தமிழிலக்கிய வரலாற்றில் நெடுங்காலம் நிலைக்கத் தக்க இருபதாம் நூற்றாண்டு உரையாசிரியர்களுள் அறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் ஒருவர். இவரால் உரைவரையப் பெற்ற நூல்கள் 16; உரைத் திருத்தம் எழுதப் பெற்ற நூல்கள் 3. ஆக மொத்தம், 19 நூல்களுக்கு உரைப்பணி ஆற்றியுள்ளார் இவர். இவற்றுள், சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு ஆகிய மூன்றுக்கும் இவரால் இயற்றப்பெற்றுள்ள உரைகள் தமிழிலக்கிய மாணவர்களுக்கும் ஆய்வாளர் களுக்கும் பெரும்பயன் விளைத்துக் கொண்டிருக்கும் புகழ்சான்றவை. இதர 16 நூல்களில், இன்னா நாற்பது, திரிகடுகம் ஆகிய இரண்டும் அறஇலக்கிய நூல்களாகும். இந்நூல்களுக்கு நாட்டாரையா வரைந்துள்ள உரைகளின் திறனை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

0.0. நாட்டாரின் உரைகள் - ஒரு பார்வை

பேரா.பி.விருத்தாசலனாரைப் பதிப்பாசிரியராகவும் திரு.கோ.இளவழகனாரைப் பதிப்பாளராகவும் கொண்டு 2007 ஆம் ஆண்டில் “நாவலர் நாட்டார் தமிழ் உரைகள்” என்ற பொதுத்தலைப்பில் நாட்டாரின் ஆக்கங்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் உள்ளிட்ட சில பதிப்பகங்கள் இவரின் சில நூல்களை வெளியிட்டிருந்த போதிலும், படைப்புகள் முழுமையும் முழுமையாய் வெளிவந்திருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் மூலமே என்பது சுட்டத்தக்கது.

நாட்டாரின் எழுத்துக்கள், சொற்பொழிவுகள் ஆகியவை “தமிழுலகுக்கு உரைப்பவை” என்னும் நோக்கில் 24 தொகுதிகளுக்கும் “நாவலர் நாட்டாரின் தமிழ் உரைகள்” எனப் பெயரிட்டிருப்பது பொது நிலையில் மிகவும் பொருத்தமானது. ஆயின், இங்கு ‘உரை’ எனக் குறிப்பிடப்படுபவை, சிறப்பு நிலையில் இலக்கண, இலக்கியங்களுக்கு எழுதப்பெற்றுள்ள விளக்கவுரை - தெளிவுரை என்பனவற்றைக் குறிக்கின்றது என்பதை இந்தக் கட்டுரை படிப்பார் கவனத்தில் கொள்வாராக. இத்தகைய புரிதலோடு, நாட்டாரின் உரைகளைக் கீழ்வருமாறு பகுத்துப் பட்டியலிடலாம்:

மி. சங்க இலக்கிய உரை

1.            அகநானூறு உரை - 1942 - 1944

மிமி. பதினெண்கீழ்க்கணக்கு உரைகள்

அ. அறஇலக்கிய உரைகள்

2. இன்னாநாற்பது   - 1925, 3. திரிகடுகம் - 2007

ஆ. அக இலக்கிய உரை -

4. கார் நாற்பது - 1925

இ. புற இலக்கிய உரை

5. களவழி நாற்பது                 - 1925

மிமிமி. காப்பிய இலக்கிய உரைகள்

6. சிலப்பதிகார உரை- 1940 - 42, 7. மணிமேகலை உரை - 1940 - 42

மிக்ஷி. புராண இலக்கிய உரை

8. பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராண உரை - 1925 - 31

க்ஷிமி. நீதி இலக்கிய உரைகள்

9. ஆத்திசூடி உரை  -              1925

10. கொன்றைவேந்தன்      -              1925

11. நல்வழி    -              1925

12. மூதுரை   -              1925

13. உலகநீதி -              2007

14. நன்னெறி                -              1925

15. நறுந்தொகை      -              2007

16. வெற்றிவேற்கை             -              1925

க்ஷிமிமி. உரைத் திருத்தங்கள்

17. அகத்தியர் தேவாரத்திரட்டு உரைத் திருத்தம் - 1940

18. தண்டியலங்காரப் பழைய உரைத் திருத்தம் - 1940

19. யாப்பருங்கலக் காரிகை உரைத் திருத்தம் - 1940

மேலே கண்டுள்ள பட்டியல் பேரா.பி.விருத்தா சலனாரின் பதிப்புரையிலிருந்து எடுத்துப் பகுக்கப் பட்டுள்ளது. பட்டியலின்படி, கிடைத்துள்ள 19 நூல் களுக்கான உரைகளைப் பற்றிய குறிப்புகள் ஏதும் கிடைக்கின்றனவா எனத் தேடிய பொழுது, 1967 - 68 இல் வெளிவந்த மு.வை.அரவிந்தரின் ‘உரையாசிரியர்கள்’ என்ற நூலில், நாட்டாரின் ‘அகநானூறு உரை’ பற்றி மட்டுமே குறிப்பு உள்ளது. பிற எந்த இலக்கிய வகைப் பகுதிகளுக்கும் நாட்டார் எழுதியுள்ள உரைகளைக் குறித்த பதிவுகள் இடம்பெறவில்லை. அகநானூற்று உரை பற்றிய குறிப்பு,

“ந.மு.வேங்கடசாமி நாட்டாரும், கரந்தைக் கவியரசு ரா.வேங்கடாசலம் பிள்ளையும் அகநானூறு முழுமைக்கும் செம்மையான உரை எழுதியுள்ளனர்” (அரவிந்தன்., மு.வை. 2012 : 325)

என்கிறது. இதில் ‘செம்மையான உரை’ என்ற மதிப்பீடு இடம்பெற்றுள்ளமை நோக்கத்தக்கது. எனினும் இவ் உரை வெளியான ஆண்டு குறிப்பிடப்படவில்லை. அந்தக் காலத்தில் இவ்வளவு அரிதின் முயன்று எழுதிய ஆசிரியருக்குப் பதிப்பு ஆண்டு கிடைக்காமல் போனமை இயல்பானதே.

0.1 நாட்டாரின் செவ்விலக்கிய உரைகளுள் அற இலக்கிய உரைகள்

19 உரை நூல்களில் 7 நூல்கள் செவ்விலக்கியக் காலப் பகுதிக்குள் இடம்பெற்றுள்ளவை. அவை முறையே, அகநானூறு, இன்னாநாற்பது, திரிகடுகம், கார் நாற்பது, களவழி நாற்பது, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவையாகும். இவை சங்க இலக்கிய நூல் - 1, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - 4, காப்பியங்கள் - 2, என்ற பகுப்புகள் அடங்குபவை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 4இல் 2 நூல்கள் அறம் உரைப்பதையே முதன்மை நோக்காகவும் முழுமைப் போக்காகவும் கொண்டவை. அவை, 1. இன்னா நாற்பது, 2. திரிகடுகம். எஞ்சிய 2-ல் 1 அகப்பொருள் சார்ந்த நூல் - கார் நாற்பது, இன்னொன்று புறப்பொருள் சார்ந்த நூல் - களவழி நாற்பது.

