நூல் மதிப்புரை

பொதுவாக ஆய்வேடுகள் நூலாக்கம் பெறுவது அரிதான நிகழ்வாகவே தமிழில் நடைபெற்று வருகிறது. முனைவர் பட்டம் வாங்குவதற்கு என்று யாரோ தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் கருப்பொருளில், நுனிப்புல் மேய்வதாய், இயந்திரத்தனமாக எழுதப்படும் ஆய்வேடுகளே அதிகம் என்றும் சொல்லலாம். மேலும், ஆய்வேடுகளுக்கு என்று ஒரு அலுப்பூட்டும் நடையும் உண்டு! எனில், நான்கைந்து வருடங்கள் ஒரு கருப்பொருள் குறித்த விவரங்களை ஆர்வமுடன் திரட்டி அவற்றைப் பகுத்தாய்ந்து சுவாரசியமாக எழுதப்படும் ஆய்வேடுகள் உண்மையில் ஆழ்ந்த வாசிப்பனுபவம் தரக்கூடியவையாகத் திகழ முடியும் என்பதற்கு திரு.எஸ்.அருணாச்சலம் அவர்களின் ஆய்வேடு ‘தமிழகக் கடலோரத்தில் முத்துக் குளித்தல் வரலாறு’ மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

sa_jayaraj_400“முத்துக்களும், சங்குகளும் தமிழர்களின் வாழ்வில் இடம்பெற்றிருந்த நிலையைப் பற்றிச் சங்ககாலத் தமிழ் இலக்கியங்களில் நாம் ஏராள மான குறிப்புகளை அறிகிறோம். அத்தகு சிறப்பு மிக்க முத்துக்களையும் சங்குகளையும்பற்றித் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு திரு எஸ்.அருணாச்சலம் அவர்கள் எழுதிய எம்.லிட்., ஆய்வேடே இந்நூலாக உருவெடுத்துள்ளது. இந்நூலில் தொல்பழங்காலம் முதல் கி.பி.1900 வரை மிகவும் தெளிவாக எழுதப் பட்டுள்ளது. மேலும், இதில் சங்குக் குளித்தலைப் பற்றிய, இந்தியர்களின் வாழ்வில் சங்கின் பயன் பாட்டைப் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. முத்து, சங்குகளைச் சேகரிக்கும்பொருட்டுக் கடலில் மூழ்கும் முறை, முத்து, சங்குக் குளித்தலில் பரவர் களின் பங்கு, பொருளாதாரத்தில் முத்து, சங்குக் குளித்தலின் பங்கு, இந்தியா பிற நாடுகளுடன் கொண்ட வாணிகம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இந்நூலில் கோவையாகத் தரப்பட்டுள்ளன” என்று பதிப்புரையில் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மையே.

“தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள் மூலம் கிடைக்கப்பெற்ற அனைத்துத் தகவல்களையும் மிகவும் கவனமாக ஆய்வுசெய்து அதன் அடிப் படையில் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியை நம் முன்வைத்துள்ளார் ஆய் வேட்டாளர்” என்று தனது முன்னுரையில் ஆர்.சத்தியநாதய்யர், பேராசிரியர், வரலாறு மற்றும் அரசியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பாராட்டியிருப்பதற்கு திரு.எஸ்.அருணாச்சலம் முற்றிலும் தகுதி வாய்ந்தவர்.

“இந்தியாவில் தமிழகக் கடலோரத்தைத் தவிர வேறு எங்கும் முத்துக்குளித்தல் நடைபெற்றிராத காரணத்தால் இந்நூலின் பக்கங்களில் ‘இந்திய முத்துக்குளித்தல் வரலாறு’ என்று குறிப்பிடப் படுகிற பதத்தை ‘தமிழகக் கரையோர முத்துக் குளித்தல் என்று எடுத்துக்கொள்ளலாம்” என்று தனது முகவுரையில் ஆய்வேட்டாளர் குறிப் பிட்டிருப்பதன் மூலம் பண்டைக் காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்தின் பொருளாதார நிலைக்கே தமிழகம் முதுகெலும்பாகத் திகழ்ந்த உண்மை நமக்குத் தெளிவாகிறது.

