப் பாங்காக நகர்த்திச் செல்கிறார் ஆசிரியர். கதை முழுக்கப் பொருத்தமான சம்பாஷனைகளோடும்,  மன வியாகூலங்களோடும் தேவப்பிரகாஷ் பாத்திரம் நகர்த்தப்பட்டிருக்கும் விதம் படிக்கும் வாசகனின் மனதைத் தொடர்ந்து நெருடிக் கொண்டேயிருக்கிறது. படித்து முடித்தபின்னரும் ஒரு சிறுகதைக்குள் இத்தனை விஷயங்களை உள்ளடக்க முடியுமா? என்று எண்ணி எண்ணி வியந்து தொடர்ச்சியாக அவைகளை ஞாபகத்திற்குக் கொண்டு வர முடியாமல் திரும்பத் திரும்பப் படிக்கத் தோன்றுகிறது.

தேவப்பிரகாஷ் கடைசியில் மானைப் பார்த்தாரா? அதைப் பார்ப்பது என்று கிளம்பி என்னென்ன வகையி லெல்லாம் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டார். அவரின் வருத்தமான மனநிலையின் அடியாழத்தில் மழைமான் ஒன்று பெரும் சிறகுகளுடன் பசுமையான வனத்தில் பறந்து கொண்டிருக்கும் காட்சி அவருக்குப் பெருத்த ஆறுதல் அளிப்பதுபோல் நீங்களும் மனதார உணர வேண்டுமானால் மழைமான் என்ற தலைப் பிலான திரு எஸ்.ராமகிருஷ்ணன் கதையைப் படியுங்கள்.

Pin It