“நீதி இலக்கியங்கள்” எனப் பொதுப்படக் குறிப்பிடும் வழக்கம் இருக்கின்ற போதிலும், ‘நீதி’ என்ற வடமொழிச் சொல் தமிழ் வழக்கில் வந்து இடம் பெற்றதே கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் என்பதாலும், ‘நீதி’ என்பது எழுதப்பட்ட சட்டநெறி முறையையும் நீதிநியாயம் என்பதையும் குறிப்பதால் ‘அறம்’ என்னும் எழுதப்படாத இயற்கை ஒழுங்கியல்பு நெறியைப் பாடும் இலக்கியங்களை “அறஇலக்கியங்கள்” எனக் குறிப்பதே பொருத்தமானதாகும். இந்த இடத்தில் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்வது தேவையானதாக உள்ளது. அது என்னவெனில், அற இலக்கியங்கள் எனக் குறிப்பிடப்படும் பதினெண்கீழ்க்கணக்கில் இடம் பெற்றுள்ள 11 நூல்களில் சிலவற்றில் அறம் மட்டுமின்றி நீதியும் இடம்பெற்றுள்ளது என்பதுதான் அது.

இத்தகைய நோக்குநிலையிலிருந்து நாட்டார் உரைஇயற்றியுள்ளனவும் பிற்காலத்தில் தோன்றிய நூல்களுமான, 8 நூல்களை “நீதி நூல்கள், நீதி இலக் கியங்கள்” என்றும் செவ்விலக்கியக் காலத்தில் தோன்றிய ‘இன்னா நாற்பது’, ‘திரிகடுகம்’ என்ற இரு நூல்களையும் “அற இலக்கியங்கள்” என்றும் கட்டமைத்துக் கொண்டு இந்தக் கட்டுரை அணுகுகிறது. இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போதான தேடலில் “இனியவை நாற்பது” என்னும் அறஇலக்கிய நூலுக்கு நாட்டார் உரை, கழகப் பதிப்பாக 2007இல் வெளிவந்துள்ளது என்பதும் தெரியவந்தது.

நாட்டாரின் உரைநெறி

“உரை எழுதுவது தமிழ்மொழியில் ஒரு தனித் துறையாக வளர்ந்துள்ளது. தமிழ் இலக்கிய வரலாற்றில் நூலாசிரியர்களுக்குச் சமமாக உரையாசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்”, (மேற்கோள், மோகன்., இரா. 2011 : 9)

என்ற அறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் கருத்துக்கிணங்க, இலக்கிய, இலக்கண நூல்களைப் பரவலாக மக்களிடம் கொண்டுசெல்லும் ஆற்றல் வாய்ந்தவை உரைகள்.

தொல்காப்பியச் செய்யுளியலில்,

“உள்நின்று அகன்ற உரை”

(தொல்.பொருள். செய்: 159)

என்பதும், மரபியலில்,

“கரப்பின்றி முடிவது காண்டிகை”

(தொல்.பொருள்.மரபு.102)

“ஒன்ற உரைப்பது உரை”

(தொல்.பொருள்.மரபு.105)

என்பனவும் காண்டிகையுரை, விருத்தியுரை என்ற இரண்டு அடிப்படை உரைநெறிகளைக் குறிப்பிடு கின்றன.

இத்தகைய உரையின் வளர்ச்சிநிலைகளில், சிலப்பதி காரத்துக்கு முதலில் தோன்றியது அரும்பதவுரையே ஆகும் (மோகன்.,இரா.2011:13). இன்னும் சரியாகச் சொல்வதானால், சங்க இலக்கியங்களை முதன்முதலில் பதிப்பித்தவர்கள் எழுதிய திணை, துறை பற்றிய குறிப்புரைகள்தாம் உரையின் முதல் வளர்நிலைக்கூறு எனலாம். இதன் பின்னர், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என வந்த சிலப்பதிகாரத்தைச் சுட்டலாம். இதனைத் தொடர்ந்து வந்தது அரும்பதவுரை என்பது பொருந்தும். இவ்வாறு தோன்றிய உரைமரபில் பல்வேறு உரைவகைகள் காலப்போக்கில் தோன்றின. அவை, குறிப்புரை, அரும்பதவுரை, பதவுரை, விளக்கவுரை, விரிவுரை, தெளிவுரை, பொழிப்புரை, கருத்துரை, சுருக்கவுரை, தொகுப்புரை, வசனம் என்றவாறு பல்கிப் பெருகின.

இவற்றுள் நாட்டாரின் அறஇலக்கிய உரைகளில் பின்பற்றியுள்ள உரைவகை “பதவுரை” என்பதாகும். பதவுரை என்பது செய்யுளின் அமைப்பில் பொருள் கோடலுக்கு ஏற்ற வகையில், ‘பதம்’ எனப்படும் ‘சொல்லுக்குச் சொல் - சொற்றொடருக்குச் சொற் றொடர் - என்ற முறைமையில் தருக்கநெறிநின்று உரை வரைவதாகும். இவ்வாறு, செய்யுளின் பொருளுக் குரியவாறு உரைவரைந்து முடித்தபின், சொற்பொருள் விளக்கம், பொருத்தமான பிற இலக்கிய, இலக்கண, நிகண்டு, உரை ஆகியவற்றின் மேற்கோள்களும், அவற்றுக்கான விளக்கங்களும், இலக்கணக் குறிப்புகள், பாடவேறுபாடுகள் என்ற முறைமையின் அடிப் படையில் நாட்டாரின் உரைநெறி அமைந்துள்ளது. இந்த உரைநெறி அந்தந்தச் செய்யுளுக்கு ஏற்றவாறு உரைநெறிக் கூறுகள் முழுவதுமோ, சிலதோ, பலதோ இடம்பெறுவதாக இயல்கிறது.

1.0. அறஇலக்கிய உரைத்திறன் - “இன்னா நாற்பது”

பொதுவாக, அறஇலக்கியங்கள் தனிமனித அற நெறி, சமூக அறநெறி, அரசியல் அறநெறி, பொதுமை அறநெறி ஆகியவற்றுடன் சமய அறநெறியையும் மிடைந்து அறங்களை வலியுறுத்துவனவாக விளங்கு கின்றன. நாட்டாரின் “இன்னா நாற்பது” உரையிலும் இத்தகைய போக்கு இயல்வதைக் கண்ணுறமுடிகிறது. இந்த அடிப்படையில், நாட்டாரின் அறஇலக்கிய உரைத்திறனை நான்கு பகுப்புகளாக்கி அணுகலாம். அவைமுறையே,

1.            இல்லற நெறிசார் உரைத்திறன்

2.            துறவற நெறிசார் உரைத்திறன்

3.            அரசியல் அறநெறிசார் உரைத்திறன்

4.            பொதுமை அறநெறிசார்; உரைத்திறன் என்பனவாகும்.

1.1. இல்லற நெறிகள் உரைத்திறன்

இல்லறநெறி என்பது ஆண், பெண், மக்கள், உறவினர் ஆகியோருக்குள் தொழிற்படுவது. இன்னா நாற்பதில் இல்லற நெறிநிற்கும் ஆண்மகனுக்கு இன்னாததென,

“பிறன்மனையாள் பின்நோக்கும் பேதைமை யின்னா” என ஓரிடத்தில் குறிப்பிடப்படுகின்றது, (இன்னா.39) மேலும், இரண்டு இன்னாதவற்றைக் கூறிவிட்டு, இச் செய்யுள் இவ்வாறு முடிகிறது:

“............................. இன்னா

திறனிலான் செய்யும் வினை”.

இதில் இடம்பெற்றுள்ள ‘திறன்’ என்னும் சொல்லுக்கு உரையெழுதும் நாட்டார், “திறன் - அறிந்தாற்றிச் செய்யும் வகை” (நா.நா.த.உ. 2007:219) என்கிறார். இதன் மூலம், அறிந்தாற்றிச் செய்யாத வகையால்தான் பிறன்மனையாள் பின்நோக்கும் பேதைமை நிகழ்கிறது என்பதோடு பொருள் இயையுப் படுத்தும் உரைத்திறன் மிளிர்கிறது.