“இந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ள காலம் மிகவும் நெடிது. எனவே, அதை வாசகர்களின் வசதிக்காக இயல்களாகப் பிரித்துள்ளேன். ‘அறிமுகம்’ என்றொரு பகுதியும் இதில் இடம்பெற்றுள்ளது. அதில் முத்து, சங்குக் குளித்தல் தொழில்களில் உள்ள ஆர்வத்துக்கும், வியப்புக்கும் உரிய செய்தி களையும், தகவலுக்கான சான்றாதாரங்களையும் பற்றி உரைத்துள்ளேன். முதல் எட்டு இயல்கள் முத்து, சங்குக் குளித்தல் தொழில்களின் வரலாற்றைப் பற்றிப் பேசுகின்றன. ஒன்பதாவது இயல் ‘முடிவுரை’யாக இடம்பெறுகிறது. ‘இந்தியர்களின் வாழ்வில் சங்கின் பங்கு’ என்னும் தலைப்பு கொண்ட பின்னிணைப்பு 1- இல் இந்தியாவில் சங்கு எதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்று அதன் பயன்பாடுகள் பற்றிச் சுருக்கமாக விளக்கியுள்ளேன்” என்று தன்னுடைய ஆய்வேட்டின் கட்டமைப்பு, உள்ளடக்கம் குறித்துத் தனது முகவுரையில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் நூலாசிரியர்.

அவ்வாறே, தொடக்க காலம் முதல் கி.பி.400 வரை தென்னிந்தியாவுக்கும் பிறநாடுகளுக்கும் இடையே நிலவிய வர்த்தக உறவுகள், முக்கியமாக முத்து வணிகம், கி.பி.400 முதல் கி.பி.1000 வரை தமிழகத்தில் நிலவிய முத்துக்குளித்தல் தொழில், அது சார்ந்த வணிகம், மற்றும் மன்னராட்சிக் காலப் பண்டைத் தமிழக சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள் ஆட்சியின்போது தமிழகத்தில் நிலவிய முத்துக்குளித்தல் தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவரங்கள், அதேபோல் அந்நியர்களின் ஆளுகையில் இந்தியா அடிமைப் பட்டுக் கிடந்த காலகட்டத்தில், குறிப்பாகச் சொல்வ தென்றால், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களில் தமிழகத்தின் முத்துக்குளித்தல் தொழில், அது சார்ந்த வரலாறு ஆகியவை சுவாரசியமாகப் பேசப்பட்டுள்ளன.

வரலாறு என்றாலே போர்களைப் பற்றியும் - உரிமைப் போர், ஆதிக்கப் போர் என்ற வேறுபாடு அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய அவசியத்தைக் கணக்கில் கொள்ளாத நிலையில் போரைப் போற்றுவதாய் - படையெடுப்புகளைப் பற்றியுமே பேசுவது என்ற பார்வை பரவலாக இருந்துவருகிறது. இதிலிருந்து மாறுபட்டு, வர வேற்கத்தக்க விதிவிலக்காக அமைந்துள்ளது இந்நூல். முத்துக்குளித்தல் என்ற தொழிலையும், அது சார்ந்த சமூக, பொருளாதார, அரசியல் நிலவரங்களையும் பேசுமிடத்தில், இன்றைய வெகுமக்கள் ஊடக வசதிகள், தகவல்தொடர்பு சாதனங்கள் இல்லாத நிலையில், அந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த பரவர்களின் வாழ்நிலையை, பிரச் சினைகளை அதிகம் விரித்துரைக்க வழியில்லாத இக்கட்டான நிலையை (அதுவும், வரலாறு என்பது பல காலமாக மன்னர்களின், அதிகார பீடத்தில் இருப்பவர்களை மையப்படுத்தியே எழுதப்பட்டு வந்த அளவில்) நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. என்றாலும், வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் முத்துக்குளித்தல் சார்ந்த வெகுமக்களைப் பற்றிய விவரங்களை எடுத்துரைக்க நூலாசிரியர் மறக்கவில்லை என்பதற்கு இந்த ஆய்வேட்டில் ஒரு சில பகுதிகள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன. (“படுகர்களின், அருகிலுள்ளவர்களின் தொடர் தாக்குதலைத் தாங்க இயலாமல் சோர்ந் திருந்த பரவர்கள், ஒவ்வொரு நாளும் பிழைப்புக்கு அல்லாடும் மீனவர்களைவிட மோசமான நிலையில் வாழ்ந்த, தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டு, அருகிலுள்ள பகுதி மக்களால் தொடர்பு துண்டிக்கப் பட்ட நிலையில் அவர்கள் தவித்த இடமே புன்னைக் காயல் (அவர் புட்டிகேல் என்று அழைக்கிறார்”29) என்று அவர்களுடைய புலம்பெயர்வைப் பற்றிக் கூறுகிறார் டி.சே.மெனிஸிஸ் - பக்.104).

