நூல் மதிப்புரை

ஒரு பண்டிகை நாள். தொலைக்காட்சியில் நடிகர் மம்முட்டியின் நேர்காணல். ‘தளபதி’ படம் வெளியான சமயம்.

தொலைபேசியில் ஒருவர் கேட்கிறார்.

“தளபதி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து நடித்திருக்கிறீர்கள். இந்த இனிய அனுபவத்தை எப்படி உணர்கிறீர்கள்?”

அதற்கு உதடுகள் மட்டுமே விரிய ஒரு சிறிய மென்னகையுடன் மம்முட்டி சொன்னார்.

“தளபதி படத்துலே ரஜினி, ‘என்னுடன் சேர்ந்து நடிச்சிருக்காரு’ன்னு ஏன் நீங்க புரிஞ்சுக்கலே. நடிச்சிருக்கோம். அதுக்கு மேலே அதுலே உணர்றதுக்கு என்ன இருக்கு?”

அந்தப் பதிலின் நுட்பம் என்னைக் கவர்ந்தது. அந்த ஏளனப் புன்னகையில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கதாநாயக ஆராதனை மனோபாவம் குறித்த உணர்வு தொனித்தது. பதிலின் நுட்பத்தில், தன்னகங்காரம் போலத் தோற்றம் தருகிற ஒரு சுயமரியாதையின் கம்பீரம் தெரிந்தது.

“நான் எனக்கு முக்கியமானவன்” என்ற தன்னம்பிக்கை நிறைந்த சுயமரியாதை. ஓர் அறிவார்ந்த பக்குவம் அந்தப் பதிலில் இருந்தது.

வம்சி பதிப்பகம் வெளியிட்டிருக்கிற ஒரு சிறிய புத்தகம், “மூன்றாம் பிறை” வாழ்வனுபவங்கள் மம்முட்டி” என்ற நூல். மலையாள மொழியில் மம்முட்டி எழுதிய அந்த “மூன்றாம் பிறை”. அந்த வாழ்வனுபவக் கட்டுரைத் தொகுப்பை கே.வி.ஷைலஜா தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

இருபத்தி மூன்று கட்டுரைகளும் நூற்று இருபத்து மூன்று பக்கங்களுக்குள் அடங்கி விடுகின்றன.

அத்தனை சின்னஞ்சிறு ஹைக்கூ கட்டுரைகள். ஹைக்கூதான். ஆழம், அடர்த்தி, நுட்பம், செறிவு எல்லாவற்றிலும் தேர்ந்த ஹைக்கூகள் தாம்.

திருக்குறளைப் போன்ற கட்டுரைகள் என்றும் கூடக் கூறலாம். சிறிய சிறிய கட்டுரைகளுக்குள் பெரிய பெரிய ஆகாயங்கள். பெரிய பெரிய பிரபஞ்சங்கள். வாழ்வுலக அனுபவ சமுத்திரத்தில் கடைந்து கடைந்து மனஉலக வெண்ணெய் உருண்டைகள்.

பெரும்பான்மையோருக்குத் தனக்கு அம்மா அப்பா வைத்த பெயர் பிடிக்காது. பெயர் குறித்த வெட்க உணர்வு, புதிய பெயர் குறித்த கற்பனை என்று மனசு கிடந்து அலை பாயும். அல்லாடித் தத்தளிக்கும். எனக்கு என் பெயர் பிடிக்கவே பிடிக்காது. பொன்னெழிலன், பொன்மணியன், பொன்னொளி, பொன்னொலியன் என்று வகை வகையாகப் பெயர் மாற்றி யோசிப்பேன். அப்பா, அம்மா இல்லை. எனக்குப் பெயர் வந்த பூர்வீகம் கேட்டறிய நாதியில்லை. ரொம்ப காலம் கழித்து எனக்கு பூர்வீகம் தெரிந்தது.

என்னோட அப்பாவின் அம்மா. எனக்கு ஐயாம்மா. அவங்க நல்லவங்க. ஊரே போற்றிய புண்ணியவதி. பசின்னு யாரு வந்து நின்னாலும் பெட்டியிலே தானியம் தருகிற தருமவதி. அவங்க பெயர் பொன்னம்மாள். அந்தப் பெயர் தான் எனக்கு வந்திருக்கிறது. இதைக் கேள்விப்பட்ட பிறகுதான் எனக்கு என் பெயர் பிடித்தது.