பெண்மகளுக்கு இன்னாதன இவை என நான்கு இடங்களில் இந்நூல் உரைக்கிறது.

“ஆர்த்த மனைவி யடங்காமை நான்கின்னா”

(இன்னா.3)

என்பதில், “அடங்காமை - எறியென் றெதிர் நிற்றல் முதலியன” (நா.நா.த.உ.2007:199) என்று சொல்விளக்கம் எழுதுகிறார். இங்குச் சொற்பொருள் விளக்கத்தோடு நில்லாமல், அடங்காத நிலையின் வெளிப்பாட்டுக் கூறை எடுத்துரைத்துள்ளமை எண்ணத்தக்கது.

“உடம்பாடில்லாத மனைவி தோளின்னா”

(இன்னா.12)

என்பதற்கு “உளம்பொருந்துதலில்லாத” என்று உரை எழுதிவிட்டு, விளக்கம் கூறுமிடத்தில், “மனைவிதோள் - இடக்கரடக்கல்” என இலக்கணக் குறிப்புத் தருவ தோடு, ‘உடம்பாடில்லாதவர் வாழ்க்கை குடங்கருட் பாம்போ டுடனுறைந் தற்று” என்னும் குறள் இங்கு நினைக்கற்பாலது” (நா.நா.த.உ.2007:204) என்று குறிப்பிடுவதற்குள் உறைந்துள்ள உரைநுட்பம் எண்ணிஎண்ணி வியக்கத்தக்கதாயுள்ளது.

“இன்னா பிணியன்னார் வாழும் மனை”

(இன்னா.14)

“வணரொலி யைம்பாலார் வஞ்சித்த லின்னா”

(இன்னா.15)

என்ற இரு இடங்களிலும், “பிணியன்னார் - (கணவருக்குப்) பிணிபோலும் மனைவியர்” என்றும், “வஞ்சித்தல் - (தம் கணவரை) வஞ்சித்தொழுகுதல்” என்றும் உரைவரைந் துள்ளமை (நா.நா.உ.2007:206) ஆணாதிக்கக் கருத்திய லோடு பொருள்கொண்டுள்ளதுபோல் தோன்றுகிறது. ‘பிணியன்னார்’ என்பதும் ‘வஞ்சித்தல்’ என்பதும் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. எனவே, இந்த உரைவிளக்கம் மேலும் ஆராய்தற்குரியது.

1.2. துறவறநெறிசார்; உரைத்திறன் - மீள்பார்வை

“அந்தண ரில்லிருந்து தூணின்னா” (இன்னா.2) என்பதற்கு, துறவோர் வீட்டிலிருந்து உண்ணுதல் துன்பமாம்” என்று உரைவரைந்துள்ளார் நாட்டார். மேலும் இதற்கு விளக்கம் எழுதும்போது, “அந்தணர் - துறவோர். இதனை, ‘அந்தணரென்போ ரறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்” என்னும் பொய்யாமொழியானறிக”, (நா.நா.த.உ. 2007:198) என்று எழுதியுள்ளார். உரைக்கும் விளக்கத் திற்கும் இடையே வேறுபாடு உள்ளதைப் படிப்போர் அறிவர். உரையில் அந்தணரைத் ‘துறவோர்’ என்றும் விளக்கத்தில் ‘அறவோர்’ என்றும் குறித்திருத்தல் கவனிக்கத்தக்கது. துறவோர் அறவோராய் இருப்பர் என்பது ஒருதலை. ஆனால், அறவோர், துறவோராய் இருத்தல் வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதுவுமின்றி, துறவோருக்கு ‘வீடு’ அதாவது வீடுபேறு உண்டு; இல்லத்தைத் துறப்போரே துறவோர் என்பதால் அவருக்கு இல்லம் இராது என்பதைக் கருத வேண்டியுள்ளது. எனவே, இதற்கு நாட்டாரின் உரை பொருத்தப்பாடுடையதாக இல்லை. அவ்வாறாயின், எது பொருளாதல் கூடும் எனில் அந்தணருக்குப் பிறர் கொடுப்பதே கடமை; அவரிடமிருந்து பெற்று உண்ணல் இன்னாதது என்பது பொருளாகலாம்.

1.3. அரசியல் அறநெறிசார் உரைத்திறன்

அரசியலில் அறம் தழைக்கவேண்டும் என்பதற்காக 4 இடங்களில் அறநெறிககளை வலியுறுத்தியுள்ளது இன்னா நாற்பது.

“கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா”

(இன்னா.4)

என்பதற்கு, “கொடுங்கோல் செலுத்தும் கொலைத் தொழிலையுடைய அரசனது ஆட்சியின்கீழ் வாழ்தல் துன்பமாம்” (நா.நா.த.உ.2007:199) என்று உரை எழுதி யுள்ளார் நாட்டார். ‘மறம்’ என்றால் ‘வீரம்’ என்ற பொதுப்புரிதல் உள்ள சமூகத்தில் ‘கொலைத் தொழில் என்று உரைவரைந்துள்ளமை நாட்டாரின் சான்றாண் மையைக் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, ‘மறம்’ என்பதன் எதிர்நிலை ‘அறம்’ என்பதால் கொலை செய்யாமையே அறம் என்பதும் “அறவினை என்பது கொல்லாமை” (குறள்...) என்று வள்ளுவத்தின்வழியில் உரைகண்டுள்ள திறமும் வெளிப்படுகின்றது.

“பணியாத மன்னர்ப் பணிவின்னா”                (இன்னா.14)

என்பதற்கு, “வணங்கத்தகாத அரசரை வணங்குதல் துன்பமாம்” என்று உரை கண்டுள்ளார் நாட்டார். ‘பணியாத’ என்பதற்கு ‘இதுவரை பணியாத’ என்று பொருள் கொள்ளலாமே என்று எண்ணிக் கொண்டே படித்துவருகையில்,

“மன்னர் பணிவு” என்று பாடமாயின், அகத்தே பணிவில்லாத பகைமன்னரது புறவணக்கம் இன்னாவாம் என்று பொருள்கூறிக் கொள்க”

(நா.நா.த.உ.2007:206)

என்று படிப்பவரின் வினாவுக்கும் உரைக்குள்ளேயே விளக்கம் வைத்துள்ள நாட்டாரின் உரைத்திறன் போற்றத் தக்கது.

1.4. பொதுமை அறநெறிசார் உரைத்திறன்

பொதுமை அறநெறி என இங்குப் பகுக்கப் பட்டிருப்பவை இல்லறம், துறவறம், அரசியல், சமயம் என்ற எந்தநிலை மனிதர்க்கும் பொதுவான அறநெறி களைக் குறிக்கின்றன. இன்னா நாற்பதில் உள்ள நாற்பது செய்யுட்களிலுமே பொதுமை அறநெறிகளே மிகுந் துள்ளன. இதைச் சமூக அறநெறிகள் என்றும் கூறலாம்.

“பகல்போலும் நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா”

(இன்னா 9)

என்பதற்கு “ஞாயிறு போலும் மனமுடையார் பண்பில்லாதிருத்தல் துன்பமாம்” என்று உரையெழுதும் நாட்டார் இதற்குக் கூறும் விளக்கத்தில் அவரது உரைத்திறனும் நுட்பமும் மிளிர்வதைக் காணமுடிகிறது.