மேலும், இந்நூல் முத்துக்குளித்தல் தொழிலும், முத்து வணிகமும் இந்தியாவின் பொருளாதார நிலைக்கும், இந்தியாவின் கடல்கடந்த வர்த்தக உறவுகளுக்கும் முதன்மைக் காரணங்களுள் ஒன்றாக விளங்கி யதையும், அதன் விளைவாக இந்தியா மீது பல அந்நிய நாடுகள் படையெடுத்துவந்ததற்கும் பல நூறாண்டுகள் இந்தியா அந்நியர்களிடம் அடிமைப் பட்டுக் கிடந்ததற்கும் அதுவே முக்கிய காரணமான நிலையையும் எடுத்துக்காட்டுகிறது.

பல சமயங்களில் ஒரு நூலின் மொழியாக்கம் மூலநூலை வாசிப்பதைவிட கடினமாக இருந்து விடுவதுண்டு. அப்படியில்லாமல் இந்த நூல் வாசிப் பதற்கு இதமாகவும், இலகுவாகவும் அமைந்திருப் பதற்கு, இதன் மொழிபெயர்ப்பாளர் முக்கிய காரணம். இந்நூலை மொழிபெயர்த்திருக்கும் திரு.சா.ஜெயராஜின் மொழிப்பரிச்சயமும், மிகச் சரியான வார்த்தைகளை இலக்கு மொழியான தமிழில் மெனக்கெட்டு தேடியெடுத்துப் பயன் படுத்தியிருக்கும் அவருடைய உழைப்பும், ஈடுபாடும் பாராட்டிற்குரியன. மொழிபெயர்ப்பு நூலில் மொழிபெயர்ப்பாளர் குறித்த விவரக் குறிப்பும், நூலை மொழிபெயர்க்கும் போக்கில் அவர் எடுத்துக்கொண்ட சிரமங்கள், சந்தித்த சவால்கள், அவற்றைச் சமாளித்த விதம் முதலிய விவரங்களை எடுத்துரைக்கும் வகையில் அவரால் எழுதப்பட்ட சிறு கட்டுரையும் இடம்பெற்றால் நன்றாக இருக்கும்.

நூலில் இடம்பெறும் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலேயே அதில் இடம்பெறும் அடிக் குறிப்புகளுக்கான விளக்கங்களையும் தந்திருப்பது படிப்பவர்களுக்கு மிகவும் உதவியாக அமையும். ஆங்கிலத்தில் ஆய்வேடாக எழுதப்பட்ட இந்தப் பிரதி ஏறத்தாழ 60 வருடங்களுக்குப் பிறகு பாவை பப்ளிகேஷன்ஸ் எடுத்துக்கொண்டுள்ள பெரு முயற்சியின் பயனாய்த் தமிழில் வெளிவந்துள்ளது. இதற்காக பதிப்பகத்தாரைப் பாராட்ட வேண்டியது அவசியம். இதமான முன்னட்டையோடு தெளிவான அச்சில், குறைவான அச்சுப்பிழைகளோடு வெளியிட்டிருப்பதற்காகவும் பாவை பப்ளிகேஷன்ஸ் பாராட்டிற்குரியது.

Pin It