பி.ஐ.முகம்மது குட்டி என்ற பெயர் பட்டிக் காட்டுத்தனமாக இருப்பதாக மம்முட்டிக்கு ஒரே மனப்புகைச்சல். தன் பெயர் குறித்த உணர்வனுபவங் களையும், இவராக வைத்துக் கொண்ட பெயர் குறித்த சுவாரஸ்யங்களும், மம்முட்டி என்ற பெயர் வந்து சேர்ந்ததும் ஒரு சிறுகதை போல நெஞ்சுக்குள் சிற்பமாக நிலைக்கிறது.

அமிதாப்பச்சனின் பண்போடு தனது மனச் சுபாவத்தை ஒப்பிட்டு சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கு ஒரு மகாப் பெரிய துணிச்சலும் தன்னம்பிக்கையும் வேண்டும்.

எல்லாவிதமான அனுபவங்களும் ஏதோ ஓர் உணர்வையும், புதிய தரிசனத்தையும் தருகிறது. அவமானங்களைக்கூட அதன் வலியோடு கடந்து விட்டால்... அது ஒரு அனுபவப் பாடமாகி விடுகிறது.

மூன்றாம் பிறை என்ற கட்டுரை எந்த நெஞ்சையும் உலுக்கி எடுத்துவிடும். வயதான தம்பதிகளின் உணர்வும் பிரிவும், வழக்கும், தீர்ப்பும் அதை எல்லாவற்றையும் பொய்யாக்கிய காதலும்...! இவர் வழக்குரைஞராக சந்தித்த மாமனிதக் காதல்.

வழக்கறிஞராகப் பணியாற்றி அனுபவம் பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில்... வழக்கு சம்பந்தமாக வந்து வந்துபோன ஒரு வாலிபன், இவரிடம் சட்டெனக் கேட்டான். “ஏன் சார் நீங்க சினிமாலே நடிக்கக்கூடாது?”

“ஏன் அப்படிக் கேக்குறே?”

“உங்களுக்கு ஒரு சினிமா நடிகனுக்கான முகவெட்டு இருக்கு சார்”

சினிமாவிற்குள் நுழைவதற்கான மகாப் பெரிய யத்தனிப்பில் இருந்த தருணம், அது அந்தத் தீயை அந்த வாலிபன் பெட்ரோல் ஊற்றிப் பெருக்கி விட்டான்.

ஆனால், அவனது கேள்வி, மிகப் பெரிய அங்கீகாரம். “உன் கனவு பகற்கனவல்ல. உன் கனவுக்கு வேர் இருக்கு” என்ற நம்பிக்கை ஊட்டுகிற அங்கீகாரம்.

திரைப்படத் துறையில் மிகப்பெரிய நடிகராகி விட்ட பிறகு... ஒரு வெளிப்புறப் படப்பிடிப்பு. மம்முட்டியை பார்த்துப் பேச... தொட்டுவிடத் துடிக்கிற மக்கள் திரளை, காவல் துறையின் லத்தி சார்ஜ் பதம் பார்க்கிறது. ஒருத்தரின் முகத்தில் அடிபட்டு ரத்தம் வழிகிறது. கூட்ட நெரிசலுக்குள் புதைந்து மறைகிற அந்த ரத்தமுகம் தான்... அந்த வாலிபன் என்று நினைவில் மின்ன... அவனைச் சந்திக்க முடியாத சூழலில் மம்முட்டியின் மன உளைச்சல்.

வேகமாக காரோட்டிய அனுபவத்தில் செய்த உதவியும், கிடைத்த இரண்டு ரூபாயும், அது எழுப்புகிற நினைவலைகளும்...

இப்படி வகைவகையான அனுபவங்கள். மன உலகத்தெறிப்புகள். வாசித்து முடித்த வாசக மனசை யோக்கியப்படுத்துகிற மானுட நல்லுணர்வுகள்.

போலித்தனமில்லாத ஒரு நல்ல மனிதனிடம் பொங்குகிற நல்லுணர்ச்சியில்தான்... இப்படிப் பட்ட நல்முத்தான ஞானம் கிடைக்கும்.

வாசித்தேன். என்னை ஒருமுறை சலவை செய்துகொண்ட மாதிரி உணர்கிறேன்

வெளியீடு : வம்சி புக்ஸ்

விலை : ரூ.80.

Pin It