“பகல்போலும் நெஞ்சம் - ஞாயிறு திரிபின்றி ஒரு பெற்றித்தாதல் போலத் திரிபில்லாத வாய்மையுடைய நெஞ்சம். ‘ஞாயிறன்ன வாய்மையும்’ என்பது புறம். இனி நுகத்தின் பகலாணிபோல் நடுவுநிலையுடைய நெஞ்சம் எனினும் பொருந்தும். “நெடுநுகத்துப் பகல்போல, நடுவுநின்ற நன்னெஞ்சினோர்” என்பது பட்டினப்பாலை. பண்பாவது உலகவியற்கை யறிந்து யாவரொடும் பொருந்தி நடக்கும் முறைமை.

“பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்” என்பது கலித்தொகை. தூய மனமுடையரேனும் உலகத்தோடு பொருந்தி நடவாமை தீதென்பதாம்”

(நா.நா.த.உ. 2007 : 203)

செய்யுளின் ஒரு அடிக்கே இத்தனை இலக்கிய மேற் கோள்களை எடுத்துக்காட்டும் நாட்டாரின் புலமைத் திறமும் உரைத்திறமும் வியப்பளித்தாய் உள்ளன. ஆனால், ஞாயிறு போலும் மனமுடையார் எப்படிப் பண்பில்லாதவராய் இருக்க முடியும் என்பது ஆராய்தற்குரியது. உலகின் ஒளியாக விளங்கும் ஞாயிறு போன்ற அறிவுடையவராயினும் பண்பில்லாராயின் பயனில்லையன்றோ? எனவே, இது இன்னாதது எனப் பொருள்கொள்வதே பொருத்தமுடையது எனலாம். இவ்வாறு, பொருள்கொள்வதற்கு இதே செய்யுளின் அடுத்தடுத்த அடிகள் இடந்தருகின்றன:

“பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா

நகையாய நண்பினார் நாரின்மை யின்னா

இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா

நயமின் மனத்தவர் நட்பு”            (இன்னா.9)

இச்செய்யுளின் இரண்டாவது அடிக்கு, “நகுதலை யுடைய நட்பாளர் அன்பில்லாதிருத்தல் துன்பமாம்” என்று உரைவரைந்த நாட்டார், இதற்கான விளக்கத்தை “நகையாய நண்பினார் நாரின்மையாவது - முகத்தால் நகுதல் செய்து அகத்தே அன்பு சுருங்குதல்” என்று எழுதியுள்ளார். ‘நகையாய நண்பினார்” எத்தன்மை வாய்ந்தவரோ அதே தன்மையுடையார்தான் “பகல் போலு நெஞ்சத்தார்” எனப் பொருள் கொள்ளும் போது தான் நாட்டாரையாவின் உரைத்திறத்தின் மேன்மை நன்கு புலனாகின்றது.

1.5. உண்ணாது வைக்கும் பெரும்பொருள்

“உண்ணாது வைக்கும்

 பெரும்பொருள் வைப்பின்னா”

(இன்னா. 17)

என்பதற்கு, “நுகராது வைக்கும் பெரிய பொருளின் வைப்பானது துன்பமாம்” என்று உரையெழுதியுள்ள நாட்டார், இதற்கு விளக்கம் எழுதும்பொழுது “வைப்பு - புதைத்து வைப்பது” என்று ஒரே ஒரு சொல்லுக்கு மட்டும் பொருள் எழுதுவதோடு நின்றுவிடுகிறார் (நா.நா.த.உ. 2007 : 207). அந்தக் காலத்தில் தேவைக்குமேல்; சேர்த்துவைக்கப்படும் பொருள்களை உணவு கிடைக்காமல் அல்லாடும் உழைப்பாளர்கள் எடுத்துக்கொண்டுவிடுவர் என்ற அச்சத்தால் அவற்றைப் புதைத்துவைக்கும் வழக்கத்தினைக் கொண்டிருந்தனர். அவ்வாறு, புதைக்கப்பட்டவைதாம் இன்றும் புதையல் களாகக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சமூகவியல் பின்னணியை உள்வாங்கி நாட்டாரையா ஒரே சொல்லுக்குப் பொருளுரைப்பதிலேயே வெளிப் படுத்தியுள்ள உரைத்திறன் மாண்பு பின்பற்றத்தக்கது.

2.0. அறஇலக்கிய உரைத்திறன் - திரிகடுகம்

சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மும்மருந்து உடற்பிணி போக்குவது போல் திரிகடுகம் என்னும் நூலுரைக்கும் மும்மணிக் கருத்துக்கள் உயிர்ப்பிணியாகிய அறியாமையைப் போக்கும் என்பது இந்நூலுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பான அறிமுக விளக்கமாகும். இந்நூலின் முதல் செய்யுளே இந்நூலின் பாடுபொருள் பயன்சிறப்பைப் பாடித்தான் தொடங்குகிறது என்பது இங்கு எண்ணத்தக்கது. ஒரு நூலின் பாயிரம்போல் இந்நூலில் இடம்பெற்றுள்ள எல்லாக் கருத்துக்களையும் ஒருங்கிணைத்துப் பொதுமைக் கருத்தியல் சாரமாய் இந்த முதல் செய்யுள் திகழ்கிறது:

நல்லமனைவி, நல்லகுடி, நல்லநட்பு இம்மூன்றும் தனி மனித - சமூக நல்வாழ்வியலுக்கான அடிப்படைகள் என்கிறது இச் செய்யுள், இதற்கு உரைவிளக்கம் கூறும் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகிய இலக்கியங்களை மேற்கோள்காட்டிச் சிறப்பாக விளக்கியுள்ளார்.

2.1. இல்லற நெறிசார் உரைத்திறன்

இல்லறத்துக்கான அடிப்படை நல்ல மனைவி. எனவே, நல்ல மனைவியைப் பெற்ற ஆண்மகன் சாவா உடம்பெய்தி வாழ்வான் என்பது திரிகடுகத்தின் கருத்து.

“..................... மாசில்சீர்

பெண்ணினுட் கற்புடையாட் பெற்றானும்”

(திரி.16)

என்ற இச்செய்யுளடிக்கு, இவ்வாறு விளக்கம் எழுதி யுள்ளார் நாட்டார்:           

“சாவா உடம்பு - புகழுடம்பு: தேவயாக்கையுமாம். தெளிவுபற்றி எய்தினார் என இறந்த காலத்தாற் கூறினார்” (நா. நா.த.உ. 2007 : 3027).

நல்ல மனைவியைப் பெற்றவர் புகழுடம்பு எய்துவர் எனின் இனி வருங்காலத்தில்தான் எய்துவரோ என எண்ணும் எண்ணம் சிறிதும் வரலாகாது என எண்ணிய நாட்டார் முன்பே நிறையப்பேர் எய்தி யுள்ளனர் என்ற தெளிவும் உறுதிப்பாடும் தோன்ற “எய்தினார்” என்பதற்கு விளக்கம் எழுதியுள்ள நாட்டாரின் உரைத்திறம் நுட்பம் செறிந்ததாய் உள்ளது.

இத்தகைய மனைவியைப் பெற்ற ஆண்மகன், அவள் பூப்பெய்தும் ஒவ்வொரு திங்களும் அவருடன் சாரவேண்டும். இல்லையெனில், கல்வியாகிய தெப்பத்தைத் தன் கைகளிலிருந்தும் தவறவிட்டு வருந்துவர் என்பதை அடுத்த செய்யுளிலேயே பாடியுள்ளது திரிகடுகம்.

“........................ கற்புடையாட்

பூப்பின்கண் சாராத் தலைமகனும்”   (திரி. 17)

என்ற அடிக்கு,

“பூப்பின் புறப்பா டீராறு நாளும்

நீத்தகன் றுறையா ரென்மனார் புலவர்

பரத்தையின் பிரிந்த காலை யான’

என்பது தொல்காப்பியம்

“பூப்பு - மாதவிடாய், பூத்தபின் மூன்றுநாள் சொற் கேட்கும் வழியுறைதலும், பன்னிருநாள் கூடியுறைதலும் வேண்டும் என்பர்” என விளக்கம் எழுதியுள்ளார் நாட்டார்.

இவ்விளக்கமும் மேற்கோளும் திரிகடுகத்தின் கருத்தைத் துலக்கமாய் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளதை விளக்க வேண்டுவதில்லை.

அறியாமையான் வரும் கேடுகளில் ஒன்றாக,

“..................... காழ்கொண்ட

இல்லாளைக் கோலாற் புடைத்தலும்” (திரி.3)

என்பதைக் குறிக்கும் திரிகடுகச் செய்யுளடிக்கு,

“காழ் கொண்ட - செற்றங்கொண்ட

“காழ்த்த பகைவர் வணக்கமும்” (திரிகடுகம். 24)

என்புழிக் காழ்த்தல் இப் பொருட்டாதல் காண்க. காழ் கொண்டவள் எறியென்று எதிர்நிற்பாளாவள், காழ்கொண்ட என்பதற்குக் கற்பின் உறுதியைக் கொண்ட என்றுரைப்பாருமுளர்”

(நா.நா.த.உ. 2007: 293)

என்றுவாறு சிறந்த விளக்கம் எழுதியுள்ளார் நாட்டார். விளக்கம் சொல்ல எடுத்துக்கொண்ட சொல்லுக்கு

இதே நூல் வேறோரிடத்தில் பொருள்கொள்வதை அகச் சான்றாகக் காட்டி, வேறு உரைகாரரின் கருத்தையும் எடுத்துக்காட்டியுள்ள உரைத்திறம் போற்றத்தக்கது. இங்கு ‘காழ்’ என்னும் சொல்லுக்கு ‘முள்’ என்னும் ஒரு பொருளும்உண்டென்பதை நாட்டார் உரையோடு பொருந்த நோக்கலாம். இதுவன்றி, அவள் கற்பின் உறுதியைக் கொண்டவளாயின் கணவனின் அறியாமை யால் இருவருக்கும் கேடு வருதலும், எறியென்று எதிர்ப் பாளாயின் அவளைத் திருத்தவியலாது என அறியாது அவளை அடித்தல் என்னும் அறியாமையால் கணவனுக்கும் கேடுவருதலும் என இரு நோக்குநிலை களையும் நாட்டார் தம் உரைவிளக்கத்தில் எடுத்துரைத் துள்ளார் என்பது சிந்திக்கத்தக்கது.

“நொந்தார் செயக்கிடந்த தில்” என முடியும் திரிகடுகச் செய்யுளில்,

“எதிர்நிற்கும் பெண்ணும்” (திரி.67) என்ற அடிக்கு,

“எதிர்நிற்றல் - மாறுபட்டு நிற்றல்”.

“எறியென் றெதிர் நிற்பாள் கூற்றம்” என்பது நாலடி.

(நா.நா.த. 2. 2007: 332-333)

என மேற்கோள் காட்டியுள்ளமையும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

கற்றறிந்தார் இவர்களின் பொருளை உண்ண மாட்டார் என்னும் பட்டியலில்,

“................. பைத்தகன்ற

அல்குல் விலைபகரு மாய்தொடியும்” (திரி.25)

என்ற செய்யுளடிக்கு,

“அல்குனலம் வரைவின்றி விற்கும்” என்றார்; திருத்தக்கதேவரும். ஆய்தொடி, அன்மொழித் தொகை”  (நா.நா.த.உ 2007: 308)

என்று விளக்கம் எழுதியுள்ளார் நாட்டார். இங்கு மிகப்பொருத்தமான மேற்கோளை எடுத்தாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘ஆய்தொடி’ என்பது அன்மொழித்தொகை என்ற இலக்கணக் குறிப்புக்கு உரியது என நாட்டார் எடுத்துக்காட்டுகிறபோது, ‘அல்குல்விலை’ என்பதும் அன்மொழித் தொகையாகவே அமைந்திருப்பதும் சிந்தைக்குள் வருகிறது.

2.2. துறவற நெறிசார் உரைத்திறன்

துறவற நெறிசார்ந்த செய்யுள்களில் பிறப்பறுத்து வீடுபேறடையும் நெறியை ஒரு செய்யுள் உரைக்கிறது:

“பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும்

பற்றறா தோடு மவாத்தேருந் - தெற்றெனப்

பொய்த்துரை யென்னும் பகையிருளு மிம்மூன்றும்

வித்தற வீடும் பிறப்பு”   (திரி.22)

“பற்று என்று கூறப்படும் அன்பாகிய கட்டும் பல பொருள்களிடத்தும் விருப்பம் நீங்காது செல்லும் அவாவாகிய தேரும் தெளிவாகப் பொய்த்துச் சொல்லும் என்னும் பகைமையுடைய இருளும் இவை மூன்றும் பிறவிக்கு மூலமாம் இவை கெடுதலால் பிறவியழியும்”

(நா.நா.த. உ. 2007 : 306)

மேலே கண்ட செய்யுளுக்கு மேலேகண்டவாறே உரை எழுதிய பின்னர் நாட்டார் கொடுத்திருக்கும் விளக்கமும் இலக்கிய மேற்கோள்களும் அவற்றுக்கான அந்தந்த இலக்கிய உரைமேற்கோள்களும் மிகுந்த தருக்க இயைபு கொண்டனவாகத் திகழ்கின்றன.

நாட்டார் எழுதியுள்ள விளக்கக் குறிப்பு வருமாறு :

“சிலப்பதிகாரத்தில் வரும், “பிணிப்பறுத்தோர்தம் பெற்றியெய்தவும் என்னுஞ் தொடர்க்கு உரையெழுதுமிடத்தில்” பிணிப்பு - பற்று: ஆவது - அன்பாகிய ஒரு தாளை, அதனை அறுத்தோர் அருளுடையோர்” என்று அடியார்க்குநல்லார் கூறியிருப்பது ஈண்டு அறியற்பாலது. தளை - கட்டு, பந்தம், அவர் - எனக்கிது வேண்டு மென்னும் உணர்வு, வித்தற என்பதற்கு அடியுடன் கெட என்றுரைத்தலுமாம். அறுதல் என்பது அற எனத் திரிந்துநின்றது.

“பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்”

“அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ்

தவாஅப் பிறப்பீனும் வித்து” ஞான்றும் என்னும் குறள்கள் இங்கே சிந்திக்கற்பாலன.

பொய்த்து என்பதில் து பகுதிப் பொருள் விகுதி யுமாம். அறியாமையைச் செய்தலின் பொய் யுரையை இருள் என்றார்.

“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு”

என்னுங் குறளுரையில் “உலகத்தார் விளக்காவன ஞாயிறு, திங்கள், தீ என்பன. இவற்றிற்குப் போகாதவிருள் போகலின், பொய்யா விளக்கே விளக்கென்றார். அவ்விருளாவது அறியாமை” எனப் பரிமேலழகர் கூறியிருப்பது அறியற்பாலது”.

(நா.நா.த.உ. 2007: 306)

பிறப்புக்கு வித்தாவன தளை, அவா, அறியாமை ஆகியன என்பதை இவை அற பிறப்பும் அறும் என்பதையும் தம் திறம்பட்ட உரைத்திறன் நெறியால் நாட்டார் விளக்கியுள்ளமை கண்கூடு.

2.3. அரசியல் அறநெறிசார்; உரைத்திறன்

அரசியல் அறத்தை வலியுறுத்தும் சில செய்யுள் களைத் திரிகடுகத்தில் காணமுடிகிறது. “வல்லே மழை யறுக்கும் கோள்களில் ஒன்றாகக் குடிகளை வருத்தும் வேந்தனைக் குறிப்பிடும் செய்யுளடி வருமாறு:

“கொள்பொருள் வெஃகி

 குடியலைக்கும் வேந்தனும்”  (திரி. 50)

இப்பாடலடிக்கு,

“கொள்ளும் இறைப்பொருளையே விரும்பி

குடிகளை வருத்தும் அரசனும்”

(நா.நா.த.உ.2007: 323)

என்று உரைவரைந்துள்ள நாட்டார், இதற்கு,

“குடிகளின் நலங்கருதாது பொருள்கோடலே கருதுவானென்பார், கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும் என்றார் பொருள் கொள்ளுதலை விரும்பி என மாறியுரைத்தலுமாம்”

(நா.நா.த.உ: 2007, 88-99)

என்று உரைவிளக்கம் எழுதியுள்ளார். இதில், குடிகளின் நலங்கருதாது பொருள் கோடலே தன் இலக்கு எனில் குடிகளை வருத்தும் செயலைச் செய்பவனாக வேந்தன் ஆகிவிடுவான் என்னும் கருத்தைத் திறம்பட வெளிப் படுத்தியுள்ளார் நாட்டார் எனலாம்.

வேந்தர்க்குரிய உறுப்புக்களென மூன்றைப் பட்டியலிட்டுத் திரிகடுக நூலை நிறைவுசெய்கிறார் 100-வது செய்யுளில் நல்லாதனார்.

“பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்

எத்துணையு மஞ்சா வெயிலானும் - வைத்தமைந்த

எண்ணி னுலவா விழுநிதியு மிம்மூன்றும்

மண்ணாளும் வேந்தர்க்குறுப்பு”           (திரி.100)

படை, எயில், செல்வம் மூன்றும் வேந்தர்க்கு உறுப்பு என்று கூறும் இச்செய்யுளுக்கு விளக்கம் எழுதிவிட்டு இவ்வாறு முடிக்கிறார் நூலை.

“அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு என்னும் ஆறங்கங்களுள் வினைசெய்தற்கண் இன்றியமையாத மூன்றினை இதனுட் சிறந் தெடுத்தோதினார்” (நா.நா.த.உ. 2007:350)

வேந்தர்க்கு உறுப்பு எனத் திரிகடுகம் மூன்றைக் கூறினும், வேந்தர்க்கு ஆறங்கங்கள் உள்ளதென்றும் அவற்றுள் சிறந்தவற்றை எடுத்தோதினார் என்றும் நூலாசிரியரின் கருத்தைச் சமன்செய்து தன் உரைத்திறனை நாட்டுகிறார் நாட்டார்.

2.4. பொதுமை அறநெறிசார் உரைத்திறன்

மானிடர் அனைவர்க்கும் பொதுவான அறநெறி களைப் பொதுமை அறநெறி எனலாம். இப் பொதுமை அறநெறியே திரிகடுகத்திலும் மிகுதியாக உள்ளது. அறங்கள் பெரும்பாலும் தனிமனிதனை நெறிப்படுத்து வதிலேயே கவனம் செலுத்துகின்றன. ஒவ்வொரு தனி மனிதனின் சிந்தனைகளின் வாழ்வியலின் திரட்சிதான் சமூக வாழ்வியலாக மலர்கிறது என்பதால் எல்லா அற நூல்களிலுமே பொதுமை அறநெறிகளே மிகுதியாக உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் தேவை யாகிறது.

2.4.1. இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது

“தாளாள னென்பான் கடன்படா வாழ்பவன்

வேளாள னென்பான் விருந்திருக்க உண்ணாதான்

கேளாள னென்பான் மறவாதா னிம்மூவர்

கேளாக வாழ்தல் இனிது”           (திரி.12)

என்ற செய்யுளுக்கு,

“முயற்சியுடையானென்று சொல்லப்படு வானாகிய கடன் கொள்ளாமல் வாழ்பவனும் ஒப்புரவு செய்யப்படுவானாகிய தன்னைத் தேடிவந்த விருந்தினர் புறத்திருக்க தனித்து உண்ணுதலைச் செய்யாதவனும் ஆசிரியன் கற்பித்தவற்றை உள்ளத்திற் கொள்ளவல்லன் என்று சொல்லப்படுவானாகிய கற்றவற்றை மறவாதவனும் (ஆகிய) இந்த மூவரையும் நட்டாராகப் பெற்று வாழுதல் (ஒருவர்க்கு) இன்பத்தைத் தருமாம்”

(நா.நா.த.உ. 2007: 299)

என்று பதவுரை வரைந்துள்ளார் நாட்டார். இதற்கு விளக்கம் எழுதுகையில்,

“கடமுண்டு வாழாமை காண்டலினிதே” என இனியவை நாற்பதிலும், “வேளாண்மை செய்தற் பொருட்டு” எனத் திருக்குறளிலும், “வேளா ணெதிரும் விருந்தின்கண்ணும்” எனத் தொல் காப்பியத்திலும் போந்த தொடர்கள் இங்கு நோக்கற்பாலன. கோளாளன் - கொள்ளுதல் வல்ல மாணவன்”.  (நா.நா.த.உ. 2007 : 300)

என்று ஒப்புநோக்கு இலக்கிய, இலக்கண மேற்கோள் களை எடுத்துக்காட்டும் நாட்டாரின் உரைத்திறம் பின்பற்றத்தக்கது.

2.4.2. இம் மூன்றும் எல்லார்க்கு மின்னாதன

“ஆசை பிறன்கட் படுதலும் பாசம்

பசிப்ப மடியைக் கொளலுங் - கதித்தொருவன்

கல்லானென் றெள்ளப் படுதலு மிம்மூன்றும்

எல்லார்க்கு மின்னா தன”           (திரி.20)

என்பதற்கு,

“பிறன்பொருண்மேல் விரும்புதலும் சுற்றத்தார் பசித்திருக்குமாறு சோம்பலைக் கோடலும் வெகுண்டு ஒருவனால் கல்லாதவன் என்று இகழப்படுதலும் இந்த மூன்றும் (அறிவுடையோர்) எல்லோருக்கும் துன்பம் பயப்பனவாம்”

(நா.நா.த.உ.2007 : 305)

என்று உரைஎழுதியுள்ள நாட்டார் “எல்லோர்க்கும்” என்றால் மானிடர் எல்லோருக்கும் இது பொருந்துமா பொருந்துமா என எண்ணிப்பார்த்துக் கல்லாததாலோ அனுபவத்தாலோ அறிவிலாராய் இருப்போர் எது இன்னாதது எது இனியது என்றே அறியமாட்டாரே என்பதும் துணிந்து “(அறிவுடையோர்) எல்லோருக்கும்” என்று உரைஎழுதியுள்ள உரைத்திறன் ஆழமாய்ச் சிந்திக்கத்தக்கது.

2.4.3. முழுமக்கள்

முழுமக்கள் என்னும் சொல் திரிகடுகத்தில் இரண்டு செய்யுள்களின் முழுக் கருத்தையும் வெளிப்படுத்து வதற்கான சொல்லாகப் பயன்பட்டுள்ளது. இச் சொல்லுக்கு அவ்விரு செய்யுள்களின்வழியே பொருள் கொள்ளும்போது மேலோட்டமான பார்வையில் கிடைக்கும் பொருளுக்கு மறுதலையான பொருள் கிடைக்கிறது என்பது இங்கு ஆராய்தற்குரியது.

2.3.3.1. இம் மூன்றும் முழுமக்கள் காதலவை

“பெருமை யுடையா ரினத்தி னகறல்

உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்

விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும்

முழுமக்கள் காதலவை”             (திரி.9)

என்பதற்கு,

“பெருமைக் குணமுடையாரது கூட்டத்தினின்றும் நீங்குதலும் மனைவியாகாத பிற மகளிரை விரும்பி அவரோடு கூடி ஒழுகுதலும் சிறந்தவை அல்லாத வினைகளைத் துணிந்து செய்தலும் (ஆகிய) இந்த மூன்று செயல்களும் அறிவில்லாதார் விரும்பு வனவாம்”  (நா.நா.த.உ.2007: 297)

என்பது நாட்டாரின் உரை. இதில் ‘முழுமக்கள்’ என்பதற்கு, “அறிவில்லாதார்” எனப் பொருள்வழங்குவது செய்யுளுணர்த்தும் திரண்ட கருத்தினடிப்படையில் என்பது தெளிவு. “முழுமக்கள் - அறிவு உட்புகுதற்கு ஓர் புரையில்லாதவர்” என்ற நாட்டாரின் விளக்கமும் எண்ணத்தகும். இங்கு நாட்டாரின் உரைத்திறம் பளிச்சிடும் இடமாக, “உரிமையில் பெண்டிரை” என்பதற்கு “மனைவியாகாத மகளிரை” என்ற உரை அமைகிறது. இங்கு “மனைவியல்லாத மகளிரை” என்றுகூட எழுதியிருக்கலாம். ஆனால், நாட்டார் ஏன் “மனைவியாகாத மகளிரை விரும்பி வாழ்தல்” என்று எழுதினாரெனின், ஒரு மனைவியைப் பெற்றவன் விரும் பினால் மேலும் சிலபல மனைவியரை ஆக்கிக்கொள்ளும் வாய்ப்பை ஆண்மகனுக்கு அளித்திருந்த சமூகமாக இருந்தது அன்றைய காலம் என்பதாலேயே. எனவே, மனைவியாகாத மகளிரை விரும்பி வாழ்தல் அறிவில்லார் செயல், அவரை மனைவி ஆக்கிக்கொண்டு வாழ்தல் அறிவுடையார் செயல் என்ற நிலவுடைமைச் சமூக ஆணாதிக்கக் கருத்தியலை இச் செய்யுள் கூறுகிறது என்பதை நாட்டாரின் உரைத்திறத்தின் வாயிலாக உய்த்துணர முடிகிறது.

மேலும், தன் உரைவிளக்கத்தில்,

“முழுப் பதகர் தாடுரந்து” என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளுரையில்

முழு என்பதற்கு அறிவு நுழைதற்கு வழியிலராய் என நச்சினார்க்கினியர் பொருள்கூறினமை காண்க.

“முழுமகன் சிதடனிழுதை மூடன்” என்பது திவாகரம்

“நடலை யிலராகி நன்றுண ராராய

முடலை முழுமக்கள்” என்பது பழமொழி”

(நா.நா.த.உ.2007: 298)

என்று இலக்கிய, நிகண்டு மேற்கோள்களை எடுத் தாண்டிருப்பதும் நாட்டாரது உரைத்திறனுக்கு மெருகு சேர்க்கிறது. இங்கு நச்சினார்க்கினியரின் உரைப் பொருள் நாட்டாரின் உரைத்திறத்திற்கு மேலும் வலிவுசேர்க்கிறது என்பது நோக்கத்தக்கது.

முழுமக்கள் என்பதற்குத் திரிகடுகத்துக்கு உரை யெழுதிய இன்னொரு உரையாசிரியரான பு.சி. புன்னைவனநாத முதலியார், “அறிவின்மையாகிய குறையுள்ள மக்களை முழுமக்கள் என்றது மங்கல வழக்கு” (புன்னைவனநாத முதலியார்., பு.சி. 2007 : 11) என்று குறிப்பிடுகிறார். நாட்டார், “அறிவு உட்புகுதற்கு ஓர் புரையில்லாதவர்” என்று விளக்கமெழுதியுள்ளார். “அறிவின்மையாகிய குறையுள்ள மக்கள்” என்பதைவிட “அறிவு உட்புகுவதற்கு ஓர் புரையில்லாதவர்” (ஒரு வழியும் இல்லாதவர்) என்பது மிகுந்த பொருத்தமான விளக்கமாக உள்ளது எனலாம்.

இம் மூவர் முழுமக்கள் ஆகற்பாலார்

“கொல்வது தானஞ்சான் வேண்டலுங் கல்விக்

ககன்ற வினம்புகு வான மிருந்து

விழுநிதி குன்றுவிப் பானுமிம் மூவர்

முழுமக்க ளாகற் பாலார்”                           (திரி. 87)

என்பதற்கு,

“கொல்லுந் தொழிலை அஞ்சாதவனாகி அதனை விரும்புபவனும் கல்விக்குச் சேய்மையான தீய கூட்டத்திலே சேர்பவனும் ஒரு முயற்சியுஞ் செய்யாதிருந்து முன்னுள்ள சிறந்த பொருளை குறையச் செய்பவனும் இந்த மூவரும் அறிவலார் ஆகும் பான்மையுடையவர்”

(நா.நா.த.உ. 2007: 343)

என்று உரையெழுதியுள்ளார் நாட்டார்.

87-வது செய்யுளில் ‘முழுமக்கள் ஆகற்பாலார்’ எனப்படுபவர், அதாவது அறிவிலார் ஆகும் பான்மை யராய் இருப்பவர். இதேபோன்ற எண்ணங்களிலும் செயல்களிலும் ஈடுபடுவதால் 9-வது செய்யுள் கூறுவது போல் முழு முழுமக்களாய் ஆகிவிடுகின்றார் என்பதை நாட்டாரின் உரையினூடாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

உயர்நெறிகளுக்கான உரைநெறியும் உரைத்திறனும்

பொதுமை அறநெறிகளில் ஆராயவேண்டியவை ஏராளமாய் இருப்பதால் அவற்றில் இடம்பெற்றுள்ள உயர்நெறிக் கூறுகளுக்கான அடியையோ தொடரையோ செய்யுளையோ சுட்டி இங்குப் பட்டியலிடப்படுகிறது:

உயர்நெறித் தொடர் அடி, செய்யுள், ஆகிய முதலிலும் உரைத்திறன் கூறு அதனைத் தொடர்ந்தும் பட்டியலிடப்பட்டுள்ளன:

1.            “சிறையில் கரும்பினைக் காத்தோம்பல் இன்னா” (6)

                                காத்தோம்பல் : ஒருபொருளிருசொல் (ப.201)

                “இன்னா மனவறியாளர் தொடர்பு” (19)

                                மனவறியாளர் - மனநிறைவில்லாதவர்: புல்லிய எண்ணமுடையார் எனினும் ஆம் (ப.208)

                துறையிருந் தாடை கழுவுதலின்னா (24)

                                நீர்த்துறையில் ஆடையலித்தல் புரியின், நீர்வழி நோயணுக்கள் பரவி இன்னல் விளைக்குமாகலின், “துறை ,,. இன்னா” என்றார் (ப.211)

                “பெருமை யுடையாரை பீடழித்தல் இன்னா” (28)

                                பீடு அழித்தல் என்னும் இருசொல்லும் ஒரு சொன்னீர்மையெய்தி இரண்டாவதற்கு முடிபாயின. பீடழித்தலாவது பெருமை உளதாகவும் அதனையிலதாக்கிக் கூறுதல் (ப.213)

                “இல்லார் வாய்ச்சொல் லினயமின்னா” (29)

                                நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்” என்னுந் தமிழ்மறையானுமறிக (ப.214)

                “இன்னா தண்மையிலாளர் பகை” (32)

                                நற்குணமுடையார் பகையிடத்தும் இனியன செய்தலும், நற்குணமில்லார் நட்பிடத்தும் இன்னா செய்தலும் உடையாராகலின் தண்மை இலாளர் பகை இன்னா எனப்பட்டது. தீயோர்பால் பகையும் நட்புமின்றி நொதுமலாக விருத்தல் வேண்டுமென அறிக (ப.216)

“இன்னா கெடுமிடாக் கைவிடுவார் நட்பு” (37)

                                என்பதனைக் ‘கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை யுள்ளினும் முள்ளஞ் சுடும்” என்னுந் திருக்குறாளனுமறிக (ப.218).

2.            சீலமறிவான் இலங்கிளை ... யாண்டும்

                பெறற்கரியார் (திரி.13)

                                இளங்கிளை - மாணவனும். சீலம் கற்பித்த நிலையாதலைச் “சீலக் கஞ்சி நற்போதகஞ் செய்வன” என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளுரையாலறிக.

                                இளங்கிளை என்பது தம்பி, தங்கை, மைந்தன், மைத்துனன் முதலிய இளஞ்சுற்றங்களையும் குறிக்கும். “மாலவற் கிளங்கிளை” எனச் சிலப்பதிகாரத்தில் தங்கை என்னும் பொருளிலும் “எழுமையும் பெறுக வின்ன விலங்கிளைச் சுற்றமென்றாள்” எனச் சிந்தாமணியில் மைத்துனன் என்ற பொருளிலும் இச்சொல் வந்துள்ளமை காண்க. “இளங்கிளையாரூரன்” என நம்பியாரூரர் தேவாரத் திருப்பாட்டிற் கூறிக்கொள்ளுதலின் தோழன், தொண்டன் என்னுஞ் சுற்றங்களையும் குறிக்கும் என்க (ப.300)

                வருவாயின் கால்வழங்கி வாழ்தல் ....... இம் மூன்றும்

                நலமாட்சி நல்லவர்கோள்” (21)

                                வருவாயறிந்து வழங்கலினிதே என்பது இனியவை நாற்பது (ப.305).

                “உண்பொழுது நீராடி யுண்ணுதலென்

   பெறினும் ...யிம் மூன்றும்

                தூஉய மென்பார் தொழில்” ( )

                                “நீராடி கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய் துண்டாரே யுண்டா ரெனப்படுவார்” என ஆசாரக் கோவை கூறுவது இங்கு நோக்கற்பாலது (ப. )

                ஒல்வதறியும் விருந்தினனு மாருயிரைக்

    ... மிம் மூவர்

                ஞால மெனப்படு வார்” (26)

                                சீலம் - வாய்மை, தூய்மை, அழுக்காறின்மை, அவாவின்மை முதலியன. ஞாலம் என்பது உயர்ந்தோர் என்னும் பொருட்டு, ‘உலகம் எனப்படுவார்” எனப்பின்னுங் கூறுவர் (ப.309)

                “அருளினை நெஞ்சத் தடைகொடா

   தானும்... பானுமிம் மூவர்

                பிறந்தும் பிறந்திலா தார்” (89)

                                அடைகொடாதான் - அடைவியாதவன், துவ்வான் - முற்றெச்சம், இனம் பற்றிப், பிறர்க்கு வழங்காதவனாகியென்றும் உரைத்துக் கொள்க, இறத்தல் - நெறிகடத்தல்: “இறந்தார்வாய், இன்னாச் சொல் நோற்கிற்பவர்” என்புழி இறந்தார் என்பதற்கு, நெறியைக் கடந்தார் என்று பரிமேலழகர் உரைத்திருப்பது காண்க. சொல்லகிற்பான் என்பதில் கில் வன்கண்மையை உணர்த்துகின்றது. மக்கட் பிறப்பின் பயனை அடையாமையின் பிறந்திலாதார் என்றார். பின்னரும் இவ்வாசிரியர் “பிறந்தும் பிறவாதவர்என்பர்”.

தொகுப்புரை

சற்றே எண்ணிப் பார்த்துள்ள “ந.மு.வே. நாட்டாரின் அறஇலக்கிய உரைத்திறன்” என்னும் இக் கட்டுரையின் வழிக் கண்டறிந்தவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம்:

1.            வழமையான உரைத்திறன் குறித்த ஆய்வுகளிலிருந்து இவ்ஆய்வு புதியதோர் அணுகுமுறையைப் பின் பற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, சொற் பொருள் விளக்கம், மேற்கோள் எடுத்துக்காட்டல், பிறர் உரை எடுத்துரைப்பு, பிறர் உரை மறுப்பு என்ற வாறு பகுக்கப்பட்டு உரைத்திறன் காணும் போக்கி லிருந்து மாறி நூலின் கருத்தியல் நோக்கு நிலையி லிருந்து இல்லறநெறிகள் உரைத்திறன், துறவற நெறிகள் உரைத்திறன், அரசியல் அறநெறிகள் உரைத்திறன், பொதுமை அறநெறிசார் உரைத்திறன் என்ற புதிய பகுப்புப் போக்கின் அடிப்படையில் இவ்ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2.            இன்னா நாற்பது, திரிகடுகம் இரண்டிலுமே பொதுமை அறநெறிக் கூறுகளே மிகுதியாக உள்ளன. எனவே, நாட்டாரின் உரைநெறியும் அதன்வழியே பயணித்துள்ளது.

3.            மேற்கோள்வழித் தருக்கநெறிப் பொருள்விளக்குதல் என்பதை நாட்டார் தன் உரைநெறியில் இன்றி யமையாத பண்பாகக் கொண்டுள்ளார் என்பதும் அதன்வழித் தன் உரைத்திறனுக்குக் கருத்தியல் மெருகு கூட்டுகிறார் என்பதும் அறியலாகிறது.

4.            பெண்மைசார் அறநெறிகளுக்குக் கூடுதல் கவனம் செலுத்தி உரைவரைந்துள்ளமை புலனாகிறது. அற நூல்களில் இப்போக்கு மிகுந்துள்ளமையும் இதற்கான காரணமாகிறது. எவ்வாறாயினும் நிலவுடைமைச் சமூக அறக் கட்டமைப்பின் பதிவுகள் நூலிலும் உரையிலும் பரவி நிற்கின்றன.

5.            கணிசமான செய்யுள்களுக்கு இந் நூல்கள் தோன்றிய காலகட்டத்தின் சமூக, வரலாற்று, பண்பாட்டுப் பின்னணியின் மெய்ம்மைநோக்கில் உரைவரைந் துள்ளார் என்பது நாட்டாரின் உரைத்திறத்தின் தனிச்சிறப்பு எனலாம்.

6.            ‘வைப்பு’, ‘முழுமக்கள்’ ஆகியவை பற்றிய உரைத் திறம் நுட்பமும் ஒப்பமும் திட்பமும் செறிந்தது.

பயன்பட்ட நூல்கள்

அரவிந்தன்., மு.வை. உரையாசிரியர்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2012.

புன்னைவனநாத முதலியார்., பு.சி. திரிகடுகம் - விருத்தியுரை, கழகப் பதிப்பு, 2007.

மோகன்., இரா. சொக்கலிங்கம்., ந. நெல்லை. உரைமரபுகள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2011.

மோகனராசு., கு. டாக்டர் கலைஞர் அவர்களின் திருக்குறள் உரைஉத்திகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2007.

விநாயகம்., க. சிவஞானமுனிவர் உரைத்திறன், அன்னை நூலகம், மயிலம், 1991.

விருத்தாசலம்., பி. ( பதி.ஆ.) நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 20 -அறநூல்கள், தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2007.

Pin It